அகத்தியனும், எழிலும் மிக மிக குழப்பத்துடன் அமர்ந்திருந்தார்கள் எதிரே இருந்த தொலைகாட்சியில் ஓடிக்கொண்டிருந்த ஆதிஷேஷன் கொடுத்த பிரஸ்மீட்டை பார்த்துக்கொண்டே.
“என்ன மாமா இது? இந்த பொண்ணை போய்?…” என எழில் அதிர்ச்சியுடன் பேச,
“இல்லை. நானும் விசாரிச்சுட்டேன். மும்பைல எங்க இருந்தான்னு கூட தெரியலை…” என்று சொல்லிக்கொண்டே திரையில் தெரிந்த நக்ஷத்ராவை குழப்பத்துடன் பார்த்தான்.
“இந்த பொண்ணு?…” என யோசனைகள் கூட எழில் அவரை கேள்வியாக பார்த்தான்.
“என்ன மாமா? என்ன சொல்றீங்க? இந்த பொண்ணுட்ட என்ன இருக்கு? நல்லா போய் கட்டினான் இவன்…” எரிச்சலுடன் எழில் சொல்ல அகத்தியனுக்கு தனக்கே குழப்பமாக இருக்க அவனிடம் எப்படி சொல்ல என நினைத்தாலும் சொல்லிவிட்டார்.
“ஷக்தி…”
“ச்சே ச்சே, வாய்ப்பிருக்காது. அவளை நமக்கு தெரியாத என்ன?…” என்றான் எழில்.
அவன் சொல்லவும் அவனுமே ஷக்தியின் முகத்தை, உடல்வாகை தன் மனதில் கொண்டுவந்தவனாக மெய்மறந்து இருந்தான் அகத்தியன்.
“ஆமா மருமகனே, அவ கலரு, வனப்பு. அவ வேற…” என்று முணுமுணுப்பாய் வேகத்தில் சொல்லிவிட எழிலின் காதை எட்டவே இல்லை.
“அவ விரல்ல கூட லேசா அழுக்கு பட கூடாதுன்னு நினைப்பா. எத்தனை கவனிப்பு அவளை அவளே. இந்த பொண்ணோட கலரை பாருங்க. அதுவும் மூஞ்சி ஒட்டிப்போய்…” என்று எழில் முகம் சுளிக்கவும் இருந்த சந்தேகமும் பறந்து போனது அகத்தியனுக்கு.
“சரிதான் மருமகனே. ஒருநிமிஷம் அப்படி நினைச்சுட்டேன். சரி அது போகட்டும். இப்ப இந்த பொண்ணு யாருன்னு தெரியனுமே?…”
“மாமா, அதை நான் பார்த்துக்கறேன். கண்டுபிடிக்காம விடமாட்டேன்…” என்றான் எழில்.
இருவருக்குமே முன்பிருந்த ஷக்தியின் அழகை, நாசுக்கை, குணாதிசயத்தை கொண்டே இந்த பெண் அவளாக இருக்காது என்ற நம்பிக்கை வர அடுத்து ஷேஷாவின் மனைவியான இவளின் பின்புலத்தை ஆராய ஆரம்பித்தார்கள்.
எப்படியாகினும் அந்த அறக்கட்டளையை வசப்படுத்திவிட்டால் போதும். அரசியலில் சம்பாதிப்பதை விட கோடிகோடியாய் வருமானம். அதன் மூலம் சாதிக்க பல சதிகள் கொண்டு நரிகளாய் காத்திருந்தனர்.
எழிலின் மூலம் விஷயம் அறிந்த இளவேந்தன் ஒருவிதத்தில் நிம்மதியாக இருந்தாலும் இன்னொருபக்கம் பயந்துகொண்டே தான் இருந்தான்.
எழில் சொன்னதும் ஒருநொடி தன் யூகம் பொய்யோ என நினைத்தவனுக்கு அப்படி அல்ல என்று தோன்றிக்கொண்டே இருந்தது.
இது நிச்சயம் பூதாகரமாக வெடிக்கும் என காத்திருந்தவன் தான் நிம்மதி இழந்து போனான்.
என்ன நடக்கும், என்ன செய்ய போகிறான் ஷேஷா என்று நிமிடத்திற்கு நிமிடம் அச்சம் கூடிக்கொண்டே தான் சென்றது.
முன்பிருந்த இளவேந்தன் என்றால் எழிலுக்கும், அகத்தியனுக்கும் மேல் யோசித்திருப்பான். இப்போது அப்படி இல்லையே.
“இளா…” என்று அழைத்தபடி வந்த தன் மனைவி சுடர்கொடியை ஏறிட்டான்.
“என்ன சுடர்?…” என இருக்கையில் இருந்து எழுந்துகொள்ள,
“அம்மாக்கிட்ட இருக்கா. நாளைக்கு நாம் போகும் போது அவளை அழைச்சிட்டு போவோம்…”
“இப்போ நீ எங்க கிளம்பிட்ட?…” என்ற அவனின் கேள்விக்கு,
“வேற எங்க? அம்மா வீட்டுக்கு தான். போய்ட்டு பேபியை பார்த்துட்டு அப்படியே ப்ரெண்ட்ஸ் கூட மஹாபலிபுரம் போறேன். நீங்க வந்து என்னை அங்க பிக்கப் பண்ணிக்கோங்க…” என சொல்லிவிட்டு அவனின் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டாள்.
அவளின் தாய்வீடு அருகில் தான் என்றாலும் அவ்வளவாய் இளவேந்தன் சென்றுகொள்ளமாட்டான்.
அதிலும் ஹாசினி பிறந்த பின்னர் இன்னுமே அங்கே செல்வதை குறைத்துக்கொண்டான். அவன் எந்தளவுக்கு குறைத்தானோ மகளை அங்கே கொண்டு விடுவதை அவன் மனைவி அதிகமாக்கினாள்.
உறவுக்காய் திருமணம் என்று சொல்லிக்கொண்டாலும் அதையும் தாண்டி சொத்துக்கள் வெளியே சிதறிவிட கூடாது என்பதற்காக ஒரு திருமணம் அது. கடமைக்கு ஒரு வாழ்க்கை.
முகத்தை கைகொண்டு துடைத்தவன் எழுந்து வெளியே கிளம்பினான். சுவைக்காத வாழ்க்கை, என்னை நீ கேட்காதே, உன்னை நான் கேட்கமாட்டேன் என்பதை போல சுடர்கொடி.
கையை விட்டு நழுவிச்செல்லும் நீரை போல எல்லாம் பட்ட பின் தான் புத்தி வருகிறது. தன்னை நினைத்தே வெட்கிக்கொண்டான்.
வெளியில் குடும்பத்தை தான் சிறப்பாக நடத்துவதாக பேர் பண்ணிக்கொண்டவன் உண்மைக்கும் அந்த குடும்பம் தான் அவனை ஏனோதானோவென நடத்தி செல்கிறது.
சுயநலம், இப்போதும் சுயநலம் தான். ஆனால் தன் குழந்தை என்று வரும் பொழுது கொஞ்சமேனும் யோசிக்க தேர்ந்திருக்கிறான்.
ஒருவழியாக மனதை திசைதிருப்பியவன் இவற்றில் இருந்து வெளிவர வெளியே கிளம்ப ஆயத்தமானான்.
—————————————————
காலை பிரஸ்மீட் முடிந்து உள்ளே நுழையும் பொழுது நக்ஷத்ரா ஷேஷாவை பார்த்தது.
அதன் பின்னர் மதிய உணவு கடந்தும் அவனை காணவில்லை. வீட்டில் உள்ளானா இல்லையா என்பதே தெரியாத அளவிற்கு தான் நக்ஷத்ராவும் இருந்தாள்.
அந்த அறைக்குள்ளேயே சிறைவாசம் போல இருநாட்களுக்கே தாளமுடியவில்லை. இப்படியே இருந்துவிடுவோமோ என மூச்சடைத்து போக வேறு என்ன செய்யலாம் என்ற யோசனையில் குழப்பம் தான் மிஞ்சியது.
திருமண உடையை மாற்றிவிட்டு மீண்டும் சாதாரண குர்தா பேண்டிற்கு மாறியவள் கழுத்தில் கிடந்த மாங்கல்யத்தை வைத்து பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
இடையே ஒரு நேரம் வெளியே வந்து பார்க்க அதிகாலை திருமணத்தின் போது வந்திருந்த அந்த மனிதர் ஒரு அறையில் இருந்து பவனுடன் சேர்ந்து ஏதோ பேசிக்கொண்டே வெளியே செல்வதை கவனித்தாள்.
‘இவர் இன்னும் இங்க தான் இருக்காரா?’ என நினைத்தபடியே மீண்டும் அறைக்குள் முடங்கிக்கொண்டவள் இரவு உணவு வந்ததும் பசியின்றியும் கொஞ்சமாய் உண்டுவிட்டு படுக்கையில் விழுந்தாள்.
நடு இரவு வரை உறக்கம் வராமல் இருந்தவள் லேசாய் கண்ணை மூட வழக்கம் போல ஆழ்ந்த உறக்கமின்றி மீண்டும் பிரண்டு படுக்கையில் தனக்கருகே உறங்கிக்கொண்டிருந்தவனை கண்டு அதிர்ச்சியுடன் எழுந்துவிட்டாள்.
“ஷக்தி, தூங்கலையா நீ?…” என சாவகாசமாக கேட்டபடி ஒருபக்கமாய் திரும்பி படுத்தான் ஷேஷா.
“நீங்க ஏன் இங்க வந்தீங்க?…” என எழுந்து நின்றுவிட தானும் எழுந்து சாய்ந்து அமர்ந்துகொண்டவன் அருகில் இருந்த வாட்சில் நேரத்தை பார்த்தான்.
இரண்டரை மணிக்கு இப்படி ஒரு கேள்வி. அன்றுதான் திருமணம் முடிந்திருந்த நிலையில்.
“இது நம்ம ரூம் ஷக்தி…” என அமைதியாகவே அவளுக்கு கூறினான்.
“இது எனக்கு நீங்க குடுத்த ரூம். இது எப்படி இன்னைக்கு நம்ம ரூம் ஆகும்? அதுவும் நான் லாக் பண்ணிருந்தேன் தானே?…” என கதவையும் பார்த்துவிட்டு அவனிடம் கேட்க,
“இது ரெண்டு வாரம் முன்னாடி வரைக்கும் என்னோட ரூமா இருந்தது. நீ இங்க வரதுக்கு முன்னாடி எல்லாத்தையும் நமக்கு ஏத்த விதமா நான் மாத்தினேன்…”
“இதை நீங்க எனக்கு சொல்லவே இல்லை…”
“சொல்லும்படியா இந்த ரெண்டு நாளும் இல்லை ஷக்தி. ஆனா சொல்லனும்னு நினைச்சேன். ஹ்ம்ம்…” என்று தலையை ஆட்டிக்கொள்ள ஆயாசமாக இருந்தது அவளுக்கு.
“நீ இருந்தவரைக்கும் என் மனைவி ஆகற வரைக்கும் உன்னோட பர்மிஷன் இல்லாம வர கூடாதுன்னு தான் நாக் பண்ணிட்டு நீ ஓபன் பண்ணினதும் உள்ள வருவேன். இப்போ அவசியமில்லையே…” என்றவனை விழிகள் தெறிக்க பார்த்தாள்.
“ஸீ ஷக்தி, ஹஸ்பண்ட் அன்ட் வொய்ப் ஆகிட்டா உடனே இன்டிமேட்டா வாழனும்னு இல்லை. வீ ஆர் அடல்ட்ஸ். என்னால புரிஞ்சுக்க முடியும். வெய்ட் பண்ணவும் முடியும். சோ நீ இவ்வளோ ரியாக்ட் பண்ணனும்னு இல்லை. ஆனா நாம சேர்ந்து தான் இந்த ரூமை ஷேர் பண்ணிக்க போறோம்…”
“உனக்கு டீப் ஸ்லீப் இல்லையோ? ஏன் ரோல் ஆகிட்டே இருக்க?…” என்றான்.
“நான் தனியா இருக்கும் போது என்னால அப்படி ஆழந்து தூங்கிட முடியாது ஷேஷா. தூக்கமும் அவ்வளவு ஈஸியா வராது. அதுவே பழகிருச்சு…” என சொல்லி இன்னும் அவள் நின்றபடி தான் இருந்தாள்.
அவள் சொல்லியது சுருக்கென்று நெஞ்சை கிழித்தாலும் அதை காட்டிக்கொள்ளாமல் பேசினான்.
“வா, வந்து தூங்கு…” என சொல்லியவன் அவளுக்கு முதுகு காட்டி திரும்பிவிட ஓரமாய் அமர்ந்தவள் சாய்ந்துகொண்டாள்.
உறக்கம் சுத்தமாய் சென்றுவிட்டிருந்தது அவளைவிட்டு. மனதிற்குள் பயப்பந்தும், கூடவே ஒரு ஒவ்வாத உணர்வும்.
அது ஷேஷாவை கொண்டு அல்ல என்றாலும் அவனருகே இப்படி இருக்க முடியவில்லை.
இதில் அவன் சொல்லியது வேறு மனதை அறுத்தது. காலை மடித்து அதில் தலைசாய்த்தவள் கண்ணை மூடினாள்.