அவள் தந்தையின் இறப்பன்று தான் ஆருத்ரனை முதன் முதலாய் பார்த்தாள். முதல் நாள் இரவு நன்றாகத் தான் பேசிக் கொண்டிருந்தார் மகளிடத்தில். சீக்கிரமே ஊருக்கு பணிமாற்றல் கிடைத்துவிடும் அங்கு சென்றுவிடலாம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தவர் இரவு உறங்கி விடிந்த பொழுதில் உயிருடன் இல்லை.
அவளுக்கு தந்தையை தங்கள் ஊருக்கு கொண்டு சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம். அவளின் பெரியப்பா சித்தப்பாவுக்கு எல்லாம் போன் செய்து சொல்ல யாருமே காயத்ரியின் வீட்டிற்கு வர பிரியப்படவில்லை.
“அருளு” என்று அவள் அத்தை அழைக்கவும் வேதனையுடன் திரும்பி பார்த்தாள்.
“நீ எதுக்கு கவலைப்படறே அப்பாவை நல்ல முறையில இங்கவே அடக்கம் பண்ணிடலாம். ஊருக்கு போறது வேலைக்கு ஆகாது. அவங்க யாரும் இங்க வரமாட்டாங்க”
“என்னை கிளம்பி வரச்சொன்னாங்க”
“எது உன்னை தனியா அனுப்பறதா அதெல்லாம் சரியா வராது அருள். இங்கயாச்சும் நான் கூட இருக்கேன், அங்க யாரும் வந்து உனக்கு துணைக்கு கூட இருக்க மாட்டாங்க. நீங்க ரெண்டு பேர் தனியா இருக்கும் போதே வீட்டுக்கு யாரும் வரமாட்டாங்க. இப்போ கேட்கவா வேணும்”
அவர் சொல்வது சரியே என்று தோன்றியது அவளுக்கு. “நீ யோசிக்காத, நாம இங்கவே எல்லாம் பண்ணிடலாம் வர்றவங்க வரட்டும், இல்லையா விடு” என்று முடித்துவிட்டவர் எல்லா ஏற்பாடுகளையும் அவரே முன்னின்று கவனித்தார்.
ப்ரீசர் பாக்ஸ் சிறிது நேரத்தில் வந்துவிட அதில் படுக்க வைத்தனர் அவளின் தந்தையை. காயத்ரியின் கணவர் வேலையாய் ஊருக்கு சென்றிருந்தவர் இன்னமும் வந்திருக்கவில்லை.
காயத்ரியின் மகன் வருண் மட்டும் இருந்தான். அவளின் தந்தையை பெட்டிக்குள் வைக்க ஆருத்ரனும் அவனுடன் வந்தவர்களும் தான் உதவி செய்தனர். வருண் கிட்டே கூட செல்லவில்லை.
அருளாசினிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தெரியாத ஊர், தெரியாத மனிதர்கள், தெரிந்த மனிதர்களின் நடவடிக்கைகள் எல்லாம் அவளை நிலைகுலைய செய்தது.
புது ஊராக இருந்தாலும் அவள் தந்தைக்கென்று இருந்த மனிதர்களால் அந்த வீடு நிறைந்தது. அவர் பள்ளியில் வேலை செய்பவர்கள், பயிலும் மாணவர்கள் என்று பலர் வந்திருந்தனர்.
குறுகிய காலத்திலேயே அனைவரிடத்திலும் ஓர் அன்னியோன்யத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார் அவளின் தந்தை.
“அருள் உள்ளே போயிட்டு வா, காபி வைச்சிருக்கேன் குடிச்சுட்டு வா…” என்று அவளை அழைத்தார் காயத்ரி.
“இல்லைத்தை எனக்கு வேணாம்”
“சொன்னா கேளு போ, இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லா சடங்கும் ஆரம்பிச்சிடும். நம்ம ஊர்ல செய்யற மாதிரி செய்ய இங்க ஆளுங்களை வரச்சொல்லி இருக்கேன். அதுக்கு முன்னாடி நீ போயிட்டு வந்திடு” என்று தன் அண்ணன் மகளை விரட்டினார் அவர்.
அவள் எழுந்து உள்ளே சென்றவள் பாத்ரூம் சென்று வந்து சமையலறையில் அவள் அத்தை பிளாஸ்கில் வைத்திருந்த காபியை எடுத்துக் கொண்டாள். வெளியே வந்து ஒரு ஓரமாய் நின்று அவள் குடித்துக் கொண்டிருக்கும் போது தான் பின்னால் பேச்சுக் குரல் கேட்டது.
“அண்ணே ப்ரீசர் பாக்ஸ்க்கு அட்வான்ஸ் எதுவும் வாங்கலையேண்ணே”
“அப்புறம் வாங்கிக்கலாம் விடுடா”
“என்னண்ணே நீ தானே சொல்லியிருக்க ஒழுங்கா அட்வான்ஸ் வாங்கணும்ன்னு இப்போ நீயே வேணாம்ன்னு சொல்றே”
“வேணாம்ன்னு எங்கேடா சொன்னேன். அப்புறம் வாங்கிக்கலாம்ன்னு தான் சொன்னேன்”
“எதுக்குண்ணே??”
“அந்த பொண்ணு ஊருவிட்டு வந்திருக்கு போல. அவங்க அத்தை தான் நமக்கு சொல்லிவிட்டு இருக்காங்க. அந்த பொண்ணுக்கு அம்மா இல்லை போல, இருந்த ஒரே சொந்தம் அவங்கப்பா அவரும் போயிட்டாரு. இந்த நேரத்துல போய் எப்படிடா காசு வாங்க”
“அப்போ அவங்க அத்தைகிட்ட கேப்போம்”
“விவரங்கெட்ட தனமா பேசாதடா. இப்போ அங்க ஆம்பிளைங்க யாரும் இல்லை. இப்போ போய் கேக்குறது சரியா வரும்ன்னு தெரியலை. அந்தம்மா இப்போ தான் பக்கத்து வீட்டு பொம்பளைகிட்ட வந்து புலம்பிட்டுபோச்சு”
“வேணாம்ன்னா விட்டிரு லோகு. சும்மா கேள்வி கேட்டுட்டு இருக்காத. எங்கப்பா செத்தப்போ ஊர்ல ஒருத்தன் எங்களுக்கு உதவி பண்ணலை, சாதி பேரைச் சொல்லி தொடக்கூட மாட்டேன்னு சொல்லிட்டாங்க”
“சொந்தக்காரங்க கூட காசு இருந்தா தான் மதிப்பாங்க. அவங்களும் எங்களை கண்டுக்கலை, அம்மாவோட தாலியை வித்து தான் அவரை அடக்கமே பண்ணோம்”
“அன்னைக்கு எனக்கு இது போல இறுதிச்சடங்குக்கு தேவையானதை செஞ்சுக்கொடுக்கற வேலை செஞ்சா என்னன்னு தோணிச்சு”
“வேலைக்கு போனேன் காசு சேர்த்ததும் இந்த தொழிலை ஆரம்பிச்சேன். இல்லாதவங்களுக்கு இலவசமா செஞ்சுக் கொடுக்கணும்ன்னு முடிவு பண்ணேன் யாருக்கும் இல்லைன்னு சொல்லாம நல்லபடியா அவங்களோட இறுதிசடங்கை நடத்தி கொடுக்கணும்ன்னு நினைச்சேன்”
“இதோ இப்போவரைக்கும் அதுல எந்த குறையும் இல்லாம தான் செஞ்சிட்டு இருக்கேன்”
“நீ பெரிய ஆள் தான் அண்ணா. உன் மனசு யாருக்கும் வராது”
“நான் அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்லைடா. நானும் காசுக்கு தானே வேலை பாக்குறேன்”
“இருக்கலாம்ண்ணே ஆனாலும் கஷ்டப்படுறவங்ககிட்ட நீங்க காசு வாங்குறது இல்லையேண்ணே”
“அதை விடு இங்க என்னன்னு நீ பார்த்துக்கோ நான் வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன்” என்றுவிட்டு கிளம்பிவிட்டான் அவன். உள்ளிருந்து அவர்கள் பேசுவதை கேட்டிருந்தாள் அருளாசினி. சன்னலை லேசாய் திறந்து யார் அவர்கள் என்றும் பார்த்திருக்க ஆருத்ரன் மேல் ஒரு மதிப்பு வந்தது அவளுக்கு.
அவளை தந்தையை அன்று அடக்கம் செய்திருக்க மறுநாள் வந்து உறைவிப்பான் பெட்டியை எடுத்துச் செல்ல ஆருத்ரன் வந்திருந்தான். முன் தினம் அனைத்து செலவுகளும் அவன் தான் செய்திருந்தான்.
காயத்ரி மனதில் ஒரு கணக்கு வைத்து அருளாசினியிடம் வந்து கேட்டிருந்தார் முன்தினம். “அருள் செலவுக்கு பணமெல்லாம் இருக்கா??”
“பணமா??” என்று திணறியவள் “என் அக்கவுன்ட்ல இருக்கு அத்தை… அப்பா கார்ட் நம்பர் எனக்கு தெரியாது, அவர் அக்கவுன்ட்லயும் காசு இருக்கும்” என்றாள்.
“அருளு நான் என்ன கேக்குறேன் நீ என்ன சொல்லிட்டு இருக்க?? இப்போ செலவுக்கு பணமிருக்கா அடக்கம் பண்ண, சுடுகாட்டுக்கு, சடங்கு செய்யன்னு தேவைப்படுமே, வீட்டில எதுவும் இருக்கா??”
“இப்போ இப்போ எதுவும் இல்லை அத்தை என்கிட்ட, வீட்டு செலவுக்குன்னு ஒரு ஆயிரம் ரூபா வைச்சிருக்கேன் அவ்வளவு தான்… அதைத்தரவா??” என்று எழுந்தவளை “நீ உட்காரு உன்கிட்ட இருக்கான்னு கேட்கத் தான் வந்தேன்”
“இல்லைன்னா எவ்வளவு ஆகும்ன்னு பார்த்து உங்க மாமாகிட்ட வாங்கணும் அதுக்குத்தான்” என்றவர் எழுந்துச் சென்றுவிட்டார்.
அவளுக்கு தெரியாது ஆருத்ரன் தான் அவள் தந்தையின் இறுதிச்சடங்கிற்கான அனைத்தும் செய்தான் என்று. காயத்ரி பெரிதாய் அவளிடம் தான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லியிருந்தாலும் அவள் கணவர் ஒன்றும் அப்படி அள்ளிக்கொடுத்துவிடும் ரகமல்ல.
அருளாசினிக்கு உதவி செய்வதன் மூலம் அவளை நன்றிக்கடனுக்கு ஆளாக்கி தன் மகனுக்கு கட்டி வைத்துவிடும் நினைப்பு இருந்தது அவருக்கு. காயத்ரிக்கு அவரே எல்லாம் செலவும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் ஆனால் அவள் கணவரிடம் இருந்து அவ்வளவு காசு கிடைக்கவில்லை அவருக்கு.
காயத்ரியின் கணவருக்கு விபரம் தெரிந்து வெளியூரில் இருந்து மாலை தான் வீட்டிற்கு வந்திருந்தார். ஏதாவது வேண்டுமா என்று கேட்டு அவர் கொடுத்த பணம் சாப்பாட்டிற்கு மட்டுமே போதுமானதாய் இருந்தது. காயத்ரிக்கு ஆருத்ரனை பற்றி கொஞ்சம் தெரியும்.
அந்த சுற்றுவட்டாரத்தில் அவனை ஓரளவிற்கு தெரிந்திருந்தது அனைவருக்கும். அதில் அவன் கஷ்டப்படுவர்களுக்கு, ஆதரவில்லாதவர்களுக்கு என்று உதவுவதும் அறிவார்.
அதையே பயன்படுத்தி அவள் கணவரின் குணம் பற்றி சொல்லியும் அவர் ஆருத்ரனிடம் போனில் பேசியிருக்க அனைத்துமே அவன் ஏற்பாடாகியிருந்தது.
இரண்டு மாதம் ஓடிச் சென்றிருந்தது. ஆருத்ரன் அருளாசினி வீடு இருந்த பகுதிக்கு வந்திருந்தான். அதே தெருவில் இவர்கள் வீட்டிற்கு எதிரில் நான்கு வீடு தள்ளி ஒரு இழப்பு வீடு.
அங்கு உறைவிப்பான் பெட்டியை போடுவதற்கு வந்திருந்தான். ஒரு பெண்ணிடம் வாலிபனொருவன் வம்பு செய்வதை பார்த்தான்.
அந்த பெண் அருளாசினி, அவளிடம் வம்பு செய்தவன் அவளின் அத்தை மகன். இந்த இரண்டு மாதத்தில் அவன் பலமுறை அருளாசினியிடம் தன்னை திருமணம் செய்யச்சொல்லி வற்புறுத்தி இருக்கிறான்.
முதல்நாள் கூட அவள் வீட்டிற்கே சென்று அவன் பிரச்சனை செய்ய பொறுக்க முடியாமல் விளக்குமாறை கொண்டு விளாசிவிட்டாள் அவனை.
அவள் அத்தை ஏதோ திருமணம் ஊருக்கு சென்றிருந்தார். அவர் இருக்கும் போது அம்மாவும் பிள்ளையுமாக தான் எப்போதும் கல்யாண பேச்சை பேசுவது. அவர் இல்லாத சமயங்களில் அவன் இப்படித்தான் அவளிடம் வம்பு செய்வான்.
‘வீடுங்கறதுனால என்னை அடிச்சிட்டல, வெளிய நீ என்ன பண்றேன்னு பாக்குறேன்’ என்று மனதிற்குள் கருவிக்கொண்டவன் மறுநாள் அவள் வேலை முடித்து வரும் போது அவள் கையை பிடித்திழுத்து வம்பு செய்தான்.
இருவருக்கும் முறை என்பது அக்கம்பக்கத்தில் உள்ளோர்க்கு அரசல்புரசலாய் தெரியும் என்பதால் அவர்களும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
தூரத்திலேயே அதைக் கண்டுவிட்ட ஆருத்ரனுக்கு அப்படியொரு கோபம். வண்டியில் இருந்த பெட்டியை லோகுவை இறக்கச் சொல்லிவிட்டு இவன் இறங்கி அவர்களை நோக்கிச் சென்றான்.
எந்த கேள்வியும் கேட்கவேயில்லை ஓங்கி ஒரு அறைவிட்டான் அவளின் அத்தை மகனின் கன்னத்தில். “டேய் யாருடா நீ” என்றான் அவன் கன்னத்தை பிடித்தவாறே.
“உங்கப்பன்”
“என்னடா திமிரா பேசுறே?? எதுக்குடா இப்போ என்னை அடிச்சே நீ??”
“எதுக்கு நீ அந்த பொண்ணுக்கிட்ட கலாட்டா பண்ணிட்டு இருக்கே??”
“அவ என் மாமா பொண்ணு அவகிட்ட விளையாட எனக்கு உரிமையிருக்கு”
“அதெல்லாம் உங்க வீட்டுல போய் வைச்சுக்கோ. இப்போ ரோட்ல வைச்சு ஷோ காமிக்காத. ஆமா என்ன சொன்னே இந்த பொண்ணு உனக்கு மாமா பொண்ணுன்னா, பார்த்தா அப்படி தெரியலையே. உன்னை கண்டு அந்த பொண்ணு ஓடுற மாதிரி இருக்கு”
“விளையாட்டுன்னா அப்படித்தான் இருக்கும்”
“அப்படியா??” என்றவன் அவள் புறம் திரும்பி “என்ன பிரச்சனை??” என்றான்.
“இவர் என் அத்தை பையன் தான். அவரை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி என்னை கட்டாயப்படுத்துறாரு. இன்னைக்கு நடுரோட்டுல கையை பிடிச்சு இழுக்கறாரு” என்றாள்.
“தம்பி இதுவும் விளையாட்டு தான் போல. தீராத விளையாட்டு பிள்ளையா இருக்கீங்களே, வாங்களேன் நாம ரெண்டு பேரும் விளையாடுவோம்…” என்றவனின் கரம் அழுத்தமாய் அவளின் அத்தை மகன் வருணின் மேல் விழ “என்னடா அடிப்பியா??” என்றவன் அருளாசினியிடம் திரும்பி “எப்படியிருந்தாலும் நீ வீட்டுக்கு தானே வரணும் அப்போ வைச்சுக்கறேன் உன்னை” என்று முன்னே நடந்தான்.
“வீட்டுக்கு போய் அவங்ககிட்ட நீ வம்பு பண்ணேன்னு எனக்கு தெரிஞ்சுதுன்னு வை”
“ஏன்?? அவன் திரும்ப வம்பு பண்ணுவான்னு பயப்படறீங்களா அதெல்லாம் பண்ண மாட்டேன். தைரியமா போங்க”
“எனக்கு அவனை நினைச்சு பயமில்லை… மா… இல்லை அத்தை ஊருக்கு போயிருக்காங்க… நேத்து நைட்டே வந்து ஒரே கலாட்டா பண்ணிட்டு தான் போனான், நான் உதைச்சு அனுப்பிட்டேன்”
“அந்த கோபத்துல தான் இன்னைக்கு ரோட்ல இப்படி நடந்துக்கிட்டான்” என்றாள்.
“நீங்க வாங்க நான் உங்களை விடுறேன்” என்றவன் அவளுடனே நடக்க வீடு வந்தது.
“பயப்படாம போங்க யாரும் உங்களை எதுவும் செய்ய முடியாது” என்றான் உள்ளே இருப்பவனின் காதுக்கு கேட்குமாறு.
வருண் இவர்களுக்கு முன்னேயே வீட்டிற்கு வந்திருந்தான். வெளியே ஆருத்ரனின் குரல் கேட்கவும் அவன் வெளியே வரவேயில்லை.
“தேங்க்ஸ்” என்றாள் அவள் படியேறிக் கொண்டே.
“ஒரு நிமிஷம்” என்றவன் “ஏதாச்சும் பிரச்சனைன்னா கூப்பிடுங்க” என்று சொல்லி அவன் கார்டை கொடுக்க அதை வாங்கிக்கொண்டாள்.
அன்று இரவு அவனுக்கு அழைக்கும் அவசியம் வரும் என்று அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை… அந்த ஓர் இரவு தான் அவள் வாழ்க்கையையே முழுவதுமாய் மாற்றிப் போயிருந்தது…