“உங்க தம்பி தப்பு பண்ணான். என் முன்னாடியே தப்பா பேசினான் அதுக்காக நான் அடிச்சேன் அதை நீங்க தப்புன்னு நினைக்கறீங்க. நான் என்ன பண்ணேன்னு உங்க தம்பி என்னை ஆள் வைச்சு அடிச்சான்”
“இருக்கவே இருக்காது ருத்ரா. அவனுக்கு அவ்வளவு தைரியம்லாம் இல்லை”
“என்கிட்ட ஆதாரம் இருக்குண்ணே. உங்க தம்பின்னு நான் போலீஸ்ல சொல்லலை. ஆனா அவங்க கண்டுப்பிடிக்கறதுக்கு எல்லா ஆதாரமும் நானே கொடுத்திருக்கேன்”
“ஏன்பா அதெல்லாம் வேணாம்பா அவனுக்கு கல்யாணம் ஆகலை. அவனுக்கு பொண்ணு பார்த்திட்டு இருக்கோம். இதெல்லாம் பிரச்சனையாகிட்டா அவனுக்கு ஒரு நல்லது நடக்காம போய்டும்”
“அண்ணே எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. எங்க பேர்ல எந்த தப்பும் இல்லைன்னு புரிய வைக்கத்தான் அப்படி செஞ்சேன்”
“நிஜமாவே அவன் தான் அடிச்சானா”
“நான் ஏன் பொய் சொல்லணும். தவிர என்னை நானேவா அடிச்சுக்க முடியும்”
“நான் அப்படிச் சொல்லலை. மன்னிச்சுடுப்பா”
“அண்ணன் நீங்க போய் என்கிட்ட மன்னிப்புலாம் கேட்டுட்டு. நீங்க எப்படின்னு எனக்கு தெரியும் அதான் தைரியமா உங்ககிட்ட நான் பேசவே வந்தேன். நீங்க உண்மையிலேயே பெரிய மனுஷன் தான் அண்ணே”
“அப்புறம் எனக்கு இன்னொரு சந்தேகம் இருக்கு”
“என்னப்பா??”
“என்னை ஆள் வைச்சு அடிச்ச மாதிரி”
“ஹ்ம்ம் என்னன்னு சொல்லு”
“என் மனைவியை காணோம். அவங்களை உங்க தம்பி தான் ஏதோ செஞ்சிட்டாரோன்னு”
“என்னை அடிச்சது கூட எனக்கு பிரச்சனையில்லை. நான் அடிச்சேன் அவர் அடிச்சாரு. பதிலுக்கு பதில் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சுக்கறேன். என்னோட மனைவி காணாம போனதுக்கு காரணம் அவரா இருந்தா நான் மனுசனாவே இருக்க மாட்டேன்”
“என் வைப் நிறை மாசமா இருக்காங்க அண்ணா. எங்க போனாங்கன்னு தெரியலை”
“ஏன்பா நீ சொல்றது எல்லாம் சரி தான். என் தம்பி யோக்கியன் இல்லை தான் அதுக்காக நீ எல்லா பழியையும் அவன் மேல போடாதப்பா. அதுக்கு வேற யாராவது கூட காரணமா இருக்கலாம்ல”
“வேற யாரா இருந்தாலும் இப்போ நான் சொன்னது தான்”
“ருத்ரா ஒரு வேளை”
“வேணாம்ண்ணே தப்பா ஒரு வார்த்தை சொல்லிடாதீங்க. என் வாழ்க்கையில ஒரு தடவை நடந்த தப்பை காரணம் காட்டி அதை வைச்சே பேசலாம்ன்னு நினைக்காதீங்க”
“உங்க மேல நான் மரியாதை வைச்சிருக்கேன். உங்க தம்பிகிட்ட சொல்லிடுங்க, இனிமே லோகுவோட வழியிலயும் என் வழியிலயும் அவரை குறுக்க வர வேணாம்ன்னு சொல்லுங்க”
“எல்லா பொண்ணும் நமக்கு கூட பிறந்தவங்க மாதிரி தான் மனைவியை தவிர. அதை அவருக்கு புரிய வைங்க. இப்போ நான் கிளம்பறேன்” என்று லோகுவுடன் அவன் கிளம்பிவிட்டான்.
“அண்ணா என்னண்ணா நடக்குது??”
“லோகு பேசாம வா. எனக்கு தலையே வெடிச்சிடும் போல”
“நீ இவ்வளவு பொறுமையா பேசுறதை இப்போ தான் பாக்குறேன்”
“இவனான்னு நமக்கு தெரியாது சும்மா போட்டுப் பார்த்தேன். தன்னைப்போல விஷயம் வெளிய வரும்”
“இருந்தாலும்…”
“லோகு விடு உன் பிரச்சனையும் தீரணும் என்னோட பிரச்சனையும் தீரணும்”
“சரியாகிடும்ண்ணே”
“சரியாகிடணும்”
“இப்போ எங்கண்ணா போறோம்??”
“வருணை பார்க்க”
“ண்ணா”
“பயமாயிருக்குடா எனக்கு” என்று சொல்லும் போது அவன் கண்கள் கலங்கியிருந்தது.
“அண்ணா நீ இப்படி இருக்கறது பார்க்க கஷ்டமா இருக்கு. ப்ளீஸ் அண்ணிக்கு எதுவும் ஆகாதுண்ணா. அந்த வருண் மட்டும் இதுக்கு காரணமா இருக்கட்டும் அப்புறம் இருக்கு அவனுக்கு” என்று கருவினான் லோகு.
ஆருத்ரனின் கைக்கட்டும் பிரிக்கப்பட்டிருந்தது. அருளாசினி காணாமல் போய் இருபது நாட்களுக்கு மேலாகிறது. இன்னமும் ஒரு தகவல் கூட அவர்களுக்கு உருப்படியாக கிடைக்கவில்லை.
ஆருத்ரன் வாரா வாரம் ஸ்ரீரங்கம் சென்று வந்துக் கொண்டு தானிருக்கிறான். எந்த முன்னேற்றமும் இல்லை. வீட்டில் அவள் உடைகள், நகைகள் என்று அனைத்துமே மாயமாகி இருந்தது.
ஆருத்ரன் நகை கொண்டு வந்து கொடுத்த அன்று அவன் முன்னே தான் அவள் அதை பீரோவில் எடுத்து வைத்தாள்.
அதன்பின் சீமந்தம் அன்று அதை போட்டுமிருந்தாள். அவனுக்கு அருளாசினியாக எங்கும் சென்றிருக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக தெரிந்தது.
வீட்டில் அன்னப்பூரணி ஓயாமல் அழுதுக் கொண்டிருந்தார். அவரின் தைரியம் எல்லாம் அற்றுப் போயிருந்தது அருளாசினி காணாமல் போனதில் இருந்து. லோகுவின் மனைவி தான் அவருடன் இருந்து அவ்வப்போது சாப்பிட வைப்பது எல்லாம்.
இவர்கள் இங்கு வந்ததுமே இவனை பிடிக்காதவர்கள் வம்பிழுப்பதற்காகவே மனைவி ஓடிவிட்டாளா அது தான் தாயும் பிள்ளையும் இங்கு வந்துவிட்டார்களா என்று புறம் பேச அஞ்சனா சென்ற போது கூட ஓய்ந்து போகாத அன்னப்பூரணி முற்றிலும் ஓய்ந்து போயிருந்தார்.
வாணி தான் அவள் பெரியப்பா வீட்டில் இருக்கிறாள் பிரசவம் முடிந்து வருவாள் என்று சொல்லி அவர்களின் வாயை அடைத்தாள். இருந்தாலும் அரசல்புரசலாக பேச்சு வந்துக் கொண்டு தானிருந்தது.
வம்புக்காக அலைபவர்களிடம் என்ன சமாதானமும் எடுபடாது தானே. அவர்கள் வாய்க்கு அவல் கிடைக்குமா என்று காத்திருப்பவர்கள் தானே கிடைத்ததும் அரைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
ஆருத்ரன் வண்டி ஒட்டிக் கொண்டிருந்தானே தவிர அவன் எண்ணம் எல்லாம் அருளாசினியை சுற்றித் தான் வந்துக் கொண்டிருந்தது.
அவன் எண்ணம் எல்லாம் சீமந்தத்திற்கு பின் அவளுடன் அவன் இருந்த அந்த நாட்களை நோக்கி சென்றது. இருவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்த நினைவுகள் வலம் வந்தது அவன் நினைவலையில்.
“நீ போகணும்ன்னு முடிவு பண்ணிட்ட, சரி வா…” என்றவன் எழுந்து சட்டையை போடப் போக “மொட்டைமாடியில வாக்கிங் போக சட்டை எதுக்கு??”
“என்னது மாடியிலையா??”
“ஹ்ம்ம் ஆமா”
“வேணாம்” என்றான் அவன் இறுக்கமாய்.
“இப்போ இப்படி இருக்கீங்கல்ல அது போகணும். அது நம்மோட நல்ல நினைவுகளை தான் ஞாபகப்படுத்தணும். அதுக்குத்தான் சொல்றேன்”
“பர்ஸ்ட் டைம் நீங்களும் நானும் அங்க ஜாலியா பேசி சந்தோசமா இருந்தது என்னால மறக்க முடியாது”
“அடுத்து நீங்க கூப்பிட்டவும் அது போல ஒரு நிகழ்வா இருக்கும்ன்னு ஆசைப்பட்டேன். ஆனா… ப்ச் அதைப்பத்தி பேச வேணாம் வாங்க போவோம்” என்றவள் அவனுடன் எழுந்துக் கொள்ள பதில் பேசாது அவளுடன் நடந்தான்.
இவர்கள் இருவரும் வருவதை பார்த்துவிட்ட லோகு படுத்தவாறே “அண்ணன் காபி சாப்பிட போறீங்களா என்ன” என்று கேட்க “டேய் பேசாம படு இல்லை உதை விழும் உனக்கு”
“எங்க இருந்து தான் இவனுக்கு இவ்வளவு வாய் வந்துச்சோ” என்று கூறியவாறே மனைவியுடன் நடந்தான்.
இருவரும் படியேறி வர இருளாக இருந்தது. ஆருத்ரன் தன் கைபேசியில் பிளாஸ் லைட்டை ஆன் செய்தான்.
“ஆப் பண்ணுங்க கண்ணு கூசுது”
“இருட்டுல எது எங்க இருக்குன்னே தெரியலை”
“என் பக்கத்துல நீங்க இருக்கீங்க உங்க பக்கத்துல நான் இருக்கேன். அதை பீல் பண்ண முடியுதுல அது போதும் ஆப் பண்ணுங்க. இருட்டு கண்ணுக்கு பழகிரும். தெருவிளக்கு வெளிச்சம் தெரியுது தானே” என்றாள்.
“உனக்கு இன்னைக்கு என்னாச்சு ரொம்ப பண்ணுறே…”
“என்ன பண்ணேணாம்??”
“என்னென்னமோ பண்ணுற. எனக்கு ரொம்ப பீல் ஆவுது, இப்போதைக்கு அவ்வளவு தான் சொல்ல முடியும்” என்றவன் தன் நேசத்தை கை அழுத்தத்தின் மூலம் அவளுக்கு கடத்தினான்.