அடுத்த நாள் காலையில் தோட்டத்தில் தனது மெது ஓட்டத்தை ஆரம்பித்த மாறவர்மசிம்மன் புதிதாக தீரனும் சுதிரும் சட்டென்று கண்டு பிடிக்க முடியாத இடத்தில் நின்றபடி சுற்றுப்புறத்தை கண்காணித்துக் கொண்டிருப்பதை கண்டு தன்னுள் மென்னகைத்துக் கொண்டான்.
உறவுகள் விஷயத்தில் தன்னை வஞ்சித்த கடவுள் நட்பு மற்றும் விசுவாசிகள் விஷயத்தில் தன்னை ஆசிர்வதித்ததாக கருதினான்.
சட்டென்று தன்னவளிடம் பேசும் எண்ணம் வர, கைப்பேசியின் செவிப்பொறியை காதில் மாட்டிக் கொண்டு அவளை அழைத்தவன் அழைப்பு சென்றதும் கைபேசியை கால்ச்சட்டையின் பையினுள் வைத்தான்.
அவன் மீனாட்சியை தான் அழைக்கிறானோ என்ற சந்தேகத்தில் ஒலிவாங்கியை அணைக்க என்று தீரன் அந்த இடத்தில் இருந்து நகரப் போக, அப்பொழுது சரியாக அவனைப் பார்த்த மாறவர்மசிம்மன் மறுப்பாக தலை அசைத்து ‘தேவை இல்லை’ என்று செய்கை செய்தான்.
தீரன் ‘ராஜாக்கு நாலா பக்கமும் கண்ணு’ என்று நினைத்தபடி அதே இடத்தில் நின்று கொண்டான்.
அழைப்பை எடுத்த மீனாட்சி, “இனிய காலை வணக்கம் மாறா” என்றாள் புத்துணர்ச்சியுடன்.
“இனிய காலை வணக்கம் தேவி.. குரலில் தனி புத்துணர்ச்சி தெரிகிறதே!”
“இப்போ தான் முழிக்கிறேன்.. கண்ணை திறக்கவும் உங்க அழைப்பு.. அதான் புத்துணரச்சி தானா வந்து ஒட்டிகிடுச்சு”
“ஓ”
“ஜாக்கிங் போயிட்டே பேசுறீங்களா?”
“ஹ்ம்ம்.. கல்யாணத்துக்கு அப்புறம் ரோஜாவன தோட்டத்தில் நாம் சேர்ந்து ஓடலாம்”
அவள் சிறு வெட்கத்துடன், “ஹ்ம்ம்” என்றாள்.
அதை ரசித்தவன், “சரி தேவி உன் குரலை கேட்கத் தான் அழைத்தேன்.. நீ போய் உன் வேலையை கவனி” என்றான்.
“ஹ்ம்ம்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவள் உற்சாகத்துடன் எழுந்து குளியல் அறையினுள் சென்றாள்.
மாரவர்மசிம்மனும் உற்சாகத்துடன் மெது ஓட்டத்தை முடித்துக் கொண்டு தனது அறைக்குச் சென்றான்.
சில நொடிகளில் காப்பியும் செய்தித்தாளும் வந்தது. காப்பியை பருகி முடித்தவன் செய்தித்தாளை கையில் எடுத்த வேளையில் அவனது கைபேசி சிணுங்கியது. அழைத்தது அமரகேசரி.
“இனிய காலை வணக்கம் நண்பா.. உன் நலனை விசாரிக்க அழைத்தால், நீயோ படு உற்சாகத்துடன் இருக்கிறாய்!”
“என் நலனிற்கு என்ன! அமோகமாக இருக்கிறேன்.. நீ எப்படி இருக்கிறாய்?”
“என் தந்தையின் சதி செயலை கேள்விப்பட்டு தான் அழைத்தேன்” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
“உன் தந்தையால் என்னை எதுவும் செய்ய முடியாது”
“அது வேறு விஷயம்.. நான் கிளம்பும் முன் சொல்லிவிட்டு தான் வந்தேன்.. இருந்தும்..” என்று பேசியவனின் பேச்சை இடையிட்ட மாறவர்மசிம்மன்,
“அவரை மாற்ற முடியாது.. விடு..”
“ப்ச்.. நீ விட்டு விட்டு தான் அவர் தொடர்ந்து உனக்கு இன்னல் கொடுக்கிறார்”
“இன்னல் கொடுக்க முயற்சிக்கிறார் என்று கூறு..”
“ஏதோ ஒன்னு.. உன்னை தொந்தரவு செய்கிறார் தானே! அதுவும் அவரது நேற்றைய செயல்..” என்று கோபமாக பேசியவனின் பேச்சை மீண்டும் இடையிட்ட மாறவர்மசிம்மன்,
“நீண்ட நாட்களுக்கு பிறகு எனது திறமையை சோதிக்க வாய்ப்பு அமைத்து கொடுத்து இருக்கிறார்”
“ஏதாவது சொல்லிவிட போகிறேன்”
“சொல்”
“நீ எதிர்த்து நின்றால், உனது ஒரு தாக்குதலை தாங்குவாரா! எனக்காக பார்க்காதே என்றால் கேட்கிறாயா?”
“இதை விடுத்து வேறு பேசு” என்று சற்று அழுத்தத்துடன் கூறினான்.
“ப்ச்.. போடா”
நண்பனை திசை திருப்ப மாறவர்மசிம்மன், “நீ இங்கே வந்த பிறகு, ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்கிறேன்” என்றான் உற்சாக குரலில்.
அமரகேசரி சிறு யோசனையுடன், “உன் குரலின் உற்சாகமே தனியாக தெரிகிறதே! அழைப்பை எடுத்ததும் இதே குரலில் தான் பேசினாய்.. என்ன விஷயம்?”
“நேரில் சொல்கிறேன்” என்றான் உல்லாசமாக சிரித்தபடி.
“டேய் நீயாடா இப்படி சிரிக்கிறது!” என்று இன்ப அதிர்ச்சியுடன் கூறிய அமரகேசரி உற்சாகத்துடன் சிரித்தபடி, “சிங்கம் சிக்கிடுச்சு போல! யாரு அந்த மங்கை?” என்று கேட்டான்.
சத்தமாக சிரித்த மாறவர்மசிம்மன், “உன் அத்தையை பார்த்துக் கொள்ள வந்திருக்கும் மங்கையே உன் நண்பன் மனம் கவர்ந்த நங்கை”
“பேரழகியோ!”
“ஹ்ம்ம்.. முகத்தை விட என் தேவியின் அகம் இன்னும் பேரழகு”
“உன் மனதையே கவர்ந்து இருக்கிறாள் என்றால் நிச்சயம் முக அழகை விட அக அழகு கூடுதலாகத் தான் இருக்கும்”
“ஹ்ம்ம்”
“உன் காதலை சொல்லிவிட்டாயா?”
“உன் சின்ன மச்சானிடம் வருங்கால ராணி என்றே அறிவித்து விட்டேன்”
“பலே”
“என் கதை இருக்கட்டும்.. என் தங்கையிடம் பேசுவதை விட்டுவிட்டு என்னிடம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டு இருக்கிறாயே!”
“உனக்கு உன் ஆளுடன் பேச வேண்டும் என்றால் நேரிடையாக சொல்லேன்”
“அதெல்லாம் முடிந்து விட்டது”
“ஓ”
“பேச்சை மாற்றாமல் பதில் சொல்.. என் தங்கையிடம் பேசுகிறாயா இல்லையா?”
“உன் தங்கையிடம் போனில் பேசினால் சண்டை தான் வருகிறது”
“என்னாச்சு?”
“எப்போதும் போல் தான்” என்று சிறு சலிப்புடன் கூறினான்.
“அவளிடம் எனக்காக வரிந்து கட்டிக் கொண்டு பேசாதே என்று கூறினால் கேட்கிறாயா?” என்று சிறு கோபத்துடன் திட்டினான்.
“என் மனம் கவர்ந்தவள் என்பதற்காக அவள் கூறும் அனைத்தையும் சரி என்று தலை ஆட்ட மாட்டேன்”
“என் தங்கை நல்லவள் தான்.. சிறு வயது முதல் கிடைத்த ராஜமாதாவின் உபதேசம்”
“என் தந்தையை விட்டுவிட்டாயே!” என்றவன், “கல்யாணத்திற்கு பிறகு அவளை திருத்திக் கொள்கிறேன்” என்றான்.
“சிறு பெண்ணடா”
“நீ தான் தங்கை என்று உருகுகிறாய்”
“அன்பு என்ன பண்டை மாற்று பொருளா! நீ கொடுத்தால் தான் நான் கொடுப்பேன் என்பதற்கு! அவள் என்னை வெறுப்பதால் என் தங்கை இல்லை என்று ஆகிவிடுமா?”
“உன் அன்பும் அருமையும் அங்கே யாருக்கும் புரியவில்லையே!”
“அதில் நான் ஒன்றும் குறைந்துவிடப் போறது இல்லை”
“நிச்சயம் காஞ்சனா மனதை மாற்றி, உனக்கு உன் தங்கையை பரிசளிப்பேன்”
மாறவர்மசிம்மன் மென்னகையுடன், “பாசப் பயிரை வளர்க்கும் எண்ணத்தை விட்டு விட்டு காதல் பயிரை வளர்க்கும் வழியைப் பார்” என்றான்.
அவனும் மென்னகையுடன், “உன் நண்பன் ஒரே நேரத்தில் இரண்டு பயிர்களையும் வளர்ப்பவன் டா” என்றான்.
“சரி உனக்கு நேரமாகிறது.. உறங்கச் செல்”
“என் தங்கையின் புகைப்படத்தை அனுப்பு”
“மாலை அனுப்புகிறேன்”
“தற்போது உன்னிடம் என் தங்கையின் புகைப்படம் இல்லை.. இதை என்னை நம்ப சொல்கிறாய்!”
சற்று சத்தமாக சிரித்தபடி, “இருவருமாக சேர்ந்து இருக்கும் புகைப்படம் மட்டுமே இருக்கிறது.. அது மற்றவர் பார்வைக்கு இல்லை” என்றான்.
“நான் வரும் போது என் மருமகனையும் சேர்த்து அறிமுகம் செய்வாய் போலயே!”
“அது என்ன மருமகன்?”
“எனக்கு முன் நீ பெற்றுக் கொண்டால், மருமகன்.. இல்லை மருமகள்” என்றவன், “நான் சொன்னது நடந்துவிட வாய்ப்பு இருக்கிறதோ!”
“டேய்!” என்று மாறவர்மசிம்மன் சிரிப்புடன் மிரட்ட,
“ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.. என்றும் இதே மகிழ்ச்சியுடன் நீ இருக்க வேண்டும்..” என்று நெகிழ்ந்த குரலில் கூறிய அமரகேசரி, “இருப்பாய்” என்று உறுதியான குரலில் கூறினான்.
“நன்றி” என்று இவனும் ஆத்மார்த்தமாக கூறினான்.
“மூன்று வாரங்கள் கழித்து நேரில் சந்திக்கலாம்.. இப்போது தூங்கப் போகிறேன்”
“ஹ்ம்ம்.. பார்க்கலாம்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தவன் செய்தித்தாளை கையில் எடுத்தான்.
செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இருந்த செய்தியை பார்த்ததும் மாறவர்மசிம்மனின் மூளையில் சட்டென்று ஒரு மின்னல் வெட்டியது.
செய்தித்தாளை கீழே வைத்தவன் கைபேசியை எடுத்து தீரனை அழைத்தான்.
அழைப்பை எடுத்த தீரன், “காலை வணக்கம் ராஜா” என்றான்.
“காலை வணக்கம் தீரா.. உடனே என் அறைக்கு வா” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
சட்டென்று, “காலை வணக்கம் சார்.. சொல்லுங்க” என்று சிறு பணிவு கலந்த மரியாதையுடன் கூறினான்.
மாறவர்மசிம்மன், “சங்கரநாராயணன் சாரோட வங்கி கணக்கு பற்றிய விவரம் வேண்டும்” என்றதும் தீரன் மற்றும் ரஞ்சித் அதிர்ச்சி அடைந்தனர்.
ரஞ்சித் அதிர்ச்சியுடன், “சார்! நீங்க சொல்றவர்” என்று இழுத்து அவரைப் பற்றி குறிப்பிட்டு கேள்வி கேட்க,
“ஆம்.. அவரே தான்” என்ற மாறவர்மசிம்மன், “அவர் மீனாட்சிக்கு நிதி உதவி செய்து இருப்பாரோ என்று சந்தேகம் கொள்கிறேன்..” என்றான்.
ரஞ்சித் யோசனையுடன், “எதை வைத்து சொல்றீங்க சார்?” என்று கேட்டான்.
“ஒரு யூகம் தான்.. அது தவறாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது”
“இதுவரை உங்கள் யூகம் தப்பா போனது இல்லையே சார்!”
“நன்றி”
“இன்னமும் எனக்கு பிடிபடலை சார்.. எப்படி இவங்க ரெண்டு பேரையும் லிங்க் பண்ணீங்க?”
“நிதி உதவி செய்வதற்கு இருவருக்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லையே!”
“அது சரி தான்.. ஆனால் அதன் தொடர்ச்சி மீனாட்சியின் அரண்மனை வருகை.. அதான் என்ன லிங்க்னு யோசிக்கிறேன்”
“மன்னிக்கவும்.. சில விஷயத்தை என்னால் வெளிப்படையாக பேச முடியாது”
“என்ன சார்! நீங்க போய் சாரி எல்லாம் சொல்லிட்டு இருக்கிறீங்க! வெளிப்படையா சொல்ல முடியாதுனு சொன்னா போதாதா?”
“நன்றி.. நான் கேட்டது?”
“கொஞ்சம் கஷ்டம் தான் ஆனா முடியும்”
“எப்போது கிடைக்கும்?”
“அதிக பட்சம் ஒரு வாரத்தில் தரப் பார்க்கிறேன் சார்”
“சரி” என்றவன் தீவிர குரலில், “ரஞ்சித்.. இந்த விஷயத்தில் உங்களின் அனுமானங்கள் கூட..” என்றவனின் பேச்சை இடையிட்ட ரஞ்சித் தீவிர குரலில், “என்னைத் தான்டி வெளியே போகாது சார்” என்று முடித்தான்.
தீரன் இன்னமும் அதிர்ச்சி விலகாமல், “கந்தன் ஏதும்..” என்று ஆரம்பிக்க,
மறுப்பாக தலை அசைத்த மாறவர்மசிம்மன், “உயிரே போனாலும் கந்தன் வாய் திறக்க மாட்டார்” என்றான்.
‘அப்புறம் எப்படி! எங்கே, எப்படி விஷயம் கசிந்து இருக்கும்?’ என்று நினைத்தபடி தீரன் தீவிரமாக யோசிக்க,
மாறவர்மசிம்மன், “அவர் என் தந்தையின் நண்பர் என்பதை மறந்து விட்டாயா?” என்றான்.
“இளவரசர்!”
“ஒரு பிரச்சனையும் வராது.. நீ போய் உன் வேலைகளை கவனி”
“சரி ராஜா” என்று கூறி தீரன் விடைபெற்று வெளியே சென்றான்.
‘தேவி! உண்மையிலேயே நீ வீராங்கனை தான்’ என்று மென்னகையுடன் கூறிக் கொண்டவன் அன்றைய வேலைகளை தொடங்கினான்.
காலை உணவை முடித்த பிறகு மகாராணி அறையில் மீனாட்சி மகாராணியை சாய்ந்தார் போல் கால் நீட்டி மெத்தையில் அமரச் செய்து, தலையணையை அவர் தொடை மேல் வைத்து செய்தித்தாளை தலையணை மேல் வைத்தாள்.
மகாராணி, “சந்ராவிடம் பேசினாயா?” என்று மீனாட்சியிடம் கேட்டார்.
அவள் சிறு சங்கடத்துடன், “இன்னும் இல்லை மகாராணி” என்றாள்.
மகாராணி அமைதியாக செய்தித்தாளை படிக்க ஆரம்பிக்க,
அவள், “சந்ராமாவை தனியா பார்த்து பேச சந்தர்ப்பம் அமையவில்லை” என்றாள்.
அதற்கும் அவர் பதில் கூறவில்லை. ‘சொல்றதை சொல்லி விட்டேன்.. இதற்கு மேல் உன் விருப்பம்’ என்பது போல் அவர் அமைதியாக இருந்துக் கொண்டார்.
ஆனால் மீனாட்சியோ மனதினுள் ‘இன்னைக்கு சாயுங்காலம் கண்டிப்பா சந்ராமா கிட்ட கேட்டே ஆகணும்’ என்ற தீர்மானத்தை எடுத்தாள்.
மாலையில் மீனாட்சி ராஜமாதாவை சந்திக்க சென்ற போது,
ராஜமாதா கூர்மையான பார்வையுடன், “நேற்று வீர சாகசங்கள் செய்து இருக்கிறாய் போல!” என்றார்.
“பெரிதாக எதுவும் இல்லை ராஜமாதா.. ராஜா தான் சண்டை போட்டார்..”
“எனக்கு கிடைத்த தகவல் அப்படி இல்லையே! நீ அவன் உயிரை காப்பாற்றியதாக கேள்விப் பட்டேன்” என்று குற்றம் சாட்டும் குரலில் கூறினார்.
அவள் சிறிதும் அசராமல், “உயிரை காப்பாற்றும் அளவிற்கு நான் எதுவும் செய்யவில்லை ராஜமாதா.. அவருக்கு என் மேல் முழுமையான நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக அவர் மேல் விழ இருந்த ஒரு வெட்டை தடுத்தேன்.. அவ்ளோ தான்.. அதை நான் தடுக்காமல் இருந்து இருந்தால் அவருக்கு காயம் ஏற்பட்டு இருக்குமே தவிர உயிர் போகும் வாய்ப்பு இல்லை” என்றாள்.
“ஆக.. இப்போது அவன் உன்னை பூரணமாக நம்புகிறான்”
“அப்படி தான் நினைக்கிறேன்”
“இப்போதும் சந்தேகமாக தான் கூறுகிறாய்!” என்று சற்று கோபத்துடன் அவர் கூற,
அவள், “நேத்து என்னோட செயலுக்கு எதிர்வினையா அவர் பெரிதாக உணர்ச்சிவசப் பட்டு உருகி குழைந்து எதுவும் சொல்லலை ஆனா என் மேல் நம்பிக்கை வந்து இருக்கும் என்று நம்புகிறேன்” என்றாள்.
“சரி.. அடுத்து என்ன செய்வது என்று நாளை கூறுகிறேன்”
“சரி ராஜமாதா”
“நீ செல்லலாம்” என்றதும் அவள் வெளியேறினாள். அடுத்து என்ன செய்வது என்று ராஜமாதா யோசிக்க ஆரம்பித்தார்.
பராந்தககேசரியின் ஆட்கள் மீனாட்சியின் தாக்குதலை பற்றி எதுவும் அவரிடம் கூறவில்லை. ஒரு பெண்ணிடம் அடி வாங்கியதை அவமானமாக கருதியவர்கள் அதை பற்றி வாய் திறக்கவில்லை. ஆனால் முதலில் மேலோட்டமாக இந்த சம்பவத்தை பற்றி கூறி இருந்த ராஜமாதாவின் உளவாளிகள் பிறகு நன்றாக விசாரித்து தெரிந்து கொண்டு முழு விவரத்தையும் இரவு தான் ராஜமாதாவிடம் கூறி இருந்தனர்.
மீனாட்சி பொது தோட்டம் வழியே ரோஜாவனம் தோட்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த பொழுது அவள் முன் வந்து நின்ற இளவரசன், “இப்போ தான் எனக்கு விஷயம் தெரியும்.. என் முழு ஆதரவும் உனக்கு இருக்கும்” என்றான்.
“என்ன விஷயம்? எனக்கு எதற்கு உங்கள் ஆதரவு?” என்றாள்.
“எனக்கு எல்லாம் தெரியும்”
“என்ன தெரியும்?”
“ராஜமாதாவின் ஏற்பாட்டில் அவனை கொல்லத் தான் கேர் டேகர் என்ற பெயரில் நீ இங்கே வந்து இருக்கிறாய் என்ற உண்மை எனக்குத் தெரியும் என்கிறேன்” என்றான்.
அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள்.
‘என்ன கொலை திட்டமா!’ என்ற அதிர்ச்சியுடன் அவள் பார்க்க, அவனோ தனக்கு உண்மை தெரிந்ததில் அவள் அதிர்ச்சி அடைந்ததாக தவறாக நினைத்துக் கொண்டான்.
வெற்றி கழிப்பை மனதினுள் மறைத்தபடி வரவழைத்த சிறு பதற்ற குரலில், “யாரோ வராங்க.. நான் அப்புறம் பேசுறேன்” என்று கூறிவிட்டு வேகமாக சென்றவன், ஒரு மரத்தின் மறைவில் அவளைப் பார்த்தபடி நின்றான்.
மாறவர்மசிம்மன் வருவதைப் பார்த்த இளவரசன் வேண்டுமென்றே மாறவர்மசிம்மன் இவள் அருகே வந்ததும் அறியாதவன் போல் இவள் முன் நின்று அவ்வாறு பேசினான். இளவரசனின் திட்டம் மாறவர்மசிம்மனுக்கு ராஜமாதாவின் திட்டத்தை தெரியப் படுத்தி அவனை சுதாரித்துக் கொள்ளச் செய்வதும், மீனாட்சியை அவனிடம் இருந்து பிரிப்பதும்.
சில நொடிகள் கழித்தே அதிர்ச்சியில் இருந்து இயல்பிற்கு திரும்பிய மீனாட்சி தனக்கு முன் நின்றிருந்த மாறவர்மசிம்மனை கண்டு மின்சாரம் தாக்கியதைப் போல் பெரிதும் அதிர்ந்தாள்.