பரந்து விரிந்திருந்த கருநீல வானுக்குள் நாணத்துடன் ஓடி ஒளிந்து கொண்டிருந்தது வட்ட நிலா. கண்ணைச் சிமிட்டும் நட்சத்திரங்கள் ரோமியோக்களாய் அதை விரட்டிப் பிடிக்கும் முயற்சியில் இருந்தன.
நேரம் பத்து மணியை நெருங்கி இருந்ததால் ஊர் அடங்கி உறக்கத்துக்கான தொடக்கத்தில் இருந்தது.
அன்னை கொடுத்துவிட்ட பால் சொம்பைக் கையில் எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் யாழினி. மனதுக்குள் பயத்தோடு ஒருவிதத் தயக்கமும் போட்டி போட கால்கள் பதட்டத்தில் பின்னிக் கொள்ள மெல்ல நுழைந்தாள்.
அறைக்குள் நடை போட்டுக் கொண்டிருந்த இலக்கியன் அவள் வரவில் திரும்பினான். வேகமாய் கட்டிலில் சென்று அமர்ந்து கொள்ள அவனைத் தயக்கமாய் பார்த்தபடி பால் சொம்பைக் கட்டிலருகே இருந்த குட்டி மேசை மீது வைத்துவிட்டு கதவருகே சென்றவள் கதவை சாத்தி அங்கிருந்த கல்லை குனிந்து எடுக்க பார்த்துக் கொண்டிருந்த இலக்கியன் திகைத்தான்.
“என்னடா இது… வந்ததும் கல்லைக் கையில் எடுக்கிறா… ஒருவேளை ஜாடையா நம்மளுக்கு எதையும் சொல்லுறாளோ…” என யோசித்தபடி அவளையே பார்க்க தலையைக் குனிந்து கொண்டாள்.
“கதவுக்குத் தாழ்ப்பாள் இல்ல, அம்மா உள்ள போனதும் மறக்காம கல்லை எடுத்து கதவுக்குப் பின்னால வையின்னு சொல்லுச்சு… அதான்…” என்றவள் கதவுக்குப் பின்னால் வைத்து வந்தாள். அதைக் கேட்டதும், “ஓ கதவுக்கு தான் கல்லா…” என்றபடி அவன் சிரிக்க திகைப்புடன் நிமிர்ந்தாள்.
“வேற என்ன நினைச்சிங்க…”
“அ… அதுவந்து… ஒண்ணுமில்ல விடு…” மழுப்பியவன், “யா…ழி…னி… அழகான பேரு… இப்படி உக்காரு…” என்றான்.
அவள் தயக்கத்துடன் “பால்…” என்று கூற, “அப்புறம் குடிக்கலாம்… உன்னைப் பத்தி சொல்லு…” என்றான்.
அவனது குரல் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இதற்கு முன் மற்றவர்களுடன் பேசுவதை அவள் கேட்டிருந்தாலும் தன்னிடம் நேரடியாக ஒரு மாதிரி நட்போடு பேசுவது மிகப் பிடித்திருக்க கடைக் கண்ணால் பார்த்தாள்.
“ம்ம்… சொல்லு…” ஜிலேபியை எடுத்து சாப்பிட்டுக் கொண்டே அவன் சொல்ல அவளுக்கும் தயக்கம் குறைந்தது. அரைப் பரீட்சை முடிந்து பொங்கல் லீவில் திருமணம். ஜனவரி மாதக் குளிர் சாத்தியிருந்த ஜன்னலைத் தாண்டி உள்ளே சில்லென்று நுழைந்து கொண்டிருந்தது.
யாழினியின் வீடு கீழே ஒரு பெட்ரூம், ஹால், கிட்சன், மேலே மாடியில் ஒரு அறை ஹாலுடன் பெரிய வீடாக இருந்தாலும் பழைய காலத்து வீடு. சிறிதளவு இடத்தில் கீழும், மேலுமாய் கட்டி இருந்தார்கள். மாடியில் தான் புதிதாய் கல்யாணமானவர்களுக்கு அறை ஒதுக்குவார்கள்.
மணமக்களுக்கு அங்கே தனிமை கொடுப்பதற்கு வேண்டி மாடிக்கு யாரையும் செல்ல விட மாட்டார்கள்.
“என்ன யாழினி, ஏதும் சொல்ல மாட்டேங்கற… உனக்கு என்னைப் பிடிக்கலையா…” இலக்கியன் கேட்க சட்டென்று நிமிந்தவள், “இ..இல்ல, அப்படி எல்லாம் இல்ல…”
“எதுக்கு தயக்கம், உன்னைப் பத்தி, உன் குடும்பத்தைப் பத்தி சொல்லு…” அவன் கையில் இப்போது லட்டு இருந்தது.
“அதுக்கு முன்னாடி உங்ககிட்ட நான் ஒண்ணு கேக்கவா…”
“என்ன கேக்கணும்…”
“வந்து… முதல்ல என்னைப் பொண்ணு பார்த்திட்டுப் போயி பிடிக்கல, வேண்டாம்னு சொல்லிட்டு நாலஞ்சு மாசம் கழிச்சு மறுபடி ஏன் பிடிச்சிருக்குன்னு சொன்னிங்க…” வெகு நாளாய் மனதை உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை யாழினி கேட்டுவிட மென்மையாக சிரித்தான்.
“நாங்க முதல்ல உங்க அக்காவை தானே பொண்ணு பார்க்க வந்தோம்… பொண்ணு சிவப்புன்னு சொல்லி இருந்ததால இந்தப் பொண்ணு கறுப்பு போலருக்குன்னு சொன்னேன்…” அவன் நிறுத்த அவளுக்குள் மைன்ட் வாய்ஸ் ஓடியது.
“இப்ப மட்டும் நான் அப்படியே MGR கலர்ல தகதகன்னு சிவப்பா இருக்கேனாக்கும்…”
“உன்னைப் பிடிக்கலன்னு எல்லாம் சொல்லல, ரொம்ப சின்னப் பொண்ணாருக்குன்னு தான் சொன்னேன்…”
“ஓஹோ, உங்க ஊருல எல்லாம் கிழவிய தான் பொண்ணு பார்க்கப் போவாங்களோ…” அவளையுமறியாமல் மனதுக்குள் கவுன்ட்டர் கொடுத்துக் கொண்டாள்.
“அதுக்குள்ள என் அக்கா அரைகுறையா கேட்டுட்டு எனக்கு பொண்ணைப் பிடிக்கலன்னு போயி சொல்லிட்டா… அப்புறம் மறுபடி வேற பொண்ணைப் பார்க்கறோம்னு சொல்லவும் தான் நான் வேண்டாம்னு சொல்லிட்டேன்…”
“ஏன்… வேற பொண்ணைப் பார்த்திருக்க வேண்டியது தான…”
அவள் சொல்ல நிமிர்ந்து பார்த்தவன், “எனக்கு தான் உன்னைப் பார்த்த உடனே புடிச்சிருச்சே…” என்றதும் அவளுக்குள் ஜிவ்வென்று ஒரு உணர்வு தோன்றியது.
நிறத்தை மீறி சிவந்த முகத்தை குனிந்து மறைத்துக் கொண்டு, “பார்த்ததும் பிடிச்சுதுன்னா ஏன் அவ்ளோ நாள் கழிச்சு சொன்னிங்க…” என்றாள் இன்னும் தெளிவாகாமல்.
“நீ படிச்சிட்டு இருக்க… எங்க வீட்லயும் யாரும் ஒழுங்காப் படிக்கல… எல்லாருக்கும் சின்ன வயசுல இருந்தே தொழில்ல தான் கவனம்… உன் படிப்பையும் பாதில விட வைக்க விருப்பம் இல்ல… அதான் கொஞ்ச நாள் போகட்டும் அப்புறம் பார்த்துக்கலாம்னு வீட்டுல சொல்லிட்டேன்… இப்ப மறுபடி உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னதும் அம்மா, அக்கால்லாம் யோசிச்சாங்க… மறுபடி நாம போயி சொன்னா எதுவும் நினைச்சுப்பாங்களோன்னு… சொல்லிப் பாருங்கன்னு சொன்னேன்… ஓகே ஆயிருச்சு…” என்றான் சிரிப்புடன்.
“ஹூக்கும்… இப்ப மட்டும் நாங்க படிக்கற புள்ளை இல்லையாக்கும்…” அவளது மைன்ட் வாய்ஸ் சற்று உரக்கக் கேட்டுவிடவே, “நீ பிளஸ் டூ முடிக்கணும்னு அத்தை கிட்ட சொன்னியாம்… தாராளமா இந்த வருஷம் படி… ஆனா, காலேஜுக்குப் போகணும்னு சொல்லிடாத… எங்க வீட்டுல அதுக்கு சம்மதிக்க மாட்டாங்க… அம்மாக்கு இங்க துணைக்கு ஆளில்லைன்னு தான் எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ண நினைச்சாங்க… நீ ஸ்கூல், காலேஜ்னு போயிட்டா அவங்களுக்கும் கஷ்டம்…” என்றான் இலக்கியன்.
“ஓ… இவ்வளவு நடந்திருக்கா… பிளஸ் டூ முடிக்க ஓகே சொன்ன வரைக்கும் சந்தோசம்தான்…” என நினைத்துக் கொண்டாள்.
“யாழினி… இனியாச்சும் உங்க குடும்பத்தைப் பத்தி சொல்லறியா…” கேட்டுக் கொண்டே ஒரு ஆரஞ்சை எடுத்துக் கொண்டவன் தோலை உரித்து சாப்பிட்டுக் கொண்டே, “உனக்கு வேணுமா…” என்று கேட்க மறுப்பாய் தலையாட்ட அவன் சாப்பிடத் தொடங்கினான்.
“சரியான தின்னிப் பண்டாரம்… சோத்துக்கு செத்த குடும்பம் போல, இருக்கிறதை எல்லாம் காலி பண்ணிட்டு தான் விடுவார் போலருக்கு…” மனதுக்குள் திட்டிக் கொண்டாள்.
“எங்க வீட்டுல நான்தான் கடைக்குட்டி… அதனால நான் எல்லாருக்கும் செல்லம்… அப்பா, அம்மா, பெரியக்கா என்னை கண்ணம்மான்னு ஆசையா கூப்பிடுவாங்க… எங்க வீட்டுலயும் எல்லாரும் சரியாப் படிக்கல… நான் மட்டும் தான் பிளஸ் டூ வந்திருக்கேன்… எனக்கு காலேஜ் போயி டிகிரி வாங்கணும்னு ஆசை இருந்துச்சு… ஆனா கல்யாணத்துக்கு முன்னாடியே அம்மா சொல்லிட்டாங்க… அவங்க பிளஸ் டூ மட்டும் தான் படிக்க அனுப்புவாங்க, அதுக்கு மேல படிக்க வைக்க மாட்டாங்கன்னு… எனக்கு எதையும் மனசுல வச்சுக்கத் தெரியாது… ஓப்பனா பேசிருவேன்… எனக்கு புளூ கலர் ரொம்பப் பிடிக்கும்… விதவிதமா டிரஸ், நகை பிடிக்கும்…” அவள் சொல்வதைக் கேட்டிருந்தவன் தன்னை மனதுக்குள் திட்டியதை அறியாது அடுத்து ஆப்பிளை எடுத்துக் கொண்டான்.
“கண்ணம்மா… நல்லார்க்கு, நானும் உன்னை அப்படியே கூப்பிடவா…” அவன் கேட்க அவளுக்கு வெட்கமாய் வந்தது.
“உங்க இஷ்டம்…” என்றவள், “நான் உங்களை என்ன சொல்லிக் கூப்பிடணும்…” என்றாள் ஆவலுடன்.
“எனக்கு எந்த விஷயத்திலும் பெருசா எந்த எதிர்பார்ப்பும் இல்ல யாழினி… உனக்குப் பிடிச்சதை சொல்லிக் கூப்பிடு…” என்றதும், “ஹூக்கும்… என்ன சொல்லிக் கூப்பிடலாம்…” யோசித்தவள், “தின்னிப் பண்டாரம் தான் இவருக்கு சரியான பேரா இருக்கும் போலருக்கு… ஆனா, அதைக் கூப்பிட முடியாதே…” என வருத்தமாய் யோசித்தாள்.
“என்ன யாழினி யோசிக்கற…”
“இல்ல, பால் ஆறிடுமேன்னு யோசிச்சேன்… தரட்டுமா…”
“ம்ம்… கொடு மா…” என்றவனை திகைப்புடன் நோக்கிவிட்டு எடுத்துக் கொடுக்க குடித்துவிட்டு அவளுக்கு நீட்டினான்.
“இல்ல, எனக்கு வேண்டாம்…” அவள் மறுக்க, “ஏன் எதுமே சாப்பிட மாட்டேங்கற… அதான் உடம்பு வர மாட்டேங்குது… இப்படி இருந்தா எப்படித் தாங்குவ…” அவளது உடம்பில் அவன் பார்வை ஓட அவளுக்குக் கூசியது.
அதைப் புரிந்து பார்வையை விலக்கிக் கொண்டவன் மீண்டும் நீட்டி, “இதெல்லாம் ஒரு சாங்கியம்… குடி…” என்று சொல்ல மறுக்காமல் வாங்கிக் குடித்தாள் யாழினி.
“யாழினி, ஒரு விஷயம் முக்கியம்… எங்க அப்பா இறந்ததுக்கு அப்புறம் எங்கம்மா தான் எங்களுக்கு எல்லாமே… நாங்க இப்ப சொல்லிக்கற நிலைமைல இருக்குறதுக்கு அவங்களோட உழைப்பும் ஒரு காரணம்… அவங்க சில நேரம் அப்படி, இப்படிப் பேசினாலும் நீ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்… எனக்கு அவங்களை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாது… எங்கம்மாவுக்கு பொண்ணுங்க முடிஞ்சு தான் நாங்க எல்லாம்… அவங்களை ரொம்பத் தாங்குவாங்க… உன்னால நம்ம குடும்பத்தில் எந்தப் பிரச்சனையும் வராம இருந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்… முடிஞ்ச வரைக்கும் உனக்கு சப்போர்ட்டா இருப்பேன்…” என்றான் இலக்கியன்.
“ம்ம்… நான் நல்லாப் பழகினவங்க கிட்ட தான் படபடன்னு பேசுவேன்… மத்தபடி மரியாதை இல்லாம நடந்துக்க மாட்டேன்… நம்ம குடும்பம்னு சொல்லி என்னையும் உங்களோட சேர்த்துகிட்டது ரொம்ப சந்தோஷம்…”
“ம்ம்… டயர்டா இருப்ப… படுத்துக்க…”
அவன் சொல்லவும் ஏதேதோ கற்பனை செய்து கொண்டு பயத்துடன் வந்தவளுக்கு நிம்மதியாகவும் அதே நேரம் கொஞ்சம் ஏமாற்றமாகவும் உணர்ந்தாள்.
எங்கே எப்படிப் படுப்பது என்று அவள் தடுமாற, “எனக்கு தரைல படுத்தா தூக்கம் வராது… இந்தக் குளிர்ல நீயும் படுக்க முடியாது… ரெண்டு பேரும் கட்டில்லையே படுத்துக்கலாம்… உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே…” அவன் கேட்க முழித்தவள் மெல்ல தலையாட்டினாள்.
அவள் கட்டிலின் ஒருபக்கம் படுத்துக் கொள்ள, இலக்கியன் லைட்டை அணைக்கவும் யாழினிக்கு படபடப்பாய் இருந்தது.
அவளது முதுகைப் பார்த்தபடி மறுபக்கம் படுத்த இலக்கியன் முதுகைத் தொட சட்டென்று பயத்துடன் எழுந்து அமர்ந்தாள்.
“ஹேய்… என்னாச்சு கண்ணம்மா… குட்நைட் சொல்லத்தான் கூப்பிட்டேன்…” அவன் சொல்ல உலர்ந்த நாவை நனைத்துக் கொண்டவள், “ஹூக்கும்… மனுஷனை பயப்படுத்திட்டு இனி எங்க குட் நைட்டு… மண்டைல அப்படியே குட்டிதான் வைக்கணும்…” என்று மனதுக்குள் முணுமுணுத்தாள்.
சற்று நேரத்தில் அவன் நிம்மதியாய் உறங்க அவளுக்கு தான் உறக்கம் வருவேனா என்றது.
“கல்யாணம், பர்ஸ்ட் நைட்டு எல்லாம் நாம கேட்ட, சினிமால பார்த்த போல இல்லையோ… இந்த மனுஷன் என்னடான்னா, திங்கறதுக்கே பொறப்பெடுத்த மாதிரி அப்புடித் திங்கறாரு… நல்லா மொக்கிட்டு தூங்கறதைப் பாரு…” என்று அவனை நோக்கிப் படுத்தபடி பொருமிக் கொண்டிருந்தவளின் தேவை என்னவென்று அவளுக்கே தெரியவில்லை.
அடுத்தநாள் காலையில் இலக்கியன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த யாழினியை எழுப்பினான்.
“கண்ணம்மா, எழுந்திரு… டைம் ஆச்சு…”
“அதுக்குள்ள விடிஞ்சிருச்சா… நைட் எல்லாம் தூக்கமே வரல, இப்பதான் தூங்கினேன்… இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக்கறேன்ம்மா…. ப்ளீஸ்…” கண்ணைத் திறக்காமல் கொஞ்சினாள் யாழினி.
சிரிப்புடன் அவள் கன்னத்தில் மெல்லத் தட்டியவன், “ஹேய், எழுந்திரு கண்ணம்மா… விருந்துக்கு எல்லாரும் வரத் தொடங்கிருவாங்க… நீ போயி சீக்கிரம் குளிச்சு ரெடியாகு…” என்று சொல்ல மெல்ல கண்ணைத் திறந்தவள் திகைத்தாள்.
அங்கேயே குளியலறை இருந்ததால் குளித்து இடுப்பில் டவலுடன் நின்று கொண்டிருந்தான் இலக்கியன். அவனைக் கண்டதும் சட்டென்று எழுந்து கொண்டாள்.
“பரவால்ல கண்ணம்மா, என் முன்னாடி உனக்கு எந்த பார்மாலிட்டியும் தேவை இல்லை… ஆனா, மத்தவங்க முன்னாடி எதுவும் சொல்லாத போல நடந்துக்க…”
“ம்ம்… சரி, உங்களுக்கு காபி எடுத்திட்டு வரேன்…” என்றவள் உறக்கத்தில் கலைந்திருந்த சேலையை சரி செய்ய, “ஒண்ணும் அவசரமில்லை… நீ குளிச்சிட்டு வா… அப்புறம் குடிச்சுக்கறேன்…” என்றவனின் கட் அன்ட் ரைட் இல்லாத அமைதியான சுபாவம் அவளுக்குப் பிடித்திருந்தது.
மாற்று உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவள் சிறிது நேரத்தில் பளிச்சென்று வந்தாள்.
தலையில் டவலை சுற்றிக் கொண்டு குளியலறை நனைவில் சேலையை சரியாகக் கட்ட முடியாமல் மேலே சுற்றிக் கொண்டு வந்தவளை நோக்கியவன் புன்னகைத்தான்.
“என்ன கண்ணம்மா, சேலையை இப்படி சுத்திருக்கே…”
“சேலைல தண்ணி ஆகும்னு சுத்திட்டு வந்துட்டேன்… நீங்க கொஞ்சம் வெளிய இருக்கீங்களா… நான் சரியா கட்டிட்டு வந்துடறேன்…” பாவமாய் கேட்க புன்னகைத்தான்.
“ஏன், நான் இருக்கும்போது சேலையைக் கட்ட முடியாதா…” என்றவனை அவள் திகைப்புடன் நோக்க, “நானும் மூணு பொட்டப் புள்ளைங்களோட வளர்ந்தவன் தான்… நான் வெளிய நிக்கறதை யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க… நான் இங்கயே திரும்பி நிக்கறேன்… நீ கட்டு…”
அவன் சொன்னதும் சரியென்று தோன்ற திரும்பி அமர்ந்தவனை தயக்கத்துடன் பார்த்துக் கொண்டே அக்கா தனக்கென்று ஆசையாய் வாங்கிக் கொடுத்த ஆனந்த புளூ நிற டிஸைனர் சில்க் புடவையை கட்டிக்கொண்டாள். அவள் கட்டி முடிக்கும் வரை அமைதியாய் அமர்ந்திருந்தவன் மேல் மிகுந்த மரியாதை தோன்றியது.
“ம்ம்… முடிஞ்சுது, திரும்பலாம்…” அவள் சொல்லவும் திரும்பியவன் புன்னகைத்தான்.
“இந்த சேலை உனக்கு ரொம்ப நல்லாருக்கு…” முதன் முறையாய் ஒரு ஆண் தன்னை ரசித்துக் கூறிய பாராட்டில் முகம் சிவந்தவள், “தேங்க்ஸ்…” என்றாள்.
“மடிப்பு சரியா எடுக்கலையா… இரு சரி பண்ணி விடறேன்…” என்றவன் அவள் சம்மதத்தை எதிர்பார்க்காமல் குனிந்து சரி செய்ய முதலில் தயங்கியவள், அவன் அழகாய் ஒவ்வொரு மடிப்பையும் சரி செய்து நீவி விடவும் திகைத்தாள்.
“இவ்ளோ அழகா சேலையை சரி பண்ணி விடறீங்க… முன் அனுபவம் ஜாஸ்தியா…” அவன் சகஜமாய் பேசியதால் எதார்த்தமாய் கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“ம்ம்… ஆமா, இதுக்கு முன்னாடி துணிக்கடைல பொம்மைக்கு சேலை கட்டி விடற வேலைல இருந்தேன்… அதான்…” எகத்தாளமாய் ஒலித்த அவனது குரல் உனக்கு நான் சற்றும் குறைவில்லாதவன் என்பதை உணர்த்தியது.
அவன் சொன்னதும் அவள் முகம் சுருங்க சிரித்தான்.
“ஹாஹா… சும்மா சொன்னேன், எங்க அக்காஸ் எல்லாம் சேலை கட்டும்போது மடிப்பை சரி பண்ண சொல்லுவாங்க… அப்படிப் பழகிய முன் அனுபவம் தான்… எனக்கு சேலை கூட ரொம்ப நல்லா கட்டத் தெரியும்… வேணும்னா சொல்லு, உனக்கு நானே இனி சேலை கட்டி விடறேன்…” என்றதும் நாணத்தில் முகம் சிவந்தவள், “ச்சீ… போங்க, நீங்க ரொம்ப மோசம்… நான் காபி எடுத்திட்டு வரேன்…” என்று கல்லை நீக்கி கதவைத் திறந்து வெளியே சென்றாள்.
“ஆத்தி, ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சா இப்படில்லாம் பேசறாங்களே…” என நினைத்தவளுக்கு மேலும் முகம் சிவக்க அப்படியே அன்னை முன் சென்று நின்றாள்.
அவளைக் கண்டதும் முகம் மலர்ந்த வசந்தா, “ஆத்தி, என் கண்ணம்மாவா இது… நேரமா எழுந்து குளிச்சு புடவ கட்டி எம்புட்டு அழகா நிக்குறா…” என்று மகளின் கன்னத்தை வழித்து திருஷ்டி கழித்தவர், “மாப்பிள எழுந்துட்டாகளா கண்ணு…” என்றார் ஆராய்ச்சிப் பார்வையுடன்.
“ம்ம்…” அவள் குனிந்தபடி சொல்ல, “கண்ணம்மா வந்துட்டியா… இப்பதான் காபி கலந்தேன்… கொண்டு போயி மாப்பிள்ளைக்குக் கொடு…” என்ற மூத்த அக்காவிடம், “போக்கா, இப்பதான கீழ வந்தேன்… நீயே போயி குடு…” என்றாள் அவள் தோளில் தொங்கியபடி.
“அதுசரி, உன்னால மட்டும் தான் இப்படி ஊரு உலகத்துல இல்லாத நடப்பெல்லாம் யோசிக்க முடியும்… உம் புருஷனுக்கு நீதான் காபி கொடுக்கோணும்…” என்றவள் தங்கையின் காதருகில் வந்து, “கல்யாணமான புதுசுல தான் இந்த ஆம்பளைங்க பொண்டாட்டியை ரொம்பத் தேடுவாங்க… அப்ப கைக்குள்ள போட்டு வச்சுகிட்டா தான் உண்டு… போயி குடு… அவரு காத்திருப்பாரு…” என்று ரகசியம் சொன்னாள்.
அக்கா சொன்னதைக் கேட்டு யோசித்தவள், “கைக்குள்ள போட்டுக்கறதுனா என்னக்கா… அவ்ளோ பெரிய உருவத்தை எப்படி இத்தனூண்டு கைக்குள்ள போட முடியும்…” அறிவுப் பூர்வமாய் யோசித்துக் கேட்க தங்கையின் கேள்வியில் தலையில் அடித்துக் கொண்டாள் ரூபினி.
“உன்கிட்டப் போயி சொன்னேன் பாரு… இந்தா, பிளாஸ்க்ல காபி வச்சிருக்கேன்… அவருக்குக் கொடுத்துட்டு நீயும் குடி…” என்று கையில் கொடுத்து அனுப்ப சிரித்துக் கொண்டாள்.
“அக்கா சொன்னமாதிரி இவர் நம்மளைத் தேடுவாரோ… இல்லியோ, என்ன சாப்பிடக் கொண்டு வருவேன்னு நிச்சயம் தேடுவார்…” என யோசித்தபடி மாடி ஏறினாள்.