அன்னப்பூரணி சென்றதும் நிம்மதியாய் உணர்ந்த அஞ்சனா வீட்டிற்குள் செல்லப் போக அங்கு அவளையே உறுத்துக் கொண்டு நின்றிருந்தார் அவளின் அம்மா.
அவர் அவளை பார்த்த பார்வையில் உள்ளுக்குள் குளிர் பிறந்தது அவளுக்கு. “உள்ள வா” என்றா அவர்.
அவளுக்கு இரண்டாவதாய் குழந்தை பிறந்திருந்ததால் குழந்தையை பார்த்துக்கொள்ள அவர் அங்கு வந்திருந்தார். மகள் உள்ளே வரவும் “குழந்தை அழுதிட்டு இருக்கான் பாரு, சீக்கிரம் பசியாத்திட்டு வா உன்கிட்ட பேசணும்” என்றார் அவர்.
பொம்மை போல அப்படியே உள்ளே சென்றவள் அவர் சொன்னதை செய்தாள். குழந்தை பசியாறி உறங்கிய பின்பும் அவள் அறையைவிட்டு வெளியே வரவில்லை, குற்றவுணர்வு அவளை கொன்றது.
செய்த தவறு முகத்தில் அறைந்தது அந்நொடி, உள்ளுக்குள் பதறியது. அன்னப்பூரணி, ஆருத்ரனை சமாளித்தவளால் தன் வீட்டினரை சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை.
வெகு நேரமாய் மகள் வராததால் உள்ளே வந்த அவளின் அன்னை குழந்தை தூக்கி கட்டிலில் படுக்க வைத்து இரு பக்கமும் அணைவாய் தலையணை வைத்து மகளை ஒரு பார்வை பார்த்தார்.
அந்த பார்வைக்கு கட்டுப்பட்டவளாய் எழுந்து அவரின் பின்னே சென்றாள். ஹாலில் ஒரு இருக்கையில் அவள் அமரவும் கதவை சென்று சாற்றிவிட்டு வந்தவர் அவள் எதிரில் அமர்ந்தார்.
“எதுக்கு இப்படி பண்ணே??” என்றார் எடுத்த எடுப்பிலே.
“நான் எதுவும் செய்யலைம்மா” என்று மகள் தடுமாறி சொல்லவும் அப்படியொரு ஆத்திரம் அவருக்கு. சில நாட்களாகவே மனதை குடைந்துக் கொண்டிருந்த விஷயம் தான்.
ஆருத்ரன் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்ற செய்தி கேட்டதில் இருந்தே உறுத்தல் தான் அவருக்கு. அவள் ஓடிப்போய்விட்டாள் என்று கேள்விப்பட்ட போது ஏதோ விவகாரம் என்று நினைத்து அப்படியே இருந்துவிட்டார்.
இதோ அன்னப்பூரணி வந்து பேசவுமே விஷயம் விளங்கிவிட்டது அவருக்கு. மகள் எதுவும் செய்யலை என்று சொல்லவும் கோபத்தில் அவளை மாறி மாறி நன்றாக அடுத்துவிட்டார் அவர்.
அவள் ஓவென்று அழவும் அவள் முதல் பிள்ளை வேகமாக ஓடிவந்து பயத்தில் அவனின் அம்மாவை கட்டிக்கொள்ளவும் தான் விட்டார் அவர்.
“தங்கம் அம்மா நீங்க தப்பு பண்ணா அடிப்பாங்கல. அது மாதிரி பாட்டியும் அம்மாவை அடிச்சிட்டேன்”
“இவ்வளோ பெரிசா” என்று கையை விரித்தும் சுருக்கியும் காட்டியது குழந்தை.
“நீ உள்ளப் போ தங்கம் பாட்டி அம்மாவுக்கு புரிய வைக்குறேன். உள்ளே உன்னோட விளையாட்டு சாமான்லாம் இருக்குல நீ போய் குட்டி தம்பியை பார்த்திட்டே விளையாடு” என்று அனுப்பிவைத்தார்.
அஞ்சனா இன்னமும் அழுதுக்கொண்டிருந்தாள். “நீ எதுக்குடி அழறே. உன்னைய பெத்ததுக்கு நான் தான் அழணும். எவ்வளவு பெரிய தப்பை அசால்ட்டா பண்ணிட்டு அடுத்த வாழ்க்கையை நீ வாழ்ந்திட்டு இருக்கே. உனக்கு எங்கயும் உறுத்தலையா??”
“அம்மா… அம்மா…” என்றாள் விம்மலுடன்.
“நான் வேணும்ன்னு செய்யலைம்மா”
“அய்யோ சின்ன வயசுல அடுத்த பிள்ளை மேல பழியை போட்டு நீ நல்ல பேரு வாங்கிட்டு நிப்ப, அதே மாதிரியே இப்பவும் செஞ்சு வைச்சிருக்கியே. உன்னை என்ன சொல்ல, அன்னப்பூரணியம்மா சொன்னதுல தப்பே இல்லை.உன்னை நான் கொன்னு தான் போடணும்” என்று அவர் சொல்லி அவரும் அழுதார்.
“உனக்கு அந்த கல்யாணம் பிடிக்கலைன்னா நீ சொல்லியிருக்கணும். அதைவிட்டு என்ன காரியம் பண்ணி வைச்சிருக்கே. தீராத பாவம்டி அதெல்லாம், அந்த பையனுக்கு வேற கல்யாணம் ஆகாம இருந்திருந்தா அந்த பாவம் நம்மை ஏழேழு ஜென்மத்துக்கும் தொடர்ந்து வந்திருக்குமே”
“அம்மா அப்படில்லாம் சொல்லாதம்மா…”
“சொல்லுவேன்டி அப்படித்தான் சொல்வேன். அவங்க உன்னை மன்னிச்சு விட்டு போன மாதிரி நானும் விட்டா நாளைக்கு எல்லாரும் என்னைத்தான் காரித்துப்புவாங்க. நீயும் ரெண்டு புள்ளைய வைச்சிருக்கே”
“நாளைக்கு அந்த புள்ளைங்களுக்கு உன்னை போல ஒரு பொண்டாட்டி அமைஞ்சு அந்த பிள்ளை பழி சுமந்தா அன்னப்பூரணியம்மா நிலைமை தான் உனக்கும்” என்று அவர் சொல்ல சொல்ல கதறி அழுதாள் அவள்.
“இப்போ அழுது என்ன செய்ய” என்றார் அதற்கும்.
“நான் கல்யாணம் வேணாம்ன்னு அப்போவே சொன்னேன்”
“எப்படி சொன்னே?? வேணாம்ன்னு சொன்னே, உனக்கு அது நல்லதுன்னு நாங்க சொல்லவும் சரின்னு சொல்லிட்டே. உனக்கு வேணாம்ன்னு நீ உறுதியா நின்னிருந்தா நாங்க என்ன மறுத்திருக்கவா போறோம்”
“அந்த புள்ளை மேல அவ்வளவு பெரிய பழி சொல்லிட்டு நீ வந்து நின்னப்போ உன்னைத்தானே ஆதரிச்சோம். அம்மாவுக்கு நீ நல்லா இருக்கணும்ன்னு பேராசை தான், வசதியா வாழணும்ன்னு நினைச்சேன் தான். மத்த எல்லாரையும் விட பண ஆசை எனக்கு அதிகம் தான்”
“என் ஆசை யாரையும் கஷ்டப்படுத்தினது இல்லை. இப்போ அது ஒரு குடும்பத்தையே பாதிச்சிருக்கு. நான் என்ன செய்யப் போறேன்” என்று புலம்பினார் அவர்.
ஏதோ ஞாபகம் வந்தவராய் “அந்த நகை எங்கே??” என்றார் அவர்.
“எதும்மா??”
“அவங்க உனக்கு போட்ட அந்த நகை… போ போய் அதை எடுத்திட்டு வா, அவங்ககிட்ட அதை கொடுத்திட்டு கால்ல விழுந்து நான் மன்னிப்பு கேட்டு வர்றேன். உன்னை பெத்ததுக்கு நான் இதைத்தான் செய்யணும்”
“இனிமே நீ நம்ம வீட்டு பக்கம் வந்திடாதே. நானும் இங்க வர மாட்டேன். உன் வாழ்க்கையை நீயே பார்த்துக்கோ. இப்போ அமைஞ்ச வாழ்க்கையாச்சும் ஒழுங்கா வாழப்பாரு. மாப்பிள்ளை நல்லவரா இருக்கார்” என்றுவிட்டு கிளம்பிச் சென்றுவிட்டார்.
அடுத்து அவர் வந்து நின்றது அன்னப்பூரணியின் வீட்டில் தான். அன்னப்பூரணி வெளியே சென்றிருந்ததால் வீடு பூட்டியிருக்க அவர் அங்கேயே வாசலில் அமர்ந்துக் கொண்டார். அவரை பார்த்துவிட்டு தான் கிளம்புவது என்று.
சிறிது நேரத்திலேயே அன்னப்பூரணி வீட்டிற்கு வர வாசலில் அமர்ந்திருந்தவரை பார்த்து முகம் சுருக்கினார் அவர். ஆனாலும் ஒரு வார்த்தை பேசிடவில்லை. அவரைக் கண்டதும் எழுந்து வந்தார் அஞ்சனாவின் தாய்.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார் அவர்.
அன்னப்பூரணி தலையசைத்துவிட்டு “உள்ளே போய் பேசலாம்” என்றவர் கதவை திறந்து உள்ளே சென்றார்.
அஞ்சனாவின் தாய் வெளியேவே நின்றிருந்தார். “உள்ள வாங்க”
“எனக்கு அந்த தகுதி இல்லை” என்று அவர் சொல்லவும் ஏதோ புரிந்தது போல இருந்தது அன்னப்பூரணிக்கு.
“பரவாயில்லை உள்ள வாங்க” என்று அழுத்திச் சொல்லவும் உள்ளே வந்தார்.
கையோடு கொண்டு வந்திருந்த நகையை அவரின் கையில் கொடுக்க அன்னப்பூரணி அதை வாங்காது அப்படியே நின்றார். அஞ்சனாவின் தாய் அங்கிருந்த டேபிளில் அதை வைத்துவிட்டு சாஷ்டாங்கமாய் அன்னப்பூரணியின் காலில் விழுந்துவிட்டார்.
“எங்களை மன்னிச்சிடுங்க, பெரிய தப்பு பண்ணிட்டோம். என் பொண்ணை நீங்க மன்னிச்சுங்க, அவளை நீங்க எக்காரணம் கொண்டும் சபிக்கக்கூடாது. உங்களோட சாபம் அவளை என்னவும் செய்யும். ஏன்னா அவ செஞ்ச பாவம் அப்படி” என்றார் அவர் இன்னமும் எழாமல்.
“அம்மா எழுந்திரும்மா என்ன காரியம் பண்றே நீ… எழுந்திரு”
“எங்களை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க”
“நாங்க யாரு உங்களை மன்னிக்க”
“தம்பி இருந்தா வரச்சொல்லுங்க அவர் கால்ல விழுந்து நான் மன்னிப்பு கேட்கணும்” என்றார் அவர்.
“நீங்க எழுந்திருங்க முதல்ல” என்று அன்னப்பூரணி சொல்லவும் எழுந்து அமர்ந்தார் அவர்.
“உங்க பொண்ணை இனி புத்தியோட பொழைக்க சொல்லுங்க அவ்வளவு தான். இந்த நகையை எடுத்திட்டு போங்க”
“உங்க பெரிய மனுஷத்தனம் எங்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராதும்மா. வேணாம் இதை எடுத்திட்டு போனா அது நாங்க செஞ்ச பாவத்தை இன்னும் ஞாபகப்படுத்தும்”
“போன உங்க குடும்ப மானத்தை திருப்பி கொடுக்க முடியுமான்னு எனக்கு தெரியலை. இந்த நகையையாச்சும் திருப்பிக் கொடுத்து சந்தோசப்பட்டுக்கறேன்”
அன்னப்பூரணிக்கு ஒன்றும் பேசத் தோன்றவில்லை. கோபம் தான் அவருக்கு ஆனாலும் இப்படி வந்து மன்னிப்பு கேட்பவரிடம் என்ன சொல்ல. மன்னிப்பு கேட்டால் எதுவும் திரும்பி வந்துவிடப் போவதில்லையே.
அதைவிட மன்னிப்பு கொடுத்தால் அவர்களுக்கு உறுத்தலாவது குறையும் என்று தோன்றியது அவருக்கு. “ஒண்ணும் வருத்தப்படாம போங்க. உங்க பொண்ணு விஷயத்துல நாங்க எப்பவும் தலையிட மாட்டோம்”
“ஆனா அவ எங்க விஷயத்துல இனி தலையிட்டா நடக்குறதுக்கு நாங்க பொறுப்பில்லை” என்று சொல்லியே அவரை அனுப்பி வைத்தார்.
இளமாறனை அன்று வெளியே போகச் சொன்ன ஆருத்ரனுக்கு சட்டென்று ஒரு யோசனை எழ லோகுவை அனுப்பி அவனை அழைத்து வரச் சொன்னான்.
“சொல்லுங்க” என்று வந்து நின்றான் அவனும்.
“ஒரு உதவி பண்ண முடியுமா??”
“உதவியா?? நானா?? உங்களுக்கா??”
“நீ தான் செய்ய முடியும்”
“இல்லை வந்து”
“உன்னை ஒண்ணும் ஆசினி எங்க இருக்கான்னு நான் கேட்க கூப்பிடலை. ஏன்னா அது உனக்குமே தெரியாதுன்னு எனக்கு தெரியும். உன்னை அர்ஜுன் எதுக்கு இங்க அனுப்பி இருக்கான் என்னை நோட்டம் பார்க்கத் தானே” என்று அவன் சொல்லவும் ஆமென்று தலையாட்டினான் மற்றவன்.
“அப்போ நீ அந்த வேலையை மட்டும் பார்த்தா போதும்” என்றான் ருத்ரன்.
“எனக்கு நீங்க சொல்றது புரியலை”
“இப்போ நீ வெளிய போனதும் உனக்கு எப்படியும் அவன் இன்னைக்குள்ள போன் பண்ணுவான் சரியா”
“ஹ்ம்ம்…” என்று ஒத்துக்கொண்டான் அவன்.
“அவன்கிட்ட நீ என்ன சொல்லியிருப்ப அப்போ”
“உங்ககிட்ட மாட்டிக்கிட்டேன்னு சொல்லியிருப்பேன். நீங்க கண்டுப்பிடிச்சிட்டீங்க, என்னை போக சொல்லிட்டீங்கன்னு சொல்லி இருப்பேன்”
“வேணாம் நீ அதை சொல்ல வேணாம். அர்ஜுன் இதை செஞ்சிருக்க மாட்டான்னு நான் சொன்னதா நீ அவன்கிட்ட சொல்லு. மத்தபடி நான் உன்னை வெளிய போக சொன்னதை நீ அப்படியே சொல்லலாம்”
“அப்படி சொன்னா??”
“நீ அதை மட்டும் சொல்லு”
“எங்க பாஸ் என்னை??”
“எப்போ கேட்டாலும் அதே சொல்லு. உன்னை வேலையை விட்டு அனுப்பிட்டா என்கிட்ட வா”
“சார்” என்றான் அவன் ஆச்சரியமாய்.
“நீ நல்ல வேலைக்காரன் தான். அதை நான் ஒத்துக்கறேன், உன் பாஸுக்காக தான் இதை செய்ய வந்திருக்கன்னு எனக்கு புரியுது. தப்புன்னாலும் இதை செய்ய வந்திருக்கேன்னா உன் குடும்ப நிலை என்னவோன்னு தான் என்னை யோசிக்க வைக்குது. நானும் கஷ்டப்பட்ட குடும்பத்துல இருந்து வந்தவன் தான்” என்று ஆருத்ரன் சொல்ல கண்ணீரே வந்துவிட்டது மற்றவனுக்கு.
“இதுவரைக்கும் என் பாஸ் இந்த மாதிரியெல்லாம் என்னை செய்ய சொன்னதே இல்லை. நல்லா தான் பார்த்துக்கிட்டார், இதான் முதல் முறை எனக்கும் பிடிக்கலை தான். ஆனாலும் என் பேமிலி சிட்டுவேஷன் என்னை இதெல்லாம் செய்ய வைச்சிடுச்சு. மன்னிச்சிடுங்க சார்” என்றான் மனமார.
“நீ நான் கேட்டதை மட்டும் செய் மாறா. அப்புறம் உன்னோட போன் நம்பர் எனக்கு வேணும்” என்று சொல்ல தயங்காமல் அதை மற்றவனுக்கு கொடுத்தான் அவன். ஆருத்ரன் என்ன செய்யப் போகிறான் என்று தெரியாவிட்டாலும் நல்லது நடந்தால் சரி என்று தான் அவனுக்கு அப்போது தோன்றியது.
நூலை பிடித்தவன் போல் இதோ அருளாசினி இருக்குமிடமும் வந்து சேர்ந்துவிட்டான் ஆருத்ரன். இளமாறனின் எண்ணுக்கு போன் செய்த அனைத்து எண்களும் எங்கிருந்து பேசப்படுகிறது என்பது வரை கண்காணித்து இளமாறனிடமும் அர்ஜுன் பேசிய தகவலை உறுதி செய்து அவன் இருக்குமிடம் வந்து சேர்ந்தான்.
தன் உயிரை நேரில் பார்த்த பிறகே அவனால் நிம்மதியாய் மூச்சுவிட முடிந்தது.