“ஒரு தப்பை இன்னொரு தப்பால சரி பண்ணப் பார்த்திருக்கான்னு நினைக்கறேன்…” அஜய் சொல்லவும் கிருஷ்ணாவின் முகத்தில் ஆச்சர்யம் தெரிந்தது. இருவரும் இன்ஸ்பெக்டர் கோவிந்தனை ஸ்டேஷனில் இறக்கிவிட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.
“காமேஷை சந்தேகப் படறீங்களா சார்…?”
“சந்தேகப் பட்டா தப்பில்லைன்னு நினைக்கறேன்…” என்றவன் யோசனையுடன் அமர்ந்திருக்க, கிருஷ்ணாவும் யோசிக்கத் தொடங்கினார்.
“சார், எனக்கு இந்தக் கேஸ்ல நிறைய டவுட்ஸ் இருக்கு… கொஞ்சம் கிளியர் பண்ண முடியுமா…?”
“ஷ்யூர், என்ன டவுட்ஸ்…? கேளுங்க…”
“சார், நீங்க அந்த அநாமிகா பேருக்கு ஒரு விளக்கம் சொன்னிங்க… அதுல அஸ்வின், நாராயணன், மித்ரன், கனகராஜ் மேல தான டவுட் இருந்துச்சு, இந்த காமேஷ் எப்படி நடுவுல வந்தான்…?”
“அதுக்குக் காரணம் இருக்கு மிஸ்டர் கிருஷ்ணா… அஸ்வின், மித்ரன் கிட்ட விசாரணை பண்ணி, தேவியோட மரண வாக்கு மூலத்தைக் கேட்டதுல இருந்து எனக்கு மகதி, அவங்க அம்மா மாலதி, டிரைவர் நாராயணன் மேல சந்தேகம் அதிகமாச்சு… அவங்களை நேரடியா விசாரிச்சா அலர்ட் ஆகிடுவாங்கன்னு ஸ்பை இண்டலிஜென்ஸ் ஏஜன்சில வேலை செய்யற என் பிரண்டு ராகவ் மூலமா ரகசியமா அவங்களை விசாரிக்க சொன்னேன்…” அஜய் சொல்ல திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணா.
“ராகவ் எனக்கு இந்தக் கேஸ்ல இதுவரை அறிமுகம் ஆகாத புது ஒருத்தரை கண்டு பிடிச்சு சில விஷயங்கள் சொல்லவும் எனக்கு கொஞ்சம் ஆச்சர்யமா இருந்துச்சு…”
“என்ன சொன்னார்…?”
“நாராயணன் பிரகாஷ் வீட்டுல வேலைக்கு சேர்ந்து ஆறு மாசம் தான் ஆயிருக்கு… அதுக்கு முன்னாடி அங்க டிரைவரா வேலை செய்தவன் பேரு காமேஷ்… அந்த காமேஷைப் பத்தி விசாரிச்சப்ப அவர் ஒரு வருஷம் முன்னாடி ஆக்சிடன்ட் ஆகி படுக்கைல இருக்கார்… அந்த காமேஷோட அண்ணன் தான் பிரகாஷ் கிட்ட வேலை செய்யற நாராயணன்னு சொன்னார்…”
“ஓ…” என்ற கிருஷ்ணாவின் புருவம் வியப்பில் உயர்ந்தது.
“ஒரு வருஷத்துக்கு முன்னாடி அம்மாவைப் பார்க்கக் கிளம்பிப் போன காமேஷ் அடுத்த நாள் விடியக் காலைல சென்னைக்கு பஸ் ஏற வந்திட்டிருக்கும் போது ஒரு லாரி அவனை இடிச்சிட்டு நிக்காமப் போயிருச்சு… அதைப் பார்த்த ஒருத்தர் கால்லயும், மண்டைலயும் அடிபட்டு உயிருக்குப் போராடிட்டு இருந்தவனை உடனே ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கார்… ஆனாலும் பின் மண்டைல அடிபட்டு பேசற சக்தியை இழந்த காமேஷ்க்கு, கால் நரம்புகள் டேமேஜ் ஆனதால காலையும் ரிமூவ் பண்ணியிருக்காங்க…”
“ஓ… இவ்வளவு நடந்திருக்கா…?”
“ஆமா, இது தெரிஞ்சு வெளிநாட்டுல இருந்து வந்த அண்ணன் நாராயணன் அஞ்சாறு மாசம் தம்பி ட்ரீட்மென்ட்டுக்கு அலஞ்சிருக்கான்… அப்புறம் தான் பிரகாஷ் கிட்ட வேலைக்கு சேர்ந்திருக்கான்… ஏன் தம்பி வேலை செய்த ஓனர்கிட்டயே இவனும் வேலைக்குப் போகணும்…? யார் வீட்டுலயோ வேலைக்கு சேர்ந்ததா அம்மாகிட்ட பொய் சொல்லணும்…?” அஜய் நிறுத்திவிட்டு கிருஷ்ணாவை நோக்க மெல்ல அவர் சந்தேகம் தெளியத் தொடங்கியது.
“அப்படின்னா, லாரி ஆக்சிடன்ட்…? பேக் ரெஜிஸ்ட்ரேஷன் எல்லாம் காமேஷைக் கொல்லத் திட்டம் போட்டு செய்த சதியா…?”
“சார், அந்த நாராயணன் ஸ்டேஷன்ல உங்களைப் பார்க்க வெயிட் பண்ணிட்டு இருக்கானாம்…”
“ஓகே, வெயிட் பண்ணட்டும்…” என்றவன் அமைதியாகிவிட கிருஷ்ணாவும் அமைதியாய் யோசிக்கத் தொடங்கினார்.
ஸ்டேஷனுக்குள் நுழைந்த இன்னோவாவைக் கண்டதும் முன்னில் காத்திருந்த நாராயணன் எழுந்து நின்றான்.
வண்டியிலிருந்து இறங்கிய அஜய், கிருஷ்ணாவிடம் அவனை உள்ளே அழைத்து வருமாறு கூறிவிட்டு ஸ்டேஷனுக்குள் செல்ல தயங்கிக் கொண்டே வந்தான்.
“வணக்கம் சார்…!”
“ம்ம்… என்னைப் பார்க்கணும்னு சொன்னிங்களாம்…”
“ஆமா சார், உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்…”
“என்ன பேசணும்…?”
“அது…” தயங்கியவன், “கொஞ்சம் தனியாப் பேசணும் சார்…” என்றதும் எழுந்த அஜய், “வாங்க…” என்று விசாரணை ரூமுக்கு நடக்க, “போய் பேசுங்க…” என்றார் கிருஷ்ணா. சிறிது தயங்கியவன் வேகமாய் அந்த அறைக்கு நடந்தான்.
“அவங்க ரெண்டு பேரும் இந்த உலகத்துல வாழவே தகுதி இல்லாத அயோக்கியனுங்க சார்… கடவுளுக்குப் பிறகு டாக்டரை தான் நாம ரொம்ப நம்பறோம்… அப்படிப்பட்ட டாக்டர் தொழில்ல இருந்துகிட்டு பண்ணக் கூடாத தப்பெல்லாம் அந்த பிரபஞ்சன் பண்ணிட்டு இருந்தான்… தன் கிட்ட வேலை பார்க்குற நர்ஸ் அநாமிகால இருந்து குழந்தையாப் பார்க்க வேண்டிய பத்து வயசுப் பிரகதி வரைக்கும் அவனுக்கு காமம் தீர்க்குற போகப் பொருளாத் தான் தெரிஞ்சாங்க… தன்னோட ஆசைக்கு அடிபணியாத அநாமிகாவை வேலையை விட்டு, இந்த உலகத்தை விட்டே துரத்துன மகாபாவி… சொந்த மகளையே பணத்துக்காக நண்பனுக்கு கூட்டிக் கொடுக்கிற கேடு கெட்ட பொறுக்கி தான் அந்தப் பிரகாஷ்… அது மட்டுமில்ல, அதைத் தெரிஞ்சுகிட்ட மனைவிக்கு போதை மாத்திரை கொடுத்து அவங்களை ஒரு நரம்பு நோயாளி ஆக்கி வச்சிருக்கிற கேடு கெட்ட ஈனப் பிறவி… தன்னோட தவறை மறைக்க ஒரு பாவமும் அறியாத கனகராஜ் மேல பழியைப் போட்டு ஜெயிலுக்கு அனுப்பி அவரோட மனைவி, மகள் தற்கொலை பண்ணிக்கக் காரணமா இருந்த கொலைகாரப் பாவிங்க… பிரகாஷ் கிட்ட வேலைக்கு இருந்த என் தம்பி காமேஷ் இதைத் தெரிஞ்சுகிட்டதால அவனை லாரி ஆக்சிடன்ட் மூலமா படுக்கைல தள்ளின சைத்தான்… இதுக்கு மேலயும் இவங்களை விட்டு வச்சா இந்த உலகம் தாங்காது, இந்த விஷயம் தெரிஞ்சதும் அஸ்வின், நான், மித்ரன் எல்லாருமா சேர்ந்து தான் அவங்களைக் கொல்ல பிளான் பண்ணினோம்… அவங்க எனக்கு உதவி செய்தாங்க… நாந்தான் ரெண்டு பேரையும் கொலை செய்தேன்… என்னை அரஸ்ட் பண்ணி என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுங்க, மத்தவங்களை மன்னிச்சு விட்டிருங்க…” முகத்தில் வலியும், வருத்தமும் மாறி மாறித் தோன்ற சொல்லி நிறுத்தினான்.