மலரின் தாய் தந்தை மரணத்திற்குப் பார்த்திபன் காரணமில்லை என்று அவர்களின் வார்த்தைகள் கூறினாலும், அன்று காவல் நிலையத்தில் அந்தக் காவலர் எதற்காகப் பார்த்திபனை சுட்டி காண்பித்தார் ? என்ற கேள்வி அவளுடைய மனதில் விஸ்வரூபமெடுத்து நின்றது.
தன்னைச் சுற்றி என்ன தான் நடந்தது ? நடக்கிறது ? நடக்கபோகிறதென்று விடை தெரியாமல் நடந்தவளை பூதம் வழி மறித்தான்.
“அம்மா மலரு? உனக்கு என்ன ஆச்சு ? எதுக்கு இப்படி இந்தப் பேய் மழைல நனஞ்சிட்டே வார ?” என எதிர்பட, பூதத்தின் இந்த வார்த்தைகளில் தான் மலர் சுற்றம் கவனிக்க, வீதியெங்கும் வெறிச்சோடி கிடந்தது. மனம் அவளுடைய கட்டுப்பாட்டில் இல்லாததால் நங்கூரம் பாய்ச்சப்படாத கப்பல் அலையோடு உறவாடுவது போல அவள் மனமோ பழைய நினைவோடு குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது.
பூதத்தைக் கண்டவுடன், மலரின் விழிகளில் மெல்லிய எதிர்பார்ப்பு. ஓர் அவசரம், ஒரு வேகம்!
“அண்ணா… எனக்கு ஒன்னு சொல்லுங்களேன்? நீங்க நீங்க இப்போ ஓட்டுற வண்டி எதாவது ஆஸிடெண்ட் பண்ணுச்சா ? நீங்களோ பார்த்திபனோ எதாவது ஆஸிடண்ட் பண்ணுனீங்களா ? உண்மைய மட்டும் சொல்லுங்க பிளீஸ்” என உச்சகட்ட பதட்டத்திலும் இறைஞ்சும் குரலிலும் கேட்டாள்
“மொத மழைல நனையாம வீட்டுக்கு வா. எதுக்குப் பித்துப் பிடிச்ச போல நிக்குற? போ..” எனப் பூதம் விரட்ட,
“இல்ல! எனக்குச் சொல்லுங்க அண்ணே…நான் கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க” எனப் பிடிவாதமாக நின்றாள்.
“என்னமா இப்படிப் பிடிவாதம் பிடிக்கிற? ஆமா ஏதோ பெரிய ஆசிடெண்டாம். எனக்கோ பார்த்திபனுக்கோ தெரியாது. இரண்டு உயிரை காவு வாங்கிட்டதுனால அடிமாட்டு விலைக்கு வந்துச்சுனு எங்க ஓனர் வாங்கிப் போட்டாரு.
மத்த எவனும் வண்டில்ல ஏற துணியல. நம்ம பார்த்திக்கு தான் பயம்னாலே என்னனு தெரியாதே..அதுனால அவன் ஓட்டுறான். பார்த்திபன் என்ன செஞ்சாலும் நான் அவன் கூடத்தான் இருப்பேன். அதுனால நானும் துணிஞ்சு அந்த வண்டில தான் சரக்கு எடுக்கப் போறேன்” என விளக்கமளிக்க,
பொறவு தான் தெருஞ்சது. தப்பு பணிந்து மேனேஜர்னு. உங்க அப்பா அந்த ஆளுக்குச் சரியான தண்டனை கொடுத்தாரு. எங்க காசையும் கொடுத்தாரு.
“ஆனால் அப்போ எங்க அப்பாக்கும் பார்த்திபனுக்குத் தகராறு பகைனு எதுவும் இல்லையா?” என மீண்டும் உறுதி படுத்தும் நோக்கத்தோடு கேட்க,
“அட அந்த ஐயாவையே நாங்க இரெண்டு மூணு தடவைதான் சந்திச்சிருக்கோம். இதுல பகை எப்படி வரும் ?” என எதிர்கேள்வி கேட்டான்.
“அப்போ எதுக்காக எங்க அப்பாக்காக என்ன இங்க தங்க விட்டிருக்கீங்க?” எனப் புரியாமல் வினவ,
“நாங்க சந்திச்ச இரெண்டு மூணு தடவைல, ஒரு முறை அவர் அநாதை ஆசிரமத்துக்கு நன்குடை கொடுக்க வந்திருந்தாரு.
அம்புட்டு பிள்ளைங்க தங்கவும் சாப்பிடவும் படிக்கவும் வைக்கிறாரு. அத்தாம் பெரிய மனுஷனோட பொண்ணு நீ, உன்ன எப்படி மா பார்த்திபன் வெளில போகச் சொல்லுவான் ? அதுவும் நீ பிரச்சனைல இருக்குறன்னு தெரிஞ்ச பிறகும்” எனக் கேட்க,
இத்தனை நேரம் நடுங்காத மலரின் தேகம் நடுங்க தொடங்கியது.
“சொன்னேன், கேட்டியா? பாரு குளுரு… நடுங்குற. போ மொத உடுப்ப மாத்து” எனக் கூற, பூதம் கூறிய பிரச்சனை என்ற வார்த்தையில், “என்ன பத்தி இவுங்களுக்குத் தெரிஞ்சிடுச்சா ?” என்ற கலக்கம் அவள் கண்களில் ஒட்டிக்கொண்டது.
பதட்டத்துடன், பூதத்தைத் திரும்பி பார்த்தபடியே செல்ல, பூதத்திற்கு எதுவோ சரியில்லை என்று பட்டது. அவன் தாமதிக்கவில்லை. ஒரு நொடி கூடத் தாமதிக்கவில்லை. இப்போது மழை நன்றாக விட்டிருந்தது… திரண்ட மேகங்கள் கூட, விலகி வெறிக்கத் தொடங்கிய சமயமாக இருந்தது.
அவளின் இந்தப் பதட்டத்தில், அந்தக் காவலர் எதற்காகப் பார்த்திபனை சுட்டி காண்பித்தார் என்ற கேள்வியைப் புறம் தள்ளினாள். எது எப்படியானாலும், விபத்தை உள்ளாக்கிய வண்டியை ஒட்டியவன் பார்த்திபன் இல்லை என்பது மட்டும் அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது…
மறுபுறமோ, பூதம், உடனடியாகச் செய்த காரியம் பார்த்திபனுக்கு அழைத்ததுத் தான்.
“நண்பா…நீ எங்க இருக்க? உடனே வீட்டுக்கு வா” என அவசரப்படுத்த,
“டேய், மழைல மாட்டிக்கிட்டேன்.இப்ப தான மான வெறிச்சிருக்கு. நான் ஓனரா பார்த்துட்டு வரேன். லோட்கு போகணும்லடா…கைல காசுவேற சுத்தமா இல்ல” எனப் பார்த்திபன் கூற,
“அட! ஓட்ட ஓடஸலா நாலு வண்டி ஓடவிட்டாவெனலாம் ஓனராம்? அவன் கிடக்கான் ஒட்டகச்சிவிங்கி. நீ மொத இங்க வா. மலரு என்னமோ சரியில்லை.
மழை அப்படிக் கொட்டுத்து. கொஞ்சம் கூடச் சுரணை இல்லாம அப்படியே மழைல வருது. நீ வெரசா வரியா ?” எனக் கேட்க,
“என்னடா இது? பெரிய மண்டையடியா இருக்குது… சரி வை, வரேன்” எனக் கூறியவன் அடுத்தப் பதினைந்து நிமிடங்களில் அவனின் வீட்டு மாடி படிகளில் ஏறிக்கொண்டிருந்தான்.
நாலு நாலு படிகளாகத் தாவி ஏறியவன் கண்டதோ, அழுது சிவந்த விழிகளுடன், கையினில் ஒரு பெட்டியுடன் கிளம்பி நின்ற மலரே!
“எங்க கிளம்பிட்ட? அடுத்து என்ன பண்ணறதா உத்தேசம் ? நான் அடிச்சு விரட்டிட்டேனு ஊர கூட்டப்போரியா ?” என பார்த்திபன் கடுப்புடன் வினவ,
“எப்பா… இப்ப இருக்க பிள்ளைங்களுக்கு வீட்டை கூட்டதெரியுதோ இல்லையோ ஊர மட்டும் சட்டு சட்டுனு கூட்டுதுங்கப்பா” என கூறியபடி பின்னோடு வந்து நின்றான் பூதம்.
இவர்களின் இந்த பேச்சு மலரின் கருத்தில் பதியவில்லை. மாறாக, அவள் பார்த்திபனை பார்த்த மறுநொடி, அவளுடைய குற்றவுணர்வு அவளை வாட்டியது.
“என்ன மன்னிச்சிடுங்க…நான் பெரிய பாவம் பண்ணிட்டேன்” என அழுகையுடனே தொடங்கியவள், அவளுடைய கோணத்தை அவளுடைய பார்வையில் நடந்ததை பார்த்திபனிடம் கூற,
பார்த்திபனுக்கு இதெற்கென்ன பதில் சொல்வதென்று கூட தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு தெரிந்தது, தப்பென்று உணர்ந்ததும் தன் தவறை ஒப்புக்கொள்ளும் நெஞ்சுரம் அவளிடம் உள்ளதென்று மட்டும் அவனுக்கு நன்கு புரிந்தது.
அதேவேளையில் பூதத்தின் எண்ணமோ, ‘இந்தப் பொண்ணு எதையெல்லாம் தப்பு செஞ்சுட்டேனு சொல்லுதோ அது எல்லாம் பார்த்திபனுக்கு நல்லதாதான் முடிச்சிருக்கு… இந்தப் பொண்ணு மட்டும் வரலைனா, அந்த அம்சாவை கட்டியிருப்பான். இந்தப் பொண்ணு மட்டும் பேசலைனா, இவனோட அம்மா மனசுல இருக்குறது தெரியாமலே போயிருக்கும், மலரு நகையை மட்டும் கொடுக்குறேனு சொல்லலைனா, சூர்யா அண்ணனோட சுரண்டல்ல இருந்து பார்த்திபன் கடைசிவரைக்கும் தப்பிச்சிருக்க மாட்டான். தனக்குனு ஒரு வாழ்க்கையும் வாழ்ந்திருக்கமாட்டான்…
கேட்டால், கூடி வாழறது தான் வாழ்க்கைனு வியாக்கியானம் பேசுவான். நாமட்டும் என்ன வாழ்க்கைனு இல்லாம வாழக்காய்னா சொன்னேன் ?
ஆனால் , ஒன்னு மட்டும் நிசம். இந்த மலர் பொண்ணு பார்த்திபனோட வாழ்க்கைக்குத் தேவதை…’என மனதார எண்ணமிட்டுக்கொண்டிருந்தான்.
பார்த்திபனின் மௌனம் மலரை மீண்டும் குன்ற வைத்திட,
“நான் புறப்படுறேன். நான் ஆரம்பிச்ச நாடகத்தை நானே முடிச்சிட்டு இங்கேயிருந்து புறப்படுறேன்.
இனி உங்க வாழ்க்கைக்கு குறுக்க நான் எங்கையுமில்லை” என மலர் உறுதியுடன் கூற, அந்த சூழலுக்கும் அந்த சூழலின் கனத்திற்கும் சற்றும் சம்மதமில்லாமல்,
“குறுக்க இந்த பூதம் வந்தா?” என பார்த்திபனுக்கும் பனிமலருக்கும் இடையே பூதம் வந்தான்.
வந்தவன், மலரிடமிருந்து பெட்டியை வாங்க,
“என்னடா? நீ என்ன பண்ணுற ?” என பார்த்திபன் வினவ, மலரோ, “என்ன பண்றீங்க அண்ணா ?” என வினவினாள்.
“அண்ணா தான் அண்ணா தான்…கொஞ்ச நாளைக்கு மாமா” என விஷம சிரிப்புடன் கூறினான்.
“என்ன சொன்னீங்க?” என மலர் வினவ,
“ஏன்மா நீ பாட்டுக்க வந்த, ஆட்டத்தையே மாத்துன. இப்ப பொசுக்குன்னு எல்லா கோட்டையும் அழிச்சிடறேன். மொத இருந்து போட்டுக்கோங்கன்னு, உன் பாட்டுக்க போற…. இது சரி இல்லை” என கூற,
மலரோ, “நான் எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் சொல்லுறேன்…” என உள்ளே சென்ற குரலில் கூறினாள்.
“நீ சொல்லுவ. ஆனால், அவுங்க நம்பணுமே?”
“நம்பமாட்டாங்களா?”
“என்னது நம்புவாங்களா? நெம்புவாங்க உன்னையும் அவனையும். நம்பவெல்லாம் மாட்டாங்க. ஆளையும் மண்டையும் பாரு… ” என மலரை நோக்கி கண்டிப்பான குரலில் கூறியவன்,
“நண்பா, இந்த பிள்ளை பொசுக்குன்னு வீட்டைவிட்டு போய் ஒண்ணுக்கிடக்க ஒன்னு ஆகிடுச்சுனா, அந்த பழி உங்க ஜமீன் குடும்பத்துக்கு தான் வரும்.
அதுவும் இந்த பிள்ளை இருக்க நிலைமைக்கு, ஜமீனுக்கு ஜாமீன் வாங்க அலையவேண்டிய நேரம் கூட வரலாம்” என பார்த்திபனிடம் கூறினான்.
“இப்ப என்னதான் சொல்லவர?” என பார்த்திபன் சலிப்புடன் வினவ,
“டக்கு டக்குனு கேட்காதீங்கடா… பக்குனு இருக்குது….” என முழியை உருட்டி யோசித்தவன்,
“இருங்க இப்ப கரக்ட்டா சொல்லுறேன்…ஆனால் தனி தனியா தான் சொல்லுவேன்” என ஓர் நிபந்தனையை வைத்தவன்,
மலரை சற்று தள்ளி அழைத்து சென்று, “இந்தாப்பாருமா… நீ சொன்னாலும் பார்த்திபன் மேல யாருக்கும் நம்பிக்கை வர போறதில்லை. நீ செஞ்சு வச்ச வேலையப்படி…அதை நீ இங்னவே இருந்து தான் சரிபண்ணனும்.இதுக்குமேல உன் இஷ்டம்…” என கூற, மலர் யோசனையானாள்.
பூதத்தின் இந்த பேச்சோடு, மலருக்கு வேறு ஒரு சிந்தனையும் ஓடியது. இங்கிருந்து எங்கு செல்வது ? தற்கொலை மட்டுமே தீர்வென்று முடிவெடுத்து வெளியேறியவளுக்கு, இப்போது தற்கொலை செய்துகொள்ளும் துணிவு வரவில்லை.
தற்சாவு என்பது ஒரு நொடியில் எடுக்கப்படும் பெரும் முடிவு. எந்தவொரு மனிதன் தற்சாவை ஏற்க விரும்புகிறானோ, முடிவை எடுத்த அந்த நீண்ட நெடிய ஒரு நொடியை கடந்துவிட்டால், அவன் தனது முடிவை மாற்றிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.
இப்போது மலரும் அந்தவொரு மனநிலையில் தான் நின்றாள். இங்கிருந்து வெளியேறியே ஆகவேண்டிய நிலை. ஆனால், இங்கிருந்து சென்றால் . இனி எங்கு செலவதென்ற கேள்வி ? அதேவேளையில் பூதத்தின் கூற்றின்படி தான் நடத்திய சதியை தானே முறியடிக்கமுடிந்தால், தன்னுடைய தவறுக்கு அது பரிகாரமுமாகும்…
இவையெல்லாம் அவளுடைய மனதில் ஓடிக்கொண்டிருந்த அதே நேரத்தில் பூதம் பார்த்திபன் முன் சென்று நின்றான்.
“ஏண்டா, நீ தானே சொன்ன? அந்த பொண்ணு அத்தா பெரிய வீடு சொத்து சுகம்னு எல்லாத்தையும் விட்டு வந்திருக்குனால், அதுக்கு அங்கு என்னவோ பிரச்சனை இருக்குதுனு… நீ பாட்டுக்க கிளம்ப விடற ? இந்த பொண்ணு போய் கீழ சொன்னவுடனே, உங்க வீட்ல உடனே உனக்கு ஆரத்தி சுத்த போறாங்களா ?
முன்னடியாச்சும் பரவா இல்ல. ஏதோ கண்ணாலம் பண்ணிகிட்டான்னு நினைச்சிருப்பாங்க. இப்ப, கலயாணமாகம, ஒரு பொண்ணுகூட இருந்தனு உன் பேர ரிப்பேர் பண்ணிடுவாங்க. பொறவு எந்த வர்க்சாப் போனாலும் ரிப்பேர் பண்ணமுடியாது. பார்த்துக்க ? மானமும் மரியாதையும் ஸ்பார் பார்ட்ஸா என்ன ? கெட்டு போன மாத்துறதுக்கு?” என கூற,
பார்த்திபன் சிந்திக்க தொடங்கினான்….
பனிமலர் ஒருபுறமும் பார்த்திபன் ஒருபுறமும் சிந்திக்க, அவர்களின் சிந்தனையை தன்னை நோக்கி இழுத்து கொண்டிருந்தான் பூதம்…
“இரெண்டு யோசிக்கிதுங்க…ரொம்ப யோசிச்சா தெளிஞ்சிடுங்க. விடாதடா பூதம்” என பூதம் முணுமுணுத்தபடியே,
“என்ன இரெண்டு பேரும் நிக்குறீங்க நின்னுக்கிட்டே ரொம்ப நேரம் யோசிச்சால் நிக்கோலஸ் கட்டி வருமாம். போங்க போங்க…” என வாயில் வந்த எதையோ உளற,
“என்ன நிகோலஸ் கட்டியா?” எனப் பார்த்திபன் சந்தேகமாகப் பார்க்க,
“மண்ணாங்கட்டி விடமாட்டீங்குறானே…” எனப் புலம்பியவன், வெளியே “ஆமாம் நண்பா, ஒரு டாக்டர் கப்ஸாவாய்னு பேரு. அவரு தான் நம்ம நண்டுக்கிட்ட இந்த மண்ணாங்கட்டி பத்தி..சீ… து… வாயில சட்டுனு கொசு போய்டுச்சு. .
அதாவது நான் என்ன சொல்ல வந்தேனோ, இந்த நிக்கோலஸ் கட்டிய பத்தி சொன்னாராம். சரி நம்ம போவோம் வா…” எனப் பார்த்திபனை இழுத்து முன்னே நடக்க வைத்தவன், சட்டென்று பின் வந்தான்.
“இந்தா மலரு பொண்ணே, நீ பார்த்திபனுக்குப் பண்ணுன எல்லாத் தப்பையும் சரி பண்ணாம போகக் கூடாது. அம்புட்டு தான் சொல்லிப்புட்டேன்” என அவசரமாகக் கூறிவிட்டு பார்த்திபன் பின்னோடு நடையைக் கட்டினான்.
படிகளில் இறங்கி அந்த வீதியில் முன்னே நடந்து செல்லும் பார்த்திபனையும், மாடியில் நின்று பார்த்திபனை பார்த்து நிற்கும் பனிமலரையும் அவர்களுக்கு நடுவே நின்று பார்த்த பூதமோ,
“என் நண்பனும் நல்லவன். நீயும் நல்ல பொண்ணுமா… கல்யாணத்துல இருந்து ஓடி வந்திருக்கன, அந்தக் கல்யாணம் உனக்குப் பிடிக்கல.
ஊர கூட்டி பார்த்திபனை புருஷன்னு சொல்லிருக்க. அதுவே ஏன் உண்மையா ஆக கூடாது ?
நீ கெட்டதுனு நினச்சு பண்ணினது கூட அவனுக்கு நல்லதா முடிச்சிருக்கு. அப்போ நீ நிசத்துக்கே நல்லது செஞ்சால், என் பார்த்திபன் ரொம்ப நல்லா இருப்பான்” என எண்ணிக்கொண்டான்.
மாடில நிக்கிற ‘ப’ வையும் நடந்து போற ‘பா’ வையும் இந்தப் ‘பூ’ பூமாலைக்குள்ள கொண்டுவருவான்…
பூதம் களத்துல குதிச்சிடுடா” என உல்லாசமாகச் சபதம் எடுத்துக்கொண்டான்.