அத்தியாயம் – 18_1
அவள் வீட்டிலிருந்து அனைவரும் சென்ற பின் ஏனோ கௌரியின் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அதை நிலைப்படுத்தும் முயற்சியில் அத்தனை வீட்டு வேலகளையும் பரபரவென செய்து முடித்தாள். ஆனால் அவள் மனதின் அலைபுறதல் நிறக்கவில்லை. நம்பிக்கையில்லையா என்று கேட்ட சிவாவினாலா? இல்லை விவரம் கேட்டுக் கொள்ளாத மாலினியாலா? இல்லை அழுதுக் கொண்டே சென்ற சூர்யாவினாலா? என்று மனதைக் குழப்பிக் கொண்டிருந்தாள். அதனால் அவர்கள் வீட்டை அவினாஷ் சென்றடையும் வரை காத்திருந்தவள்,
“அங்கிள், ஆன் ட்டிகிட்டே நம்ம வீட்லே நடந்ததைப் பற்றி இப்போ சொல்ல வேணாம்.” என்று கோரிக்கை வைத்தாள்.
”அம்மா தூங்கிட்டு இருக்காங்க..அவங்க எழுந்த பிறகு ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு அப்பாகிட்டே  வந்தவுடனேயே சொல்லிட்டேன்..இப்போ எதையும் சொல்லக்கூடாதுண்ணு சொல்ற..ஏன் கௌரி? என்று கௌரியிடம் கேட்டான் அவினாஷ்.
“இன்னைக்கு வேணாம்…நாளைக்குச் சொல்லுங்க.”
“கௌரி, நான் ஊருக்குப் போகறத்துக்கு முன்னாடி உன் கல்யாணத்தை முடிக்கணும்னு நினைக்கறேன்..எதுக்கு இப்போ இந்த விஷயத்தைத் தள்ளிப் போடச் சொல்ற?” என்று காரணம் கேட்டான்.
“அண்ணா..அவங்களுக்கு ஏதோ தயக்கம் இருக்கு..அதான் நம்பிக்கை இல்லையான்னு கேட்டாங்க.” என்றாள் கௌரி.
சிவாவின் தயக்கத்தை அவினாஷும் உணர்ந்திருந்தான்.  அதனால் தான் அவர்கள் வாக்குவாதத்தை வளர விடாமல் முடித்து வைத்தான்.  இப்போது மறுபடியும் கௌரி அதை ஆரம்பித்தவுடன்,
“ரிலாக்ஸ்..சிவாவோட மன நிலையைப் பற்றி ஏற்கனவே பேசியாச்சு..அது உடனே மாறாது.. மாற்றவும் முடியாது..அப்பா, அம்மாகிட்டே எல்லாத்தையும் விளக்கி சொல்ல வேண்டியது என் பொறுப்பு.. நான் பார்த்துக்கறேன்…கவலைப்படாதே டா.” என்று கௌரிக்கு வாக்களித்தவன் அறிந்திருக்கவில்லை அன்று இரவு எல்லாம் கைமீறிப் போகப் போகிறதென்றும் அதைச் சரி செய்யப் போவது மாலினிதானென்றும்.
“என்ன டா சொல்ற?..கல்யாணமாகாத சின்ன பொண்ணா?” என்று கௌரியைப் பற்றி அறிய முற்பட்டார் ஜமுனா.
உடனே அவனையும் கௌரியையும் மனத்தில் ஒப்பிட்டுப் பார்த்த சிவாவிற்கு அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த அனைத்து வேற்றுமைகளும் அவனைப் பலமாகத் தாக்க அது ஏற்படுத்திய வலியோடு,“ரொம்ப சின்ன பொண்ணு இல்லை..முப்பத்தி இரண்டு வயசாகுது.” என்றான்.
அவன் மனைவி விஜியை விட வயதில் மூத்தவள் என்று நினைத்துக் கொண்டான் மகேஷ்.
“அப்போ ஏன் டா இதுவரை அவளுக்குக் கல்யாணம் கூடி வரலை?’ என்று  கேட்டார் ஜமுனா.
சிவாவின் மனத்தில் இப்போது வேறோரு எண்ணம் பூதாகரமாக உருவாகிக் கொண்டிருந்ததால், “அது எதுக்கு நமக்கு?” என்று சுள்ளென்று விழுந்தான்.
“கல்யாணம்னு வந்திட்டா எல்லாம் விசாரிக்கணும் டா..ஆபிஸ்லே..வீட்டுப் பக்கத்திலே..மனேஜரா வேலை பார்க்கறவ எப்படி டா உன்னைக் கட்டிக்க ஒத்துக்கிட்டா? என்ன காரணம்னு விசாரிக்க வேணாமா?’ என்று விசாரணையை விரிவாக்கிய ஜமுனாவிற்கு இன்னும் சில நாள்களில் கௌரி சீனியர் மனேஜர் ஆகப் போவதைப் பற்றி தகவல் இருக்கவில்லை.
இப்போது உண்மையாகவே குடும்பத்தை சமாளிக்க முடியாத நிலை அவனுக்கு ஏற்படப் போகிறது என்று உணர்ந்ததிலிருந்து அவன் மேல் நம்பிக்கையில்லையா? அவனால் குடும்பத்தை நடத்த முடியாதா? என்று அன்று மதியம் கௌரியிடம் கோபப்பட்டது சிவாவைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தது.  அதைக் கையாள முடியாமல் போராடிக் கொண்டிருந்தவனின் தாழ்வு மனப்பான்மையை ஜமுனாவின் கேள்வி சீண்டி விட,
“வேணாம்…எதையும் விசாரிக்க வேணாம்..அன்னைக்கு நீங்கதானே எனக்குப் பொங்கிப் போட ஓர் ஆளைப் பிடிச்சு என் பொழைப்பைப் பார்த்துக்கச் சொன்னீங்க…இப்போ நானே பார்த்துகிட்ட பிறகு இவ்வளவு கேள்வி கேட்கறீங்க.” என்று கோபத்தில் கத்தினான் சிவா.
சிவாவின் கத்தலைக் கேட்டு படுக்கையறையிலிருந்து வெளியே வந்தாள் தீபா.  அவனை அமைதிப்படுத்திக் கொண்டு,”நீ தூங்கு மா..சாப்பாடு வந்த பிறகு உன்னை அப்பா எழுப்பறேன்..சூர்யாவையும் பார்த்துக்கோ..இங்கே வர வேணாம்..தாத்தா, பாட்டி, சித்தப்பாகிட்டே நான் கொஞ்சம் பேசணும்.” என்று அவளை மறுபடியும் படுக்கையறைக்கு அனுப்பி வைத்தான். 
மூத்த மகனின் கோபத்தைப் பார்த்து கலவரமான வெங்கடாசலம்,”எதுக்கு டா இப்படிக் கோபப்படற? அவ உன் அம்மா டா..உன் வாழ்க்கை பற்றிய கவலை இருக்காதா அவளுக்கு?.” அவனைச் சமாதானம் செய்ய முயன்றார்.
இப்போது அவன் வாழ்க்கையில் அவர்கள் செய்த பிழையை அவர்கள் எப்போதும் உணரப்போவதில்லை என்று உணர்ந்த சிவா,”அப்பா, நீங்களும் அம்மாவும் மகேஷோட கொஞ்ச நாள் இருங்க…” என்று அவர்கள் தவறை சுட்டிக் காட்டாமல் இனி வரப் போகும் நிகழ்வுகளிலிருந்து அவர்களைத் தள்ளி வைக்க முடிவு செய்தான்.
“ஏன் டா இப்படிச் பேசற? உனக்கு கல்யாணம் பேச அவங்க வீட்டுக்குப் போக வேணாமா? கல்யாணத்தை வைச்சுக்கிட்டு உன்கூட இருக்கச் சொல்லாம இவன் கூட இருக்கச் சொல்ற?” என்று சும்மா இருக்க முடியாமல் அடுத்த கேள்வியோடு வந்தார் ஜமுனா.
“இங்கேயிருந்து என்ன செய்யப் போறீங்க? இது எனக்கு இரண்டாவது கல்யாணம் இங்கே என்ன வேலை இருக்கப் போகுது.…நீங்க மகேஷ் வீட்லே இருந்தா விஜிக்குத் துணையா இருக்கும்.” என்று ஜமுனாவிடம் சொன்னவன்,”நாளைக்கு காலைலே அம்மாவையும் அப்பாவையும் உன் வீட்டுக்கு அழைச்சுக்கிட்டுப் போயிடு…திடீர்னு கடையை விற்க வேண்டிய நிலை வந்தா என்ன செய்யறதுண்ணு நான்  யோசிக்கணும்..எல்லாத்தைப் பற்றியும் முடிவெடுக்கணும்.”
“இப்போ எதுக்கு டா வீணாக் கவலைப்படற..கடையை நாளைக்கே விற்கப் போகறதில்லை..எப்போ விற்கறேயோ அப்போதானே சாந்திக்குப் பங்கு கொடுக்கணும்.” என்று மறுபடியும் வாயைத் திறந்தார் ஜமுனா.
“என் கல்யாண ஏற்பாடு நடக்குதோ இல்லையோ கடையை விற்க ஏற்பாடு நடந்திடும்..விலையை மட்டும் விசாரிச்சிருக்க மாட்டார் மாமா..கடையை வாங்க நாலைஞ்சு பார்ட்டியையும் ரெடியா வைச்சிருப்பார்..வித்தப் பிறகு நம்மகிட்டேயிருந்து அவருக்கு ஏழு லட்சம் கிடைக்கும்…வாங்க போற பார்ட்டிகிட்டேயிருந்து ஒரு லட்சமாவது கமிஷனா வரும்..இரண்டையும் விட மாட்டார்..நாளைக்கே யாரையவது கடைக்கு அழைச்சுக்கிட்டு வந்தா எனக்கு இஷ்டமில்லைன்னு நான் திருப்பி அனுப்ப முடியாது…”
“என்ன டா இப்படிச் சொல்ற? திடீர்ன்னு கடையை வித்துட்டா நீ என்ன டா செய்வ? கல்யாணம் வேற பேச சொல்ற? கடையில்லாட்டா கட்டி கொடுப்பாங்களா டா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளோடு வந்த ஜமுனாவின் வாயை,”உன் வாயை மூடிக்கிட்டு சும்மா இரு.” என்று அடக்கியது வெங்கடாசலம்.  சிவா சொன்னது போல் எல்லாம் கை மீறிப் போனதை அவர் உணர ஆரம்பித்திருந்தார்.
அப்போது படுக்கையறைலிருந்து வெளியே வந்தாள் தீபா.  அவள் பின்னால் வந்த சூர்யா,”அப்பா, பசிக்குது.” என்றாள். உடனே,
“என்ன வேணும்னு சொல்லுங்க.” என்று அவர்களிடம் சொன்னவன்,”அம்மா, நீங்களும் சொல்லுங்க..எல்லார்க்கும் சேர்த்து ஆர்டர் செய்யறேன்…மகேஷ் நீயும் சாப்டிட்டு போ.” என்று அனைவர்க்கும் உணவு ஆர்டர் செய்தவன் அவனுக்கு ஒன்றும் ஆர்டர் செய்யவில்லை.  உணவு வந்து சேரும் முன்,
“நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்..இராத்திரி வீட்டுக்கு வர லேட்டாயிடும்..சாவி எடுத்திட்டுப் போறேன்.” என்று அவசரமாக வீட்டிலிருந்து கிளம்பியவன் தெருமுனையை அடைந்தவுடன் பைக்கை நிறுத்தி விட்டு கௌரிக்கு ஃபோன் செய்தான். சோபாவில் அமர்ந்தபடி அவினாஷுடன் பேசிய பின் களைப்பாக உணர்ந்த கௌரி அதே சோபாவில் உறங்கிப் போனாள். தூக்கத்தில் இருந்தவளை சிவாவின் அழைப்பு தான் எழுப்பியது.  அவன் அழைப்பை அவள் ஏற்றவுடன்,”நான் உன் வீட்டுக்கு வந்துகிட்டு இருக்கேன்..அங்கே இருந்து நேரே உன் மேகலா ஆன் ட்டி வீட்டுக்குப் போக ரெடியா இரு.” என்றான்.
“இப்போவா?”
“ஆமாம்”
“திடீர்னு என்ன ஆச்சு?”
“போகற வழிலே சொல்றேன்.”
“மேகலா ஆன் ட்டி சீக்கிரம் தூங்கிடுவாங்க…நாளைக்குச் சாயந்திரமா..” என்ற கௌரியை இடைமறித்து,”சரி..நான் தனியாப் போய்க்கறேன்.” என்று சிவா கோபமாகச் சொன்னவுடன்,
‘இப்போ என்ன பிரச்சனை இவங்களுக்கு? என்று யோசித்தவள் ”வரேன்..நீங்க மேலே வர வேணாம்..ஃபோன் செய்யுங்க நான் கீழே வரேன்.” என்றாள் கௌரி. 
அதைக் கேட்டவுடன்,”ஏன் நான் மேலே வரக் கூடாதுண்னு சொல்ற?” என்று பிரச்சனை இல்லாத இடத்தில் பிரச்சனையை உருவாக்கி அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை கௌரியிடம் வெளியிட்டான் சிவா. 
அவன் கோபத்தைப் பொருட்படுத்தாமல்,”வாங்க..மேலே வாங்க..நாம இரண்டு பேரும் சேர்ந்து சட்டியும் பானையும் செய்திட்டு, சோறு வடிச்சு சாப்டிட்டு மெதுவா ஆன் ட்டி வீட்டுக்குப் போகலாம்.” என்று அழைப்பு விடுத்தாள். அதற்குப் பதில் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்தான் சிவா.  அடுத்து அவன் அழைத்தது அவினாஷிற்கு.  அன்று மாலை அவன் வீட்டில் நடந்ததைச் சுருக்காமகச் சொல்லிவிட்டு கௌரியோடு அவர்கள் வீட்டிற்கு வரப் போவதாக தகவல் கொடுத்தான். அவன் அம்மா, அப்பாவை அவர்கள் வரவிற்காகத் தயார்ப்படுத்தி வைப்பதாகத் தெரிவித்தான் அவினாஷ்.
கௌரியின் கட்டிடத்தை அடைந்தவுடன் அவள் சொன்னது போல் அவளுக்கு ஃபோன் செய்தான் சிவா.  இரண்டு நிமிடத்திற்குள் கீழே வந்து சேர்ந்த கௌரி அவனை கண்களாலேயே எரித்தாள்.  அவள் கோபத்திற்கானக் காரணம் தெரிந்திருந்தாலும் அவளிடம் ஸாரி கேட்டு அவளைச் சமாதானம் செய்யும் மன நிலையில் சிவா இல்லை.  அதனால்,”சீக்கிரம்..வண்டிலே ஏறு.” என்றான்.
“உங்களோட வரலை..என் கார்லே போகலாம்..இல்லை என் ஸ்கூட்டிலே போகலாம்,” என்றாள் கௌரி.
“விளையாடாத கௌரி..இன்னைக்கு வார நாள் டிராஃபிக் இருக்கும்..கார்லே போனா லேட்டாயிடும்..டூ வீலர் யாரோடதா இருந்தா என்ன.” என்று சிவா சொன்னவுடன்,
“நான் விளையாடறேனா..நீங்க தான் திருவிளையாடல் நடத்திக்கிட்டு இருக்கீங்க..இப்போ நீங்க இருக்கற மூட்லே உங்க பின்னாடி உட்கார்ந்து வர நான் தயாரா இல்லை..என் பின்னாடி நீங்க உடகார்ந்து வாங்க..அப்படியே என்ன விஷயம்னு சொல்லுங்க.” என்று சொன்னவள் அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவள் ஸ்கூட்டியைக் கிளப்பி அவன் அமர்வதற்காகக் காத்திருந்தாள். வேறு வழியில்லாமல் அவள் பின்னே அமர்ந்து கொண்டு அந்தப் பயணம் முழுவதும் அவன் வீட்டில் நடந்தவைகளை அவளிடம் ஒப்பித்தான் சிவா.  மேகலா ஆன் ட்டியின் வீடு வந்த சேர்ந்த போது சிவாவின் மனம் லேசாகயிருந்தது.  அதே சமயம் கௌரியின் மனம் கசப்பாக மாறியிருந்தது. ‘இதென்ன திடீர் திடீர்னு இவங்க குடும்பத்திலே பிரச்சனைக் கிளப்பறாங்க இவங்களும் உடனே டென்ஷனாகிடறாங்க.’ என்று சிவாவின் குடும்பத்தின் மீதும் அவன் மீதும் கோபம் கொண்டாள் கௌரி.