அனைவரையும் பார்த்தது சிவானிக்கு சந்தோஷம் என்றாலும் மனோஜின் பாரா முகத்தை மட்டும் அவளால் தாங்க முடியவில்லை. வந்ததில் இருந்து அவன் அவளிடம் ஒரு வார்த்தை கூட பேச வில்லை. அடுத்த நாளுக்கு தேவையான பொருள்கள் எல்லாம் வாங்கினான். ஆனால் அவளிடம் பேசவில்லை.
நித்யாவின் குழந்தை வர்ஷாவை மட்டும் தூக்கி வைத்துக் கொண்டு நடமாடினாள் சிவானி.
நித்யாவோ மனதில் இருந்த கசப்புகள் அனைத்தையும் மறந்து சிவானியுடன் சந்தோஷமாக பேசினாள். செந்தில் ஏதாவது வாய் சவடால் அடித்தால் அதை ஒற்றைப் பார்வையில் அடக்கினாள் நித்யா.
இப்போது நிர்மல் குடும்பத்தில் இருந்த அனைவரும் வந்து விட்டார்கள். அவர்கள் உள்ளே வந்ததும் மனோஜ் வீட்டில் பரபரப்பாக இருந்தது.
அனைவர் முகத்திலும் ஒரு வித டென்ஷன் தான். இரு வீட்டினருக்கும் இரு வீட்டினரையும் பிடிக்காது. ஆனால் பிடித்தது போல காட்டிக் கொள்ள வேண்டுமே? அதனால் அதிகமாக அங்கே அமைதியே நிலவியது.
இரண்டு குடும்பமும் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொண்டு அனைவரும் அமர்ந்தார்கள். வந்ததில் இருந்து ஆஷா மனோஜை பார்த்துக் கொண்டே இருக்க அவனோ அவள் இருக்கும் பக்கம் திரும்பக் கூட இல்லை. அதைக் கண்டு புஷ்பா தன்னுடைய மகளை தான் முறைத்துக் கொண்டிருந்தாள்.
துரைப்பாண்டி மற்றும் பார்வதிக்கு புஷ்பாவை பிடிக்க வில்லை என்றாலும் அரசியல் வாதியாக இருந்தாலும் தன்மையாக பேசும் முத்துவேலைப் பிடித்து விட்டது.
தன்னுடைய தங்கைக்கு வந்த வாழ்வையும் தன்னுடைய வாழ்வையும் ஒப்புமைப் படுத்தி பார்த்துக் கொண்டு அமைதியாக அமர்திருந்தாள் நித்யா,
“என்ன டி அதிரசம் கல்லு மாதிரி இருக்கு?”, என்று செந்தில் கேட்க அவனை முறைத்தாள் நித்யா.
“என்ன டி ஒரு மாதிரி இருக்க?”, என்று கேட்டான் செந்தில்.
“இல்லை என்னோட தங்கைக்கு வந்த வாழ்க்கையை பாருங்களேன். கை நிறைய சம்திக்கிறா. பணக்கார இடத்துல சம்பந்தமும் கிடைச்சிருக்கு. ஏதோ எல்லாரும் நல்ல நிலைமைல இருக்குற மாதிரியும் நாம மட்டும் ஏதோ கஷ்டப் படுற மாதிரியும் தோணுது”, என்று அவள் தளர்வாக சொன்னதும் செந்திலுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது.
எப்போதுமே அவன் என்ன சொன்னாலும் அவனுக்கு சப்போர்ட் தான் செய்வாள். எதற்கும் அதிகம் ஆசைப் படவும் மாட்டாள். ஆனால் இன்று தங்கைக்கு கிடைத்த வாழ்க்கையோடு தன்னுடைய வாழ்க்கையை கம்பேர் செய்யவும் மனைவியின் மன நிலை செந்திலுக்கு வருத்தத்தைக் கொடுத்தது.
இப்படியே அவள் மனநிலை இருந்தால் அவனை வெறுக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று அவன் உள் மனது அவனை எச்சரித்தது.
அவனுக்குமே நிர்மலை நினைத்து ஒரு மாதிரியாக தான் இருந்தது. எந்த வேலை வெட்டிக்கும் போகாத இவன் எங்கே? செல்வாக்கோட இருக்குற நிர்மல் எங்கே என்று அவன் மனமே எண்ணியது. அனைவரும் இருவரையும் தானே ஒப்புமைப் படுத்தி பேசுவார்கள் என்று அவனுக்கு கவலை பிறந்தது.
“என்னைக் கல்யாணம் பண்ணதுனால தானே உனக்கு இப்படி ஒரு நிலைமை. என்னை மன்னிச்சிரு நித்து”, என்று உணர்ந்து மன்னிப்புக் கேட்டான்.
அப்போதும் “அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எதுக்கு மன்னிப்பெல்லாம்?”, என்று நித்யா சொல்வாள் என்று அவன் எதிர் பார்க்க அவளோ “விடுங்க, எல்லாம் நான் வாங்கி வந்த வரம்”, என்று சலிப்பாய்ச் சொல்லிச் சென்றாள்.
அதில் செந்தில் கௌரவம் அடி வாங்க “இதுக்கு மேலயும் சும்மா இருக்க கூடாது. மனோஜ் மச்சான் கிட்ட சொல்லி ஏதாவது பழைய காரை வாங்கி ஓட்டி சம்பாதிக்கணும்”, என்று முடிவெடுத்தான் செந்தில்.
நிர்மலோ சிவானியை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். மனதில் பல வருத்தம் இருந்தாலும் அவன் பார்வையில் முகம் சிவந்தாள் சிவானி. அதற்கு ஆஷா தான் அவள் அருகே அமர்ந்து அவளை கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.
என்ன தான் மனதில் விருப்பம் இல்லாமல் வந்திருந்தாலும் சிவானி நிர்மலுக்கு பொருத்தமாக இருப்பது ஒரு நிறைவைத் தந்தது முத்துவேலுக்கு. மனோஜ் தான் முள் மேல் நிற்பது போல நின்று கொண்டிருந்தான். புஷ்பா பேச்சிய பேச்சுகள் எல்லாம் அவன் அடி மனதில் இருந்து மேலே எழும்பியது, அது எல்லாம் நினைவு வந்ததும் புஷ்பாவை அவனால் எதிர்க் கொள்ள முடியவில்லை. கூடவே ஆஷாவின் ஆளைப் பருகும் பார்வையும் அவனை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியது. இப்படியே நிமிடங்கள் கடக்க நிச்சயதார்த்தம் நல்ல படியாக நடந்து முடிந்தது.
ஆஷா குடும்பம் கல்யாண தேதியை முடிவெடுத்து விட்டு தான் கிளம்பிச் சென்றது.
மதுரையில் தான் திருமணம் என்பதால் அனைவரும் ஊருக்கு சென்றார்கள். நித்யாவும் திருமணத்தை காரணம் சொல்லி மீண்டும் அன்னையின் வீட்டில் டேராப் போட்டாள். மீண்டும் பார்வதி வீட்டுக்கு வந்ததும் சமையல் வேலையில் இருந்து விடுதலை என்று நினைத்தாள் திவ்யா.
ஆனால் பார்வதி முன்னே போல எந்த சமையல் வேலையிலும் ஆர்வம் காட்ட வில்லை. திவ்யா சமைக்காமல் இருந்தால் கூட பார்வதி மகளுக்கு சீர் செய்ய பொருள்கள் வாங்க வேண்டும் என்று சொல்லி வெளியே கிளம்பியதால் சமையல் பொறுப்பு திவ்யா தலையிலே விடிந்தது.
ராம், ஜெகன், மூர்த்தி அதிகம் உதவியாக இருந்தார்கள். முன்பு போல ஷெட்டிலே தங்கிக் கொண்டாலும் முன்னே நின்று அனைத்தையும் செய்தான் மனோஜ். சிவானியின் சம்பளப் பணம், கூடவே மனோஜ் சேர்த்து வைத்த பணம் என அனைத்திலும் சிவானிக்கு நகைகளை வாங்கினாள் பார்வதி.
கல்யாணத்துக்கு தங்கைக்கு என்ன செய்ய என்று நித்யா செந்திலிடம் புலம்ப அதைக் கேட்ட மனோஜ் சிவானி திருமணத்திற்கு என்று வைத்திருந்த பணத்தில் இருந்து கொஞ்சம் எடுத்து செந்திலிடம் கொடுத்தான்.
“மாப்ள”, என்று சொல்லி செந்தில் தடுமாற “வச்சிக்கோங்க மாமா”, என்றான் மனோஜ்.
“இல்லை வேண்டாம்”
“அக்கா, சிவானி கல்யாணத்துக்கு எதுவும் செய்ய முடியாம நிக்குது. இந்த பணத்துல இருந்து ஏதாவது செஞ்சு போடுங்க”
“இல்லை மாப்ள, வேலை வெட்டிக்கு போகாதவனுக்கு வெட்டி கௌரவம் எதுக்கு?”
“பரவால்ல மாமா வச்சிக்கோங்க”
“கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத மாப்ள. பொழைப்புக்கு ஏதாவது வழி சொல்லேன்”
“நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா ஒரு வழி சொல்றேன். இப்போதைக்கு ஏதாவது டிராவல்ஸ்ல சேத்து விடுறேன். கொஞ்ச நாள் வேலை பாருங்க. அப்புறம் ஏதாவது கார் வந்தா சொல்றேன். அப்ப டிராவல்ஸ் ஆரம்பிச்சிறலாம்”, என்று சொன்னதும் அவனை நன்றியோடு பார்த்தான் செந்தில். அவன் அந்த அளவுக்கு மாறினதே மனோஜ்க்கு நிறைவாக இருந்தது.
ஆஷா வீட்டில் முத்துவேலே ஆட்களை வைத்து அனைத்தையும் பார்த்துக் கொண்டார். அண்ணனின் திருமணத்தில் ஆஷாவும் சந்தோஷமாக இருந்தாள்.
திருமண நாளும் வந்தது. திருமணத்தை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார் முத்துவேல். பெண் வீட்டாரைப் பற்றி ஏதாவது கேள்வி எழும் போது அடுத்தவர்களை கவனிக்க செல்வதைப் போல அதை தவிர்த்தார் முத்துவேல். குறித்த நேரத்தில் அனைவரின் ஆசீர்வாதத்தோடு திருமணமும் நடந்தது. புஷ்பாவைத் தவிர மற்ற அனைவரும் சந்தோசமாக தான் இருந்தார்கள்.
திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குள் நிர்மலுடன் அடி எடுத்து வைத்தாள் சிவானி. ஆஷா தான் அவர்களுக்கு ஆரற்றி சுற்றினாள். வேனில் வந்த சிவானியின் சொந்தம் எல்லாம் வீட்டுக்குள் செல்ல மனோஜ் வெளியவே நின்றான்.
சிவானியின் சொந்த பந்தங்கள் எல்லாம் நிர்மல் வீட்டின் செழுமையைப் போற்ற அதைக் கண்டு இகழ்வாக பெண் வீட்டாரைப் பார்த்தாள் புஷ்பா. அதை சிவானியும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.
சிவானி சாமி ரூமுக்கு சென்று விளக்கேற்றியதும் இருவருக்கும் பால் பழம் கொடுக்கப் பட்டது. மனோஜ் வெளியவே நிற்பதை அறிந்த சிவானி ஒரு நொடி யோசித்து விட்டு “அத்தை”, என்று புஷ்பாவை அழைத்தாள்.
“இவளுக்கு நான் அத்தையா?”, என்று கடுப்பு வந்தாலும் வேண்டா
வெறுப்பாக “என்ன?”, என்று கேட்டாள் புஷ்பா.
“எங்க அண்ணன் வெளிய நிக்குது. கொஞ்சம் உள்ள கூப்பிடுங்களேன். மறுவீட்டுக்கு எப்ப போகணும்னு கேக்கணும்”, என்று சொன்னதும் உள்ளுக்குள் புசுபுசுவென்று கோபம் பொங்கினாலும் அனைவரின் முன்னிலையில் அவளால் எதுவும் சொல்ல முடியாமல் போனது. வேறு வழி இல்லாமல் அவனை அழைக்கச் சென்றாள் புஷ்பா. அதை நக்கலாக பார்த்துக் கொண்டிருந்தாள் சிவானி.
“எங்க அண்ணனையா மிரட்டுறீங்க? இப்ப பாத்தீங்களா, நீங்களே அவனை உள்ள வான்னு சொல்லப் போறீங்க? இன்னும் உங்களுக்கு இருக்கு”, என்று மனதில் எண்ணிக் கொண்டாள் சிவானி.
அப்போது அவள் கரம் பற்றி தன் பக்கம் திருப்பினான் நிர்மல். அவள் நிமிர்ந்து பார்க்கவும் “கொஞ்சம் என்னையும் கவனிங்க மேடம்”, என்று சிரித்தான்.
“ப்ச் கையை விடுங்க. எல்லாரும் பாக்குறாங்க. எங்க அத்தை கண்ணுல இதெல்லாம் பட்டுச்சு பார பச்சமே பாக்காம அசிங்க படுத்திரும்”, என்று சிறு சிரிப்புடன் மிரட்டினாள்.
அவன் படக்கென்று அவள் கையை விட்டதும் “இவ்வளவு பயமா உங்களுக்கு?”, என்று சிரித்தாள்.
“சிரிக்கவா செய்ற? நைட் இருக்கு டி உனக்கு”, என்று அவன் முணுமுணுத்ததும் அதன் அர்த்தம் புரிந்து முகம் சிவந்தாள் சிவானி.
ஆஷாவோ தன்னுடைய உறவு பெண்களிடம் வம்பிழுத்த படியே மனோஜை சைட் அடித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன அத்தான், வெளியவே நீக்குறீங்க?”, என்று அவனிடம் வம்பிழுத்தாள் ஆஷா.
“என்னது அத்தானா?”, என்று அவன் அதிர்ந்து விழிக்க “என்னோட அண்ணியோட அண்ணன் எனக்கு அத்தான் தானே?”, என்று அவள் சிரிக்க அவன் பல்லைக் கடிக்க அப்போது அங்கே வந்த புஷ்பாவுக்கு இதயமே வெடித்து விட்டது.
“ஆஷா”, என்று கத்திக் கொண்டே அவர்கள் அருகே சென்ற புஷ்பா “இங்க என்ன டி செய்ற?”, என்று கேட்டாள்.
“அத்தான் வெளியவே நிக்குறாங்கல்ல மா. அதான் உள்ள கூப்பிடுறேன்”, என்று சொல்லி இருவரின் ரத்த அழுத்தத்தையும் எகிரச் செய்தாள்.
“என்ன டி உளறுர? இவன் உனக்கு அத்தானா?”
“ஆமா, அண்ணியோட அண்ணன் எனக்கு அத்தான் தானே? போமா ஒரு ஸ்கூலுக்கு சொந்தக்காரியா இருந்துட்டு உனக்கு உறவு முறையே தெரியலை”, என்று சொல்லி விட்டு வேறு பக்கம் சென்று விட்டாள்.
“ஐயோ இவ என்ன இப்படி வாயடிக்கிறா? இப்ப இந்த அம்மா என்னை காச்சு காச்சுன்னு காச்சுமே?”, என்று யோசித்த படி நின்றிருந்தான் மனோஜ்.
அவன் நினைத்த படி இல்லாமல் “உன்னை உன் தங்கச்சி கூப்பிடுறா. உள்ள வா”, என்று வீராப்பாக சொல்லி விட்டு சென்று விட்டாள் புஷ்பா. ஒரு விதமான தடுமாற்றத்துடன் உள்ளே சென்ற மனோஜ் “என்ன சிவானி?”, என்று கேட்டான்.
“இந்த அண்ணன் என்னை இன்னும் அம்முன்னு கூப்பிடலையே?”, என்று எண்ணிய சிவானி “மறு வீட்டுக்கு எப்ப கிளம்பணும்னு நிர்மல் கேக்க சொன்னாங்க”, என்றாள்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்ப வேண்டியது தான். சரி நான் வெளிய நிக்குறேன்”, என்று சொல்லி விட்டு அவன் வெளிய கிளம்ப போக அங்கே வந்த நிர்மல் “என்ன மச்கான், வெளிய நிக்குற? இங்க வா”, என்று சொல்லி தன்னருகே சோபாவில் அமர வைத்து பேசிக் கொண்டிருந்தான். நிர்மலை, நன்றியோடு சிவானி பார்த்தாள் என்றால் புஷ்பாவோ கொலை வெறியாக பார்த்தாள்.
ஒரு வித அவஸ்தையில் மனோஜ் இருக்க ஆஷாவோ அவனையே தான் சைட் அடித்துக் கொண்டிருந்தாள். “இருக்குற நிலைமை பாத்தாதுன்னு இவ வேற ஆளை விழுங்குற மாதிரி பாத்துட்டு இருக்கா?”, என்று பல்லைக் கடித்தான் மனோஜ்.
அதே போல மறுவீட்டுக்கு அனைவரும் கிளம்பும் போது மனோஜ் கேட்டுக் கொண்டதால் பெண்ணும் மாப்பிள்ளையும் மனோஜின் காரின் பின் இருக்கையில் அமர்ந்தார்கள். மற்றவர்கள் அனைவரும் வேனில் ஏறியதால் வேன் கிளம்பியது.
மனோஜும் காரை ஸ்டார்ட் செய்தான். அவன் அருகில் இருந்த இடம் சும்மா இருக்க கார் கிளம்பும் நேரத்தில் அவன் அருகில் ஓடி வந்து அமர்ந்தாள் ஆஷா.
அவள் அவன் அருகே அமர்வாள் என்று எதிர் பார்க்காத மனோஜ் மூச்சு முட்டிப் போனான். அவர்கள் இருவரையும் கண்டு கொண்டாலும் கண்டு கொள்ளாத தோரணையுடன் கதை பேசிக் கொண்டு வந்தார்கள் மணமக்கள்,. அவர்களும் இப்படி ஒரு சூழ்நிலையை மனோஜுக்கும் ஆஷாவுக்கும் இடையே உருவாக்க தானே இந்த திருமணத்தை இவ்வளவு விரைவாகச் செய்தார்கள்.
“உன்னை யாரு டி இங்க உக்காரச் சொன்னா?”, என்று அடி குரலில் சீறினான் மனோஜ்.
“புருஷன் பக்கத்துல பொண்டாட்டி தானே உக்காரனும்?”, என்று நக்கலாக கேட்டாள் ஆஷா.