12
“இல்லை இப்போ நீ தான் வேணும்” என்று அவன் சொன்னதும் அப்படியே அமைதியாகிப் போனாள் அவள். ஒன்றும் பேசாமல் அவள் திரும்பிப் படுத்துக் கொள்ள நொந்து போனான் ஆருத்ரன்.
‘ஒண்ணு சரின்னு சொல்லணும் இல்லை வேண்டாம்ன்னு சொல்லணும், ரெண்டும் சொல்லாம இப்படி திரும்பி படுத்தா நான் என்னன்னு நினைக்கிறது’ என்று பொருமினான் அவன்.
‘ஒருத்தன் நல்லவனா இருந்தா கையாலாகாதவன்னு சொல்றாங்க. கெட்டவனா இருந்தா வில்லனாக்கிடுறாங்க, திட்டுறாங்க. இது ரெண்டுத்துக்கும் நடுவுல மாட்டிட்டு முழிக்கறவன் பாடு தான் ரொம்ப திண்டாட்டம் போல’ என்று எண்ணிக்கொண்டு விருட்டென்று எழுந்தவன் வெளியில் சென்று ஹால் சோபாவில் படுத்துக் கொண்டான்.
அவன் நினைவுகள் தன்னை ஒன்றுக்கும் ஆகாதவன் என்று சொன்னவளை நினைக்கவும் நிந்திக்கவும் வைத்தது அக்கணம்.
————
அன்னப்பூரணி பார்த்து பார்த்து தன் மகனுக்கு கட்டி வைத்தவள் தான் அஞ்சனா. பெண் பார்த்து அவருக்கு பிடித்து பின்னர் மகனும் வந்து பார்த்து சரியென்ற மறுநொடியே ஒப்பு தாம்பூலம் மாற்றியவர் மருமகளுக்காய் ஐந்து சவரனில் தங்கநகை ஈடு செய்தார்.
திருமண தினத்தன்று வளையல், தங்க சங்கிலி, மோதிரம் என்று பதினைந்து சவரனுக்கு மேல் மருமகளுக்கு போட்டுத் தான் அழைத்து வந்திருந்தார். அஞ்சனாவை முதலிரவு அறைக்குள் அனுப்பி வைத்திருக்க கதவை திறந்து அவள் செல்ல ஆருத்ரன் அங்கு அமர்ந்திருந்தான்.
கதவை தாழிட்டு அவள் வர ஆருத்ரன் எழுந்து வந்து அவள் கைப்பிடித்து அழைத்து வந்து கட்டிலில் தன் அருகில் அமர்த்திக் கொண்டான். அவனின் இடது கரம் அவள் வலக்கரத்தை இன்னமும் அழுத்தமாய் பற்றியிருந்தது.
ஓரக்கண்ணால் அவன் பிடித்திருந்ததை பார்த்தாள். கறுத்திருந்த அவன் கரத்தில் வெள்ளையாய் தெரிந்த தன் கரம் பிணைக்கப்பட்டிருந்ததை ஒருவித முகச்சுளிப்புடன் கண்கொட்டாமல் பார்த்திருந்தவள் மெல்ல உருவிக்கொண்டாள்.
அஞ்சனாவிற்கு ஆருத்ரனை மாப்பிள்ளையாக பார்த்திருப்பதை வீட்டினர் சொன்னதுமே அவளுக்கு அவ்வளவாக அவனை பிடித்திருக்கவில்லை. குறிப்பாய் அவன் வேலையை பற்றி சொன்னதுமே “ஏன்மா வேற வேலை பார்க்கற பையனே உங்களுக்கு கிடைக்கலியா??”
“ஏன்டி இவருக்கு என்ன குறை, படிச்சி இருக்காருடி. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வேலை இவருக்கு இந்த வேலை…”
“இதெல்லாம் வெளிய சொல்லிக்கிற மாதிரியான வேலையாம்மா??” என்றிருந்தாள் அவள் அப்போதும்.
“நல்ல சம்பாத்தியம், வசதியா தான் இருக்காங்க, சொந்த வீடு வேற. ஒரு நாத்தி தான் அவளுக்கும் கல்யாணம் ஆகிருச்சு. மாமியார் மட்டும் தான் மாமனார் இல்லை வேற எந்தவிதமான பிக்கள் பிடுங்கலும் இல்லைடி உனக்கு. நீ ராணி மாதிரி இருக்கலாம்” என்றார் அவள் அன்னை அப்போது.
அவன் வசதியை பார்த்து தான் அவளும் ஓரளவு சமாதானம் ஆகியிருந்தாள். அப்போதும் அவர்கள் திருமண உறுதி செய்த அன்று அவனை பார்த்த போது மீண்டும் ஆரம்பித்திருந்தாள். “அம்மா கருப்பா இருக்காரே”
“கருப்பா இருந்தா என்னடி, அன்னைக்கே சொன்னேன்ல நல்ல வசதின்னு. பாரு பொண்ணு பிடிச்சதுமே நகை போட்டு உறுதி செய்யறாங்க யாரு செய்வாங்கன்னு சொல்லு” என்று மீண்டும் அதே சொல்லி வாயை அடைத்துவிட்டார் அவர்.
“ஏன் வேற யாரும் நகை ஈடு செய்ய மாட்டாங்களா இவங்க ஒருத்தர் தான் செய்யற மாதிரி சொல்றீங்க??”
“நம்மளை தேடி வந்து கட்டிட்டு போறாங்க, நம்ம வசதிக்கு அவங்க வந்ததே பெரிசு. பேசாம இருடி” என்றுவிட்டார்.
‘அவங்களுக்கு என்ன நான் தானே கட்டிக்கணும்’ என்று பொருமினாலும் கழுத்தில் இருந்த நகை சற்று பெருமையை கூட்ட தன்னை உலக அழகியாகவே பாவித்துக் கொண்டாள் அவள்.
அவள் கையை உருவிக்கொள்ளவும் ஆருத்ரன் என்னவென்று திரும்பி பார்த்தான் அவளை. “இல்லை ஒரு மாதிரி டயர்டா இருக்கு. கண்ணு இருட்டிட்டு வருது”
“என்னாச்சு டாக்டர்கிட்ட போகலாமா??”
“இல்லையில்லை அதெல்லாம் இல்லை தூங்கினா சரியாகிடும். கல்யாண அலைச்சல்ல சரியா தூங்கலை”
“அதுக்கென்ன படுத்து தூங்கு” என்றவனை ஒன்றும் சொல்லாமல் மெல்ல ஏறிட்டாள்.
பின் மெதுவாய் “வந்து…”
“அதுக்கெல்லாம் இப்போ எந்த அவசரமும் இல்லை. நீ தூங்கு…” என்று அவன் சொன்ன போது ஏமாற்றமும் எழுந்தது அவளுக்கு.
‘இவன் என்ன இப்படி இருக்கான்’ என்றும் நினைத்துக் கொண்டாள். அவள் வேண்டியதை தானே அவன் செய்தான் என்பதை கருத்தில் கொள்ளவில்லை வசதியாய் நினைக்க மறந்தாள்.
சிறு வயது முதலே அவளின் போக்கே அது தான். அவள் பிடிவாதம் பிடிப்பாள், ஆனால் பழியை சட்டென்று அடுத்தவரின் மீது போட்டு அவள் நல்லவளாக காட்டிக்கொள்வாள். அவளின் உடன்பிறந்தவனுடன் எப்போதும் அவள் செய்வது தான்.
அப்போது அதை பெரிதாய் அவளின் வீட்டினர் எடுத்துக் கொண்டிருக்கவில்லை. அதுவே அவள் ஆருத்ரன் மீது பழி போட்டு வீட்டிலேயே இருந்துக் கொண்ட போதும் தொடர்ந்திருந்தது.
இதோ முதல் நாளே அவள் அதை ஆரம்பித்திருந்தாள். மறுநாள் காலையில் ஆருத்ரன் எழுவதற்கு முன்பே அவள் எழுந்து வெளியில் சென்றிருந்தாள். சிறிது நேரத்தில் முனகிக்கொண்டே அவள் உள்ளே வந்தாள்.
மெதுவாய் கண் விழித்து அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். “என்னாச்சு??” என்றான்.
“வீட்டில பாத்ரூம் எங்க இருக்கணும்??” என்றாள் மொட்டையாய்.
“எங்க இருக்கணும்??”
“பெட்ரூம்ல தானே இருக்கணும்…”
“சரி அதுக்கென்ன இப்போ??”

“இங்க அப்படியா இருக்கு… குளிக்கணும்ன்னா பின்னாடி போக வேண்டி இருக்கு… நான் பாத்ரூம்லயா புடவை கட்ட முடியும்” என்றாள் சிடுசிடுப்பாய்.
“விடு இன்னும் கொஞ்ச நாள் தான் வீட்டை பெரிசா கட்டணும்ன்னு நினைச்சுட்டு இருக்கேன். அப்போ நீ கேக்கறது எல்லாம் செஞ்சிடலாம் சரி தானே. இப்போ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ அஞ்சு. ப்ளீஸ் அதுவரைக்கும் என்னை வந்து கொஞ்சு…”
‘பெரிய கவிஞரு ரைமிங்கா பேச ட்ரை பண்றாராம்’ என்று அவனை மனதிற்குள் வறுத்துக் கொண்டாள்.
“என்ன யோசிக்கறே” என்றவன் எட்டி அவள் கைப்பிடிக்க வேகமாய் உதறினாள்.
“என்னவாம்??”
“நீங்க இன்னும் குளிக்கலை”
“அப்போ குளிச்சுட்டு வந்தா உனக்கு ஓகேவா…” என்றவன் குறும்போடு கேட்க அவள் வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.
அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை. அவன் பேசுவது பிடிக்காதது போலவும் இருந்தது, பிடித்தம் போலவும் இருந்தது. அவளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற கணவனாக அவன் இல்லையோ என்றும் தோன்றியது அவளுக்கு.
“குளிச்சுட்டு வந்து வைச்சுக்கறேன்” என்றவன் சட்டென்று இழுத்து அவளை அணைக்க போக அதை முன்பே யூகித்தவளாக கதவிற்கு அருகிலேயே நின்றிருந்தவள் வெளியே ஓடிவிட்டாள். அவனும் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.
அன்று அவர்கள் அவளின் வீட்டிற்கு விருந்திற்கு சென்றனர். அடுத்த மூன்று நாட்கள் அங்கு தான் தங்கியிருந்தனர். ஆருத்ரனின் வீட்டில் அவ்வளவு பேசினாளே அவள் வீட்டிலேயே குளியலறை வெளியில் தானிருந்தது. அவளைப் போல அவன் அதை பெரிது படுத்தியிருக்கவில்லை.
மூன்று நாட்களும் வெவ்வேறு விதமாய் அவனுக்கு போக்கு காட்டினாள். முதல் நாள் தூக்கம் வருகிறது என்று முதல் நாள் போலவே காரணம் சொல்லியிருந்தாள். மறுநாள் அவன் வேலையின் பொருட்டு ஆட்கள் இல்லாத காரணத்தால் அவனே செல்ல வேண்டியதாகியது.
வெளியில் சென்றுவிட்டு வந்தவனை அவள் பக்கத்தில் கூட நெருங்க விட்டிருக்கவில்லை. மூன்றாம் நாளோதனக்கு அந்த மூன்று நாட்கள் நெருங்கி வருவதால் கை காலெல்லாம் வலி எடுக்கிறது என்றாள்.
அவன் அனைத்திற்கும் பொறுத்து தான் போனான். மறுநாள் காலையில் அவன் வீட்டிற்கு செல்ல கிளம்பிக் கொண்டிருக்க அவனருகே நெருங்கி வந்திருந்தாள். அதில் அவன் சற்று கிளர்ந்திருக்க அவள் இடை வளைத்து தன் புறம் இழுத்தான்.
“என்ன சொல்லணும்” என்றான் அவள் கண்கள் பார்த்து.
“இல்லை நாம இன்னைக்கே வீட்டுக்கு கிளம்பணுமா??” என்றாள் முகத்தை பாவம் போல் வைத்து.
“அப்போ என்ன பண்ணணும்ன்னு நினைக்கிறே??”
“இன்னும் ஒரு நாள் இருந்திட்டு போகலாமே. அம்மா தான் அவ்வளவு சொல்றாங்களே…”
“இன்னைக்கு கோவில் போகணும்ன்னு அம்மா சொல்லிட்டு இருந்தாங்க அஞ்சு. பொங்கல் வைக்கணும்ல நீ தான் வைக்கணும், அம்மாவோட வேண்டுதல்”
“நான் வைக்க மாட்டேன்னா சொன்னேன். அதை நாளைக்கு கூட வைக்கலாம்ல” என்றாள் அவன் சட்டை காலரை இரு கைகளால் இழுத்துவிட்டவாறே.
“சரி நீ இருந்திட்டு வா…” என்றான் அவளை விட்டுப்பிடிக்க வேண்டும் நோக்குடன்.
“நான் மட்டுமா நீங்களும் தான் இருக்கணும்”
கண்கள் மூடி திறந்தவன் “சரி, ஆனா கண்டிப்பா நாளைக்கு வீட்டுக்கு போய்டணும். எங்கக்கா இன்னும் இரண்டு நாள் தான் இருப்பா. அவங்க ஊருக்கு கிளம்பிடுவாங்க, அதனால நாம போயே ஆகணும்”
“தேங்க்ஸ்”
“அதை வாயால சொல்லாம இங்க ஒண்ணு கொடுத்து கூட சொல்லலாம்”

“ஹ்ம்ம் போங்கு… போங்க அதெல்லாம் அப்புறம் தான்…”
“அடியேய் நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு. நீ சொல்ற டயலாக் எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி சொல்றது”
“நான் அப்புறம்ன்னு சொன்னது நைட்ல” என்றாள் ரகசியமாய்.
‘இவளுக்கு இப்படி கூட பேச வருமா’ என்று பார்த்திருந்தவனுக்கு அவளை முத்தமிடும் எண்ணம் தோன்ற திறந்திருந்த கதவை தன் காலால் எட்டி மூடினான். அவள் இதழ் நோக்கி அவன் குனிய லாவகமாய் அவனிடமிருந்து விலகியிருந்தாள். “என்ன ஏமாத்துறீங்க, நான் தான் நைட்டுன்னு சொன்னேன்ல” என்றவள் கதவை திறந்து வெளியில் ஓடிவிட்டாள்.
“என்ன அஞ்சு எதுக்கு இப்படி ஓடி வர்றே??” என்று அவள் அன்னை கேட்டதற்கு “ஒண்ணுமில்லைம்மா சும்மா தான்…” என்றவள் “துணி காயப் போடணும்ன்னு சொன்னீங்க, கொடுங்க நான் போடுறேன்”
“நான் போட்டுக்கறேன் நீ மாப்பிள்ளையை கவனி”
“சும்மா கொடும்மா நான் போட்டு வர்றேன்”
“இங்க இருக்கும் போது நான் சொன்னா கூட வேலை செய்ய மாட்டே, பாரேன் என் பொண்ணுக்கு பொறுப்பு வந்திடுச்சு” என்று சிலாகித்து அவர் வாளியை மகளிடம் கொடுக்க அவள் படியேறி மாடிக்கு சென்றாள்.
அவள் அப்புறம் செல்லவும் உள்ளிருந்த ஆருத்ரன் “அஞ்சு” என்று குரல் கொடுக்க அவளின் அன்னை “மேல துணி காயப் போட போயிருக்கா” என்றார்.
வெளியே வந்தவன் “ஓ!! சரிங்கத்தை நான் கிளம்பறேன் வேலை இருக்கு. முடிச்சுட்டு வர்றேன்” என்று கிளம்பினான்.
“ஒரு நிமிஷம் அவ மாடியில தான் இருக்கா சொல்லிட்டு போயிடுங்களேன் இல்லைன்னா வந்து என்னை திட்டுவா” என்று அவர் சொல்ல அவனும் மேலே சென்றான்.
அவள் துணியை காயப் போட்டுக் கொண்டிருக்க பின்னிருந்து அவளை அவன் அணைத்துக் கொள்ள அதை எதிர்பாராதவள் பயந்து திரும்ப “நான் தான் எதுக்கு பயம்” என்றான் அவன்.
“இப்படியா பயமுறுத்துவீங்க, எனக்கு உயிரே போய்டுச்சு… அக்கம் பக்கம் வீடெல்லாம் இருக்கு ப்ளீஸ் விடுங்க” என்று நெளிந்தாள்.
“இருக்கட்டுமே என் பொண்டாட்டியை தானே நான் கட்டிப்பிடிக்கிறேன்” என்றான் அவன்.
“ப்ளீஸ்ங்க எனக்கு என்னவோ போல இருக்கு” என்று அவள் நகர முயற்சி செய்யவும் வெட்கப்படுகிறாலோ என்று எண்ணி விட்டுவிட்டான் அவன்.
“சரி நான் கிளம்பறேன், ஈவினிங் தான் வருவேன்” என்று அவன் சொல்ல “ஹ்ம்ம் ஓகே சீக்கிரம் வந்திடுங்க” என்று அவள் சொல்லவும் தலையாட்டி அவன் விடைபெற்றான்.
அவன் அப்புறம் செல்லவும் பக்கத்து மாடியில் இருந்து ஒரு குரல் கேட்டது. “இதுக்கா என்னை வேணாம்ன்னு சொல்லிட்டு அவனை கட்டிக்கிட்ட” என்ற குரலில் தூக்கிவாரி போட புடவையை சற்று நகர்த்தி யாரென்று பார்க்க அவளை ஒரு தலையாய் விரும்பிக் கொண்டிருந்த விக்னேஷ் நின்றிருந்தான்.
“என்ன உளர்றீங்க??” என்றாள்.
“உன் கால் தூசிக்கு கூட வரமாட்டான் அவனைப் போய் எப்படி நீ கட்டிக்கிட்டே” என்றவனின் கேள்வியில் ஏற்கனவே அவனை ஏதோவொரு விதத்தில் விளக்கிக் கொண்டிருந்தவளின் மனதில் ஆருத்ரன் இன்னமும் தூரச் சென்றான்.
“தேவையில்லாதது எல்லாம் பேச வேணாம்”
“நான் பேசாம வேற யாரு பேசுவா சொல்லு அஞ்சனா” என்றவனுக்கு பதில் சொல்லாமல் அமைதியாய் நின்றாள்.
“உன் அழகென்ன நிறமென்ன எதுலயும் அவன் பக்கத்துல கூட வர முடியாதே. எனக்கு தெரியும் நீ அவன் காசு பணத்தை எல்லாம் பார்த்து ஓகே சொல்லியிருக்க மாட்டேன்னு. உங்க வீட்டில பாக்குற மாப்பிள்ளையை தான் கட்டிப்பேன்னு என்கிட்ட சொன்னே, அவங்க இவரை கைக் காமிச்சாங்க சோ நீ கட்டிக்கிட்டே”
“ஆனாலும் நீ யோசிச்சு முடிவு எடுத்திருக்கலாம் அஞ்சனா. என்னை வேணாம்ன்னு சொன்ன மாதிரி அவனை நீ சொல்லலையா, உங்க வீட்டில உன்னை கட்டாயப் படுத்தினாங்களா” என்றான் அவன்.
“இதெல்லாம் எதுக்கு இப்போ கேட்கறீங்க??” என்றவளிடம் “உன் கல்யாணம் பிக்ஸ் ஆகவுமே நான் ஊருக்கு போயிட்டேன். மாப்பிள்ளை வசதி நல்ல மாப்பிள்ளைன்னு சொன்னாங்க. ஆனா தொழில் பத்தியோ அவர் உனக்கு பொருத்தமானவரான்னோ யாரும் சொல்லலை. தெரிஞ்சிருந்தா நான் அப்போவே உன்னை கேட்டிருப்பேன்”
அவன் பேசப்பேச அவளுக்கு தான் தவறு செய்துவிட்டோமோ என்ற எண்ணம் அதிகமாகியது. “இப்போ அதெல்லாம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை” என்றாள்.
“ஏன் இல்லை??”
“என்ன பண்ண முடியும், அவர் தான் எனக்கு இனி எல்லாம்”
“நான் இப்பவும் உன்னை விரும்பறேன்”
“கேட்க நல்லாயில்லை, இது நடக்காது…”
“சரி விட்டிருவோம். நீ சந்தோசமா இருக்கியா??” என்றான் எங்கு அவளை அடிக்க வேண்டுமோ அங்கு அடித்தான்.
“என் சந்தோசத்துக்கு என்ன குறை”
“பார்த்தா அப்படி தெரியலையே…”
“வேற எப்படி தெரியுது??”
“ஏதோ குறை இருக்கற மாதிரி”
“ஒண்ணுமில்லை”
“அவன் உன்கிட்ட ஒழுங்கா நடந்துக்கறானா”
“இதெல்லாம் எதுக்கு நீங்க கேட்கறீங்க…”
“எனக்கு உன்னோட சந்தோசம் தான் முக்கியம்” என்றவன் எகிறி குதித்து அவள் வீட்டு மாடிக்கு வந்திருந்தான்.
“இப்போ எதுக்கு இங்க வந்தீங்க” என்று அவள் கேட்கவும் அவளை சட்டென்று இழுத்து அங்கிருந்த கதவின் மறைவுக்கு கூட்டிச் சென்றான்.
“என்ன பண்றீங்க?? தள்ளிப்போங்க” என்றாள்.
“சரி போறேன்” என்றவன் ஒரு நொடி தள்ளி நின்றாலும் அடுத்த நொடி அவளை நெருங்கியிருந்தான். “எதுக்கு இங்க வந்தீங்க??” என்றவளின் கேள்விக்கு அவன் அணைப்பை பதிலாய் கொடுத்தான்.
முதலில் திமிறினாலும் அடுத்த சில நொடிகளில் அவள் மயங்கி நிற்க அவன் அவளை விடுவித்து தள்ளி வந்தான். “அஞ்சனா” என்று அவளை அழைக்க பதிலில்லை அவளிடம்.
“அஞ்சு இன்னும் மாடியில என்னடி பண்ணுறே??” என்று கீழிருந்து அவள் அன்னையின் குரல் கேட்டது.
“இதோ வர்றேம்மா” என்றவள் சுதாரித்து இறங்கப் போக “ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேட்டுட்டு போ” என்று அவன் சொல்லவும் நின்றாள்.
“கொஞ்ச நேரம் முன்னாடி உன் புருஷன் ச்சே அவன் உன்னை கட்டிப்பிடிச்சான்ல அப்போ உன் முகத்தை நான் பார்த்தேன். எப்போடா அவனை பிடிச்சு தள்ளலாம் அப்படிங்கற மாதிரி நீ இருந்தே… அவன் தள்ளிப் போகவும் தான் உன் முகம் சரியாச்சு. நான் இப்போ கட்டிப்பிடிக்கவும் முதல்ல மறுத்தாலும் அப்புறம் நீ எப்படி இருந்தே” என்று அவன் சொல்லவும் மூச்சே நின்றுவிட்ட உணர்வு அவளுக்கு. 
அவன் சொல்லியது அவள் மனதை விட்டு அகலாதிருக்க ஆடி மாதத்திற்கு வீட்டிற்கு வந்தவள் அதன் பின் திரும்பிச் செல்லவேயில்லை. ஆருத்ரனின் மீதும் பழிப்போட்டு அவனை நிரந்தரமாக பிரிய முடிவெடுத்ததும் அப்போது தான்.