அவள் சொன்ன பொண்டாட்டி என்ற வார்த்தையில் ஜெர்க் ஆனாலும் “வாயை மூடு. உனக்கு எல்லாம் வெக்கம் மானமே இல்லையா? எவ்வளவு திட்டினாலும் திருந்த மாட்டியா நீ?”, என்று கேட்டான் மனோஜ்.
“புருஷன் கிட்ட ரோஷம் பாத்தா நம்ம நாட்டுல தொண்ணூறு சதவீதம் பெண்கள் புருஷனை விட்டு தனியா தான் வாழனும். நான் மட்டும் விதி விலக்கா என்ன?”
“அவங்க கிட்டயே சொல்வேன் நான்”, என்று சொன்னவள் அவனை நெருங்கி அமர்ந்தாள். அதில் அவன் தடுமாறிப் போனான். அவனுக்குள் காதல் உணர்வலைகள் பொங்கிப் பெருகியது.
இருவரின் காலும் உரசிய படி இருக்க அவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அதிலும் அவளின் கதகதப்பான சுண்டு விரல் அவன் காலை தீண்டிய போது வெகுவாக தடுமாறினான்.
“ஆஷா நீ ரொம்ப பண்ணுற? நகர்ந்து உக்காரு டி”, கடுப்புடன் சொன்னான்.
“உங்களை பாக்க சான்ஸ் கிடைச்சாலே எனக்கு லட்டு சாப்பிட்ட மாதிரி இருக்கும். இப்படி பக்கத்துல ஒட்டிட்டு உக்காந்துருக்குற சான்ஸ் கிடைச்சா சும்மாவா விடுவேன். எனக்கு ரெண்டு லட்டு திங்க ஆசை அத்தான்”, என்று சொல்லி வம்பிழுத்தாள்.
அவள் பண்ணிய அழும்பில் அவன் டென்ஷன் ஏறிக் கொண்டிருக்க அப்போது அங்கே வந்த புஷ்பா இருவரும் அருகருகே அமர்ந்திருப்பதைக் கண்டு நெஞ்சை பிடித்து விட்டாள்.
“ஏய் நீ என்ன டி இங்க உக்காந்துருக்க? ஒழுங்கா இறங்கிரு டி”, என்று பதட்டமாக சொன்னாள் புஷ்பா.
அதில் மனோஜ் முகம் கருக்க திரும்பிக் கொண்டான். ஆஷா இறங்காமல் அவளுடைய அம்மாவையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருக்க “அம்மா, எதுக்கு அவளை சத்தம் போடுறீங்க? அவ எங்க கூட தானே வாரா? வரட்டுமே?”, என்றான் நிர்மல்.
“அத்தை, ஆஷா அங்க உக்காந்துருக்குறது உங்களுக்கு ஒரு மாதிரி இருந்தா ஆஷா வேணும்னா மாமா கூட உங்க கார்ல வரட்டும். நீங்க அவ சீட்ல உக்காந்து எங்க கூட வாங்க”, என்று நமட்டுச் சிரிப்புடன் சொன்னாள் சிவானி. அதில் அனைவருக்குமே சிரிப்பு வர பார்க்க “என்னமா, நீ இங்க உக்காருறியா? நான் வேணும்னா எழுந்துக்குறேன்”, என்று கேட்டாள் ஆஷா.
“இவன் பக்கத்துல நான் உக்காரணுமா?”, என்று மனதில் எண்ணிக் கொண்ட புஷ்பா எதுவும் சொல்லாமல் அங்கிருந்த சென்றாள்.
அவள் சென்றதும் “கொழுப்பா டி உனக்கு? அவங்களை எதுக்கு என் பக்கத்துல உக்கார சொல்ற?”, என்று சீறினான் மனோஜ்.
“ஹலோ பாஸ், முதல்ல அம்மாவை இங்க உக்காரச் சொன்னது உங்க தங்கை தான். அவளைப் கேப்பீங்களா? ஒரு பச்சை பிள்ளையை மிரட்டிக்கிட்டு”, என்று கேட்டு அவனை முறைத்தாள் ஆஷா.
“நீயா டி பச்ச பிள்ளை?”, என்று வரவைத்த ஆச்சர்யத்தோடு கேட்டான் மனோஜ்.
அந்த பச்ச பிள்ளை கால் விரலால் அவன் காலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தது. அவள் ஏற்படுத்திய உணர்வலைகளில் மனோஜ்க்கு தான் உள்ளுக்குள் அனைத்தும் ஆட்டம் கண்டது.
“நான் பக்கத்துல இருந்தா நீங்க எதுக்கு பாஸ் தடுமாறுறீங்க? ஒழுங்கா காரை கிளப்புங்க. அப்புறம் ரோட்டைப் பாத்து வண்டி ஓட்டுங்க. நான் என் அத்தான் கூட ரொம்ப வருஷம் வாழனும் பா”, என்று சொல்லி அவனை கிளம்ப வைத்தாள் ஆஷா.
“உன் வாய் தான் டி உன்னை வாழ வைக்குது”, என்ற படியே காரை எடுத்தான்.
“ஆமா ஆமா உங்க வாய் மட்டும் கம்மியா தான் பேசுது. வார்த்தைக்கு வார்த்தை டி சொல்லுவாங்கலாம். ஆனா லவ் இல்லையாம். என் போட்டோவை போன்ல வச்சிருப்பாங்களாம். ஆனா நான் லவ்வர் இல்லையாம்”, என்று கடுப்புடன் கேட்டதும் பதில் சொல்ல முடியாதவனாக வாயை மூடிக் கொண்டான்.
“ஆமா என்னோட போட்டோ உங்களுக்கு எப்படி கிடைச்சது? பேஸ்புக்ல சுட்டீங்களா?”, என்று அவள் கேட்க அவன் அவள் பக்கம் திரும்பவே இல்லை.
நிர்மல் புது மனைவியை ரசித்த படி வர அவன் பார்வைகளை தாங்க முடியாமல் முகம் சிவந்தாள் சிவானி.
ஆஷாவோ மனோஜை இடித்து, அவன் மீது கை வைத்து, அவனைத் தொட்டுக் கூப்பிட்டு, அவன் கையைப் பிடித்து இழுத்து, அவன் தோளை இழுத்து என்று அவன் இளமையை சோதித்த படியே வந்தாள்.
ஆஷா பக்கம் மனோஜின் மனம் சாய்ந்தாலும் சிவானி வாழ்க்கையை எண்ணி அவளை முறைத்த படியே வந்தான் மனோஜ்.
மனோஜ் வீட்டுக்கு சென்றதும் புஷ்பா ஏதோ மகாராணி முறுக்குடன் வலம் வர பொறாமை குணம் கொண்டவர்கள் சிலர் “என்ன பார்வதி உன் சம்பந்தி பேருக்கு கூட சிரிக்க மாட்டாங்க போல? இந்த வீட்லயா பொண்ணைக் கொடுக்கணும்?”, என்று பார்வதியிடம் கேட்க அதில் கடுப்பான பார்வதி “மாமியார் எப்படி இருந்தா என்ன டி? மருமகன் தங்கம். கொஞ்ச நாள்ல பொண்ணு மாப்பிள்ளை பாரின் போயிருவாங்க. அப்புறம் என்ன கவலை?”, என்று சொல்லி சமாளித்தாள்.
மறுவீடு முடிந்து அனைவரும் கிளம்பும் போது சிவானி பெற்றோரைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
அப்போதும் மனோஜ் சிவானி அருகில் செல்லாமல் இருக்க அவளுக்கு அழுகை பொங்கியது. மெதுவாக அவன் அருகில் சென்றாள். அவளைக் கண்டதும் அவன் விலகப் பார்த்தான்.
“இன்னும் உனக்கு என் மேல உள்ள கோபம் குறையலைன்னு தெரியும்ணா. ஆனா எனக்கு என்னோட அண்ணனை ரொம்ப பிடிக்கும். நான் போயிட்டு வரேண்ணா. கிளம்புறதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயம் சொல்லிட்டு போயிறேன். இனி நீ அடுத்தவங்களுக்காக பயப்பட வேண்டாம். உன் மனசுல உள்ள காதலை இனி யாருக்கும் மறைக்காம வெளிப் படுத்தலாம். யாரும் என்னை ஏதாவது செஞ்சிருவேன்னு மிரட்ட மாட்டாங்க. என்னோட மாமியாரே என்னை ஏதாவது செஞ்சா என்னோட புருஷன் எப்படி சும்மா இருப்பார்?”, என்று யாருக்கும் கேட்காத குரலில் சொல்ல அவளை திகைப்பாக பார்த்தான்.
“என்ன சொல்கிறாள் இவள்?”, என்று எண்ணிய மனோஜ் “அம்மு”, என்று ஆனந்த அதிர்வோடு அழைக்க “என்ன அண்ணா உனக்கு புரிஞ்சிருச்சா? எனக்காக எல்லாம் செஞ்ச என்னோட அண்ணனுக்கு என்னால ஆன சின்ன பரிசு தான் என்னோட கல்யாணம். இப்ப உனக்கு என்ன செய்யணுமோ செய். இப்ப என்னை என்னோட வீட்ல விடுறதுக்கு வா அண்ணா”, என்று அழைத்தாள்.
அவள் தலையை வருடி விட்டவன் “எனக்காக தான் இந்த கல்யாணமா? என்ன மா இதெல்லாம்? நிர்மலா இருக்க போய் ஓகே. இல்லைன்னா…. என்ன மா செய்யுறது?”, என்று கேட்டான்.
“அன்னைக்கு நீ ஜெகன் கிட்ட பேசுறதைக் கேட்டேன். அப்புறம் தான் இது தோணுச்சு. ஆனா உனக்காக தான் நிர்மலைக் கட்டிக்கிட்டேன்னு நான் சொன்னா அது தப்பா போயிரும் அண்ணா. உனக்காக யோசிச்சாலும் நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனா இனியும் நீ எனக்காக யோசிக்க கூடாது. ஆஷா பாவம் சரியா?”
“சரிங்க பெரிய மனுஷி. எல்லாரும் வெயிட் பண்ணுறாங்க வா”, என்று சொல்லி அவள் கை பிடித்து அழைத்து வந்து நிர்மல் அருகில் காரில் அமர வைத்து டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை எடுத்தான்.
பக்கத்தில் ஆஷா இருந்தாலும் அவளை திரும்பிக் கூட பார்க்காது இருந்தான். அவன் மனதில் சிவானி பேசியதே தான் நிறைந்து இருந்தது. தனக்காகவா தங்கை இவ்வளவு பெரிய முடிவை எடுத்தாள் என்று திகைப்பாக இருந்தது. கூடவே நிர்மலும் ஆஷாவுக்காக தான் இதெல்லாம் செய்திருப்பான் என்றும் புரிந்தது.
உண்மையிலே இருவருக்கும் பிடித்திருக்கிறதா என்ற குழப்பத்தில் தப்பு என்று தெரிந்தும் நிர்மல் மற்றும் சிவானியை கண்ணாடி வழியாக பார்த்தான். நிர்மல் முகத்தில் இருந்த புன்னகையும், சிவானி முகத்தில் இருந்த வெட்கமும் அவனுக்கு நிம்மதியைத் தந்தது.
“எனக்காகன்னாலும் தங்கையின் வாழ்க்கை வீணாகவில்லை. அதுவே போதும். ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கணும்”, என்று வேண்டிக் கொண்டான்.
அது வரை அவன் அருகில் அமர்ந்து அவனை சீண்டிக் கொண்டிருந்த ஆஷாவை அவன் கண்டு கொள்ளாததால் கடுப்பானவள் அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளினாள். அதிர்ந்து போய் அவளை திரும்பி பார்த்தான்.
“சரியான சாமியார் நீங்க? பக்கத்துல என்ன வச்சிட்டு கனவு கண்டுட்டு வரீங்க? நீங்க ரொம்ப மோசம் பாஸ். நமக்கு பின்னாடி ஜோடி சேந்தவங்களைப் பாருங்க. சும்மா கொஞ்சி குலாவுறாங்க. நீங்களும் இருக்கீங்களே?”, என்று கடுப்புடன் சொன்னாள் ஆஷா.
அவள் சொன்னதில் உல்லாசமாக சிரித்தவன் “என் தங்கச்சியைப் பாத்து பொறாமையாடி படுற?”, என்று கேட்டு அவள் கையில் கிள்ளி வைத்தான். அவன் முதல் தொடுகையில் சிலிர்த்தவள் அதிர்வோடு அவனை வெறித்துப் பார்த்தாள்.
அவன் புன்னகை, அவன் கண்களில் இருந்த காதல், உரிமையான பேச்சு அனைத்தும் இது கனவா நினைவா என்று அவளை சந்தேகப் பட வைத்தது.
“இவன் என்ன புதுசா இப்படி பாக்குறான்? தொட்டெல்லாம் பேசுறான். ஐயோ படபடப்பா வருதே? கண்ட்ரோல் பண்ணு டி ஆஷா”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டவள் தன்னை சமாளித்துக் கொண்டு “என்ன பாஸ் இப்படி முறைக்கிறீங்க?”, என்று கேட்டாள்.
“பாக்கலைன்னா பாக்கவே மாட்டுக்கீங்கன்னு சொல்ற? ரொமான்ஸ் பார்வை பாத்தா முறைக்கிறீங்கன்னு சொல்ற? நான் என்ன செய்யட்டும்? பேசாம இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுத்துறவா?”, என்று கேட்டு கண் சிமிட்டினான்.
அவன் பேச்சில், அவன் செய்கையில் அவளுடைய அதிர்ச்சி பல மடங்கானது. விழி விரித்து அவனைப் பார்த்தாள். “பாஸ், உங்களுக்கு பேய் எதுவும் பிடிச்சிருச்சா”, என்று ஆச்சர்யமாக அவனை கேட்க ஸ்டியரிங்கில் இருந்த ஒரு கையை எடுத்து அவளது கையை பிடித்தான்.
விரல்கள் நடுங்க அவனை திகைத்து போய் அவள் பார்க்க அவள் கையுடன் தன்னுடைய கையை இறுக பற்றிக் கொண்டவன் “ஆமா, அந்த பேய் பேர் ஆஷா. என்னை ரொம்ப படுத்தி எடுக்குது”, என்றான்.
அவன் ஏற்படுத்திய உணர்வலைகளை தாங்க முடியாமல் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.