“ம்ம்… நீனு சொல்லுறதும் சரிதான் தாயி….. நல்லா வெளைச்சல் குடுக்கற மண்ணுல கட்டடத்தை கட்டினா சரியா வருமா….. அதிகப் பணம் கெடைக்குதுன்னு எல்லாரும் யோசிக்காம நெலத்த வித்துப் போடுறாக…..” என்று புலம்பினார் சுந்தரேசன்.
“அது மட்டும் இல்ல மாமா….. இதுல வேற பிரச்சனையும் இருக்கு…..” என்றான் மதியழகன்.
“என்ன பிரச்சன மாப்புள……. விவசாய நிலத்த விக்கறதே பிரச்சன தானே……”
“ம்ம்…… குளிர்பான தொழிற்சாலை தொடங்கணும்னா அதுக்கு நிறைய வேலை இருக்கு…. அவங்க உபயோகத்துக்கு வேண்டிய தண்ணியை நம்ம நீர்நிலைலயும், பூமிக்கடியில் ஆழ்துளைக் கிணறு மூலமா தண்ணிய எடுப்பாங்க….. அப்படிப் பண்ணினா, நம்ம கிணறு, குளம், ஏரியில இருக்குற தண்ணி அளவு குறையத் தொடங்கும்….. விவசாயத்துக்கான தண்ணியும், குடிநீரும் குறையும்…. விளைச்சலும் இருக்காது….. இது ரொம்பப் பெரிய பிரச்சனையாகும் மாமா…..” என்றான் மதி யோசனையுடன்.
அதைக் கேட்டு அதிர்ந்து போன சுந்தரேசன், “அச்சோ…. நீங்க சொல்லும்போதே கதிகலங்குதே மாப்புள… இதெல்லாம் நம்ம ஊர்மக்கள் யோசிச்ச போலவே தெரியலயே…… இதுக்கு தான் படிச்ச புள்ளை வேணும்னு சொல்லுறது… இதுக்கு என்ன பண்ணலாம்னு நீங்க தான் ஒரு யோசனை சொல்லணும் மாப்புள……”
“ம்ம்… முதல்ல ஊர்ல எல்லாரையும் கூட்டி இதப் பத்தி பேசுவோம்…. அப்புறம் ஒரு முடிவுக்கு வருவோம் மாமா….” என்றான் அவன்.
“ம்ம்… சரி மாப்பிள….. நானும் உங்க அப்பாகிட்ட இதப் பத்தி பேசுதேன்…… சீக்கிரமே இதுக்கு ஒரு முடிவெடுத்தாகணும்……” என்றார் அவர்.
அதற்குப் பின் அவர்கள் அதைப் பற்றி மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். மாலையில் காப்பியும் குடித்துவிட்டு இருவரும் வீட்டுக்குக் கிளம்பினர்.
வீடு திரும்புகையில் யோசனையுடனே வண்டி ஓட்டிய கணவனின் தோளில் கை வைத்த கயல்விழி, “அத்தான்…… விளை நிலத்துல இப்படி தொழிற்சாலை கட்டறதுக்கு யாரு கிட்டயும் அனுமதி கேக்க வேண்டாமா…..” என்றாள்.
“வாங்கணும் மீனும்மா……. ஏதாவது பதவில இருக்குற ஆளுங்க மூலமா பணத்தால அடிச்சு அனுமதியெல்லாம் ஈசியா வாங்கிருப்பாங்க……”
“அய்யோ…. இதுல அரசியல்வாதிங்க தலையீடு எல்லாம் இருக்குமா….” என்றாள் அவள் அதிர்ச்சியுடன்.
“ம்ம்… இந்த இடத்தை வாங்குறது ஏதாவது அரசியல்வாதியோட பினாமியா கூட இருக்கலாம்….. அதையும் சொல்ல முடியாது….. முதல்ல இவுங்க யாரு என்னன்னு விசாரிக்கணும்……. அதுக்கு முன்னாடி ஊரக் கூட்டி இதுல வர்ற பாதகத்தைப் பத்தி எடுத்துச் சொல்லனும்…. நம்ம ஊரு ஆளுங்க, காசு அதிகம் வருதேன்னு விவசாய நிலத்தைக் குடுக்கவும் யோசிக்க மாட்டாக…..” என்றான் அவன்.
“ம்ம்…. நீங்க சொல்லுறதெல்லாம் கேட்டா இது ரொம்பப் பெரிய பிரச்சனையாதான் இருக்கும்னு எனக்குத் தோணுது அத்தான்…..” என்றாள் அவள் குழப்பத்துடன்.
“ம்ம்…. பெரிய பிரச்சனை தான்…. இதை எப்படி இத்தன நாளா யாரும் கவனிக்காம, யோசிக்காம இருக்காங்கனு தான் எனக்குப் புரியல…..”
“இத்தன விவரமா இங்கிருக்குறவகளுக்கு தெரிஞ்சிருக்காது அத்தான்…. விவசாயிகளுக்கு உழைப்புக்கான ஊதியம் சரியா கெடைக்கறதில்ல….. இல்லன்னா மாமாவே எடத்தக் கொடுக்க சம்மதிச்சிருப்பாரா…” என்றாள் அவள்.
“ம்ம்…. அந்தாளு தானே…. காசு கிடைக்கும்னா என்னையே வேணும்னாலும் வித்திருவார்….. எடத்தைக் கொடுக்கவா யோசிக்கப் போறாரு….” என்றவனின் வார்த்தையில் கோபம் தெறித்தது.
“அ…. அத்தான்….. இப்படில்லாம் பேசாதிய…. மாமா இப்போ முன்னப் போல இல்ல…. பழசெல்லாம் நினைச்சு ரொம்ப வருத்தப்படுறாக….. பணம் வந்து அவரு வாழ்க்கையவே மாத்திப் போடுச்சுன்னு எங்கிட்ட கூட சொல்லி வருத்தப்பட்டாக…. தெரியுமா….” என்றாள் அவள் வருத்ததுடன்.
“அந்தாளு மூஞ்சியப் பார்த்தாலே எனக்கு ஆத்திரமா வருது மீனும்மா…… அதான் உன்னையும் கூட்டிட்டு சென்னை போகலாம்னு யோசிக்குறேன்…. கொஞ்சம் மாறி நிக்கறது நமக்கும் நல்லது தான…..”
“அதுக்கெல்லாம் அத்த சம்மதிப்பாகளா….. நம்மளை தனியா போக விடுவாகளா…. எம்புட்டு நாள் தான் மாமா கூடப் பேசாம இருக்கப் போறிய…..” என்றாள் அவள்.
“நாம சென்னை போனா தான் சந்தோஷமா இருப்போம்னு சொன்னா அம்மா நிச்சயமா சம்மதிப்பாக…… மீனும்மா……. காலம் தான் அவர் மேல எனக்கு வந்த வெறுப்பை மாத்தணும்….. அப்புறம் அவர்கிட்டப் பேசறதா வேண்டாமான்னு முடிவு பண்ணுதேன்…..” என்றான் அவன்.
அதற்குமேல் அவனை வற்புறுத்த முடியாமல் அமைதியானாள் அவள். அவன் மனதும் பல குழப்பங்களை சுமந்து கொண்டிருக்க அமைதியாய் வண்டியை வீட்டை நோக்கி விட்டான். அவனை சகஜமாக்க நினைத்தவள் சிறிது நேரம் கழித்து அவனை அழைத்தாள்.
“அத்தான்…….”
“ம்ம்ம்… சொல்லு மீனுக்குட்டி……”
“உங்களோட பைக்ல உக்கார்ந்து வரும்போது எனக்கு ஒரு பாட்டு நினைவு வருது…..”
“என்ன பாட்டுலே…..”
“பார்த்த முதல் நாளே…. உன்னைப் பார்த்த முதல் நாளேங்கிற பாட்டுல கமல் சாரு பைக்கை ஓட்டிட்டு வருவார்ல…. அது போலத் தோணுது…..” என்றாள் சிரிப்புடன்.
“ஹஹா……” என்று சிரித்தவன், “என்ன வச்சுக் காமெடி பண்ணுறியாலே….. உனக்கு ஷூட்டிங், சினிமால்லாம் ரொம்பப் பிடிக்கும்னு உன்னோட அப்பத்தா சொல்லுச்சு…. அதுக்காக இப்படியா என்ன வச்சு காமெடி பண்ணுவ…..” என்றவன் சிரித்துக் கொண்டிருக்க அவளோ மனதுக்குள், “அடச்சே….. இந்த அப்பத்தா இவரு கிட்டயும் எனக்கு பல்பு வாங்கிக் குடுத்திருச்சா…. இந்தப் பேச்சிக் கெழவியோட பேச்ச முதல்ல நிறுத்தோணும்…..” என்று மனதுக்குள் பேச்சிப் பாட்டியை அர்ச்சித்துக் கொண்டிருந்தாள் அவள்.
அடுத்த நாள் முழுதும் அவன் அந்த குளிர்பான தொழிற்சாலை பற்றி இணையத்திலும் தெரிந்தவர்களிடமும் விசாரித்துக் கொண்டிருக்க அவனுக்கு பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. அவனது தந்தைக்கு அன்னை மூலம் விஷயத்தை தெரிவித்தவன் ஊரைக் கூட்டவும் ஏற்பாடு செய்திருந்தான்.
அடுத்த நாள் ஊரே அந்தப் பெரிய அரச மரத்தடியின் கீழே கூடியிருக்க, ஊர்த்தலைவர் என்ற முறையில் முத்துப்பாண்டியும் சுந்தரேசனும் மதி தெரிவித்த விஷயங்களை எல்லாருக்கும் தெரிவித்தனர். அதைக் கேட்ட ஆண்களும், பெண்களும் அதிர்ச்சியுடன் அவர்களுக்குள் சலசலத்துக் கொண்டிருக்க, கயல் அங்கு அமைதியாய் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்கள் சொன்னதைக் கேட்ட மணிமாறன், மதியழகனிடம் வந்தான்.
“மதி….. இதெல்லாம் நிசமா…. இங்க தொழிற்சாலை வரதுல இத்தன ஆபத்து இருக்கா…… கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா….” எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு மதியழகனிடம் வந்து பேசினான் அவன்.
“மாறன்….. நீங்கள்ளாம் இங்க இருந்தும் இந்த விஷயத்தை யாருமே எப்படிக் கண்டுக்காம விட்டீங்கன்னு எனக்குத் தெரியல….. இதுல இன்னும் என்னெல்லாம் பிரச்சன வரப் போகுதுன்னு தெளிவா சொல்லுதேன்….” என்றவன் விளக்கத் தொடங்கினான்.
“நம்ம கிராமத்துக்கும் நம்ம சுற்று வட்டார கிராமத்துக்கும் வாழ்வாதாரமே விவசாயம்தான்…. அதுவும் இங்க இருக்குற நீர்நிலைகளை நம்பித்தான் இருக்கு……   இங்க குளிர்பானத் தொழிற்சாலை வந்துச்சுன்னா நம்ம நீர்நிலைல இருந்து தான் தண்ணி எடுப்பாங்க…. ஒரு நாளைக்கு பல லட்சம் லிட்டர் தண்ணீர் குளிர்பானம் தயாரிக்க செலவாகும்….. அதை நம்ம நீர்நிலைல இருந்து தான் எடுப்பாங்க….. அதுனால நம்ம விவசாயத்துக்கான நீர்வளம் குறஞ்சு போவும்….”
“ஓ…. இதுல இப்படில்லாம் இருக்கா….” என்றான் மணிமாறன்.
“ம்ம்…. அதும் இல்லாம இந்த மாதிரி ஒரு தொழிற்சாலை தொடங்கணும்னா பொதுமக்கள் கிட்ட கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தணும்…. சுற்றுவட்டாரத்துல  உள்ள யாருக்கும் இதுல எந்த ஆட்சேபனையும் இல்லையானு கேக்கணும்….. அதையும் இவங்க பண்ணல…… நம்ம வேளாண்மைக்கும், குடிநீருக்கும் ஆதாரமா இருக்குற ஆத்துல இருந்து தண்ணி எடுத்து குளிர்பானம் செய்து அதை நமக்கே விக்கப் போறாங்க….. இதெல்லாம் தெரியாமலே நாம நம்ம விவசாய நிலத்தை எல்லாம் அவங்களுக்கு வித்துட்டு இருக்கோம்……” 
“நாங்க என்ன தம்பி பண்ணுறது….. காலம் பூராவும் உழைச்சாலும் எங்களுக்கு போதுமான வருமானம் கெடைக்கலயே….. வியாபாரிங்க சொல்லுற வெலைக்கு தானே விளைச்சல விக்க வேண்டியிருக்கு…… அதான்… இங்க ஒரு தொழிற்சாலை வந்தா அதுக்கு வேலைக்கு போயி வருமானத்துக்கு வழி பண்ணலாம்னு நெனச்சோம்…. இப்போ இதுல இத்தன பிரச்சன இருக்குன்னு நீங்க சொன்ன பொறவுதானே எங்களுக்கு தெரியும்….” என்று வருத்தப்பட்டார் பெரியவர் ஒருவர்.
“அய்யா… நீங்க சொல்லுறது சரிதான்….. ஆனாலும் வருங்காலத்துல நம்ம சந்ததிங்க எதை சாப்பிடுவாங்க…. ஆறு, ஏரி, குளம், குட்டைன்னு இருக்குற நீர்நிலை எல்லாம் கட்டிடம் கட்டித்தான் சென்னைல மழை வந்து பெரிய இழப்பையும், படிப்பினையும் கொடுத்துட்டுப் போச்சு…. இனியும் நாம இதையே பண்ணிட்டு இருந்தா, இனி வருங்காலத்துல நம்ம பசங்க எல்லாம் படத்தைப் பார்த்து தான் விவசாயம்னு ஒண்ணு  இருந்ததையே தெரிஞ்சுக்குற நிலைமை ஆயிடும்…..” என்று நிறுத்தியவன்,
“இதுக்கும் மேலயும் இதுல இன்னொரு அதிர்ச்சியான விஷயம் என்னன்னா….. இதே தொழிற்சாலை இதுக்கு முன்னாடி ஈரோடு பக்கத்துல பெருந்துறைங்கிற இடத்துல குளிர்பான தொழிற்சாலை அமைக்க அனுமதி வாங்கி, அங்கிருக்குற மக்கள், எதிர்ப்புப் போராட்டம் நடத்தி, அரசாங்கம் தடை உத்தரவு போட்டதால அங்க தொடங்கற முயற்சியைக் கைவிட்டுட்டு அடுத்ததா இங்க நம்ம கிராமத்தைக் குறி வச்சு வந்திருக்காங்க……”
“கடவுளே….. அப்படியா….. இதெல்லாம் தெரியாமலே நாங்க இம்புட்டு நாள் மெத்தனமா இருந்திருக்கோம் மாப்புள….” என்றார் சுந்தரேசன்.
“ம்ம்… இந்த மாதிரி தொழிற்சாலை தொடங்கறதுக்கு முறையா மத்திய மாநில அரசுகள் கிட்ட அனுமதி வாங்கணும்… சுற்றுப்புற சூழல் அமைச்சகத்துல அனுமதி வாங்கணும்….. அங்கெல்லாம் எப்படி அனுமதி கொடுத்தாங்கன்னு தெரியலை….. நம்ம குடிநீரை எடுத்து கண்ட கெமிக்கலையும் சேர்த்து குளிர்பானம்ன்கிற பேர்ல விஷத்தை செய்து விக்கப் போறாங்க….. இந்த மாதிரி குளிர்பானத்தால எத்தனை பேருக்கு உடம்புக்கு கெடுதலா போகுது தெரியுமா…. வெளிநாட்டுல எவனாவது ஒருத்தன் இந்த மாதிரி கோலாவை வாங்கிக் குடிப்பானா……” ஆத்திரத்துடன் வந்தது அவனது வார்த்தைகள்.
“வயித்துக்கு சோறு போடுற நெலத்த அதிக வெலைக்கு வித்துட்டு விஷத்த வாங்கிக் குடிக்கப் போறோமா….. இந்த உலகத்துக்கே சோறு போடறவன் விவசாயி…. அவனும் தொழிற்சாலைக்கு, வேலைக்குப் போவுதேன்னு கெளம்பிட்டா, நாளைக்கு எல்லாரும் கல்லு, மண்ணையா தின்ன முடியும்… இல்ல, வெளிநாட்டுல மாதிரி கண்டதெல்லாம் சாப்பிட முடியுமா…..”
“யார் வந்து கேட்டாலும் விசாரிக்காம விளைச்சல் நிலத்த வித்துட்டா, நாளைக்கு நம்ம வருங்கால சந்ததிகளுக்கு அந்த நிலைமை தான் வரும்….. தீர விசாரிக்காம அதிகமாப் பணம் கிடைக்குதேன்னு விளைச்சல் நிலத்தக் கொடுக்க சம்மதிச்சது பெரிய தப்பு…..” என்று நீளமாய்ப் பேசி முடித்தான் மதியழகன்.
அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அந்த விவசாய மக்களின் நெஞ்சில் பயத்தை விளைவித்துக் கொண்டிருக்க அதிர்ச்சியுடன் அவர்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர்.
“தம்பி…. நாம இப்ப என்ன பண்ணலாம்னு சொல்லுங்க…..” என்றார் ஒருவர்.
“நம்ம ஊருல குளிர்பான தொழிற்சாலை வரக் கூடாதுன்னு அரசாங்கத்துக்கு பெட்டிஷன் போட்டு ஸ்டே ஆர்டர் வாங்கணும்….. நாம எழுதிக் கொடுத்த விளைச்சல் நிலத்தயும் நாமளே திரும்ப வாங்கியாகணும்….. அவுங்க சம்மதிக்கலேன்னா எல்லாரும் சேர்ந்து போராட்டம் நடத்தியாவது இதைப் பண்ணியே ஆகணும்….” என்றான் மதியழகன்.
அதைக் கேட்டு எல்லாரும் அவர்களுக்குள் கலந்தாலோசித்து அவன் சொல்லுவது போலவே செய்யத் தீர்மானித்தனர். மகன் கூறிய விஷயங்களை எல்லாம் ஆச்சர்யமும், அதிர்ச்சியுமாய்க் கேட்டுக் கொண்டிருந்த முத்துப் பாண்டி அமைதியாய் யோசித்துக் கொண்டிருந்தார்.
“நமக்குத் தெரியாத எத்தனை விஷயங்களை நம்ம புள்ள அலசிப் பார்த்து எல்லாருக்கும் புரியுற மாதிரி எடுத்துச் சொல்லுதான்…. இம்புட்டு அறிவ வச்சுக்கிட்டு இத்தன நாளா எதுலயும் கலந்துக்காம வாழ்க்கைய வீணாத் தொலைக்கப் பார்த்தானே….” என்று நினைத்தவர், மருமகளை மனதுக்குள் மெச்சிக் கொண்டார்.
“மதி…. இதெல்லாம் நாங்க சரியா கவனிக்கலை…. நல்ல வேளை… நீ இப்போ சொன்னதால தெரிஞ்சது….. இல்லன்னா அவுங்க தொழிற்சாலையைத் தொடங்கி இருப்பாங்க……” என்றான் மணிமாறன்.
“ம்ம்…. ஒரு பெட்டிஷன் எழுதி ஊர்மக்கள் எல்லாரும் கையெழுத்துப் போட்டு அரசாங்கத்துக்கு அனுப்பி வச்சிடுவோம் மணிமாறன்….. இன்னும் காலம் போக்க வேண்டாம்….” என்றான் மதியழகன்.
“சரி… இப்பவே எழுதிடுவோம்….” என்ற மணிமாறன், அவனிடம் எப்படி எழுத வேண்டும் என்று கலந்தாலோசித்து அவனே அரசாங்கத்துக்கு அனுப்ப வேண்டிய பெட்டிஷனை எழுதி ஊர்த்தலைவர் உட்பட எல்லாரிடமும் கையெழுத்து வாங்கினான். மதியழகனும் அதில் கையெழுத்துப் போட்டுவிட்டு அடுத்த நாளே அதை நெல்லைக் கலெக்டரை சந்தித்துக் கொடுப்பதாகக் கூறினான்.
இப்போதாவது இதைப் பற்றித் தெரிந்ததே….. என்று ஊர் மக்கள் சிறு நிம்மதியுடன் அதைப் பற்றிப் பேசிக் கொண்டே அங்கிருந்து கலைந்து சென்றனர்.
————————————————————————————————————————
பூ பூவாய் பூத்திருப்பேன்
பூமியெல்லாம் செழித்திருப்பேன்….
நெல்லு விளையும் பூமியெல்லாம்
கல்லு நட்டு வச்சுப்புட்டா
எந்த உசுரு வாழுமையா…..
பொன்னு விளையும் பூமியில
மாடி மேல மாடி வச்சு
மாளிக தான் கட்டிப்புட்டா
மாண்டு போவது விவசாயமா…..
புத்தி கேட்ட மாந்தர்களே…..
வீழ்ந்து போகும் மானிடமே…..
ஆறோடும் பூமியிலே
அசுத்தம் எல்லாம் கலந்து புட்டா
மாசுபட்டுப் போகாதா….
பெத்த தாயாக சுமக்கும் மண்ணை
மதிக்கத் தான் வேணுமய்யா…..
சோறு போடும் பூமியத்தான்
சொர்க்கமாய் காக்க வேணுமய்யா…
கோடி கொட்டிக் கொடுத்தாலும்
சொந்த மண்ணப் போல வந்திருமா…
சொர்க்கம் இந்த பூமியென்று
சொல்லித்தான் மகிழ்ந்திருப்போம்….