உள்ளே சென்றதும் சாந்தலக்ஷ்மி கீச் கீச் என சத்தம் வரும் ஷூ போட்டு நடக்க, வாசு குழந்தையை தூக்கியதும், கீழே இறக்குமாறு அடம் பிடித்தது. 
இவன் கீழே விட்டு அதனுடனே நடக்க, சுற்றி எல்லாவற்றையும் ஆவலாய் பார்த்தது. இதற்கு முன் கார்த்தி ஒரு முறை இங்கே குழந்தையை அழைத்து வந்திருக்கிறான், பிறகு இப்போது தான் குழந்தை ஏர்போர்ட் வருகிறது, அதனால் சாந்தலக்ஷ்மிக்கு இங்கே பார்க்கும் எல்லாம் புதிதாக இருந்தது. ஒரு மணி நேரத்தில் ஸ்ரீயின் ஃப்ளைட் லாண்ட் ஆகவும்,  வாசுவிற்கு உள்ளே ஒரு இனிய அலை, அவளை பார்க்க ஆவலாய் அவள் வரும் வழியை எதிர் நோக்கியிருந்தான்.   
    ஒரு ஃபுளோர் லெந்த் பீச் நிற லாங் டாப் அணிந்து மேல ஒரு வெள்ளை நிற ஓவர் கோட், தலையில் போனியுடன் ட்ரோலியை தள்ளிக்கொண்டு ஹேண்ட்பேக்குடன் உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் தேனுவை நோக்கி உற்சாமாக துள்ளளுடன் நடந்து வந்தாள் ஸ்ரீபத்மா. 
      வாசு அவளை பார்த்தவன் கண்களை வேறு புறம் அகற்றவே சிரமபட்டு போனான். அவனது ஸ்ரீ அப்படியே தான் இருந்தாள். எந்த மாற்றமும் இல்லை. உடல் பெருக்கவும் இல்லை, இளைக்கவும் இல்லை. ஆனால் நேச்சுர் போட்டோக்ரபி என நன்றாக ஊர் சுற்றி, அது இது என சாப்பிட்டு கன்னம் வைத்து மெருகேறி போயிருந்தாள். அதே சிரிப்பு, அதே உற்சாகம், அதே புன்னகை. 
     அவளை இத்தனை மாதங்கள் கழித்து பார்பதாலோ என்னவோ, வாசு சீராக மூச்சு விட சிரமப்பட்டுப் போனான். வலது கையை இதயத்தின் மேல் வைத்து யாரும் அறியாமல் லேசாக நீவி கொடுத்து ஆற்றுப்படுத்தினான். பிறகு கொஞ்சம் சீராக மூச்சு வர, ‘ ஹூஃப் ‘ என மூச்சு விட்டு வேறு புறம் பார்த்து அசுவாசப்படுத்திக்கொண்டு இரு கைகளையும் கட்டிக்கொண்டு இவளை பார்க்க, அவள் எங்கே இவனை பார்த்தாள். அவள் கவனம் முழுக்க தேனுவின் கையில் இருந்த பாப்பாவின் மீதே இருந்தது.    ஸ்ரீபத்மா அருகில் வர வர தேனுவின் கையிலிருந்த பாப்பா கீழே இறங்கி அவளை நோக்கி ஓடிவிட்டது. 
“ லச்சு குட்டி “ என பாப்பாவை ஆசையாக தூக்கியவள், அதனின் கன்னத்தில் மூக்கை வைத்து உரசி கொஞ்சி அதற்கு முத்தமிட்டு தேனுவின் அருகில் வர, ஸ்ரீ தேனுவை “ பேத்தக்குட்டி “ என உற்சாகமாக இறுக்கி கட்டிக்கொண்டாள். சில நிமிடங்கள் அவளுடன் அளவளாவியவள் கார்த்தியை தேட, தேனு, 
“ உங்க அண்ணா வரல என் அண்ணா தான் வந்துருக்காங்க. பின்னாடி பாரு அங்க நிக்குறாங்க.  “ 
என சொல்ல, அவள் இதை எதிர்பார்க்கவில்லை போலும். ஆனால் அதை தேனுவிடம் காட்டிக்கொள்ளவில்லை. ஸ்ரீ மெல்ல வாசு நிற்கும் புறம் திரும்பி பார்த்தாள். 
     அடர்ந்து வளர்ந்த சிகை மற்றும் தாடியுடன் கண்கள், கன்னங்கள், நெற்றி மட்டுமே தெரிய வாசு ஒரு லைட் சாண்டல் நிற டெனிம் ஷர்ட் அணிந்து ஆளே அடையாளம் தெரியாமல் இருந்தான். உடல் ஆகிருதி கூடியிருக்கு, இவன் தான் வாசுவா என ஒரு நிமிடம் உற்று பார்த்து நின்றிருந்தாள் ஸ்ரீபத்மா. பின்பு சுதரித்தவள், குழந்தையை தனுக்கும் தேனுவிற்கும் இடையில் கைபிடித்து நடத்தி வர, மற்றொரு கையில் ட்ரோலியை தள்ளிக்கொண்டு வாசுவை நோக்கி வந்தாள்.
வாசுவின்‌ விழிகள் அவளின் விழி மொழிக்காக பார்த்து நின்றது. 
ஸ்ரீபத்மா மலர்ந்த சிரிப்புடன் தேனுவிடம் ஏதோ உற்சாகமாக பேசிக்கொண்டே வாசுவின் அருகில் வர வர, முகத்தின் சிரிப்பு நிதான புன்னகைக்கு மாறியது. 
“ ஹாய் மாமா…வாங்க. “
என இயல்பாய் சொல்ல, வாசு அந்த மூன்று சொற்களிலே கண்டுகொண்டான் அவளை. 
இத்தனை நேரம் தேனுவிடம் உற்சாகமாக பேசிக்கொண்டு வந்த ஸ்ரீ இல்லை இவள். ஸ்ரீபத்மாவின் முகத்தில் ஒரு அமைதி, அதுவும் இவனிடம் மட்டும். 
ஆம்… அவனிடம் அவளது இயல்பு பேச்சு இது அல்லவே. 
அவனுக்கான துள்ளல் மொழியை அவள் விழிகள் இவனிடம் பேசவில்லை. இவனிடம் அவள் பேசும் சாதாரண பேச்சு கூட ஒரு உரிமையாய் வரும். இப்போது பேச்சிலே விலகி நிற்கும் தொனி. அது கூட கண்டு கொள்ளமுடியாதவனா வாசு. 
முதல் பேச்சிலே அவளது மனம் தெளிவாய் அவனுக்கு புரிந்தது. இதெல்லாம் பார்க்க வாசுவிற்கு உள்ளே ஏதேதோ செய்தது. 
இத்தனை மாதங்களாக அவள் அருகில் இல்லாமல் அனுபவித்த தீர தனிமை பொழுதுகள் யாவும் வாசுவிற்கு ஆற்றாமை தந்திருக்க, இப்போது அவளது விலகலோ உள்ளே எதையோ தடம் புரள செய்திருந்தது. 
இது எல்லாவற்றையும் கடந்து அவள் மீதான அவனின் நேச ஊற்று அத்தனையும் புதிய உடைப்பெடுத்து வெள்ளமாய் ஆர்பரித்து வெளி வரும் உணர்வு அவனை தளர்வடைய விடவில்லை.  
இனி இழப்பதற்கு என்னிடம் உன்னை தவிர எதுவும் இல்லையடி என்ற எண்ணம் அவன் இதயத்தின் மையநீரோட்டமாய் மாறியிருக்க, உள்ளே அவள் மீதான நேசம் இன்னும் ஸ்திரமாய் வேரூன்றியது.   
       அவள் விசாரிப்புக்கு இவன் பதில் சொல்ல வாயெடுத்த போது, தேனுவிற்கும் இவளுக்கும் இடையில் நடந்து வந்த பாப்பா இருவரின் கையையும் உதறி சட்டென விளையாட்டாய் முன்னே ஓடி விட, இதை ஸ்ரீ, வாசு இருவரும் எதிர்பார்க்கவில்லை. 
இருவரும் குழந்தை ஓடிய திசையை நோக்கி வேகமாய் நகர, தேனு இவர்களுக்கு முன் ஓடி சென்று சற்று தூரத்தில்,
 ‘ நான் ஃபர்ஸ்ட் வந்துட்டேன் ‘
என்பது போல் இவர்களை பார்த்து கிளுக்கிச் சிரித்துக் கொண்டு நின்றிருந்த குழந்தையை கையில் தூக்கி வைத்துக்கொண்டாள்.  
   இந்த காட்சியை பார்த்து முடித்து வாசுவும், ஸ்ரீயும், மீண்டும் ஒருவரை ஒருவர் பார்க்க, இருவரும் மிக அருகருகே நின்றிருந்தனர். வாசுவின் கண்கள் இயல்பாய் அவளது நெற்றியில் எப்போதும் படரும் பிரின்ஜஸ்சை தேட, அதை காணவில்லை. ஸ்ரீபத்மா அதை வழியவிடாமல் சிறிது வளர்த்து பின் செய்திருந்தாள். அவன் விழிகள் தேடியதை இவள் பார்த்தாலும் அதற்கு பதில் மொழிகளை இவள் விழிகள் பேசவில்லை.
தேனு குழந்தையுடன் இவர்களின் நோக்கி வரும் இடைவெளியில், 
வாசு அமைதியாய் 
மிக அமைதியாய் ஸ்ரீக்கு மட்டும் கேட்கும் வாய்ஸ்ஸில்,  
“ உன்ன பார்த்துட்டேன்ல ஸ்ரீ,
 இனிமே நான் நல்லா தான் இருப்பேன். “ 
என அவளை போலே சிறு புன்னகையுடன் அழுத்தமாய் சொன்னவன், அவள் பதிலை எதிர்பார்க்காமல் தேனுவை நோக்கி திரும்பியவன், அவள் இவர்கள் அருகில் வந்ததும் கார் ஸ்டார்ட் செய்வதாக சொல்லிவிட்டு மிக விரைவாக முன்னே நடந்துவிட்டான். 
செல்லும் அவனை வினாடிக்கு குறைவான நேரம் பார்த்து நின்றாள் ஸ்ரீ. பிறகு தேனு குழந்தையுடன் வரவும் அவர்களிடம் கவனத்தை திரும்பியவள் தேனுவுடன் பேசிக்கொண்டே கார் நிற்குமிடம் வந்து சேர்ந்தாள்.
     தேனு, குழந்தை, பத்மா எல்லோரும் பின்னால் அமர்ந்தவுடன், வாசு கார் ஸ்டார்ட் செய்து, ம்யூசிக் சிஸ்டம் போட,   
கொஞ்சும் பூரணமே வா நீ 
கொஞ்சும் ஏழிலிசையே 
பஞ்சவர்ண பூதம் 
நெஞ்சம் நிறையுதே 
காண்பதெல்லாம் காதலடி…
என இசைக்க இவன் இந்த பாடலை இப்போது எதிர்பார்க்கவில்லை, ஆனால் கண்கள் மட்டும் தானாய் ரியர் வியூ மிரர்ரின் வழியே பின்னே அமர்ந்திருந்த ஸ்ரீயை தான் பார்த்தது. 
இப்போதும் அவன் பார்வையை உணர்ந்தாலும் இவள் விழிகள் அவன் விழிகளை சந்திக்கவில்லை. 
வாசு, ஸ்ரீபத்மாவை இப்படியே விடுவதாய் இல்லை, டேஷ் போர்டை திறந்து ஒரு கிஃப்ட் பாக்ஸ்ஸை எடுத்தவன், திரும்பி ஸ்ரீயிடம் தர, அவள் இதை எதிர்பார்க்கவில்லை. 
‘ இது என்ன ‘ என்பது போல் புருவம் சுருக்கி பேசாமல் அவனையும் தேனுவையும் மாறி மாறி பார்க்க, தேனுவும் வாசுவை தான் கேள்வியாய் பார்த்திருந்தாள்.
“ நீ ப்ரமோஷன்ல இங்க ட்ரான்ஸ்பர் ஆகி வந்துருக்கனு கார்த்தி சொன்னான், அதான் சின்ன கிஃப்ட். 
தேனு நீயே உன் ஃப்ரெண்ட் கிட்ட கொடு. “ 
என தேனுவின் கையில் கிஃப்ட் பாக்ஸ்ஸை கொடுத்துவிட்டு திரும்பி அமர்ந்தான் வாசு. தேனு அதை வாங்கி ஸ்ரீயிடம் 
“ ஏ கேர்ள் ஏன் கிட்ட சொல்லல. “ என கேட்க, 
“ வீட்ல உனக்கு சர்ப்ரைஸ்ஸா சொல்லிக்கலாம்னா இருந்தேன் டா. “ என சொல்ல, அதன் பிறகு தான் தேனு ஸ்ரீயிடம் பரிசை தந்தாள். அவள் தரவும் ஸ்ரீ எதுவும் சொல்லாமல் புன்னகையுடன் வாங்கி கொண்டாள்.  
குழந்தை அந்த கிஃப்ட் பாக்ஸ்ஸை இழுத்து பிரித்தது. அதில் சின்ன டெம்போ பொம்மை, அதனுள் ஒரு லேடஸ்ட் மாடல் ரிஸ்ட் வாட்ச் இருந்தது. 
“ ஸ்ரீ உனக்கு இது நல்லா இருக்கும்… “ என தேனு மகிழ்ச்சியாக சொல்ல, ஸ்ரீ பெரிதாக எதுவும் சொல்லாமல் புன்னகையுடன் தலையை மட்டும் ஆமோதிப்பது போல் அசைத்து வாட்ச்சை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். 
“ வாட்ச் நல்லா இருக்கு, இது என்ன டெம்போ டாய் ? “ என ஸ்ரீ புரியாமல் தேனுவை கேட்க, தேனுவும் வாசுவை பார்க்க, வாசு ‘ அது பாப்பாக்கு ‘ என்று சொல்லிவிட்டு, ஸ்டார்ட் செய்திருந்த காரை மெதுவாக கிளப்பியிருந்தான்.
வண்டிச் செல்ல செல்ல “ லச்சு குட்டி இது என்ன டா ? “ என ஸ்ரீ அந்த டெம்போ டாய்யைக் காட்டி கேட்க, 
“ குட்டி ஆன. “ என்று குழந்தை மிழற்றியது. இவள் புரியாமல் தேனுவை பார்த்தாள். 
“ அவ டெம்போவ குட்டி யானைனு சொல்றா ஸ்ரீ. அண்ணா சொல்லிக்குடுத்துருக்கு “ என தேனு சிரிக்க, ஸ்ரீயும் சிரித்துக்கொண்டே எதார்த்தமாக ரியர் வியூ மிர்ரரை பார்க்க, வாசு அவளை பார்த்து அழுத்தமாய் புன்னகைத்து சாலைக்கு பார்வையை மாற்றியிருந்தான். முதலில் புரியாமல் புருவம் சுருக்கியவள், 
‘ என்னையா குட்டி யானைனு சிம்பாலிக்கா இவன் சொல்றான். ‘ 
என தோன்ற, கோபமாக ரியர் வியூ மிர்ரரில் அவனை பார்த்து முறைக்க, வாசுவின் புன்னகை மேலும் விரிந்தது. 
இது தானே அவன் எதிர்பார்த்தது. 
கோப மொழியாக இருந்தாலும் அவனுக்கு பாவையின் இந்த பார்வை மொழி தானே வேண்டும். அதை பார்த்தவன் மனம் ஏதோ ஒரு நூல் அளவில் திடம் பெற்றது. அதுவே அவனுக்கு ஒரு உற்சாகத்தை தர, கூலெர்ஸ் அணிந்து பாடலின் வால்யூம் கூட்டினான்.
காதலே காதலே 
வாழ்வின் நீளம் 
போகலாம் போக வா 
நீ நீ நீ 
என்ற இசையுடன் வாசுவின் கார் வேகமெடுத்தது.