ரேணுவின் அன்பை பார்த்த ஜனனி, “இப்படி என் மேல நீங்க பாசம் வைக்க நான் உங்களுக்கு துரோகத்தை தவிர வேற எதுவும் செய்யலையே” என அழுது கொண்டே சொல்ல
“நீ துரோகம் பண்ணலை… தவறு தான் பண்ணியிருக்க.. இப்போ நீ நினைச்சா கூட உன் தவறை திருத்திக்க முடியும் சிட்டு” என சொல்லியவாறு ஜனனியின் கண்ணீரை துடைத்து விட்டாள் ரேணு.
அப்போது கார்க் கதவை திறந்து தலையை மட்டும் உள்ளே நுழைத்த தனா, “ரிஷி டென்ஷனாகி கத்த ஆரம்பிச்சுட்டான்மா… பிறகு பேசுங்க” என்றவன் தன் கையிலிருந்த அவனது ஃபோனில், “இருடா… வர்றேன்…வேற என்ன வேணும்?” என கேட்டவன் ஜனனியிடம்
“டேஷ்போர்டு பாக்ஸ்குள்ள செக்புக் இருக்கும் பாருமா… அதை எடுத்துட்டு வா… ரிஷி கேட்குறான்மா” என சொன்னான்.
செக்புக்கை எடுக்க டேஷ்போர்டு பாக்ஸை திறந்த ஜனனி அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்துருக்க,
“என்ன சிட்டு அப்படி பார்க்குற?.. செக்புக் எடுத்துட்டு இறங்குமா” என்றான் தனா மீண்டும்.
“நீங்க சிகரெட் பிடிப்பீங்களா அண்ணா?” என கேட்டாள் ஜனனி முகத்தில் ஒரு அருவருப்போடு.
அங்கே பலவிதமான சிகரெட் பாக்கெட்டுக்களும், விதவிதமாய் லைட்டர்களும் அடுக்கி வைக்கப்பட்டுருக்க…. அதை பார்த்தவளது முகம் பலவிதமான உணர்ச்சிகளைக் காட்டிக் கொண்டிருந்தது. அவளது வீட்டு ஆண்மக்கள் என்ன தான் முரட்டுத்தனமாக நடந்துகொண்டாலும், இந்த மாதிரி விஷயத்தில் ஒழுக்கசீலன்களே.
“ஐயோ…இவ மேல சத்தியமா எனக்கு அந்த பழக்கமில்லைமா” என்றவன் குனிந்து நின்றவாறே எட்டி ரேணுவின் பூர்வஜென்மத்தை ஞாபகப்படுத்தும் முயற்சியின் முதல்கட்டமாக அவளது உச்சந்தலையில் ஓங்கி சத்தியம் என்ற பெயரில் இடி ஒன்றை இறக்கினான் தனா.
“பக்கி… அதுக்கு என்னை ஏன்டா பைத்தியமாக்க பாக்குற?” என தன் தலையை தடவிக் கொண்டே கேட்டாள் ரேணு.
“அப்போ இது….இது….அத்தானா?” என நடுங்கும் குரலில்… ‘ஆமா’னு சொல்லிவிடாதே என மனதில் ஆயிரமாயிரம் வேண்டுதல்களோடு கேட்டாள் ஜனனி.
மௌனமாய் புருவங்கள் இரண்டையும் நீவிவிட்டவாறு தலையைக் குனிந்து கொண்டான் தனா.
அவனது மௌனமே அது யார் என்பதை கூறிவிட …. கனக்கும் இதயத்தோடு செக் புக்கை எடுத்துக் கொண்டு காரை விட்டு இறங்கினாள் ஜனனி.
அவளது நிலையை உணர்ந்த ரேணு “ஸ்மோக்கர்னு தெரிஞ்சதுக்கே இப்படியா? இன்னும் டிரிங்க்கர்னு தெரிஞ்சா?” என தனாவிடம் கேட்டாள்.
“அடிப்பாவி… நீ இம்புட்டு நல்லவனு எனக்கு தெரியாம போச்சு?” என்றான் தனா.
“நீ சொல்லாட்டியும் நான் நல்லவ தான் தனு. ஆனா இவளை மாதிரி ஊமைச்சி இல்ல” என்ற ரேணுவுக்கு
“சிட்டுவை ஏன்டி வம்புக்கிழுக்குற?” என கேட்டான் தனா.
“பின்ன?….ஊமை ஊரை கெடுக்கும்னு சும்மாவா சொன்னாங்க?… என் அண்ணாவை பார்த்த அன்னைக்கே அடிச்சா பாரு லிப்கிஸ்ஸு… நானும் தான் ரெண்டு வருஷத்துக்கு மேல லவ் பண்ணுறேன், உன் மூச்சுக்காத்தாவது என் மேல பட்டுருக்குமா? உன் கற்பை எப்படி நான் கட்டிக் காப்பாத்திட்டு இருக்கேன்?” என சொல்லிக் கொண்டே ரிவர்யூ மிர்ரர் பார்த்து தன் மேக்கப்பை தொடங்கியிருந்தாள் ரேணு.
“நேத்து நைட் நடந்ததை உன்கிட்ட சொன்னதே தப்புடி” என்றான் தனா தன் தலையில் அடித்தவாறு.
“அப்போ நீ மட்டும் ஃப்ரீ ஷோ பார்த்து என்ஜாய் பண்ணலாம்னு நினைக்குற… வாய்ப்பில்லை ராசா வாய்ப்பில்லை” என்ற ரேணு “லிப்ஸ்டிக் வைச்சுருக்க” என கேட்டாள் தனாவிடம்.
“மானாங்கன்னியமா திட்டிட போறேன். இறங்குடி முதல்ல. இதுல இவ என் கற்பை கட்டி காப்பாத்துறாளாம்?” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டே.
“இனி அண்ணாவை குடிக்க விட மாட்டா” என்றாள் ரேணு நம்பிக்கையோடு .
“என் முற்றுப் பெறா கவிதையை…
முறைத்துப் பார்த்தே முடித்து வைக்கின்றாய்…
நீ தான் மிக பெரிய கவிஞன் என்பதை உணராமல்!!”
“ம்ம்… சிட்டுவை எங்கடி? காணோம்” என தனா கேட்டவாறு வேகமாக காரிலிருந்து இறங்கியவன் பள்ளிக்கூட மைதானத்தை நோக்கி ஓடினான்.
பங்க்ஷன் நடக்குமிடத்துக்கு வெகு அருகில் சென்றிருந்தாள் ஜனனி. மூவரும் தனிதனியாக ஒருவர் பின் ஒருவராய் வருவதை பார்த்த ரிஷியின் முகத்தில் குழப்ப ரேகைகள் வேர் விட… ஜனனியின் பின்னால் மூச்சிரைக்க ஓடி வந்த தனாவை பார்வையாலே ‘என்ன’வென்று கேட்க …
‘பார்வையால கூட கேள்வி தான் கேட்பேன்னு நிக்குறான்யா’ என மனதுக்குள் ரிஷியை திட்டியவன் ‘ஒன்னுமில்லை’ என்று தலையை இடமும் வலமுமாக ஆட்டினான்.
அங்கே போடப்பட்டிருந்த மேடையில் V.A.O, கலெக்ட்டர், மருத்துவர், இன்னும் இரண்டு ஊர் பெரிய தலைகளோடு, ரிஷியும் அமர்ந்திருக்க…
ஜனனியின் கையில் செக்புக்கை கண்டவன்… அவளை மேலே வருமாறு கண்ணால் சமிக்ஜை செய்ய… அதை தனாவிடம் கொடுத்த ஜனனி… ரிஷியிடம் கொடுக்க சொல்லி விட்டு அமர்வதற்காக இடத்தை தேடினாள்.
மேடையின் கீழே போடப்பட்டிருந்த அனைத்து நாற்காலிகளும் நிரம்பியிருக்க…. முதல் வரிசை நாற்காலிகள் மட்டுமே காலியாக இருப்பதைக் கண்டவள் அங்கே சென்று அமர்ந்து கொண்டாள்.
செக்புக் கொடுக்க வந்த தனாவிடம், “சிட்டு ஏன் டல்லாருக்கா?… வீட்டுல ஏதும் பிரச்சனையா?” என மிக மெல்லிய குரலில் கேட்டான் ரிஷி.
“அதெல்லாம் ஒன்னுமில்ல… பிறகு பேசிக்கலாம்” என சொன்னவன் மேடையிலிருந்து கீழிறங்கி ஜனனியின் வலப்பக்கம் தனா, இடப்பக்கம் ரேணு என மூவரும் முன்வரிசையில் அமர்ந்து கொண்டனர்.
ஜனனியின் கண்கள் மட்டும் ரிஷியை விட்டு அகலவேயில்லை. பல கேள்விக் கணைகளை தாங்கி வந்த அந்த கண்களில் அவன் எதிர்பார்த்த காதலில்லை என்பதையும் ரிஷி உணர்ந்தே தான் இருந்தான்.
எதுவானாலும் பிறகு பேசிக் கொள்ளலாம் என முடிவெடுத்தவனது விழிகள் மட்டும் அவளை விட்டு நகராது சண்டித்தனம் பண்ணிக் கொண்டிருந்தன. கூலர்ஸை எடுத்து தன் கண்களுக்கு தற்காலிக தீர்வு கண்டவனது மனமும் உடலும் ஜனனியை தேடிட அடக்கும் வழி தெரியாது அமர்ந்திருந்தான்.
மேடையில் அமர்ந்திருந்த அனைவரும் பேசி முடிக்க…இறுதியாய் ரிஷியை பேச அழைக்க எழுந்து வந்து மைக் பிடித்து பேச ஆரம்பித்தான்….
“எனக்கு மைக் பிடிச்சு பேசி பழக்கமில்லைனு நான் சொல்ல போறதில்லை. நல்லாவே பேசுவேன். ஆனா பேச்சை விட காரியம் தான் வீரியமா இருக்கனும்னு நினைக்குறவன் நான்.
உங்க எல்லோர் மனசுலயும் உள்ள ஒரு பெரிய டவுட்… நேற்று நைட் தான் இவன் ஊருக்குள்ள இறங்குனான், அதுக்குள்ள எப்படி இவனால ஒரு மெடிக்கல் கேம்ப் அரேஞ்ச்ட் பண்ண முடிஞ்சது?… இவன் வீட்டுல கல்யாணத்தை வைச்சுட்டு இதுக்காக ஏன் இவன் உழைப்பையும், நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கனும்? பப்ளிசிட்டிக்காக பண்ணுறானா? இப்படி பல கொஸ்டின்ஸ் உங்களுக்குள்ள வந்துருக்கும். சொல்லுறேன்.
நான் இந்த ஊரை விட்டு போய் பன்னிரண்டு வருஷமாச்சு. என் படிப்பு, அப்புறம் பிஸினஸ்னு ரொம்பவே பிஸியானதுனால வர முடியலை. என் சிஸ்டர் மேரேஜ்காக நேற்று நைட் தான் ஊருக்குள்ள வந்தேன். பன்னிரண்டு வருஷத்துல ஊருக்குள்ள நிறையவே மாற்றங்கள்.
அப்போ என் கார்ல லிப்ட் கேட்டு ஒரு பேமிலி ஏறுனாங்க. இருபது வயசுக்குள்ள இருக்கும் அந்த பொண்ணுக்கு… அந்த பொண்ணு வயிற்று வலில ரொம்ப துடிக்குறா.. அந்த பொண்னு கூட அவ அண்ணனும் அம்மாவும் வந்தாங்க. கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல இறக்கிவிட சொன்னாங்க. நானும் கொண்டு போய் விட்டேன்.
மனசு கேட்காம உள்ள போய் பார்த்தா… அங்க டியூட்டி டாக்டர்னு யாருமே இல்லை. ஒரே ஒரு நர்ஸ் மட்டும் தான் இருக்காங்க. பாராசிட்டாமால் கொடுத்து இப்போதைக்கு இதை போட்டுட்டு காலைல வாங்கனு திருப்பி அனுப்புறாங்க.
கவர்மென்ட் நல்லா அலங்காரமா டைல்ஸ் போட்டு ஹாஸ்பிட்டல்லை கட்டிக் கொடுத்துட்டா போதுமா? அதுக்கு டாக்டர்ஸ் கரெக்ட் டைம்கு டியூட்டி பார்க்க வர்றாங்களானு செக் பண்ணுறதும் அவுங்களோட கடமை தான். எந்தவொரு மெடிக்கல் எக்யூப்மென்ட்ஸ்ஸும் நல்ல கன்டிஷன்ல இல்லை. அதான் விடிஞ்சதும் இப்படி அவசரமான… ஆனா அத்தியாவசியமான ஒரு மெடிக்கல் கேம்ப்கு ஏற்பாடு பண்ணுனேன்.
உங்களுக்கு தொடந்து ட்ரீட்மென்ட் தேவைப்பட்டால்…மதுரையிலிருந்து இங்க வந்துருக்க டாக்டர் கௌதமோட ஹாஸ்பிட்டல்ல நீங்க இலவசமா ட்ரீட்மென்ட் எடுத்துக்கலாம். டாக்டர் கௌதம் மனிதநேயமிக்கவர் மட்டுமல்ல… சத்தம் போடாம பல நல்ல காரியங்கள் செய்து வரும் அருமையான மனிதர். இத்தருணத்தில் அவரோட இணைந்து நானும் கைக்கோர்ப்பதில் மிகவும் பெருமையே.
நம்ம ஊர் கவர்மென்ட் ஹாஸ்பிட்டலுக்கு தேவையான மெடிக்கல் எக்கியூப்மென்ட்ஸ் இன்னும் பிற வசதிகள் செய்ய ஒரு கோடி ரூபாய்க்கான செக்கை டொனேஷனாக உங்கள் முன் கலெக்ட்டரிடம் கொடுக்கின்றேன். இனி உங்களுக்கு தரமான மருத்துவம் கிடைக்கும்னு நம்புறேன்.
அப்புறம் இன்னொரு விஷயம் நம்ம ஊர் மக்களுக்கு… என் தங்கை கல்யாணத்துக்கு அனைவரும் வந்து வாழ்த்தனும்னு கேட்டுக்குறேன். இன்னைக்குல இருந்து யார் வீட்டுலயும் ஐந்து நாளுக்கு சமைக்க கூடாது. எல்லோருக்கும் விருந்து காத்திருக்கு. இது உங்க வீட்டு கல்யாணம். அனைவரும் வரனும்… மனசார என் தங்கையை வாழ்த்தனும்” என மிக நீளமாக பேசி முடித்தான் ரிஷி.
ரிஷி பேசி முடித்ததும் அங்கிருந்த அனைவரும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியை ஆரவாரமாய் வெளிப்படுத்தினர்.
அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் மட்டும் எழுந்து, “ஏன் அப்பு…ஐஞ்சு நாள் சமைக்க கூடாதுனு சொல்லிப்புட்டீக.. அதென்ன ஐஞ்சு கணக்கு?” என கேட்க
“ஏலேய் மொக்க… அப்பு நமக்கெல்லாம் வைத்தியத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்காக… அதுக்கு நன்றி சொல்லாம விருந்துக்கு மட்டும் கணக்கு கேட்டுட்டு இருக்க… உன் பொஞ்சாதி உன்னை தூக்கி போட்டு மிதிக்குறதுல தப்பே இல்ல” என கூட்டத்திலுள்ள இன்னொருத்தர் சொன்னதும் அங்கே எழும்பிய சிரிப்பலை அடங்க வெகு நேரமாயிற்று.
சிரித்துக் கொண்டே எழுந்த ரிஷி, “அண்ணே…இன்னைக்கு புதன்கிழமை. இன்னக்குல இருந்து தொடங்கி… ஞாயிற்றுக் கிழமை கறி விருந்து முடியுற வரை” என சொன்னவன் அனைவரையும் பார்த்து பொதுவாய் இருகை கூப்பி வணங்கிவிட்டு மேடையிலிருந்து கீழிறங்கினான்.
விடைபெற்று செல்வதற்காக வந்த கலெக்ட்டர் ரிஷியை பிடித்துக் கொள்ள… ஜனனியோ டாக்டர் கௌதமை பார்க்க கிளம்பிவிட… தனாவிடம் இரண்டு நர்ஸ் பெண்கள் உதவி கேட்கின்றேன் என்ற பெயரில் ஜொள்ளு விட்டுக் கொண்டிருக்க… ரேணுவோ கடுப்பின் உச்சத்தில் ஃபோனை உருட்டிக் கொண்டிருந்தாள்.
மேலும் ஒரு பத்து நிமிடம் கழித்தே அந்த பெண்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.
“ஓஓ…அவளுகளைப் பார்த்ததும் உனக்கு தான் பத்திக்கிடுச்சா?… சும்மாவே தீஞ்சு போனது மாதிரி தான் இருக்க. பார்த்துடி மாப்பிள்ள” என சொல்லிவிட்டு திரும்பவும் ஃபோனை உருட்ட ஆரம்பித்தவளை..
அக்கம் பக்கம் பார்த்த தனா… இவர்களை யாரும் கவனிக்கவில்லை என உறுதிசெய்து கொண்டவன் ரேணுவின் தொடையில் ‘நறுக்’கென கிள்ளிவிட்டு…
“வாய் ரொம்ப கூடி போயிருச்சுடி. படிச்சவ மாதிரியா பேசுற?… சொர்ணாக்கா ரேஞ்சுக்கு பேசுற. நான் என்ன உனக்கு மாப்பிள்ளையாடி?” என கோவமாக கேட்டான் தனா.
“ஹாஹா… டேய் லூசு. நீ தான்டா எனக்கு மாப்பிள்ளை… இனி உன்னை அப்படி தான் கூப்பிட போறேன்” என்றாள் ரேணு சிரித்துக் கொண்டே.
“போடி… ரிஷி தான் என்னை மாப்பிள்ளைனு கூப்பிடனும். வேற யாரும் அப்படி கூப்பிட கூடாது”
‘அட லூசுப் பயலே… உன்னை கட்டிட்டு நான் எப்படி குடும்பம் நடத்தப் போறேனோ?’ என மனதுக்குள் நொந்தவளாய்…
“என்ன ரெண்டு பேரும் இங்க வந்து ஓடி பிடிச்சு விளையாடிட்டு இருக்கீங்க?… சிட்டுவை எங்க?” என கேட்ட ரிஷிக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் இரண்டு பேரும் திரு திரு வென முழித்துக் கொண்டிருந்தனர்.
டாக்டர் கௌதமை பார்க்கப் போவதாக ஜனனி ரேணுவிடம் கூறிவிட்டு தான் போனாள். ஆனால் ரேணுவின் கவனமோ தனாவிடமும் அந்த இரண்டு நர்ஸ் பெண்களிடம் மட்டுமே மையம் கொண்டதால் ஜனனி கூறியது எதுவும் அவள் காதில் ஏறவில்லை.
“உங்களை நம்பி அவளை தனியா விட்டேன் பாருங்க… என்னை சொல்லனும்” என்றான் ரிஷி கடுப்புடன்.
“அவுங்க வீட்டுல தான் சிட்டுவை அப்படி பொத்தி பொத்தி வைச்சுருக்காங்கன்னா…நீங்களும் இப்போ அதே தப்பை தான் செய்ய போறீங்களா அண்ணா?” என கேட்டாள் ரேணு.
“என்னதிது ரேணு?… ரிஷியை எதிர்த்து பேசிட்டு இருக்க? வாயை மூடு” என தன்னை மறந்து அதட்டினான் தனா.
அவர்கள் இருவரும் ரிஷி பார்த்த ஒரு பார்வையில் தலையை குனிந்து கொண்டனர்.
“சிட்டு சுதந்திரமா சிறகடிச்சு பறக்கனும்னு நான் ஆசைப்படாம வேற யார் ஆசைப்படப் போறா?… சொல்லு குட்டிமா.. தூரத்துல இருந்தவனை கூட்டிட்டு வந்து வீட்டுக்குள்ளேயே வைச்சுருக்காங்க. அவன் எத்தனை பெரிய அயோக்கியன்ங்குறது சிட்டு வாயை திறக்காம இங்க உள்ள யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை. இவ ஏன் வாயை திறக்காம இருக்குறாங்குறது இவளுக்கு மட்டும் தான் வெளிச்சம். என்னால இப்போதைக்கு இவளை என் கண் பார்வையில வைச்சுக்குறது தான் ஒரே தீர்வு” என பெருமூச்சுடன் சொன்னான் ரிஷி.
“சரி அண்ணா… இன்னைக்கு மெடிக்கல் கேம்ப்னு வெளியே கூட்டிட்டு வந்து உங்க கண்பார்வையிலே வைச்சிக்கிட்டீங்க?… நாளைக்கு என்ன செய்ய போறீங்க?” என கேட்டாள் ரேணு.
‘கேட்குது பாரு கேள்வி லூசாட்டம். நாளையில இருந்து கல்யாண வீடு.. எல்லோரும் ஒன்னா தான் இருக்க போறாங்க’ இது தனாவின் மைன்ட்வாய்ஸ் தாங்க.
“குட்டிமா…கல்யாண வீடு பரபரப்பு இன்னைக்கு நைட்ல இருந்தே தொடங்கிடும்… நீ சிட்டு கூடவே இரு. அவ ரூம்லயே படுத்துக்கோ. ரஞ்சி கல்யாணம் முடிஞ்சு நாம இந்த ஊரை விட்டு கிளம்புறதுக்குள்ள… சிட்டுவை இந்த பிரச்சனைல இருந்து வெளிய கொண்டு வந்துடுவேன். அதுவரை நீ சிட்டுவை தனியா விடாத” என்றான் ரிஷி.