மாலை நேரத்து சூரியன், அலுவலகம் முடிந்து புதுப் பொண்டாட்டியைக் காணப் போகும் புது மாப்பிள்ளை போல் வேகமாய் விரைந்து கொண்டிருந்தது. அதற்கு இடைஞ்சலாய் மாலை நேரத்து டிராபிக் போல மேகம் குறுக்கே குறுக்கே வந்து கொண்டிருக்க, தனது கனல் சிறகுகளால் அதை விலக்கி மேற்கில் தன் இல்லம் நோக்கி விரைந்து கொண்டிருந்தான் ஆதவன்.
“யாழினி… நில்லு நானும் வரேன்…” பின்னில் கேட்ட தோழியின் குரலைக் கேட்டு திரும்பினாள் யாழினி.
கறுப்போடு களையாய் இருந்த அழகான வட்ட முகம்… நின்று திரும்பியவள் தோழியை நோக்கி சிரிக்க அழகான பல் வரிசை பளீரிட்டது. இரட்டை சடையை ரிப்பன் வைத்து பின்னலிட்டு மடக்கிக் கட்டியிருந்தாள். மெல்லிசான உடம்பை யூனிபார்ம் தழுவி இருக்க, முதுகில் புத்தகப் பை தொங்கிக் கொண்டிருந்தது.
“உன்ன மாதிரி வளைஞ்சு நெளிஞ்சு நடந்திட்டு இருந்தா எப்ப வீடு போயி சேர்றது… சீக்கிரம் வாடி…”
“இவ்ளோ அவசரமா ஸ்கூல் விட்டதும் வீட்டுக்குப் போயி என்னடி பண்ணப் போறோம்… கொஞ்சம் மெதுவாதான் போவமே…” உமா சலித்துக் கொண்டாள்.
“உனக்கென்ன உமா, வீட்டுக்கு ஒரே புள்ள… உன் வீட்டுல நீ வச்சது தான் சட்டம்… எனக்கு அப்படியா… நான் போகும்போது பால்காரண்ணன் வீட்டுல பால் வாங்கிப் போய் கடைல கொடுக்காட்டி என் அம்மா திட்டுமே…”
“சரி, சரி புலம்பாத… நான் வேகமா நடக்கறேன்…” சொல்லிவிட்டு வேகமாய் எட்டெடுத்து வைத்தாள் உமா.
இருவரும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தனர். இன்னும் சில நாளில் முழு ஆண்டுப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். சின்ன வயதில் இருந்தே ஒன்றாய் படிக்கும் தோழிகள்.
“யாழினி… இன்னைக்கு என் வீட்டுக்கு வரியா, படிக்கலாம்…”
“சரிடி, நான் வரேன்…” பால்காரர் வீடு வந்ததும் யாழினி சொல்ல அங்கிருந்து பிரிந்த தெருவில் நுழைந்தாள் உமா.
பாலை வாங்கிக் கொண்டு கையிலிருந்த குட்டி கை கடிகாரத்தைப் பார்த்தவள், “ஆத்தீ… இன்னும் அஞ்சு நிமிஷத்துல நான் கடைக்குப் போகலேன்னா அம்மா திட்டத் தொடங்கிருமே…” என பாலை வாங்கிக் கொண்டு அடுத்த தெருவில் இருந்த தங்கள் டீக்கடையை நோக்கி விரைந்தாள். அவள் நினைத்தபடி வாசலில் காத்திருந்தார் வசந்தா.
“வந்துட்டியா கண்ணம்மா, சீக்கிரம் போயி மேலுக்கு ஊத்திட்டு நல்ல டிரஸ்ஸாப் போட்டுக்க…”
“ஏன்மா, நாம எங்காச்சும் வெளிய போறமா…” குழந்தைத்தனம் மாறாமல் இருந்த மகளின் முகத்தை அன்போடு தடவியவர், “அதெல்லாம் அப்புறம் சொல்லறேன்… அம்மா சொன்னபோல சீக்கிரம் குளிச்சு டிரஸ் மாத்திக்கமா…” எனவும், “சரிம்மா…” என்றவள் மறுபேச்சுப் பேசாமல் பின்னால் இருந்த வீட்டுக்குள் நுழைந்தாள்.
“ஏய் மாலினி, சின்னவ வந்துட்டா பாரு… அவளுக்கு காப்பித் தண்ணி எதுவும் வச்சுக் குடு…” என்று வீட்டுக்குள் குரல் கொடுத்தார் வசந்தா.
“சின்னக்கா, என்ன விசேஷம்… அம்மா எதுக்கு என்னை குளிச்சு புது டிரஸ் போடச் சொல்லுச்சு…”
“அதுவா… உன்னைக் கட்டிட்டுப் போக தேசிங்கு ராஜன் குதிரைல வராகளாம்…” என்று சொல்லியபடி பூவைக் கட்டி எடுத்து வைக்க, “இந்தக்காக்கு என்ன கேட்டாலும் எகத்தாளம் தான்… ஒழுங்கா பதில் சொல்லுதா பாரு…” முனங்கிக் கொண்டே பாத்ரூமுக்குள் நுழைந்தவள் குளித்து, தனக்குப் பிடித்த அரக்கு கலர் தாவணியும் வெந்தயக் கலர் பாவாடையும் அணிந்து கொண்டு, தலையை சீவி நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை வைத்துக் கொண்டு அதற்கு மேல் விபூதி இட்டுக் கொண்டு ஸ்கூல் பாகுடன் அமர்ந்தாள்.
“அம்மா வரதுக்குள்ள கொஞ்சமாச்சும் ஹோம் வொர்க் முடிச்சிருவோம்… நாளைக்கு ரெகார்டு நோட்டை சப்மிட் பண்ணலன்னா அந்த கண்ணாடி வாத்தி கஷாயம் குடிச்ச போல மூஞ்ச வச்சிட்டு கத்துவார்…”.
காப்பியுடன் வந்த மாலினி, “என்னடி, அதுக்குள்ள புஸ்தக மூட்டையைப் பிரிச்சு உக்கார்ந்துட்ட… இதெல்லாம் எடுத்து வச்சிட்டு வா… அப்பா கூப்பிடறாக…” எனவும், “நிறைய எழுதக் குடுத்துருக்காக… அதான் எடுத்து வச்சேன்க்கா… அப்பா, என்ன நேரமா வீட்டுக்கு வந்துட்டாக……” என்றவள் அதை மூடி வைத்துவிட்டு தந்தையைத் தேடி சென்றாள்.
“கண்ணம்மா, வாடா கண்ணு… காபி குடிச்சியா…” கடைக்குட்டி மகளை வாஞ்சையுடன் அருகே அழைத்தார்.
“எல்லாம் நல்ல விஷயம் தான் கண்ணம்மா…” அவர் சொல்லத் தொடங்க உள்ளே வந்த வசந்தா, “என்னங்க, அவுக கிளம்பிட்டாங்களாம்… சின்னவன் போன் பண்ணான்…” என்று சொல்ல நடேசன் பரபரப்பானார்.
“என்ன கண்ணம்மா, தலைல பூ வச்சுக்காம இருக்க… மாலினி, இவ தலைல பூ வச்சுவிடு…” என்று வெளியே செல்ல குழப்பமாய் நின்று கொண்டிருந்தாள் யாழினி.
“என்னடா, நடக்குது இங்க… அப்பாவும், அம்மாவும் யாரோ முதலமைச்சர் வீட்டுக்கு வரப் போற போல பரபரப்பா இருக்காங்க… சரி, வெயிட் பண்ணிப் பார்ப்போம்…” என்றபடி மாலினி தலையில் பூ வைக்க அசையாமல் நின்றாள்.
யாழினியின் உடன் பிறந்தவர்கள் முதலில் மூன்று ஆண்கள் அடுத்து மூன்று பெண்கள் ரூபினி, மாலினி, யாழினி. இவள்தான் கடைக்குட்டி. தந்தை நடராசன் சின்னதாய் ஒரு ஹோட்டல் நடத்தி வந்தார். மூத்த அண்ணன்கள் இருவரும் கல்யாணமாகி அடுத்த ஊர்களில் இருக்க இளைய அண்ணன் குடும்பம் மட்டும் அடுத்த தெருவில் இருந்தது. அவர்தான் ஹோட்டலைப் பார்த்துக் கொள்கிறார்.
ரூபினியை மூத்த அண்ணியின் பெரியப்பா மகனுக்கு கல்யாணம் முடித்திருக்க அவரும் அந்த அண்ணன் வீட்டுக்குப் பக்கத்து தெருவில் குடியிருந்தார். மாலினிக்கும் அடுத்த ஊரில் இருந்த சொந்தகாரப் பையனுக்கு நிச்சமாகி இருக்க கல்யாணத்துக்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது.
அவர்கள் குடும்பத்தில் எல்லாருமே பள்ளிப் படிப்பை மட்டுமே முடித்திருக்க யாழினிக்கு எப்படியாவது கல்லூரிப் படிப்பை முடிக்க வேண்டும் என்று மிகவும் ஆசை. எனவே விருப்பத்தோடு படித்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் சின்ன அண்ணனின் வண்டி வாசலில் வந்து நிற்க உடன் அண்ணியும் அவர்களின் மகன் இரண்டு வயது வசந்தும் உள்ளே வந்தனர்.
மாலினி தங்கையின் தலையில் பூ வைத்துவிட்டு உள்ளே அழைத்துச் சென்று, “இங்கயே இருடி… நான் கூப்பிடவும் வந்தாப் போதும்…” என்றுவிட்டு வெளியே செல்ல, “ஆஹா, ஆளை விடுங்கடா சாமி… ரொம்ப சந்தோசம்…” என்றபடி இவள் மூடி வைத்த ரெகார்டு நோட்டைத் திறந்து எழுதத் தொடங்கினாள். சில நிமிடங்களில் வாசலில் ஏதேதோ வண்டி நிற்கும் சத்தமும், ஹாலில் யார் யாரோ பேசும் சத்தமும் கேட்க அதைப் பற்றி கண்டுகொள்ளாமல் இவள் பாட்டுக்கு எழுதிக் கொண்டிருந்தாள்.
“இந்த உமா கழுதை எழுதி முடிச்சுட்டா பரவால்ல… இல்லேன்னா நாளைக்கு ஸ்கூல்ல வந்து என்னை எழுதித் தர சொல்லுவா…” என யோசித்தபடி எழுதிக் கொண்டிருந்த யாழினி சூதுவாது தெரியாத வெகுளிப் பெண். என்ன மனதில் நினைக்கிறாளோ அதை அப்படியே சொல்லி விடுவாள்.
“கண்ணம்மா… இங்க வா கண்ணு…” புன்னகையுடன் உள்ளே வந்த வசந்தா மகளை அழைக்க, “எதுக்கு மா… எனக்கு நிறைய எழுதறதுக்கு இருக்கு… நீங்களே பார்த்துக்கங்க…” என்று சொல்ல அவர் சிரித்தார்.
“அடியே, நானெல்லாம் எப்பவோ உங்கப்பாவைப் பார்த்து கல்யாணம், முடிஞ்சு தான குழந்தையைப் பெத்துகிட்டோம்… இப்ப உன் கல்யாணத்துக்கு உன்னைப் பார்க்க தான மாப்பிள வீட்டுல வந்திருக்காங்க…” என்றதும் அதிர்ந்து போனாள்.
“என்னம்மா சொல்லறீங்க, எனக்கு கல்யாணமா…”
“ஆமா கண்ணம்மா, அப்பாவும் அம்மாவும் உன் நல்லதுக்கு தான பண்ணுவோம்… நம்மள விட வசதியான நல்ல இடத்து சம்மந்தம்… நம்ம வீட்டுல பொண்ணு இருக்கறது தெரிஞ்சு கேக்கவும் மறுக்கத் தோணல… மாப்பிள்ளைய வந்து பாரு… ராசா கணக்கா இருக்கார்… உனக்கு நிச்சயம் பிடிக்கும்…” என்று சொல்ல அவள் தலையை இட வலமாய் ஆட்டி கண்ணீர் நிறைந்த கண்களுடன் மறுத்தாள்.
“போங்கம்மா, படிக்கிற புள்ளைக்கு கல்யாணத்தப் பண்ணி வைக்குறாங்களாம்… ம்ஹூம், நான் மாட்டேன்… எனக்கு நிறைய படிக்கணும்… ப்ளீஸ்மா, இப்ப இந்த கல்யாணம் வேண்டாம்…” என்றாள் வருத்தத்துடன். அதற்குள் அவள் அண்ணியும், மாலினியும் அங்கே வந்தனர்.
“என்னத்தை, என்ன சொல்லுறா உங்க கண்ணம்மா…”
“என்னத்த சொல்லுவா… இப்ப கல்யாணம் வேண்டாம், படிக்கப் போறேன்னு தான் சொல்லுறா… இவங்க அப்பா மனசுல உள்ள கவல இவளுக்கு எங்க தெரியப் போகுது… முன்ன மாதிரி அவருக்கும் முடியல… பட்டுன்னு ஏதாச்சும் ஆக முன்ன புள்ளைகளை கரை சேர்த்துடனும்னு நினைக்கறாரு.. இவ என்னடான்னா அதைப் புரிஞ்சுக்காம பிரசங்கம் பண்ணிட்டு இருக்கா…” வசந்தா சற்று கடுப்புடன் சொல்ல அன்னையை பாவமாய் ஏறிட்டாள் யாழினி.