6
“ருத்ரா”
“ம்மா”
“என்னாச்சுன்னு எனக்கு உண்மையை சொல்லு”
“என்ன உண்மைமா??”
“அந்த பொண்ணை நீ எப்படி கல்யாணம் பண்ணே?? எதாச்சும் மிரட்டி கட்டிக்கிட்டியாடா?? என்னடா நடந்துச்சு?? அந்த பொண்ணு மூணு நாளா சாப்பிடாம மயங்கியிருக்கான்னா நீ என்ன பண்ணே??”
“உனக்கு அந்த பிள்ளைக்கும் என்ன பிரச்சனைன்னு சொல்லு??  எனக்கு தெரியும்டா நீ அந்த பொண்ணை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்கேன்னு. உன்கிட்ட இதெல்லாம் பேசக்கூடாதுன்னு நினைச்சா என்னை பேச வைக்குறியேடா…”
“ம்மோவ்… ம்மோவ்…கொஞ்சம் கேப் விடும்மா நீ பாட்டுக்கு கேள்வியா கேட்டுட்டு இருக்க என்னை பதில் பேசவிடாம…”
“சரி பதில் சொல்லு. அருளை உனக்கு எப்படி தெரியும்?? இப்போ அருளு இப்படி இருக்க என்ன காரணம்??” என்று அன்னப்பூரணி கேட்க ஆருத்ரன் கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.
அவர்கள் தற்போது இருப்பது அவர்கள் வீட்டின் அருகே இருக்கும் கிளினிக் ஒன்றில். அன்று காலையில் அருளாசினி கண் திறவாமல் படுத்திருக்க தூங்குகிறாள் போல என்றுவிட்டு தன் போக்கில் கிளம்பிக் கொண்டிருந்தான் ருத்ரன்.
அவன் காலை உணவை உண்டுவிட்டு அன்று வீட்டில் தானிருந்தான் பத்துமணி வரை. அதுவரையிலும் கூட அவள் எழுந்து வரவேயில்லை. 
“ஏன் ருத்ரா அருளு ரூம்ல என்னா பண்ணுது?? இன்னும் எழுந்து வரவேயில்லை, உடம்புக்கு எதுவும் முடியலையா??” என்று கேட்க “தூங்கிட்டு இருந்தாம்மா, இருங்க பாக்குறேன்” என்று எழுந்து உள்ளே சென்றவன் “ம்மோவ்…”என்று கத்த அன்னப்பூரணி உள்ளே ஓடினார்.
“என்னடா ருத்ரா??”
“என்னன்னு தெரியலைம்மா எழுப்ப எழுப்ப எழுந்திருக்க மாட்டேங்குறா. மயக்கமா இருக்காளான்னு தெரியலையே, டாக்டர்கிட்ட போய்டலாம்மா”
“டேய் என்னடா பண்ணே இவளை?? நீ ரொம்ப கஷ்டபடுத்தி இருக்க இவளை, நேத்து என்னடா பண்ணே??” என்று கத்தினார் அவர்.
“அம்மா நான் எதுவும் செய்யலைம்மா” என்றான் அவன்.
“அப்போ இதென்ன??” என்றவர் அவள் சேலை விலக்கி அவன் கைத்தடத்தை காட்ட ஒன்றும் பேச முடியாமல் தலை குனிந்து நின்றான் அவன்.
இந்தளவிற்கு மிருகமாக தான் இருக்கிறோமா என்று அப்போ தான் உணர்ந்தான் அவன். அன்னைக்கு பதில் சொல்ல முடியாமல் தன் மனைவியையே பார்த்திருந்தான்.
“அந்த கதையை வந்து பேசிக்கலாம், இப்போ இவளை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகலாம். நான் போய் கவிதா புருஷன் இருக்கானான்னு பார்க்குறேன். அவனை ஆட்டோ எடுக்க சொல்றேன். நீ இவளை கூட்டிட்டு வா” என்றுவிட்டு முன்னே சென்றார்.
சொன்னது போல அவர் ஆட்டோவை எடுக்கச் சொல்லிவிட்டு மகனுக்கு குரல் கொடுத்தார். “ருத்ரா அந்த புள்ளைய கூட்டிட்டு வா”
“இதோ வர்றேன்மா” என்றவன் அவளை இருகைகளாலும் தூக்கிக் கொண்டான்.
“என்னாச்சு ருத்ரா??” என்றார் ஆட்டோக்காரர்.
“கொஞ்சம் உடம்பு சரியில்லைண்ணே. பக்கத்துல இருக்க டாக்டர் வீட்டுக்கு போங்களேன்”
“சந்தோசு நம்ம ரேணுகா டாக்டர் இருப்பாங்கல அங்கவே போ” என்றார் அன்னப்பூரணி.
“சரிக்கா…” என்றவன் ஆட்டோவை எடுக்க அந்த கிளினிக்கும் வந்திருந்தது.
“வெயிட் பண்ணவாக்கா??”
“எவ்வளவோ நேரம் ஆகும் தெரியலை சந்தோஷ், நீ கிளம்பு நான் அப்புறம் போன் பண்ணறேன்…” என்றவர் “ருத்ரா” என்று மகனை பார்க்க சட்டையில் இருந்து நூறு ரூபாய் தாளை எடுத்து அவரிடம் நீட்டினான் அவன்.
“இருக்கட்டும் ருத்ரா அப்புறம் வாங்கிக்கறேன்” என்று நகர்ந்துவிட்டார் அவர்.
ஆருத்ரன் அவளை கைத்தாங்கலாய் உள்ளே அழைத்துச் சென்றான். நல்ல வேளையாக மருத்துவர் ப்ரீயாக இருந்தார் அந்நேரம்.
“வாங்க… என்னாச்சு??” என்று அவர்களை பார்த்து கேட்க “தெரியலை டாக்டர் நைட் நல்லா தான் தூங்கினா காலையில எழுப்பறேன் எந்திக்கவே மாட்டேங்குறா…” என்றான் ருத்ரன்.
“இங்க படுக்க வைங்க…” என்று அவர் அருகில் இருந்த படுக்கையை காட்ட தன் மனைவியை தூக்கி அதில் கிடத்தினான் அவன்.
“யாராச்சும் ஒருத்தர் உள்ள இருங்க” என்றவர் “அவங்க யாரு” என்று அன்னப்பூரணியை காட்டிக் கேட்டார்.
“எங்க அம்மா டாக்டர்”
“அவங்க இங்க இருக்கட்டும், ஆமா பேஷன்ட் உங்களுக்கு என்ன வேணும்??”
“வைப் டாக்டர்…”
“சரி வெளிய வெயிட் பண்ணுங்க” என்றவர் சொல்ல இவன் வெளியே சென்றான்.
அடுத்த சில நொடிகளிலேயே மருத்துவர் அழைப்பதாக அவருக்கு உதவி செய்பவர் அழைக்க எழுந்து உள்ளே சென்றான்.
‘இவங்க எதுக்கு என்னை ஒரு மாதிரி பார்க்கறாங்க’என்று எண்ணிக்கொண்டே அவன் கதவை திறக்க அன்னப்பூரணி தலைகுனிந்து நின்றிருந்தார் மருத்துவர் முன்பு.
“நீங்கலாம் என்னையா மனுஷன் ஒரு பொண்ணை இப்படித்தான் கொடுமை படுத்துவீங்களா… அந்த பொண்ணை பட்டினி போட்டு உன்னோட வீரத்தை எல்லாம் அது உடம்புல காட்டியிருக்க, நீயெல்லாம் என்ன ஆளுய்யா”என்று அவர் கத்த ஆரம்பித்தார்.
“என்ன டாக்டர் சொல்றீங்க?? அவ பட்டினி எல்லாம் கிடக்கலை, வேற எதுவும் பிரச்சனையா இருக்கும் நல்லா பாருங்க…”
“இங்க நான் டாக்டரா இல்லை நீ டாக்டரா??” என்று முறைத்தார் அவனை.
“இல்லை டாக்டர் வந்து…”
“முதல்ல போலீஸ்க்கு சொல்லணும் இதெல்லாம் வேலைக்கு ஆகாது…”
“டாக்டர் அவன் எதுவும் பண்ணலை. என்னை உங்களுக்கு தெரியாதா, எத்தினி வருஷமா என்னை பாக்குறீங்க” என்றார் அன்னப்பூரணி.
“உங்களை எனக்கு தெரியும் அப்படிங்கறதுக்காக உங்க மகன் பண்ணது நியாயம் ஆகிடாது… உங்க முன்னாடி தானே அவங்களை செக் பண்ணேன்”

“அவங்க வயிறு எவ்வளவு ஓட்டிப் போயிருக்குன்னு காமிச்சேன்ல உங்களுக்கு. கூடவே உங்க மகன் பண்ண திருவிளையாடலையும் காமிச்சேனா இல்லையா” என்றவர் சொல்ல அன்னப்பூரணி திரும்பி மகனை முறைத்திருந்தார்.
“டாக்டர் ப்ளீஸ் மன்னிச்சுடுங்க இனிமே இப்படி நடக்காம நான் பார்த்துக்கறேன்” என்றார் இதுவரை யாரிடமும் தணிந்து பேசாத அன்னப்பூரணி.
“என் கூட தான் பகல்ல இருப்பா. நான் இவ சாப்பிட்டான்னு நினைச்சேன் இவ சாப்பிடலைன்னு எனக்கும் தெரியலை. நானும் கவனிக்காம விட்டேன். தப்பு என் மேலயும் தான் இருக்கு டாக்டர்” என்றார் தொடர்ந்து.
“நீங்க தான் பேசறீங்க. சார் வாயே திறக்காம இருக்காரு. செஞ்ச தப்பு உறுத்துது போல அவரை…” என்றார் மருத்துவர்.
“டாக்டர்…” என்றவனுக்கு மன்னிப்பு கேட்க வாய் வரவில்லை. என்ன பேச என்று அவன் தயங்கி நின்றான். அம்மருத்துவருக்கு என்ன தோன்றியதோ “நீங்க இப்போ வெளிய வெயிட் பண்ணுங்க, அதுக்கு முன்னாடி உங்க போன் நம்பரை கொடுத்திட்டு போகணும் நீங்க”
“ட்ரிப்ஸ் போடறேன் அது முடியவும் வீட்டுக்கு கூட்டிட்டு போங்க. ஒழுங்கா சோறு போடுங்க அவங்களுக்கு. நான் நாளைக்கு இவங்ககிட்ட பேசணும், போன் பண்ணுவேன்… அதுக்கு அப்புறம் தான் உங்களை என்ன செய்யறதுன்னு முடிவு பண்ணணும்” என்றும் சொல்லி முடித்தார்.
இதோ அவர்கள் அவளை வீட்டிற்கும் அழைத்து வந்துவிட்டிருந்தனர். அதன் பின்னர் தான் அன்னப்பூரணி தன் மகனிடம் விசாரணை நடத்தியது எல்லாம்.
அறைக்குள் படுத்திருந்த அருளாசினி மெதுவாய் கண் விழித்து பார்த்தாள். அன்று ஆருத்ரன் அவளிடம் உனக்கு மூன்று வேளை சாப்பாடு கிடைக்கிறது தானே எதற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற கேட்ட அன்று அவன் சொல்லிய வார்த்தையை கேட்டு துடித்து போனாள்.
மூன்று வேளை சோறும் இருக்க இடமும் இருந்தால் மட்டும் ஒருவர் சந்தோசமாயிருக்க முடியுமா என்ன?? அது எப்படி அவனுக்கு புரியும். அதை அவனுக்கு புரிய வைக்க தெரியாதவள் அவன் சொன்ன மூன்று வேளை சோற்றை மறுத்து தன் தேவையை அவனுக்கு புரிய வைக்க நினைத்தாள்.
அவள் கண் விழித்து அரைமணி நேரமாவது ஓடியிருக்கும். வெளியில் அம்மாவும் மகனும் பேசுவது கேட்டது. தனக்கும் ஆதரவாய் பேச ஒரு ஜீவன் இந்த உலகத்தில் இருக்கிறதே என்று எண்ணி அவள் விழிகள் நனைந்தது.
ஆருத்ரன் தன் அன்னையிடம் அவளைப்பற்றி சொல்லிக் கொண்டிருக்க அவளின் எண்ணங்களும் அதே திசையில் பயணித்தது.
————
“அப்பா நாளைக்கு சென்னைக்கு போகணும்ன்னு சொன்னீங்களேன்னு எல்லா திங்க்ஸ் பேக் பண்ணி வைச்சுட்டேன்ப்பா…”
“நம்ம டிரஸ் மட்டும் எடுத்துக்கலாம்மா… அங்க முக்கியமா தேவைக்குன்னு தனியா பாத்திரம் எல்லாம் எடுத்து வைக்க சொன்னேனே வைச்சுட்டியா??”

“வைச்சுட்டேன்ப்பா, மிச்ச திங்க்ஸ் எல்லாம் தனியா எடுத்து பேக் பண்ணிட்டேன். ஆமாப்பா இந்த வீட்டை என்ன செய்யலாம்??”
“இதை வாடகைக்கு விடுறதுக்கு நம்ம ரங்கசாமிகிட்ட சொல்லியிருக்கேன். சீக்கிரம் ஆள் வந்திடுவாங்க…”
“சரிப்பா, சென்னையில எங்க தங்கப் போறோம்ப்பா”
“உங்க அத்தை ஒருத்தி இருக்கான்னு சொன்னேன்லம்மா அவங்க வீட்டு மாடியிலேயே வீடு ஒண்ணு இருக்காம். அங்கவே வந்து தங்கிக்க சொல்லிட்டா…”
“ஏன்பா உங்க சித்தப்பா பொண்ணு காயத்ரின்னு சொல்வீங்களே அவங்க தானேப்பா… ஆனா அவங்க லவ் மேரேஜ் பண்ணிகிட்டாங்கன்னு சொன்னீங்க”
“ஆமாம்மா லவ் மேரேஜ் தான். அவ புருஷன் ஆளு பார்க்க நல்லா டிப்டாப்பா இருப்பாரு. நல்ல படிப்பு தான் படிச்சிருப்பாரு போல”
“காயத்ரி கூட படிச்ச பிள்ளை வீட்டுக்கு வந்திருக்கான். அந்த பொண்ணோட அண்ணனுக்கு பிரண்டு போல, ஏதோ வேலையா வந்தவன் அங்க தங்கியிருக்கான் பத்து நாளா. இவ அந்த பொண்ணு வீட்டுக்கு படிக்க போன இடத்துல அவன் பார்த்திருக்கான்”
“ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சு போச்சு. வெளிநாட்டுக்கு ஏற்றுமதி பண்ணுற கம்பெனி வைச்சிருக்கேன் வேற சொல்லியிருக்கான். இவளும் பார்க்க நம்ம ஆளுக மாதிரி இருக்கான்னு லவ் பண்ணிட்டா”
“அப்புறம் என்னாச்சுப்பா??”
“வீட்டுல இவங்க காதல் தெரிஞ்சதும் என் அண்ணன் வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சான். எங்க பெரியப்பாவும் அவளுக்கு அவசரமா வேற மாப்பிள்ளை பார்க்க இவ அவனோட ஓடிப் போய்ட்டா”
“என்ன லவ்வோ??” என்று தலையில் அடித்துக்கொண்டாள் அவர் மகள்.
“ஏன்மா உனக்கு லவ்ன்னா பிடிக்காதா??”
“பிடிக்கும் பிடிக்காதுன்னு எதுவும் இல்லைப்பா… அம்மா அப்பாவை பகைச்சுட்டு அந்த காதல் தேவையில்லைன்னு நினைக்கிறேன்”
“உனக்கு அப்படி எதுவும் இல்லையாம்மா”
“என்னப்பா உங்க பொண்ணை சந்தேகப்படுறீங்களா??”
“நிச்சயமா இல்லைம்மா. உனக்கு பிடிச்சிருந்தா நான் தடுக்கவே மாட்டேன், எனக்கு இருக்கறது நீ ஒரே பொண்ணு. உன் ஆசை தான் என் ஆசை”
“அதே தான்பா எனக்கும் உங்க ஆசை தான் என் ஆசையும்” என்றாள் மகள்.
“சரிப்பா அப்புறம் என்னாச்சுன்னு நீங்க சொல்லவே இல்லையே”
“அப்புறம் என்ன அவன் சொன்னதுலாம் பொய்ன்னு அவ கல்யாணத்துக்கு அப்புறம் தான் தெரிஞ்சது. எங்க பெரியப்பா குடும்பம் அவளை தலை முழுகிடுச்சு”
“உங்க பெரியப்பா அவங்களை மட்டுமா தலை முழுகினாங்க.  நம்மளையும் தான் முழுகிட்டாங்க…”
“விடு அவங்க குணம் அவ்வளவு தான். எங்க அவங்க வசதியை பார்த்து நாம அவங்ககிட்ட ஒட்டிக்குவோமோன்னு ஒரு எண்ணம் அவங்களுக்கு”
“அடப்போங்கப்பா”
“சரிம்மா இந்த திங்க்ஸ் எல்லாம் எடுத்துப் போக கொஞ்ச நேரத்துல வண்டி வந்திடும்… அவங்க நாளைக்கு சென்னையில வந்து டெலிவர் பண்ணிடுவாங்க…”
“நாம இன்னைக்கு நைட் ட்ரைன்ல கிளம்பணும் தேவையானதை பார்த்து எடுத்து வைம்மா. நான் வெளிய போயிட்டு தேவையான கொஞ்ச திங்க்ஸ் வாங்கிட்டு வர்றேன்,அப்படியே ரங்கசாமிக்கு ஞாபகப்படுத்திட்டு வந்திடறேன்” என்றுவிட்டு கிளம்பிவிட்டார்.
திருச்சியில் இருந்து கிளம்பியவர்களின் மறுநாளைய பொழுது சென்னையில் விடிந்தது. காயத்ரியின் வீடு தண்டையார்பேட்டையில் இருக்க இவர்கள் ஒரு ஆட்டோ பிடித்து வந்திருந்தனர்.
“என்னப்பா இப்படி கசகசன்னு இருக்கு இங்க… எந்த வீட்டுக்கு இடையிலயும் கேப்பே இல்லை… இந்த ஏரியால எப்படிப்பா இருக்காங்க” என்று தந்தையின் காதில் முணுமுணுத்தாள் அவள்.
“அதெல்லாம் அப்புறம் பேசுவோம்” என்று முடித்துவிட்டார் அவர்.
காயத்ரி அவர்களை வரவேற்க சிம்பிளாக அன்றே பால் காய்ச்சி குடி புகுந்தனர் தந்தையும் மகளும். அருளாசினியின் தந்தை கோவிந்தன் அரசாங்க பள்ளியொன்றில் ஆசிரியராக பணிப்புரிந்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு பள்ளி முதல்வராக பதவி உயர்வும் இட மாற்றமும் வந்திருக்க இதோ சென்னைக்கு வந்திருந்தனர். அருளாசினியும் ஆசிரியருக்கு தான் படித்திருந்தாள். 
தந்தையை போலவே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அவளும் ஆசிரியர் பயிற்சியை முடித்திருந்தாள்.
அவர்கள் அங்கு வந்து இரண்டு மாதம் ஓடியிருந்தது.“அப்பா நாம திரும்ப நம்ம ஊருக்கே போய்டலாம்ப்பா. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை” என்றாள் அருளாசினி.
“ஒரு வருஷம் போகட்டும்மா அப்போ தான் மாற்றல் கேக்க முடியும். வந்ததும் கிளம்பினா நல்லா இருக்காது. பசங்க படிப்புக்கு இடையூறு ஆகிடக்கூடாது” என்றார் அவர்.
“சரிப்பா” என்று அப்போதைக்கு முடித்திருந்தவளால் ஒரு மாதம் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. இந்த முறை அவளுக்கு கோவிந்தனே ஆரம்பித்திருந்தார். “அம்மா அருள் நான் மாற்றல் கேட்டிருக்கேன், சீக்கிரமே ஊருக்கு போய்டலாம்” என்றார் ஏதோ யோசனையாய்.
“என்னாச்சுப்பா இடையில போக முடியாது வேணாம்ன்னு சொன்னீங்க”
“ஆமாம்மா என்னமோ எனக்கு இங்க சரியாப்படலை. காயத்ரியோட பையனோட பார்வையே சரியில்லை” என்றார்.
“அவன் மட்டுமாப்பா…” என்று இடை நிறுத்தினாள் மகள்.
“வேற யாரும்மா??” என்றார் பெற்றவர் பதறி.
“மா… இந்த ஏரியால ஒருத்தர் பார்வையும் அவ்வளவா சரியில்லைப்பா” என்றாள் மகள்.
“ஹ்ம்ம்” என்றவர் “நீ சின்ன குழந்தைங்களுக்கு பாடம் எடுக்கற நர்சரியில வேலைக்கு சேர்ந்தியே நல்லா இருக்கா அங்க உனக்கு”
“ஹ்ம்ம் நல்லா தான்ப்பா இருக்கு…”
“ஏன்மா ஒரு மாதிரியா சொல்றே??”
“பசங்க பேச்செல்லாம் ரொம்ப கொச்சையா இருக்குப்பா… சில பசங்க தான் நல்லா பேசறாங்க… மாத்த டிரை பண்ணிட்டு இருக்கேன்…”
“பேசப் பேச வந்திடும்மா… இங்க எல்லாம் ரொம்ப சாதாரண மக்களா இருக்காங்க. அவங்க வீட்டுல எப்படி பேசறாங்களோ பசங்களும் அப்படி பழகியிருப்பாங்க… நீ இங்க இருக்க வரை மாத்த முயற்சி பண்ணு” என்றார் அவர்.
“அப்புறம் அருள்”
“என்னப்பா??”
“எனக்கு ஏதாவது ஒண்ணு ஆகிடுச்சுன்னா எக்காரணம் கொண்டும் சொந்தத்துல கல்யாணம் பண்ணிக்காத. முக்கியமா காயத்ரி அத்தை பையன்”
“அப்பா என்ன பேச்சு இதெல்லாம். உங்களுக்கு எதுவும் ஆகாதுப்பா”
“இல்லைம்மா எனக்கு சொல்லணும்ன்னு தோணிச்சு. காயத்ரி கூட அவ பிள்ளைக்கு உன்னை கட்டணும் அப்படிங்கற மாதிரி என்கிட்ட பேசினா. நான் பிடிக்கொடுக்கலை” என்றார். எந்த நேரத்தில் மகளிடம் இப்படிச் சொன்னாரோ எது அவரை வருத்தியதோ அடுத்த பத்து நாளில் ஒரு இரவில் அவர் உயிர் பிரிந்திருந்தது.