“என்னங்க, இவங்க எல்லாம் சீனத் துறவிங்க போல இருக்காங்க… இவங்க எப்படி இந்தியாவுல இப்படி ஒரு பெரிய கோவிலைக் கட்டினாங்க… அதும் இங்க மட்டுமே ஆயிரக்கணக்கான துறவிங்க இருப்பாங்க போலருக்கு…” அனு பரத்திடம் கேட்க, முன்னமே அந்தக் கோவிலைப் பற்றி விசாரித்து வைத்திருந்தவன் அதைப் பற்றிக் கூறினான்.
“இவங்க எல்லாம் தலாய்லாமாவின் கருத்துகளைப் பின்தொடர்ந்து இந்தியாவுக்கு வந்த லாமாக்கள்… சிலர் தர்மசாலாவில் இடம் கிடைச்சு அங்கே தங்க, பலர் இந்தியா முழுதும் பரவிட்டாங்க… திபெத்திய பௌத்தத்தை இந்தியாவில் பரப்புறது தான் இவங்க வேலை… அப்படி திபெத்தில் இருந்து வந்த ஒருத்தர் தான் இங்க மடாலயத்தை தொடங்கி வைத்தார். இங்க 5000 துறவிகளுக்கு மேல இருக்காங்களாம்… இங்க சேர்ந்துட்டா ஸ்கூலுக்குப் போயி படிக்க வேண்டியதில்லை… இங்க தலாய்லாமா வாழ்க்கை, திபெத் வரலாறு, கலாசாரம் எல்லாம் சொல்லிக் கொடுத்து அவங்களுக்கு உள்ள திறமைக்கு அனுசரிச்சு கைத்தொழிலும் சொல்லிக் கொடுப்பாங்க… வெளியுலகுக்கும், இவங்களுக்கும் அதிகத் தொடர்பு இல்லை… எப்பவாச்சும் பெத்தவங்க, சொந்தக்காரங்க வந்து பார்த்திட்டுப் போவாங்களாம்…”
“ஓ…” என்றாள் அனு அதிசயத்துடன்.  அங்கிருந்து செல்லவே மனமில்லாவிட்டாலும் நேரம் ஆனதால் கிளம்பினர். மைசூரில் இரவு லாட்ஜில் ரூம் எடுத்துத் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டனர். காலையில் இனிப்பு கலந்த சாம்பார் இட்லி சாப்பிட்டுவிட்டு மைசூர் பிருந்தாவனுக்கு கிளம்பினர்.
காவிரி ஆற்றில் கிருஷ்ணராஜ சாகர் அணைக்குக் கீழே இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அறுபது ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் பூங்காவில் அழகான மலர் படுக்கைகளும், பசுமையான புல்வெளிகளும் மரங்களும் பல வடிவங்களில் அமைக்கப்பட்ட நீர் தடாகங்களும், வித விதமான நீரூற்றுகளுமாய் கண்ணையும் மனதையும் நிறைத்தது பிருந்தாவன். இசைக்கேற்ப நடனமாடும் நீரூற்றை வியப்புடன் நோக்கினர் அனுவும், தன்யாவும்.
“நைட்டு நேரத்துல வண்ண விளக்கு அலங்காரத்தில இந்த கார்டனே சொர்க்கம் போல இருக்கும்… நமக்கு டைம் இல்ல… அரண்மனைக்கு கிளம்பணும்…” என்றான் பரத்.
சந்தோஷமாய் அங்கிருந்து கிளம்பி மதிய உணவை முடித்துக் கொண்டு அரண்மனையைக் காண சென்றனர்.
245 அடி நீளம், 150 அடி அகலம், 150 அடி உயரத்தில் சாம்பல் நிற சலவைக் கற்களால் உருவாக்கப்பட்ட நூறாண்டு சிறப்பு மிக்க மைசூர் அரண்மனை கம்பீரமாய் வரவேற்றது. கட்டிட உள்பகுதி முழுதும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் மரவேலைப்பாடு செய்யும் தொழிலாளர்கள் கதவு, ஜன்னலில் அமைத்துள்ள சித்திர வேலைகளை பிரமிப்புடன் பார்த்தனர். ரவிவர்மன், எல்லோரா ஓவியங்கள் அழகு சேர்த்தன. வளாகத்தில் உடையார் பேரரசர் ஆட்சிக் காலத்தின் 25 வாரிசுகளின் வரலாறும் ஓவியங்களாய் சித்தரிக்கப்பட்டிருந்தன. சுற்றிப் பார்த்தே கால்கள் ஓய்ந்து போக இருள் சூழத் தொடங்கி இருந்தது. இவர்கள் சென்றது ஞாயிற்றுக் கிழமை என்பதால் அரண்மனையில் 97000 விளக்குகள் ஒரு மணிநேரம் ஒன்றாய் மிளிர அரண்மனை தங்கம் போல் ஜொலிப்பதைக் காண கண்கள் போதவில்லை. சனி, ஞாயிறு மட்டுமே இந்த விளக்குகளை ஒரு மணி நேரம் ஒளிர விடுவார்கள். முன்னால் நின்று போட்டோ எடுத்துக் கொண்டு கண்களோடு மனமும் ஒளிர அறைக்குத் திரும்பினர். அதோடு டிரிப் முடிய அறையைக் காலி செய்து கிளம்பினர். அனைவரும் களைப்புடன் உறங்க டிராவலர் ஓடத் தொடங்கியது.
காலையில் ஒன்பது மணிக்கு வீட்டை அடைந்தனர். அதற்கு சற்று முன்னரே அனுவுக்கு இவர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ என்ற பயத்தில் வயிற்றைக் கலக்கத் தொடங்கியிருந்தது. இதுவரை உள்ள சந்தோஷம் காணாமல் போக மனது கலங்கத் தொடங்கியது. பரத் ஆதரவாய் அவள் கையில் தட்டிக் கொடுத்தான். இவர்களை இறக்கிவிட்டு வண்டி கிளம்பியது.
வாசல் கதவு திறந்திருக்க, வண்டி நிற்கும் சத்தம் கேட்டும் யாரும் வெளியே வரவில்லை. இவர்கள் உள்ளே செல்ல ஹாலில் இருந்த டீப்பாய் மேலிருந்த கண்ணாடி இல்லாமல் மரக்கூடு மட்டுமாய் இருக்க வீடு அமைதியாய் இருந்தது. யோசனையுடன் தங்கள் அறைக்குள் நுழைந்த அனு உறங்கிக் கொண்டிருந்த தன்யாவைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு கணவனை நோக்கினாள்.
“என்னங்க, யாரையும் காணோம்…”
“கிச்சன்ல தான் இருப்பாங்க… நீ போ…” என்றான் பரத். அஸ்வினுக்கு வாங்கிய ஸ்வெட்டர், விளையாட்டுப் பொருட்களுடன் அனு அடுக்களைக்கு செல்ல அமிர்தவள்ளி பின்னில் நின்று கொண்டிருக்க நந்தினி மகனை மடியில் வைத்து அங்குள்ள படியில் அமர்ந்திருந்தாள்.
“இங்கிருக்கிங்களா அத்தை…” அனு கேட்க அவர் எதுவும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
“அஸ்வின், இந்தா காரு, ட்ரெயின்… உனக்கு பிடிச்சிருக்கா பாரு…” என்று சொல்ல அஸ்வின் எதார்த்தமாய் அவளிடம் வந்து அதை எடுக்க நந்தினி வாங்கி கீழே போட்டுவிட்டு அவனுடன் அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.
“என்ன சமைக்கறிங்க அத்தை, நான் எதுவும் பண்ணட்டுமா…” அவள் கேட்க, பேசாமல் நகர்ந்து விட்டார்.
டீயைக் கலந்து கணவனுக்கும், தனக்கும் எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றாள் அனு.
“நான்தான் அப்பவே சொன்னேன்ல… பாருங்க… இப்ப மறுபடி முகத்தைத் தூக்கி வச்சுகிட்டாங்க… பேச மாட்டீங்கறாங்க…” அனு கவலையுடன் சொல்ல, “நீ அதெல்லாம் கண்டுக்காத அனு… நான் பார்த்துக்கறேன் விடு…” என்றவன் கோப்பையை வாங்கிக் கொண்டான்.
டீயைக் குடித்துவிட்டு அன்னையைத் தேடிச் சென்றான்.
“அம்மா… தம்பி எங்கே காணோம்… என்ன டிபன் மா… பசிக்குது… மது அண்ணன்கிட்ட சொல்லிருக்கேன்… அடுத்த தடவை அம்மாக்களையும் அழைச்சிட்டு ஒரு டூர் போகணும்னு… பிளான் பண்ணறேன்னு சொல்லிருக்கார்…” அவன் பாட்டில் பேசிக் கொண்டிருக்க அவர் பேசவில்லை.
“ஓ… பேச மாட்டிங்களா… ஏன்மா இப்படி இருக்கீங்க…” என்றான் கோபத்துடன்.
“ஏன் வேற எப்படி இருக்கணும்… கஷ்டப்பட்டு உன்னைப் பெத்து வளர்த்தது நானு… உனக்கு உன் அப்பாவோட வேலை கிடைச்சா குடும்பத்தைப் பார்த்துக்குவேன்னு நினைச்சா உனக்கு டூர் போகவே சரியாருக்கு… இப்படி அங்கயும். இங்கயும் போயிட்டு வந்தா கடன் வராமயா இருக்கும்… அப்புறம் காசில்லைன்னு லோன் எடுக்க வேண்டியது…”
“ம்மா… என்ன சொல்லறிங்க… நான் இப்ப டூர் போன அஞ்சாயிரம் பணத்துல தான் எனக்கு லட்சக்கணக்குல கடன் வந்துச்சா… மனசாட்சி இல்லாமப் பேசாதிங்க…” என்றான் பரத்தும் கோபத்துடன்.
“யாருக்குடா மனசாட்சி இல்ல… உனக்கு உன் பொண்டாட்டி, புள்ளை தான கண்ணுக்குத் தெரியுது… நீங்க டூரு போன கோபத்துல சின்னவன் டீப்பாய் கண்ணாடிய அடிச்சு உடைச்சுட்டுப் போயிட்டான்… எல்லாம் எங்க தலைவிதி…” என்று வெடித்தார் அமிர்தவள்ளி.
“தம்பியா இப்படிப் பண்ணான்… அவன் அப்படி இல்லையே… நீங்க ஏதாச்சும் பேசிருப்பீங்க…” என்றான் இவனும் விடாமல்.
“ஆமாடா, நான் சண்டக்காரி பாரு… உனக்கு உன் காரியம் நடந்தாப் போதும்…” என்று வார்த்தையை விட, “ச்சே… இதுக்குதான் அன்னைக்கே தனியாப் போயிடலாம்னு சொன்னேன்… இவ கேட்டா தானே…” என்று புலம்பிக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டான்.
காலை உணவுக்கு அவர்களை யாரும் அழைக்கா விட்டாலும் மேசையில் இருந்த தோசை சட்னியை ஒரு பிளேட்டில் போட்டு மனைவியிடம் நீட்டினான் பரத்.
“அவங்க எப்பவும் இப்படி தான் இருப்பாங்க… அதுக்காக நாம வாழாம இருக்க முடியாது… இந்தா சாப்பிடு…” என்று கொடுக்க பசியில் இருந்தவளும் சாப்பிட்டாள். அவளாகவே வீட்டைப் பெருக்கி துடைத்து, துவைத்து என்று வேலைகளை செய்யவும் செய்தாள். மதியமும் அப்படியே மௌனமூட்டம் தொடர அவர்கள் உண்ட பின்பு இவர்கள் உண்டனர். திட்டினாலும் அவர்களுக்கும் சேர்த்து தான் சமைத்திருந்தார் அமிர்தவள்ளி. அதை செய்யாமல் இருந்தால் மகன் சொன்னது போல தனியே சென்று விடுவானோ என நினைத்தாரோ என்னவோ… ஆனால் பேசாமல் இருந்தார்.
மதியம் வீட்டுக்கு வந்த பரத்தின் தம்பி விளையாடிக் கொண்டிருந்த தன்யாவை எடுத்துக் கொஞ்சிவிட்டு, “எப்ப வந்திங்க…” என்று சாதாரணமாய் நலம் விசாரிக்க அவனிடம் பரத் டீப்பாய் கண்ணாடி பற்றிக் கேட்டான்.
“நீங்க கிளம்பினதுல இருந்து அம்மாவும், மகளும் உங்களைத் திட்டிட்டு, புலம்பிட்டே இருந்தாங்க… அதான், கோபத்துல அப்படிப் பண்ணினேன்…” என்றான் அவன்.
தனக்குக் கிடைக்காத
சந்தோஷத்தை தன் மகனுக்கே
ஆனாலும் ஒத்துக் கொள்ள
மறுக்கிறது சில தா(பே)ய் மனம்…