“நிஜமாவா…. என்ன வா இருக்கும்? ஆனா அவரே தான சொல்லியிருக்கார். நம்ம மேல இருந்த கோபம் போயிடுச்சோ.” எனக் கீர்த்தி மகிழ்ச்சிக்கொள்ள… 

“எதுக்கும் நீ ரொம்ப ஆசையை வளர்த்துக்காத கீர்த்தி.” என்றான். 

“நான் அங்க போய் உடனே நின்னுட போறேனா என்ன? அவங்களே வரட்டும் பார்க்கலாம்.” என்றாள். ஆனால் உள்ளுக்குள் அவளுக்கு ஆர்வம் இருக்கவே செய்தது. இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் அவர்கள் வீட்டிலிருந்து யாரும் அழைக்கவில்லை என்றதும், அவள் முகம் வாடியிருக்க… அவளிடம் சொல்லாமலே இருந்திருக்கலாம் என நினைத்தவன், மனைவியை அருகில் இழுத்து தன் கைவளைவுக்குள் வைத்தும் கொண்டான். 
வார்த்தைகள் தராத ஆறுதலை அவன் செய்கை உணர்த்த, கீர்த்தி அவன் மார்பில் முகத்தை மறைத்தாள். அவன் நெஞ்சின் ஈரம் மனைவியின் கண்ணீரை உணர்த்த, அவள் முகத்தைப் பற்றி, “இவ்வளவு நாள் பொறுமையா இருந்திட்ட… இன்னும் கொஞ்ச நாள் மா…” என்றான். கீர்த்திப் பதிலுக்குக் கணவனை இன்னும் இறுக அனைத்துக்கொண்டாள். 

“நம்ம ரெண்டு பேர் சேர்ந்து பிஸ்னஸ் பண்றதாதானே பேச்சு. நீ எதுக்குச் சூரியா அண்ணா, வசீகரனை எல்லாம் சேர்த்த? இப்போ நாம எல்லாம் சேர்ந்திட்டு தர்மா அண்ணாவை மட்டும் விடுற மாதிரி இருக்கும்.” என விஷால் சொன்னதற்கு. 

“அதெல்லாம் நம்ம இஷ்டம். நீ ஒன்னும் பீல் பண்ணாத. நமக்கும் பணம் வேணும் இல்ல….. அவங்களும் இருந்தா இன்னும் பெரிசா பண்ணலாம்.” என இனியா சமாளிக்க…. விஷாலுக்கு ஒன்றும் சரியாகப்படவில்லை. 

வாசன் அவர்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டே இருக்க… ஒரு வார இறுதியில் கீர்த்தி அபியை அழைத்துக் கொண்டு அங்கே சென்றிருந்தாள். அவள் பாட்டியும் அவளைப் பார்க்க வேண்டுமென்றிருந்தார். 

அந்த ஞாயிறும் வழக்கம் போல எல்லோரும் ஒன்று கூடியிருக்க… உமாநாத் ஆள் ரொம்ப தளர்ந்து  போய் நோய் கண்டவர் போலிருந்தார்.  

“என்ன சித்தப்பா ஒரு மாதிரி இருக்கீங்க.” எனத் தர்மா கேட்டதற்கு, 

“உடம்பே சரியில்லை.” என்றார். பின்னே தினமும் குடித்தால் என மனதிற்குள் நினைத்தவன், “டாக்டர பார்த்தீங்களா?” என்றதற்கு பார்த்தேன் என்றார். 
இவர் நன்றாக இருக்கும் போதே மகளுக்குத் திருமணம் செய்து வைத்துவிடலாமே என்ற எண்ணத்தில் “ரித்விகா படிப்பை முடிச்சிட்டாளே.. கல்யாணத்துக்கு எதுவும் வரன் பார்க்கிறீங்களா?” எனக் கேட்டுத்தான் இருப்பான். அதுவரை பூனைப் போல அமைதியாக இருக்கும் ரித்விகா… திடிரென்று புலியாக மாறிவிட்டாள். 

“இப்போ எதுக்கு நீங்க தேவையில்லாம என்னோட கல்யாணத்தைப் பத்தி பேசுறீங்க?” 

“நான் உங்களைக் கல்யாணம் செஞ்சு வைங்கன்னு கேட்டேனா? எதுக்குத் தேவையில்லாத விஷயத்துல தலையிடுறீங்க?” 

“இவருக்குத்தான் எல்லாமே தெரியும். இவர்தான் இந்த வீட்லயே பொறுப்பு. மத்தவங்களுக்கு எல்லாம் ஒன்னும் தெரியாதுன்னு நினைப்பு.” 

“இப்படியே எங்களை அடக்கி அடக்கி வச்சிட்டு நீங்களே நல்ல பேர் வாங்கிக்கோங்க.” 

“நீங்க மட்டும் தான் இந்த வீட்ல உழைக்கிறீங்க. மத்தவங்க எல்லாம் எதோ உட்கார்ந்து சாப்பிடுறது போல நினைப்பு உங்களுக்கு.” என நிறுத்தாமல் அவள் பொரிய…. 

இவன் எதுக்கு ரித்விகா கல்யாணத்தைப் பத்தி பேசணும்? நமக்கு அக்கறை இல்லையா?” என்ற எண்ணத்தில் ரித்விகாவின் பெற்றோரும் சரி, ரவீந்தரும் சரி, அவளை எதுவும் கண்டிக்கவில்லை. எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தனர். நல்லதுக்குச் சொல்லிவிட்டுச் சின்னப் பெண்ணிடம் வாங்கிக் கட்டிக் கொண்டான். 

ரங்கநாதன் எதோ சொல்ல வந்தார். அவரைத் தர்மா பேச விடவில்லை. அவள் எல்லாவற்றையும் சொல்லி முடிக்கட்டும் எனக் காத்திருந்தான். 

அன்று தர்மாவின் பொறுமை எல்லைக் கடந்து விட்டது. அவனை அந்த நிலைக்குத் தள்ளியது ரித்விகாவின் பேச்சு. அதையும் அதைக் கண்டிக்காத பெரியவர்களின் செயல், அவனை மிகவும் காயப்படுத்தியது.

“சொல்லு என் மேல இவ்வளவு குற்றசாட்டு வச்ச இல்லை…. அதுல ஒன்னையாவது உன்னால நிரூபிக்க முடியுமா?” எனக் கேட்டான்.

ரித்விகா பதில் சொல்லாமல் நிற்க, “இதை நீயா பேசலை.” என்றவன்,

Advertisements

“நீங்க எல்லாம் தனியா பிஸ்னஸ் ஆரம்பிக்கிறீங்கன்னு தெரிஞ்சும், நான் இன்னும் எல்லோருக்கும் சேர்ந்துதான் வேலைப் பார்த்திட்டு இருக்கேன்.”

“நான் நினைச்சிருந்தா அதை ஒரு பிரச்சனையாக்கி தடுத்திருக்கலாமே…. அப்படி எதாவது செஞ்சேனா நானு.”

“இப்ப சொல்றேன். இனி நான் உங்களோட இருக்கிறதா இல்லை. தாத்தா எனக்கு என் பங்கு குறைச்சுக் கொடுத்தாலும் பரவாயில்லை. நான் தனியா போறேன்.” என்றவன், “தயவு செய்து என்னை இனி பிடிச்சு வைக்க நினைக்காதீங்க.” எனச் சொல்லிவிட்டு,

“அம்மா, நான் போய்க் கீர்த்தியையும், அபியையும் அழைச்சிட்டு வரேன்.” என வெளியே சென்றுவிட்டான்.

எல்லோரும் சேர்ந்திருக்க வேண்டும் என எப்போதும் தர்மாதான் மெனக்கெடுவான். ஆனால் இன்று அவனே தனியாகப் போகிறேன் என்றது, எல்லோரையும் அதிர்ச்சியில் வாய்யடைக்கச் செய்திருந்தது.

தர்மா எப்போதும் விட்டுக் கொடுத்து போவதால் அவனை எளிதாக நினைத்தனர். ஆனால் இன்று அப்படியில்லை எனக் காட்டிவிட்டு சென்றுவிட்டான். 


“ரித்விகா, என்ன இருந்தாலும் நீ தர்மாவை அப்படிப் பேசி இருக்கக் கூடாது. உன்னைவிட அவன் எவ்வளவு பெரியவன்.” எனச் சுனிதா இப்போது வாய்திறக்க…. 

“அவ பேசும் போது சும்மா இருந்திட்டு இப்போ பேசுறியா நீ….” என நாயகி மருமகளை முறைத்தார். 

“இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குக் கல்யாணம்னு சொன்னாலே அலர்ஜி தான். அதுதான் எதோ பேசிட்டா…. நீங்க ஒன்னும் மனசுல வச்சுக்காதீங்க அக்கா. இதுக்கெல்லாம் கோவிக்கலாமா, நீங்க தர்மாகிட்ட சொல்லுங்க.” என்றார் சுபா ஜமுனாவிடம். 

“எனக்கு எதுவும் தெரியாது சுபா. இத்தனை நாள் எங்களையும் இந்த வீட்டையும் தர்மாதான் பார்த்துகிட்டான். அவன் சொல்றபடி தான்.” என்றுவிட்டார் ஜமுனா. 

“நான் இருக்கிறவரை கூட உங்களால சேர்ந்து இருக்க முடியலை இல்ல…. நான் கூட இருக்கிற பிஸ்னஸ் பார்க்கவே நேரம் இல்லை. புதுசு எதுக்குன்னு தான் கேட்டேன். ஆனா தர்மாதான் எதையோ செஞ்சு முன்னேறினா சரின்னு தான் சொன்னான்.” என ரங்கநாதன் குரல் தழுதழுக்க… 

“அப்பா, விஷாலும் இனியாவும் தான் பிசனஸ் பண்ணப்போறேன்னு சொன்னது. இவனுங்களும் சேர்ந்திருக்காங்கன்னு எங்களுக்கே இப்பத்தான் தெரியும். சின்னப் பொண்ணு எதோ பேசிட்டா… அதுக்குத் தர்மா கோவிச்சிகிட்டா…. நாங்க என்ன பண்றது?” என ரவீந்தர் கேட்க, 

“ஆமாம் இவனுங்க பிஸ்னஸ் பண்ணி கிழக்கப் போறாங்க. யார்கிட்ட பணம் இருக்கு.” என்றார் உமாபதி. 

“இவங்க பசங்க என்ன பண்றாங்கன்னு இவனுங்களுக்கே தெரியலை… இவனுங்க கூட இருந்து தர்மா காலத்துக்கும் கஷ்டப்படனுமா?” என்ற எண்ணம் ரங்கநாதனுக்கே வந்திருக்க…. 

“என் காலத்தில நான் இருக்கும் போதே… பிரிச்சு எழுதிடலாம். நானும் இல்லைனா தர்மாவுக்காக யார் பேசுவா…. நீங்க எல்லாம் சேர்ந்திட்டு அவனுக்கு சரியா கொடுக்காம விட்டுடுவீங்க. நான் இருக்கும் போதே அவனை இப்படிப் பேசுறீங்க. இன்னும் நான் இல்லைனா…” என்றார். 

“தாத்தா நாங்க ஒன்னும் நீங்க நினைக்கிற மாதிரி மோசமானவங்க இல்லை. எதோ நாங்க அவரை ஏமாத்திடுவோங்கிற மாதிரி பேசுறீங்க.” எனச் சூரியா சொன்னதற்கு, பதில் சொல்லாமல் ரங்கநாதன் நாயகியைப் பார்க்க.. அவர் கணவரை உள்ளே அழைத்துச் சென்றார்.
எல்லோரும் அவரவர் வீட்டிற்குக் கிளம்ப…. பெரியவர்கள் ஒரு குழுவாகப் பேசிக்கொண்டு செல்ல.. இளையவர்கள் பின்தங்கினர். 

“உன்னை யாரு அப்படி அவசரப்பட்டுப் பேச சொன்னது. உன்னால பாரு… இப்பவும் அவருக்குதான் சாதகமா ஆகிடுச்சு.” எனச் சூரியா ரித்விகாவை கடிந்துகொள்ள…. ஏற்கனவே அதிகம் பேசிவிட்டோம் என்ற குற்ற உணர்வில் இருந்தவள், இன்னும் சூரியா இப்படிச் சொன்னதும், அழவே ஆரம்பித்து விட்டாள். விஷால் அன்றும் வரவில்லை. அதனால் அவனுக்கு நடந்தது தெரியாது. 

வீட்டிற்கு வந்ததும் சுபா, “உன் வாயை வச்சிட்டு சும்மா இருக்க மாட்டியா?” என மகளைக் கடிந்துகொள்ள… விஷால் காரணம் கேட்டான். சுபா நடந்ததைச் சொல்ல… 

“தர்மா பிரிச்சி வாங்கிட்டு போனா நஷ்டம் அவனுக்கு இல்லை… நமக்குத்தான். அவன் பார்க்கிற வேலையை நீங்க ஒருத்தனும் பண்ணிக்க மாட்டீங்க. இந்தப் புதுப் பிஸ்னஸ் எல்லாம் தூக்கிபோட்டுட்டு…. ஒழுங்கா இருக்கிற வேலையைப் பாரு.” 

“நான் இன்னொன்னு சொல்றேன். தர்மாவை நம்பலாம். ஆனா என் சின்ன அண்ணனையோ அவங்க பசங்கலையோ நம்பாதீங்க சொல்லிட்டேன். அவனுங்க விஷம்.” என்ற உமாநாத் அறைக்குச் சென்று விட… விஷால் ரித்விகாவை ஒருமாதிரி பார்த்தான். 

அங்கே ரவீந்தர் குடும்பமோ, சொத்துப் பிரிக்கும்போது தாங்கள் என்னென்ன தங்கள் பங்குக்குக் கேட்கவேண்டும் எனத் திட்டம் போட்டுக்கொண்டிருந்தனர்.