அழாதே என்னும் விதமாய் அவள் கையை இன்னும் இறுக்கிப் பிடித்து அவளுக்கு ஆறுதல் சொன்னான் மனோஜ். 
இதையல்லவோ அவனிடம் இருந்து அவள் எதிர் பார்த்தது. இப்படி
ஒரு பார்வை, இப்படி ஒரு தேடல், இப்படி ஒரு காதலைத் தானே அவள் இத்தனை வருடம் எதிர் பார்த்தாள். போகும் போது கூட கல்லையும் மண்ணையும் போல அவளைப் பார்த்து வைத்தவன் வரும் போது உரிமையாக பார்த்து வைக்கவும் அதற்கான காரணம் தெரியாமல் போனாலும் நிம்மதியாக உணர்ந்தாள் ஆஷா. 
பலவிதமான சித்தகத்திப் பூக்கள் மனதில் மலர்ந்தது போல நிம்மதியாக இருந்தது அவளுக்கு. வீடு வந்து சேரும் வரை அவள் கையை அவன் விடவே இல்லை. அவளும் புதிதாக கிடைத்த இந்த மோன நிலையை ரசித்த படி அமர்ந்திருந்தாள். 
இருவரின் முகத்தில் இருந்த நிம்மதியும் சந்தோஷமும் நிர்மல் மற்றும் சிவானிக்கு தாங்கள் செய்தது சரியான காரியம் என்ற எண்ணத்தை அதிகமாக வளர்த்தது. 
வீட்டில் கார் நின்றதும் முதலில் நிர்மல் சிவானி ஜோடி இறங்கினார்கள். அதற்கடுத்து ஆஷாவும் மனோஜும் இறங்க அவர்கள் ஜோடியாக வருவதைப் பார்த்த புஷ்பாவுக்கு நெஞ்சு வலி வருவது போலவே இருந்தது. 
அதுவும் மனோஜ் ஆஷா காதில் எதுவோ சொல்வதும் அவள் சிரிப்பதும் அந்த காட்சி புஷ்பாவிற்கு மிளகாயை அரைத்து பூசியது போல இருந்தது. எப்போதடா அவன் இங்கிருந்து கிளம்புவான் என்று இருந்தது புஷ்பாவுக்கு. 
புஷ்பா தங்களைக் கவனிக்கிறாள் என்று தெரிந்தும் வேண்டும் என்றே ஆஷாவை அழைத்து அழைத்து பேசி புஷ்பாவைக் கடுப்பேற்றினான் மனோஜ். அதில் சிவானிக்கு அதிக சந்தோஷம். 
“உங்க அண்ணனைப் பாரேன். நாம கோடு தான் போட்டுக் கொடுத்தோம். ஆனா அவன் ரோடே போடுறான். எங்க அம்மா பீதியாகுராங்க டி”, என்றான் நிர்மல். 
“நீங்க மட்டும் என்னவாம்? நான் போட்ட கோட்டை கல்யாணம்னு பெரிய ரோடா மாத்தலையா? அதே மாதிரி தான் எங்க அண்ணனும். அண்ணனும் ஆஷாவும் பேசிக்கிறதைப் பாக்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க”, என்று மனதாரச் சொன்னாள் சிவானி. 
சிறிது நேரம் கழித்து சிவானியை புகுந்த வீட்டில் விட்டு விட்டு கிளம்பும் போது அண்ணனாக அவளுக்கு அறிவுரை சொன்ன மனோஜ் “ரொம்ப தேங்க்ஸ் அம்மு”, என்று சொல்லவும் மறக்க வில்லை. கூடவே அவளை கஷ்டப் படுத்தியதற்கு மன்னிப்பும் கேட்டான். நிர்மலிடமும் “அம்முவை நல்லா பாத்துக்கோ டா”, என்று ஒரு அண்ணனாக சொன்னான். 
பின் அனைவரிடமும் “போயிட்டு வரேன்”, என்று பொதுவாகச் சொன்ன மனோஜ் ஆஷாவிடம் கண்களால் பேசிவிட்டு விடை பெற்றான். 
பல நாட்கள் கழித்து உல்லாசமாக இருந்த தங்களின் அண்ணனைக் கண்டு மூர்த்தி, ராம், ஜெகனுக்கு கொண்டாட்டமாக இருந்தது. 
அன்று இரவு சிவானி நிர்மல் அறைக்குள் சென்றதும் ஆஷா போனை எடுத்து மனோஜை அழைத்தாள்.
அவள் புது நம்பர் அவனுக்கு தெரியாது. எனவே எடுத்ததும் “ஹலோ யாரு?”, என்று கேட்டான். 
இத்தனை நாள் சரளமாக வந்த அவளின் பேச்சு இன்று புது மனோஜைக் கண்டதும் திக்கி திணறியது. “நான் தான்”, என்று அவள் தடுமாற “ஆஷா”, என்று கிசுகிசுப்பாக ஒலித்தது அவன் குரல். 
“மனோஜ் நான்…என்னை.. உங்களுக்கு…”, என்று எப்படி கேட்க என்று தெரியாமல் தடுமாறினாள் ஆஷா. 
“எதுவும் பேச வேண்டாம் ஆஷா, என்கிட்ட எந்த காரணனும் கேக்காத. முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்”, என்று சொன்னவனுக்கு புஷ்பா பேசியதைச் சொல்ல விருப்பமில்லை. 
“சரி பழைய காரணம் எல்லாம் எனக்கு வேண்டாம். இன்னைக்கு நடந்தது, நான் பாத்தது எல்லாம் நிஜம் தானே? நீங்க என்னை…உங்களுக்கு என்னை…”, என்று தடுமாறினாள். 
“ம்ம்”
“ம்ம்னா? வாயை திறந்து சொன்னா என்னவாம்?”
“சொல்றேன் சொல்றேன். எனக்கு உன்னைத் தவிர வேற யாரையும் பிடிக்காது டி. உன்னை எந்த அளவுக்கு பிடிக்கும்னு நேர்ல சொல்றேன். சரி நீ என்னைக்கு சென்னை கிளம்புற?”
“நாளைக்கு நைட் போகணும்”
“சரி சென்னைக்கு போயிட்டு எனக்கு கால் பண்ணு. நான் உன்னைப் பாக்க வரேன். எல்லாம் நேர்ல பேசிக்கலாம். சரி டயர்டா இருப்ப. போய் தூங்கு”
“உங்க கிட்ட பேச முடியலையேன்னு பல நாள் தூக்கம் வராம தவிச்சிருக்கேன். இப்ப பேச சான்ஸ் கிடைச்சிருக்கு. அதை விட்டுட்டு தூக்கமா முக்கியம்?”, என்று ஆரம்பித்தவள்  பழைய துறு துறு ஆஷாவாக மாறி அவனிடம் வம்பிழுக்க அவர்கள் பேச்சு நீண்டு கொண்டே போனது.  
அறைக்குள் நுழைந்த சிவானி நிலையோ சொல்ல முடியாததாக இருந்தது. இத்தனை நாட்களில் நிர்மல் அவள் கையை பிடித்திருக்கிறான் அவ்வளவே. மற்ற படி இது வரை எந்த நெருக்கமும் இருவருக்குள்ளும் ஏற்படவில்லை. 
ஆனால் இன்று அப்படி இல்லையே. இந்த சமூகமே அவர்களின் நெருக்கத்திற்கு அங்கீகாரம் வழங்கி விட அதை எண்ணி அவளுக்கு தடுமாற்றமாக இருந்தது. அவள் வரவை எதிர் பார்த்து தான் நிர்மலும் அமர்ந்திருந்தான். 
முதலில் அவளின் துடுக்கான பேச்சில் கவரப் பட்ட நிர்மல் அவள் மேல் மொத்த காதலையும் வைத்து விட்டு அவளின் அருகாமைக்காக தான் காத்திருந்தான். மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தாள் சிவானி. 
கண்களில் காதலை தேக்கி அவளைப் பார்த்த நிர்மல் “சிவானி”, என்று அழைத்தான். 
அவன் குரல் மனதை நெகிழ்த்த அடிமேல் அடி எடுத்து வைத்து  அவனை நெருங்கினாள். அவள் அருகில் வந்ததும் எழுந்து நின்றவன் அவள் கை விரல் தொட சிலிர்த்து போனாள். 
அவள் உணர்வுகளைப் புரிந்த நிர்மலுக்கும் எதுவோ செய்ய அவளுடனான நெருக்கத்தை அதிகப் படுத்தினான். அவன் கைக்குள் ஆனந்தமாக சுருண்டு கொண்டாள் சிவானி. அவள் முகத்தை நிமிர்த்தி அவள் உதடுகளில் தன்னுடைய உதடு என்னும் தூரிகையால் ஓவியம் வரைய ஆரம்பித்தான். அவன் செய்கையில் தன்னை இழக்க ஆரம்பித்தாள் சிவானி. 
அவன் தேவையை அவளிடம் இருந்து பெற்றுக் கொள்ள அவர்களின் இல்லறம் அங்கே ஆனந்தமாக ஆரம்பித்தது. 
அதே நேரம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த புஷ்பாவை எண்ணி கவலையில் இருந்தார் முத்துவேல். 
“எல்லாம் தான் நல்ல படியா முடிஞ்ருச்சே புஷ்பா? இன்னும் எதுக்கு இப்படி இருக்க?”, என்று கேட்டார் முத்துவேல். 
“எங்க முடிஞ்சிருச்சு? இப்ப தான் எல்லாம் ஆரம்பிச்சிருக்கு”
“என்ன சொல்ற நீ? சிவானியை பாத்தா எனக்கு நல்ல பொண்ணா தான் தெரியுது. ஆடம்பரமா இல்லாம போனாலும் அவங்க தகுதிக்கு மீறி தான் அவங்க பொண்ணுக்கு சீர் செஞ்சிருக்காங்க. இதுக்கு மேல என்ன வேணும்?”
“ப்ச் எனக்கு பிடிக்கலைங்க. அந்த குடும்பத்தையே பிடிக்கலை. அவங்க பொண்ணைக் கொடுத்துட்டாங்கன்னு அடிக்கடி இங்க வந்து போவாங்க”
“இது ஒரு பெரிய கவலையா? இன்னும் ஒரு வாரத்துல உன் மகன் அவன் பொண்டாட்டியைக் கூட்டிட்டு சென்னை கிளம்பிருவான். அப்புறம் என்ன? யாரும் இங்க வர மாட்டாங்க”
“சரி அதை கூட விடுங்க. ஆனா எனக்கு இந்த ஆஷாவை நினைச்சு கவலையா இருக்குங்க”
“விடு புஷ்பா, என்ன நடக்கணுமோ அது தான் நடக்கும்”
“நீங்க என்ன இப்படி சொல்றீங்க? ஏதாவது நடக்கணும்னு நினைச்சா நீங்க கொலை செய்யக் கூட தயங்க மாட்டீங்களே? இவங்க விசயத்துல மட்டும் எதுக்குங்க இப்படி விட்டுக் கொடுக்குறீங்க?”
“ஏன்னா, இதுல சம்மந்தப் பட்டிருக்கிறது நம்ம பிள்ளைகள். நாம என்ன செஞ்சாலும் அது நம்ம பிள்ளைகளைத் தான் பாதிக்கும். அதனால தான் என்னை மாத்திக்கிட்டேன். ஏனோ பிள்ளைகளை விட்டு தள்ளிப் போன மாதிரி இருக்கு. அன்னைக்கு நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னப்ப நிர்மல் ரொம்ப சந்தோஷமா தேங்க்ஸ்ப்பா தேங்க்ஸ்ப்பான்னு சொன்னான். எனக்கு அப்படியே சிலிர்த்து போச்சு. இப்ப நம்ம பாப்பா கூட என்கிட்ட அதிகம் பேசுறது இல்லை. என்னமோ எல்லாத்தையும் இழந்துட்டோமோன்னு தோணுது. சின்ன வயசுல என்கிட்ட ரொம்ப ஒற்றுதலா இருப்பாங்க. அப்புறம் நிலைமையே மாறிப் போச்சு. எல்லாத்துக்கும் காரணம் நீ தான்”
“என்னங்க இப்படிச் சொல்றீங்க?”
“ஆமா நீ தான் காரணம்”
“கண்டிப்பா இருந்தது தப்பா?”
“கண்டிப்பா இருக்குறது தப்பு இல்லை. காட்டு மிராண்டி மாதிரி இருந்தது தப்புன்னு தோணுது. உன்னால எப்ப ரெண்டு பேரும் ஹாஸ்டலுக்கு போனாங்களோ அப்பவே நாம நம்ம பிள்ளைகளை இழந்துட்டோம். இன்னும் கொஞ்ச நாள்ல அவங்களுக்கே பிள்ளைங்க வந்துரும். ஏதோ மனசு சங்கடமாவே இருக்கு. நானும் நிறைய தப்பு பண்ணிருக்கேன் தான். என்ன பண்ண விதி. சரி விடு. பழசை மறக்க முயற்சி பண்ணுவோம். தூங்கு”, என்று சொன்ன முத்துவேல் படுத்து விட்டார். அவர் என்ன தான் சொன்னாலும் புஷ்பாவுக்கு இருந்த எரிச்சல் குறையவே இல்லை. 
காலையில் நிர்மல் எழும் போது சிவானி குளித்து முடித்து அவன் எழுவதற்காக காத்திருந்தாள். 
புதிதாக பூத்த மலர் போல் இருந்த மனைவியை மீண்டும் அவன் கை பற்ற நினைக்க அவளோ “ஒரு முக்கியமான பிளான் போடணும். நீங்க எந்திக்கிறதுக்கு தான் வெயிட் பண்ணுறேன்”, என்றாள். 
அவளை தன் மீது இழுத்துப் போட்டவன் “இப்படி இருந்தே பிளான் பண்ணலாம் பொண்டாட்டி. என்ன பண்ணனும் சொல்லு. பண்ணிறலாம்”, என்றான். 
அவள் சொன்ன பிளானைக் கேட்டு நிர்மலுக்கு கொஞ்சம் சங்கடம் வந்தாலும் அரை மனதாக சரி என்று சொன்னான். இருவரும் பேசி முடித்து விட்டு அவன் குளிக்க செல்ல அவனுக்கு தேவையான உடையை எடுத்து வைத்தாள் சிவானி. 
“ஏய் இன்னுமா டி தூங்குற? எந்திரி டி”, என்று ஆஷாவை எழுப்பினாள் புஷ்பா. 
“நைட் முழுக்க பேசிட்டு இப்ப தான் தூங்குறேன். போ மா”, என்று ஆஷா சிணுங்கிக் கொண்டே மேலும் தூங்க முற்பட “என்னது நைட் முழுக்க பேசினியா? யார் கிட்ட பேசுன? என்ன பேசுன? எப்படி பேசுன?”, என்று கேட்டாள் புஷ்பா. 
“ஐயோ அரை தூக்கத்துல உளறிட்டோமே?”, என்று எண்ணிய ஆஷா “விடிஞ்சிருச்சா? அம்மா காலைல என்ன டிபன்? இன்னைக்கு பூரி சுடச் சொல்லேன்”, என்று கேட்ட படியே எழுந்தாள். 
“இந்த பேச்சு மாத்துற வேலை எல்லாம் வேண்டாம். யார் கிட்ட டி பேசுன?”
“என்னமா பேசுற? எனக்கு புரியலையே?”
“சும்மா நடிக்காத. உன் போனைக் கொடு”