“நானும் ஆஷாவும் நினைச்சோம். அந்த சின்ன வயசுலே அடி ஆளை வச்சு அவனுக்கு ஆக்ஸிடெண்ட் பண்ணுணவங்க தானே நீங்க? பாத்தியா ஆஷா, நாம நினைச்ச மாதிரியே இந்த அம்மா தான் மனோஜை மிரட்டிருக்காங்க”, என்றான் நிர்மல்.
ஆஷா தவிப்புடன் மனோஜைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உங்க அம்மா, அண்ணனை ஆஷா கூட பேசினா முதல்ல என்னைக் கொன்னுருவேன்னு மிரட்டிருக்காங்க. அதுக்கப்புறம் அவனை படிக்க கூட விடலை. அப்படி படிச்சா என்னை என்னை… என்னை நாலு பேரை வச்சு…..ரேப்….”, என்று சொல்ல முடியாமல் சிவானி திக்கித் திணற “சிவானி”, என்று அதிர்ந்து போய் அழைத்தான் நிர்மல்.
அவனுக்குமே இந்த விஷயம் தெரியாதே. மனோஜ் அவன் காதலை மறைப்பதற்கு புஷ்பா தான் காரணம் என்று தெரிந்தாலும் இப்படி கீழ்தனமாக புஷ்பா மிரட்டியிருப்பாள் என்று அவன் யோசிக்க வில்லை.
“உண்மையை தான் சொல்றேன் நிர்மல். உங்க அம்மா என்னை என்ன செய்ய போறேன்னு சொல்லிருக்காங்க தெரியுமா? நாலு பேரை வச்சு ரேப் பண்ணி….”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கியது. தன் மேல் உயிரையே வைத்திருக்கும் அண்ணன் அந்த வார்த்தைகளைக் கேட்டு எவ்வளவு துடிச்சிருப்பான் என்று நினைத்து கண்களில் கண்ணீர் வந்தது.
“சிவானி வேண்டாம் டா. அமைதியா இரு”, என்று அவளை அமைதிப் படுத்த முயன்றான் நிர்மல்.
“எப்படிங்க அமைதியா இருக்க முடியும்? இப்ப என்னை அப்படி செய்வாங்களா? எங்க செய்ய சொல்லுங்க பாப்போம். இப்ப நான் அவங்க மருமகள். இப்பவும் அதே மாதிரி செய்வாங்களான்னு கேட்டு சொல்லுங்க. இங்க பாருங்க அத்தை. நீங்க இப்படி எல்லாம் பேசினதுக்கு பதிலடி கொடுக்க தான் நான் விடாப் பிடியா உங்க பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்ப அப்படி செய்வீங்களா? சொல்லுங்க சொல்லுங்க”, என்று சிவானி கத்தவும் புஷ்பா பதில் சொல்ல முடியாமல் நின்றாள்.
“மனோஜ் கண்ணுல காதலை பாத்தாலும் அவங்க என்னை பிடிக்கலைன்னு சொல்லுறப்ப அதுக்கு நீ தான் காரணமா இருக்கும்னு எனக்குள்ள ஒரு டவுட் இருந்துச்சு மா. ஆனா நீ இப்படி சொல்லிருப்பன்னு நான் நினைக்கவே இல்லை”, என்று அருவருப்புடன் சொன்னாள் ஆஷா.
“நம்ம வீட்லயும் ஒரு பொண்ணு இருக்கே மா. கொண்ணுருவேன்னு மிரட்டுறதைக் கூட கோபத்துல சொல்றேன்னு நினைச்சிக்கலாம். ஆனா இப்படி கேவலமா பேசிருக்கியே? உனக்கும் ஒரு பொண்ணு இருக்கு தானே? அது ஏன் உனக்கு மறந்து போச்சு?”, என்று கேட்டான் நிர்மல்.
முத்துவேலுக்கும் திகைப்பு தான். அவரும் புஷ்பா கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக தான் எண்ணிக் கொண்டிருந்தார். இப்படி என்று அவர் எதிர் பார்க்கவில்லை.
புஷ்பாவை முறைத்து பார்த்தார். அனைவரும் புஷ்பாவை குறை சொல்வது போல சொல்லவும் “நான் அப்படி எல்லாம் பண்ணணும்னு நினைக்கலை. சும்மா மிரட்ட தான் அப்படிச் சொன்னேன்”, என்று பின் வாங்கினாள்.
அதைக் கேட்ட மனோஜ் அவளை வெறுப்பாக நோக்கினான்.
“அப்பா, இப்ப நீங்க தான் நல்ல முடிவா எடுக்கணும். ஆஷாவோட வாழ்க்கையை பத்தி மட்டும் யோசிச்சு முடிவு சொல்லுங்க. நீங்க பாக்குற மாப்பிள்ளைக்கு இவ கழுத்தை நீட்டுவான்னு நீங்க நினைக்கிறீங்களா? கண்டிப்பா கிடையாது. வேற ஒருத்தரை அவ எப்பவும் நினைக்க மாட்டா. மனோஜை வெளித் தோற்றத்தை வச்சு எடை போடாதீங்கப்பா. அவன் ரொம்ப நல்லவன். வெளி வேஷமா அவன் ஒரு மெக்கானிக்கா தெரியலாம். ஆனா நாளைக்கே அவன் நல்ல நிலைமைக்கு வருவான். அவன் படிக்கலைன்னு வச்சிக்கிட்டாலும் அந்த படிப்பை படிக்க விடாம செஞ்சது அம்மா தானேப்பா. எல்லாருக்கும் எப்படி ஹெல்ப் பண்ணுவான் தெரியுமா? அவனுக்குன்னு அவன் எதையுமே ஆசைப் பட்டது இல்லை. ஆஷாவும் அவன் கூட இருந்தா தான் சந்தோஷப் படுவா. கல்யாணம் பண்ணி வச்சிறலாம்ப்பா”, என்றான் நிர்மல்.
“ஆமா மாமா. எங்க அண்ணான்னு சொல்லலை. உங்க மகளுக்காக பாருங்க. ஆஷா சரியா சாப்பிடுறது இல்லை, தூங்குறது இல்லை. எப்படி இருக்க வேண்டியவ எப்படி இருக்கான்னு பாருங்க. உங்க பிள்ளைகளுக்காக தானே இவ்வளவு சொத்து சேத்து வைக்கீங்க? அவங்க நல்ல வாழணுமா? இல்லை அமைதி இல்லாம தவிக்கணுமா?”, என்று கேட்டாள் சிவானி.
கலைந்த தலையுடன் முரட்டு ஜீன்சும் நிமிர்ந்த நடையுடன் இருந்தான் மனோஜ். ஆள் அழகனாக இருந்தாலும் அவனுடைய வெளித்தோற்றம் அவனை மெக்கானிக் என்று தானே சொல்லும் என்று யோசித்தார் முத்துவேல்.
எந்த அளவு டேமெஜான கார் வந்தாலும் அவனால் சரி செய்ய முடியும் என்ற நல்ல பெயர் அவனுக்கு இருக்கிறது என்று அவருக்கும் தெரியும். இருந்தாலும் அவருக்கு அவனை முழுமனதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மனோஜுக்கு தான் அங்கே முள் மேல் நிற்பது போன்ற நிலை. இதற்கெல்லாம் அவசியமே இல்லை தான். “என் கூட வந்துரு ஆஷா”, என்று ஒரு வார்த்தை அவன் சொன்னால் ஆஷா அவன் பின்னே வந்து விடுவாள். ஆனால் அது அவளுக்கு கௌரவத்தை தாராதே.
நிர்மல் எப்படி சிவானியை கௌரவப் படுத்தி அனைவரின் ஆசீர்வாதத்தோடு மணந்தானோ அதே கௌரவத்தை அவனுடைய தங்கைக்கும் கொடுக்க வேண்டியது மனோஜின் கடமை அல்லவா? அதனால் முத்துவேலின் முடிவுக்காக பொறுமையாக காத்து நின்றான்.
“அப்பா, நீங்க என்ன நினைச்சாலும் சரி, எனக்கு மனோஜ் தான் வேணும். எனக்கு நீங்க சம்பாதிச்சி வச்சிருக்குற எந்த சொத்தும் பணமும் வேண்டாம். நான் இப்பவே மனோஜ் கூட போறேன்”, என்று சொல்லி ஆஷா அப்படியே கிளம்ப பார்த்தாள்.
தன்னுடைய தந்தை அப்போதும் வாயைத் திறக்காமல் இருக்கவும் “இரு ஆஷா, உனக்கு அம்மா அப்பா சரி இல்லைன்னாலும் அண்ணன் நான் இருக்கேன். நமக்கு எதுவுமே வேண்டாம். பணம் கௌரவம்னு சொல்லி அதை இவங்களே கட்டி அழட்டும். நான் உனக்கு ஜாம் ஜாம்னு கல்யாணம் செஞ்சு வைக்கிறேன். சிவானி கிளம்பு. நமக்கும் இந்த வீடு வேண்டாம். ஒரு வேளை எங்க அம்மா நிஜமாவே உன்னை சொன்னது மாதிரியே செஞ்சிட்டா என்ன செய்றது?”, என்று கேட்டான் நிர்மல்.
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த புஷ்பா இதற்கெல்லாம் காரணமான மனோஜைத் தான் முறைத்தாள்.
அனைவரும் அங்கே இருந்து கிளம்ப பார்க்க “எல்லாரும் நில்லுங்க. யாரும் எங்கயும் போக வேண்டாம். நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன். மனோஜ் உங்க வீட்ல இருந்து அம்மா அப்பாவை கூட்டிட்டு வா பா. முறைப் படி பேசி முடிக்கலாம்”, என்று முத்துவேல் சொன்னதும் “நான் ஒத்துக்க மாட்டேன்”, என்று கத்தினாள் புஷ்பா.
அடுத்த நொடி அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் முத்துவேல். அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க அப்படியே அடங்கிப் போனாள் புஷ்பா.
“இந்த கல்யாணத்துக்கு எனக்கு முழு சம்மதம். என் பொண்டாட்டியா இருந்தா நீ எதிர்த்து எதுவும் பேசக் கூடாது. செய்யவும் கூடாது. உள்ள வா”, என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்று விட்டார் முத்துவேல். கன்னத்தில் கை வைத்த படியே அவர் பின்னால் சென்ற புஷ்பா யாரையும் திரும்பி பார்க்க வில்லை.
நிர்மல் மனோஜை சந்தோஷமாக அணைத்துக் கொள்ள ஆஷாவும் சிவானியின் தோள் சாய்ந்தாள்.
பின் ஆஷாவுக்கும் மனோஜுக்கும் தனிமை கொடுத்து அவர்கள் விலகிச் செல்ல “என்னை மன்னிச்சிருங்க பாஸ். உங்க மனநிலை புரியாம பல நேரம் நடந்துக்கிட்டேன். என்னால தான் உங்களுக்கு நிறைய மன வருத்தம்”, என்றாள் ஆஷா.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை ஆஷா. உன்னோட அம்மா அப்பாவை தப்பு சொல்லக் கூடாது. அவங்க நினைக்கிறது சரி தான். நல்ல இடத்துல பொண்ணு வாழணும்னு தானே எல்லா பெத்தவங்களும் நினைப்பாங்க. ஆனா என்ன? உங்க அம்மா கொஞ்சம் ஓவரா போயிட்டாங்க. அது கொஞ்சம் மனசை உறுத்த தான் செய்யும். ஆனா உன் மேல எனக்கு காதல் இருக்கு ஆஷா. அதை நீ நம்புற தானே?”, என்று கேட்டான் மனோஜ்.
“நான் நம்புறேன்”
“சரி நான் இப்ப கிளம்புறேன். அம்மா அப்பா கிட்ட பேசிட்டு சொல்றேன்”, என்று சொல்லி விட்டு மனோஜ் கிளம்பிச் சென்றான்.
பார்வதி மற்றும் துரைப்பாண்டிக்கு மகனின் மனதை அறிந்து சந்தோஷம் தான். ஏனென்றால் அவர்களுக்கு ஆஷாவைப் பிடித்திருந்ததே. ஆனால் புஷ்பாவைப் நினைத்து தான் மனம் எட்டிக்காயாக கசந்தது. அவர்கள் மனதை சிவானி தான் பேசியே மாற்றினாள்.
மனோஜ் நிச்சயதார்த்தத்துக்கு நித்யா சந்தோஷமாக ஓடி வந்தாள். போன வாரம் தான் செந்திலுக்கு ஒரு பழைய காரை வாங்கிக் கொடுத்திருந்தான் மனோஜ்.
திலீபன் மற்றும் திவ்யாவுக்கு விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சி என்றாலும் பெரிதாக வேற எதுவும் யோசிக்க வில்லை. பட்டும் படாமலும் இருந்து கொண்டார்கள். ஆனால் கல்யாணம் முடிந்து மனோஜ் இதே வீட்டில் இருப்பானோ என்று கவலை பிறந்தது இருவருக்கும்.
திருமணம் முடிவானதில் ஆஷா தான் சந்தோசத்தில் குதித்தாள். அதைக் கண்டு அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது. புஷ்பாவிடம் முத்துவேலைத் தவிர வேறு யாரும் பேச வில்லை. அதிலே அவள் தப்பை உணர்ந்து ஒடுங்கிப் போனாள்.
ஒரு நல்ல நாளில் ஆஷா வீட்டில் வைத்து அனைவரும் அவர்கள் திருமணத்தை பற்றி பேசி முடித்து நாள் குறிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அப்போது மனோஜோ “மூணு வருஷம் கழிச்சு தான் எங்களுக்கு கல்யாணம் நடக்கணும்”, என்றான்.
அனைவரும் அவனை அதிர்ச்சியாக பார்க்க ஆஷாவோ கொலை வெறியாக முறைத்தாள். சிவானியும் நிர்மலும் கூட அவனை முறைத்தார்கள்.
“உனக்கு என்ன பைத்தியமாண்ணா?”, என்று ஜெகன் அவன் காதில் கேட்டே விட்டான்.
“நான் வீடு கட்டிட்டு தான் கல்யாணம் பண்ணலாம்னு நினைக்கிறேன். அதனால தான். எங்க வாழ்க்கையை புது வீட்ல தான் ஆரம்பிக்கணும்”, என்று சொன்னதும் அனைவரும் அவன் கருத்தை ஏற்றுக் கொள்ள ஆஷா அவன் தனியாக மாட்டிய போது ஒரு பிடி பிடித்து விட்டாள்.
“உன்னை வச்சு ஷெட்லயா டி குடும்பம் நடத்த முடியும்? இல்லை என் தம்பி குடும்பம் இருக்குற இடத்துல போய் நம்மளை இருக்க
சொல்றியா? ஒரு தடவை வீட்டை விட்டு வந்த நான் திருப்பியும் அங்க போனா என்னோட மரியாதை என்ன ஆகும்? சும்மா தான் மூணு வருஷம்னு சொன்னேன்? கார் நல்ல சேல்ஸ் ஆச்சுன்னா சீக்கிரமே வீடு கட்டி நம்ம கல்யாணத்தை நடத்திறலாம் டி”, என்று சொல்லி அவளை சமாதானப் படுத்தினான்.
“சரி நீங்க சொன்னதுக்கு நான் சம்மதிக்கிறேன். ஆனா நான் கொடுக்குற பணத்தையும் வாங்கிக்கணும். நான் சம்பாதிக்கிறது நமக்கு தானே?”, என்று கேட்டாள் ஆஷா.
ஒரு நொடி யோசித்தவன் “சரி வாங்கிக்கிறேன். ஆனா கடனா தான் வாங்கிப்பேன்”, என்று சொன்னதும் அவனை முறைத்து விட்டு சம்மதம் சொன்னாள்.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. சென்னையில் இருந்த வீட்டை காலி பண்ணி மனோஜ் ஆஷா இருந்த வீட்டுக்கு பொருளை எல்லாம் மாற்றி விட்டார்கள். தேவையில்லாத பொருள்கள் ஊருக்கே கொண்டு வரப் பட்டது.
ஆஷா, சிவானி, நிர்மல் மூவரும் ஒரே வீட்டில் இருந்தே வேலைக்கு சென்று வந்தார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனோஜ் சென்னை சென்று விடுவான்.
இதற்கு இடையில் ஜெயச்சந்திரனுக்கும் திருமணம் நடந்து அவன் முத்துவேல் இருக்கும் கட்சியில் இளைஞர் அணித் தலைவனாக தேர்ந்தெடுக்கப் பட்டான். அதற்கடுத்து அவன் தான் தலைவன் என்ற பேச்சு அடி பட்டதில் வாசு தேவனுக்கு அதிக சந்தோஷம்.
செந்திலும் நன்றாக உழைத்துக் கொண்டிருந்தான். அதில் நித்யாவுக்கு நிம்மதி. திவ்யா திலீபன் வாழ்க்கையில் தான் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இன்னும் திவ்யாவுக்கு குழந்தை பிறக்காதது அவர்களை வெகுவாக வாட்டியது.
மனோஜ் சொன்ன படி ஒண்ணறை வருசத்திலே வீட்டைக் கட்டி விட்டான். அதற்கு ஆஷா கொடுத்த பணத்தையும் வாங்கிக் கொண்டான். கூடவே பார்வதியையும் துரைப்பாண்டியையும் தன்னுடன் தான் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டான்.
திவ்யாவுக்கும் தனக்கும் ஒத்துப் போகவில்லை என்றதும் பார்வதி மனோஜுடனே இருக்க சம்மதித்தாள். வீட்டுப் கிரகப் பிரவேசத்துக்கு மனோஜே நேரில் சென்று முத்துவேலை அழைத்தான். அவரும் இந்த முறை அவனை நல்ல படியாகவே வரவேற்றார். புஷ்பா தான் அனைத்திலும் இருந்து ஒதுங்கியே இருந்தாள்.
வீட்டு கிரகப் பிரவேசம் அன்றே ஆஷா மனோஜ் திருமணத்துக்கு நாள் குறிக்கப் பட்டது. அப்போது சிவானி ஐந்து மாதக் கருவை தன்னுடைய வயிற்றில் சுமந்து கொண்டிருந்தாள். நிர்மல் மற்றும் சிவானியின் சந்தோஷமான வாழ்க்கை அவர்கள் முகத்தில் தெரிந்தது.
திவ்யா நித்யாவை மதித்ததே கிடையாது. ஆனால் ஆஷா நித்யாவை அண்ணி அண்ணி என்று அழைத்து பாசத்தை பொழிந்தாள். அதில் நித்யாவுக்கு அதிகப் பெருமை. அதைப் பார்த்த திவ்யாவுக்கு தான் வயிறு எரிந்தது.
திவ்யாவின் அம்மா வேறு “மனோஜ்க்கு உன்னை கட்டி வைக்கிறோம்னு சொன்னோம். எங்க பேச்சைக் கேட்டியா? இப்ப பாத்தியா அவனை? கார் வீடுன்னு எப்படி இருக்கான்? ஆனா திலீபன் இன்னும் அப்படியே இருக்கான்?”, என்று சொல்லிச் சொல்ல திவ்யாவுக்கு உள்ளுக்குள் எரிந்தது. போதாத குறைக்கு சிவானி, நித்யா, பார்வதி என்று அனைவரும் ஆஷாவை அதிகமாக தாங்க அதை பார்த்து பொருமிக் கொண்டிருந்தாள்.
அந்த பொருமல் சிறிது சிறிதாக திலீபனிடம் கோபமாக வெளிப்பட அவன் ஒரு முறை நேரடியாகவே “என்ன, என்னமோ என்னை இளக்காரமா நினைக்கிற மாதிரி இருக்கு. நான் சம்பாதிக்கிற அத்தனையும் சேத்து வைக்காம செலவு செஞ்சது நீ தானே? செலவு செய்யும் போது பல்லை இளிச்சிட்டு பண்ணத் தெரியுது. இப்ப ஒண்ணும் இல்லைன்னு தோணுதா? உங்க அம்மா சொன்னதை நானும் கேட்டேன். அப்ப இருந்து நீ ஒரு மாதிரி தான் இருக்க. எங்க அண்ணன் படிக்கலைன்னு என்னை கட்டிக்கிட்ட சுயநலப் பிறவி தானே நீ? இப்ப என்ன என்னைக் கட்டிக்கிட்டது வருத்தமா இருக்கா?”, என்று கேட்க அவள் ஆடிப் போனாள்.
இப்படி அவன் நேரடியாக கேட்பான் என்று அவள் எதிர் பார்க்கவே இல்லை. என்ன சொல்ல என்று தெரியாமல் அவள் தடுமாற அவளிடம் அதன் பின்பு பேசுவதைக் குறைத்தான் திலீபன்.
தன் வினைத் தன்னைச் சுடும் என்று காலம் கடந்து யோசித்துக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள் திவ்யா.