“முதலில் ரஞ்சித் உதவியுடன் அவளது கைப்பேசி IMEI எண், கைப்பேசி எண்ணிற்கான ரசீது, குறுஞ்செய்தி தகவல்கள் என்று அனைத்தையும் வாங்க ஏற்பாடு செய்..
அடுத்து ஒலிவாங்கியின் பதிவுகளை பரிசோதித்துப் பார்.. வந்து ஒரு மாதம் ஆகிறது.. நிச்சயம் அவளின் குழுவினரிடம் தொடர்பு கொண்டு இருப்பாள்.. பதிவில் அவள் யாரிடமாவது பேசி இருந்தால், பதிவில் இருக்கும் நேரத்தையும் கைப்பேசி ரசீதில் இருக்கும் நேரத்தையும் வைத்து அவளது குழுவினரின் எண்ணை கண்டுபிடித்து விடலாம்..
யாரிடமும் பேசியதாக பதிவில் இல்லை என்றால், குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறாளா என்று பார்..
குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை என்றால் சந்தேகம் நிவர்த்தி ஆகி விடாது..
IMEI எண் வைத்து அவள் கைப்பேசியில் வேறு எண் பொருத்தி இருக்கிறாளா என்று பார்.. அப்படி எதுவும் இல்லை என்றாலும் சந்தேகம் நிவர்த்தி ஆகி விடாது..
இதுவரை சொன்ன எதிலும் நமக்கு சாதகமாக எதுவும் கிடைக்கவில்லை என்றால், அவள் குழுவினரை தொடர்பு கொள்ள இன்னொரு கைபேசி வைத்து இருக்கிறாள் என்று அர்த்தம்..
அதன் மூலம் பேசி இருந்தால் ஒலிவாங்கி பதிவில் தெரிந்து விடும் ஆனால் குழுவினரின் எண்ணை கண்டு பிடிப்பது எளிதல்ல..
அந்த மற்றொரு கைப்பேசியில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாலும் சுலபமாக கண்டுபிடிக்க முடியாது..” என்று கூறி சில நொடிகள் யோசித்தவன்,
“ஒன்று செய்யலாம்.. சற்று நேரத்தில் நான் அவளை அழைத்துக் கொண்டு தென்காசி பெரிய கோயில் சென்று வருகிறேன்.. அந்த நேரத்தில் நீ வழக்கமான சோதனையை மேற்கொள்வது போல் அனைத்து அறைகளையும் சோதனையிடு.. யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அவளது அறைக்குள் சென்று வேறு கைபேசி இருக்கிறதா என்று நீயே சோதித்துப் பார்..
தயாவையும் சேர்த்துக்கொள்.. அவன் இங்கே பதிவுகளை ஆராயும் நேரம் நீ அங்கே அவள் அறையை சோதித்துப் பார்”
“நல்ல யோசனை ராஜா.. நிச்சயம் வெற்றி கிட்டும்.. ஆனால் தயா உங்கள் பாதுகாப்பிற்காக உங்களுடன் வர வேண்டுமே!”
“அடுத்த தாக்குதல் உடனே நடைப்பெற வாய்ப்பு ரொம்பவே குறைவு.. அப்படியே நடந்தாலும் சுதிர் என்னுடன் தானே இருப்பான்.. நான் சமாளித்துக் கொள்வேன்”
“சரி ராஜா..” என்றவன், “அன்பு வேண்டுகோள் ராஜா.. இனி எக்காரணம் கொண்டும் தனியே செல்ல வேண்டாம்” என்றான்.
அவன் உதட்டோர மென்னகையுடன், “கவலை வேண்டாம்.. இனி அவ்வாறு செல்ல மாட்டேன் என்று சந்ராமாவிடம் வாக்கு கொடுத்து விட்டேன்”
“இப்பொழுது தான் நிம்மதியாக இருக்கிறது.. நன்றி ராஜா”
“தேவி வளர்ந்த ஆசிரமத்தில் கராத்தே பயிற்சி அளிக்கிறார்களா என்பதை சரி பார்க்க மறந்துவிடாதே”
“சரி பார்த்து விடுகிறேன் ராஜா”
“ஏதேனும் சிறு தகவல் கிடைத்தாலும் உடனே எனக்கு தெரிவிக்க வேண்டும்”
“சரி ராஜா”
“என் அறைக்கு சென்றதும் தேவியை அழைத்து பேசுவேன்.. அவள் எனது அழைப்பை எடுத்தும் உனக்கு குறுஞ்செய்தி அனுப்பிகிறேன்.. பேசி முடித்த பிறகும் குறுஞ்செய்தி அனுப்புகிறேன்”
“சரி ராஜா”
அதன் பின் சிறு தலை அசைப்புடன் மாறவர்மசிம்மன் தனது அறைக்குச் சென்றான்.
அறைக்கு சென்றதும் மாறவர்மசிம்மன் மீனாட்சியை கைபேசியில் அழைத்தான். அவள் அழைப்பை எடுத்ததும், “என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் தேவி?” என்று கேட்டபடி தீரனிற்கு குறுஞ்செய்தி அனுப்பினான். தீரனும் அவளது அறையில் இருக்கும் ஒலிவாங்கிகள் அனைத்தையும்அணைத்து வைத்தான்.
“சும்மா தான் படுத்து இருக்கிறேன்”
“உடம்பு ஓய்வில் இருக்கிறது.. மூளை?”
“அம்மா அப்பாவுடன் இருந்த அந்த பொக்கிஷ நினைவுகளை திரும்ப நினைத்துப் பார்த்தேன்.. முன்னாடி மனசே பாரமா இருக்கும்.. இப்போ அதை நினைத்துப் பார்க்கும் போது அப்பா அம்மா என் கூடவே இருக்கிற மாதிரி ஒரு பீல்.. அந்த உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியலை.. சந்தோஷமா இருக்குது.. கூடவே ஒருவித புது தெம்பு வருது.. தனி தைரியமும் வருது…”
“உன் தைரியத்தின் அளவைத் தான் இன்று பார்த்தேனே! நிராயுதபாணியாக ஆயுதம் ஏந்தியவர்களை தாக்கினாயே!”
“அது வேறு.. நான் சொல்ற பீல் வேறு”
“ஹ்ம்ம்.. புரிகிறது..” என்றவன், “இன்று ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது” என்றான்.
“என்ன?”
“எல்லா விதத்திலும் இந்த ராஜாவுக்கு ஏற்ற ராணி நீ தான்”
அவள் சிறு வெட்கத்துடன், “இதை சொல்லத் தான் போன் பண்ணீங்களா?” என்று கேட்டாள்.
“இல்லை.. நாம் இருவரும் தென்காசி பெரிய கோவில் சென்று வரலாம்.. கிளம்பி வேந்தன்புரம் வா..”
“திரும்ப தனியாவா? எதுக்கு ரிஸ்க்?”
“சுதிர் தான் வண்டியை ஓட்டப் போகிறான்”
“இன்னொரு நாள் போகலாமே!”
“ஏன்.. இன்றைக்கு என்ன?”
“மதியம் தான் ஒரு தாக்குதல் நடந்து இருக்குது”
“அதனால் என்ன! என்னுடன் அஞ்சா நெஞ்சம் கொண்ட வீராங்கணை நீ இருக்கிறாயே!”
“கிண்டல் பண்ணாதீங்க” என்று அவள் லேசாக சிணுங்க,
அவன் சிரித்தபடி, “நேரில் வந்து இதே மாதிரி சிணுங்கிக் காட்டு” என்றான்.
“ஹும்ம்” என்று மீண்டும் சிணுங்கினாள்.
அதை ரசித்து சிரித்தவன், “கவலை வேண்டாம் தேவி.. ஆபத்து எதுவும் நிகழாது.. கிளம்பி வா” என்றான்.
“எப்படி உறுதியா சொல்றீங்க?”
“உடனே அடுத்த தாக்குதல் நடக்க வாய்ப்பு இல்லை”
“இருந்தாலும்”
“இன்னொரு நாள் போனால் மட்டும்.. அன்று தாக்குதல் நடக்காது என்று என்ன நிச்சயம்?”
அவள் அமைதியாக இருக்க, அவன், “தர்க்கம் செய்யாமல் கிளம்பி வா தேவி” என்றான்.
அவள் அரை மனதுடன், “சரி வருகிறேன்” என்றாள்.
“புடவையில் வா தேவி” என்றவன், “நேரே எனது அறைக்கு வா” என்றான்.
அவள் சிறு அதிர்வுடன், “உங்க அறைக்கா!” என்றாள்.
அவன் ரகசிய புன்னகையுடன், “ஆம்.. தேவியின் தரிசனத்திற்காக காத்திருக்கிறேன்” என்று கூறி அழைப்பைத் துண்டித்தான்.
ஆகாய வண்ணப் புடவையில் தயாராகி வேந்தன்புரம் சென்றவள் வெட்கமும் சிறு படபடப்புமாக அவனது அறையினுள் நுழைந்தாள்.
“வருக வருக தேவி” என்று வசீகர புன்னகையுடன் வரவேற்றவனின் விழிகள் அவளை அங்கம் அங்கமாக ரசிக்கத் தொடங்கியது.
அவள் வெட்கமும் கூச்சமுமாக பார்வையை தாழ்த்தியபடி, “கிளம்பலாமா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
அவள் அருகே வந்து ஒற்றை விரலால் அவளது நாடியை பிடித்து முகத்தை நிமிர்த்தியவன், “புடவையில் ரொம்பவே அழகாய் இருக்கிறாய் தேவி.. அப்படியே எனது மனதை கொள்ளை அடிக்கிறாய்” என்றான்.
அவள் நாணத்துடன் மெல்லிய குரலில், “நீங்க தான் அழகு” என்றாள்.
“உன்னை விட இல்லை”
“ஹ்ம்ஹும்.. உங்கள் கம்பீரத்தின் அருகே நான் குறைவு தான்”
“அதெல்லாம் இல்லை” என்றான்.
பின், “ஒரு புகைப்படம் எடுப்போம்” என்று கூறியவன் அவளை இடையோடு சேர்த்து அணைத்தபடி நின்று தனது கைப்பேசியை புகைப்படம் எடுக்க தோதுவாக பிடித்தான்.
அவள் லேசாக நெளிந்துக் கொண்டே இருக்க,
அவன், “இன்று தான் உன்னை முதல் முறையாக அணைப்பதை போல் நெளிகிறாயே தேவி! சரியாக நில்” என்றான்.
அவனது கரம் அவளது வெற்று இடையில் பதிந்திருக்க, அவளால் சரியாக நிற்கவே முடியவில்லை.
அவள், “நான் அந்த பக்கம் நிற்கிறேன்” என்று கூறவும் தான் விஷயத்தை புரிந்துக் கொண்டவன் வாய்விட்டு சிரித்தபடி பிடியை தளர்த்தி அவளது வெற்று இடையை லேசாக வருடினான்.
அவனது மெல்லிய தீண்டலில் அவளது உணர்வுகள் தாளம் தப்ப, அதன் தாக்கத்தை தாங்க முடியாமல் தவித்தாள்.
அவனை நிமிர்ந்து பார்த்து, “ப்ளீஸ்” என்று கெஞ்சியவளின் மென்னிதழ்கள் அவனது முரட்டு இதழ்களிடம் சிறைபட்டுக் கொண்டது.
நிதானமாக மென்மையாக முத்தமிட்டு இதழ் பிரித்தவன், “இது சிறு முன்னோட்டம் மட்டும் தான்.. கோவிலுக்கு சென்று திரும்பிய பின் மீதியை பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி கண் சிமிட்டினான்.
“கோவிலுக்கு போகலாம்னு சொல்லி வரச் சொல்லிட்டு என்ன வேலை பார்க்கிறீங்க!” என்றாள் வெட்கம் கலந்த மிரட்டலுடன்.
“தேவியின் அழகு என்னை பித்தம் கொள்ளச் செய்கிறது..”
“பழியை என் மீது போட்டாகிறதா!”
“உண்மையைத் தானே சொல்கிறேன்.. இப்போது கூட பிரிய மனம் வரவில்லை.. கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக..” என்றவனின் பேச்சை இடையிட்டவள்,
“கதை பேசியது போதும்.. கிளம்பலாம் வாங்க” என்றாள்.
“புகைப்படம் எடுத்துவிட்டு செல்லலாம்” என்றபடி கைப்பேசியை மீண்டும் எடுத்தான்.
“நான் அந்த பக்கம்”
“இப்படியே நில்” என்று கூறி அவளது வெற்றிடையை பற்றியபடியே தான் புகைப்படத்தை எடுத்தான்.
அவனது கம்பீர புன்னகையும், கொடி போல் அவன் மீது படர்ந்திருந்தவளின் நாணப் புன்னகையும் என்று அந்த புகைப்படம் மிக அழகாக இருந்தது.
“உன் கைப்பேசியை கொடு.. அதிலும் எடுக்கலாம்” என்றான்.
அவள் தனது பெருவிரல் ரேகையை பதிவிட்டு கைப்பேசியை இயக்கி அவனிடம் கொடுத்தாள்.
அதை வாங்கியதும் முதலில் அவனது கண்கள் சென்றது கைப்பேசியின் பிணைய குறியீடு இருக்கும் இடத்திற்கு தான். பிணைய குறியீடின் அருகே ‘1’ என்று இருக்கவும் அவளது கைப்பேசி இரண்டு ‘சிம்’ போட்டுக் கொள்ளும் வசதி உடையது என்பதையும், தற்போது ஒரே ஒரு ‘சிம்’ மட்டும் தான் அதில் பொருத்தப்பட்டு இருக்கிறது என்பதையும் புரிந்துக் கொண்டான்.
ஒரே நொடியில் அதை குறித்துக் கொண்டவன் புகைப்படம் எடுத்துவிட்டு கைப்பேசியை அவளிடம் கொடுத்தான்.
இதைப் பற்றி அறியவே புகைப்படம் எடுக்கும் திட்டத்தை தீட்டினான். ஒருவேளை இரண்டு ‘சிம்’ இருந்தால், அவள் அறியாமல் மற்றொரு எண்ணில் இருந்து தனக்கு அழைப்பு கொடுக்க நினைத்தே அவ்வாறு செய்தான்.
அதன் பிறகு, “கிளம்பலாம் தேவி” என்றபடி அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
அடுத்து அனைத்தும் மாறவர்மசிம்மனின் திட்டபடியே நடந்தது.
மாறவர்மசிம்மன் மீனாட்சியை தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்று விட, தயாளன் ஒலிவாங்கி பதிவுகளை ஆராய்ந்துக் கொண்டிருக்க, தனது வேலையாட்களுடன் தேவிபுரத்தில் இருக்கும் வேலையாட்களின் அறைகளை சோதிக்கச் சென்ற தீரன் மீனாட்சியின் அறையினுள் சென்று சோதிக்க ஆரம்பித்தான்.