புன்னகையுடன் காரை நிறுத்தத்தில் நிறுத்திய கருண் சக்கரவர்த்தி, சாவியை விரல்களில் சுற்றியபடி விசிலடித்தவாறே உள்ளே நுழைய போக வாசலை மறைத்தவாறு வந்து நின்றான் சஞ்சய்.
அவனை பொருட்படுத்தாது அவனை தாண்டி செல்லபார்க்க அந்த புறமும் மறித்து நின்றான்..பச் என்று சலித்தவாறே மற்றைய இடைவெளியில் செல்ல பார்க்க அதையும் மறித்து நிற்க சலிப்புடன் தன் நினைவில் இருந்து வெளியில் வந்தவன்
“என்னடா வாசலில வைச்சு கபடி விளையாடுற? வேணும்னா வாவேன் மாப்பிள்ளை அந்த பக்கமா போய் நம்ம ரெண்டு பேரும் விளையாடுவோம்..என்ன சொல்லுற?”
என வினவியவனை முறைப்பாக பார்த்தவன்
“பொறு கவினும் வந்துடட்டும்..” எனவும் சரி என மண்டையை உருட்டியவன் அப்பொழுது தான் அவன் கூறிய அர்த்தம் புரிய
“என்னாதூ கவின் வாரானா? ஏன்டா இதை முன்னமே சொல்லாம கபடி ஆடி கொண்டிருக்கிற?”
“அறைஞ்சேன்னா பாரு..உன் ஃபோனை ஆன் பண்ணி பாரு..நான் மட்டும் இல்ல கவினும் நிறையவாட்டி ட்ரை பண்ணி இருக்கான். அதுக்கு அப்புறம் தான் எனக்கு எடுத்தான்..என்ன நினைப்புலடா இருக்கிற?உனக்கு பதிலா அவன் கிட்ட அர்ச்சனை வாங்குனது நான் தான்”
என்று அங்கலாய்த்தவனை தோளோடு அணைத்த படி உள்ளே அழைத்து சென்றவன்
“அவன் என்னோட மச்சான் டா..அவனை சமாளிக்க எனக்கு தெரியாதா?சரி கவின் என்ன டைம் வாரானாம்? கன்ட்ராக்ட் பத்தி சொல்லு”என்று சிறிது நேரம் அளவளாவியவர்கள்..பின்னர் வேறு வேலைகளில் ஆழ்ந்து போயினர்சிறிது நேரத்தில் ப்யூன் வந்து அறைக்கதவை தட்டவும் எதையோ கம்ப்யூட்டரில் பார்த்துக்கொண்டு இருந்த கருண் கதவினை திரும்பி பார்த்து உள்ளே வருமாறு கையசைத்தான்.
“என்ன குமார் நீ வார? என்னோட செக்ரட்டரி எங்க?” என்று கேட்கவும் பே என்று விழித்தபடி தலையை சொறிந்தவனை பார்த்து
“ஓ இன்றைக்கு அவங்க லீவா?” எனவும் குமாரோடு கருண் சேட்டையிடுவதை பார்த்த சஞ்சய்
“உனக்கு எதுக்கு செக்ரட்டரி கருண்..அந்த அடிக்கடி ஓஃப் ஆகுமே அந்த ஃபோனை ஒன் பண்ணி தரவா?”
எனவும் அசடு வழிந்தவன்
“இல்லடா..கவின் இப்படி தானே கேட்பான்..அதான் அதேபோல ட்ரை பண்ணி பர்த்தேன்”
“க்கும்..இப்போ அது ஒண்ணு தான் குறை..பாரு நீ கேட்ட கேள்வியில இல்லாத செக்ரட்டரிய எங்க போய் தேடுறது என்று குமார் யோசிச்சு கொண்டு இருக்கிறான் பாரு”
“ஹி..ஹி.. சும்மா கேட்டேன் குமார்..நீங்க சொல்லுங்க என்ன விஷயம்?”
“அது ஒன்றுமில்ல சார்”
“ஓ ஒன்றுமே இல்லையா அப்போ சரி நீங்க போங்க” என்றூ மறுபடியும் கம்ப்யூட்டர் திரையை நோட்டமிடவும்
“இருக்கு சார்..இருக்கு..உங்களை பார்க்க நம்ம ஸ்கூல்ல இருந்து ஒரு மிஸ் வந்து இருக்காங்க”
“அடபாவி குமாரு..இதை ஏன்டா முன்னாடியே சொல்லல? மாமாவோட கையால எனக்கு பூசை வாங்கி தராம விட மாட்டா போலவே..அவங்களை உள்ள கூப்பிடு”என்று குமாரை அரக்க பறக்க அனுப்பிவைத்தவன் தன்னை முறைத்துக்கொண்டிருக்கும் சஞ்சையை டீலில் விட்டான்.
சிறிது கழித்து உள்ளே அனுமதி கேட்டு நுழைந்த ஆதிராவை பார்த்த இருவரின் மனதிலுமே உடனே தோன்றியது
“வாவ்..வட் அ க்ளாசிக் பியூட்டி”
அதே சிந்தனையுடன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.தான் உள்ளே வந்த பின்னும் தன்னை அழைக்காமல் மற்றைய இருவரும் ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டிருப்பதை விசித்திரமாக பார்த்த ஆதிரா
“எக்ஸ்க்யூஸ் மீ சார்” எனவும் சுதாரித்த கரண்
“ப்ளீஸ் கம் இன்..ஸிட் டவுன்” என்றவன் அப்பொழுது தான் அவள் அருகில் தனக்கு எட்டாத கதிரையில் தொங்கி தொங்கி ஏற முயன்று கொண்டிருந்த குழந்தையை நோக்கினான்.அவனுக்கு என்னவோ அந்த குழந்தையில் தெரிந்த சாயல் ஒன்று தோன்றி மறைந்தது.ஸ்ரீ யை புன்னகையுடன் கதிரையில் அமர வழி செய்துவிட்டு நிமிர்ந்தவள் கருண் குழந்தையையே பார்ப்பதை உணர்ந்தவள்
“என்னோட குழந்தை தான்” எனவும்
“ஓ” என்று அவளை பார்த்து புன்னகைத்தவன் பின் ஸ்ரீ யின் புறம் திரும்பி
“ஹல்லோ குட்டி..குட்டியோட பெயர் என்ன?”
“ஹல்லோ அங்கில். என் பெதரா ஸ்ரீதா”
“ஸ்ரீ தா வா?”
அவனின் பாவனையில் சற்று விரிய புன்னகை செய்த ஆதிரா
“இல்ல சார் அவ பெயர் ஸ்ரீஜா..ஓகே சார்..நான் மனோகர் சார் அனுப்பி தான் இங்கே வந்தேன்..செக்கை தந்தீங்கனா நான் கிளம்ப வசதியாக இருக்கும்” என்று கூறவும்
“யா.யா.. ஒன் மினிட் சிஸ்டர்..இதோ சைன் பண்ணிட்டு தந்திடுறேன்” எனவும்
“சிஸ்டரா” என்று அவனை விசித்திரமாக பார்த்தாள்..அவள் தன்னை விசித்திரமாக பார்ப்பதை உணர்ந்தவன்
“ஹெல்லோ மேம்..எங்க மாமா தான் உங்க முதலாளி..நான் இல்லை..அதான் பார்த்தா என்னை விட யங்க் ஆ தான் இருக்கிறீங்க..தங்கச்சி என்று கூப்பிட்டா அது இப்போ ட்ரென்ட் இல்லையா அதான் சிஸ்டர் என்றேன்..கூப்பிடலாம் ல? ” என்றவுடன் புன்னகையுடன் தலைஅசைத்தவள் புன்னகையுடன் விடைபெற்று அந்த ஆபிஸின் மூன்றாம் தள காரிடோரில் நடக்க தொடங்கினாள்..
கருணின் அறையை விட்டு வெளியே வந்ததும் காரிடோரினூடாக நடந்தால் தான் லிப்ட்டை அடைய முடியும் என்பதால் ஸ்ரீ யின் கையை பற்றி நடந்து கொண்டிருந்தவள் திடீரென்று ஸ்ரீ தனது கையை விடுவிடுத்துக்கொண்டு ஓடவும் பதறியவாறு
“அம்மு” என்று அழைத்தவாறே பின்னே ஓடினாள். அவளும் தன்னை துரத்தியவாறு தன் அன்னை வருவதில் ஆர்வமாகி ஹி..ஹி..ம்மா பிதி என்று கொண்டே தனது வேகத்தை அதிகரித்தாள்.. பின்னே தாய் வருவதை பார்த்தவாறே ஓடியவள் திடீரென்று தன் முன்னே வந்தவனுடன் மோதி
“ம்மா” என்றபடி பின்னே சரிய போக அவளை அழுந்த பற்றி நேராக நிறுத்தியது இரு வலிய கரங்கள்
ஸ்ரீ விழ போவதை உணர்ந்து கலங்கியவாறே அவளை நோக்கி விரைந்தவள் யாரோ ஸ்ரீயை விழவிடாமல் தாங்கவும் ஹப்பா என்ற பெருமூச்சுடன் ஸ்ரீயின் அருகே சென்று
“அம்முக்குட்டி ஏதும் அடிபடலல?”
“ஹுஹும்” என்று அழகாக தலையை ஆட்டியது அந்த குறும்பு வாலு.அப்பொழுது தான் தங்கள் அருகிலேயே நின்று கொண்டிருந்த ஒரு ஜோடி கால்களை நோக்கியவள்
“ரொம்ப தாங்க்ஸ் சார்” என்றபடி நிமிர்ந்தவள் அங்கு நின்றிருந்தவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கவும் மிகுதியை சொல்லாமல் தொண்டைக்குழியிலேயே புதைத்து கொண்டாள்.
அங்கு நின்ற கவினோ தன் அருகே நின்ற உதவியாளரை பார்த்து
“வாட் இஸ் திஸ் நான்ஸன்ஸ் விவேக்? இது ஆபிஸா இல்ல வேறெதுவுமா? இப்பிடி மேனர்ஸ், பொறுப்பு எதுவுமே இல்லாதவங்களை எல்லாம் நடு ஆபிஸ்ல வச்சு ஓடி பிடிச்சு விளையாட வைச்சு இருக்காங்க? ஸ்டுப்பிட்ஸ்..எதுக்கு வந்திருக்காங்கனு கேட்டு க்விக்கா இந்த இடத்தை விட்டு அனுப்பு.. நான் கருணயும் சஞ்சயையும் மீட் பண்ண போகிறேன்” என்று அகல போனவனை தடுத்து நிறுத்தியது
“எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர்” என்ற ஆதிராவின் குரல்.
ஏற்கனவே அவனின் கோபம் கண்டு அஞ்சி நின்று கொண்டிருந்த விவேக் ஆதிரா அவனை நிறுத்தவும்
“ஆஹா சும்மா போறவரை இந்த அம்மா இன்னும் உசுப்பேத்திவிட போகுது போல இருக்கே..விவேக் இன்றைக்கு நைட் நீ வீட்டுக்கு போன மாதிரி தான்” என்று மனதிற்குள் புலம்பி கொண்டு நடப்பதை பார்க்க தொடங்கினான்
அவள் அழைத்த குரல் கேட்டு நகராமல் நின்றானே ஒழிய திரும்பவில்லை.
முதலில் அவன் கோவமாக பேசியதை பார்த்து பயந்து போய் தன்னருகே ஒன்றியபடி இருந்த ஸ்ரீயை வாரி எடுத்து தூக்கி தனது தோள்களில் சாய்த்து கொண்டிருந்த ஆதிரா தான் அழைத்தும் திரும்பாமல் நின்றவனை பார்த்து பல்லை கடித்தவாறே அவனுக்கு முன்னால் சென்று நின்றாள்.
தன்முன்னே வந்து நின்றவளை கவின் புருவம் சுருக்கி பார்க்கவும் அவன் பார்வையை பார்த்து
“சாரி சார்” என்றவள் அவன் எதுவும் கூறாமல் கடந்து செல்ல பார்க்கவும்
“நான் இன்னும் முடிக்கலை” என்றாள் இறுகிய குரலில். அந்த குரலில் புருவம் சுருக்கி அவள் விழிகளை நோக்கியவனின் விழிகளுக்குள் ஊடுருவியவள்
“இந்த மேனர்ஸ்,பொறுப்பு இதெல்லாம் என்ன என்று உங்களுக்கு முதல் தெரியுமா? அதபத்தி தெரிஞ்சவங்க தான் இல்லாதவங்களை பார்த்து இதெல்லாம் இருக்கா இல்லையானு ஆராய்ச்சி பண்ணனும்.
ஒருத்தங்க தேங்க்ஸ் சொல்ல்றப்போ முகத்தை திருப்பிட்டு போறதும் உங்க ஆபிஸுக்கு வந்தவங்க கிட்ட இப்பிடி கேவலமா நடந்துக்கிறதும் தான் உங்க அகராதியில பொறுப்பு மேனர்ஸ் என்றால் அது எனக்கும் என் குழந்தைக்கும் வராமலே போகட்டும்..
ஒருவேளை உங்களுக்கு இத பத்தின மேலதிக விளக்கம் வேணும்னா சக்கரவர்த்தி ஸ்கூலுக்கு வாங்க..என் ஸ்டூடன்ட்ஸுக்கு சொல்லி தாரப்போ உங்களுக்கும் சொல்லி தரலாம்..என்ன ஓகேவா? இப்போ நான் கிளம்புறன்..என்ன வரட்டா” என்று கூறி ஒரு முறைமுறைத்த படி லிஃப்டை நோக்கி நிமிர்ந்து கம்பீரமாக நடந்தவளை திறந்த வாய் மூடாமல் பார்த்துக்கொண்டு நின்றான் விவேக்.
“பாருடா அந்த மேடத்தை இந்த போடு போட்டுட்டு போகுது..ஆனாலும் போட்ட டோஸ் அதிகம் தான்..இன்றைக்கு எல்லாரும் கந்தல் தான்.அடிச்ச அடிக்கு சுனாமி வர போகுதோ இல்லை பூகம்பமோ” என்று எண்ணியபடி நின்றிருந்தவன் கவின் வேகமாக கருணின் அறைக்குள் நுழையவும் அவனும் கவினின் பின்னாலேயே ஓடினான்.
தனது அறைக்குள் புயல் போல் நுழைந்து தலையும் புரியாமல் வாலும் புரியாமல்
“எவடா அவ?” என்று கேட்ட கவினை ஏதோ வேற்றுகிரகவாசியை பார்ப்பது போல் பார்த்தான் கருண்..சஞ்சயோ அவனை விட ஒருபடி மேலே போய் கவினின் அருகில் இருந்த தன் மொபைலை எடுத்து தன் பாக்கெட்டில் போட்டு கொண்டான்.
“எவ்வளோ தைரியம்..எனக்கே பாடம் எடுப்பாளாமே? அதுவும் நம்ம ஸ்கூலுக்கே போகனுமா?”
என மீண்டும் கத்தவும் என்னடா இது என்று மண்டையை சொறிந்து கொண்ட கருண், கவினின் பின்னாலே நின்ற விவேக்கை பார்க்கவும் அவன் கன்னத்தில் ஒரு கையை வைத்து சற்று நெளிந்தான் பின் கைகள் இரண்டையும் ஆட்டி குழந்தை என்று செய்தான்.
“என்னது கவின் ஒரு பொண்ணுக்கு குழந்தைய கொடுத்துட்டானா??” என்று அதிர்ச்சியாக அவன் கூறவும் தன் தலையிலேயே ஓங்கி அடித்து கொண்ட விவேக், தன்னை திரும்பி பார்த்த முதலாளியை பார்த்து
“ஹி..ஹி என்று அசட்டு சிரிப்பை உதிர்த்தான்..
இதையெல்லாம் பார்த்து பொங்கி வந்த சிரிப்பை கட்டு படுத்த போராடி உதடு துடிக்க அமர்ந்து இருந்தான் சஞ்சய்.
“பச்..இப்போ ஒருத்தி வெளில போனாளே யாருடா அவ?”
“அது சுலோ டா..நம்ம ஆபிஸ் அக்கவுண்ட் செக்ஷன்ல வர்க் பண்றாங்க” எனவும் தன் நெற்றியை ஓங்கி தட்டி கொண்டவன்
“டேய் ஒருத்தி இப்போ குழந்தை ஒன்றோட வெளில போனாளே யாருடா அவ?”
“அட நம்ம ஆதிரா”
“என்னது நம்ம ஆதிராவா??”
“ஹி..ஹி..அது ஒரு ஃப்ளோ ல வந்துட்டுது கவின்.அவங்க நம்ம ஸ்கூல்ல டீச் பண்றாங்க.மாமா தான் அனுப்பி இருந்தார்..”
“ஓ அப்பாவோட சிபாரிசா? சரி விடு..அவ இனி என் கண்ணில படாதவரையும் ரெண்டு பேருக்கும் நல்லது.” என்று, கூறிவிட்டு அவர்களது கம்பனி விஷயமாக கதைக்க தொடங்கினான். பின்னர் யாரையோ பிஸ்னஸ் விஷயமாக மீட் செய்யவேண்டும் என்று கூறி புயல் வேகத்தில் வெளியேறியவனை கண்டு புஸ் என்று மூச்சு விட்டவாறு கதிரையில் சாய்ந்த கருண் சஞ்சயை பார்த்து பாவமாக
“முடியலடா..இந்த புயல் வர வர ரொம்ப வேகமா போய்க்கிட்டு இருக்கு” என்றவனின் பாவனையில் இப்பொழுது நன்றாகவே வாய்விட்டு சிரிக்க தொடங்கினான் சஞ்சய்.
நகர்புறத்தில் பிரபலமான இடத்தில் அமைந்திருந்த அந்த சொகுசு வீட்டின் காரிடோரில் தனது காரை நிறுத்திவிட்டு கையில் இருந்த கோட்டை தூக்கி சோபாவில் எறிந்த கவின் தனது கழுத்துப்பட்டியை தளர்த்தியவாறே சோர்ந்து அமர்ந்து சற்று தலையை சாய்த்து கண்களை மூடிக்கொண்டான்.சிறிது நேரத்தில் அருகில் நாசியில் ஏறிய காபியின் மணமும் தலையை தடவிய ஸ்பரிசமும் தனது தாயின் வரவை உணர்த்தவும் சிரிப்புடன் கண்திறந்தவன் தாய் சற்று கவலையுடன் தன்னை நோக்குவதை கண்டதும் அவர் கையை பற்றி தன்னருகே அமர்த்திக்கொண்டவன்
“என்னமா?” என்றான். அவன் அதை கேட்பதற்காகவே காத்துக்கிடந்தவர் போல
“ஏன்டா கண்ணா எதுக்கு இந்த ஓட்டம்? உன் முகத்தையே நான் இரண்டு நாளுக்கு ஒருதடவை தான் பார்க்க வேண்டி இருக்குது..அப்படி என்னடா வேலை? கருண பாரு..அவன் பையன்..என்னை போல சுமதியை புலம்ப விடுறானா?”
அப்பொழுது தான் கல்லூரியில் இருந்து சிந்துவை அழைத்து வந்த கருண்
“ஏன் அத்தை ஏன்? அவனே உங்களுகளுக்காக தான் கூடுதலா என்னை இந்த பக்கம் ஓரங்கட்டுறான்.பாவம் அவனே எவ்வளவ தான் பார்க்கிறது..வந்ததும் வராததும் இது தேவையா? அவனை விட்டுட்டு நான் போகலாம்னா அதுவும் சரிவராது..கவின் போனா தான் எல்லாரும் அடங்குறாங்க”
என்று கவினுக்கு ஜால்ரா அடித்தபடி உள்ளே நுழைந்த கருணை அங்கு இருந்த அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தார்கள் என்றால் கவினோ நமுட்டு சிரிப்போடு பார்த்து கொண்டு இருந்தான்.