நல்ல பெரிய வீடு, தோட்டம்.. பாத்தி.. என எல்லா வகை மூலிகைகளும் இருக்கும் அங்கு. விடுமுறை தினத்தின் காலையில் எழுந்து நைட் ட்ரெஸ்சுடன் நின்று கொள்வாள், தோட்டத்தில் அம்மு.
தோட்டத்தில் வேலை செய்ய என மூவர் உள்ளனர். அவர்களுடன் தானும் மண் வெட்டி எடுத்து புல் வெட்ட கிளம்புவாள். அங்கே அப்படி எந்த புல் பூண்டும் இருக்காது.. அவ்வளவு சுத்தமாக இருக்கும். ஆனாலும் வந்து நிற்பாள்.. கார்டனிங் என.
அங்கு வேலை செய்யும் கோடிஸ் அக்காவும், வள்ளி அக்காவும் “பாப்பா.. இந்தா இந்தா” என கை நிறைய ஆடாதோடா இலையையும், கல்யாண முருங்கை இலையும் பறித்து.. கொடுத்து உள்ள “போ பாப்பா, உள்ள போ.. வெயில்ல எதுக்கு நிக்கிற, நாங்க பார்த்துக்கிறோம்” என்பார்கள்.
எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு “செண்பா ஆன்ட்டி” என அழைத்து.. “இன்னிக்கு இந்த ட்ரிங்க்தான்..” என சொல்லி ஆடாதோடா கல்யாண முருங்கையை அவரின் கையில் கொடுத்து.. தான் மண்ணில் அமர்ந்து அந்த கோடிஸ்வரி அக்காவிடம் பேச தொடங்கி விடுவாள்.
இன்றும் அதே போல.. ஞாயிறு காலையில் வந்து அமர்ந்தாள் தோட்டத்தில்.. வள்ளி அக்கா “பாப்பா இன்னிக்கு, முசுமுசுக்க.. இலையை பறிக்கவா” என்றார்.
அம்மு “ம்கூம்.. கசக்குமே க்கா,” என்றாள்.
செண்பா வந்தார் அங்கு “வல்லாரை இருந்தா பறிங்க, வள்ளி.. பிள்ளைக்கு மறதி ஜாஸ்தியா இருக்கு” என்றார்.
அம்மு நிமிர்ந்து பார்த்தாள் செண்பாவை, அவரும் “போன் எங்க அம்மு.. உங்க அப்பா கூப்பிட சொன்னாங்க” என்றார்.
அம்மு “மறந்துட்டேன்.. பேசறேன் ஆன்ட்டி” என்றவள், உள்ளே சென்றாள் தன் தந்தையிடம் பேச..
செண்பா தனசேகர்.. தம்பதியாக இங்கு பணி செய்கின்றனர். இல்லை, பொறுப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர் எனலாம். அருகிலேயே தனியாக வீடு கட்டி தந்திருக்கிறார், நந்தன்.
தன் மனைவி போன பின், அங்கேயே இருந்து தன் குடும்பத்தை பார்க்கச் சொல்லி இருக்கிறார் நந்தன். இவர்கள்தான் வீட்டில் எல்லாம் பார்ப்பது. தனசேகர், முன்பிருந்தே, நந்தனின் இளமை காலத்து தோழர். அந்த வீட்டின் பொறுப்பு அவருடையது. அவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் ஒருவருக்கு திருமணம் முடிந்து விட்டது. இன்னொருவள் டாக்டர் படித்துக் கொண்டிருக்கிறாள்.
இப்படியாக இந்த அம்மு.. நல்லவர்கள் சூழத்தான் இருக்கிறாள். என்ன எல்லோருரிடமிருந்தும் வரும் அன்பு, அனுதாபத்தைதான் அதிகமாக காட்டும். தாயில்லா பெண்.. அன்பு காட்ட யாருமில்லை என்ற எண்ணத்தில் வரும், சுற்றி இருப்பவர்களது அன்பு. ஆனாலும் அங்கு அவள்தான் ராணி, அத்தனை பேரின் அன்பான ராணி.
$%$%$%$%$%$%$%$
இந்த பத்து நாட்களில் அவினாஷ்க்கு முழுக்க முழுக்க தான், வேலை செய்யும் படத்தின் கடைசி நேர வேலையில் பிசியாக இருந்தான், அந்த உதவி இயக்குனர். பொங்கல் ரிலீஸ். எனவே ஓடிக் கொண்டிருந்தான்.
எனவே, எதை பற்றியும் நினைக்கவில்லை அவன். அந்த குட்டி பெண், அவனின் மனதின் ஒரு மூலையில் இருந்தாள்.. அதுவும்.. பொறுமையாக கையாள வேண்டும் என்ற பிரிவில் அவன் மனதில் இருந்தாள் பெண்.
‘இந்த வாரம் முடிந்தால்.. கொஞ்சம் ப்ரீ, எனவே அவளை பார்க்க வேண்டும் பேச வேண்டும்’ என எண்ணிக் கொண்டிருந்தான். எப்படி எங்கிருந்து ஆரம்பிப்பது என அவனுக்கு தெரியவில்லை.. ‘இப்படி வாய்ப்பிற்காக அவளிடம், ஒரு பெண்ணிடம் பேச வேண்டும் பழக வேண்டுமா’ எனவும் யோசனை. ‘ஒரு ஆணாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்..’ என அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை. இருந்தாலும் புரியவைத்துக் கொள்ளலாம் என எண்ணினான் அவினாஷ்.
அவினாஷ், வீட்டிலும் அவனை தேடினர். அவனின் அம்மா சித்ரா புதுவருடத்தன்று அழைத்தார், மகன் எடுக்கவில்லை.. இரவில்தான் அழைத்து பேசினான். அதுவே அவருக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. அப்போதும் கோவமாக பேசினான் “என்ன இப்போ” என்றான் எடுத்ததும். அன்னை அமைதியாக இரண்டு வார்த்தை பேசி வைத்து விட்டார். அதன் பின் தினமும் அவர் அழைப்பார் இவன் பேசுவதில்லை.
அவனுக்கோ கையில் பணமில்லை.. அவனின் உலகம் எப்போதும் கொஞ்சம் காஸ்ட்லியானது. ராயல் பைக்தான் வைத்திருக்கிறான். காரை எடுப்பதில்லை இப்போதெல்லாம். எப்போதாவதுதான் எடுப்பான்.
இவனை இன்னாரின் பையன் என பொதுவாக யாருக்கும் தெரியாது. தெரியும்படி இவனும் நடந்துக் கொண்டதில்லை. எனவே, பெரிதாக மரியாதை.. சம்பளம் எல்லாம் எதிர்பார்க்க முடியாது இவனால். எனவே அம்மாவின் கார்ட்தான் எல்லாவற்றுக்கும். அங்கே ப்பில் நண்பன் செலவு செய்தான்.. எனவே, இப்போது உண்ண, வாடகைக்கு என அளவாக செலவு செய்கிறான். மேலும் கேர்ஸ், அவனுக்கு நண்பர்கள் என பெண் தோழிகள் நான்கு பேர் உண்டு அவர்களையும் பாதுகாக்க வேண்டும்.
கூடவே, அம்மு வேறு மனதில் என்னமோ செய்தாள், அவளிடம் இப்படி வாய்ப்புக்காக பழக வேண்டும் என உறுத்தினாளா, இல்லை, பெண் என உறுத்தினாளா, தெரியவில்லை அவனுக்கு. அதில் அம்மா வேறு தினமும் அழைக்கவும் கோவம், எங்கும் காட்ட முடியாத கோவம் தன் அம்மா இடத்தில் காட்டினான், பேசவே இல்லை அவன்.
இப்படி அப்படி என நாட்கள் கரைந்தது..
இன்று
அம்முவின் கல்லூரியின் எதிரில் நின்றிருந்தான் அவினாஷ். என்னமோ, மனம் அவளையே சுற்றியது, நாட்கள் கடக்க கடக்க எங்கேனும் அவள் தன்னை மறந்திட போகிறாள் என்ற பயம் அவனுள் எழ.. அவினாஷ் அவளின் கல்லூரிக்கே வந்துவிட்டான் சர்ப்ரைஸ் செய்ய.. ம், போனில் அழைத்தான் எடுக்கவில்லை அவள். எனவே வந்து நின்றான் அரை மணி நேரத்தில் அவளின் கல்லூரிக்கே.
அவள் தன் போனை, டிரைவர் அண்ணாவிடம் கொடுத்து செல்லுவாள், கல்லூரிக்கு. எனவே அம்முக்கு, அவன் வந்தது தெரியாது. கல்லூரி முடித்து, மாலையில் நண்பர்களுடம் பேசி முடித்து விட்டு, வந்தாள்.. தன் காரின் அருகில். அப்போதுதான் டிரைவர் அண்ணா போனை அவளிடம் கொடுக்க.. அவினாஷ் அழைத்திருப்பது தெரிந்தது.
அதை பார்த்ததும் கொஞ்சம் கொஞ்சமாக முகம் புன்னகையை பூசிக் கொண்டது. இப்போதுதான் சிறிது நேரம் முன்பு அழைத்திருக்கிறான் என புரிகிறது.. இப்போ அழைப்பதா வேண்டாமா என பார்த்து நின்றாள்.
டிரைவர் அண்ணா “போலாமா அம்மு” என்றார்.
அந்த கேள்வியில், தானே முடிவெடுத்து “இருங்க ண்ணா,” என சொல்லி காரில் சாய்ந்து நின்று அவினாஷுக்கு அழைத்தாள்.. அம்ருதா. மனமெல்லாம் படபடப்பு..
அவனும் எடுத்தான் “ஹாய்ய்.. நான் அவினாஷ் பேசறேன்” என்றான். வாயே திறக்கவில்லை அவள். மீண்டும் அவன் சொன்னதையே சொன்னான்.
“இல்ல, உங்க காலேஜ் வாசலில்தான் நிற்கிறேன்.. உங்களை காணும்” என்றான். ப்பா, இந்த வார்த்தையில் அம்மு வானத்தில் பறந்தால்.. தனக்காக இதுவரை யாருமே காத்திருந்தது இல்லை. தன் அன்னை, தந்தை, தம்பி என யாரும் இதுவரை கல்லூரிக்கு வந்ததே இல்லை. இவன் காத்திருப்பதாக சொல்லவும் இரண்டுநாள் முன்பிருந்த தெளிவு இப்போது காணமல் போனது.
அவனும் “அங்குள்ள ஒரு பேக்கரி பேர் சொல்லி அங்க இருக்கேன்” என்றான்.
அம்மு, வாடிபோனாள் “ச்சு.. எனக்கு கார் வந்துடிச்சி.. முன்னாடியே சொல்லி இருந்தா.. லேட்டா வர சொல்லி இருப்பேன், தாத்தா தேடுவாங்க.. ச்சு, போங்க” என்றாள் தன் வருத்தத்தை மறையாது.
அவினாஷ்க்கு என்னமோ போல ஆனது “பரவாயில்ல, சும்மா நான் வந்து உங்களை பார்க்கிறேன்.. சரியா, எங்க வரணும்” என்றான்.
அவளும் வழி சொன்னாள்.. இவனும் பத்து நிமிடத்தில் வந்து நின்றான்.
அம்முக்கு, அவனை பார்த்தும் மெல்லிய பரவசம் அவளுள் ஊர்ந்தது, கண்கள் இன்றுதான் ஒரு ஆண்மகனை இப்படி ரசிக்கிறேன் என அப்பட்டமாக சொன்னது. அன்று ஒரு பதட்டத்தில் இருந்தாள், அதனால் அவனை முழுதாக ரசிக்க முடியவில்லை அவளால்.
இன்று.. எதிர்பார்த்த நாள் அவளுக்கு. அழைப்பானா.. மாட்டானா என ஒரு நிலை, இதில் நேரிலேயே வரவும் அம்முக்கு பரவசம்தான். இன்று வேறு மாதிரி இருந்தான்.. வேலையிலிருந்து வந்ததால், ஷர்ட் அணிந்து வந்திருந்தான் ம்.. அதில் ஒரு இஞ்ச் வளர்ந்து தெரிந்தான்.. முகம் கலையாக திருத்தமாக இருந்தது.. அவனின் கண்கள் அவ்வளவு அழகாக தன்னை தேடியது இப்போது, இப்படி பார்க்க ரசிக்க அருகில் வந்துவிட்டான்.. வந்தவன் “ஹாய்… “ என்றான்.
அம்மு ரசனையாக தடுமாறினாள். ‘பேசேன்’ என மனம் சொன்னாலும்.. உதடுகள் அந்த வார்த்தைகளை உதிர்க்க தவறுகிறது. ஏன் ஈர்க்கிறோம்.. எதனால் இப்படி நடந்துக் கொள்கிறோம் என புரியாமலே.. விழிவிரித்து நின்றாள்.
எதிரில் நின்ற ரசனைகாரனுக்கும் அது புரிய.. மனம் பதைக்கிறது. ஒரு பெண்ணின் பார்வையும்.. அவளின் உடல்மொழியும் இயல்பாய் உணர முடியும் ஒரு ஆணால். எனவே கொஞ்சம் தயங்குகிறான்.. சிறு பெண்ணிடம் தன் நோக்கத்தை எப்படி விளக்குவது என.
எனவே, மெல்ல மீண்டும் “அம்ருதா..” என்றான்.
அவளும் “ஹாய்” என்றாள் தன்னிலிருந்து மீண்டு.
அவனே பேசினான் “எப்படி இருக்கீங்க” என்றான். இன்னமும் மரியாதை பன்மையில் பேசினான். கவனித்தாள் பெண்.. தலையசைத்தாள்.. ஏதும் பேசவில்லை. என்னமோ அவனை தவிர எல்லாம் மறைந்தது.. அவன் பேசியது கூட கேட்கவில்லை, அவளுக்கு.
மீண்டும் அவனே பேசினான், ‘வர முடியவில்லை’ என்றான்.. ‘மீண்டும் எப்போது பார்க்கலாம்’ என்றான் ‘அவங்க ஏதாவது கலாட்டா பண்ணாங்களா’ என்றான். வேறு என்ன பேசுவது என தெரியவில்லை.. அவனுக்கு, அவள் ஏதும் பேசவில்லையே அதிகமாக… எனவே நின்றான்.
அம்முவும், அவனின் கண்களை பார்த்துக் கொண்டே பதில் மட்டும் சொன்னாள். பத்து நிமிடம் பேசி விட்டு அழைப்பதாக சொல்லி சென்றான் அவினாஷ்.
பனிமேகம்.. தன்னை தொட்டு சென்ற குளிர்ச்சியில் இருந்தாள் பெண்.. இது இன்னது.. இப்படி.. என பிரித்து சொல்லத் தெரியவில்லை. ம்.. சரியா தவறா தெரியவில்லை.. ஏன் அவனை பார்த்ததும்.. பிரம்மை.. பிடிக்குது எனவும் தெரியவில்லை, என்னமோ தன்னுள் செய்கிறான் என புரிய.. செல்லும் அவனையே பார்த்திருந்தாள்.