“நிறுத்துடா… நம்ம பேரனாச்சே, சொன்னா புரிஞ்சிக்குவான்னு நினைச்சு நான் சும்மாயிருந்தா, நீ கூடக்கூட பேசிட்டே போற. எம்புள்ள தெரிஞ்சிக்கிற அளவுக்கு அந்த சண்முகம் குடும்பம், அவ்ளோ பெரிய குடும்பமா என்ன?”
தன் செல்லச்சீமானை, அவனுடைய மகன் கிண்டலடிப்பதைப் பொறுக்கமாட்டாமல், அதுவும் தனக்கு பிடிக்காத குடும்பத்தின் பொருட்டு பேசுவது பொறுக்காமல், வாழ்க்கையில் முதன்முறையாக பேரனிடம் கத்திப் பேசிய கற்பகம்,
“ஆமா… மாமன் மேல இந்த அக்கறை, சக்கரை எல்லாம் உனக்கு என்னையில இருந்துப்பா வந்திச்சி? அவன் பொண்ணு உன்னப் பாத்து பல்லக் காட்டுன நாள்ல இருந்தா?”
தன் மனதிற்குப் பிடித்த பேரனிடம் பேசுகிறோம் என்றில்லாமல், நாக்கைச் சாட்டையாய் சுழற்றினார் கற்பகம்.
கூடுதலாக, மருமகளைப் பார்த்து முறைத்தபடியே, “எல்லாம் இந்த மகராசியால வந்தது. இவ இந்த வீட்டுல அடியெடுத்து வச்ச நாள்லயிருந்து, நமக்கு சமமே இல்லாத பயலுக எல்லாம் நம்மளப் பாத்து அத்த, மாமன், மச்சான்னு மொறசொல்லிக் கூப்பிடுறதை சகிச்சிக்க வேண்டியதாயிருக்கு.”
எரிச்சலோடு சொல்லிய கற்பகத்தின் பார்வைக்கு மட்டும் சக்தியிருந்தால், அப்படியே பஸ்பமாகிப் போயிருப்பார் சௌந்தர்யா.
இவ்வளவு பேச்சும் நடந்த பிறகு தான் ப்ரபா தனது மைத்துனன் சண்முகத்தின் மகளென்று திருவாளர் இராஜசேகரனுக்கே உறைத்தது. உறைத்த மறுநொடியே,
“வேண்டாம் ரஞ்சித்! நான் செய்த அதே தப்பை நீயும் செய்துருராத. இன்னைக்கு இளரத்தம்… அந்த வேகத்தில எல்லாம் சரியாத் தான் தோணும். ஆனா நிதர்சனம் ஒருநாள் நம்ம முகத்துல அறையும் போது, நம்மால ஒன்னுமே செய்ய முடியாது.”
மகனுக்கு அறிவுரை சொல்லுகிறேன் பேர்வழியென்று மனைவியையும் அருகில் வைத்துக் கொண்டே அவசர அவசரமாக அந்த அறிவாளி பேச, அவமானத்தால் உடலெல்லாம் கூசிப்போனது சௌந்தர்யாவுக்கு.
காதலித்த காலங்களில், காதலிக்காக வானத்தை வில்லாக வளைக்கவும், மணலைக் கயிறாகத் திரிக்கவும் தயாராக இருந்த மனிதருக்கு, இன்று அந்த காதலேத் தவறாகத் தெரிவது விந்தையிலும் விந்தை தானே!
கண்கள் கண்ணீரால் நிறைய, அதை துடைக்க மறந்து, ஒரு நிமிடம் கணவரை நிமிர்ந்து பார்த்தார் சௌந்தர்யா.
கண்ணீர் கடலில் நீந்திக் கொண்டிருந்த விழிகள் இரண்டும், கணவனிடம் ஆயிரம் கேள்விகள் கேட்கத் துடித்தது. ஆனால் எதற்கும் பதில் சொல்லத் துணிவில்லாதவராக மனைவியின் கண்களை சந்திக்க மறுத்தார் அந்த மனிதர்.
பணவளம் அளவுக்கதிகமாகவே இருந்த இராஜசேகரனுக்கு, சௌந்தர்யா என்னும் பேரழகு பெட்டகத்தை தனது காதலி, மனைவி என்று காட்டிக்கொள்வதில் இருந்த ஆர்வம், அதே சௌந்தர்யாவின் சகோதரனை தன்னுடைய மைத்துனராக அடையாளம் காட்டிக்கொள்ளும் அளவுக்கு மனவளம் இல்லாமல் போனது தானே, நடந்த அத்தனை பிரச்சினைகளுக்கும் அடித்தளமாக இருந்தது.
‘தங்கக் கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் அடிமை வாழ்க்கை தன்னோடு முடிந்து போகட்டும். தன் உடன்பிறந்தவரின் மகளுக்கு அது தேவையில்லை.’
உறுதியான முடிவோடு கண்களை அழுந்த துடைத்த சௌந்தர்யா மகனைப் பார்த்து,”ரஞ்சித்! ஒரு அம்மாவா எனக்கு உன்னப் பத்தி நல்லாத் தெரியும் ப்பா. வேண்டாம்… ப்ரபா உனக்கு சூட் ஆகமாட்டா. இந்த கல்யாண ப்ரோபோசலை இத்தோட விட்ரு” திட்டவட்டமாகச் சொல்ல,
இப்படி ஒரு எதிர்வினையை அன்னையிடமிருந்து எதிர்பார்க்காத ரஞ்சித்,”மாம்… என்ன சொல்லுறீங்க?” அதிர்ந்து போய் கேட்டான்.
“ம்ம்… உங்க அளவுக்கு வசதியா இல்லாட்டியும், அவங்களுக்குத் தகுந்த மாதிரி, அவங்க அண்ணனுங்க அவளை கல்யாணம் பண்ணி குடுப்பாங்க ப்பா. அப்படி யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு, அவ நிம்மதியா இருந்துட்டு போகட்டும். தயவு செய்து நீ அவ வாழ்க்கைல இருந்து விலகிடு” மீண்டும் ஒருமுறை, தன் முடிவை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் சௌந்தர்யா.
என்றுமில்லாமல் இன்று அதிகமாகப் பேசும் மருமகளின் செயல் கோபத்தை உண்டாக்க, உடனடியாக சண்டை ஒன்றுக்குத் தயாரானார் கற்பகம்.
ஆனால் உன் அரசியலுக்கு நான் ஆளில்லை என்பது போல எதையும் கணக்கில் கொள்ளாமல் வீட்டினுள் திரும்பிச் செல்லத் தொடங்கிய சௌந்தர்யாவிடம்,”மாம்… முடிவா நீங்க என்ன தான் சொல்லுறீங்க?” என்று ரஞ்சித் கேட்க,
“அடிக்கடி முடிவை மாத்திக்கிற பழக்கம் எனக்கு கிடையாது ப்பா… உனக்கேத்த பொண்ணு ப்ரபா கிடையாது. இதுதான் என்னோட முடிவு” என்று சொல்லி நகர்ந்து விட்டார்.
ம்ம்… சிறுவயதிலேயே மாமன் வீட்டுக்கு தன்னுடன் வரமறுத்த மகன், இன்று அந்த “மாமன் மகளையே விரும்புகிறேன்” என்று சொல்லும் போது, சௌந்தர்யாவின் மனம் ஏனோ அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது.
ஒருவேளை இருவருக்கிடையே காதல் இருந்தாலும், அது எத்தனை நாட்களுக்கு என்றே எண்ணத் தோன்றியது.
‘காதலித்து தன்னை திருமணம் செய்து, இந்த வீட்டுக்கு அழைத்து வந்த மனிதர், ஒரு காலகட்டத்தில் கடமைக்காக
தன்னுடன் வாழும் வாழ்க்கையைப் போல, தன் அண்ணன் மகளுக்கும் ஒரு வாழ்க்கை அமைந்து விடக்கூடாது.’
அதனாலேயே, தன் முடிவை எந்த தயக்கமும் இல்லாமல் சொல்லிவிட்டார் சௌந்தர்யா.
வீட்டினுள் நின்ற சுபத்ராவுக்கும் கூட சகோதரனின் பேச்சில்,’இது என்ன புதுக்கதை?’ என்று தான் எண்ணத் தோன்றியது.
‘இவனாவது, ப்ரபாவை காதலிப்பதாவது?’ என்று நினைத்தாலும், சம்மந்தப்படவன் பேச்சிலிருந்த தீவிரம்,
‘அப்படித்தான் போலும்!’ என்றே சொல்லியது.
ஆனாலும் ‘இருக்கிற பிரச்சினை போதாதென்று இவன் இன்னமும் பிரச்சினையை இழுத்து விட்டுக் கொள்கிறானே? இது எப்படி சாத்தியம்?’ என்றே அவளுக்குத் தோன்றியது.
“அதான் உங்கம்மாவே அந்த பொண்ணுக்கும் உனக்கும் ஒத்து வராதுன்னு சொல்லிட்டால்ல. அதை விட்டுத் தள்ளு கண்ணப்பா. நானே உனக்கு, நம்ம தகுதிக்கு ஏத்தாப்ல பொண்ணு பாக்குறேன்” வார்த்தையில் சர்க்கரையைத் தடவி பேசினார் கற்பகம்.
“எம்முடிவுக்கு யாரும் சம்மதிக்காட்டாலும் கூட, நான் நினைச்சதை நடத்திக்க எனக்குத் தெரியும் பாட்டி. எங்கல்யாணம் கண்டிப்பா ப்ரபாவோட தான், அதுல எந்த மாற்றமும் கிடையாது.” ரஞ்சித் தன் முடிவிலிருந்து சற்றும் பின்வாங்காமல் பிடித்த பிடியிலேயே நின்றான்.
“நான் உம்மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கேன் ரஞ்சித். என் கனவையெல்லாம் கலச்சிடாத டா” இராஜசேகரன் மகனிடம் கெஞ்ச,
“உங்க ஆசைக்காக எல்லாம், நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது ப்பா” பட்டு கத்தரித்தாற் போல் வந்து விழுந்தது மகனிடமிருந்து வார்த்தைகள்.
“ஹஹஹ…இராஜசேகரா… ஆனைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்னு சும்மாவா சொன்னாங்க. அன்னைக்கு நான் பைத்தியக்காரியாட்டம் உங்கிட்ட கெஞ்சுனேன். ஆனா என்னை உதறிட்டு நீ நினைச்சதையே சாதிச்சிகிட்ட.”
“இன்னைக்கு நீ கதறுற, உம் பையன் கண்டுக்க மாட்டேங்குறான். ம்ஹூம்… எல்லாம் வட்டியில்லாத கடன் தான்னு இப்போ உனக்கு புரிஞ்சிருக்குமே?”
தான் பெற்ற மகனிடம் கெஞ்சிக் கொண்டிருந்த தன் மகனிடம், நக்கல் சிரிப்போடு சொல்லிய கற்பகம்,”தலைமுறை தலைமுறையா பஞ்சப் பரதேசிங்க வீட்லயிருந்து தான் பொண்ணெடுக்கணும் ங்குறது, இந்த வீட்டை பிடிச்ச சாபமோ? என்னவோ?”
“போங்க, அவங்கவங்க இஷ்டப்படி என்னவேணோ செஞ்சிக்கோங்க. ஆனா, எதுக்கும் என்ன மட்டும் எதிர்பாக்காதீங்க” கோபமாகச் சொல்லியபடி தன்னறைக்குள் நுழைந்து கொண்டார் கற்பகம்.
‘நான் சொல்லவந்த விஷயத்தை சொல்லியாச்சு. இதற்கு மேல் நானும் இங்கே நிற்பதற்கில்லை’ என்பது போல ரஞ்சித்தும் அங்கிருந்து நகர்ந்து விட, எதுவும் செய்யமுடியாத நிலையில் பூமியில் வேரோடிப் போனது போல அங்கேயே நின்றிருந்தார் இராஜசேகரன்.
*******************************
“ரேவதி! துவரம்பருப்பு நனைய வச்சிருக்கேன், அதை சாம்பார் வச்சிடு.”
“ம்ம்… சரி த்த” உள்ளூர மலைப்பு இருந்தாலும், குரலில் எதையும் காண்பித்துக் கொள்ளாமல், தன் மாமியாரின் ஏவலுக்கெல்லாம் மெல்லியக் குரலில் சரி போட்டுக் கொண்டிருந்தாள் ரேவதி.
“என்னத்த சரியோ எனக்கு தெரியலை. இப்டி திடீர்னு தவம் அக்கா சொந்தத்துல துஷ்டி வீடு வந்திடிச்சு. அக்கா கூப்பிட்டும் போகலைன்னா நல்லாயிருக்காது. இல்லைன்னா உன்ன நம்பி சமையலை ஒப்படைச்சுட்டு நான் போவனா?” சலித்துக் கொண்டார் தனம்.
ம்ம்… தவமணி தன் பெண்பிள்ளைகளில் இருவரில் ஒருவரை சென்னையிலும், இன்னொருவரை பெங்களூருவிலும் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.
சென்னையில் இருக்கும் பெண்ணின் சின்ன மாமனார் தவறிவிட, அங்கு போகத்தான் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார் தனலட்சுமி.
“சமையலை முடிச்சிட்டு முரளிக்கு ஃபோன் செய்யும் போது, பெரியவனையும் சாப்பிட கையோடு கூட்டிட்டு வரச்சொல்லிடு”
“அப்புறம் ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம், சமையல் பண்ணுறேன்னு வைஷூவை கவனிக்காம விட்டுறாத. அவளை வச்சிட்டு உன்னால சமைக்க முடியாதுன்னா, முதல்லயே முடியாதுன்னு சொல்லிடு. நான் வேற ஏதாவது ஏற்பாடு பண்ணிப்பேன்.”
ரேவதிக்கும் முடியாது என்று சொல்லத்தான் ஆசை. ஆனால் அப்படி சொல்லி,”அந்த காலத்தில என்னோட மூனு பிள்ளைகளும் கைக்குள்ளயும், காலுக்குள்ளயும் தான் கிடக்கும். அதையும் சமாளிச்சிட்டு நான் சமைப்பேன். உனக்கு ஒரு பிள்ளையை வச்சிட்டே சமைக்க முடியாதா?” என்று ஒருவேளை மாமியார் தன்மேல் விழுந்து பிடுங்கி விட்டால்?
எனவே சமயோசிதமாக சரி என்று தலையசைத்தவள், “உங்களுக்கும் சேத்து சாப்பாட்டுக்கு அரிசி போட்டுறவா த்த?” என்று கேட்க,
“ஏன்? வெளியப் போறவ அப்டியேப் போய்டுவா, திரும்பி வரவே மாட்டான்னு நினச்சியா? எந்நேரமானாலும் வீட்ல வந்து தான் சாப்பிடுவேன். எனக்கும் சேத்தே அரிசி போடு”
மருமகளை அதட்டியபடியே தனம் பதில் சொல்லிக் கொண்டிருக்கையில், வெளி வாசலில் இருந்து, “தனம்! போலாமா?” என்ற தவமணியின் சத்தம் கேட்டது.
“ம்ம்... இதோ வரேன் க்கா” என்றபடியே நகர்ந்தவர், “சாம்பார்ல காரத்தை அள்ளி தட்டிராத” போகிறபோக்கில் மருமகளிடம் சொல்லிக் கொண்டு,”பிள்ளை கவனம்” என்று எச்சரித்து விட்டே சென்றார்.
அவர் சென்றதும் கதவடைத்துக் கொண்டு உள்ளே வந்த ரேவதி, முதல் வேலையாக ஃபோனில் தன் அம்மாவிற்கு அழைத்தாள்.
மறுபக்கம் அழைப்பை ஏற்ற அவள் அம்மா மேகலா, “என்னடி, இந்நேரத்துக்கு ஃபோன் பண்ணுற? உன் மாமியாக்காரி வீட்ல இல்லையா?” என்று மிகச் சரியாக கேட்க,
“ஹ்ம்ம்… ஆமாம் ம்மா” என்று வீட்டில் நடந்த அத்தனையையும் சொல்லியவள்,”நீங்களே சொல்லுங்கம்மா, இந்த மொத்த கும்பலுக்கும், நான் ஒரு ஆளா எப்படி சமைக்க முடியும்?”
“இப்போ வைஷு தூங்குறா. அவ முழிச்சிட்டான்னா, அவளையும் கவனிச்சிட்டு சமைக்கிறது கஷ்டம். இதே நாங்க தனியா இருந்தா, எனக்கு இந்த தொல்லை உண்டா சொல்லுங்க?” மனக்குமுறலோடு தன் ஆசையையும் சேர்த்து பெற்றவளிடம் கொட்டினாள் ரேவதி.
“அடியேய்… இப்போ நான் அங்க இருந்தேன்னா உம்முதுகுல நாலஞ்சு அடி நல்லா போடுவேன்… தனிக்குடித்தனமாம் தனிக்குடித்தனம்… இப்டி ஏடாகூடமா ஏதாவது சொல்லி, உன்தலையில நீயே மண்ணள்ளி வச்சுக்காத.”