“இல்லைங்க தம்பி, இப்பதான் சாப்பிட வச்சு மாத்திரை கொடுத்தேன்… சும்மா படுத்திருக்காங்க…” என்றாள் சாந்தி.
“ம்ம் சரி, நீங்க போயி சாப்பிட்டு வேலையைப் பாருங்க… நான் அம்மாகிட்ட இருக்கேன்…” என்றவன் அன்னையின் கட்டிலை நெருங்கினான்.
இதமான குளிர் காற்று உடலைத் தழுவ கழுத்து வரை இழுத்துப் போர்த்து படுத்திருந்தார் திலகம். ஒரு கையும் காலும் உடலோடு சேர்ந்து சுரணையில்லாமல் கிடந்தது. சில மாதங்களுக்கு முன்னே வந்த பக்கவாதத்தில் அவரது உடலின் ஒரு பகுதி இயக்கத்தை நிறுத்தி இருந்தது.
அவருக்கு அருகில் அமர்ந்து இதமாய் தலையை வருடினான் கதிரவன். வெறுமனே கண்ணை மூடிக் கிடந்தவர் மகனது தொடுகையில் கண்ணைத் திறந்தார்.
“கதிரு… வந்துட்டியாப்பா, சாப்டியா…” ஜீவனில்லாமல் ஒலித்தது அவரது குரல்.
“ம்ம் சாப்பிட்டேன் மா, உங்களுக்கு தூக்கம் வருதா…”
“இல்லப்பா, உனக்கு தான் காத்திருக்கேன்… போன விஷயம் என்னாச்சு…”
“ம்ம்… சுதா வீட்டுக்கு நானே நேர்ல போயி பத்திரிக்கை அடிக்க வேண்டிய விவரம் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன் மா… நிச்சயம் தனியா வைக்காம கல்யாணத்துக்கு முதல் நாள் வைக்க அவங்களும் சம்மதிச்சுட்டாங்க…”
“ம்ம்… ரொம்ப சந்தோசம் பா, உனக்கு ஒரு நல்லது பண்ணிப் பார்த்துட்டேன்னா நான் நிம்மதியாப் போய் சேர்ந்திடுவேன்…”
“அம்மா… இப்படில்லாம் பேசாதிங்கன்னு எத்தன தடவ சொல்லி இருக்கேன்… எல்லாம் அந்த மூதேவிங்க பண்ணின வேலை… எவ்ளோ ஆரோக்கியமா ஓடியாடி எல்லா வேலையும் செய்துட்டு இருந்திங்க… எப்ப அந்தத் திமிரெடுத்தவ ஊரை விட்டு, அந்த நாயோட ஓடிப் போனாளோ, அப்ப இருந்து உங்களுக்கு ஒவ்வொண்ணா உடம்புக்கு வரத் தொடங்கிருச்சு…” அவரது பார்வை கலங்கியிருக்க, நிறுத்தினான்.
“அவளைப் பத்தி நினைக்காதிங்கனு சொன்னாலும் கேக்க மாட்டேங்கறீங்களே மா… உங்களைப் பத்தி, நம்ம குடும்ப மானத்தைப் பத்தி யோசிக்காம தன்னோட காதல் தான் பெருசுன்னு சுயநலமா யோசிச்சு வீட்டை விட்டுப் போனவளை நினைச்சு நீங்க எதுக்கு உங்க உடம்பைக் கெடுத்துக்கறிங்க…”
ஒரு நிமிடம் அமைதியாய் இருந்த திலகம், “முடியலையேப்பா… என்னால என் பொண்ணை நினைக்காம இருக்க முடியலயே… என்ன தான் தப்பு செய்தாலும் அவ என் வயித்துல பொறந்தது இல்லேன்னு ஆயிடுமா… எங்கே, எப்படிக் கஷ்டப் படுறாளோ… அவ என்னைப் பத்தி நினைக்குறாளோ இல்லியோ… ஒரு அம்மாவா என்னால அவளை நினைக்காம இருக்க முடியலை…” அவரது கண்கள் கலங்கத் தொடங்கியது.
“அம்மா, இப்ப எதுக்குக் கண் கலங்கறீங்க… அவளுக்காக நீங்க இப்படி உங்க கண்ணீரை வேஸ்ட் பண்ணுறது எனக்குப் பிடிக்கலை… அதுக்கு தகுதி இல்லாதவ உங்க மக… நம்மளை எல்லாம் வேதனைப் படுத்திட்டு போனவ நிச்சயமா நல்லாருக்க மாட்டா… சீரழியத் தான் செய்வா… அந்தக் குடியைக் கெடுத்தவன் விளங்காம தான் போவான்…” என்றான் கோபத்துடன்.
“டேய் கதிரு, அப்படில்லாம் சொல்லாதடா…” அவனது வாயை ஒரு கையால் மூடியவர், “ஏதோ தெரியாத்தனமா தப்பு பண்ணிட்டாங்க, உனக்குப் பிடிக்கலைன்னா வேண்டாம்… அதுக்காக அவங்களை என் முன்னால இப்படியெல்லாம் சபிக்காதே… எங்கிருந்தாலும் நல்லா இருந்துட்டுப் போகட்டும்…” அவரது கண்ணில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்க, அதற்கு மேல் அவரை அழவைக்க விரும்பாமல் பேச்சை மாற்றினான் கதிரவன்.
“சரி, அதை விடுங்கம்மா… சுதா வீட்டுல நீங்க சொன்ன போலவே எல்லாம் சொல்லிட்டேன்… நகை, சீர் சினத்தின்னு எதுக்கும் கஷ்டப்பட வேண்டாம்… நாமளே பார்த்துக்குவோம்… பத்திரிகை கூட நாமளே அடிச்சுக் கொடுக்கிறதா சொல்லிட்டேன்… என் அம்மாக்கு மருமகளா இல்லாம ஒரு மகளா நடந்துகிட்டா மட்டும் போதும்… நாங்க வேற ஏதும் எதிர்பார்க்கலைனு சொல்லி இருக்கேன்…”
“ம்ம்… ரொம்ப சந்தோசம்பா… கல்யாணம் எங்கே வச்சுக்கலாம்னு யோசிச்சியா…”
“நீங்க இங்க இப்படி இருக்கும் போது கல்யாண வேலை எல்லாம் அங்கே போயி என்னால பார்க்க முடியாது… அதனால சிம்பிளா கோவில்ல கல்யாணத்தை வச்சிட்டு இங்கே நம்ம ஊருல ரிசப்ஷன் வச்சுக்கலாம்னு யோசிக்கறேன் மா…”
“ம்ம்… அதும் நல்லது தான்பா… நிலா கல்யாணத்தை சென்னை, வடபழனி முருகன் கோவில்ல வச்சு பண்ணனும்னு ஆசைப்பட்டேன்… உன் அப்பாக்கு ரொம்பப் பிடிச்ச கோவில்… எல்லா மாசமும் முருகனை தரிசிக்க கிளம்பிருவார்… ஹூம்… அது தான் நடக்காமப் போயிருச்சு… உன் கல்யாணத்தையாவது அங்கே நடத்திப் பார்க்க மாட்டோமான்னு ஆசையா இருக்கு…” என்று தன் மனதில் உள்ள ஆசையை அப்படியே சொல்லி வைத்தார் திலகம்.
“ம்ம்… சரிம்மா… உங்களுக்கு அப்படி ஒரு ஆசை இருந்தா அந்தக் கோவில்லயே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம்… சுதா வீட்டுக்கும் அது பக்கமா இருக்கும்…” யோசித்துக் கொண்டே கூறினான் கதிரவன்.
“சரிப்பா… நீ எல்லாம் பேசி தீர்மானம் பண்ணிட்டு நம்ம ஜோசியர் கிட்டே ஒரு வார்த்தை கேட்டுட்டு நல்ல நாள் பார்த்திட்டு வா… அப்புறம் பத்திரிகை அடிச்சுடலாம்…”
“சரிம்மா…” என்றவன், ஏதோ யோசிப்பதைப் பார்த்தவர்,
“என்ன கதிரு… உன் மனசுல என்ன ஓடிட்டு இருக்கு, சொல்லுப்பா…”
“அம்மா, நம்ம கல்யாண புரோக்கரோட தம்பி மூலமா வந்த சம்மந்தம்… நம்ம ஊர்ல பொண்ணு பார்க்காம சென்னைல பார்த்திருக்கமே… பட்டிணத்துல வளர்ந்த பொண்ணு, உங்களை நல்லா பார்த்துக்குவாளா… சுதாவை நீங்க நேர்லயும் பார்க்கலை… அவ போட்டோ பார்த்திட்டு மொபைல்ல தான் பேசினிங்க… உங்களுக்கு நிஜமாவே அவளைப் பிடிச்சிருக்கா…”
அவனைப் புன்னகையுடன் பார்த்தவர், “பிடிக்காமலா அந்தப் பொண்ணு போதும்னு சொன்னேன்… அப்பா இல்லாத பொண்ணு, அம்மாவை சார்ந்தே வாழ்ந்தவ… வசதியில கொறைச்சலா இருந்தாலும் அந்தப் பொண்ணு பேச்சுல ஒரு எதார்த்தம் இருக்கு, ஒரு நெருக்கம் இருக்கு… என்னோட பேசும்போது என் உடல்நிலையைப் பத்தி தான் நிறையப் பேசினா… ரொம்ப வருத்தப்பட்டா, அந்த வார்த்தைல கள்ளம் இல்லை… நிஜமான வருத்தம் அது… அவ உனக்கு ஏத்த மனைவியா, எனக்குப் பிடிச்ச மருமகளா நிச்சயம் இருப்பா… உனக்கு சந்தேகமே வேண்டாம்…” சின்னக் குழந்தையின் சந்தோசம் அவர் முகத்தில்.
“ம்ம்… சரிம்மா… உங்களுக்குப் பிடிச்சா சந்தோசம் தான்…” என்றான் அவன்.
“ஏன்பா, உனக்கு அவளைப் பிடிக்கலையா…”
“வ…வந்து… பிடிச்சிருக்குமா…” என்றவனின் மனதுக்குள், குடையுடன் வேக வேகமாய் வாசலில் செருப்பை அவிழ்த்துவிட்டு, நனைந்த உடையுடன் முகமெல்லாம் மழைத்துளிகள் வழிய, பதட்டத்துடன் வீட்டுக்குள் நுழைந்த சுதாவின் அழகிய முகம் மின்னலாய் மின்னி மறைந்தது.
பெண் பார்ப்பதற்காக வந்து காத்திருப்பவர்களின் முன்னால் முழுக்க நனைந்த உடையுடன், கூச்சத்துடன் ஒரு புன்னகையை உதிர்த்துக் கொண்டே அவளது அறைக்குள் ஓடினாள். பனியில் நனைந்த புது மலராய் நாணத்துடன் சிரித்தவளின் முகம் அவன் கண்ணுக்குள் இப்போதும் தெளிந்தது. பிறகு உடை மாற்றி அழகாய் புறப்பட்டு வந்து முன்னில் நின்றாலும் அந்த மழை முகம் அவன் மனதில் பசையிடாமலே ஒட்டிக் கொண்டது. அவளது நினைவில் உதட்டில் நெளிந்த புன்னகை அவன் மனதை சொல்ல, திலகத்தின் முகமும் மலர்ந்தது.
“சரி கதிரு… நீ போயி தூங்குப்பா, நேரமாச்சு… காலைல வேலை இருக்குல்ல…” என்றார் திலகம்.
அசையாமல் கிடந்த அவரது கரங்களை அன்போடு நீவிக் கொடுத்தவன், “சரிம்மா, நீங்க தூங்குங்க… நானும் போயி படுக்கறேன்…” என்றான். மகளது நேசம் பாதியில் கிடைக்காமல் போனாலும் நிறைந்து நின்ற மகனின் நேசத்தில் அந்தத் தாயின் மனம் பூரித்தது.
“கடவுளே, என் பொண்ணு கல்யாணத்தை தான் நான் பார்க்க முடியல… என் மகன் கல்யாணத்தையாவது நல்லபடியா பார்க்கும் வாய்ப்பைக் கொடு…” வேண்டிக் கொண்டவரின் பார்வை திறந்திருந்த ஜன்னலின் வழியே வானத்தை நோக்க, பௌர்ணமியாய் மலர்ந்து நின்ற நிலவின் அழகு எப்போதும் போல அவரது மனதை வாட்டியது.
“என் நிலா, இந்த நிலவை விட அழகாய் இருப்பாளே… எத்தனை மென்மையான முகம் அவளுக்கு… எப்போதும் முகம் நிறைந்த தேஜசுடன், வீட்டில் கலகலப்பாய் வளைய வந்த என் செல்ல மகள்… எத்தனை முறை நிலாவைக் காட்டி சோறூட்டி இருப்பேன்… ஏய் நிலாவே, என் மகள் எங்கிருக்கிறாள், உனக்காவது தெரியுமா…” அதையே உற்று நோக்கியவரின் கண்கள் கலங்கியது.
“மனதுக்குள் கௌதமின் மீது இப்படி ஒரு விருப்பம் இருப்பதை சொல்லி இருந்தால், எத்தனை பாடு பட்டாவது அவள் ஆசையை நிறைவேற்றி வைத்திருப்பேனே… இப்படி செய்து விட்டாளே பாவி… இப்போது எங்கே இருக்கிறாளோ, எப்படி இருக்கிறாளோ… என் கூட்டை விட்டு உயிர் செல்லும் முன் ஒரு முறையாவது அவளைப் பார்த்து விட மாட்டேனா…” அவரது மனம் மௌனமாய் அழுது கொண்டிருந்தது. அவரது வேதனையை வானத்து நிலவு புரிந்து கொண்டதோ என்னவோ… வேகமாய் மேகங்களுடன் நகர்ந்து சென்றது… பூமியில் உலா வரும் நிலாவிடம் அவள் தாயின் மனதை சொல்ல செல்கிறதோ…
மொழியறியா சிறு பிள்ளையாய்
மையல் கொண்டு தனித்திருந்தேன்…..
என் நேசம் சொல்லாமல்
நானழுதேன் தானாக…
அழுத பிள்ளையின் கண்ணீரை
அறியும் தாயாக – எனை நீ உணர்ந்தாய்….
கண்ணை கட்டி சிறகை விரிக்கும்
காதல் பறவையாய் நீ… உன்
நினைவென்ற மேகம் சூழ்ந்ததால்
என் கண்ணீர் மழையாகிறது…
உனைப் பிரியும் துன்பம் கடலாகிறது…
அலையை ஒதுக்கித் தள்ளும் கடலாய்
நீ என்னைப் பிரிக்கிறாய்…
தாயைத் தேடும் சேயாய் மீண்டும்
உன்னிடமே தஞ்சம் கொள்கின்றேன்…
அன்று அழும்போது அன்னையை தேடினேன்…
இன்று அன்னையாய் உன்னைத் தேடுகிறேன்…
என்னைத் சுற்றி சிதறிக் கிடக்கிறது – உன்
நினைவுக் குவியல்கள் நட்சத்திரப் பூக்களாய்….
பூக்கள் உதிரும்… நினைவுகள் உதிருமா…
கண்ணீர் கரையும்… கருவிழி கரைந்திடுமா…
என் மீது நேசம் இல்லாமலா – பூமியை
சுற்றி வந்து என்னை தேடுகிறாய்…
பூலோகம் வேண்டாம் – நமக்கான
உலகம் என் மன வானில் இதோ….
இருள் மறைகிறது… என் பயணமும்
முடிகிறது… உன்னைக் காணாமலே
என் தேடலும் முடிகிறது…