ஆனால், காஞ்சிபுரம், லேன்ட், தனசேகர்.. என பேசும் போது.. எந்த விவரமும் தெரியவில்லை நந்தனுக்கு. இப்போதுதான் அதில் தான் முதலீடு செய்த பெரிய தொகையின் அளவு புரிந்தது. தனசேகர் என்பதால், தான் எவ்வளவு அசால்ட்டாக இருந்துவிட்டேன் என தன் நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தார் நந்தன்.
அதை தொடர்ந்து எங்கே.. எப்படி அதனை சரி செய்வது என கங்கா ஆலோசனை சொல்லிக் கொண்டும், அதற்குண்டான ஏற்பாடுகள் போனில் செய்துக் கொண்டும் இருந்தார். எல்லாம் உடனே நடக்காதே.. எனவே தன் நண்பனை அமைதிப்படுத்தினார் கங்கா  “இரு, நந்தா… எங்க போயிட போகுது… பார்க்கலாம் தேவைப்படும் பட்சத்தில்.. லீகலா கூட நம்ம பார்க்கலாம். நீ, பொறுமையா இரு” என ஏதேதோ சொல்லி நந்தாவை சற்று அமைதிப்படுத்தினார்.
உண்டு மீண்டும் பேசி.. என அன்றைய நாள் முழுவதும் அங்கேதான் சென்றது அவர்களுக்கு.. மாலை ஏழுமணிக்கு சென்னை நோக்கி கிளம்பினர். அதே மிதமான வேகத்தில் நந்தா, கார் ஓட்டினார்.. 
சற்று நேரத்தில், என்னமோ ஒரு அன்ஈஸி.. பீலிங்.. எதோ இறைச்சல்.. வாகனமே அதிகம் இல்லாத சாலையில்.. நந்தாவின் கண் கூசும் படி.. விளக்கு.. பின்னாலிருந்து.. விழத் தொடங்கியது.
கங்கா “என்ன.. என்ன… டா..” என கேட்டார் அவ்வளவுதான் தெரியும்… அதன்பின் எதுவும் அவர்கள் வசம் இல்லை.
பின்னால் வேகமாக வந்த லாரி.. இவர்களின் காரை இடித்து தள்ளி சாய்த்து சென்றது.
எதோ சத்தம் என பின்னால் வந்த வாகனகளில் உள்ளே மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி, இறங்கி.. பார்த்து, போலீஸ் வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனை சேர்ப்பித்தனர்.
ஒரு மணி நேரத்தில் நந்தா, கங்காவின் நிலை.. இப்படி ஆகி இருந்தது. அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர்.. அவர்களின் போன்களை ஆராய்ந்தது போலீஸ். நந்தன் கடைசியாக மாதவனிடம் பேசியிருக்க மாதவனுக்கு தகவல் சென்றது.
மாதவன் மருத்துவமனை வரவே மணி பத்து.. என்ன ஏது என விவரம் கேட்க்க.. நந்தனுக்கு தலையில் நல்ல அடி.. கங்காவிற்கு.. இடது பக்கம் தோள் பகுதி கீழே விழுந்ததில்.. மூட்டு நழுவி இருந்தது.. இப்படி அடி நிறைய.
மாதவன், நந்தாவின் மருத்தவரை தொடர்பு கொண்டான். உடனே சென்னையில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு மாற்றினர் இருவரையும்.. ஆக, இதெல்லாம் ஒன்று ஒன்றாக செய்ய.. விடியலை தொட்டது நேரம்.
இங்கே இந்த மருத்துமனையில்… தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தனர் இருவரும். கங்காவிற்கு உடனே அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு ஆனது. 
நந்தாவிற்கு, காலில் அடி, அதற்கு அறுவை சிகிச்சை நடந்தது. எல்லாவற்றுக்கும் மாதவன்தான் முன் நின்றார். இன்னும் இருவரின் வீட்டிற்கும் தகவல் சொல்லவில்லை.
எப்போதும் நந்தா எங்கும் சொல்லி செல்லும் பழக்கம் இல்லை, அதனால் வீடு வராதது தெரியவில்லை அம்முவிற்கு. கங்கா.. வீட்டில் சொல்லித்தான் வந்தார்.. ‘இன்று இரவு.. அங்கேயே தங்கினாலும் உண்டு’ என அதனால் யாரும் அழைக்கவில்லை.
மாதவன், இப்போதுதான் ஓய்ந்து போய் அமர்ந்தார். மருத்துவர்கள் வந்தனர் ஒன்றும் ஆபத்தில்லை என்றார்கள். ஆனால், நந்தாவின் தலையில் ஏற்பட்ட அடிக்குதான் சரியாக பதில் சொல்ல முடியாமல்.. ‘கண் விழிக்கட்டும் பார்க்கலாம்’ என்றனர்.
காலை மணி எட்டு, இப்போதுதான் மாதவன் அம்முவிற்கு அழைத்து சொன்னார்.. “வா ம்மா.. அப்பாக்கு உடம்பு சரியில்லை, வா” என்றார்.
அம்மு கல்லூரி கிளம்பிக் கொண்டிருந்தாள். அதை கேட்டதும்.. பத்து நிமிடம் ஒன்றும் புரியவில்லை.. அவளுக்கு, தன்போல் “அம்மா… அம்மா… எங்க ம்மா இருக்க..” என தாளாமல் அறற்றினாள் பெண்.
‘அ.. அன்றும்… இப்படிதான் அம்மாவிற்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க..’ என தன் அம்மாவின் அன்றைய நாள் நினைவு வந்தது. கைகள் நடுங்கியது.. மன நடுக்கத்தின் வெளிப்பாடாக.
தன்னைத்தானே சரி செய்துக் கொண்டு கீழே வந்தாள்.. யாரிடம் சொல்லுவது செண்பா இல்லை.. தாத்தாவிடம் எப்படி சொல்லுவது பயமாக இருந்தது.. வெளியே செக்யூரிட்டி இருந்தார்.. அவரிடம் “டிரைவர் அண்ணா எங்க” என்றாள்.
அவர் “இன்னும் வரலைம்மா.. வர நேரம்தான் வந்திடுவார்…” என்றார்.
என்ன செய்தாவது என தெரியவில்லை.. மனம், உடல், மூளை எல்லாம் ஸ்தம்பித்து நின்றது. ஒரே எண்ணம் ‘அங்க போகணும்..’ அதுமட்டும்தான். ஆனால்  எப்படின்னு தெரியலை.. அந்த இடத்திலேயே காத்திருந்தாள் பெண்.
செக்யூரிட்டி “உள்ள போங்க பாப்பா, வந்திடுவார்..” என்றார்.
ஏதும் பேசவில்லை பதில்.. அப்படியே வெறித்து பார்த்து நின்றிருந்தாள். மனமெல்லாம் ‘அன்னிக்கு அம்மாவையும் இப்படிதான் உடம்பு சரியில்லை சொன்னாங்க.. கடைசியில்.. எல்லாம் மூடிதான் பார்க்க விட்டாங்க.. இப்போ அப்பாக்கு… என்ன..” என மனம் ஓடிக் கொண்டிருந்தது நிற்காமல்.
நல்ல நேரம் டிரைவர் அண்ணா வந்துவிட்டார்.. தன் டூ வீலர் நிறுத்திவிட்டு அவசரமாக வந்தார் அம்முவிடம் “என்ன பாப்பா” என்றார்.
ஒன்றும் பதிலே இல்லை அவளிடம், செக்யூரிட்டி “பாப்பாக்கு, படிக்க நேரமாச்சு போல, நீ வண்டி எடு” என்றார்.
அவரும் சென்று கார் எடுத்து வந்தார்.. அதை பார்த்ததும் அம்மு, காரில் ஏறிக் கொண்டாள். செக்யூரிட்டி “பாப்பா பை… பை எடுக்காம போற” என்றார்.
அம்மு “அண்ணா, நீங்க வண்டி எடுங்க.. நான் வரேன் அங்கிள்” என்றவள் கிளம்பிவிட்டாள்.
டிரைவர் கல்லூரி நோக்கி வண்டியை விட.. அம்மு தன் போன் எடுத்து.. பேசினாள் “அங்கிள் எந்த ஹாஸ்பிட்டல் “ என்றாள்.
கண்ணில் நீரோ தடுமாற்றமோ இல்லை பேச்சில்.. என்னவென தெரியாத மூடிய கதவாகதான் அம்முக்கு இருந்தது இந்த நிமிடம்.. அம்மு “அண்ணா, அங்க.. அந்த ஹாஸ்பிட்டல் போங்க” என்றாள்.
அவர் அதை தொடர்ந்து ஏதேதோ கேட்டார்.. பதிலே வரவில்லை அவளிடமிருந்து, அவர் மனது கேளாமல் “ஒன்னும் ஆகாது ம்மா” என என்னமோ சொன்னார்.
அவளுக்கு அதெல்லாம் காதில் கூட விழவில்லை.. மீண்டும் மீண்டும் “அம்மா.. அம்மா..” என அறற்றியது மனது.
மாதவன், முன்பே வாசலில் நின்றிருந்தார்.. அம்மு இறங்கி.. உள்ளே வர.. மாதவன் “வா ம்மா..” என அழைத்து முன்னால் நடந்தார்.
அம்முக்கு பயம் நடுக்கம் எல்லாம் சேர வர, என்ன கேட்கிறோம் என தெரியாமலே அந்த இருபது வயது பெண் “அப்பா.. இருக்காரா அங்கிள்” என்றாள் மரத்துபோனக் குரலில். ம்.. குரல் மட்டுமல்ல மனதும் மரத்து போய்விட்டது பெண்ணுக்கு. எல்லோரும் தன்னை விட்டு போய்விடுவார்கள் என மனது இந்த அரை மணி நேரமாக எண்ணிக் கொண்டிருக்கிறதே.. அவளும் என்னத்தான் செய்வாள்.. வார்த்தைகள் வந்துவிட்டது.
மாதவன் திரும்பி அம்முவை பார்த்தார் “வா ம்மா.. வா” என்றார். ஐசியூ வராண்டா.. தனியான அறை.. அமைதியான இடம்.. என அந்த சூழ்நிலை மேலும் மேலும் அவளை மிரட்டியது.
கண்ணாடி வழியாக தன் தந்தையைப்  பார்க்க அனுமதித்தனர், அருகில் செல்ல முடியவில்லை. அம்முவிற்கு, தந்தையின் இந்த தோற்றம், பயத்தை தந்தது.. நம்ப முடியவில்லை அவர் உயிரோடு இருக்கிறார் என.. தொட்டு பார்க்க வேண்டும் போல இருந்தது.. அவரின் கைகளில் எப்போதும் உணரும் அன்பின் சூட்டை உணர வேண்டும் போல இருந்தது பெண்ணுக்கு. அருகில்.. மானிட்டரில் எதோ தெரிய.. என்னமோ நம்பிக்கை, ‘அன்னிக்கு அம்மாவிற்கு இதில் ஏதும் தெரியலை.. அப்போ, அப்பா இருக்கார்.. இங்கதான் இருக்கார்’ என நம்பியது பேதை மனது. கண்ணிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர்.. விழுந்து சிதறியது.. தரையில்.
இந்தப்பக்கமும் அந்த பக்கமும் திரும்பி பார்த்தாள், அந்த லாபியில் யாரும் இல்லை… அவளின் அருகிலும் யாரும் இல்லை, அனாதையாக உணர்ந்தாள் அந்த நிமிடம்.
மாதவன் வெளியே சென்றார்விட்டார் போனில் பேசிக் கொண்டே. 
இவள் சற்று நேரத்தில் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.
கங்காவின் குடும்பம் வந்தது மனைவி, மக்கள் இருவர் வந்தனர்.. அவர்களும் வந்து அமர்ந்து கொண்டனர். மாதவன் அருகில் வரவேயில்லை, யாருமே வரவேயில்லை.
ஒரு இரண்டு மணி நேரம் சென்று.. அந்த இடம் பரபரப்பானது மீண்டும் டாக்டர் நர்ஸ் எல்லோரும் ஐசியூ சென்றனர். அரைமணி நேரத்திற்கு பிறகு.. கங்கா வீட்டினர் எல்லோரும் ஐசியூ சென்றனர். பத்து நிமிடத்தில் திரும்பி வந்தனர். 
கங்காவின் மனைவி தாமரை வந்தார் இப்போது இவளிடம் “அப்பாவும் கண் முழிச்சிடுவார் டா.. தைரியமா இரு” என்றார். விழாக்களில் பார்த்திருக்கிறார்கள்.. எனவே தெரியும்தான். ஆனாலும், இருக்கும் சூழ்நிலை அவர்களை நெருங்கவிடவில்லை. இப்போதுதான் பேசினார் அந்த அம்மா.
மாதவன் உள்ளே சென்றார் கங்காவை பார்க்க.. அவர் ஏதேதோ விவரம் சொன்னார் போல.. எல்லாம் கேட்டுக் கொண்டார் வெளியே வந்தவர் போனெடுத்து மீண்டும் பேசத் தொடங்கிவிட்டார்.
இப்போது அம்முவிடம் வந்தார் மாதவன் “அம்ருதா.. செண்பா அவங்க நம்பர்க்கு கூப்பிடு” என்றார்.
இவளும் அழைத்தாள் சுவிட்ச் ஆப் என வந்தது. அந்த எண்ணை தன் போனில் வாங்கிக் கொண்டார் மாதவன் பின் பேசிக் கொண்டே வெளியே சென்றுவிட்டார்.
அம்மு என்ன நடக்கிறது என தெரியாமல் அமர்ந்திருந்தாள்.. மனம் முழுவதும் “அம்மா.. ம்மா” எனதான் ஜெபம். 
ஆணோ.. பெண்ணோ.. வாழ்க்கை போராட கற்றுத்தந்து விடும்.
“நடந்து நடந்து கால் தேயலாம்…
விழித்து விழித்து கண் மூடலாம்..
இருந்த போதிலும் வா..
போரிலே.. மோதலாம்..”