அத்தியாயம் 17 
என் விழி பேசும்
மொழிகளை மொழி
பெயர்க்க தெரிந்தவன்
நீ மட்டுமே!!!
ஏற்கனவே இந்த விஷயம் முத்துவேல் மூலம் தெரிந்ததால் சிவானி சொன்னதும் கொஞ்சம் அதிர்ச்சி தான் மனோஜுக்கு. இருந்தாலும் மனதில் எழுந்த வலியை மறைக்க முடியாமல் “ஏன் சிவானி, இந்த அண்ணன் மாப்பிள்ளை பாக்க மாட்டான்னு நீயே உனக்கு மாப்பிள்ளை பாத்துக்கிட்டியா?”, என்று ஆழ்ந்த குரலில் கேட்டான். 
அவன் சொன்னதைக் கேட்டு மனது காயப் பட்டாள் சிவானி. என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அப்படியே அவள் இருக்க “கல்யாணம் கூட நாங்க பண்ணி வைக்கணுமா? இல்லை நீயே பண்ணிக்க போறியா சிவானி?”, என்று தேள் கொடுக்கு போல கொட்டினான். 
“அண்ணா வார்த்தையால என்னை கஷ்டப் படுத்தாத. இதுக்கு எனக்கு என்ன விளக்கம் சொல்லன்னு தெரியலை. நான் விரும்புறது உன்னோட பிரண்ட் நிர்மலை தான். எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. பிளீஸ் அண்ணா. என்னை தப்பா நினைக்காதே”
“நிர்மலா? அவனை எப்படி உனக்கு தெரியும்?”, என்று தெரியாதது போல கேட்டான். 
“பேஸ்புக்ல தான் தெரியும். ஆஷா நம்ம வீட்டுக்கு வந்துட்டு போன அப்புறம் என்கிட்ட பேசவே இல்லை. அதனால தான் நிர்மல் கிட்ட பேசி அவ கிட்ட பேசலாம்னு பேச ஆரம்பிச்சேன். ஆனா நிர்மலை ரொம்ப பிடிச்சிருச்சுண்ணா. என்னையே அறியாம தான் எல்லாமே….”
“ஓ, அவங்க வீட்டை பத்தி உனக்கு என்ன தெரியும்னு அவன் காதலை ஏத்துகிட்ட? அவங்க அம்மா ஸ்டேட்டஸ் பாப்பாங்க உனக்கு தெரியுமா?”
“தெரியும் அண்ணா. நிர்மல் தான் நான் வீட்ல சம்மதம் வாங்குறேன், கல்யாணத்துக்கு நான் பொறுப்பு. அப்புறம் நான் உன்னை பாரின்க்கு கூட்டிட்டு போயிறேன்னு சொன்னார்”
“ஓ அந்த அளவுக்கு பேசிட்டீங்க. சரி சந்தோஷம். அவன் கிட்டயே எல்லாம் சொல்லி பாத்துக்க. நாங்க கல்யாணத்துக்கு வரலாமா இல்ல வேண்டாமா?”, என்று அவன் கேட்கவும் அவன் குரலில் இருந்த வலி அவள் மனதை எதுவோ செய்ய ஏங்கி ஏங்கி அழுதாள். 
அவள் அழு குரலை கேட்க சகிக்காதவன் உடனே போனை வைத்து விட்டான். கோபத்தில் தான் போனை வைத்து விட்டான் என்று எண்ணிய சிவானி அழுது கொண்டே இருந்தாள். 
சிவானி விரும்பியது நிர்மலைத்தான் என்று நிம்மதியாக இருந்தாலும் எதுவோ ஒரு பயம் அவன் மனதைக் கவ்வியது. அந்த பயம் புஷ்பாவை நினைத்து தான். புஷ்பா பேசியதை நினைத்து திக் திக் என்று இருந்தாலும் விதியை என்ன செய்ய என்று நினைத்தவன் வெகு நாட்களுக்கு பிறகு நிர்மலை போனில் அழைத்தான். 
தன்னிடம் உண்மையைச் சொல்லவில்லை என்று சிவானி மேல் கோபம் எழுந்தாலும் அவர்கள் காதலை அவன் மனது அங்கீகரிக்க தான் செய்தது. 
மனோஜ் நம்பர் டிஸ்ப்ளேயில் தெரியவும் “இவ்வளவு நாள் கழிச்சு மனோஜ் போன் பண்ணுறான்? எதுக்குன்னு தெரியலையே? ஒரு வேளை சிவானி எங்க காதலைப் பத்தி இவன் கிட்ட சொல்லிட்டாளா?”, என்று எண்ணி போனை எடுத்து “சொல்லு மனோஜ் எப்படி இருக்க?”, என்று கேட்டான். 
“உன் தங்கச்சி என்னையே சுத்தி வந்து என்னோட நிம்மதியைக் கெடுத்தான்னா நீ என்னோட தங்கச்சியை உன் பக்கம் இழுத்துருக்க அப்படித் தானே?”, என்று மனோஜ் கேட்டதும் அரண்டு போனவன் “டேய் மனோஜ் அப்படி இல்லை டா, நான் சொல்றதை ஒரு நிமிஷம்…”, என்று விளக்கம் சொல்ல வந்தான். 
“எந்த விளக்கமும் எனக்கு தேவையில்லை நிர்மல். ஆனா உன் குடும்பத்தால என்னோட தங்கச்சிக்கு எந்த ஆபத்தும் வராதுன்னு நீ உத்தரவாதம் கொடுத்தா நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்”, என்றான். 
“சிவானி என்னோட உயிர் டா. அவளுக்கு எதுவும் ஆகாம நான் பாத்துக்குறேன்”, என்று மனசார உறுதி கொடுத்தான் நிர்மல். 
“நம்புறேன். அப்புறம் உங்க அப்பா எப்ப சம்பந்தம் பேச வரன்னு என்கிட்ட கேட்டார்”
“என்னது எங்க அப்பாவா?”, என்று கேட்டவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 
“ஆமா, உங்க அப்பாவே தான். இந்த வார கடைசில அவங்களை வரச் சொல்லு. சென்னைக்கு வருவாங்களா, இல்லை ஊருக்கு வருவாங்களான்னு மட்டும் உங்க அப்பா கிட்ட கேட்டுச் சொல்லு. அப்புறம் தான் நான் அம்மா அப்பா கிட்ட பேசணும்”, என்று சொல்லி விட்டு எதுவும் சொல்லாமல் வைத்து விட்டான். 
“கோப படாதே மச்சான். என்னோட தங்கச்சிக்கு உன்னை மாப்பிள்ளையாக்க தான் நான் இவ்வளவு அவசரமாக கல்யாணம் பண்ணுறேன்”, என்று மனதில் பேசிக் கொண்டவன் தன்னுடைய தந்தைக்கு அழைத்தான். 
“சொல்லு நிர்மல்”, என்றார் முத்துவேல். 
“தேங்க்ஸ் பா, ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்”
“நீயா குடும்ப மானத்தை வாங்குறதுக்கு முன்னாடி நாங்களே பண்ணிருவோம்னு நினைச்சு தான் இந்த முடிவு எடுத்துருக்கேன். அந்த பையன் உன்கிட்ட பேசினானா?”
“இப்பவும் பிள்ளைங்க வாழ்க்கையை விட கௌரவம் தான் முக்கியமா இவருக்கு?”, என்று மனதில் நினைத்தாலும் “எப்படியோ கல்யாணம் முடிஞ்சா சரி தான்”, என்று எண்ணியவன் “மனோஜ் போன் பேசினான் பா. இந்த வீக்கண்ட் சம்மந்தம் பேச வரச் சொன்னான். நீங்க சென்னை வறீங்களா? இல்லை சிவானி வீட்டில் எல்லாரையும் ஊருக்கு வரச் சொல்லவாப்பா?”, என்று கேட்டான். 
“நீங்க ரெண்டு பேரும் சென்னைல தானே இருக்கீங்க? அந்த பையனோட அம்மா அப்பாவும் அங்க தானே இருக்காங்க. நாங்களே அங்க வந்துரோம்னு சொல்லிரு”, என்று சொல்லி விட்டு வைத்து விட்டார். 
உடனே மனோஜை அழைத்து விஷயத்தை சொல்லி விட்டு “என் மேல ரொம்ப கோபமா டா?”, என்று கேட்டான் நிர்மல். 
“இதுல கோப பட ஒண்ணுமே இல்லை. ஒரு வார்த்தை சிவானியாவது, நீயாவது என்கிட்ட சொல்லிருக்கலாம். உங்க அப்பா வந்து சொன்ன பிறகு தான் நான் விஷயத்தை தெரிஞ்சிக்கணுமா?”, என்று கேட்டு விட்டு வைத்தான். 
நிர்மலிடம் சாதாரணமாக பேசினாலும் மனோஜ்க்கு ஆஷா மேலும் கோபம் வந்தது. “எதுக்கு எடுத்தாலும் பாஸ் பாஸ்ன்னு என்னை சுத்தி வருவா. இந்த விஷயத்தை அந்த லூசு கூட என்கிட்ட சொல்லலைப் பாரேன்? என் தங்கச்சியே என்கிட்ட சொல்லலை. அவ எப்படிச் சொல்லுவா?”, என்று விரக்தியாக எண்ணிக் கொண்டான் மனோஜ். 
அப்போது சிவானியை அழைத்தான் நிர்மல். அவள் போனை எடுத்து அழுது கொண்டே இருக்கவும் “மனோஜ் திட்டிட்டானா சிவானி?”., என்று கேட்டான். 
“ஆமா, உங்களுக்கு எப்படித் தெரியும்?”, என்று அவள் கேட்டதும் நடந்த அனைத்தையும் சொன்னான்,.
“ஓ உங்க அப்பாவே அண்ணா கிட்ட பேசிட்டாங்களா? என்கிட்ட இந்த அண்ணன் போட்டு வாங்கிருக்கு பாருங்களேன். ஆனா ரொம்ப கஷ்டமா பேசுச்சு. எனக்கும் வருத்தமா இருக்கு”
“விடு சிவானி, கொஞ்ச நாள்ல அவன் கல்யாணமும் முடிஞ்சா அவன் ஹேப்பியா ஆகிறுவான்”, என்று சொல்லி அவளைத் தேற்றினான். 
அதே நேரம் மனோஜ் தன்னுடைய பெற்றோர்களிடம் விஷயத்தைச் சொல்ல பார்வதியும் துரைபாண்டியும் “அந்த வீட்லயா, அவங்க என்னோட பையனை கொல்லப் பாத்துருக்காங்க. அவங்க வீட்ல நம்ம பொண்ணைக் கொடுக்க கூடாது”, என்று குதித்தார்கள்.
சிவானி காதலைச் சொல்லாமல் முடிக்கப் பார்த்த மனோஜ் அவர்கள் பிடிவாதம் பிடிக்கவும் சிவானியின் காதலைச் சொன்ன பிறகு தான் வாயை மூடினார்கள். அவன் மேலும் பேசி பேசிக் கரைக்கவும் அரை மனதாக சம்மதம் சொன்னார்கள். 
அவனிடம் சம்மதம் சொன்ன பார்வதியும் துரைப்பாண்டியும் சிவானியை கண்டிக்கவும் தவற வில்லை. பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவனின் வார்த்தைகளால் அதிகம் காயப் பட்டாள் சிவானி. 
இந்த விஷயம் எல்லாம் ஆஷா காதுக்கும் நிர்மல் மூலம் சென்றது. அண்ணனின் காதலாவது நிறைவேறியதே என்று சந்தோஷம் கொண்டாள். அது மட்டுமில்லாமல் சிவானிக்கு அழைத்து ஆதரவாக பேசினாள் ஆஷா. 
இங்கே முத்துவேல் தான் ஜெயசந்திரன் வீட்டில் எப்படி பேச என்று விழி பிதுங்கினார். விஷயம் அறிந்த புஷ்பாவே தாம் தூம் என்று குதிக்க தான் செய்தாள். அவளை அடக்கவே ஒரு வழியாகி விட்டார். மதுரையில் இருக்கும் அத்தனை பேரும் அவருக்கு பயப்பட கட்டிய மனைவியும் பெற்ற பிள்ளைகளும் அவர் பேச்சைக் கேட்பதே இல்லை. 
அவளை ஒரு வழியாக சமாளித்தாலும் முகத்தை தூக்கிக் கொண்டு அமர்ந்திருந்த மனைவியை நினைத்து வருத்தமாக தான் இருந்தது. 
“இங்க பாரு புஷ்பா, நிலைமை கை மீறி போயிருச்சு. நாம பிடிக்கலைன்னாலும் செஞ்சு தான் ஆகணும். முன்னாடியே பொறுமையா ஹேண்டில் பண்ணு பண்ணுன்னு உன்கிட்ட சொன்னேன். நீ பாப்பாவை கண்டிக்க கண்டிக்க அவ தீவிரமா அந்த பையனை நினைக்க ஆரம்பிச்சா. இப்ப அது நிர்மல் கல்யாணத்துல வந்து நிக்குது. இதே மாதிரி ஆஷா கல்யாணமும் அந்த பையன் கூட தான் நடந்தாலும் நடக்கலாம்”, என்றார் முத்துவேல். 
“கண்டிப்பா அப்படி எல்லாம் நடக்க கூடாது. அந்த பையன் மனோஜ் கிட்ட பேசினா நிர்மல் கல்யாணமும் நடக்காது”
“நீ புரியாம பேசுற. உன்னோட பிள்ளைங்க தீவிரமா இருக்கும் போது அந்த பையன் கிட்ட போய் என்ன பேச? நிர்மல் சொன்னதைக் கேட்ட தானே? என்ன என்னை ஜெயில்ல வைக்கணும்னு பிளான் போடுறியா?”
“சே என்னங்க இப்படி எல்லாம் சொல்றீங்க?”
“வேற என்ன செய்ய சொல்ற? நிர்மல் கையால கம்ப்லைண்ட் எழுதிக் கொடுத்துருக்கான். வேற என்ன செய்யன்னு தெரியாம தான் நானே இந்த முடிவு எடுத்துருக்கேன். ஜெயா வீட்டுக்கு வேற தகவல் சொல்லணும்? கட்சில வேற ஆள் ஆளுக்கு கேள்வி கேப்பாங்க. பேசாம எதுவுமே வேண்டாம், பிள்ளைங்க மட்டும் போதும்னு தோணுது”
“என்னங்க, இப்படிச் சொல்றீங்க? உங்க அரசியல் ஆசை?”
“வெறும் ஆசையை வச்சு என்ன செய்ய சொல்லு? என்னோட எல்லாமே முடிய தான் போகுது. எனக்கு அடுத்து நிர்மல் வருவான்னு பாத்தா அது கண்டிப்பா நடக்காதுன்னு தெரிஞ்சு போச்சு. அப்ப நான் ஜெயாவுக்கு தான் விட்டுக் கொடுக்கணும்”, என்று சலித்துப் போய் அவர் பேசியதும் புஷ்பா வாயை மூடிக் கொண்டாள். 
இருவரும் ஜெயச்சந்திரன் வீட்டுக்கு சென்றார்கள். அங்கே அவர்களை ஆவலுடன் வரவேற்றார்கள். விஷயத்தை எப்படிச் சொல்ல என்று தடுமாறினாலும் புஷ்பா நிர்மல் காதலைப் பற்றி ஒரு வழியாகச் சொல்லி விட்டாள். 
அவர்களும் இதை எதிர் பார்க்க வில்லை என்றாலும் ஒரு வாராக தங்களை சாமளித்துக் கொண்டார்கள். “கவலைப் படாதீங்க அண்ணி. நிர்மல் சந்தோஷமா இருந்தா சரி தான். பேசாம நிர்மல் கல்யாணத்தன்னைக்கு ஆஷாவுக்கும் ஜெயாவுக்கும் சேத்து கல்யாணம் வச்சிருவோமா?”, என்று ஆசையாக கேட்டாள் அன்னபூரணி.. 
இப்போது என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார்கள். பின் முத்துவேல் தான் சிறு வயதில் இருந்து நடந்த அத்தனையையும் சொல்லி விட்டார். எப்படி இருந்தாலும் இந்த விஷயம் அவர்களுக்கு தெரிய தான் வரும் என்பதால் தான் அனைத்தையும் சொல்லி விட்டார். ஆஷாவின் மனதில் இருப்பதைக் கேட்டு அனைவருக்கும் திகைப்பு தான். 
ஆஷா மனதில் இன்னொருவன் இருக்கிறான் என்று தெரிந்ததில் ஜெயச்சந்திரனுக்கு அதிக வருத்தமாக இருந்தது. ஆனாலும் வேறொருவனை விரும்புபவளை கட்டாயப் படுத்தி மணக்க அவன் விரும்ப வில்லை. தன்னுடைய மனதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான். 
வாசு தேவனோ ஸ்கூல் கை விட்டு போய் விடுமோ என்று பதறிப் போனார். 
அன்னபூரணி மட்டும் தான் ஆஷா தன்னுடைய வீட்டுக்கு மருமகளா வர மாட்டாளோ என்று புலம்பிக் கொண்டிருந்தாள்.  
“என்னோட ரெண்டு பிள்ளைகளும் எங்க பேச்சை கேக்கலை வாசு. நிர்மல் அவனே அவனோட கல்யாணத்தை முடிவு பண்ணிட்டான். ஆஷா அந்த பையனை விரும்புறா. அவ கல்யாணத்துக்கு நாங்க சம்மதிக்கலை தான். ஆனாலும் அவ அந்த பையனை விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணுவான்னு எனக்கு தோணலை. எப்படின்னாலும் உங்களுக்கு விஷயம் சொல்லணும்னு தான் இன்னைக்கே சொல்லிட்டேன். மனசு மாறுவான்னு எவ்வளவோ போராடிட்டோம். அவ எப்பவுமே ஜெயாவை கட்டிக்க மாட்டானு தான் தோணுது. நீங்க ஜெயாவுக்கு வேற நல்ல பொண்ணா பாருங்க. அவனும் எத்தனை நாளைக்கு வெயிட் பண்ணுவான்? அப்புறம் நிர்மலுக்கு அரசியல்ல ஆர்வம் கிடையாது. அதனால ஜெயாவை எனக்கு அப்புறம் அரசியல் வாரிசாக்குறேன்”, என்று சொன்னதும் வாசுதேவன் முகம் ஒளிர்ந்தது. 
ஜெயச்சந்திரனுக்கும் பதவி ஆசை உண்டு. சிறு வயதில் இருந்து பெரியவர்கள் பேசியதால் தான் ஆஷாவை திருமணம் செய்ய விரும்பினான். மற்ற படி தீராக் காதல் அப்படி எல்லாம் அவனுக்கு அவள் மேல் இல்லை. மாமாவுக்கு அப்புறம் நான் தானா என்று அவன் சிந்தனை அரசியல் பக்கம் சென்றது. வாசுவுக்கும் அப்படியே. 
வாசுதேவன் பதவி, பள்ளி ஏதாவது ஒன்று தன் மகனுக்கு வரவேண்டும் என்று ஆசைப் பட்டார். பள்ளி இல்லை என்றாலும் பதவி வருவது பெரியது தானே? இளம் வயதில் அவன் அரசியலில் குதித்தால் பல பள்ளிகளை வாங்க முடியுமே? அது நிறைவேறியதில் சந்தோசமான வாசு நிர்மல் திருமணத்தைப் பற்றி ஆவலாக பேச ஆரம்பித்து விட்டார். 
சொன்ன படி அந்த வாரக் கடைசியில் நிர்மலின் மொத்தக் குடும்பமும் அதாவது புஷ்பா, முத்துவேல், நிர்மல், ஆஷா, அன்னபூரணி, வாசுதேவன் அனைவரும் சிவானி வீட்டுக்கு சென்றார்கள். ஜெயச்சந்திரன் மட்டும் வரவில்லை. முத்துவேல் சாதாரண மனநிலையில் இருக்க புஷ்பா தான் வேண்டா வெறுப்பாக வந்தாள். 
நிர்மல் மற்றும் ஆஷாவோ தங்கள் இணையைக் காணும் ஆவலில் வந்தார்கள்.
அவர்கள் வருவதற்கு முன் தினமே மனோஜும் நித்யா குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து விட்டான். அவன் கிளம்புவதற்கு முன் தினமே திலீபனிடமும் நித்யாவிடம் தன்னுடைய பெற்றோர்களை வைத்து பேசச் சொன்னான். 
துரைப்பாண்டி தன்னுடைய இரு பிள்ளைகளிடம் சிவானிக்கு நிச்சயம் செய்ய வருகிறார்கள் என்று சொல்லி அவர்களை சென்னைக்கு வரச் சொல்ல “அப்பா, நம்ம சிவானி நிச்சயதார்த்ததுல அக்கா நான் இல்லாமலா? மனோஜ் வரும் போது எங்களையும் கூட்டிட்டு போகச் சொல்லுங்க”, என்றாள் நித்யா. 
திலீபனோ “இப்ப சொன்னா எப்படி வர முடியும்? நாங்க கல்யாணத்துல மாப்பிள்ளையை பாத்துக்குறோம். நாங்க வந்து என்ன செய்ய? நீங்களே எல்லாம் பாருங்க”, என்று சொல்லி வைத்து விட்டான். 
துரைப்பாண்டி அதை மனோஜிடம் சொல்ல அவன் நித்யா குடும்பத்தை மட்டும் தன்னுடைய காரில் ஏற்றிக் கொண்டு சென்னை சென்றான்.