யுகம் சுகம் தானே 2 1 20971 யுகம் சுகம் தானே 2 “இப்படி பண்ணிட்டியே உதய்..? உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கல..” குணா வருத்தத்துடன் சொல்லி கொண்டிருக்க, உதய் அமைதியாக அமர்ந்திருந்தான். கொலு பூஜை முடிந்து எல்லாம் கிளம்பியிருக்க, இவனை மட்டும் நிறுத்தி வைத்திருந்தார் குணா. “என்னப்பா..? என்ன ஆச்சு..?” முகில் புரியாமல் கேட்க, “அதை உன் ப்ரண்ட்கிட்டேயே கேளு முகில்..” என்றார் குணா லேசான கோபத்துடன். முகில் உதய்யை பார்க்க, மிகவும் இறுக்கமாக அமர்ந்திருந்தான். அவன் இருக்கும் நிலையே கேட்டால் பதில் வராது என்று புரிந்து கொண்ட முகில், “ப்ளீஸ்ப்பா.. நீங்களே சொல்லிடுங்க..” என்றான் தந்தையிடம். “என்ன சொல்ல சொல்ற முகில்..? உன் ப்ரண்டுக்கு எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் அடிச்சது தெரியுமா..?, அதை வேண்டாம்ன்னு உதைச்சு தள்ளிட்டு உட்கார்ந்திருக்கான்..” குணா சொல்ல, “இதுக்கு தான் நான் வேண்டாம் சொன்னேன்..” என்றான் உதய் அழுத்தமாக. “எனக்கு ஏன் அங்கிள் இந்த அதிர்ஷ்டம் எல்லாம், எனக்கு வேண்டாம், என்னால சாதிக்க முடியாதா என்ன..? அவங்களை விட பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்குற திறமை, உழைப்பு என்கிட்ட இருக்கு, நான் ஏன் இன்னொருத்தர் உழைப்புல போய் உட்காரணும், எனக்கு நான் தான் கிங் அங்கிள்..” உதய் கோவத்துடனே சொன்னான். “உதய் நீ புரியாம பேசுற..” “அங்கிள் எனக்கு புரிஞ்சுதான் பேசுறேன்.. அவங்க ஆட்டத்துக்கு நான் ஆள் கிடையாது.. அவங்களுக்கான அடிமை நான் இல்லை..” “உதய் நீ அவங்களை ரொம்ப தப்பா புரிஞ்சிகிட்டு இருக்க.. RK சார் பத்தி உனக்கு தெரியாதா என்ன..?” “தெரிஞ்சுதால தான் எனக்கு இவ்வளவு கோவம், அவர்கிட்ட இருந்து நான் இதை எக்ஸ்பெக்ட் பண்ணல..” “இல்லை உதய்.. உனக்கு அவரை தெரியல.. தெரிஞ்சிருந்தா இப்படி பேச மாட்ட.. நீயே கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாரு, அவரோட குணமா இது உன்னை அடிமையா இருக்க வைக்கிறது, நோ.. அவர் மனுஷங்களை படிக்க தெரிஞ்சவர், மதிக்க தெரிஞ்சவர்..” “முக்கியமா நல்ல மனுஷங்களை நேசிக்க தெரிஞ்சவர், நான் அவரோட இருபது வருஷமா ட்ராவல் பண்றேன், எனக்கும் அவரை கொஞ்சமாவது தெரியும் உதய்..” “உனக்கு ஒன்னு தெரியுமா..? அவர் உன்னை பத்தி முதல்ல விசாரிச்சதே என்கிட்ட தான்..” என, உதய் அமைதியாக பார்த்தான். “நம்மளோட கன்ஸ்ட்ரக்ஷன் அஸோஸியேஷன் மீட்டிங் நடந்தப்போ தான் உன்னை அவர் பர்ஸ்ட் டைம் பார்த்திருக்காரு.. அன்னிக்கு உன்னோட அந்த பேச்சு.. நிறை குறைகளை, அங்க நடக்கிற அரசியலை யாருக்கும் பயப்படாம உடைச்சி பேசின உன்னோட அந்த தைரியம் தான் அவருக்கு முதல் இம்ப்ரெஷன் உன் மேல..” “அப்பறம் உன்னோட அந்த தொழில் பக்தி.. எல்லாம் கன்ஸ்ட்ரக்ஷன்ல கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும் போது நீ மட்டும் லாபத்தை பார்க்காம அதுல இருக்க போற உயிர்களை பற்றி யோசிச்ச அந்த மனசு.. இதுலே அவர்க்கு உன்மேல நல்ல அபிப்ராயம்..” “உன்னை கவனிக்க ஆரம்பிச்சாரு, பிடிச்ச பையனா தான். வேற எண்ணம் அப்போ இல்லை..” “ஆனா ஆறு மாசத்துக்கு முன்னாடி அவருக்கு செகண்ட் ஹார்ட் அட்டேக்.. அவர் மனைவி இறந்தப்போ பர்ஸ்ட் அட்டேக். இது வெளியே யாருக்கும் தெரியாது, ரொம்ப ஒன்னிரண்டு பேர்க்கு தான் தெரியும். ரொம்ப கஷ்டப்பட்டு மீண்டு வந்தார், ஆனா கவலை மனசை அரிக்க ஆரம்பிச்சிடுச்சு..” “ஒரே பொண்ணு, பணம், சொத்து எல்லாம் எக்கச்சக்கம். அப்போ உண்மையாவே அவர் ஏன் இவ்வளவு சம்பாதிச்சோம்ன்னு வேதனை பட ஆரம்பிச்சிட்டாரு..” உதய் ஆச்சர்யமாக பார்க்க, கசப்பாக சிரித்த குணா, “உண்மை உதய்.. அந்த பணம், சொத்தே அவருக்கு வில்லனா தெரிஞ்சது, அதால பொண்ணுக்கு ஆபத்து தானே தவிர பாதுகாப்பு கிடையாதுன்னு புரிஞ்சுக்கிட்டாரு.. அவர் பொண்ணும் அப்பாக்கு இப்படி ஆனதுல ரொம்ப பரிதவிச்சு போச்சு. அப்போ தான் மேல்படிப்பு முடிச்சிட்டு அப்பாகிட்ட வந்திருந்தாங்க..” “அவருக்கு இப்படி ஆகவும் அவரும் சரி, அவர் பொண்ணும் சரி உள்ளுக்குள் ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க, அப்போ தான் ராம் சீக்கிரமே பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிடனும்ன்னு யோசிக்க ஆரம்பிச்சாரு, நீ நம்ப மாட்ட உதய்.. அவர் மனசுல பர்ஸ்ட் வந்தது நீ தான், வேற யாரையும் பொண்ணுக்கு மாப்பிள்ளையா அவரால பார்க்க முடியல..” “இன்னும் நல்லா உன்னை அலசி ஆராய்ஞ்சிட்டாரு.. என்கிட்ட கூட ரொம்ப விசாரிச்சாரு, எல்லா விதத்திலும் நீ அவருக்கு சரியா இருக்க கடைசியா பொண்ணுகிட்ட உன்னை பத்தி சொல்லி, உன் போட்டோ கொடுத்தார்..” “அவங்களுக்கும் உன்னை பிடிச்சு போச்சு போல, ராம் கொடுத்த ஒரு வார டைம் முடியும் முன்னேயே உனக்கு சரி சொல்லிட்டாங்க..” “உடனே உன்கிட்ட பேச சொல்லி என்னை தான் கேட்டார். ஆனா அவர் நண்பர் அந்த கலாதரன் நான் பேசுறேன் சொல்லி உன்கிட்ட பேச, நீ விருப்பமில்லை சொல்லி அனுப்பிச்சிருக்க, ராம்க்கு அவ்வளவு வருத்தம், இன்னிக்கு இந்த பங்க்ஷன்க்கு அவங்க வந்ததே உனக்காக தான். உன்னை பார்க்கணும்ன்னு தான், ஆனா நீ.. போப்பா..” குணா ஆதங்கத்துடன் சொல்லி முடிக்க, உதய் கை கோர்த்து அமர்ந்திருந்தான். அவளின் அந்த ரகசிய பார்வை.. அதில் தெரிந்த அந்த உணர்வு.. காரணம் புரிந்தது. அவளுக்கான மாப்பிள்ளையாக என்னை பார்த்திருக்கிறாள்.. பெரு மூச்சு வந்தது. “RK சார் இந்த விஷயத்துல தப்பு பண்ணிட்டார், என்கிட்ட பேசாம அவகிட்ட பேசியிருக்க கூடாது..” “என்னடா உதய் இப்படி பண்ணிட்ட..?” முகிலும் வருத்தத்துடன் கேட்டான் நண்பனிடம். “என்ன பண்ணிட்டேன் இப்போ..?” அவனிடம் எகிறினான். மனம் ஒருநிலையில் இல்லை. தன் தவறு எங்கும் இல்லை தான். ஆனால் அவளின் அந்த நேர் பார்வை.. ஏதோ ஒரு விதத்தில் அவனை பாதிப்பது உண்மை. “உதய்.. இன்னும் என்ன கோவம்..? அவர் உன்னை அவங்களை பார்த்துக்கிற இடத்துல தான் பார்த்தார். அவர் பொண்ணை, அவரோட சாம்ராஜ்யத்தை ஆள போற அரசனா தான் உன்னை அவர் தேர்ந்தெடுத்தார்..” “அவரோட அந்த நேர்மை, உழைப்பு, பக்தி எல்லாம் உன்கிட்ட இருக்கு, நீ தான் சரியான ஆள், உன்னால தான் செய்யவும் முடியும்ன்னு முழுசா நம்பினார்..” “அந்த நம்பிக்கை தான் சுத்தி அத்தனை மாப்பிள்ளை இருந்தப்போவும் உன்னை சூஸ் பண்ண வச்சது.. இது தான் உண்மையான காரணம். நீ சொல்ற மாதிரி அடிமையா எங்கேயும் இல்லை.. அவங்க மேல கோவப்படாத, ஏன் அவரோட பொண்ணும்..” “பொண்ணு.. பொண்ணு சொல்றீங்க, அவங்களுக்கு பேர் ஏதும் இல்லையா..?” இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று கடுப்பாக கேட்டுவிட்டான் உதய். குணா.. முகில் ஒருவரை ஒருவர் பார்த்து மெலிதாக சிரித்தவர்கள், “பவ்யஷாரா..” என, “என்ன ஷாராவா.. என்ன பேர் இது..? கண்ணம்மா கேட்டா ஓட்டி தள்ளிடும்..” முகம் சுருக்கினான். “நம்ம ஊர்ல பேரா இல்லை.. ஹலோ சார் நீங்க தான் வேணாம் சொல்லிட்டிங்களே.. அப்பறம் பேரை பத்தி உங்களுக்கு என்ன..?” மனசாட்சி கேலியாக குரல் கொடுத்தது. “என்ன உதய் பேர் பிடிக்கலையா..?” குணா சிரிப்புடன் கேட்டார். “ஏன் பிடிக்கல சொன்னா மாத்திடுவீங்களா..?” “ம்ஹூம்.. வாய்ப்பில்லை உதய்.. அது அவங்க அம்மா.. அப்பா பேர் சேர்த்து வச்சது.. ஷாக்க்ஷி.. ராம்.. முதல் எழுத்து.. ஷாரா.., கூட அவங்க பெரியப்பா வச்ச பேர் பவ்யா.. “பவ்யஷாரா..” “ஓஹ்..” என்றான் உதய். சில நிமிட மௌனம். “உதய்.. அவங்களை புரிஞ்சுக்கிட்டியா.. திரும்பவும் நான் பேசவா..?” குணா எதிர்பார்ப்புடன் கேட்டார். “புரிஞ்சுக்கிட்டேன் அங்கிள்.. ஆனா இப்போவும் என் முடிவு நோ தான்..” உதய் உறுதியாக சொல்லிவிட்டான். “ஏன் உதய்..? இப்போ என்ன பிரச்சனை..?” “இப்போ மட்டுமில்லை எப்போவும் அது எனக்கு பிரச்சனை தான் அங்கிள்.. அவங்க என்னை கேட்டதுக்கு ஆயிரம் நேர் மறையான காரணம் இருக்கலாம்.. ஆனா இந்த ஊர் உலகத்துக்கு முன்னாடி அது என்னோட அதிர்ஷ்டமா தான் இருக்கும்..” “என் தன்மானம், சுயமரியாதை, எனக்கான அடையாளம் மிக பெரிய கேள்வி குறியாகிடும்.. நான் நானா இருக்க முடியாது, உதய் கிருஷ்ணா பேர் எங்கேயும் இருக்காது, RK சார் மருமகன் தான் எனக்கான அடையாளமா மாறிடும், அது எனக்கு வேண்டாம்..” “உதய்ங்கிற மனுஷனுக்கு ஆயிரம் கனவுகள் இருக்கு, குறிக்கோள் இருக்கு.. அது பின்னாடி ஓட தான் நான் ஆசைப்படுறேன், என்னோட கனவை நான் நானா தான் அடையணும்..” “நான் என்னதான் என்னோட திறமையால ஜெயிச்சாலும் அந்த வெற்றி என்னதா இருக்காது.. எனக்கு பின்னாடி அவங்க இருந்தா. எனக்கு முன்னாடியும் சரி.. பின்னாடியும் சரி நான் நான் மட்டுமே.. என்னோட வெற்றி என்னோடது.. உதய் கிருஷ்ணாவா தான் நான் ஜெயிக்கணும்..” மிகவும் உறுதியாக தன் நிலைப்பாட்டை சொல்லிவிட்டவன், இன்று வரையிலும் அப்படி தான் இருக்கிறான். கடந்த வருடங்களில் இருவரின் வாழ்க்கையிலும் ஆயிரம் மாற்றங்கள்.. வெற்றிகள்.. தோல்விகள், விமர்சனங்கள்.. ஆனாலும் விடாது ஓடி கொண்டிருக்கின்றனர் இருவருமே. இதோ இன்று.. இன்றும் கொலு பூஜைக்கு உதய் வருவதற்கு ஒரே காரணம் அவள் மட்டுமே.. அவளும் வருகிறாள். ஆனால் இவன் கிளம்பிய பின் அல்லது இவன் வருமுன் வந்து சென்றுவிடுவாள். உதய்க்கு அவள் அவனை தவிர்ப்பது புரியாமல் இல்லை. “போ.. எனக்கென்ன..” அலட்சியத்துடன் தோளை குலுக்கி விடுவான். “உதய்.. பிரசாதம்..” பூஜை முடியவும் முகில் கொடுக்க, எடுத்து கொண்டவன், “அப்பறம் மேடம் வந்துட்டு போயிட்டாங்களா..?” சாதாரணமாக விசாரிப்பது போல கேட்டான். “எந்த மேடம்..?” முகில் தெரியாதது போல கேட்டான். “ஓஹ்.. உனக்கு தெரியாதா விடு..” உதய் எப்போதும் போல தோளை குலுக்க, உன்னை திருத்த முடியாது.. காண்டான முகில் உர்ரென்று “இன்னும் வரல..” என்றான். “ம்ம்.. அப்பறம் அந்த லாயர் கிஷோரை பூஜைக்கு இன்வைட் பண்ணியா..? முகிலிடம் கேட்டான். “ம்ம்.. ஆமாம் உதய்.. நேத்து htc மீட்டிங் போயிருந்தபோ என்னை லான்ல பார்த்து பேசினார். அப்போ அவரே உங்க வீட்டு பூஜை பார்க்க ஆசைன்னு சொன்னாரா..? அதான் இன்வைட் பண்ணிட்டேன்..” என்றான் முகில். “ம்ம்.. நினைச்சேன்..” என்றான் உதய். “ஆமா உனக்கெப்படி தெரியும்..?” முகில் குழப்பத்துடன் கேட்டான். “தெரியும்.. அவர் இங்க வர ஏன் ஆசை பட்டார்ன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கே தெரியும்..” என இருவரும் பேசி கொண்டிருக்க, கிஷோர் அவரின் ஜுனியர்களுடன் வந்தார். “ஹலோ மிஸ்டர் உதய்..” கிஷோர் அவன் இருக்கும் இடம் வந்தார். “ஹலோ சார்..” உதய் மரியாதையாக கை குலுக்கினான். “ஹலோ முகில்..” அவனிடமும் கை குலுக்கி மூவரும் அமர்ந்தனர். “அப்பறம் பிஸ்னஸ் எல்லாம் எப்படி போகுது..?” எப்போதும் போல பொதுவாக பேசி கொண்டிருந்துவிட்டு, அவர் திரும்பி அவர் ஜுனியர்களை பார்க்க, அவர்கள் தள்ளி சென்றனர். “அப்பறம் உதய்..” கிஷோர் முகிலை பார்க்காமல் பார்க்க, “நான் போய் உங்களுக்கு குடிக்க ஏதாவது ரெடி பண்றேன்..” என்று எழுந்தான் முகில். “இல்லை நீ இரு..” முகிலிடம் சொன்ன உதய், “சொல்லுங்க சார்..” என்றான் கிஷோரிடம்.