தாமினியின் மனதினில் அழுத்தமான வார்த்தைகள் பல வருடங்கள் கடந்தும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தன.
“தாமினி… நிஜமாவா? நான் மறுபடியும் அப்பாவாகிட்டேனா ? எனக்கு என்னவோ இப்ப நீ எனக்குப் பெத்துகொடுக்கப் போற மகன் தான் என்னோட வாரிசாவான் அப்படினு தோணுது” எனத் தர்மேந்திரன் ஆர்ப்பாட்டமாகப் பேசிக்கொண்டிருந்தார்.
“ஏங்க? மூத்தவன் இல்லையா ? என்ன இப்படிச் சட்டுனு சொல்லிடீங்க ?”
“இல்லை தாமினி. பிள்ளைகள்ல வேறுபாடு பார்க்க முடியுமா ? இரண்டு கண்ணுல எது உசந்ததுனு பிரிச்சு பார்க்க முடியுமா என்ன ? நான் சொல்லவரது அது இல்ல.
சூரியவர்மன் ஜமீனுக்கு மூத்த வாரிசு தான் அது எப்பவும் மாறாது. ஆனால், உன்னோட வயித்துல இருக்க என்னோட மகன் தான் என்னோட பேரை காப்பாத்துவானு தோணுது…”
“எனக்கு இப்பவும் புரியலைங்க…இப்ப தான் நான் உண்டாயிருக்கதே தெரியும். அதுக்குள்ள எப்படி இப்படிலாம் பேசுறீங்க…” என விளங்காமல் வினவினார் தாமினி.
“சில உணர்வுகளை விவரிக்க முடியாது மா… என்னவோ தோணுது….இவன் இந்தத் தர்மேந்திரனை போலவே இருக்கப் போறான். என்னோட சிங்க குட்டியா ஆள போறான்” எனக் கூறிக்கொண்டிருக்கும் பொழுதே, தர்மேந்திரனின் தாயார் வந்து நின்றார்.
“எப்பா தர்மா? மொதல்ல வாயில போடு. மூணாவது அரசன் வேணாமய்யா. அரசனா இருந்தால் உன்ன ஆண்டி ஆக்கிடும். இலட்சிமி பிறக்கட்டும். இந்த ஜமீனுக்கு மூணாவது வாரிசு பொம்பளை பிள்ளை தான் இருக்கணும்” எனச் சிறு கண்டிப்புடன் கூற,
தர்மேந்திரன் தனது தாயின் வார்த்தையைப் பெரிது படுத்தாமல், “அட விடுங்க அம்மா… நீங்க நேரம் காலம்னு ஆரம்பிச்சிடுவீங்க. நேர்மை இருந்தால், எல்லா நேரமும் நல்ல நேரம் தான்.” எனப் பொருட்படுத்தாமல் செல்ல,
இப்ப நம்மகிட்ட இருக்கச் சொத்து பத்துப் பாதித் தான்…இது போல மூணு மடங்கு இருந்திருக்கணும். ஆனால் இல்லை…எல்லாத்துக்கும் காரணம் மூணாவதா பிறந்த ஆண் குழந்தையோட ஜாதகம் தான்…எப்பவும் நம்ம ஜமின்க்கு மூணாவதா பெண் குழந்தை பிறந்தால் மட்டும் தான் அதிர்ஷ்டம்” எனக் கூறி செல்ல,
மாமியாரின் இந்த வார்த்தைகள் தாமினி தேவியின் மனதினில் அழுந்த பதிந்து போனது.
உயிர்களின் பிறப்பும் இறப்பும் இயற்கையின் சுழற்சி. பிறக்கவிருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை நிர்ணனைப்பவன் ஆண். பிள்ளையை பெற்றெடுப்பவள் பெண். ஒரு குழந்தை ‘தான்’ பிறப்பதை கூட அக்குழந்தையால் நிர்ணயிக்க முடியாது. ஆனால் பிறந்த அந்தக் குழந்தை தங்களின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றது எனச் சிலர் உறுதியாக நம்புகின்றனர். ஆனால், தாய் தந்தையின் வாழ்வில் நிகழும் ஏற்ற தாழ்வை, பிறக்கும் எந்தக் குழந்தையும் நிர்ணயிப்பதில்லை என்பதே நிதர்சனம்.
கருவாகி உருவான நாள் முதலாய், பூமி தொடாத சிசுவை சிலர் உண்டான நேரம் சரி இல்லை… உருவான காலம் சரி இல்லை… என விதியின் செயல்களுக்கும் தனது இயலாமைக்கு அக்குழந்தையின் கால நேரத்தை காரணமாக்கிவிடுகின்றார்கள்.
இந்த எண்ணத்தை உணர்வுகளோடு ஆள புதைத்தும்கொள்கின்றனர். மனதினில் பதிந்த இந்த எண்ணங்களோடும், இயல்பாய் இருக்கும் பாசத்தோடும் போரிட்டு போரிட்டு, எந்தவொரு கெட்டது நிகழ்ந்தாலும் குறிப்பிட்ட குழந்தையின் ஜாதகப் புத்தகத்தை எடுத்து ஆராயச் செல்லும் பெற்றோர்களும் இருக்கின்றனர்.
அவர்களின் மனதினில் குழந்தையின் மீது பாசமில்லாமலிருக்காது…அதேவேளையில் அந்த நம்பிக்கையின் தாக்கமும் இல்லாமலிருக்காது…
அனைவரும் இதுபோன்ற எண்ணம் கொண்டவர்களில்லை..அதேவேளையில் சிலர் இருக்கின்றனர் என்பதை மறுப்பது, கண்களை மூடி கொண்டு உலகம் இருண்டுவிட்டதாய் எண்ணம்கொள்வதாகும். சராசரி பெற்றோர்களின் மனதினில் இது ஒரு மடங்கு இருந்தால், தாமினி தேவியின் மனதினில் இரண்டு மடங்கு இருந்தது…
பார்த்திபன் முதல் பிறந்த நாளன்று, தர்மேந்திரன் ஜமீன் வீட்டை கோட்டை போல அலங்கரித்தார். மூன்று நாட்கள் மூன்று வேளையும் ஊரார் மொத்தத்திற்கும் விருந்தளித்தார்…
அந்த மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. நான்காவது நாள், சற்றே ஓய்வாகத் தர்மேந்திரன் அமர்ந்திருக்க, அவர்களுக்குச் சொந்தமான களத்து வீடு தீக்கிரையானதென்ற செய்தி வந்தது. அதைத் தொடர்ந்து, நஷ்டங்களும் துயரங்களும்…
ஒருகட்டத்தில், ஜமீன் குடும்பச் சொத்து மொத்தமும் வழக்கில் முடங்கியது. அந்த மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தர்மேந்திரனின் இதயம் உயர் இரத்த அழுத்தத்தால் முடங்கியது. மகன் போன துயரில் தர்மேந்திரனின் தாயும் இன்னுயிரை நீத்திட, தாமினி தேவி ஒரே நாளில் வீதிக்குத் தள்ளப்பட்டார்…
இங்கு இந்த நிலைமைக்குக் காரணம் பார்த்திபனின் விதி அல்ல… தர்மேந்திரனின் பெரியப்பா மகன் தாமோதரனின் சதி. தாமோதரன் சொத்து மீது கொண்ட பேராசையே நிகழும் அத்தனைக்கும் காரணம்.
அதைத் தாமினி தேவி உணர்ந்தாலும், அவருடைய மனதின் அடையாளத்தில் பார்த்திபன் பிறந்த பின்தான் தனது கணவனின் உயிர் பறிபோனதென்ற எண்ணம் அவரே அறியாமல் அவருடைய மனதின் ஆழத்தில் பதிந்து போனது. பார்த்திபனின் மீது பாசமில்லாமலில்லை. சீராட்டமலோ தாலாட்டாமலோ இல்லை. கோபம் வெறுப்பென்றும் குறிப்பிட முடியாது. ஆனால், நூலிழையில் ஒரு வேறுபாடு!
அந்த வேறுபாடும் தாமினிக்கும் போராட்டமாகத்தான் இருந்தது!
எந்தவொரு நெருக்கடியான காலகட்டமாக இருந்தாலும் தன்னை அறியாமல் தாமினி தேவியின் கண்கள் பார்த்திபனின் மீது சிந்தனையுடன் பதியும். அதன் பின் சில வினாடிகளில், தன்னையே நொந்தும் கொள்வார்.
.குடும்பச் சூழல் காரணமாக வேறு வழியே இன்றிச் சூரியவர்மனிடம் சென்றார். ஆனால், தற்போதைய சூழலில் கல்வி மட்டுமே தங்களை உயர்த்தும் என்ற எண்ணமும் அவருடைய மனதினில் இருந்தது.
மிகவும் அழுத்தமான பாரத்தோடு தான் மகனிடம் வினவினார்…ஒருவேளை சூரியவர்மனிடம் ஏதேனும் மாற்று வழி கூட இருக்கலாம் என்ற நம்பிக்கையில் தான் பேச்சை தொடங்கினார்.
ஆனால், சூரியவர்மன் முழுவதுமாக ஒதுங்கிக்கொண்டான். தாமினி தேவியோ, சூரியவர்மனின் பதிலில் முதலில் அதிர்ந்து பின்பு தடுமாறினார். அவர் நிலைமையைக் கிரகித்துக்கொள்ளும் முன்னர், பார்த்திபன் குடும்பப் பாரத்தைச் சுமக்க தயார் நிலையில் வந்து நிற்க, தாமினி தேவியின் மனதினிலிருந்த ஆற்றாமையைப் பார்த்திபன் மீது இறக்கினார்.
“படிப்பு தான் நிலைமையை உயர்த்தும்னு மூத்தவன் சரியா சிந்திக்கும் போது, இந்தப் பார்த்திபன் மட்டும் ஏன் இப்படி இருக்கான்? படிப்பு மேலையும் ஆர்வமில்லாத ஒருத்தன பெத்துருக்கேன்” எனக் கசப்புடன் நினைத்துக்கொண்டார்.
இந்தக் குடும்பத்தோட தகுதி தெரியாதவனா இருக்கான்..ஆமா! இவனுக்குத் தான் இந்த ஜமீனோட அந்தஸ்த்துக் கௌரவம் மதிப்புனு எதுவுமே தெரியாதே…இவன் பிறந்த பிறகு தான், இருந்த எல்லாமே போச்சே… நான் எல்லாமுமா நினைச்ச அவரே போய்ட்டாரு. இல்லை நான் உடையமாட்டேன்… அழமாட்டேன்…” என்ற எண்ணம் தான் தாமினி தேவியின் மனதினில்.
இப்படியாகத் தாமினி தேவியின் மனதினில் ஓர் எண்ணம் அவரையும் மீறி உருவாகி நிரந்தரமுமாகியிருந்தது. கல்விதான் முக்கியமென்று கூறிய சூரியவர்மன் அவரின் கண்ணோட்டத்தில் உயர்ந்து நின்றிருந்தான்…
“மறுபடியும் இந்தக் குடும்பம் ஓர் இக்கட்டான நிலைமையில இருக்கு… இன்னும் எத்தனை எத்தனை சோதனையை நான் பார்க்கணும்” என ஆற்றாமையுடன் வெளிவந்தன தாமினி தேவியின் வார்த்தைகள்.
தாமினியின் வார்த்தைகள் காதிலே விழாததைப் போன்று மௌனம் சாதித்தாள் தாரா!
“என்ன அத்தை பண்றது? இந்தக் குடும்பத்தோட கௌரவத்தை உசத்தணும்னு பெரிய இடமா உங்க மூத்த பிள்ளை பாத்தாரு. தம்பிக்கு நல்ல பணக்கார வீட்டு சம்மந்தமிருக்கணும்னு சூது வாதில்லாமல் நல்லதா நினைச்சாரு..
ஆனால் என்ன பிரயோஜனம் ? எல்லாம் தான் வீணா போச்சே” எனப் பொய்யாக நித்ய கலா கண்ணைக் கசக்க,
அவர்கள் வீட்டிற்குள் அக்கம் பக்கம் சில வயதான பெண்மணிகள் உள்ளே வந்தனர்.
“ஆத்தா…ஒத்தையா நின்னு வாழ்ந்து காட்டுன ஆளு நீ. ஒத்தையா நிக்குறதோட ரண உனக்குத் தெரியாதது இல்ல. அந்த வேதனையை அந்தச் சின்னச் சிறுசுகளுக்குக் கொடுத்திடாத.
அப்படிநடந்தா, ஊருக்கே அடைக்கலம் கொடுத்த உன் புருஷ ஆத்மா கூட வெசனப்படும்” எனப் பலவாறாக எடுத்து கூற, பதிலுக்கு ஒரு வார்த்தைகூடப் பேசாமல் மிகவும் அழுத்தமாக அமர்ந்திருந்தார், தாமினி தேவி!
அவருக்கு இந்தச் சூழலில் எதையும் கூற விருப்பமில்லை! வந்தவர்களிடம் பதில் கூறவும் திராணியில்லை…இத்தனை நாட்களாகத் தனது சொல்லையாவது பார்த்திபன் மீறாமலிருக்கிறானென்று எண்ணம் கொண்டிருந்தார். ஆனால், இன்று அந்த எண்ணமும் அடியோடு நொறுக்கப்பட்டிருந்தது.
தாரா கூட, காதலிக்கிறேன் என வந்து நின்றாள். மறுப்பைத் தெரிவித்ததால் தான் திருமணம் வரை சென்றாள். ஆனால், இவன் எந்தவொரு அனுமானத்திற்கும் இடமில்லாமல், இப்படி அதிரடியாக வந்து இறங்குவானென்று எண்ணவே இல்லை.
“இப்படி அமைதியா இருந்தால் ஆச்சா தாயி? வந்த பிள்ளைங்களை உள்ளார கூப்பிடு. இப்ப கோபப்படுற வயசு இல்ல உனக்கு. அனுசரிகிற வயசு” எனக் கூற,
சூரியவர்மன் முன் வந்தான்…
“அம்மா! நமக்கு அப்பாவோட பேரு தான் முக்கியம். தம்பிய ஒதுக்கி வச்சிட்டால், நம்ம அப்பாவோட மரியாதைக்கு அது பொருந்தாது. நீங்க மன்னிச்சிடுங்க” எனப் பெருந்தன்மையாக எடுத்துரைக்க,
நித்ய கலாவோ, “உள்ள கூப்பிடலாம்ங்க… ஆனா எங்க தங்க வைப்போம் ?” என யோசனையாக வினவ,
“ஏன்? நம்ம ரூம் இல்லையா ? நாம ஹால்ல அம்மா கூட இருந்துபோம்” எனப் பட்டென்று கூறிவிட, சூரியவர்மனின் இந்தப் பேச்சில் அனைவருமே ஒருநொடி ஆடிப்போனார்கள்.
சூரியவர்மனுக்குத் திருமணம் ஆகி இன்னமும் குழந்தை இல்லை. அவனும் இளம் வயது தான்…இருந்தாலும் தம்பிக்காக உடனே இருக்கின்ற அறையையும் கொடுக்க முனைகின்றானே ?
இது தான் ஜமீன் வாரிசின் பெருந்தன்மையோ? இது தான் அங்கிருந்த அனைவருடைய எண்ணமாகவும் இருந்தது. அதேவேளையில், பார்த்திபன் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டான் என்ற பேச்சும் ஆங்காங்கே எழ தான் செய்தது…
“அடியே! என்ன மசமசன்னு நின்னுட்டு இருக்கவ ? போய் நம்ம பொருளெல்லாம் ஹால்ல எடுத்து அடுக்கு…
படிக்கிற வயசுலதான் படிப்பு ஏறலனு சுத்த போய்ட்டான். இப்படியே தம்பி வாழ்க்கை போய்ட கூடாதுனு, தம்பிக்கு பெரிய வாழ்க்கையை ஏற்படுத்தணும்னு நினச்சேன். ஆனால் இப்படி விலசாமில்லாத பொண்ண கூட்டிவந்துட்டான்.
ஆயிரம் செஞ்சாலும் அண்ணன் தம்பி உறவு இல்லனு ஆகிடுமா ? இல்லை எப்படியோ போகட்டும்னு என்னால விடமுடியுமா ? இந்தக் குடும்பமும் அதோட மரியாதையும் தான் எனக்கு முக்கியம்.
கலா இன்னும் நீ போகலையா ?” எனத் தன் போக்கில் பேசிவிட்டு, மனைவியை ஏவ,
கலாவோ மனதினில், “நடிக்கச் சொன்னால் இந்த மனுஷ வாழுறாரு… நிஜமாவே ரூமை காலி பண்ணனுமா ? தவளை தன் வாய்ல கெடும். நான் என் வாய்ல கெட்டுப்போறேன்.
இல்லைனா, இந்த மனுஷனா கட்டிக்கச் சம்மதம்னு என் வாயால சொல்லிருப்பேனா?
இன்னைக்கு இருக்கு இவருக்கு” எனப் பற்களுக்குள் முணுமுணுத்தபடி செல்ல,
“நில்லு மா கலா!” என அதிகாரமாய்த் தடுத்தார் தாமினி தேவி.
“அப்பாடா…இப்பயாச்சும் வாய் திறந்துச்சே…” என மனதினில் நினைத்தபடி, “ஒரு நிமிஷம் அத்தை…நான் எங்க பொருளை எல்லாம் எடுத்துட்டு வந்துடறேன்” எனக் கூறி, தான் சூரியவர்மனின் மனைவி என நிரூபித்தாள், கலா!
“நீ, நான் பார்த்து கொண்டுவந்த மருமக. மூத்த மருமகள்! நீ எங்கையும் யாருக்காகவும் போகவேணாம்.
என்னோட புருஷனுக்காக நான் அவுங்களை விளக்கி வைக்கவேணாம்னு முடிவெடுத்திருக்கேன். ஆனால் இந்த வீட்ல அவுங்கனால எப்படி இருக்க முடியும்னு எனக்குத் தெரியல.” என முடித்துக்கொள்ள,
“அட, இம்புட்டு தான் செய்தியா. அதை நம்ம பசங்களை விட்டு சரி பண்ணிடலாம்” எனச் சாதாரணமாக ஒரு மூதாட்டி கூற,
எல்லாரும் கேள்வியாக அவரைப் பார்த்தனர்.
“என்ன அப்படிப் பாக்குறீங்க…? இரண்டு தலைமுறை பார்த்த இந்தக் கிழவிக்கு இந்தச் சின்னச் சங்கதியை சரிக்கட்ட தெரியாதா ? அதுக்கொரு வழி பண்றேன். புதுசா கட்டிக்கிட்டவங்கள ஆரத்தி எடுத்து கூப்பிடுங்க.
இராத்திரிக்கு சடங்கு எங்க வீட்ல நடக்கட்டும். நாளைக்கு இங்னவே தங்க, ஏற்பாட ஜோரா பண்ணிடலாம்.
வாழ்க்கைனா நாலுதான் இருக்கும். அனுசரிச்சு போறதுல தான் அழகான வாழ்க்கை இருக்கு. கலா போ ஆத்தா போய் ஆரத்தி எடுத்திட்டு வா” எனச் சற்றே உரிமையுடன் கூறினார், அந்த மூதாட்டி. அவர் பூவம்மாள்!
இவரும் தாமினி தேவியின் ஒன்றுவிட்ட அத்தை முறையில் வருபவர். தாமினியின் மாமியாரும் பூவம்மாளும் இளம்வயது தோழிகள். மகன் மருமகள் திருமண வயதில் பெயரன் என அனைவரும் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமையுடன் தங்கிவிட, பூவம்மாள் மட்டும் தனிக்காட்டு ராணியாக அந்த வீட்டை ஆட்சி செய்து வந்தார்.