“ஏன்?” என்று சிறு முறைப்புடன் கேட்டவள், “என்னோட அம்மா வச்ச பெயர்னு ஐயா சொன்னாங்க” என்றாள்.
“நான் தொட்டால் பூங்குழலை போல் குழைந்து விடுவாய் தான்” என்றபடி நாணத்துடன் நோக்கியவளின் கன்னத்தில் முத்தமிட்டவன், “ஆனால் நிஜத்தில் இந்த ராணி வீரமங்கை அல்லவா!” என்றான்.
“நீங்க புகழ்ற அளவுக்கு ஒண்ணும் நான் பெரிய வீர மங்கை இல்லை”
“ஆயுதம் ஏந்தியவர்களுடன் நிராயுதபாணியாக சண்டை புரிந்தாயே!”
“அதையே சொல்லாதீங்க.. அது தான் நான் முதல் முறையாக எதிரியுடன் சண்டை போட்டது.. உங்களுக்கு ஆபத்து என்றதும் சண்டை போடுட்டேன்” என்றவள், “இதை விடுங்க.. இளவரசர் சொன்னதை கேட்டதும், அந்த நொடியில் உங்களுக்கு என்ன தோணுச்சு?” என்று கேட்டாள்.
“என்னை மயக்கி கொல்ல ஒரு பெண்ணை ராஜமாதா தேடி இருக்க வேண்டும்.. உனது காரியத்தை சாதித்துக் கொள்ள அரண்மனை உள்ளே நுழைய ராஜமாதாவின் திட்டத்திற்கு உடன்படுவது போல் நீ இங்கே வந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன்.. ஆனால் இப்பொழுது தான் தெரிகிறது.. என்னை மயக்கும் வேலை மட்டும் தான் உன்னிடம் சொல்லப்பட்டு இருக்கிறது” என்றான்.
ஆச்சரியத்துடன் அவனை பார்த்தவள், “ஒரு நொடி கூட, என் மேல் சிறு சந்தேகம் கூட வரலையா?” என்று கேட்டாள்.
“முதலில் நீ இங்கே வந்த புதிதில் உன் மேல் சந்தேகம் கொண்டேன் தானே! ஆனால் உன் மனம் அறிந்த பின் உன் மேல் சந்தேகம் கொண்டால் அது என்னை நானே சந்தேகப் படுவது போல் தான்” என்றான்.
சட்டென்று எம்பி அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவன் சிரிப்புடன், “இனி உன் மகிழ்ச்சியை உணர்த்த உதட்டில் மட்டும் தான் முத்தமிட வேண்டும்” என்றான்.
அவள் புன்னகையுடன் சிறு குழந்தை போல் அழகு காட்ட, அவன் அதை ரசித்து சிரித்தான்.
பின் அவள், “இளவரசர் மறைஞ்சு நின்னுட்டு இருந்தார்னா! அப்போ நம்மளை பிரிக்க, வேணும்னே நீங்க வருவதை பார்த்துட்டு அப்படி பேசி இருப்பாரோ?” என்றாள்.
“ஹ்ம்ம்.. சரி.. கூடவே என்னை எச்சரிக்கை செய்யவும் நினைத்து இருப்பான்”
அவள் நம்பாமல் அவனை பார்க்க, அவன் மென்னகையுடன், “இங்கே அரண்மனையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்.. போகப் போக நீயே புரிந்துக் கொள்வாய்..” என்றான்.
“என்னவோ போங்க! நான் உங்களை புரிந்து கொண்டால் போதும்”
“அப்படி இல்லை தேவி.. ராணிக்கு அனைவரையும் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்”
“சரி தெரிந்துக் கொள்கிறேன்” என்றவள், “ஆனால் இளவரசர் உங்களை காப்பாற்ற நினைப்பதை தான் என்னால் நம்ப முடியவில்லை.. சொல்வது நீங்களாக இருக்கப் போய் நம்புகிறேன்” என்றாள்.
“நான் கூறுவது நிஜம் தேவி.. அவனுக்கு என்னை பிடிக்காது தான் ஆனால் அவன் இயல்பில் ரொம்ப நல்லவன்.. யாரையும் காயப்படுத்த நினைக்காத எப்பொழுதும் சிரித்த முகமாய் இருப்பவன்.. அவனது கோபம் வெறுப்பு எல்லாம் என் விஷயத்தில் மட்டுமே வெளிப்படும்.. அது கூட சிறு வயதில் இருந்து போதித்ததின் விளைவே! அதையும் மீறி அவனது உண்மையான குணம் வெளிப்படுவதால் தான் என்னை காப்பாற்ற நினைக்கிறான்.. தீய உபதேசத்தின் விளைவாக நான் ராஜாவாக இருக்க தகுதி இல்லாதவன் என்றும் அவன் தான் தகுதி உடையவன் என்றும் நினைக்கிறான்.. அதனால் அவன் ராஜாவாக நினைத்தாலும் என் உயிரை மாய்க்க நினைக்க மாட்டான்..” என்றவன், “என் தம்பி நல்லவன் தேவி” என்றான்.
“மகாராணி எடுத்து கூறி இருக்கலாமே!”
“அவரை ராஜமாதா தடுத்து இருக்கலாம்! பிறகு நாளடைவில், கூறிப் பயன் இல்லை என்று நினைத்து அவர்களே விட்டு இருக்கலாம்!”
“எல்லோரையும் நியாயப் படுத்துறீங்க”
“ராஜாமாதாவை நியாயப் படுத்தவில்லையே!” என்றவனின் உடலும் குரலும் இறுகி இருந்தது.
அப்பொழுது தான் நினைவு வந்தவளாக சற்று தயங்கிய குரலில், “உங்க அம்மா பற்றி ஏதோ சொன்னீங்களே!” என்றாள்.
அவனது உடல் மேலும் இறுகவும் அவள், “இல்லை.. கஷ்டமா இருந்தா சொல்ல வேண்டாம்” என்றாள்.
கண்களை இறுக்கமாக மூடி திறந்தவன், “நீ தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் தான்” என்றான்.
பின், “என் அன்னை எப்படி இறந்ததாக உனக்கு தெரியும்?” என்று கேட்டான்.
“உடம்பு சரி இல்லாமல்” என்று அவள் இழுத்து நிறுத்த,
அவன், “அது வெறும் கண்துடைப்பு.. என் அன்னைக்கு காய்ச்சல் வந்தது உண்மை.. ஆனால் அது வெறும் சாதாரண காய்ச்சல் தான்.. அந்த நேரத்தில் ராஜமாதா நயவஞ்சகமாக செயல்பட்டு என் அன்னையை கொன்றுவிட்டார்..
என் அன்னையை பார்த்துக்கொள்ள என்று தனியாக ஒரு ஆளை நியமித்து, தினமும் சுலபமாக செரிமானம் ஆகும் ஆகாரமான இடியாப்பம் மற்றும் கஞ்சி கொடுக்கச் சொல்லி இருக்காங்க..
இடியாப்பம் மற்றும் காஞ்சியில் மெதுவாக கொல்லும் விஷத்தை கலந்து கொடுத்து இருக்காங்க.. ஒரு நாள் பணிப்பெண் விஷத்தை கலக்கும் போது சந்ராமா பார்த்துட்டாங்க.. என் தந்தையிடம் அழைத்து சென்று இருக்காங்க.. என் தந்தையின் கடுமையான விசாரணையில் அவள் உண்மையை சொல்லிவிட்டாள். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது.. என் அன்னையை காப்பாற்ற முடியவில்லை.. எனக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தான் என் தந்தை என்னை நான்கு வயதிலேயே விடுதியில் சேர்த்துவிட்டார்..
முதலில் நான் என் தந்தையை வெறுக்கத் தான் செய்தேன்.. சில ஆண்டுகளுக்கு முன் இந்த உண்மைகள் தெரிந்த பிறகு தான் என் தந்தையின் பாசம் எனக்கு புரிந்தது” என்றான்.
அவள் கோபத்துடன், “ராஜமாதாவை மகாராஜா போலீஸில் பிடித்து கொடுத்து இருக்கலாமே! அன்னை பாசம் தடுத்து விட்டதா?” என்றாள்.
“அப்படி இல்லை.. ராஜமாதாவை தண்டிக்க ஆதாரம் எதுவும் இல்லை.. ஏன்னென்றால், உண்மையை சொன்ன அன்றே அந்த பணிப்பெண் விஷம் குடித்து இறந்துவிட்டாள்.. அதாவது விஷம் கொடுத்து கொல்லப்பட்டாள்” என்றான்.
அவனது கையை ஆதரவாக பற்றிக் கொண்டவளுக்கு அன்றொரு நாள் இடியாப்பத்தை கண்டு அவன் உணவை மறுத்ததின் காரணம் புரிந்தது.
“ஒன்றுமில்லை தேவி.. இதை எல்லாம் நான் கடந்து வந்து விட்டேன்” என்றான்.
பின் அவள் மெல்லிய குரலில், “நான் இங்கே வந்த காரணம்..” என்று ஆரம்பிக்க,
அவன், “தேவை இல்லை தேவி.. ஓரளவிற்கு நான் கண்டுபிடித்து விட்டேன்.. ஆதாரத்திற்காக தான் காத்திருக்கிறேன்.. அது கிடைத்ததும் நானே சொல்கிறேன்” என்றான்.
அவள் மீண்டும் ஆச்சரியத்துடன் அவனை பார்க்க, அவனோ புன்னகையுடன், “ஆனால் நீ வந்த காரியம் நிறைவேறாது தேவி” என்றான் உறுதியான குரலில்.
அவள் முறைப்புடன் ஏதோ கூற வர, அப்பொழுது அவனது கைபேசி சிணுங்கியது.
அழைப்பு ரஞ்சித்திடம் என்றதும் அதை எடுத்தவன், “சொல்லுங்க ரஞ்சித்” என்றான்.
“சார்.. நீங்க சந்தேகப் பட்டது சரி தான்.. கமிஷ்னர் சாரோட அக்கௌன்ட் ஸ்டேட்மென்ட் கிடைச்சிருச்சு.. அவர் தான் மீனாட்சிக்கு நிதி உதவி செய்து இருக்கார்”
“ஒரு வாரம் தேவைப்படும் என்று சொன்னீங்களே!”
“அவர் அக்கௌன்ட் வச்சிருக்க பேங்க்கில் என்னோட பிரெண்ட் வேலை பார்க்கிறான்.. ஸோ அவனை சரிகட்டி வாங்கிட்டேன்..
அவர் அக்கௌன்ட்டில் இருந்து ட்ரஸ்ட்டுக்கு தான் மனி(money) ட்ரான்ஸ்பர் ஆகி இருக்குது.. அதை வச்சு அவர் மீனாட்சிக்கு தான் உதவினார்னு ப்ரூவ் பண்ண முடியாது.. ஆனா அவர் அனுப்பிய அமௌன்ட்டும் மீனாட்சி பீஸ்ஸும் ஒரே அமௌன்ட் தான்..
இது போக இன்னொரு க்ளு கிடைச்சு இருக்குது.. நேத்து ஆசிரமத்தில் இருக்கும் ஆபீஸ் ரூமில் இருக்கும் சிஸ்டம் சரி பண்ண ஆள் கேட்டு இருந்தாங்க.. சிஸ்டம் சர்விஸ் பண்ண போனது நம்ம ஆள்.. அவன் வரும் போது சில டேட்டாஸ்(datas) கொண்டு வந்தான். அதில் ஆசிரமத்தில் நடந்த கல்சரல் ப்ரோக்ரம் ஒன்னு இருந்தது.. அதில் ஒரு இடத்தில் கமிஷ்னர் சார் மீனாட்சி கூட சிரித்து பேசியபடி தோளை தட்டிக் கொடுப்பது போல் இருக்குது” என்று நீளமாக பேசி முடித்தான்.
“விரைவாக கண்டு பிடித்ததிற்கு நன்றி ரஞ்சித்.. அனைத்து ஆவணகளையும் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிடுங்க”
“எனக்கு எந்த பிரச்சனையும் வராது.. கவலைப் படாதீங்க ரஞ்சித்.. உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி”
“டிப்பார்ட்மென்ட்டில் மீனாட்சி பற்றி விசாரிக்க முடிந்தால் விசாரித்து சொல்கிறேன் சார்”
“தேவைப்படாது.. காவல்துறை ஆணையர் சங்கரநாராயணன் என் தந்தையின் நண்பர் தான்.. நான் அவரிடம் பேசிக்கிறேன்”
“ஓகே சார்” என்றதும் அழைப்பைத் துண்டித்து திரும்பிய மாறவர்மசிம்மன் கண்டது தனது கைவளைவில் அமர்ந்தபடி தன்னை முறைத்துக் கொண்டிருந்த பூங்குழலி என்ற அவனது தேவியைத் தான்.