அத்தியாயம் 5

மீனாட்சி வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் கடந்து இருந்தது. 

இந்த ஒரு மாதத்தில் சந்ரா வாயில் இருந்து எதையும் அறிய முடியவில்லை என்றாலும் மற்ற வேலையாட்களிடம் அவர்களே அறியாமல் பலவாறு விசாரித்து சில தகவல்களை சேகரித்து இருந்தாள். அதன் விளைவாக அரச குடும்பத்தினரை பற்றி ஓரளவிற்கு புரிந்து கொண்டிருந்தாள்.

ராஜாவின் மறைமுக விசாரணைக்கும், ராஜமாதாவின் முறைப்பிற்கும், இளவரசனின் நூல் விடும் பேச்சிற்கும், இளவரசியின் கோபம் கலந்த இகழ்ச்சி பேச்சிற்கும் பழகி இருந்தாள்.

அவ்வபோது மாலையில் இவளிடம் பேசிக் கொண்டிருந்த மாறவர்மசிம்மன் கடந்த ஒரு வாரமாக அதை தினப்படி வழக்கமாக மாற்றியதோடு விசாரணையையும் நிறுத்தி இருந்தான். இருவருக்கும் இடையே மெல்லிய நட்பு கூட மலர்ந்திருந்தது.

அன்று தீரன் இவள் தன்னை கொல்ல வந்திருக்கலாம் என்று கூறியதை ஆதரிப்பது போல் பேசியிருந்தாலும், அவனது உள்மனம் ‘இவள் நிச்சயம் என்னை கொல்ல வரவில்லை.. வேற எதற்கோ தான் வந்திருக்கிறாள்’ என்று ஆணித்தரமாக நம்பியது. அதை கண்டுபிடிக்க என்று அவளிடம் பேச ஆரம்பித்தவன் அவளது பேச்சில் கவரப்பட்டு தினமும் பேசிவிடும் நிலையில் வந்து நிற்கிறான்.

மீனாட்சியுமே இந்த மாலைப் பொழுதை எதிர்பார்க்கத் தொடங்கி இருந்தாலும், அவளை பொறுத்தவரை அது நட்பாக இருக்க, அவனைப் பொறுத்தவரை அது ஈர்ப்பாக மாறி இருந்தாலும் அதை அவன் சிறிதும் வெளிகாட்டிக் கொள்ளவில்லை.

அன்று அவள் தோட்டத்தில் இருந்த கல் இருக்கையில் அமர்ந்தபடி அரண்மனையையே பார்த்துக் கொண்டிருக்க,

அங்கே வந்த மாறவர்மசிம்மன், “அரண்மனையை அப்படி என்ன பார்வை?” என்று கேட்டான்.

அவள் மென்னகையுடன், “நத்திங்” என்றாள்.

அவனது பார்வையில், அவள், “சட்டுன்னு இங்கி.. ஆங்கிலம் வந்திடுது” என்றாள்.

அவன், “ஒன்றுமில்லைனு சொல்றதில் தான் நிறைய விஷயம் இருக்கும்” என்றான்.  

அவள், “அரண்மனை வாழ்க்கையை பத்தி நினைச்சுட்டு இருந்தேன்” என்றாள்.

“அரண்மனை வாழ்க்கையை வாழனும்னு ஆசையா இருக்குதா?”

அவள் சிறிதும் யோசிக்காமல் வேகமாக, “வேண்டவே வேண்டாம்” என்றாள்.

அவன் சிறு ஆச்சரியத்துடன் பார்த்தபடி, “ஏன்?” என்றான்.

“இங்கே பிரம்மாண்டம் இருக்கலாம் மகிழ்ச்சி இருக்குதா?” என்று அவள் கேட்க,

‘உண்மை’ என்று நினைத்தவனின் மனம் ‘நான் சபிக்கப்பட்டவன்’ என்று ஓலமிட்டது. 

அவள் தொடர்ந்து, “அம்மா பிள்ளைகள் தனி தனி தீவா வாழ்றது வாழ்க்கையா? இந்த அரண்மனை வாழ்க்கை எனக்கு கனவில் கூட வேண்டாம்” என்று சொன்ன நொடியில் ஈர்ப்பை மீறி அவனது மனதினுள் நுழைந்தாள்.

அவனது மனநிலையை உணராமல் அவள் பேசிக் கொண்டிருந்தாள்.

“ஒரு அழகான அன்பான குடும்பத்தில் வாழத் தான் நான் விரும்புறேன்.. சொந்தம்னு சொல்லிக்க யாரும் இல்லாம ஆசிரமத்தில் வளர்ந்தாலும் நான் தனிமையை பீல் பண்ணது இல்லை” என்றாள்.

“தனிமை என்பது யாரும் இல்லாமல் தனியாக இருப்பது இல்லை.. நம்மை சுற்றி எல்லோரும் இருந்தும் நமக்காக யாரும் இல்லை என்பது தான் உண்மையான தனிமை!” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் ரோஜாவனம் நோக்கி சென்று விட்டான்.

அவனது அந்த பார்வையும், குரலும், அவன் கூறி சென்ற வார்த்தைகளும் அவளது மனதை என்னவோ செய்தது. அந்த நொடியில் யாரும் அறியா ஒரு விஷயத்தை அவள் புரிந்துக் கொண்டாள். 

அனைவருக்கும் பெயரிற்கு ஏற்றார் போல் சிங்கமாக திகழும் மாறவர்மசிம்மன் மனதினுள் பாசத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறான் என்பதை கண்டுக் கொண்டாள். 

அவன் கூறிச் சென்ற விதம் அவளது மனதை பிசைய, அவனிற்கு ஆறுதல் கூற அவளது மனம் விரும்பினாலும் ரோஜாவனதிற்குள் செல்ல முடியாமல் தவித்தாள். இதுவரை அவனது கம்பீரத்தை ரசித்து, புத்தி கூர்மையை வியந்து பார்த்தவளுக்கு இந்த தவிப்பு தரும் உணர்வு புதிது.

ஏனோ எழுந்து செல்ல மனம் வராமல் ரோஜாவனத்தின் பக்கம் பார்வையை பதித்தபடி அவனது வரவிற்காக காத்திருந்தாள். 

அரை மணி நேரம் கழித்து ரோஜாவனத்தை விட்டு வெளியே வந்த மாறவர்மசிம்மன் இவளை பார்த்ததும், ‘இவள் இன்னும் போலையா!’ என்று நினைத்தபடி அவள் இருக்கும் இடத்திற்கு வந்தான்.

அவன் வந்ததும் யோசிக்காமல், “உங்க போன் நம்பர் என்ன?” என்று கேட்டுவிட்ட பிறகே சுதாரித்தாள்.

பார்வையை தாழ்த்தியபடி, “அது.. வந்து.. நீங்க அப்படி பேசிட்டு போனதும் மனசுக்கு என்னவோ பண்ணிச்சு..” என்றவள் அவனது முகத்தை பார்த்து, “அந்த நொடியில் என் கண்களுக்கு நீங்க ராஜியத்தை ஆளும் அரசனா தெரியலை, என்னை மாதிரி பாசத்துக்கு ஏங்குற ஆளா தான் தெரிஞ்சீங்க..” என்றவள் மீண்டும் பார்வையை தாழ்த்திக் கொண்டாள்.

தனது தந்தை கூட கண்டுபிடிக்க முடியாத தனது ஆழ்மனத்தின் ஏக்கத்தை அவள் சரியாக கண்டு கொண்ட இந்த நொடியில் அவளை தன்னவளாக அவனது மனம் ஏற்றுக் கொண்டது.  

அவர்கள் அருகே இருந்த மரத்தின் கிளையில் மறைவாக இருந்த மறைகாணியை அவன் இமைக்காமல் பார்க்க, அது அணைக்கப்பட்டது.

ஆம் அவனது பார்வைக்கான அர்த்தத்தை புரிந்துக் கொண்ட தீரன் தான் அந்த மறைகாணியை அணைத்து இருந்தான். சில மறைகாணிகளின் செயல்பாடு தீரனின் நேரடி கவனிப்பில் மட்டுமே இருக்கும். அவற்றுள் ஒன்று தான் இந்த மறைகாணியும்.

தீரன் மாறவர்மசிம்மனின் விழி வழி கட்டளைக்கு பணிந்தாலும் அவனது பாதுகாப்பை கருதி ஓட்டுனரை கைபேசியில் அழைத்து, “ரோஜாவனம் தோட்டத்திற்கு செல்லும் வழி அருகே இருக்கும் கேமராவை அணைத்து வைத்திருக்கிறேன்.. ராஜாவோட பாதுகாப்பிற்காக அங்கே போய் நில்” என்றதும் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பின் வேகத்தில் ஓட்டுனர் அந்த இடத்தை அடைந்து இருந்தான். அவனது பார்வைவும் கவனமும் மாறவர்மசிம்மன் மற்றும் மீனாட்சியை தவிர்த்து சுற்றுபுறத்தில் தான் இருந்தது.  

ஒற்றை விரலால் மீனாட்சியின் நாடியை பிடித்து அவளது முகத்தை நிமிர்த்தி தன்னை பார்க்க செய்த மாறவர்மசிம்மன், “வேற என்ன தோணுச்சு?” என்று மென்மையான குரலில் கேட்டான்.

இதுவரை கேட்டிராத அந்த குரலுக்கு கட்டு பட்டவளாக, “நீங்க ரோஜாவனத்தில் இருக்கும் நேரம் புல்லாங்குழலின் இசை ஒலித்துக் கொண்டிருக்கும்னு கேள்வி பட்டிருக்கிறேன்.. புல்லாங்குழலின் மென்மையான இசையை கேட்கும் உங்களோட மனம் பூங்குழலை போல் மென்மையானதுனு தோணுச்சு” என்றாள்.

அவன் கண்கள் ஒளிர, “வேற?” என்றான்.

அவள் பார்வையை தாழ்த்த முயற்சிக்க, அவனது ஒற்றை விரல் அவளது முயற்சியை முறியடித்தது.

அவன் சுவாரசிய பார்வையுடன், “சொல்லு” என்றான்.

முதல் முறையாக வெட்கம் கொண்டவள், “அது” என்று தயங்கினாள்.

அவளது முதல் வெட்கத்தை கண்ட நொடியில் அவன் முதல் முறையாக மனதார புன்னகைத்தபடி, “ஹ்ம்ம்” என்றான்.

புன்னகையில் ஜொலித்த அவனது வசீகர முகத்தை அவள் இமைக்க மறந்து பார்க்க, அவன் சிரிப்புடன், “மீனாட்சி” என்று அழைத்தான்.

“ஹ்ம்ம்”

“வேற என்ன நினைத்த?”

“உங்களை அணைத்து ஆறுதல் சொல்ல நினைத்தேன்” என்று தன்னை அறியாமல் கூறி இருந்தவள் சொன்ன பிறகே உணர்ந்து வெட்கத்துடன் அவனது கையை தட்டிவிட்டு ஓடிவிட்டாள்.

விரிந்த சிரிப்புடன் தலையை கோதியவன் முதல் முறையாக மகிழ்ச்சியை அன்னையிடம் பகிர்ந்துக்கொள்ள ரோஜாவனம் சென்றான்.  

மீனாட்சி ஓடியதும் மாறவர்மசிம்மன் பக்கம் பார்வையை பதித்த ஓட்டுனர் அவனது சிரிப்பை ஆச்சரியமும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக பார்த்தான். உடனே கைபேசியில் மாறவர்மசிம்மனை புகைப்படம் எடுத்தவன் சந்ரா, தீரன் மற்றும் தயாளனுக்கு அனுப்பினான்.

பின் தீரனை அழைத்தவன், தீரன் அழைப்பை எடுத்ததும், “கேமரா ஆன் பண்ணிடு” என்றான்.

தீரனோ, “என் கண்ணையே என்னால் நம்ப முடியலை” என்றான்.

“நான் நேரிலேயே பார்த்தேன்.. இப்போ தான் மனசுக்கு நிம்மதியா இருக்குது.. ராஜாவோட ராணியை கவனமா பார்த்துக்கோ” 

“இனி அதான் என்னோட வேலை” என்றவன், “தயாக்கு அனுப்பிட்டியா?” என்று கேட்டான்.

“சந்ராமா, உனக்கு, தயா மூணு பேருக்கும் அனுப்பிட்டேன்” என்றவன், “தயா தான் கூப்பிடுறான்.. இரு அவனையும் இணைக்கிறேன்” என்றான்.

அவனே தயாளனை அழைத்து தீரனின் அழைப்புடன் இணைத்தான்.

தயாளனும் தீரனை ஒத்தே பேசினான். அந்த மூன்று விசுவாசிகளும் தங்கள் ராஜாவிற்காக உண்மையாக மகிழ்ந்தார்கள்.

இனிமையான மனநிலையில் மகாராணி அறைக்கு சென்ற மீனாட்சியை, “முதல் நாள் சொன்னது தான் நடக்குது போல! நீ மகாராணியை பார்த்துக்க வந்த ஆள் மட்டும் தான் மகாராணி இல்லை..” என்ற இளவரசியின் கோபம் கலந்த இகழ்ச்சி குரல் தான் வரவேற்றது. 

சட்டென்று இனிய மனநிலை மாறிவிட அவள் அமைதியாக நின்றாள்.

ராஜமாதா, “காஞ்சனா!” என்று அழைக்க,

இளவரசி, “பின்ன என்ன ராஜமாதா! இதான் இவள் வர நேரமா?” என்றாள்.

“விடு” என்று ராஜமாதா கூற,

இளவரசி முணுமுணுப்புடன் அமைதியானாள்.

ராஜமாதா மீனாட்சியை பார்த்து, “இப்போ என்ன வேலையெல்லாம் இருக்குது?” என்று கேட்டார்.

“மகாராணி காலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் கொடுக்கணும்.. அப்புறம் இரவு உணவு கொடுக்கணும்”

“மகாராணி இரவு உணவை முடித்ததும் என்னை வந்து பாரு”

“சரி ராஜமாதா” என்றதும் இளவரிசியை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். 

அவர்கள் சென்றதும் உள்ளே வந்த இளவரசன், “ஹாய் மீன்ஸ்.. இப்பலாம் உன்னை பார்க்கவே முடிறது இல்லை” என்றான்.

இதுவரை இளவரசனின் பேச்சை பொறுத்துக் கொண்டவளால் இன்று அது முடியாமல் போனது.

அவள் எரிச்சலுடன், “நீங்க ஏன் என்னை பார்க்கணும்?” என்று கேட்டாள். 

“என்னோட அருமை தங்கை இங்கிருந்து போறதை பார்த்தேன்.. அதான் இவ்வளவு எரிச்சலா? பாவம் ஒரு இடம் பழி ஒரு இடமா இருக்குதே!” என்றான்.

“ரெண்டும் ஒரே இடத்தில் சரியா தான் இருக்குது.. என்னோட பெயரை மீனாட்சினு ஒழுங்கா கூப்பிடுங்க” என்றாள்.

அவன் சிரிப்புடன், “ஓ! இதான் உன்னோட எரிச்சலுக்கு காரணமா? நண்பர்களுக்குள் பேர் சுருக்கம் சகஜம் தானே!” என்றான்.

“நாம் நண்பர்கள் இல்லை.. தராதரம் பார்த்து பழகும் நீங்களும் சாதாரண பணிப்பெண்ணான நானும் ஒரு நாளும் நண்பர்கள் ஆகவும் முடியாது..” என்று அவள் உறுதியுடன் கூற,

“இன்னைக்கு உனக்கு என்னவோ ஆகிருச்சு.. நாளைக்கு பேசிக்கிறேன்.. இப்போ மகாராணியை பார்த்துட்டு கிளம்புறேன்” என்றவன் மகாராணியின் படுக்கை அறைக்கு சென்றான்.

மகாராணியை பார்த்துவிட்டு அவன் வெளியே சென்ற பிறகே இவள் அந்த உள்அறையினுள் சென்றாள்.

மகாராணியின் காலிற்கு எண்ணெய் தேய்த்து கால் தசைகளை நன்றாக தேய்த்து விட்ட பிறகு, சிறிது நேரம் கழித்து கால் அசைவிற்கான சில பயிற்சிகளை செய்ய வைத்தாள். அதன் பிறகு அவருக்கு உணவை கொடுத்து, தானும் உண்டுவிட்டு ராஜமாதாவை பார்க்க வேந்தன்புரம் சென்றாள்.

ராஜமாதா எதற்காக அழைத்து இருப்பார் என்ற யோசனையில் வந்தவள் ஒரு திருப்பத்தில் கவனமின்றி எதிரே வந்த மாறவர்மசிம்மனை இடித்து கீழே விழ போனாள்.

சட்டென்று அவளது இடையை பிடித்து தாங்கியவன் மென்னகையுடன், “தேவியின் கவனம் எங்கோ இருக்கிறது போல!” என்றான்.

அவனது பிடியில் இருந்து விலக முயற்சித்தபடி, “என்னோட பெயர் மீனாட்சி” என்றாள்.

தூண் மறைவில் இருந்த தைரியத்தில் பிடியை வலுபடுத்தியவன், “தேவி என்பது பெண்ணை குறிக்கும் பொதுவான பெயர்.. மனம் கவர்ந்த பெண்ணை அழைக்கும் வழக்கமும் இருக்கிறது” என்றான்.

அப்பொழுது யாரோ வரும் அரவம் கேட்கவும் அவன் சட்டென்று பிடியை தளர்த்தி கையை எடுத்துக்கொள்ள, அவள் ஓடியிருந்தாள்.

எதிரே வந்த தீரனை கண்டு ஆசுவாசமான மாறவர்மசிம்மன் தனது அறை நோக்கி சென்றான். அறைக்கு சென்று மெத்தையில் படுத்தவனின் மனம் முழுவதும் மீனாட்சியே நிறைந்து இருந்தாள். 

அதுவும் சற்று முன் அவ்வளவு நெருக்கத்தில் தனது பிடியில் இருந்தவளின் வாசம் அவனது நாசியில் இப்பொழுதும் இருப்பது போல் உணர்ந்தான்.

அவளது மென்மையான இடையினை இன்னும் கொஞ்ச நேரம் தனது கரம் தீண்டியிருக்க கூடாதா என்று அவனது மனம் ஏங்கியது.

மீனாட்சி அனுமதி பெற்றுக் கொண்டு ராஜமாதா அறையினுள் சென்றதும் ராஜமாதா அங்கிருந்த பணிப்பெண்ணை வெளியே அனுப்பினார்.

பின் இவளை பார்த்து, “இப்போ தான் வந்த வேலையை செய்ய ஆரம்பித்து இருக்கிற போல” என்றார்.

இவள் புரியாமல் பார்க்க, அவர், “என்ன பார்க்கிற! ரோஜாவனம் தோட்டத்திற்கு செல்லும் வழியில் இருக்கிற ஒரு மறைகாணி மட்டும் மாலையில் சிறிது நேரம் அணைத்து வைக்கப் பட்டிருந்தது எனக்குத் தெரியும்” என்றார்.

இந்த செய்தி அவளுக்கு புதிதே. அவள் அதிர்ச்சியுடன் பார்க்க, அவர், “இப்போ நான் சொன்னதின் அர்த்தம் புரியுதா?” என்று கேட்டார்.

அவள் அமைதியாக இருக்கவும், அவர், “நான் உன்னை குற்றம் சொல்லலை.. உனக்கு கொடுக்கப் பட்ட வேலையை இப்போ தான் சரியா செய்ய ஆரம்பித்து இருக்கிறாய்” என்றார்.

அவள் அப்பொழுதும் அமைதியாக இருக்க, 

அவர், “அவனை மயக்க கேர்-டேகர் என்ற பெயரில் உன்னை இங்கே வர வைத்தது நான் தான்” என்றார்.

அவள் அதிர்ச்சியுடன் பார்க்க, அவரோ, “வேற யாரா இருக்கும்னு நினைத்த?” என்று கேட்டார்.

அவள், “உங்களை நினைக்கலை” என்று கூற,

அவர் சிரித்தபடி, “உன்னிடம் முழுவதுமாக மயங்கி, நீ சொல்றதை கண்மூடித் தனமாக நம்புற அளவுக்கு அவனை கொண்டு வா” என்றார்.

அவள் அமைதியாக இருக்க, அவர், “நீ போகலாம்” என்றார்.