சாரல் மழையே
அத்தியாயம் 6
இப்படியே மேலும் ஒரு வருடம் செல்ல.. இருவரும் நண்பர்களாகவே தொடர்ந்தனர். தர்மா மீது தான் கொண்டிருப்பது காதல் எனக் கீர்த்தி உணரவே இல்லை. தர்மா உணர்ந்தாலும் அதைக் கீர்த்தியிடம் சொல்லவில்லை.
அவனின் நண்பர்களே ஒருமுறை தர்மாவை கேட்டிருந்தனர். உனக்குக் கீர்த்தியை பிடிச்சிருக்கு தானே…. பிறகு எதுக்குத் தயங்கிற, கீர்த்திகிட்ட பேசு என்றபோது,
“கீர்த்திகிட்ட எனக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனா நான் அப்படி இல்லை. எனக்கும் கீர்த்திக்கும் வயசு வித்தியாசம் அதிகம். அதோட நான் பட்டப்படிப்பை கூட முடிக்கலை. அதே போல அவங்க அளவுக்குப் பெரிய கோடீஸ்வரனும் இல்லை. இப்படி என்கிட்டே நிறையக் குறைகள் இருக்கு.”
“உதவி பண்ண வந்த பெண்ணோட மனசை நான் கலைச்சதா இருக்கக் கூடாது. அவளே விரும்பி வந்தா பார்க்கலாம். இல்லைனாலும் நான் வருத்தப்பட மாட்டேன். என்னை விடப் பெஸ்டா அவளுடைய வருங்காலக் கணவன் இருந்தா, அதுவும் எனக்குச் சந்தோஷம்தான்.” என்றான்.
“உன்னை விடப் பெஸ்ட்டா எல்லாம் யாரும் இருக்க மாட்டாங்க.” என்றபோது, அதைக் கீர்த்தித் தான் முடிவு பண்ணனும் என்றான்.
நண்பர்களையும் இதைப் பற்றிக் கீர்த்தியிடம் பேசவே கூடாது என்றுவிட்டான்.
ஒருநாள் எல்லோரும் சேர்ந்திருக்கும் போது, கீர்த்தித் தர்மாவிடம் எதோ கேட்டுக் கொண்டிருந்தாள். “டேய்… சீக்கிரம் கல்யாணம் பண்ணு டா…. நீயும் உன் குடும்பத்தோட நேரம் செலவு செய்வ… சும்மா இவளோட உட்கார்ந்து நேரத்தை வீனாகிட்டு இருக்க…” என்றான் சுமந்த்.
இந்தக் கீர்த்தி இன்னும் நண்பனை புரிந்துகொள்ளவில்லையே என ஆதங்கம் அவனுக்கு.
தர்மா பதில் சொல்லாமல் சிரிக்க.. கீர்த்தித் தான் சண்டைக்கு வந்தாள்.
“என் கூட அவர் பேசினா உங்களுக்கு என்ன? அவருக்குக் கல்யாணமானாலும் நாங்க பிரண்ட்ஸ்தான்.” என்றதும்,
“அதை நீ முடிவு பண்ணாத. அவன் பொண்டாட்டி வந்ததும் அவங்க முடிவு பண்ணுவாங்க.”
“யார் பெர்மிஷனும் எனக்குத் தேவையில்லை.” என்ற கீர்த்திக்கு அவ்வளவு கோபம் வர…
“உங்களுக்குக் கல்யாணம் ஆகிட்டா என்னோட பேச மாட்டீங்களா?” அவள் தர்மாவிடம் நேரடியாகக் கேட்க,
“அப்படியெல்லாம் இல்லை மா…” என்றான்.
“அவன் இப்ப அப்படித்தான் சொல்லுவான். இப்ப எங்களையே எடுத்துக்கோ… எங்க பொண்டாட்டி விரும்பாததை நாங்க செய்வோமா….”
“அப்படியெல்லாம் யாரும் பெர்மிஷன் வாங்கி என்னோட பேச வேண்டாம்.” என்ற கீர்த்திக் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டாள்.
ஒருநாள் கூட அவளால் தர்மாவுடன் பேசாமல் இருக்க முடியவில்லை. மறுநாள் அவளே அவனை அழைத்துப் பேசிவிட்டாள்.
அன்று கீர்த்தியின் பெற்றோர் அதிசயமாக வீட்டில் இருந்தனர். சேர்ந்து சாப்பிடும் வழக்கம் எல்லாம் அந்த வீட்டில் கிடையாது. எப்போது வந்தாலும் மேஜையில் உணவு உணவு தயராக இருக்கும். அவரவர் விருப்பப்படும் நேரம் உண்பர். சில நேரம் இரவு உணவு மட்டும் கீர்த்தியும், அவள் தம்பி வினோத்தும் சேர்ந்து உண்ணுவார்கள்.
அன்று அவள் குளித்து உடைமாற்றி இரவு உணவுக்கு வர… அவள் வருவதற்காகக் காத்திருந்து பெற்றோரும் அவர்களுடன் சேர்ந்து உண்டனர்.
“கீர்த்தி, உன்கிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லணும்.” என்றார் நவீனா.
“சொத்தா, காரா இல்லைனா வெளிநாட்டுக்கு டூர் எதுவும் போறீங்களா?” கீர்த்தி அவளாகவே யூகிக்க,
அவள் பெற்றோர் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள், அதை விடச் சந்தோஷமான விஷயம், “உனக்குக் கல்யாணம் பண்ண போறோம். நம்ம வீட்ல விசேஷம் நடந்தே நாள் ஆச்சு இல்லை. ரொம்பக் கிராண்டா பண்ணும்.” என அவள் அம்மா பேசிக்கொண்டே செல்ல,
கீர்த்தித் தன்னுடைய திருமணம் பற்றி எல்லாம் யோசித்ததே இல்லை. மேலே படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்தாள். வீட்டில் திடிரென்று திருமணம் என்றதும் நம்பவே முடியவில்லை.
“இப்ப எதுக்கு எனக்குக் கல்யாணம்? எனக்குக் கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா எல்லாம் இல்லை.” என்றால் அலட்சியமாக.
“நாமே எதிர்பார்க்காத சம்பந்தம் வந்திருக்கு. மினிஸ்டர் பையன். அன்னைக்கு அப்பாவோட கம்பனி விழாவுக்கு மினிஸ்டர் வர முடியலைன்னு அவர் பையன் விஷ்வாவை அனுப்பி இருந்தார். அங்க வச்சு உன்னைப் பார்த்ததுதான். அவனுக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிடுச்சாம். அவங்களேதான் கேட்டாங்க. நல்ல சம்பந்தம் தேடி வரும்போது விடுறது புத்திசாலித்தனம் இல்லை. நாங்க சரின்னு சொல்லிட்டோம்.” எனச் சொன்ன போது கீர்த்திக்கு அவ்வளவு கோபம் வந்தது.
“யாரை கேட்டு நீங்க சரின்னு சொன்னீங்க.” என்றாள் கோபத்தை அடக்கிய குரலில்.
“உனக்கு என்ன தெரியும் கீர்த்தி? நீ சின்னப் பொண்ணு. உன்னை விட எங்களுக்கு நல்லது கெட்டது தெரியும்.”
“இதுவரை என்னோட விஷயங்கள் நான்தான் முடிவு பண்ணியிருக்கேன். இதுவரை எதாவது தப்பு பண்ணி இருக்கேனா…”
“இல்லைடா… உன் வயசு பசங்க என்னவெல்லாம் பண்றாங்கன்னு எங்களுக்குத் தெரியும். வி ஆர் ப்ரௌட் ஆப் யூ.”
“கல்யாணத்துல மட்டும் அந்த நம்பிக்கை இல்லையா?”
“உனக்கு நாங்க நல்லதுதான் செய்வோம் கீர்த்தி. உனக்கு நாங்க எது கொடுத்தாலும் பெஸ்டா தான் கொடுப்போம்.” என அவள் தந்தை முதல்முறையாக வாய்திறக்க….
“அதை நான் சொல்லணும் பா….” என்றாள்.
“உன்னைக் கேட்காம நாங்க சொல்லி இருக்கக் கூடாதுதான். ஆனா உனக்கு மாப்பிள்ளையைப் பிடிக்கும்.”
“உடனே எல்லாம் என்னால சரின்னு சொல்ல முடியாது. நான் யோசிக்கணும்.”
“இந்தா இதுல மாப்பிள்ளை பத்தின விவரம் இருக்கு.” என அவர் ஒரு கவரை அவளிடம் கொடுக்க… வைங்க பிறகு பார்த்துகிறேன் எனச் சென்றுவிட்டாள்.
அப்போது கூடத் தர்மாவை அழைத்துதான் இந்த மாதிரி வீட்ல சொல்றாங்க என்ன செய்வது என்று அவனிடமே கேட்டாள்.
தனது விருப்பத்தை ஒதுக்கிவிட்டு, அவளுக்கு ஒரு நல்ல நண்பனாகத்தான் ஆலோசனை வழங்கினான்.
“உன்னை யாரும் கையைக் காலைக் கட்டி மண மேடையில் உட்கார வைக்க முடியாது கீர்த்தி. உனக்கு உண்மையிலேயே அந்தப் பையனைப் பிடிச்சிருந்தா, பிடிச்சிருக்கு சொல்லு. இல்லைனா பிடிக்கலைன்னு சொல்லு.”
“உன்னோட விருப்பம்தான். நீதான் வாழப் போற… நீதான் முடிவு பண்ணனும்.” என்றான் தெளிவாக.
சரி என வைத்துவிட்டாள். தர்மாவிற்குத் தான் உறக்கம் போனது.
பெற்றோர் கொடுத்த கவரை எடுத்து வந்தாள். அதில் மாப்பிள்ளையின் போட்டோவும், பயோடேட்டாவும் இருந்தது.Advertisements
ஷெர்வானி அணிந்து வட இந்தியன் போல நல்ல நிறமாக இருந்தான் விஷ்வா.
Advertisements