சிந்துஜாவிற்கு ஆக்சிடண்ட் ஆனது பற்றியும் அவள் இரண்டு நாட்கள் விடுமுறை என்றும் மதியழகன் அலுவலகத்தில் தெரியப்படுத்தி இருந்தான். மூன்று நாட்களாய் கஸ்டமர் மீட்டிங்கிற்கு சென்று கொண்டிருந்ததால் அவனுக்கு அலுவலகத்தில் இருக்கவே நேரம் இல்லை.
அன்றும் அவன் ஒரு புதிய கஸ்டமரைக் காண்பதற்காய் வெளியே சென்றிருக்க அவனைக் காண அங்கு வந்தார் தந்தை முத்துப்பாண்டி.
“என்னம்மா நல்லாருக்கியா……” புன்னகையுடன் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த முத்துப்பாண்டியை சிரிப்புடன் வரவேற்றாள் சௌமியா.
மதியழகனைக் காண்பதற்காய் முத்துப்பாண்டியும் லச்சுமியும் அங்கு வருவதால் அவர்களோடு அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு நன்றாகப் பழக்கம் இருந்தது. வெளிநாட்டு இயந்திரங்களை இந்தியாவில் விற்பதற்கான ஏஜென்சியை அவர்கள் நிறுவனம் எடுத்திருந்தது.
அந்த அலுவலகத்தின் தலைமை அலுவலகம் மும்பையில் இருந்ததால் சென்னைக் கிளையின் முழுப்பொறுப்பும் மதியழகனிடம் இருந்தது.
அதன் நிர்வாக இயக்குனர் மாதம் ஒரு முறை மட்டுமே இந்தக் கிளைக்கு வந்து செல்வார். எனவே அந்த அலவலகத்தில் சுதந்திரமாய் அவர்கள் வேலைகளை செய்து வந்தனர்.
“வாங்க அங்கிள்…. நான் நல்லாருக்கேன்…. நீங்க, ஆண்ட்டி எல்லாம் எப்படி இருக்கீங்க…..”
“எல்லாருக்கும் சுகம் தான் தாயி…… இங்க ஒரு சோலியா வந்தேன்….. அது முடிஞ்சுது….. சாயந்திரம் தான் ஊருக்கு ரயிலு….. சரி மதிய ஒரு எட்டு பாத்திட்டுப் போவலாமேனு வந்தேன்…. உள்ள இருக்கானா…..”
“ம்ம்…… சரிம்மா….. என்னா வெயிலு…… எப்படித்தான் இங்க இருக்கியளோ…. இந்த ஊருல ஏசியப் போட்டாதேன் காத்து…… எங்கூருல சிலுசிலுன்னு வீசுற வேப்ப மரத்துக் காத்தோட அருமை இங்கல்லாம் வரும்போது தான தெரியுது……” என்று பேசிக் கொண்டே மதியின் அறைக்கு சென்று நாற்காலியில் அமர்ந்தார்.
அவர் பேசியதற்கு பதிலாய் ஒரு புன்னகையை சிந்திவிட்டு, “கூலா ஜூஸ் வாங்கிட்டு வர சொல்லட்டுமா அங்கிள்…..” என்றாள்.
“ம்ம்….. சரிம்மா….. இந்த ஊருல எம்புட்டு தண்ணி குடிச்சாலும் தாகமே அடங்க மாட்டேங்குது….. வாங்கிட்டு வர சொல்லு……” என்றார்.
“ம்ம்… இப்ப வந்திடறேன் அங்கிள்…..” என்று வெளியேறியவள், ஆபீஸ் பையனை அனுப்பி ஜூஸ் வாங்கி வர செய்து முத்துப்பாண்டிக்கு கொண்டு போய் கொடுத்தாள்.
மேசையின் மீதிருந்த டிரேயில் பேப்பர் படபடக்கவே அதை சரி செய்யப் போனவள் கண்ணில் சிந்து கிறுக்கிய பேப்பர் விழுந்தது. அதைப் படித்துப் பார்த்ததும் அவளுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.
“ஓ….. அந்த அளவுக்கு வந்தாச்சா….. அவளோட காதலை இவங்கிட்ட சொல்லிட்டாளா….. அதான் அவ பேப்பர்ல கிறுக்கினதைக் கூட பத்திரமா எடுத்து வச்சிருக்கானோ…… இங்க நான் பாத்துக் காத்துக் கிடந்தா என்னைக் கண்டுக்காம நேத்து வந்தவளோட காதலை ஏத்துக்கிட்டானா…..” என்று நினைத்தவளுக்கு கோபம் கண்ணை மறைத்தது.
அந்தப் பேப்பரை வெறித்தவள், “இந்தாம்மா….. கிளாசை எடுத்துக்க….. ஒரு வேஸ்ட் பேப்பரு இருந்தா குடு…. மேசை மேல லேசா சிந்திருச்சு….. துடைச்சுடலாம்….” என்றவரிடம் சட்டென்று அந்த பேப்பரை நீட்டினாள்… மனதுக்குள் எதோ தீர்மானித்துக் கொண்டே.
“என்னமோ எழுதிருக்கே….. என்று பேப்பரைத் திருப்பிப் பார்த்தவருக்கு, “மதி….. ஐ லவ் யூ…… சிந்து+மதி=சிந்துமதி…..” என்ற வார்த்தைகள் கண்ணில் விழ ஆங்கிலம் சரியாய் புரிந்தும் புரியாமலும் இருந்தாலும் அவள் எழுதியிருந்த வார்த்தைக்கு அர்த்தம் அவருக்கு விளங்கவே செய்ய புருவம் சுருங்க அதிர்ச்சியுடன் அதையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்னம்மா இது…. யார் இந்த சிந்து…..” என்று கேட்டவரிடம் அதற்குப் பிறகு சும்மா இருப்பாளா சௌமியா…… நடந்ததும் நடக்காததுமாய் சிந்துவை மதியின் பின்னால் அலைபவளைப் போலவும் மதியின் மீது குற்றம் இல்லாத போலவும் அவள் கொளுத்திப் போட்ட அணுகுண்டுத் திரியை சுமந்து கொண்டு சிந்துவின் வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டவர் புறப்பட்டார்.
“அப்பா……. நான் மார்கெட் போயிட்டு வந்திடறேன்…….” கோவிலில் இருந்து பூஜை முடித்து வந்த தந்தையிடம் கூறிக் கொண்டே காய்கறிக் கூடையுடன் கிளம்பினாள் சிந்து.
“ஏம்மா….. நீ எதுக்கு மார்கெட் போறே….. இப்பதான் கை கால் எல்லாம் காயம் கொஞ்சம் ஆறிருக்கு….. கொடு….. நான் போயி வாங்கிண்டு வரேன்……”
“இல்லப்பா…. நேக்கு இப்ப எந்த வலியும் இல்லை…… நாளையில் இருந்து ஆபீஸ் போகணும்….. ஒரு வாரத்துக்கான காய்கறிகளைப் பார்த்து வாங்கிண்டு வந்துட்டா சமைக்க ஈஸியா இருக்கும்…. நானே போயிட்டு வந்திடறேன்….. நீங்க சித்த ரெஸ்ட் எடுங்கோ…… குடிக்க ஏதும் கொண்டு வரட்டுமா…….”
“ம்ம்… சரிப் பார்த்துப் போயிட்டு வாம்மா…… நேக்கு கொஞ்சம் மோர் மட்டும் எடுத்திண்டு வா……” என்றவர் சலிப்புடன் கட்டிலில் அமர்ந்தார்.
அவருக்கு மோரைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு கிளம்பினாள் அவள். அசதியோடு அமர்ந்தவர் அப்படியே தலை சாய்ந்து சற்று நேரத்தில் கண்ணயர்ந்து போனார்.
சட்டென்று வாசலில் யாரோ அழைப்பது போலத் தோன்ற கண் விழித்தவர் எழுந்து வெளியே வந்தார்.
“யாரு நீங்க….. நோக்கு என்ன வேணும்…….”
“நீர்தான் கோவில் குருக்களோ….. சிந்துஜா உம்ம பொண்ணுதான…….” கோபத்துடன் கேட்டார் வாசலில் நின்று கொண்டிருந்த முத்துப் பாண்டி.
“ஆமாம்….. நான்தான் சிந்துவோட தோப்பனார்…… என்ன விஷயம்…. நீங்க யாரு…… நேக்கு வெளங்கலையே……..”
“அச்சோ….. என்ன சொல்லறேள்….. எதுக்கு இப்படி அபாண்டமாப் பேசறேள்….. நீங்க முதல்ல உள்ள வாங்கோ…….” என்றார் வெளியே அங்கங்கே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கியவர்களைக் கண்டு.
“யோவ்….. என்ன நாடகமாடுறியாவே…… உம்பொண்ணை வேலைக்கு அனுப்பி எம்மவனை மயக்கத் திட்டம் போட்டுட்டு இப்ப ஒண்ணும் தெரியாதவன் மாதிரி அபாண்டம்னு சொல்லுதீரு….. அவர் கத்திய கத்தலில் பக்கத்துக்கு வீட்டு பத்மா மாமியும் அவரது ஆத்துக்காரரும் அங்கே வந்து எட்டிப் பார்த்தனர்.
அதற்குள் இடைபுகுந்த பத்மாவின் ஆத்துக்காரர், “என்னாச்சு….. யார் நீங்க….. எதுக்கு இப்படி வாசல்ல நின்னு கத்திண்டிருக்கேள்……” என்றார்.
“என்னது நான் கத்தறேனா……. நீங்களே எனக்கு நியாயத்தை சொல்லுங்க…… அழகா ஒரு ஆம்பளப் பையனைப் பெத்து, நல்லாப் படிக்க வச்சு, நல்ல வேலைக்கு அனுப்பி, சொத்து பத்தெல்லாம் சேர்த்து வச்சா, இவுக அலுங்காம பொண்ணை அனுப்பி என் பையனை மயக்கி எல்லாத்தையும் சுருட்டிக்கனும்ணுல நினைக்குறாவ…….”
“அய்யோ…. பகவானே…. இப்படில்லாம் பேசாதேள்…. நாங்க அப்படிப்பட்டவா கிடையாது….” என்று காதை மூடிக் கொண்டார் ஸ்ரீதரன். முத்துப்பாண்டியின் கேள்விக்கு பத்துவின் கணவர் எதோ சொல்லப் போக அவரது காதில் பத்மா எதையோ சொல்லவும் அவர் அமைதியாகி விட்டார்.
“அய்யோ…. பகவானே…… இப்படில்லாம் அபாண்டமாப் பேசாதேள்….. எம்பொண்ணு அப்படிப்பட்ட கார்யம் எல்லாம் பண்ண மாட்டா…..” கண்ணீருடன் அவர் கூறிக் கொண்டிருக்க ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
“யோவ்…. நீ பூஜ பண்ணுறவன்னு பார்த்தா பொண்ணுக்கு புரோக்கர் வேலையும் பாக்குதியோ…… இந்தப் பொழப்புக்கு நாண்டுகிட்டு சாகலாம்வே…. த்தூ…… கோட்டிப்பயலே……” என்று துப்பியவர்,
“இன்னொரு தடவ உம்பொண்ணு என் பையன் முன்னால வந்துச்சு….. அப்புறம் நடக்கறதே வேற பார்த்துக்கவே…..” என்று கை விரலை நீட்டி எச்சரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
அவமானத்தில் கூசி நின்ற ஸ்ரீதரன், வாயில் துண்டைப் பொத்திக் கொண்டு அழுது கொண்டிருக்க, கூட்டத்தில் இருந்தவர்கள் ஒவ்வொன்றும் பேசத் தொடங்கினர்.
“ஏன் மாமி….. அந்தாளு இத்தன சொல்லறப்போ உண்மை இல்லாமயா இருக்கும்….. அன்னைக்கு நாமளும் தானே பார்த்தோம்……. எவனோ ஒருத்தனோட ஜோடி போட்டுக் காரில் வந்து எறங்கினாப் போல மெதப்புல தானே இவர் பொண்ணு வந்து எறங்கினா……”
“அந்த பையனும் வாட்ட சாட்டமா தானே இருந்தான், அது தான் இவாளோட பையன் போல… அவா சொல்றதும் சரியா இருக்குமோ… ம்ம்….. அதானே…… நெருப்பில்லாமப் புகையுமா…… அவர் சும்மாவா இப்படிக் கத்திண்டு போவார்….. கண்டிப்பா அந்த சிந்து ஏதாவது பண்ணிருப்பா……” என்று ஒரு மாமி திரிக்கு தீயைக் கொடுக்க அது சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
அவர்கள் அவரது முன்னாலேயே கண்டபடி பேசத் தொடங்க அவமானத்தில் கூசி குறுகி போனவர் தாங்காமல் உள்ளே சென்றார், சட்டென்று ஒரு முடிவெடுத்து தூக்க மாத்திரை குப்பியில் இருந்த மாத்திரை முழுவதையும் விழுங்கி, மேசையின் மீது ஜக்கில் இருந்த நீரை எடுத்து வாயில் கவிழ்த்துக் கொண்டார்.
“என்னை மன்னிச்சுடும்மா சிந்து…..” என்றவரின் கண்களும் மனதோடு அழுது கொண்டிருக்க, அந்த உயிர் தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை நினைத்துக் கொண்டே உலகை விட்டுச் சென்றது.
இது தெரியாமல் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தவர்கள் வாய் வலிக்கும் வரை பேசிவிட்டு அவர்கள் வேலையைப் பார்க்க சென்றனர்.
சிறிது நேரத்தில் காய்கறி வாங்கிக் கொண்டு திரும்பி வந்த சிந்துஜாவின் மனது, அடுத்த நாள் மதியழகனை அலுவலகத்தில் காணப் போவதை நினைத்து சந்தோஷித்துக் கொண்டிருக்க உற்சாகத்துடன் வீட்டுக்கு வந்தவளைத் தெருவில் உள்ளவர்கள் ஒரு மாதிரிப் பார்த்தனர்.
அவளுக்கு முன்னால் வந்து வழியை மறித்து நின்று இளித்தான் ஒருவன்.
“என்ன கண்ணு…… எங்களை எல்லாம் டிரை பண்ண மாட்டியா……. நாங்களும் பணமெல்லாம் தருவம்….. வரியா…… குஜால் பண்ணிட்டு கலீஜா இருக்கலாம்…..” என்றான் பான் பராக் கறையுடன் மின்னிய பல்லைக் காட்டி இளித்துக் கொண்டு.
“ச்ச்சீ….. கருமம்… கருமம்…… இப்படியா பொம்மனாட்டிகிட்ட பேசுவ……” என்றவள் அவனைத் தாண்டி ஓட்டமாய் வீட்டை நோக்கி நடந்தாள்.
“பார்த்தேளா மாமி…… காலுக்கு முடியலேன்னு சொல்லிண்டு இருந்தா….. இப்ப எங்கயோ வெளியே சுத்திண்டு வரா….. எல்லாம் கலிகாலம்….. யாரை நம்பறது…. யாரை நம்பக் கூடாதுன்னே தெரியலை……” என்ற மாமி ஒருவர் அவளைக் கண்டு முகத்தைத் திருப்பிக் கொள்ள, ஒன்றும் புரியாமல் முகத்தை சுளித்தாள் அவள்.
“என்னாச்சு மாமி…… ஏன்…… ஒரு மாதிரிப் பேசறேள்…..” என்று சிந்து கேட்கவும்,
“ஒண்ணும் இல்லடிம்மா…….. உன்னோட நின்னு பேசினா என்னையும் சேத்துல்ல அசிங்கமாப் பேசுவா….. நீ போ…..” என்றவர், “வாங்கோ மாமி…. உள்ள போயிப் பேசலாம்…..” என்று உடன் அந்த மாமியையும் சேர்த்து அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.
ஒன்றும் புரியாமலே வீட்டுக்குள் நுழைந்தவள், தந்தை தான் வந்தது கூடத் தெரியாமல் அயர்ந்து உறங்குவதாக நினைத்துக் கொண்டாள்.
காய்கறிகளை எல்லாம் எடுத்து வைத்தவள் சாப்பிடும் நேரம் ஆகவே, எல்லாவற்றையும் மேசை மீது எடுத்து வைத்துவிட்டு, அவரை எழுப்பினாள். அவரிடம் எந்த அசைவும், பிரதிகரிப்பும் இல்லாமல் போகவே அதிர்ச்சியுடன் மீண்டும் எழுப்பினாள்.
அவர் அசையாது கிடக்கவே பயந்து போனவள், “அப்பா….. எழுந்திருங்கோ அப்பா…..” என்று அழுதுகொண்டே உலுக்கினாள். அவளது முயற்சி தோற்றுப் போகவே, “பத்து மாமி…. கொஞ்சம் இங்கே வாங்களேன்….” என்று கத்தினாள்.