ஒரே கணத்தில் கண் விழித்து அதைக் கண்கள் மூலம் அறிவித்து ஒரே நேர்த்தில் ஆரம்ப நிலையை அடைந்திருந்த இருவரின் குண்டலினியும் ஒரு சொல், அதே பொருள் என்று ஒரே அலைவரிசையில் இருந்ததால் கௌரியும் சிவாவும் பரஸ்பர விலகலைச் சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டனர்.
அடுத்து வந்த வார நாள்களில் அலுவலகத்திலிருந்து வீடு வந்து சேர இரவு எட்டு மணி போலனது கௌரிக்கு. ஒவ்வொரு நாள் மாலையும் எத்தனை முயன்றும் அவளால் ஆறு மணிக்குள் வீடு வந்து சேர முடியவில்லை. அதனால் சின்ன கமெராவைப் பொருத்த பெரும் முயற்சி செய்ய வேண்டியிருந்தது. ஓரிரு நாள்கள் கௌரி சீக்கிரமாக வீடு வந்து சேர்ந்த போது அந்த டெக்னிஷியனுக்கு வேறு இடத்தில் வேலை இருந்ததால் அவனால் சரியான நேரத்திற்கு வர முடியவில்லை.
கமெரா விஷயம் கௌரி, சிவா இருவரின் தூக்கத்தையும் பாதித்தது. கமெரா பொருத்துவதில் கால தாமதம் ஆவதால் கௌரியின் பாதுகாப்பை நினைத்துக் கவலையடைந்து அவன் தூக்கத்தைத் தொலைத்திருந்தான் சிவா. கமெரா பொருத்தும் போது அவள் வீட்டிற்கு சிவா வருவானா? அப்படி வந்தால் கார் விஷயத்தின் போது சம்மந்தம் இல்லாதவன் போல் நடந்து கொண்டானே அதே போல் தான் நடந்து கொள்வானா? அவன் வராமல் போனால் அவனை இனி சந்திக்கவே முடியாதா? என்ற கேள்விகளால் கௌரியின் தூக்கம் களவுப் போனது.
அவளுள் எழுந்த கேள்விகளுக்கு விடையைத் தேடி, தேடி, சிவாவைப் பற்றி ஓயாமல் யோசித்து யோசித்து அவளின் குண்டலினிக்குத் தேவைக்கு அதிகமான எரிசக்தியைக் கௌரி அளிக்க, அது தவளை போல் ஒரே தாவலில் அடுத்த சக்கரமான ஸ்வாதிஷ்டானத்தைச் சென்றடைந்தது. அதன் விளைவாக சிவாவோடு சுமூகமான உறவு வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுள் வேரூன்றியது.
அந்த மாலை வேளையில் கடையில் வாடகையாளர்கள் நிறைந்து இருந்த போது சிவாவின் ஃபோன் ஒலித்தது. அழைப்பு கௌரியிடமிருந்து என்று தெரிந்தவுடன் அதை ஏற்றுக் கொண்டவன், “கார் ஏதாவது பிராப்ளம் கொடுக்குதா? என்று அவளுக்குப் பேச வாய்ப்பளிக்காமல் அவளை விசாரித்தான்.
“இல்லை..இல்லை..நல்லாப் போகுது.” என்று அவசரமாக அவள் மறுத்தவுடன்,
“சிசிடிவி ஆள் வேற வேலைலே மாட்டிக்கிட்டான்.. இதுகுள்ளே அந்த வேலை முடிஞ்சிருக்கணும் ஆனா இன்னும் முடியலை.” என்று அவளுக்குத் தற்போதைய நிலவரத்தைத் தெரியப்படுத்தினான்.
“காருக்கும், கமெராக்கும் தான் ஃபோன் செய்வேனா?” என்று மூலாதாரத்திலிருந்து ஒரு நிலை மேலே ஸ்வாதிஷ்டானத்தில் இருந்த கௌரியின் குண்டலினி செல்லச் சிணுங்கலுடன் கேட்க, மூலாதாரத்தில் இருந்த சிவாவின் குண்டலினிக்கு அந்தச் சிணுங்கல் போய்ச் சேரவில்லை.
அதனால்,“வேற என்ன விஷயம்? வெளியூர் போகப் போறேயா?” என்று விசாரித்தான் சிவா.
அடக் கடவுளே, இப்படிக் கேட்டா என்ன பதில் சொல்றது என்று யோசித்தவள்,“இப்போதைக்கு இல்லை..நீங்க என்னைக்குக் கமெரா போட முடியும்?” என்று உரையாடலை அவன் வழியில் வளர்க்கப் பார்த்தாள்.
“புது ஷோரூம்லே சிசிடிவி போட்டுக்கிட்டு இருக்கான்..மூணு தளம்..கொஞ்ச பெரிய வேலை அதான் உன் வேலை தள்ளிப் போகுது.” என்று ஒருபுறம் கஸ்டமர்களைக் கவனித்துக் கொண்டு மறுப்புறம் அவளுடன் பேசிக் கொண்டிருந்தான் சிவா. அவனுடன் எப்படியாவது பேச்சைத் தொடர வேண்டும் என்ற ஆவலில்,
“சாப்பிட்டாச்சா?” என்று நேரம் காலம் பார்க்காமல் கேட்டாள் கௌரி.
உடனே சுவற்றில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தவன்,”இப்போ எப்படி?” என்று வியப்புடன் கேட்க,
“டீ சாப்பிட்டீங்களான்னு கேட்டேன்.” என்று சமாளித்தாள்.
“அதுக்கு கால நேரமே கிடையாது.” என்றான்.
“ஒரு நாளைக்கு எத்தனை குடிப்பீங்க? என்று அவள் கேட்க,
இது என்ன அசட்டுத்தனமான கேள்வி என்று நினைத்தவன் அதை வெளிக் காட்டாமல்,”பக்கத்திலே தான் டீ கடை இருக்கு..நினைச்ச போது போய் குடிச்சிட்டு வருவேன்.” என்றான்.
“நிறைய குடிக்காதீங்க..நல்லதில்லை.” என்று அவள் அன்பாக கட்டளையிட, அதுவரை அவள் கேட்ட கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொன்னவனின் பொறுமை பறந்து,”அது டீ கடை..டாஸ்மாக் கடை இல்லை.” என்று கோபப்பட்டான்.
ஸ்வாதிஷ்டான சக்கரத்தின் சுழற்சியில் புது முயற்சிகளை, அனுபங்களை, சோதனைகளை எதிர்கொள்ள தயாராக இருந்த கௌரியை சிவாவின் சுடு சொற்கள் பாதிக்கவில்லை. அதனால்,
“இப்போ என்ன செய்துக்கிட்டு இருக்கீங்க?” என்று அடுத்த கேள்வியை அவன் முன் வைத்தாள்.
“கடைலே தான் இருக்கேன்..கஸ்டமர்ஸ் இருக்காங்க..வியாபாரம் நடக்குது.” என்று முகத்தில் அடித்தார் போல் பதில் கொடுத்தான் மூலாதாரத்தில் அவன் குண்டலினியை மும்முரமாக மரமாக வளர்த்துக் கொண்டிருந்தவன்.
அவனுடன் பேச்சைத் தொடர அவள் செய்த தொடர் முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவ, இனியும் அதை தொடர முடியாது என்று உணர்ந்து,”சரி..வைச்சிடறேன்.” என்று அழைப்பைத் துண்டித்தாள் கௌரி.
கௌரியின் பேச்சு சிவாவிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதை ஆராயந்து நேரத்தை விரயம் செய்ய விரும்பாமல் அவன் வியாபாரத்தைக் கவனிக்க ஆரம்பித்தான். இருவரின் குண்டலினியும் தொடர்பு எல்லைக்கு அப்பால் வேறு நிலையில், வெவ்வேறு அலைவரிசையில் இருந்ததால் அவர்கள் உறவை உயிர்ப்பிக்க கௌரியின் குண்டலினி எடுத்த முயற்சிகள் அனைத்தும் சிவாவின் குண்டலினியைச் சென்றடையவில்லை.
அடுத்த நாள் மாலை ஐந்து மணி போல் கௌரிக்கு ஃபோன் செய்தான் சிவா. அவன் அழைப்பை அவள் ஏற்றவுடன்,
“வீட்டுக்குக் கிளம்பிட்டேயா?” என்றான்.
“கொஞ்ச நேரத்திலே கிளம்பிடுவேன்.”
“அப்போ இன்னைக்கே கமெரா போட்டிடலாமா?”
“இப்போவா?”
“அவன் செய்துக்கிட்டிருந்த ஷோரூம் வேலை முடிஞ்சிடுச்சு..நாளைக்கு சாயங்காலம் வரை நீ எதுக்கு காத்திருக்கணும்னு இன்னைக்கே முடிக்க முடியுமாண்ணு கேட்டேன்..முடியும்னு சொன்னான்.”
“எத்தனை நேரம் எடுப்பான்?”
“இரண்டு மணி நேரமாவது ஆகும்..இராத்திரி எட்டு மணிக்கு மேலே ஆகிடும்” என்று அவளுடன் பேசிக் கொண்டிருந்தவன் திடீரென்று,”லேட்டாகிடும்னு யோசிக்கறேயா? சுப்ரமணி ஸருக்கு ஃபோன் செய்து அவன் வேலை முடிச்சிட்டுப் போகறவரை ஸரை உன் வீட்லே இருக்கச் சொல்லு..நல்ல பையன்..எனக்குத் தெரிஞ்சவன்..நம்பிக்கையானவன்..நீ கவலைப்பட வேணாம்..கமெரா வேலை ரொம்ப லேட்டாயிடுச்சு..எப்படியாவது இன்னைக்கே முடிச்சிடு.” என்று டெக்னிஷியனுக்குக் கியாரண்டி கொடுத்து, அந்த வேலையை முடித்தாக வேண்டுமென்று கௌரிக்கு ஆணையிட்டான்.
அதைக் கேட்டு அவன் வரப் போவதில்லை என்று தெரிந்தவுடன் சுணக்கமடைந்தாள் கௌரி. ‘இவனோட சுமூகமான உறவு வைச்சுக்க, இவனை நேர்லே சந்திக்க நமக்குத் தான் ஆசையா இருக்கு இவனுக்கு அது போல ஆசையே இல்லை. அப்படி ஏதாவது இருந்திருந்தா வாய்ப்பிற்காகக் காத்திருக்காம வாய்ப்பை ஏற்படுத்திக்கிட்டு இருப்பான்.’ என்று உணர்ந்தவுடன் அவள் மனச்சுணக்கத்தை மறைத்துக் கொண்டு அவனைப் போல் அந்த வேலை முடிந்தால் போதுமென்று நினைத்து,”சரி நான் ஃபோன் செய்து அவருக்குத் தகவல் சொல்லிடறேன்..நீங்க ஆளை அனுப்பி வைங்க.” என்றாள்.
அவள் வீடு வந்து சேர்ந்த போது கல்லூரி பையன் தோற்றத்தில் இருந்த ஒருவனோட அவள் வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்தார் சுப்ரமணி. அவன் தான் கமெரா போட வந்தவன் என்று அவளுக்கு அறிமுகப்படுத்தி,
“இப்போதான் வந்தான்.” என்றார்.
“ஓ..இனி நான் பார்த்துக்கறேன் நீங்க வீட்டுக்குக் கிளம்புங்க ஸர்.”
”இல்லை..இவன் வேலை முடிஞ்ச பிறகு போறேன்..உன் வீட்லே சிசிடிவி எப்படி வேலை பார்க்குதுண்ணு பார்த்திட்டு என் வீட்லேயும் ஒண்ணு போடலாம்னு இருக்கேன்..நான் டூர் போகும் போது ஆன் ட்டி தனியா தானே இருக்கா அதான்.” என்று விளக்கம் கொடுத்தார்.
அவனுடைய சாமானைப் பரப்பி வேலையை ஆரம்பித்தவன் அடுத்த அரைமணி நேரத்தில் வாசலில் இரண்டு இடங்களில் கமெரா பொருத்தினான். அதன் கேபிள்களை வீட்டினுள் எடுத்து வந்து கௌரி சொன்ன இடத்தில் மானிட்டர், டிவிஆர் செட்டைப் பொருத்துவதற்கு மேலும் அரைமணியானது. சிறிது நேரம் கழித்து,
“மேம்..செட் செய்திட்டேன்.” என்றான். அப்போது அவன் ஃபோன் ஒலிக்க அந்த அழைப்பை ஏற்றவன்,”முடிஞ்சிடுச்சு அண்ணா..ஆமாம். ணா.சரி அண்ணே.” என்று பலமுறை சொல்லி விட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அவன் பேசியது சிவாவுடன் தான் என்று புரிந்து கொண்டாள் கௌரி. வேலை முடிந்து விட்டது என்ற தகவல் சிவாவிற்கு உடனே கிடைத்து விட்டதால் இனி அவர்கள் இருவரும் பேசிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று உணர்ந்தாள். அதன்பின் சுப்ரமணி ஸருக்கும் அவளுக்கும் சிசிடிவியின் செயல்பாட்டை விளக்கி அதன் முடிவில் அவர்களின் வினாக்களுக்கும் சந்தேகங்களுக்கும் பதில் கொடுத்து, பணத்தைப் பெற்றுக் கொண்டு அவன் வெளியேறிய போது ஒன்பது மணியானது.
அன்று இரவு அவளையும் சிவாவையும் பற்றி யோசித்தவளுக்கு ஒரு விஷயம் தெளிவாக விளங்கியது. அவள் எத்தனை முயற்சி செய்தாலும் அவன் ஒத்துழைப்பில்லாமல் அவர்கள் உறவை உயிர்ப்பிக்க முடியாதென்ற உண்மையை உணர்ந்தாள். அதனால் இனி அந்த முயற்சியில் அவள் நேரத்தை விரயமாக்க கௌரி விரும்பவில்லை.
இந்தச் சூழ் நிலையில் அவளுடைய நேரத்தை அவளுடைய அலுவலக வேலைகளில் அதிகமாக செலவிட அதன் விளைவாக கௌரியின் குண்டலினி அடுத்த நிலையான மணிபூரகச் சக்கரத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது.
சிவாவின் நேரத்தை அவனுடைய அன்றாட பிரச்சனைகளும், தேவைகளும் ஆக்கிரமித்திருந்தன.
அனைவருக்கும் ஒரே நேரத்தில் அவசரம் ஏற்பட்டால் பாத் ரூம் வாசலில் வரிசை கட்டி நிற்பது போல் சிவாவின் கடை வாசலில் வரிசையில் நின்று கொண்டிருந்தனர் மாணவர்கள். இது போன்ற நேரத்தில் கடையில் வேலை செய்யும் பையன்களுடன் சேர்ந்து சிவாவும் வேலை செய்வது வழக்கம்.
அவனுடைய தம்பி மனைவி, விஜி இன்னும் அவள் அம்மா வீட்டிலிருந்து திரும்பவில்லை. சமீபக் காலமாக, ஞாயிற்றுக் கிழமைகளில் அவன் மாமாவின் தொழில்முறை சந்திப்புக்கள் வீட்டில் நடை பெறுவதால் தீபாவையும் சூர்யாவையும் பார்த்துக் கொள்ள மறுத்துவிட்டார் அவன் அக்கா, வனிதா. அதனால் குழந்தைகள் இருவரும் ஞாயிற்றுக் கிழமைகளை அவனுடன் கடையில் தான் கழித்தனர்.
அன்று, அவர்கள் இருவரையும் சமாளிக்க முடியாமல் தடுமாறிய சிவாவின் நிலையைக் கண்டு அவன் அம்மா சாவித்திரிக்கு ஃபோன் செய்து அவருடைய ஞாயிற்றுக் கிழமை விடுமுறையைக் கான்சல் செய்தான் அவர் மகன் மனோகர். அதை மறுத்துப் பேசிய சிவாவிடம்,
“இரண்டு பேரையும் எவ்வளவு முறை திட்டி ஒரு ஓரமா உட்கார்த்தி வைச்சீங்க ஆனாலும் கொஞ்ச நேரத்திலே உங்க ஸிஸ்டம் பக்கத்திலே வந்து உட்கார்ந்திடறாங்க..அவங்களை விரட்டிக்கிட்டு இருப்பீங்களா இல்லை வேலையைப் பார்ப்பீங்களா? இன்னைக்கு ஒரு நாள் அம்மா பார்த்துக்கட்டும்..அடுத்த வாரமெல்லாம் இவ்வளவு பிஸியா இருக்காது அப்போ கடைக்குக் கூட்டிக்கிட்டு வாங்க..எப்படியும் அதுக்குள்ளே விஜி அண்ணி திரும்பிடுவாங்க.” என்றவன் அறிந்திருக்கவில்லை விஜி இன்னும் சில வாரங்கள் கழித்து தான் திரும்பப் போகிறாளென்று.
இதே போல் தொய்வில்லாமல் தொழில் போய்க் கொண்டிருந்தால் வாங்கிய கடன்களை அடைத்து விட்டு வருங்காலத்திற்கும் சேமிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்று திட்டமிட்டு கொண்டிருந்தான் சிவா. டிசைனிங் கடையை தீபா பிறந்தவுடன் ஸ்டெஷனரி கடையாகவும் மாற்றியிருந்தான். அதே வருடம் தான் கடைக்குப் பக்கத்தில் தனியாக வீடு பார்த்துக் குடி வந்தான்.
அவன் தம்பி மகேஷிற்குத் திருமணமான பின் அவன் தேவைகளுக்கு ஏற்ப அதே ஏரியாவில் அவனும் தனியாக வீடு பார்க்க, அவரின் குடித்தனத்தை மூடிவிட்டு அவரிடமிருந்த சாமான்களை மூன்று குழந்தைகளுக்கும் பிரித்துக் கொடுத்து விட்டு அவர் பொறுப்புக்களையும் கடமைகளையும் சரியாக செய்து முடித்து விட்டாதாக அறிவித்து விட்டு இரண்டு மகன்களின் குடும்பத்தோடு ஐக்கியமானார் அவன் அம்மா ஜமுனா. அந்த முடிவையும் அவன் அம்மா ஜமுனா எடுக்கும் அத்தனை முடிவுகளையும் ஆதரிப்பது தான் அவன் அப்பா வெங்கடசாலத்தின் தலையாய கடமை.
இரண்டு வருடங்களுக்கு முன் சிவாவின் வாழ்க்கை நிலைகுலைந்து போன பின்னும் அவர் நிலையை மாற்றிக் கொள்ளாமல், பேத்திகளின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல், எதற்கும் அசைந்து கொடுக்காமல், சொந்த வேலைகளைக்கூட செய்து கொள்ள முடியாத சோம்பேறியாகச் சொகுசாக வளைய வந்து கொண்டிருக்கிறார் ஜமுனா.
அலுவலகத்தில் இரண்டு பேரின் வேலையை கௌரி ஒருத்தியே செய்து கொண்டிருந்ததால் ஓய்வு நேரம் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து போனது. ஒவ்வொரு நாளும் வீடு வந்து சேர்ந்தப் போது களைப்பு மிகுதியால் காலையில் சமைத்து வைத்திருந்ததையே சூடு செய்து சாப்பிட்டு விட்டுப் படுக்கையில் விழுந்தாள்.
அவளுடைய அடுத்த பதவி உயர்வுக்கான நேரமென்பதால் அலுவலக வேலையை மிகுந்த கவனத்தோடு செய்து கொண்டிருந்தாள் கௌரி. இந்தப் பதவி உயர்வுக்கு பின் அவளைக் கம்பெனியின் பொக்கிஷமாகக் கருதுவார்கள். இதுதான் அவள் அம்மாவுடன் அவள் பகிர்ந்து கொண்ட கடைசி கனவு. இந்தக் கனவு நிஜமாகும் போது அவள் அம்மா அவளுடன் இருக்க மாட்டார் என்று அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
ஒரு நாள் காலையில் அவள் அலுவலகம் செல்லுமுன் உற்சாகத்துடன் அவளுக்கு காலை வணக்கம் தெரிவித்தார் அன்று மாலை அவள் வீடு திரும்பும் முன் இந்த உலகத்திலிருந்து மறைந்து போயிருந்தார். அன்றைக்கு அவள் மேகலா ஆன் ட்டி வீட்டிலிருந்தாள். அவள் அம்மா மறைந்த அதிர்ச்சியில் மேகலா ஆன் ட்டியின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது. அந்த நிலையிலிருந்து அவர் மீண்டு வருவாரென்று அவர்கள் யாருமே நினைக்கவில்லை. அதிலிருந்து மீண்டவர் கடந்த ஒரு வருடமாக ஆஸ்பத்திரி பக்கம் போகாமல் சாதனைப் படைத்திருந்தார். அவரின் எண்ணிலடங்கா ஆஸ்பத்திரி பயணங்களால் மருத்தவமனைகளையே வெறுத்தான் அவினாஷ். அவனின் அந்த மனோபாவத்தை இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவான பின்னும் அவனால் மாற்றிக் கொள்ள முடியவில்லை.
மருத்துவமனையிலிருந்து சிதார்த் திரும்பியதிலிருந்து கௌரியை வீட்டிற்கு அழைத்துக் கொண்டிருந்தான் அவினாஷ். அவளால் அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதன் பின் அவன் குடும்பத்துடன் வைத்தீஸ்வரன் கோவிலுக்கும் வேளாங்கண்ணி மாதாவையும் தரிசிக்க சென்றவன் அவளையும் உடன் அழைத்தப் போது அவன் அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாத சூழ் நிலையில் இருந்தாள் கௌரி.
அவினாஷும் நித்யாவும் வீட்டிலிருந்து வேலை பார்த்து வந்ததால் அவர்களின் வெளி நாடு திரும்பும் திட்டத்தைச் சில வாரங்களுக்குத் தள்ளிப் போட்டிருந்தார்கள். கௌரியின் விஷயத்தில் ஒரு முடிவிற்கு வர அவளைச் சந்தித்துப் பேச முயற்சி செய்து கொண்டிருந்தான் அவினாஷ். கார், கமெரா இரண்டு வேலைகளையும் அவனைக் கலந்தாலோசிக்காமல் சிவா, கௌரி இருவருமே செய்து முடித்தவுடன் அவர்களைப் பற்றிய அவன் சந்தேகம் வலுவடைந்தது.
இனியும் தள்ளிப் போடக்கூடாதென்று கௌரியை அவர்கள் வீட்டிற்கு வரவழைக்க அவன் அம்மாவின் உதவியை நாடினான் அவினாஷ். அதற்குப் பின் மேகலாவின் இடைவிடாத முயற்சிகள் ஆர்மபித்தன. ஒரு கட்டதிற்கு மேல் ஆன்ட்டியின் அழைப்பைத் தவிர்க்க முடியாதென்று உணர்ந்தவள், மனதளவில் அவர்கள் சந்திப்பிற்கு அவளைத் தயார்ப்படுத்திக் கொண்டாள்.
சமீப காலமாக, அம்மா போன பின் ஆன்ட்டியைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் அவர் மட்டும் அவர்கள் வாழ்க்கையில் வந்திருக்கா விட்டால் என்ற எண்ணம் அவளுக்குத் தோன்றுகிறது.
அன்று அலுவலகத்திலிருந்து நேரே மேகலா ஆன்ட்டி வீட்டிற்குச் சென்றாள் கௌரி. ஏழு மணி போல், அமைதியான வீட்டில் நுழைந்தவளைச் சோபாவில் அமர்ந்தபடி டி வி பார்த்துக் கொண்டிருந்த மேகலா வரவேற்றார்.
“இந்தமுறை அவினாஷ் இங்கே இருக்கும் போது ஆஸ்பத்திரி போகமா இருந்தா போதும்னு கடவுளை வேண்டிக்கிட்டேன்..இதுவரை காபாத்திக் கொடுத்திட்டாரு..வியாதிங்களுக்கு என் மேலே ரொம்பப் பிரியமாச்சே..பீச்சுக்குப் போய் எதையாவது புதுசாப் பிடிச்சுக்கிட்டு வந்திடுவேன்..என் ராசி அப்படி.. ..…நீ ஏன் போகலை?”
“சீக்கிரமாக் கிளம்ப எனக்குப் பர்மிஷன் கிடைக்கலை.” என்று அவருடன் பேசியபடி டைனிங் டேபிள் அருகிலிருந்த வாஷ்பேஸினில் கைகளைக் கழுவிக் கொண்டு வந்து அவரெதிரே அமர்ந்தவள்,
“இப்போ சொல்லுங்க..எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரிக்க,”நித்ய கண்டம் பூரண ஆயுசுக்காரி நான்..இத்தனை வியாதியையும் இவ்வளவு வருஷமா என்கூடவே வைச்சுக்கிட்டு நாங்க எல்லாரும் ஆரோக்கியமா இருக்கோம்.” என்று விரக்தியாகப் பதில் அளித்தார்.
இருபது வருடத்திற்கும் மேலாக வியாதிகளுடன் மேகலா நடத்தும் போராட்டம் அவள் அறிந்தது தான். முதன் முதலில் அந்த வீட்டில் அவள் அம்மா வேலை செய்ய ஆரம்பித்தப் போது தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள் கௌரி. மேகலா ஆன்ட்டியும் ராம கிருஷ்ணன் அங்கிளும் கல்லூரியில் பேராசிரியர்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் தாண்டி, காற்றுக் கூடப் புகமுடியாத ஒண்டுக் குடித்தன வீடொன்றில் அவளும் அம்மாவும் பல வருடங்களாக குடியிருந்தார்கள். அவர்கள் குடியிருந்த அந்த வீடு அவர்கள் பக்கத்து வீட்டிலிருந்த ஆயாவுக்குச் சொந்தமான வீடு. அந்த ஆயாவும் அவர்களுக்குச் சொந்தமென்று அவர் மறைந்த பின்பு தான் அவளுக்குத் தெரிய வந்தது.
பள்ளிப் படிப்புக்கூட முடித்திராத அவள் அம்மாவை வீட்டு வேலைக்கு அவருடன் அழைத்துச் சென்று, சில வீடுகளில் அவர் சிபாரிசின் பெயரில் வேலை வாங்கிக் கொடுத்தது ஆயாதான். சில வீடுகள் சில வருடங்களில் பல வீடுகளானது அதன் பின் ஒரே வீடாக, வீட்டோடு வேலைக்காரியாக மேகலா ஆன்ட்டிக்கு உதவியாக இருந்து இந்த உலகத்தை விட்டு அவள் அம்மா மறைந்தபோது ஆன் ட்டியின் உடன்பிறவா உடன்பிறப்பு என்ற நிலையை அடைந்திருந்தார்.
இந்த வீடு, ஐந்தாவது வரை அவள் படித்த அரசு பள்ளிக்கூடம், அதன் பின் அவள் படித்த ஆங்கில வழிப் பள்ளிக்கூடம்…அவள் கனவுகளின் பிறப்பிடங்கள் அனைத்தும் அப்படியே இருக்க, அந்தக் கனவுகள் நிஜமாக நிஜமாக பழைய கௌரி மறைந்து புது கௌரி பிறந்தாள். பல புதிய பிறப்புக்களுக்குப் பின் பழைய கௌரியை பார்க்க வேண்டுமானால் அவளே இந்த வீட்டிற்குத் தான் வர வேண்டும்.
சுமார் இருபது வருடங்களுக்கு முன் இந்த வீட்டு வாசல் கதவைத் திறந்த மாலினி அக்காவிடம்,”அக்கா, இவ உன்னோட பழைய ஃப்ராக் போட்டுக்கிட்டு குட்டி பூதமாட்டம் இருக்கா.” என்றான் வீட்டினுள்ளே, டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த அவினாஷ். வீட்டு வாசலில், மாலினியின் பழைய, பெரிய ஸைஸ் ஃப்ராக்கில், எண்ணெய் வடிந்த, கவலைப்படிந்த முகத்தோடு, காலையில் பின்னிய இரட்டைப் பின்னலிளிருந்து அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருந்த சிகப்பு ரிப்பனோடு, வலது கையில் அவள் வீட்டுச் சாவியோடு, இடது பாதத்தில் அறுந்து போன செருப்போடு நின்று கொண்டிருந்தாள் கௌரி.
“ஷட் அப் அவினாஷ்.” என்று அவினாஷை அதட்டிய மாலினி,”கல்யாணி ஆன்ட்டி பொண்ணா?” என்று கௌரியை விசாரித்தாள்.
அவளைப் பூதமென்று சொன்ன அவினாஷை அதட்டிய மாலினியை உடனே பிடித்துப் போனது கௌரிக்கு.