30
ஆருத்ரனும் லோகுவும் ஸ்ரீரங்கம் வந்து சேர நள்ளிரவாகியது. வண்டி வந்து நிற்கவும் வாணி அதைப் பார்த்து ஓடிவந்தாள்.
“அம்மா அவங்க வந்திட்டாங்க” என்று குரல் கொடுத்தவள் எழுந்து முன்னே ஓடி வந்தாள்.
அன்னப்பூரணியும் வாணியும் அவளின் இரு குழந்தைகளும் அந்த வீட்டின் வாயிலில் அமர்ந்திருந்தனர். 
ஆருத்ரன் அதைக்கண்டு இறங்கி வர அவன் கையில் கட்டுடன் இருப்பதைக் கண்டு அன்னப்பூரணி ஓவென்று அழுதுக் கொண்டு அவனை நோக்கி வந்தார்.
“ருத்ரா என்னப்பா ஆச்சு. உனக்கு என்னாச்சு, ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை. டேய் லோகு ஏன்டா சொல்லலை” என்று இருவரையும் மாற்றி மாற்றி கேட்டார்.
“அம்மா அதெல்லாம் அப்புறம் சொல்றேன். எனக்கொண்ணும் இல்லை, இப்போ நான் நல்லா தான் இருக்கேன்”
“என்னம்மா என்னாச்சு நீங்க ஏன் இங்க வந்து நிக்கறீங்க??” என்றான் ஆருத்ரன்.
“எனக்கு ஒண்ணும் புரியலை ருத்ரா. இங்க என்னென்னவோ நடக்குது. பூட்டியிருந்த வீட்டில நீங்க எதுக்கு வந்து இருக்கீங்கன்னு கொஞ்ச பேரு வந்து எங்களை வெளிய அனுப்பிட்டாங்கடா. உங்களுக்கு போன் பண்ணேன் நீங்க எடுக்கலை”
“அண்ணே அதை ஏன் கேட்கறீங்க. யாரோ இரண்டு பேரு வந்தாங்க பூட்டியிருக்க வீட்டுல நீங்க என்ன பண்றீங்க வெளிய போங்கன்னு வலுக்கட்டாயமா இழுத்து வெளிய தள்ளிட்டாங்க”
“அவங்க யாரு என்னன்னு விபரம் தெரியலை. நான் அருள் வீடு தானே இதுன்னு சொன்னேன். அவ ஓடி போயி ஆறு மாசம் ஆச்சு நீங்க இங்க என்ன பண்றீங்கன்னு கேட்கறாங்க”
“என்ன பண்றதுன்னு தெரியாமத்தான் இங்கவே உட்கார்ந்து இருந்தோம். இங்கயும் உட்காரக்கூடாதுன்னு ஒரே கலாட்டா. நான் தான் இது ரோடு உங்க வீடு இல்லைன்னு சொல்லி அவங்களை சத்தம் போட்டேன். அதுக்கு அப்புறம் அவங்க போனாங்க”
“அக்கம் பக்கத்துல யாரும் வந்து எதுவும் சொல்லலையா. ஆமா வேலைக்கு வருவாங்களே அவங்க கூட உங்களுக்கு சப்போர்ட்டா எதுவும் சொல்லலையா??”
“அவங்க வேலை முடிச்சுட்டு அப்போவே போய்ட்டாங்க. நான் வந்ததுல இருந்தே பார்க்கறேன் இங்க இருக்கவங்க யாரும் நம்ம வீட்டுக்கு வந்து போகலையே. அவங்க எப்பவும் போல பேசாம தான் இருந்தாங்க” என்றாள்.
வாணி சொல்வது சரி தானே அவர்கள் இங்கு வந்த இத்தனை நாட்களில் ஒருவர் கூட அந்த வீட்டுப்பக்கம் எட்டிப் பார்த்ததில்லையே.
“ம்மோவ் அழாதம்மா நீ வா உள்ள போகலாம்”
“எப்படிடா போக அதான் பூட்டிட்டாங்களே…”
“நீ வாம்மா” என்றவன் லோகுவை பார்க்க அவன் வண்டியில் இருந்த டூல்கிட்டில் இருந்து சற்று கனமான ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு வந்தான்.
வீட்டருகே சென்றவன் பூட்டை ஓங்கி இரண்டு அடி அடிக்க அது திறந்துக் கொண்டது. “வாங்க போகலாம்” என்று ஆருத்ரன் அழைக்க அவர்கள் உள்ளே சென்றனர்.
“ருத்ரா உனக்கு என்னாச்சுப்பா??” என்றார் அவர் விடாது. ஆருத்ரன் நடந்த விஷயத்தை அன்னப்பூரணியிடம் சுருங்க சொல்லி முடித்தான்.
“யாருடா உன்னைய அடிச்சா??”
“அதை போலீஸ் கண்டுப்பிடிக்கட்டும்மா”
“அந்த கவுன்சிலர் தம்பி…”
“ம்மா…”
“வாணி சொன்னாடா நீ சொல்லலைன்னா எனக்கு தெரியாத போய்டுமா. அவன் எதுவும் பண்ணலைல”

“அவனே பண்ணியிருந்தா கூட இப்போ என்னம்மா பண்ண முடியும். முதல்ல நாம அவளை கண்டுப்பிடிப்போம் அந்த கதை எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்று முடித்துவிட்டான்.
யாரும் இல்லாத நேரத்தில் அங்கு வந்து பிரச்சனை செய்தவர்கள் யார் என்று அவனுக்கு தெரிந்தே ஆகவேண்டும்.
“ருத்ரா அருளுக்கு என்னாச்சுன்னு தெரியலையே” என்றவர் அப்படியே அழுதுக் கொண்டு அமர்ந்துவிட்டார்.
“அம்மா இருங்க நானும் லோகுவும் போய் பார்க்கறோம்” என்று அவன் எழப் போக “இந்த நேரத்துல நீ எங்கன்னு போய் தேடுவப்பா”
“பேசாம படு காலையில போய் ஸ்கூல்ல மறுபடியும் விசாரிப்போம். போலீஸ்ல கம்பிளைன்ட் கொடுத்திடலாம் ருத்ரா. எனக்கு என்னவோ மனசு பதைக்குது. என்னவோ பிளான் பண்ணி பண்ற மாதிரி தெரியுது”
“அருளு இல்லாத நேரத்துல இங்க வந்த ஆளுங்க மேல எனக்கு டவுட்டா இருக்கு ருத்ரா” என்றார் அவர்.
அவனுக்கும் இப்போது சந்தேகம் வலுப்பட ஆரம்பித்தது. வந்தவர்கள் யாராய் இருப்பார்கள் இத்தனை நாட்களில் ஒருவர் கூட அங்கு வந்து பார்த்திருக்கவில்லை. இன்று வந்ததும் இல்லாமல் வீட்டை பூட்டி வேறு சென்றிருக்கிறார்கள்.
அருளாசினியை வேறு காணோம் எல்லாம் தெரிந்து தான் வந்தார்களா?? நம்மை முட்டாளாக்கப் பார்க்கிறார்களா?? என்று பல கேள்விகள் எழுந்தது அவனுக்கு.
விடியும் வரை காத்திருப்பதை தவிர அவனுக்குமே வேறு வழியிருக்கவில்லை. விடிந்ததும் முதல் வேலையாக லோகுவை அழைத்துக்கொண்டு அவள் வேலைப் பார்த்த பள்ளிக்கு தான் சென்றான்.
அங்கு விசாரிக்க காலையில் பள்ளிக்கு வந்திருந்தவள் எப்போதும் போல் பள்ளி முடிந்து அவள் கிளம்பிவிட்டதாக சொன்னார்கள். அதன்பின் யாருமே அவளைப் பார்த்திருக்கவில்லை.
அக்கம் பக்கத்தில் உள்ள கடைகளில் அவளின் போட்டோவை காட்டியும் கேட்டுப் பார்த்துவிட்டார்கள் அவர்களுக்கும் எதுவும் தெரியவில்லை.
இவர்கள் இங்கு வந்திருந்த வேளையில் முதல் நாள் வீட்டிற்கு வந்து கலாட்டா செய்திருந்தவர்கள் மீண்டும் வந்திருந்தார்கள். அவர்களை பார்த்ததுமே வாணி லோகுவிற்கு அழைத்துவிட்டாள்.
“சொல்லு வாணி” என்று அவன் சொல்ல எதிர்புறம் சலசலவென்று ஏதோ சத்தம் மட்டுமே கேட்டது.
“அண்ணா வாணி தான் கூப்பிட்டா என்னன்னு தெரியலை பேச மாட்டேங்குறா. ஏதோ சத்தமா இருக்கு” என்ற லோகு போனை ஸ்பீக்கரில் போட்டான்.
“யாரு நீங்க எல்லாம் நேத்து உங்களை வெளிய தள்ளி கதவை பூட்டிட்டு தானே போனேன். மறுபடியும் எப்படி உள்ள வந்தீங்க” என்ற குரல் கேட்க இந்த புறம் ஆருத்ரன் லோகுவிடம் வீட்டிற்கு செல்லுமாறு சைகை செய்தான்.
பள்ளி வீட்டில் இருந்து அருகில் தான் என்பதால் இவர்கள் அடுத்த ஐந்து நிமிடத்தில் வீட்டில் இருந்தனர். இருவரும் உள்ளே நுழைய ஆஜானுபாகுவாய் இருவர் நின்று மிரட்டிக் கொண்டிருந்தனர்.
அன்னப்பூரணி மருமகளை காணவில்லை என்ற கவலையில் இருந்ததால் வந்தவர்களை ஒன்றும் சொல்லாமல் இருந்தார். இதுவே அவர் எந்த கவலையும் இல்லாது இருந்திருந்தால் அவர் ஒருவரே போதும் வந்தவர்களை பந்தாடி இருப்பார்.
அவரின் குரலைக்கேட்டே வந்தவர்கள் தெறிக்க ஓடியிருப்பார்கள். ஏதோ அவர்களின் நல்ல நேரம் அன்னப்பூரணி அமைதியாக இருந்தார்.
“வீட்டில ஆம்பிளைங்க இல்லாத நேரத்துல வந்திருக்கீங்க யாருடா நீங்க” என்றான் ஆருத்ரன் இருவரையும் அளவிடும் பார்வையுடன்.
“நீ யாருடா நீ தான் இந்த வீட்டு ஆம்பிளையா?? அதெப்படிடா பூட்டின வீட்டுக்கு நீ ஆம்பிளையா வந்தே??” என்றான் ஒருவன் மரியாதை இல்லாமல்.
அவனருகே வந்திருந்த ஆருத்ரன் நன்றாக இருந்த அவன் மற்றொரு கையால் அவன் கன்னத்தில் ஒரு அறைவிட்டான். அதில் பொறி கலங்கிப் போனது அவனுக்கு.
“டேய் என்னடா அடிக்கிறே??” என்று உடன் வந்தவன் பாய்ந்து வர இப்போது லோகு அவனை பிடித்துக் கொண்டான்.
“மரியாதையா சொல்லு யார் நீ??” என்றான் ஆருத்ரன்.
“நீ யாரு??”
“இங்க பாரு நான் கேட்டதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு. இல்லை இன்னொரு அடி விழும் அதுக்கு அப்புறம் நீங்க ரெண்டு பேருமே பேச முடியாது, அத்தனை பல்லும் கொட்டிரும் பார்த்துக்க”
“நாங்க இந்த வீட்டுக்கு சொந்தக்காரங்க” என்றான் அவன்.
“நான் நம்புற மாதிரி சொல்லு”
“யோவ் நிஜமா தான் சொல்றேன் நான் தான் இந்த வீட்டுக்கு சொந்தக்காரன்”
“இன்னொரு அறை விட்டேன்னு வை” என்று இவன் ஆரம்பிக்க முதலில் அடிவாங்கியவன் பேசினான் இப்போது. ஆருத்ரன் அடித்த அடி அப்படி அதில் அரண்டு அவன் பதில் சொன்னான்.
“இந்த வீட்டு ஆளுங்களுக்கு நாங்க சொந்தக்காரங்க. பூட்டின வீட்டுல நீங்க இருக்கறதை பார்த்தோம் அதான் வந்து என்னன்னு கேட்டோம்” என்றான் அவன் பம்மியவாறே.
“உனக்கு வாங்கின அடி பத்தலைன்னு நினைக்கிறேன்”
“நிஜம் தான் சொல்றேன்” என்றான் அவன்.
“லோகு இவங்களை போட்டோ எடு” என்றான் ஆருத்ரன்.
“என்னது போட்டோவா எதுக்கு??” என்றவர்கள் அப்படியே பின்னேயே நகர்ந்து வெளிய செல்லப்  பார்க்க சமயோசிதமாய் அவள் போனில் அவர்களை போட்டோ எடுத்துக் கொண்டாள்.
வந்தவர்கள் விட்டால்போதும் என்பது போல் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதுவே சொன்னது எதுவோ பெரிய பிரச்சனை என்று.
“ருத்ரா என்னடா நடக்குது எனக்கு எதுவும் சரியாப்படலை. பேசாம போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்திடலாம்டா”
“எனக்கும் அதான் சரின்னு படுதும்மா” என்றவன் லோகுவை பார்க்க அதைப் புரிந்தவன் போல அவன் வண்டி எடுக்கச் சென்றான்.
“நீங்க ரெடியா இருங்க, நாம சென்னைக்கு கிளம்பிடலாம்” என்றான் ஆருத்ரன்.
“என்னடா சொல்றே அருளு வராம நாம எப்படி சென்னைக்கு போறது. நான் அவ வராம வரமாட்டேன்” என்றார் அன்னப்பூரணி.
“அம்மா நீங்க இங்கவே இருந்தாலும் அவ வருவான்னு எனக்கு தோணலை. என்னமோ ஒரே குழப்பமா இருக்கு எனக்கு. சொல்றதை கேளுங்க நாம அங்க போய்டலாம்”
“நான் வரலை ருத்ரா. அவ வந்த பிறகு வர்றேன்” என்றார் அவர் அடமாக.
“நான் போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்திடறேன் முதல்ல” என்றவன் கிளம்பிவிட்டான்.
அங்கு சென்று கம்பிளைன்ட் செய்துவிட்டு வர அவர்கள் ஆயிரம் கேள்விகள் கேட்டு அவனை குடைந்தெடுத்தனர்.
அவன் திருமண புகைப்படங்கள், சீமந்ததின் போது இருவரும் எடுத்துக் கொண்ட படங்கள், வீடியோ என்று அனைத்தும் காண்பித்த பின்னே தான் அவன் மீதான சந்தேகத்தை குறைத்திருந்தனர்.
ஆனாலும் அவர்களின் பார்வை இன்னமும் அவனை சந்தேகமாகவே பார்ப்பதை நிறுத்தவில்லை. அவர்கள் திருமணம் குறித்த கேள்வியும் எழுந்தது, ஆருத்ரன் மிகப் பொறுமையாகவே அனைத்திற்கும் பதில் சொன்னான்.
அவர்களின் சந்தேகம் இவனின் மீது இன்னும் அதிகமாக கிடுக்கிப்பிடியாக பல கேள்விகள் மாற்றி மாற்றி வரவும் அவன் லோகுவை ஒரு பார்வை பார்த்தான். அதை புரிந்தவன் போல அவன் யாருக்கோ போன் செய்ய சில பல நிமிடங்களில் அந்த அதிகாரியின் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது.
ஆருத்ரனுக்கு மிகத் தெரிந்த அமைச்சர் ஒருவரை தான் லோகு உதவிக்கு அழைத்திருந்தான். அவர்களுக்கு நடந்த விபரத்தை சொல்லியிருக்க அதன் மூலம் இதோ இங்கு அழைப்பு வந்துவிட்டது அதிகாரிக்கு.
“ஏன் சார் நீங்க மினிஸ்டர்க்கு தெரிஞ்சவர்ன்னு முன்னாடியே சொல்லியிருக்கலாமே” என்றார் அந்த அதிகாரி.
“நான் உண்மையை சொல்றேன் என்னை நம்ப மாட்டேங்கறீங்க. ஆனா உண்மையை கூட மினிஸ்டர் சொன்னா தான் நம்புவீங்கன்னு தெரிஞ்சு இருந்தா அப்போவே சொல்லியிருப்பேன்” என்றான் ஆருத்ரன் பதிலுக்கு.
“சார் அது எங்க டியூட்டி சார்”
“ஒருத்தர பார்த்ததுமே தெரிஞ்சிடுமே உங்களுக்கு என்னைப் பார்த்தா தெரியலைன்னாலும் இவ்வளவு தூரம் பேசினேனே அப்போக் கூட தெரியலையா உங்களுக்கு”
“எங்க கடமையை தான் சார் நாங்க செஞ்சோம். நீங்க போங்க சார் நான் விசாரிச்சுட்டு சொல்றேன் உங்களுக்கு. உங்க நம்பர் எழுதிக் கொடுங்க” என்று சொல்லி அனைத்து விபரங்களும் வாங்கிக் கொண்டார் அந்த அதிகாரி.
இதோ அன்னப்பூரணி எப்படியோ சமாதானம் செய்து சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்துவிட்டான் ஆருத்ரன்.
அருளாசினி காணாமல் போனதில் ஆருத்ரனுக்கு பல கேள்விகள் இருந்தது. வீட்டில் இருந்த அவள் நகைகள், உடைகள் அனைத்தும் மாயமாகி இருந்தது. அங்கிருந்து கிளம்பும் தருணம் தான் ஆருத்ரன் அதை கவனித்தான்.
அன்னப்பூரணியிடம் கேட்க அவருக்கு எந்த விபரமும் தெரியவில்லை. வாணி உறுதியாக அடித்துக் கூறினாள் அருளாசினி பள்ளிக்கு ஹேண்ட்பேக்கை தவிர வேறு எதையும் எடுத்து செல்லவில்லை என்று.
———–
சுற்றிலும் இருள் படர்ந்திருக்க இருளில் எதுவாவது தென்படுகிறதா என்று பார்த்தாள் அவள். யாரோ அவள் அருகில் நடந்து வருவது போல தோன்ற கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு.