சாரல் மழையே 

அத்தியாயம் 14

பைக் சத்தம் கேட்டு தர்மாவும் கீர்த்தியும் திரும்ப, அபியும் உள்ளே இருந்து ஆவலாக ஓடி வந்தாள். அவளது ஆவலை பொய்யாக்காமல் வந்தது விஷால்தான்.

“ஹாய் விஷால் பா….” என அபி பைக்கை நெருங்க…. விஷாலும் பைக்கை நிறுத்தி விட்டு இறங்க, அதற்குள் “வாங்க விஷால்.” எனக் கீர்த்தியும், “வா டா…” என்றபடி தர்மாவும் அவனை நெருங்கி இருந்தனர்.

விஷால் வண்டியின் முன்புறம் இருந்து பெரிய பொம்மை ஒன்றை எடுத்துக் கொடுத்து, “ஹாப்பிப் பர்த்டே பேபி.” என, அபி பொம்மையை வாங்கி ஆர்வமாகப் பார்த்தவள், பொம்மையைப் பிடித்தபடி தனது இரண்டு கைகளையும் விரித்துத் தூக்கு என்பது போலச் செய்ய…… விஷால் அவளைத் தூக்கிக் கொண்டான்.

அவன் கன்னத்தில் முத்தமிட்ட அபி, அவனுக்கு நன்றி சொல்ல… பெற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்ந்தனர்.

“உனக்கு இந்தப் பொம்மை பிடிச்சிருக்கா?”

“ம்ம்…. வாங்க உங்களுக்குக் கேக் தரேன்.” என அபி உள்ளே அழைக்க… மறுக்க முடியாமல் விஷாலும் உள்ளே சென்றான்.

வெறும் கேக்கோடு ஜமுனா விடுவாரா? விஷாலுக்கு உணவையும் பரிமாற… கீர்த்தியும் அபியும் உடன் இருக்க, தர்மா ஹாலிலேயே இருந்து கொண்டான்.

“உங்ககிட்ட காட்டணும்னு டிரெஸ்ஸை கூடக் கழட்ட விடலை…” என்ற கீர்த்தி, “நீங்க வரலைன்னு இவ மட்டும் இல்லை. இவ அப்பாவும் முகத்தைத் தூக்கிதான் வச்சிருந்தார்.” எனச் சொல்லவும் மறக்கவில்லை. விஷால் எதுவும் சொல்லவில்லை அமைதியாக உண்டான். கீர்த்தியும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

தன்னிடம் அவன் ஆரம்பிக்கும் கம்பனி பற்றித் தர்மா எதாவது கேட்பான் என எதிர்பார்த்தான். ஆனால் அவன் எதுவும் கேட்கவில்லை. விஷாலும் விடைபெற்றுக் கொண்டான்.

தர்மா தனது அலுவலகத்தை வீட்டின் அருகிலேயே மாற்றிக் கொண்டான். முன்பே யோசித்ததுதான். கீர்த்திக்கு இரட்டை குழந்தைகள் எனத் தெரிய வந்ததும், அதற்கான வேலையைத் துவங்கிவிட்டான்.

முன்பு இருந்தது வாடகை கட்டிடம். ஆனால் இப்போது இவர்களின் சொந்த இடத்திலேயே தரை தளத்தில் பார்கிங் மற்றும் வேலை ஆட்களின் ஓய்வு அறைகள் இருக்க… முதல் தளம் முழுவதும் அலுவலகக் கட்டிடம்.

அவன் தாத்தா, மற்றும் சித்தப்பாக்களிடம் சொல்லிவிட்டுத் தான் செய்தான். அவர்களுக்கு என்ன வேலை நடக்க வேண்டும் அவ்வளவுதான். அதனால் ஒன்றும் சொல்லவில்லை.

மூன்று மாதத்தில் வேலைகள் முடித்து, அங்கே அலுவலகத்தை மாற்றியும் விட்டனர். வீட்டின் அருகேயே அலுவலகம் என்பதால்.. தர்மாவுக்கு அலுவலகத்தில் சமையலுக்கு ஆள் வேண்டியது இல்லை .அதனால் ஜமுனாவுக்கு வேலை பளுவை குறைக்க, கணேசனை வீட்டு சமையலுக்கு என நியமித்து விட்டான்.

கீர்த்திக்கு சூப், பழச்சாறு என ஜமுனாவுக்கும் அதிக வேலைகள் இருந்தது. அத்தைக்குதான் ரொம்ப வேலை என எப்போதும் கீர்த்திச் சொல்லுவாள், இப்போது அவளாலும் நிம்மதியாக இருக்க முடிந்தது. 


பிரயாண நேரம் மிச்சம் என்தால்… தர்மாவுக்குக் கீர்த்தியோடு அதிக நேரம் கிடைத்தது. மதிய உணவிற்கும் அவன் வீட்டிற்கு வருவதால்… இருவரும் சேர்ந்தே உண்பார்கள். இரவும் நேரத்தோடு வீடு திரும்பினான்.

ரோட்டரி கிளப் விழா ஒன்றில் கலந்துகொள்ளத் தர்மா சென்றிருந்தான். அங்கே அவனுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்கள் நிறையபேர் இருக்க… அவனது மாமனார் சோமசேகரும் இருந்தார். அவரை அவனுக்கு அறிமுகம் வேறு செய்தனர்.

நேருக்கு நேர் பார்த்துவிட்டுப் பேசாமல் செல்வதும் மரியாதையாக இருக்காது. அதே நேரம் அவருடைய விருப்பமும் இருக்கிறது. அதனால் “ஹலோ சார், உங்களைப் பார்த்தது சந்தோஷம்.” என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

அவனுடைய அணுகுமுறை சோமசேகருக்குப் பிடித்திருக்க வேண்டும், அவர் நினைத்திருந்தால்…எதாவது காரணம் சொல்லி கிளம்பி இருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.

அன்று தர்மா பேசியது சுய ஒழுக்கத்தைப் பற்றி. அவனது பேச்சு திறன் அறிந்த ஒன்றுதான். அன்றும் அதை மெய்ப்பிக்கும் வகையில் இருந்தது அவனது பேச்சு. 


“சிஸ்டம் சரியில்லை சொல்றோம். அரசாங்கத்தைக் குறை சொல்றோம். முதல்ல நாம ஒழுங்கா இருக்கோமா? எப்பவுமே எல்லாத்தையும் சட்டம் போட்டு சரி செய்ய முடியாது. முதல்ல நாம நினைக்கணும். ஒரே நாள்ல சமுதாயம் மாறிடாது. முதல்ல ஒவ்வொரு தனி மனிதனும் மாற வேண்டும்.” 

“சின்னச் சின்ன விஷயத்துல இருந்து ஆரம்பிக்கலாம். நம்ம வீட்டை எப்படிச் சுத்தமா வச்சிக்கிறோம். அதே போல வெளியிடங்களுக்குப் போகும் போதும், அலட்சியமா இருக்காம… எங்க குப்பை போடணுமோ அங்கதான் போடணும். வரிசையில நிற்க வேண்டியது வருதா… பொறுமையா நிற்கணும். சிக்னல்ல நிற்கும் போது கூடப் பொறுமை இல்லாம ஹாரன் அடிக்கிறாங்க. அதனால எதாவது பலன் இருக்கா… இல்லை. நம்ம மன அமைதி கெடுவதோட மத்தவங்களுக்கும் எரிச்சல் ஏற்படுத்துறோம். அதோட சட்டத்தை எப்பவும் மதிக்கணும். அப்படி மதிக்காதவங்களை உடனே தட்டி கேட்கணும். எனக்கு என்னன்னு போகக் கூடாது.” 

“நாம சரியா இருக்கும்போது, நம்மைச் சுற்றி இருக்கவங்களும் சரியா இருப்பாங்க. நம்மைப் பார்த்துதான் நமக்கு அடுத்தச் சந்ததி வளரும். பசங்க எப்பவும் கையில செல் வச்சு விளையாடுறாங்க சொல்றோம். ஆனா அவங்க அதை எடுக்காம இருக்க… நாம என்ன பண்றோம்.” 

“நாம எந்நேரமும் கையில போன் வச்சிட்டுப் பசங்களை எடுக்காத சொன்னா கேட்பாங்களா… அவங்க செல்லை கேட்க கூடாதுன்னு, இப்ப சின்னப் பசங்களுக்கே தனியா செல் வாங்கிக் கொடுத்திடுறாங்க.” 

“நாம் அவங்களை ஆக்டிவா வச்சிகிட்டா அவங்க எதுக்குச் செல்லை எடுக்கப் போறாங்க. பசங்களை வெளிய விளையாட விடுங்க. அவங்களுக்கும் சின்னச் சின்ன வேலைகள் கொடுங்க.” 

“நீங்களும் உங்க குழந்தையோட விளையாடுங்க. குழந்தைங்க ஒரே இடத்தில உட்கார்ந்து இருக்கனும்னு எதிர்பார்க்காதீங்க. என் பொண்ணுக்கு இப்பத்தான் நாலு வயசு முடிஞ்சிருக்கு… ஆனா நானும் அவங்க அம்மாவும் வேலை செய்யும்போது, அவளும் செய்வா.” எனத் தர்மா மகளைப் பற்றிச் சொன்னதும், சோமசேகருக்கு பேத்தி அல்லவா, அவர் மனம் நெகிழவே செய்தது. 

தர்மா பேச்சை முடித்து, உணவுக்கு இருக்காமல் கிளம்பி இருக்க… சோமசேகர் அவர் நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்தினார். 

“இன்னைக்குத் தர்மா பேசினது உண்மையிலேயே ரொம்ப நல்லா இருந்தது. பிஸ்னஸ் பண்றோம் சம்பாதிக்கிறோம்னு மட்டும் இல்லாம… ஹி ட்ரை டு ஸ்ப்ரெட் பாசிடிவிட்டி. வேற யாரும் இதைச் சொல்லியிருந்தா இந்த அளவு கவனிச்சிருப்போமா தெரியாது. அவர்கிட்ட எதோ இருக்கு.” என்றபோது, சோமசேகரால் எதுவும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. 

இதுவரை அவரும் தர்மாவும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு வரவில்லை. தர்மாவைப் பற்றி அவரிடமே பேசும் போது, அவனைத் தெரியாதது போலக் கடந்து செல்ல முடியவில்லை. அதோடு இனி வெளியே சொல்லலாம் எனவும் நினைத்திருக்கலாம். 

“தர்மா என்னோட மருமகன்.” என அவர் சொல்லியே விட…. 

“என்னது உங்க மருமகனா?” என உடனிருந்தவர்கள் ஆச்சர்யப்பட… 

“ஆமாம் என் பொண்ணும் அவரும் லவ் பண்ணாங்க. நாங்க ஒத்துக்கலை… அவங்களே கல்யாணம் பண்ணிகிட்டாங்க.” என்றார். 

“எத்தனையோ முறை தர்மாவை சந்திச்சிருக்கேன். உங்களைப் பத்தி கூடப் பேசியிருக்கேன். ஆனா அவர் உங்க மருமகன்னு சொன்னதே இல்லை. எவ்வளவு பெரிய ஆள் நீங்க. உங்க மருமகன்னு சொல்லிக்கிறது அவருக்கு லாபமும், பெருமையும் தானே…. ஆனாலும் சொல்லலைப் பார்த்தீங்களா… உங்க பொண்ணு நல்ல கணவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்காங்க. பி ஹாப்பி மேன்” என்றார் அவரின் நண்பர். 

தர்மா அன்று அவர்கள் கோடவுன்களில் ஸ்டாக் எடுக்கும் பணிகள் நடந்ததால்…. நேரடியாக அங்குச் சென்றுவிட்டான். அவன் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த போது, அவனுக்குத் தொடந்து அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தது. 

“என்னப்பா சோமசேகர் மருமகன் நீ. எங்ககிட்ட சொல்லவே இல்லை. இன்னைக்கு அவரே சொல்லித்தான் தெரியும்.” என எல்லோரும் ஒரே மாதிரி அழைத்துக் கேட்க, அதற்கு என்ன பதில் சொல்வதென்றே தர்மாவுக்குத் தெரியவில்லை. 

அவர்கள் அவன் காதல் கதையைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்ட… “இப்ப ஒரு வேலையா வெளிய இருக்கேன். பிறகு பேசுறேன்.” என எல்லோருக்கும் ஒரே மாதிரியே பதில் கொடுத்தான்.
இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என அவனுக்குப் புரியவில்லை. கீர்த்தியிடம் எதையும் மறைக்கும் பழக்கமில்லை. அதனால் வீட்டிற்குச் சென்றபிறகு, அவர்கள் அறைக்கு வந்ததும் அவளிடம் சொல்லவும் செய்தான்.