ஒரு நிறைவான நன்னாளில் மனோஜ் ஆஷா திருமணம் நடந்தது. ஆஷா கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு அவளை தன்னுடைய மனைவியாக்கி கொண்டான் மனோஜ். அந்த நிமிடத்தில் பூரித்துப் போனாள் ஆஷா.
பெரிய திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக அவர்களின் வரவேற்பு நடந்தது. பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் வந்திருந்தார்கள்.
தன்னிடம் மாப்பிள்ளையைப் பற்றி கேட்டவர்களிடம் “மாப்பிள்ளை கார் ஷோ ரூம் வச்சிருக்கார். என்னோட மருமகளோட அண்ணன் தான். ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்தா பிள்ளைங்க ஒத்துமையா இருப்பாங்கன்னு தான் முடிச்சிட்டோம்”, என்று சொல்லிக் கொண்டிருந்தார் முத்துவேல்.
ஆஷா மனோஜ் திருமணம் முடிந்து இருவரையும் மறுவீட்டுக்கு அழைத்து சென்றிருந்தார்கள். புஷ்பா இருவருக்கும் ஆரத்தி எடுக்க வந்தாள். அதைக் கண்டு சிவானி கண்கள் மின்ன “சிவானி யாரும் எங்களுக்கு ஆரத்தி எடுக்க வேண்டாம். நீயே எடு”, என்றாள் ஆஷா. அதில் முகம் கன்றிப் போனாள் புஷ்பா.
“பாரு டா உன் தங்கச்சி எப்படி பேசுறான்னு?”, என்று அவள் நிர்மலிடம் சொல்லிப் புலம்ப “ஆமா, கெட்ட எண்ணம் பிடிச்ச நீங்க அவங்களுக்கு ஆரத்தி எடுத்தா எப்படி நல்லது நடக்கும்?”, என்று கேட்டு விட்டுச் சென்றான் நிர்மல்.
பிள்ளைகளின் உதாசீனத்தில் முதல் முறையாக கண்களில் கண்ணீர் வந்தது புஷ்பாவுக்கு.
மறு வீட்டின் போது ஆஷாவின் அறைக்குள் புகுந்து கொண்ட மனோஜ் வெளியே வரவே தயங்கினான். யாரையும் அவனுக்கு பார்க்க பிடிக்க வில்லை. அங்கே இருக்கவும் பிடிக்க வில்லை.
அவன் உணர்வுகளை ஆஷாவும் கண்டு கொள்ள வில்லை. ஆஷா சாப்பிட அழைத்ததும் வேறு வழி இல்லாமல் வெளியே சென்றான். மிகப் பெரிய ஹாலில் நீண்ட டைனிங் டேபிள் போடப் பட்டிருந்தது. அதன் இரண்டு பக்கமும் சேர்கள் வரிசை கட்டி இருந்தது. ஆஷா அருகில் இருந்த சேரின் அருகில் சென்றவன் அதை வெளியே இழுத்து போட்டு அமர்ந்தான். .
அவன் இழுத்ததில் சத்தம் அலறியது. அனைவரும் அவனையே பார்க்க சங்கடமாக உணர்ந்தான். வித விதமான உணவு பதார்த்தங்கள் அங்கே குழுமி இருந்தன. ஆனால் அவனுக்கு உண்ணத் தான் மனதில்லை. புஷ்பாவை அவனால் எதிர்க்கொள்ளவே முடியவில்லை. இப்போதெல்லாம் புஷ்பா அவனிடம் எதுவும் பேச வில்லை என்றாலும் அவனால் பழைய விஷயங்களை மறக்க முடியவில்லை. முத்துவேலுக்காக பொறுத்துப் போனான்.
கூடவே தன்னுடைய தங்கையின் புகுந்த வீடாயிற்றே? அதனால் வேறு வழி இல்லாமல் இருந்தான்.
அப்போது அங்கே வந்த நிர்மல் மனோஜ் எதிரில் அமர்ந்து அவனுடன் பேச ஆரம்பித்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது மனோஜ்க்கு.
அப்போது புஷ்பா அவர்களுக்கு பரிமாற ஆரம்பிக்க தன்னுடைய கணவனின் மனம் அறிந்தவள் “அண்ணா நான் வச்சிக்கிறேன்னு சொல்லுங்க”, என்று சொல்லி தன்னுடைய கணவனுக்கு அவளே பரிமாறினாள்.
கலங்கிய கண்களுடன் அங்கிருந்து சென்றாள் புஷ்பா. சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பியதும் தான் நிம்மதியாக மூச்சு விட்டான் மனோஜ்.
“கவலைப் படாதீங்க. இன்னைக்கு மட்டும் தான். இனிமே இங்க வர அவசியம் இருக்காது”, என்று ஆஷா சொல்ல அவளை நன்றியோடு பார்த்தான்.
அன்று இரவு அவர்களின் புது வீட்டில் முதலிரவுக்கான ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சிவானி தான் அவளை மிதமாக அலங்கரித்து அறைக்குள் அனுப்பினாள்.
பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்த மனோஜ் அவள் வரவைக் கண்டதும் எழுந்து நின்றான்.
தயக்கத்துடன் உள்ளே வந்தவளை கண்டு சிரித்தவன் “நீயா டி வெக்கமெல்லாம் படுற? எனக்கு என்னமோ வேற யாரோ வந்திருக்க மாதிரி தோணுது”, என்று வம்பிழுக்க அவனை முறைத்தவள் சகஜமாகி விட்டாள்.
சிறிது சிறிதாக பேசிக் கொண்டே அவளை அவன் நெருங்க அவள் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறந்தது.
ஒரு வித இனிமையான உணர்வு கிளர்ந்து எழ அவள் முகம் எங்கும் முத்து முத்தாக வேர்த்தது. அதைக் கண்டு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
அவள் காதருகே தன்னுடைய உதடுகளால் ஊர்வலம் நடத்தியவன் “பிடிக்கலையா டி?”, என்று கிறக்கமாக கேட்க தவிப்புடன் அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் ஆஷா. அதில் கர்வம் கொண்டவன் அவளை ஆள ஆரம்பித்தான்.
வெகு நாள்களுக்கான காத்திருப்பு அவர்களை சிறிது இளைப்பாறச் செய்ய சந்தோஷமாக அவர்களின் மண வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.
இருவரும் ஹனிமூன் செல்ல ஏற்பாடு செய்திருந்தான் நிர்மல். ஊட்டிக்கு தான் இருவரும் ஹனிமூன் சென்றார்கள். ஜில்லென்ற மலைக் காற்று அவர்கள் முகத்தில் படிந்து ஒரு இதத்தைக் கொடுத்தது.
இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த ஆஷாவின் தோளில் கை போட்டு தன் பக்கம் இழுத்தான் மனோஜ்.
“விடுங்க”, என்று சிணுங்கினாள் ஆஷா.
அவளின் போலியான மறுப்பை கண்டு கொள்ளாமல் அவளின் கை கோர்த்த படி நடக்க ஆரம்பித்தான். அவர்கள் நடந்த பாதையின் இரு புறமும் தேயிலைச் செடிகள் பயிரிடப் பட்டிருந்தன .
அது பயிரிடப் பட்டிருக்கும் அழகை ரசித்தாள் ஆஷா. சுற்றி இருந்த பசுமை கண்களுக்கு குளிர்ச்சியைக் தந்தது.
அவன் கை வளைவில் இருப்பது அவளுக்கு கதகதப்பைத் தந்தது. அவனுடன் திருமணம் நடந்ததே அவளுக்கு இப்போது வரைக்கும் வியப்பு தான் .
இயற்கையை ரசித்து விட்டு திரும்பினார்கள். அவர்கள் தங்கியிருந்த வீடு பசுமையுடன் அழகாக இருந்தது. அடர்ந்த மரங்கள் சுற்றி இருந்தன. அழகான மலர்கள் ரசிக்கும் படியாக இருந்தது.
அறைக்குள் நுழைந்தவளிடம் “குளிருதா டி?”, என்று கேட்டு கண்களை சிமிட்டினான் மனோஜ். அவனுடைய அதிரடியான செய்கையில் முகம் சிவந்தாள் ஆஷா. அவனுடைய செய்கை அவளுக்குள் இதமான இம்ஸையை உண்டு பண்ணியது.
“என்ன அமைதியாகிட்ட?”, என்று கேட்டதும் அவனைப் பார்த்து பதில் சொல்லாமல் வரிசைப் பற்கள் தெரியும் படி சிரித்தாள் ஆஷா.
அவள் புன்னகையில் அவன் கண்கள் மின்னின. “சும்மா மயக்குறடி”, என்று கிறக்கமான குரலில் சொன்னான் மனோஜ்.
போதையுடன் வந்த அவன் குரலில் அவள் தான் தடுமாறிப் போனாள்.
அவன் பேச்சை அடக்கி விட்டு அவனை குளிக்க விரட்டினாள். குளித்து உணவை முடித்து விட்டு கட்டிலில் சரிந்தார்கள்.
அவள் கையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தான் மனோஜ். அவளுடைய மென்மையான கையை அவனுடைய ரோமம் படர்ந்த வலிமையான கை பிடித்திருந்தது. அதைக் கண்டு அவள் மேனி நடுங்கியது. அவன் ஆண்மையில் அவள் அலை பாய்ந்தாள்.
அவள் முகம் நோக்கி குனிந்தான் மனோஜ். அதில் ஆஷா முகம் சிவந்து போனாள். அவள் தளிர் உடல் நடுங்கியது. தன்னுடைய தொடுகையில் மயங்கி நின்றவளின் மென்மையில் தடுமாறியவன் அவள் இதழ்களில் முத்தமிட்டான்.
அவனுடைய நீண்ட முத்தத்தில் அவள் மூச்சு திணறிக் கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் ஒரு மலை முகட்டின் மீதிருந்து அந்த ஊரில் அழகைப் பார்க்கும் போது இருவருக்கும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
இரு கைகளையும் ஒன்றாக வைத்து தேய்த்து தன்னுடைய கன்னத்தில் வைத்து இதமான சூட்டை அனுபவித்தாள் ஆஷா. அவளின் அந்த இயல்பான செய்கையை ரசித்தான் மனோஜ்.
அவளுடைய காதலை எண்ணி அவன் மனம் பூரித்தது. கூடவே அவள் காதல் கிடைத்தது வரம் என்று எண்ணினான். அவன் அமைதியாக இருக்கவும் அவனை திரும்பி பார்த்தாள். அதன் பின் அவன் அவளை சீண்டிக் கொண்டே இருக்க “சும்மா இருக்க மாட்டீங்களா?”, என்று கேட்டே விட்டாள்.
“அடப் போடி, ஹனிமூனுக்கு வந்தவங்க வேற எப்படி இருபாங்களாம்?”, என்று சொன்னவன் தன்னுடைய சால்வைக்குள் அவளை கொண்டு வந்தான்.
“யாராவது பாக்க போறாங்க. கொஞ்ச நேரம் இயற்கையை ரசிங்களேன்”
“உன்னை விட இங்க யாருமே, எதுவுமே என் கண்ணுக்கு அழகா தெரியலை டி”, என்று அவன் சொன்னதில் அவளாகவே அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவனும் அவளை அனைத்துக் கொண்டான்.
அறைக்குச் சென்றதும் படுக்கையில் படுத்து கனத்த கம்பளியை இருவரும் மூடிக் கொண்டார்கள். அது குளிருக்கு இதமாக இருந்தது.
“நாளைக்கு ஊருக்கு போகணும் பாஸ்”, என்று சோகமாக சொன்னாள் ஆஷா. அவளுக்கு இங்கிருந்து செல்லவே பிடிக்க வில்லை.
அடுத்த நாள் “சாயங்காலம் தானே ஊருக்கு போறோம். இங்க ஒரு அருவி இருக்காம். வா பாப்போம்”, என்று அழைத்து சென்றான் மனோஜ்.
அவ்வளவு அழகாக இருந்தது அந்த அருவி. நுரைத்து பொங்கி வழியும் ஆற்றின் நீரை விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள். சுற்றி கிடந்த மூலிகைகளின் வாசம் ரம்மியமாக இருந்தது.
அங்கு கிடந்த பாறையில் அமர்ந்தாள் ஆஷா. அவள் அருகில் அமர்ந்த மனோஜ் அவளை தன்னுடைய தோளோடு சாய்த்துக் கொண்டான். அவனுடைய தொடுகையும் அந்த இடமும் அவளை ஒரு மாய உலகிற்கு அழைத்து சென்றது.
அவன் தோளில் இருந்து இறங்கிய கை அவளுடைய இடுப்பில் பதிந்து அவளுக்கு இம்ஸையைக் கொடுக்க கண் மூடி அவள்
தொடுகையை ரசித்தாள் ஆஷா.
அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் மனோஜ். அவன் சூடான இதழ்கள் அவள் தோள் மீது பதிந்தது. அவளின் காதோரம் அவன் மீசையில் ரோமம் உராய்ந்ததில் அவஸ்தைக்குள்ளானாள் ஆஷா.
அவன் தொடுகையில் அவள் கிளர்வதைக் கண்டு கர்வம் கொண்டான். “ஆஷா”, என்று தாபத்துடன் முணுமுணுத்தவன் அவளின் வசிக்கரத்திலும் அவளின் அளவிட முடியாத காதலிலும் கிறங்கி கிடந்தான்.
அவன் மேல் எழுந்த காதலைத் தாங்க முடியாதவள் “ரூமுக்கு போகலாம்”, என்று சொன்னதும் அவன் உல்லாசமாக சிரித்தான். இவள் என்னுடையவள் என்று எண்ணி உள்ளுக்குள் பூரிப்பு எழுந்தது.
அருவிக் கரையில் சுற்றி இருந்த ஈரக் காற்றில் தனக்குள் தஞ்சமாகியிருந்த ஆஷாவை இன்னும் அதிகமாக காதலித்தான் மனோஜ்.
ஹனிமூன் முடித்து விட்டு ஊருக்கு வந்ததும் அவர்கள் வாழ்க்கை சாதாரணமாக நகர ஆஷாவின் லீவும் முடிந்தது. நாளை அவள் அவனை விட்டுவிட்டு சென்னை செல்ல யோசிக்க அவனுக்கும் அதே கடுப்பு தான். இவ்வளவு படித்தவளை வேலைக்கு போக கூடாது என்று சொல்லவும் அவனுக்கு மனதில்லை. அவள் தன்னுடனே இருக்க வேண்டும் என்ற ஆவலும் வந்தது.
அவளுக்கும் அதே நிலைமை தான். ஆனால் அவளுக்கு வேலையை விட அவனுடன் இருப்பது தான் பிடித்திருந்தது. அதைச் சொன்னால் அவன் திட்டுவான் என்பதால் ஆமைதியாக இருந்தாள்.
அப்போது அங்கே புஷ்பாவும் முத்துவேலும் வந்தார்கள்.
“வாங்க”, என்று துரைப்பாண்டி அவர்களை வரவேற்க மனோஜும் அவர்களை வரவேற்றான்.
அவர்கள் வந்தது புஷ்பா நடத்திக் கொண்டிருந்த பள்ளியை ஆஷா நடத்த வேண்டும் என்று கேட்க தான். புஷ்பா அதை கேட்க தயங்க முத்துவேல் தான் மகளிடம் கேட்டார். ஆஷாவோ மனோஜைப் பார்க்க அவனோ உன் விருப்பம் என்றான்.
“பாப்பா, அம்மா செஞ்ச காரியத்துக்கு ரொம்ப வருத்தப் படுறா பாப்பா. நீயும் இவ்வளவு பிடிவாதமா இருக்க கூடாது. இந்த அப்பாக்காக நீ தான் ஸ்கூலைப் பாத்துக்கணும்”, என்று சொன்ன முத்துவேல் புஷ்பாவிடம் கண்ணைக் காட்ட “நான் பண்ணது எல்லாம் தப்பு தான். பணத் திமிர்ல எல்லாம் செஞ்சிட்டேன். என்னை மன்னிச்சிருங்க மாப்பிள்ளை”, என்று மனோஜை பார்த்து கை எடுத்துக் கும்பிட அவன் அதை எதிர் பார்க்க வில்லை. என்ன சொல்ல என்று தெரியாமல் அவன் தடுமாற “அப்பா, ஸ்கூலை நான் பாத்துக்குறேன்”, என்று சொன்னாள் ஆஷா.
அவளுக்கு தெரியும் மனோஜால் உடனடியாக பழைய விஷயங்களை மறக்க முடியாது என்று. அதனால் அந்த பேச்சை முறிக்கப் பார்த்து பள்ளிப் பொறுப்பை ஏற்க சம்மதித்தாள்.
அது பெற்றோருக்கு நிம்மதியைத் தர “சம்மந்தி சிவானிக்கு ஏழு மாசம் ஆகிருச்சு. வளைகாப்பு செய்யணும். என்னைக்கு வரீங்க?”, என்று பார்வதியிடம் புஷ்பா கேட்க பார்வதிக்கும் புஷ்பாவின் பேச்சு திகைப்பைத் தான் கொடுத்தது. பின் மகள் காரியம் என்பதால் புஷ்பாவிடம் சாதாரணமாக பேசினாள்.
அனைவரும் சேர்ந்து சிவானிக்கு வளைகாப்பு நடத்தினார்கள். அடுத்த இரண்டு மாதத்தில் அவளுக்கு மகன் பிறக்க அவனுக்கு அஸ்வின் என்று பெயர் வைத்தார்கள். அவனை எப்போதும் தூக்கிக் கொண்டே சுற்றினான் மனோஜ்.
தங்களின் பேரனின் வருகையால் புஷ்பா மற்றும் முத்துவேல் கூட மிகவும் சந்தோஷப் பட்டனர்.
அதற்கடுத்த மூன்று மாதத்தில் ஆஷா கரு உண்டாக அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினான் மனோஜ். புஷ்பாவும் அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள். புஷ்பா மனம் மாறியதே அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.
ஆஷாவின் வளைகாப்பு நிகழ்ச்சியில் திவ்யா முகம் வாடி சுற்றிக் கொண்டிருக்க அதைக் கண்ட ஆஷா “சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத திவ்யா. நான் பாக்குற டாக்டர் அட்ரஸ் தரேன். அவரை போய் பாரு. கண்டிப்பா நல்லது நடக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சம் வெயிட் போட்டுருப்ப. அதனால தான் பிராப்லமா இருக்கும்”, என்று சொல்ல முதல் முறை ஆஷாவின் பேச்சைக் கேட்டு அந்த டாக்டரைக் காணச் சென்றாள்.
“அதிக வெயிட் தான் மா காரணம். கொஞ்சம் குறைங்க. எல்லாம் சரியா போகும்”, என்று டாக்டர் சொல்ல ஆஷாவை திவ்யாவுக்கும் பிடித்து விட்டது.
சில மாதங்கள் கழித்து ஆஷாவுக்கு பெண் குழந்தை பிறக்க அவளுக்கு மனோப்பிரியா என்று பெயர் வைத்தார்கள்.
வாழ்க்கை மனோஜுக்கும் ஆஷாவுக்கும் வண்ணமயமானதாக சென்றது. அவள் பள்ளிப் பணியில் ஈடு பட அவனோ கார் கம்பெனி வைப்பதில் பிஸி ஆகி விட்டான். கூடவே ஜெகன் மற்றும் ராமுக்கு பெண் தேடும் பணியும் தீவிரமாக நடந்தது.
நிர்மல் சென்னையில் தன்னுடைய குடும்பத்துடன் செட்டில் ஆக முத்துவேலும் புஷ்பாவும் மகனுடன் வசிக்க சென்று விட்டார்கள்.
என்ன தான் பள்ளியை பார்த்துக் கொண்டாலும் தன்னுடைய தாய் செய்த தவறைச் செய்யாத ஆஷா மனோபிரியாவை நல்ல ஒரு தாயாக, வழிகாட்டியாக, தோழமையோடு வளர்த்தாள். அதில் மனோஜின் பங்கும் உண்டு. சாயங்காலம் ஆனதும் மனைவியையும் மகளையும் தேடி ஓடி வந்து விடுவான். வாழ்க்கை அழகாக சென்றது ஆஷா மற்றும் மனோஜுக்கு.