பகுதி – 22
பார்த்திபனுக்கு அந்தச் சாப்பாடைவிட, தன்னைத் தேடி தனக்காக ஒருத்தி நாடி உணவை தயாரித்து வைத்திருக்கிறாள் என்பதே அத்தனை ஆனந்தத்தைக் கொடுக்க, வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்தான்…
பூவம்மாள் பாட்டியின் வீட்டிற்குள் நுழையும் போதே, நெய் மனம் கமகமவெனக் கமழ்ந்து அவன் நாசியை நிறைக்க, பனிமலரின் மலர்ந்த முகம் அவனுடைய மனதை முதல் முறையாக நிறைத்தது.
இதுநாள்வரை பனிமலரின் கண்களைப் பார்த்து பேசியவன் தான். ஆனால், இன்று அவளுடைய கண்கள் அவனிடம் பேசியதோ ? முதல் தடுமாற்றம்!
நட்பு இன்று தடுமாற்றமாகத் தடம்பிறழும் கணம் பிறந்தது அங்கு!
“என்ன நண்பா? நடந்து வந்தியா ? பறந்தா ?” எனப் பார்த்திபன் வந்த வேகத்தை ஜாடையாகக் குறித்துக் கேட்க,
“ஓடி அண்ணே!” எனப் பார்த்திபனுக்குப் பின்னோடு வந்து நின்றான் நண்டு.
“டேய்! நீ எங்கடா இங்க ?” எனப் பூதம் கேட்க,
“அண்ணீ! நெய் சொட்ட சொட்ட பலகாரம் பண்ணிருக்காங்க. வாசம் கும்முனு வரும்போது நான் எப்படிக் கம்முனு இருக்குறது ? அதான் வந்துட்டேன்” என நண்டு முதல் ஆளாக, பூவம்மாள் பாட்டியின் அருகே சென்று அமர,
“அடே மூஞ்சிறு மூக்கா… உன்னோட மூக்கு மூணுகிலோமீட்டர்க்கு அங்குட்டு சாப்பாட்ட வச்சால் கூடக் கண்டுபிடிச்சிடும் போலவே” எனக் கிண்டல் செய்துகொண்டே அவனும் நண்டை தொடர்ந்து அமர,
பனிமலர் மட்டும் சட்டென்று உள்சென்று பார்த்திபனுக்கு நீர் கொண்டு வந்து கொடுத்தாள். மற்றவர்களின் பேச்சுகளோ இரகளையோ அவள் காதில் விழவில்லை. பார்த்திபனின் முகத்தை மட்டுமே ஆராய்ந்தாள்! அதற்குக் காரணம், அவனுடைய சோர்வு தாங்கிய முகத்தை, பசி ஏறிய கண்களைக் கவனிக்கும் எண்ணம் என்று தனக்குத் தானே ஒரு காரணத்தைக் கற்பித்துக்கொண்டாள்.
பார்த்திபனும் பனிமலரை மட்டுமே பார்த்திருந்தான்… முதல் முறையாக அவனிடம் மொழி பேசும் விழிகளைப் படிக்க முயன்றுகொண்டிருந்தான்…
அவனுடைய மனமோ, ‘என்ன சொல்லுது ? இவளோட கண்ணு… எனக்காகக் காத்திருக்கா ? ஆனால் ஏன் ?’ என்று எண்ணமிட்டது!
“உட்காருங்க…” எனப் பனிமலர் தான் முதலில் சம்பாஷணையைத் தொடங்கினாள். அன்று அனைத்துமே பார்த்திபனுக்கு விசித்திரமாகி போனது…
பனிமலரின் உதடுகள் உச்சரித்த, ‘உட்காருங்க’ என்ற சொல், பார்த்திபனுக்கு ஏதோ மந்திர சொல் போல் ஒலித்தது. மந்திர உச்சாடனைக்குக் கட்டுப்படுபவனைப் போல், அவளின் சொல்லை அவன் செயலாக்கினான்…
காதலே மந்திரம் தானே ? வாழவும் செய்யும் வீழவும் செய்யும்! இந்தக் காதல் பார்த்திபனை வாழ செய்யுமோ ? அது ஒரு பெருவாழ்வாகுமோ ?
அந்த நொடியில் இந்த உணர்வை காதல் என்று அவன் உணரவில்லை; சூழலும் காலமும் உணர்த்தவுமில்லை!
இவர்கள் ஒருபுறமிருக்க, பூதமும் நண்டும், “அப்படி என்னதான்டா தங்கச்சி சமைச்சிருக்கு ? நல்ல வாசமா இருக்குல்ல ?” எனக் கிசுகிசுக்க, அவள் ஒரு நீண்ட அகலமான தட்டில் நேர்த்தியாக அடுக்கி கொண்டுவந்து வைத்தாள்!
“டன் டனா டன்” என நண்டு பின்னணி இசைகொடுக்க, மூடியிருந்த இலையை விலக்கி காண்பிக்க, அனைவரும் அவள் செய்திருந்த பலகாரத்தை அதிசயமாய்ப் பார்த்திருந்தனர்.
பார்த்த பிறகும் அது என்னவென்று அவர்களுக்குத் தெரியவே இல்லை!
“என்ன தங்கச்சி இது?” எனப் பூதம் அடுக்கடுக்காய் வைத்திருந்த பலகாரத்தைப் பார்த்தபடி கேட்டான்.
ஆம்! முக்கோண வடிவத்தில் பொன்னிறமாகப் பிரட் துண்டுகள் வெட்டப்பட்டுப் பொறிக்கப்பட்டு அழகாக அடுக்கப்பட்டிருந்தது. அதன் மீது வற்ற காட்சிய பாலுடன் ஏலக்காய், பாதம் முந்திரி பிஸ்தா ஆகியவற்றை நெய்யில் வதக்கி பதமாகத் தூவியிருந்தாள்.
மூடிவைத்திருந்த மூடியை அகற்றியதும் இதமான நெய்மணம் அனைவருடைய நாசியை வருடினாலும், அந்தப் பலகாரத்தின் பெயர் மட்டும் அங்கிருந்தவர்களுக்குத் தெரியவில்லை.
“அண்ணா இதோட பேர்” என மலர் தொடங்க, இடையே புகுந்த நண்டு,
“அண்ணே நான் சொல்லுறேன் நான் சொல்லுறேன்…இந்த பலகாரம் பெயர் பால் பக்கோடா” என நாவில் உமிழ் நீர் ஊற தட்டை நீட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“என்னது பால் பக்கோடாவா?” என அனைவரும் ஒரு சேர கேட்க, நண்டு குறிப்பிட்ட பெயரில் பனிமலரே விழித்துக்கொண்டிருந்தாள்.
“என்ன அப்படிப் பாக்குறீங்க? நான் ஜன்னலு வழியா எட்டி பார்த்தேனே. முக்கோண முக்கோணமா அண்ணீ ரொட்டியை வெட்டி வெட்டி பொரிச்சு பொரிச்சு எடுத்துச்சு. பக்கோடா மாதிரி பொரிச்சு எடுத்துச்சு ?
அப்புறம் நல்லா ஒரு சட்டி பாலை, அரசட்டியா சுண்ட சுண்ட கொதிக்க வச்சு அந்தப் பக்கோடா மேல பாலை ஊத்துச்சே… நான் பார்த்தேனே … அதான் பால் பக்கோடா இது பேரு” எனச் சொல்லிக்கொண்டு காலரை பெருமையாகத் தூக்கிவிட்டுக்கொண்டான்.
“ஐயோ…இது பால் பக்கோடா இல்ல; சாஹி துக்கடா” என அந்த இனிப்பு பலகாரத்தின் மெய்யான பெயரை கூற, பூவம்மாள் பாட்டியோ, “நீ சொல்லுற பேருக்கு பால்பக்கோடாவே நல்லா இருக்கு…” எனக் கூற,
நண்டோ, “ஏன் மா ? பேரு தான் வாய்க்குள்ள நுழையல. இந்தப் பலகாரமாச்சும் வாய்க்குள்ள போகுமா ? இல்ல இப்படியே கொடுக்காம பேசி பேசி பாழாப்போகுமா ?” எனக் கேட்க,
மலர் அவசர அவசரமாக எடுத்து பரிமாறத் தொடங்கினாள்!
இந்தக் கேலியும் கிண்டலும் மற்றவர்களிடம் தான்…பார்த்திபனுக்கு அந்த இனிப்பை செய்தவள் மீது மட்டுமே கவனம் இருந்தது…. பனிமலர் ஆசை ஆசையாக அதைப் பார்த்திபனுக்கே முதலில் பரிமாறினாள்.
முழுக்க முழுக்கப் பால். பால் சொட்ட சொட்ட திகட்டும் இனிப்பை கலந்து செய்திருந்தாள்…பார்த்திபனுக்குப் பால் பிடிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக இதைச் செய்திருந்தாள். அவள் அந்த உணவில் சேர்ந்திருந்த இனிப்பு, பார்த்திபனின் வாழ்க்கையிலிருக்கும் கசப்பான நிகழ்வுகளைத் துடைத்துவிடுமோ என்ற ஏக்கத்தில் சேர்த்திருந்தாள்!
பார்த்திபனை அடுத்து அனைவர்க்கும் அவள் பரிமாற, அதன் சுவையில் அனைவரும் கட்டுண்டனர். மற்றவர்கள் சாஹி துக்கடாவில் திளைத்திருக்க, பார்த்திபனோ பனிமலரின் அன்பில் அவளுடைய இனிப்பான கவனிப்பில் இலயித்திருந்தான்…
பார்த்திபனுக்கு அந்த இனிப்பு, அத்தனை இதமானதாய் இருந்தது… அவனுடைய பசி அந்த உணவை அக்கணம் நாடியதோ அல்லது அவனுடைய தனிமை அவளின் அக்கரையை வேண்டியதோ அவனே அறியான். 
அந்த இனிப்பு அவனுடைய நாவினில் இனிமை கூட்டுவதற்கு பதிலாய், இதயத்தில் இதத்தை கூட்டியது… அந்த நொடி பார்த்திபனுக்கு புதுமையாக இருந்தது. அங்கு புதிது இனிப்போ இதழ் விரித்து சிரிக்கும் மலரின் அன்போ ?
இன்னும் வேண்டும் வேண்டுமென்று பார்த்திபனின் மனம் அரற்ற தொடங்கியது. ஆண்களின் மனதை அடைய, அவர்களுடைய வயிற்றை உணவால் நிரப்பவேண்டுமென்ற பெரியவர்களின் கூற்று மெய்யாகிக்கொண்டிருக்கின்றதோ ? 
பார்த்திபனின் கண்கள் பனிமலரைவிட்டு கொஞ்சமும் அகலவில்லை…. சில நிமிடங்கள் இனிப்பில் ஆழ்ந்திருந்த மற்றவர்கள், இப்போதோ பார்த்திபன் பனிமலரை கவனிக்க, 
பூதம் தான் முதலில் சுதாரித்து, “இராஜா… எப்பா பார்த்திப இராஜா…என்ன இராசா பண்ணுற ?” என கிண்டலாக பார்த்திபனை உலுக்க,
சட்டென்று சுதாரித்தவன், சிறு தடுமாற்றத்துடன், “ஆஹ்…பால்… பால் பக்கோடா தான் சாப்பிடுறேன் டா” என உளற, 
“என்னது? இது பேரு பால் பக்கோடாவை ?” என பனிமலர் விசித்திரமாக பார்க்க, 
“அப்போ இல்லையா?” என பார்த்திபன் புரியாமல் விழித்தான். நண்டு, பேச்சை தொடங்கிய சில நொடிகள் மட்டுமே கவனித்திருந்தான்.
“பால் பக்கோடா இல்லையா?” என இப்போது பனிமலரை மட்டும் பார்த்து விழித்துக்கொண்டு வினவ,
அதற்கு விடையாக அனைவரும் கோரஸாக ஒரே குரலில் ஒரு சேர, “பக்கோடாதான் பால் பக்கோடாவேதான்” எனக் கூறிவிட்டு நகைக்க, இன்னதென்று புரியாத வெக்கம் மலரை ஆட்கொண்டது. அவளுடைய சிரிப்பை தனது இதழ்களை மடித்து ஒழிக்க முயன்று தோற்றுக்கொண்டிருந்தாள்.
அனைவரும் தன்னை ஏன் இப்படிக் கேலி செய்கிறார்கள் எனச் சிந்தித்த பார்த்திபன், இதன் பெயர் பால் பக்கோடா இல்லை போல என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்…
அப்படி உணர்ந்த மறுநொடி, சட்டென்று தட்டைவிட்டு எழுந்தவனைப் பதறி போய்ப் பார்த்தாள், மலர்!
“சாப்பிடலையா?” என ஓரடி முன்வந்து கேட்க,
“சாப்பிட்டேன்…போதும் போதும்” எனப் பார்த்திபன் சொல்லிக்கொண்டாலும் இன்னும் வேண்டும் வேண்டுமென்று அவன் மனம் அவனிடம் மல்லுக்கு நின்றது. ஆனால், அவன் மனம் வேண்டியது அவனுக்குத் தெரிந்த பெயரில் உள்ள பால் பக்கோடாவை அல்ல; பனிமலரின் முகத்தை!