மைலாஞ்சியே   நாணமோ
                  அத்தியாயம் 9
                “நீ    முத்தமிட்டு    சிவந்ததா?…
                  இல்லை   வெட்கத்தால்  சிவந்ததா?..
                  புரியாத   புதிராய்   இருக்கின்றது..
                  என்   கன்னச்சிவப்பு!!”
              
                      ‘ இன்னும்   எத்தனை  நேரம்  தான்  இப்படியே  பார்த்துக்  கொண்டிருப்பது?’  என  கண்ணாடியில்  தெரியும் தன்  பிம்பத்திடம்   தன்னை  தானே  கேட்டுக்  கொண்டிருந்தாள்   ஜனனி. 
             இரவு  முழுவதும்   தூங்காமல்  இருந்தாலும்   அச்  சோர்வின்  சாயல்   துளியுமின்றி … மாறாய்   என்றைக்குமில்லாத  புத்துணர்வுடன்  முகம்  அந்திவானத்தைப்   போன்று   சிவப்பை  பூசிக்  கொண்டும்,  ஆயிரம்  கதைகளைப்  பேசிடும்  கண்கள்   இன்று  மட்டும்  மௌனமாய்   நாணக்  குடை  பிடித்திடவும்,  காயம்  பட்ட  இதழ்கள்  நொடிக்கொரு  முறை   தன்னை  ரணமாக்கியவனையே   வெட்கமின்றி  தேடி  அலைவதும் …  இது  தான்  காதலா?
            தன்   ரிஷி   அத்தானை  பார்க்க  வேண்டும்… பார்த்ததும்   காலில்  விழுந்து  தான்  செய்த , செய்து  கொண்டிருக்கும்  தவறுகளுக்கு   மன்னிப்பு  கேட்க  வேண்டும் .  இது   மட்டும்  தான்  ஜனனியின்   சிறுவயதிலிருந்தே  அவளது   மனதிற்குள்  வேரூன்றி  போயிருக்கும்  எண்ணம். 
         ஆனால்   யார்  காலில்  விழுந்து  மன்னிப்பு   கேட்க  வேண்டுமென  நினைத்தாலோ … அந்த  எண்ணத்தின்   நாயகனே  ஜனனியைக்   கண்டதும்    அவளையும்   சேர்த்து  இழுத்துக்  கொண்டு  தன்  தாத்தா  பாட்டியின்  காலில்  விழுந்து   ஆசி  வாங்குவானென்பது  அவள்  கனவில்  கூட  நினைத்துப்   பார்க்காதொரு  அதிர்ச்சியான  இன்பமான  நிகழ்வு  அது.
        தான் ஏன்  அதை  தடுக்க  முயலவில்லை?  இமைக்கும்  நொடியில்   அச்  செயல்  நிகழ்ந்தாலும்   அதற்கு  பின்பும்  ஏன்  தான்  அதற்கு  ஆட்சேபனை  தெரிவிக்கவில்லை?
          தன்னை  மறந்து     அத்தானை  ஏன்   அவ்வாறு  பார்க்க  வேண்டும்?
      இது  அனைத்தையும்  விட பின்னிரவுக்கு  மேல்  சாப்பாடு  கொண்டு  போகின்றேனென்று  ஒரு  மிகப்  பெரிய  அசட்டுத்தனம்  பண்ணிட  தனக்கு  எங்கிருந்து  துணிச்சல்  வந்தது ?   
      இப்படி   விடையில்லா   பல  ‘ஏன்’ கள்   அவளிடம்.  பதில்  சொல்ல  வேண்டிய  அவள்  மனமோ  மௌனம்  சாதிக்க…  விரல்கள்  மட்டும்   இதழின்  காயத்தை  வருடி… இது  தான்  உனக்கான  பதில்  என  சொல்லாமல்  சொல்லிக்  கொண்டிருந்தது.
          அவளது   எண்ணவோட்டத்தின்  ஸ்பீடுப்ரேக்கராய்  அலறியது   ஜனனியின்   செல்ஃபோன். 
திரையில்  வைதேகி அம்மா காலிங் னு  ஒளிர…
‘விடிஞ்சும் இன்னும்  கீழ  போகாம  இருக்குறதுக்கு     காலங்காத்தாலயே  அர்ச்சனை ஆரம்பம்’ என நினைத்தவள்  ஃபோனை  ஆன்  பண்ணி   காதுக்கு  கொடுக்க,
“ஜானும்மா  இன்னும்   என்னடா  செய்யுற?…உன்னை  பார்க்கனும்னு   எல்லோரும்   கீழ  வெயிட்  பண்ணுறாங்கடா”  என்றார்  வைதேகி  அந்த  பக்கத்திலிருந்து.
“இதோ  வரேன்மா”  என்ற  ஜனனிக்கு   பலத்த  சந்தேகம்  வந்தது   இப்போது…   பேசியது   நம்ம  அம்மா தானா என்று?
         ஜனனி   மீது   வீட்டினர்  அனைவர்   பாசத்தை   கொட்டி  கொஞ்சினாலும்     வைதேகி  மட்டும்   எப்போதும்   கண்டிப்பை  மட்டுமே  காட்டுவார்.  அதனால்  தான்  இன்று  அவர்  பேசிய விதம்   ஜனனிக்கு    வித்தியாசத்தைக்     கொடுக்கவே   குழம்பியபடியே   கீழே  இறங்கிச்  சென்றாள்.
       மாடிப்படிகளிலிருந்து   இறங்கி   வரும்போதே   தன்  அப்பா  அம்மாவுடன்  இரண்டு  அத்தைகளும்  மாமாக்களும்  ரேணுவும்  உட்கார்ந்து  கதை  பேசிக் கொண்டிருப்பதை  கவனித்தாள்  ஜனனி.     
            ரஞ்சி     குனிந்த  தலை  நிமிராமல்   செல்ஃபோனை  உருட்டிக்  கொண்டிருந்தாள்.     ‘ கல்யாணமானாலும்   சாட்ல  தான்  குடித்தனம்  பண்ணுங்க  போல’  என  தனக்குள்  சிரித்துக்  கொண்டாள்  ஜனனி.
           தன் பின்னால்  வந்து நின்று தன்   இரு  கண்களையும்  மூடிய  ஜனனியின்   கைவிரல்களை  தடவிய  ரேணு, 
“ஹேய்…சிட்டு… நீ  வரும்  போதே  நான்  பார்த்துட்டேன்.  உன்  பெர்ஃபாமன்ஸ்  என்கிட்ட   பல்பு  வாங்கிடுச்சு”  என்றாள்  ரேணு   சிரித்தவாறு    ஜனனியை   இழுத்து  தன்  பக்கம்  அமர வைத்துக் கொண்டே.
“இதென்ன   சிட்டுனு  கூப்பிடுற  பழக்கம்?  புதுசாருக்கு”   என்று   ஒரு  புதியவனின்  அதட்டும்  குரல்  கேட்ட  பின்பு  தான்   எதிர்சோபாவில்  கால் மேல்  கால்  போட்டு  உட்கார்ந்திருக்கும்  அவனை  கண்டாள்  ஜனனி.
‘இவன்  எப்போ  போலீஸ்  ஸ்டேஷன்ல  இருந்து  வெளியே  வந்தான்?  ஓஓ… இந்த  சந்தோஷ்  வெளிய    வந்ததால்   தான்   நம்ம  அம்மாவுக்கு     அவ்ளோ  சந்தோசமா?..கன்றாவி’  என    மனதுக்குள்   நினைத்தவாறு  தன் கண்களால் தாயை   தேடினாள்  ஜனனி.
          அவள்   தேடுவதை  உணர்ந்த  வைதேகியும்,  “ஜானும்மா  என்ன  பார்க்குற?   இதான்  நம்ம  வடிவு அத்தையோட  பையன்  உன்  சந்தோஷ்  அத்தான்”  என்றார்.
“உன்  சந்தோஷ்  அத்தானாம்”  என்றாள்    ரேணு.. ஜனனியின்  காதுகளில்  முணுமுணுத்தவாறு.
“உவ்வே”  என்றாள்  ஜனனியும்   பதிலுக்கு  ரேணுவின்  காதில்  கிசுகிசுத்தவாறு.
“ஒரு  லிப்லாக்குக்கே  வாந்தி  வந்துடுமா  என்ன?  அதுவும்  செம  ஸ்பீடா இருக்கே?”  என்றாள்  ரேணு  ஜனனியின்  காதுகளில்  சிரித்தவாறு.
முதலில்  புரியாமல்  விழித்த  ஜனனி…  அவள்  சொன்னதன்  அர்த்தம்  புரிந்ததும் ,  
“அட  சீ!..  அசிங்கமா  பேசாத”  என்றவாறு   ரேணுவின்  கையில்  கிள்ளி  வைக்கவே … அலறிய  ரேணு,
“கிள்ளாத  சிட்டு .. வலிக்குது”  என்றாள்  சத்தமாக.
“சிட்டுனு  கூப்பிட  கூடாதுனு  உன்கிட்ட  செகண்ட்  டைம்  சொல்லுறேன்.. திஸ்  இஸ்  லாஸ்ட் வார்னிங்   ஃபார்  யு”  என்றான்  சந்தோஷ்   அதிகாரமாக.
    அதுவரை  ஜனனியுடன்  குறும்பாய்  பேசிக்  கொண்டிருந்த  ரேணுவுக்கு  சந்தோஷின்  இந்த   அகங்காரப்  பேச்சு   எரிச்சலை  தந்தது.
“நீங்க  சொன்னதை  நான்  ஒரு பொருட்டாவே  எடுத்துக்காதப்போ … தானா  ஆஜராகிட்டு   ஃபர்ஸ்ட்  டைம், செகண்ட்  டைம்னு  கவுண்ட்டிங்க்  வேற   கொடுத்துட்டு  இருக்கீங்க?…  என்  தாத்தா வீட்டுல  நின்னுட்டு  எனக்கே    வார்னிங்    கொடுத்து  காமெடி  பண்ணிட்டு   இருக்கீங்க.  யார்  சார்  நீங்க?”  என  நக்கலாய்  முடித்தாள்  ரேணு.
           மீண்டும்  குடும்பத்திற்குள்   சண்டை  வந்திடுமோ  என்ற  பயத்தில்    பத்மா,  ஊர்மிளா,  உலகநாதன்,  தனசேகரன் என  நால்வரும்         “ரேணு  வாயை  மூடு”  என்றனர்   ஒருமித்த  குரலில் .
 ‘அண்ணனும்  தங்கச்சியும்  ஒரு  முடிவோடு  தான்  வந்து  இறங்கியிருக்குதுக  போல’  என  தன்  மனதோடு  பேசிக்  கொண்டு  ஜனனியும்  செய்வதறியாது  கைகளை  பிசைந்தவாறு   நின்று  கொண்டிருந்தாள்.
“எதுக்குமா  வாயை  மூடனும்?  வாயை  மூடி  மூடி  தான்  இந்த  நிலைமைல  வந்து  நிக்குறோம்” ரேணு இதை  சொல்லும்  போது    ஜனனியை  பார்த்து   முறைத்துக்  கொண்டே  சொன்னாள்.
‘என்னை  விட்டு விடேன்’   என்பதை  போல  விழிகளில்  நீர்  ததும்ப  ஜனனி  பார்த்ததும் … 
‘பிழைத்துப்  போ’  என்பதாய்  ஒரு  பார்வை  பார்த்து வைத்தாள்  ரேணு. 
ரேணு  ‘யார்  சார்  நீங்க’ என்று  கேட்டதும்  கொதித்து  எழுந்து விட்டான்  சந்தோஷ்.
“என்னைப்   பார்த்தா  யாருனு  கேட்ட? “  என சோபாவிலிருந்து  எழுந்து    நடு  ஹாலுக்கு  வந்து  நின்று  ஆத்திரத்தோடு   கேட்டான்.
        அவன்  பின்னாடியே   ஓடி  வந்த  ஜனனியின்  அப்பா   அருள்குமரன்,  “கோவப்படாதீங்க  மாப்பிள்ளை..  சின்ன  பொண்ணு  ஏதோ  தெரியாம  பேசுறா.  நீங்க  வந்து  உட்காருங்க”  என்றார்  சந்தோஷிடம்.
“இப்போ   புரியுதா  நான்  யாருனு?…  இந்த  வீட்டு  மாப்பிள்ளை”  என்றான்  சந்தோஷ்  கர்வமாய்   ரேணுவிடம்.
“ஹாஹாஹா….  எங்க  மாமா  உங்களை  உறவுமுறைல  தான்  மாப்பிள்ளைனு   கூப்பிடுறாங்க.  இந்த  வீட்டு  மாப்பிள்ளையாய்  இல்ல.  டவுட்னா  நீங்களே  அவரை  கேட்டுக்கோங்க”  என்றாள்   ரேணு  சிரித்துக்  கொண்டே.
“என்ன  பத்மா   பொண்ணை  பேச  விட்டு  வேடிக்கை  பார்க்குறியா?”  என்றார்   வைதேகி  கோவமாய்.
“ஐயோ  அண்ணி   சத்தியமா  அப்படியில்லை.”  என்று   வைதேகியிடம்  சொன்ன  பத்மா  ,
“பேசாம  இரு”  என்று  ரேணுவை  அதட்டினார்.
          எதிரெதிர்   சோபாக்களில்  உள்ள  தன்  சொந்தங்களே  ஒருவரையொருவர்   முறைத்துக்  கொண்டு   நிற்பதைப்  பார்த்தால்..  ஆளுங்கட்சி  எதிர்கட்சியென  தன்  வீடு  இரண்டு  கட்சியாய்   பிளவுபட்டு  இருப்பதைப்  போல  பிரம்மை  உண்டானது   ஜனனிக்கு.
         ‘எங்கே   இந்த  வீட்டின்  ஆணிவேர்?… அவர்   வாயை  திறந்தால்  தான்   இந்த  வீட்டின்  மற்றவர்  சத்தம்  அடங்கும்.’  என்று   தன்  தாத்தாவை  ஜனனி    தேட..
       அவரோ   பொறுப்புள்ள  கணவராய்   பாட்டி   கொடுத்த   காபியை   ரசித்து   ருசித்துக்  குடித்துக்   கொண்டிருந்தார்.  
‘வீடு   ரணகளமாகிட்டு   கிடக்குது.  தாத்தாவுக்கு   இப்போ  காபி  தான்   முக்கியமா  போயிடுச்சா’  என  நினைத்த  ஜனனி     தாத்தாவின்  பக்கம்   செல்வதற்காக  எழுந்தாள்.
         ஜனனி   எழுந்ததும்   அவளை   பார்வையாலே   என்னவென்று   கேட்ட  ரேணு ,  “எங்கேயாவது   எஸ்கேப்  ஆகலாம்னு   நினைச்ச  கொன்னுடுவேன்.  உட்காரு”   என்று   விழிகளை   உருட்டி   எச்சரித்துவிட்டு   திரும்பியவளுக்கு   வெகுநேரமாய்   தன்னை  யாரோ   உற்றுப்  பார்ப்பது  போல  ஒரு  உணர்வு.   
           ‘டேய்….லூசுப்  பயலே..  நீ   தான  அது?   ஏன்டா   இப்படி   பார்க்குற?… முறைப்பையன்னா   முறைச்சி  முறைச்சி  பார்ப்பியா?…  நீ   ரொமான்ட்டிக்கா  பார்க்குறதா  நினைச்சுட்டு   கொடூரமா  பார்க்குற?.. டேய்   சின்ன  தம்பி  பிரதர்ஸ்   ரூல்ஸ்  எல்லாம்  ஊருக்கு  தானா?…   உங்களுக்கு  கிடையாதா?  சும்மா இருக்குற  அந்த  மீசையை  ஏன்டா  திருகுற?  கண்ணை   ஏன்டா   சுருக்கிப்  பார்க்குற?… அப்புடியெல்லாம்   பார்க்காதடா!.. புள்ள பூச்சாண்டி  மாதிரியே   இருக்கு’   என  மனதிற்குள்   ரேணுவின்  பெரிய  அண்ணன்  அருண்உதய்கு  கவுண்ட்டர்   கொடுத்துக்  கொண்டிருந்தவளை   சந்தோஷின்     குரல்   கலைத்தது.
“அவ   சொல்லுறது   உண்மையில்லை.  நான்  தான்  உங்க  வீட்டு   மாப்பிள்ளைனு  சொல்லுங்க  மாமா”  என்றான்   சந்தோஷ்  வீடு  அதிர.
        சந்தோஷ்கு   ரேணுவிடம்  இந்த  கணத்தில்  தோற்றுப்  போவதில்  துளியும்   விருப்பமில்லை.  அதுமட்டுமன்றி இதையே  காரணமாய்  வைத்து   தன்  பல  வருட  கனவான   ஜனனியை  தனக்கு  சொந்தமாக்கிட   திட்டம்  தீட்டி   சண்டையை  வளர்க்க   ஆயத்தமானான்     ரேணுவிடம்  மொக்கை   வாங்க  போவது   அறியாமல்.
 “அவரால  சொல்ல  முடிஞ்சா  அப்போவே  சொல்லியிருப்பாரே.  ஏன்  வெட்டியா  கத்திட்டு  இருக்கீங்க  மிஸ்டர் சந்தோஷ்”  என்றாள்  ரேணு  
“என்னங்க…. ஏன்  சும்மாவே  நிக்குறீங்க?.  சொல்லுங்க.  சந்தோஷ்  தான்  நம்ம  வீட்டு  மாப்பிள்ளைனு”  என்றார்  வைதேகி.
‘இவ  ஒருத்தி  நொய்  நொய்னு.  ஊருக்குள்ள   ரிஷினு  ஒருத்தன்  வந்து  இறங்கியிருக்கும்  போது   இவனை  எப்படி  நான்  இந்த  வீட்டு  மாப்பிள்ளைனு   சொல்லுவேன்.  அவனோட   கொடுக்கே  இத்தனை  கேள்வி  கேட்குது?… அவன்  ஊருக்குள்ள  வந்ததுமே   சந்தோஷை  தூக்கி  உள்ள  வைச்சிட்டான்.    ஏன் எதுக்குனு  காரணமே  தெரியலை,  அப்புறம்  அவனே  வெளியே  விடுறான்.    நான்   இன்னும்   இவன்  தான்  இந்த  வீட்டு  மாப்பிள்ளைனு  சொன்னேன்  அவ்ளோ  தான்…  சந்தோஷை   தூக்குலயே   தொங்கவிட்டுடுவான்.’  என வைதேகியைப்   பார்த்து   பல்லை  கடித்துக்  கொண்டிருந்தார்  அருள்குமரன்.
       அருள்குமரன்  மௌனமாய்  இருப்பதை  கண்ட   ஜனனி   சிரித்துக்  கொண்டே, “இத்துடன்   இன்றைய   கடை   மூடப்படுகின்றது..  போ..  போ…புள்ள  குட்டியை  படிக்க  வைக்குற  வழியை  பாரு”  என்றவள்   தன்  சுடி   துப்பட்டாவால்   அருகிலிருந்த  ஜனனியையும்  ரஞ்சியையும்  அடித்தாள்  வடிவேல்  பாணியில்.
             அனைவரும்   ரேணுவை  முறைத்துக்  கொண்டே  எழுந்து  செல்ல… 
“எதுக்குடி   என்னை  அடிக்குற  குரங்கு”  என்றாள்  ரஞ்சி  கோவமாய்.
“அடிப்பாவி…  இங்க  நடந்தது   எதுவுமே  உனக்கு  தெரியலையா?”   என  கேட்டாள்   ஜனனி   ரஞ்சியிடம்.
ஜனனி   கேட்டதும்  தான்   ஹாலை  பார்த்தவள், “எங்கடி  எல்லோரும்   போயிட்டாங்க?..  ஹால்   காலியாருக்கு”  என  கேட்டாள்   ரஞ்சி.
“ஹாஹா… அதுவா…  ரேணு  கொஞ்ச நேரத்துலயே  எல்லோரையும்  துவைச்சு எடுத்துட்டா.  அங்க  பாரு   வராண்டால  எங்க  அப்பாவும்  பெரியப்பாவும்   ரேணு   துவைச்ச   ஈரத்தை   காய  வைச்சுட்டுருக்காங்க”  என்றாள்  ஜனனி  சிரித்துக்கொண்டே.
“ஹீரோவாக  ட்ரை  பண்ணும்  அந்த  காமெடி  பீஸை  எங்க    காணோம்?”  என  கேட்டாள்   ரேணு  சிரிப்பை  அடக்கியபடி.
“நீ  துவைச்சதுல  அவனுக்கு   தான்   சட்டை  கிழிஞ்சி  ரத்தம்  வந்துருக்கும்.  ஃபர்ஸ்ட் எய்ட்  பண்ண  ரூம்க்கு  போயிருப்பான்”  என்றாள்  ஜனனி   ரேணுவிடம்.