25
இப்போதெல்லாம் ஆருத்ரனே அழைத்து வந்துவிடுவதால் அன்னப்பூரணி மருத்துவமனைக்கு உடன் வருவதில்லை. அருளாசினிக்கு ஐந்து மாதம் ஆகியிருந்தது, வயிறு மேடிட தொடங்கியிருந்தது.
மெல்லிய உடல்வாகுடன் இருந்தவள் லேசாய் பூசியிருந்தாள், கன்னத்தில் சதை வைத்திருந்தது. முன்பைவிட இப்போது இன்னும் லட்சணமாக தெரிந்தாள்.
“நீ இங்க உட்காரு நான் போய் மருந்து வாங்கிட்டு வர்றேன்” என்றவன் சிறிது நேரத்தில் மருந்து மாத்திரைகளுடன் வந்தான்.
“போகலாம்” என்று சொல்லி அவளையும் அழைத்துக் கொண்டு காருக்கு சென்றான். “என்னாச்சு எதாச்சும் கவலையா இருக்கியா??” என்றான் உண்மையான அக்கறையுடன்.
“இல்லை…”
“அப்புறம் ஏன் பீபி அதிகமா இருக்குன்னு டாக்டர் சொல்றாங்க”
“எனக்கெப்படி தெரியும் அவங்க தானே சொன்னாங்க அவங்ககிட்டவே கேளுங்க” என்று எரிந்து விழுந்தாள் அவள்.
“உனக்கு ரொம்ப கோவம் வருது. இப்படி இருந்தா பிரஷர் கூடத்தானே செய்யும். நல்ல பாட்டை கேளு, சந்தோசமா இரு. உனக்கென்ன கவலை இருக்கு, தேவையானதை கேளு நான் வாங்கிட்டு வர்றேன்”
“பேசாம வண்டி எடுக்கறீங்களா??” என்றாள் அடக்கி வைத்த கோபத்துடன்.
“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்”
“எதுவும் சொல்ல வேண்டாம்ன்னு தான் சொல்றேன். வண்டி எடுங்க”
அவன் அதற்கு பின் எதுவும் பேசவில்லை. அவளை அழைத்து வந்து வீட்டில் விட்டான். அன்னப்பூரணி “டாக்டர் என்ன சொன்னாங்க அருளு??” என்றார்.
“பேபி நல்லா இருக்காம் அத்தை. இது ரெகுலர் செக்கப் தானே, வேற ஒண்ணுமில்லை” என்று இவள் சொல்லிக் கொண்டிருக்க “ம்மா என்னாச்சுன்னு என்னை கேளுங்க” என்றான்.
“என்னாச்சு ருத்ரா??”
“டாக்டர் பீபி அதிகமா இருக்குன்னு சொன்னாங்க. உப்பு குறைக்க சொல்லி இருக்காங்கம்மா…” என்று இவன் அத்தனையும் சொல்லி முடித்திருந்தான்.
“என்னாச்சு அருளு இவன் சொல்றது எல்லாம் உண்மையா. நீ எதுவும் இல்லைன்னு சொல்ற, இவன் இவ்வளோ சொல்றான்” என்றார் அப்பெண்மணி.
“ஆமா அத்தை டாக்டர் அப்படித்தான் சொன்னாங்க. போன முறை இவ்வளவு பீபி இல்லையே எனக்கு. பீபி எல்லாம் ஏறி இறங்கறது தானே, அடுத்த முறை பார்க்கலாம் அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்ன்னு அவங்களே தான் சொன்னாங்க. அதை சொல்லலையே உங்க பிள்ளை” என்றாள்.
“அடுத்த தடவை கதை எல்லாம் அப்போ பார்த்துக்கலாம். இப்போ டாக்டர் சொன்னதை செய்ங்க” என்றான் தன் அன்னையை பார்த்து.
“சரிடா இனிமே செய்யறேன், இப்போ வந்து சாப்பிடுங்க ரெண்டு பேரும்” என்று நகர்ந்து விட்டார் அவர்.
“ருத்ரா எப்போ ஊருக்கு கிளம்பறே??”
“நாளைக்கும்மா”
“நைட்டுக்கு என்ன பண்ணட்டும் ருத்ரா??”
“நான் வெளிய வாங்கிட்டு வர்றேன்மா இன்னைக்கு உங்களுக்கு ரெஸ்ட்”
“வேணாம்டா அதான் டாக்டர் வேற உப்பை குறைக்க சொல்லி சொல்லி இருக்காங்கல எதுக்கு அங்க வாங்கிட்டு”
“அப்படியா சொல்றீங்க… சரி அவளுக்கு என்ன வேணுமோ செய்ங்க” என்றுவிட்டான்.
அருளாசினி ஒன்றுமே பேசவில்லை. அவளுக்கே தெரிகிறது அவளின் எதிர்பார்ப்பு அர்த்தமில்லாதது என்று. இதுவரையில் அவளுக்கு எதன் மேலும் பிடிப்போ ஆசையோ வந்ததேயில்லை.
ஆருத்ரனின் மீது இப்படியொரு அன்பை வைப்போம் என்று அவளே எதிர்பார்த்திருக்கவில்லை. அது எந்த கணத்தில் உருவானது என்றும் அவள் அறிந்திருக்கவில்லை. 
அவனைவிட்டு ஸ்ரீரங்கம் வந்த பின்னே தான் அவளுக்கே அது உறைத்தது. ஒரு மாதிரி சலிப்பாகவே இருந்தது அவளுக்கு. ஆருத்ரன் பிள்ளைக்காகத் தானே சொல்கிறான், அது தன் நல்லதிற்கும் தானே என்று நினைக்க முடியவில்லை.
அதுவே அவளை எரிச்சலடைய வைத்தது. அவள் மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு மீண்டும் பள்ளிக்கு சென்று விட்டு வந்தாள். இதோ பள்ளி முடிந்து வீட்டிற்கும் வந்துவிட்டிருந்தாள்.
முதல் நாள் ஓடிவந்து அவனை கட்டிக்கொண்டவள் தான். அதற்கு பின்னர் எதுவும் இல்லை, பேச்சுக்கூட ஹ்ம்ம் ஹான் என்பது போலத்தான் வந்தது. ஆருத்ரன் அதை இன்னமும் ஊன்றி கவனித்திருக்கவில்லை.
இரவு உணவு முடிந்து அன்னப்பூரணி படுக்கச் சென்றுவிட்டார். “தூங்கலையா நீ??” என்றான் அறைக்குள் நுழைந்தவாறே.
“தூக்கம் வரலை…”
“நேரத்துக்கு படுத்து தூங்கு அதான் பேபிக்கு நல்லது” என்று அவன் சொல்லவும் அதுவரை தான் இப்படி யோசிக்க கூடாது அப்படி யோசிக்கக் கூடாது என்று எண்ணியிருந்தவளுக்கு அந்த எண்ணம் மீண்டும் தலைத்தூக்கியது. ‘என்னைப்பத்தி எதுவுமே தோணாதா எல்லாமே பேபி தானா’ என்ற ஆயாசம் வந்திருந்தது.
“சரி கொஞ்ச நேரம் நடக்கலாம் அப்புறம் வந்து தூங்கு. வர்றியா மாடிக்கு வேணா போய் வாக் பண்ணுவோம்” என்று அழைக்க அங்கு வந்த முதல் நாள் இருவரும் மொட்டைமாடியில் பேசிக் கொண்டிருந்தது ஞாபகத்தில் வந்து லேசாய் புன்னகை அரும்பியது அவள் முகத்தில். அதே எண்ணத்தில் அவளும் சரியென்றிட இருவரும் படியேறினர். “இன்னைக்கு அமாவாசையா??”
“தெரியலை ஏன்??”
“நிலாவை காணோமேன்னு கேட்டேன்”
“என்கிட்ட எப்பவும் சொல்லிட்டு போகாதே. சொல்லிருந்தா எனக்கு தெரிஞ்சிருக்கும்” என்றாள் இவள் இடக்காய்.
“எதுக்கு ஏட்டிக்கு போட்டியாவே பேசிட்டு இருக்கே. நான் என்ன தப்பா கேட்டேன்”
“நீங்க சரி தான் நான் தான் தப்பு” என்று வாயைவிட்டாள்.
“என்னாச்சு உனக்கு?? சும்மாவே டென்ஷன் ஆகறே அது உனக்கும் நல்லது இல்லை…” என்று அவன் சொல்ல “பேபிக்கும் நல்லதில்லை அதானே” என்று அவனுக்கு முன்னே முடித்திருந்தாள் அவள்.
“தெரிஞ்சா சரி, உடம்பை கெடுத்துக்காத அவ்வளவு தான் சொல்வேன்”
“என் உடம்பை பத்தி நீங்க எதுக்கு கவலைப்படறீங்க”
“என்ன முட்டாள்த்தனமான கேள்வி இது. நீ எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கே எனக்கு புரியலை. என் கோபத்தை கிளறாத. அது உனக்கு நல்லதில்லை. உன்னைப்பத்தி நான் கவலைப்படாம வேற யார் கவலைப்படுவா??” 
“என்னைப்பத்தி உங்களுக்கு என்ன கவலை, ஓ!! என் உடம்பு போய்டுமேன்னு கவலையா. இல்லை உங்க பேபிக்கு எதுவும் ஆகிடும்ன்னு கவலையா” என்று இவள் கேட்டுவிட அவனுக்கு சுறுசுறுவென்று கோபம் ஏறியது.
தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு “பேச்சு வேற மாதிரி போகுது சரியில்லை, நானும் பொறுமையா போயிட்டு இருக்கேன்”
“போதுங்க என்னால முடியலை. உங்களோட கவலை என்ன உங்க பிள்ளை பத்தி தானே. அதெல்லாம் நல்லபடியா பெத்துக் கொடுப்பேன்னு அன்னைக்கே சொல்லிட்டேன்ல”
“அருளாசினி” என்றான் சத்தமாய்.
“இரண்டாவது இல்லனா மூணாவது தடவைன்னு நினைக்கிறேன். என்னன்னு பார்க்கறீங்களா என் பேரு சொல்லி நீங்க கூப்பிடுறது” என்றாள் இவள்.
“உனக்கு இன்னைக்கு என்னாச்சு. எதுக்கு இப்படி பேசிட்டு இருக்கே, நேத்து கூட நல்லாத் தானே பேசினே”
“நேத்து நான் என்ன நல்லா பேசினேன். நீங்க கேட்டீங்களா நான் நல்லா பேசினதை”
அவன் பதில் சொல்லாமல் புருவம் சுருக்கி அமைதியாக பார்த்தான் அவளை. அவள் மனதில் இருப்பதை அவளே சொல்லட்டும் என்றிருந்தான் போலும். “சொல்லுங்க நீங்க கேட்டீங்களா நான் பேசினதை”
“நேத்து நைட் முழுக்க நீங்க பேசினீங்க நான் கேட்டேன். அதே தான் இன்னைக்கும் நடந்துச்சு. உங்களுக்கு குழந்தையை தவிர என்கிட்ட பேச வேற எதுவும் இல்லைல”
“சரி எனக்கொண்ணு சொல்லுங்க, குழந்தை பிறந்த பிறகு என்னை என்ன செய்யறதா உத்தேசம். குழந்தைக்காக தான் இந்த கல்யாணம்ன்னா நான் எங்கயும் உங்களுக்கு முக்கியமா தோணலையா??” என்றவள் அவள் மனக்குமுறலை எல்லாம் கொட்டினாள். எப்போதும் பாயின்ட் பாயின்டாக பேசுபவள் இப்போதும் அதே போலவே அவனை வறுத்தாள்.
“சோ நீ சொல்ற மாதிரி நான் உன்னை குழந்தைக்காகத் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அப்படித்தானே”
“வேற எதுக்காகன்னு நீங்களே சொல்லுங்க ஏன்னா எனக்கு புரியலை எதுக்காகன்னு. எனக்குன்னு எப்பவும் யாருமே இருந்ததில்லை. நீங்களா வந்தீங்க, கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னீங்க”
“நமக்கான உறவு கிடைச்சதுன்னு சந்தோசப்படும் போது அதுவும் குழந்தைக்காகன்னு சொல்லிட்டீங்க. கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க சொன்னது தான் முதல்ல குழந்தை தான்னு”
“எல்லாம் தெரிஞ்சாலும் புரிஞ்சாலும் என்னால கேட்காம இருக்க முடியலை. அஞ்சாறு மாசம் ஆச்சு நமக்கு கல்யாணம் ஆகி, என் மேல எங்கயும் உங்களுக்கு ஒரு எண்ணம் வரலையா??” என்றாள் ஆதங்கமாய்.
“அப்புறம் என்னை எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க உங்களை நிருப்பிக்க தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா” என்று மீண்டும் வார்த்தையைவிட்டவளின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்துக் கொண்டிருந்தது.
ஆருத்ரன் ரௌத்திரமாகி இருந்தான் அவள் சிதறவிட்ட வார்த்தைகளினால்.“உன்னை எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டேன் உனக்கு தெரியணும் அதானே”
அவள் பதில் சொல்லவில்லை, முகத்தை மூடி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தாள். யாருமற்ற நிராதராவான நிலை தன் மேலேயே அவளை கழிவிரக்கம் கொள்ளச் செய்தது.
இனி குழந்தை தான் தனக்கு ஆதரவு என்று எண்ண முடியாமல் ஆருத்ரனின் பேச்சு முழுதும் குழந்தையாகவே இருக்க அதுவும் தனக்கில்லை என்ற எண்ணம்  எல்லாம் சேர்ந்து மனதை அழுத்தியது.
வெகு நாட்களாய் அழுத்திக் கொண்டிருந்த பாரம் தாள முடியவில்லை அவளால். கொண்டவனின் அக்கறையும் இல்லை குழந்தையும் தனக்கில்லை என்று அவள் அதிகம் யோசித்திருந்தாள்.
பெரும்பாலான தனிமையான இரவு பொழுதுகள் அவளை அப்படி சிந்திக்க செய்திருந்தது. அவன் வரவு எந்தளவிற்கு அவனை குறித்தான அவளின் தேடலை சொல்லியதோ அதே அளவிற்கு தன் மீதான் அவனின் நேசத்தையும் எதிர்பார்த்திருந்தது.
“அப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை அப்படித்தானே”
“நீ ஏன் இனி பேசப் போறே. அதான் எல்லாம் பேசி தீர்த்திட்டியே. ஆமா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது குழந்தைக்காக தான். அதுல உனக்கு எந்த சந்தேகமும் வேணாம், ஏன்னா அது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும்”
“ஆமா என்னடி தெரியும் உனக்கு என்னைப்பத்தி. அக்கறைன்னா என்ன கண்ணே மணியேன்னு சினிமா டயலாக் பேசுறதா சொல்லு, டயலாக் பேசுறதா. அப்படி தான்னா எனக்கு அது வராது”
“எல்லாம் என் நேரம்டி, நேரம். வாழ்க்கையில ஒரு தடவை பிசகிருச்சு அது இப்போ வரைக்கும் என்னை தொடருது. ஒருத்தி போய் கெடுத்தா நீ பேசி நம்ம வாழ்க்கையை கெடுக்கற”
“உங்களுக்குலாம் நான் என்ன பாவம் செஞ்சேன் சொல்லுங்க. என் கூட அஞ்சு மாசம் வாழ்ந்திருக்கே என்னை நீ என்ன புரிஞ்சுக்கிட்ட, இதான் நீ புரிஞ்சுகிட்டதா. குழந்தையை பத்தி பேசினா உன் மேல அக்கறை இல்லைன்னு அர்த்தமா”
“நீ இல்லாம அந்த குழந்தை எனக்கு எப்படி வந்துச்சு சொல்லு.குழந்தை தான் வேணும்ன்னா அவ போனப்பவே வேற கல்யாணம் பண்ணியிருப்பேன். இவ்வளவு நாள் காத்திருக்கணும்ன்னு அவசியமில்லை”
“போடி பெரிய இவளாட்டம் பேசுறா, எனக்கு யாருமில்லை வெங்காயமில்லைன்னுட்டு. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு காரணம் குழந்தை, ஆனா அது மட்டும் காரணமில்லை”
“உறவுகள் இல்லாத போலியான உறவுகள் மத்தியில தனியா இருந்த நீயும் நானும் சேரணும்ன்னு ஏன் நினைச்சேன். உனக்கு நான் எனக்கு நீன்னு இருக்கணும்ன்னு தான்”
“எனக்கு காதல் வசனம் பேச வராது. நீ எதிர்பார்க்கிற எந்த குவாலிட்டிஸ் என்கிட்ட கிடையாது. அதெல்லாம் தான் உனக்கு வேணும்னா, அதைத்தான் நீ எதிர்பார்க்கிறேன்னா அதுக்கு நான் ஆள் இல்லை”
“உனக்கு நான் வேணாம்ன்னா நீயும் போய்டு என்னைவிட்டு. எனக்கொண்ணும் அது புதிசில்லை. எப்பவும் சொல்வியே குழந்தையை பெத்து கொடுத்திடுவேன்னு”
“அப்படியே செய் பெத்து கொடுத்திட்டு போ. இனி என்ன இருக்கு நமக்குள்ள, இனிமே நான் இங்க வரலை, போறேன்” என்றுவிட்டு உடனே கீழே இறங்கிச் சென்றவன் வேறு உடைக்கு மாறி வண்டியை எடுத்துக்கொண்டு சென்றேவிட்டான்.
அருளாசினிக்கு அழுவதா சந்தோசப்படுவதா என்ற மனநிலையே. ஆருத்ரன் பேசி சென்ற வார்த்தைகள் அவள் காதில் ரீங்காரமிட்டது இன்னும். “நீ இல்லாம குழந்தை இல்லை” என்று அவன் சொன்ன வார்த்தைகள் அவளை குளிர்வித்தது என்றால் மிகையாகாது.
அவளுக்கு ஆருத்ரன் இனி வரமாட்டேன் என்று கீழே சென்றது கருத்திலேயே படவில்லை. அதுவரை கவலையில் அழுதுக் கொண்டிருந்தவள் சந்தோசத்தில் அழுதாள்.
வண்டி கிளம்பும் சத்தம் கேட்கவும் தான் பதறிக் கொண்டு இவள் கீழே வர ஆருத்ரன் சென்றே விட்டிருந்தான். எந்த நேரத்தில் நீ என்னைவிட்டு போ என்று சொன்னானோ அதுவே நடக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால் அந்த வார்த்தையை சொல்லியிருக்க மாட்டானோ?? என்னவோ??