“மனோஜ் வீட்ல ஒத்துக்குவாங்களா? நான் வேற அம்மா தான் அவனை ஆக்ஸிடெண்ட் பண்ணதுன்னு சொல்லிட்டேன். அதனால அவங்க அம்மா அப்பா ஒத்துப்பாங்களான்னு தெரியலை. அதையும் விட மனோஜ். அவன் என்னை விட்டே விலகிப் போறான்? அவன் தங்கச்சியை மட்டும் உனக்கு கட்டிக் கொடுப்பானா?”
“எனக்கும் எதுவும் தெரியலை ஆஷா. எல்லாமே வெயிட் பண்ணி தான் பாக்கணும்”
“நான் சிவானி கிட்ட பேசவா அண்ணா?”
“ஹிம் சென்னை போன அப்புறம் பேசு”
இப்படி இருவரும் கதை பேசிய படியே பயணத்தை தொடர்ந்தார்கள். 
வந்த பிள்ளைகளுக்கு ஒரு வாய் தண்ணீர் கூட கொடுக்க வில்லை என்ற குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லாமல் “இப்ப என்னங்க செய்ய? அந்த மனோஜ் பயலை மிரட்டுவோமா? ஆஷா விசயத்துல அவனை மிரட்டினதுல இருந்து அவன் ஆஷா பக்கமே வரலை. இவ தான் அவன் பின்னாடி சுத்துறா. அவனை அவனோட தங்கச்சியை கொன்னுறுவோம்னு மிரட்டினா அவன் அவனோட தங்கச்சியை தடுத்துருவான்”, என்று சொன்னாள் புஷ்பா. 
“பொறுமையா இரு புஷ்பா. யோசிப்போம்”, என்று சொன்ன முத்துவேல் தளர்வாய் அமர்ந்தார். 
அப்போது உள்ளே வந்த முத்துவேலின் டிரைவர் “ஐயா வண்டி ரொம்ப ஸ்லோ ஆகிருச்சுங்க. சர்வீஸ் விடணும்னு சொல்லிருந்தேனே? நாளைக்கு காலைல நீங்க எப்ப கிளம்புவீங்கன்னு சொன்னா நான் நேரம் பாத்து விட்டுருவேங்க”, என்றான். 
“நான் நாளைக்கு எங்கயும் போகலை செல்வம். நீ சர்வீஸ் விட்டுரு”, என்று முத்துவேல் சொன்னதும் டிரைவர் சென்று விட்டான். 
சென்னை வந்த ஆஷாவும் நிர்மலும் சிவானிக்கு அழைத்தார்கள். முதலில் நடந்த அனைத்தையும் நிர்மல் அவளிடம் சொல்ல என்ன நடக்குமோ என்ற கவலை சிவானியையும் தொற்றியது. 
அதன் பின் “கள்ளி, மறைச்சுட்டல்ல? இனி உன்னை அண்ணின்னு கூப்பிடணுமா?’, என்று சொல்லி ஆஷா பேசியதும் இறுக்கம் தளர்ந்த சிவானி “அடி பாவி, நீ என்னமோ என் போனை எடுத்துட்ட? என் மெஸ்ஸேஜ்க்கும் பதில் அனுப்பிட்ட? எதுக்கு நீ என்கிட்ட பேசலை?”, என்று ஆரம்பித்து சிவானியும் பேச இருவருக்கும் பேச்சு சுவாரசியமாக சென்றது. 
அடுத்த நாள் மதியம் முத்துவேலுக்கு கட்சி ஆபீஸில் இருந்து அழைப்பு வர, முத்துவேல் டிரைவரை தேடினார்.  
“ஐயா, கார் மெக்கானிக் ஷெட்ல இருக்குங்க. இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்னு அந்த தம்பி சொல்லுச்சு”, என்றார் செல்வம். 
“அப்படியா? அவசரமா போகணுமே? இன்னொரு காரை புஷ்பா எடுத்துட்டு போயிட்டா. சரி நீ எங்க வண்டியை விட்டுருக்க?”
“அடுத்த தெருவுல இருக்குற கடைல தாங்க”, என்று சொன்னதும் முத்துவேல் சிறிது நேரம் ஏதோ யோசனைக்கு சென்று விட்டார். 
“ஐயா, நான் வேணா ஒரு பத்து நிமிசத்துல எடுத்துட்டு வந்துரவா?”, என்று கேட்டார் செல்வம். 
“வேண்டாம் செல்வம். கார் ஷெட்ல நிக்குற புல்லட்டை மட்டும் வெளிய எடுத்து விடு. நான் அதுல போய்க்கிறேன். அப்புறம் சர்வீஸ் விட்ட காரை நீ எடுக்க போக வேண்டாம். நான் பாத்துக்குறேன்”, என்று சொன்னதும் செல்வம் திகைப்பாய் பார்த்து விட்டு சென்று விட்டார். 
வெகு நாட்களாக எடுக்காத புல்லட்டில் கட்சி ஆபீஸ் சென்றவர் மாலை ஆறு மணி போல் மனோஜ் ஷெட்டுக்கு சென்றார். 
அவரைக் கண்டதும் மனோஜ்க்கு திகைப்பு தான். பல முறை புஷ்பா வந்து அவனை மிரட்டியிருக்கிறாள். ஆனால் முத்துவேல் வந்ததில்லை. அவரை அவன் நேருக்கு நேர் பார்த்ததும் இல்லை. எப்போதாவது கட்சி மீட்டிங் நடக்கும் போது தான் பார்த்திருக்கிறான். 
இன்று அவரே கடைக்கு வரவும் “கடவுளே இன்னைக்கு என்னவோ? இந்த ஆஷா ஏதாவது செஞ்சிட்டாளா?”, என்று நினைத்தான். 
“அண்ணா என்ன கஷ்டம்மரைப் பாத்து அப்படியே நின்னுட்ட?”, என்று கேட்டான் ஜெகன். 
“ஆஷாவோட அப்பா டா இவர்”
“என்னது அண்ணியோட அப்பாவா?”, என்று கேட்டு மனோஜின் கண்டனப் பார்வைக்கு ஆளானான் ஜெகன். 
“என்னை முறைக்கிறது அப்புறம். அவரை உள்ளே கூப்பிடு. அவரும் திகைச்சு போய் தான் நிக்குறார்”, என்று சொல்லி விட்டு உள்ளே செல்ல அவரை நெருங்கினான். 
அவரும் அவனை ஆராய்ச்சியாக பார்க்க “வாங்க சார்”, என்று மரியாதையாக அழைத்தான்.  
அவனுடைய கடை முன்பு போல் இல்லாமல் மாறி இருப்பதையும், சுற்றி வேலை செய்து கொண்டிருந்தவர்களையும் வேடிக்கை பார்த்த படி அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்தவர் “என்னோட டிரைவர் காரை சர்வீஸ் விட்டிருக்கார். அதை எடுக்கலாம்னு வந்தேன்”, என்று சொன்னார். 
அது எந்த கார் என்று புரிந்தவன் டோக்கன் இல்லாம எப்படிக் கொடுக்க முடியும் என்று யோசித்தாலும் அவரிடம் அதை கேட்க முடியாமல் “வேலை முடிஞ்சிருச்சு சார். நீங்க எடுத்துட்டு போகலாம்”, என்றான். 
“கார் நல்ல கண்டிசனா இருக்கா? இல்லை மாத்திரலாமா?”
“இப்போதைக்கு மாத்த வேண்டாம் சார். எல்லாமே நல்லா தான் இருக்கு. இன்ஜின் கூட நல்லா இருக்கு”
“சரி பணம் எவ்வளவு?”
அவன் பணம் எவ்வளவு என்று சொன்னதும் அதை எடுத்துக் அவன் கையில் கொடுத்தார். தயக்கத்துடன் அதை பெற்றுக் கொண்டான். அவனிடம் பேசுவதற்கு ஆயிரம் விஷயம் இருந்தாலும் எதுவும் பேசாமல் திரும்பி நடக்கும் போது ஒரு ஓரத்தில் அழகாக வீற்றிருந்தது ஆஷாவின் வண்டி. 
அதைக் கண்டு திகைத்தவர் அதையே வெறித்து பார்த்த படி நின்றார். 
இதற்கு மேல் பேசாமல் போனால் நல்லதில்லை என்று உணர்ந்தவர் “உங்க கிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசணும் தம்பி”, என்றார். 
“ஆஷாவை பத்தி எதுவும் பேசுவாரோ?”, என்று எண்ணியவன் “உங்க பொண்ணு கூட நான் பேசுறதே இல்லை சார். அவங்களை நான் பாக்க கூட இல்லை”, என்று அவசரமாக சொன்னான். 
“இவன் ஏன் இவ்வளவு பயப்படுறான்? அந்த அளவுக்கா இந்த புஷ்பா இவனை மிரட்டி வச்சிருக்கா”, என்று எண்ணியவர் “நான் ஆஷா விஷயம் பேச வரலை. நான் நிர்மல் பத்தி பேசணும்”, என்றார். 
“நிர்மல் கூடவும் நான் பேசுறது இல்லை சார். பேசி பல மாசம் ஆச்சு”
“நான் அதைப் பத்தி பேச வரலை. நிர்மலுக்கு உன் தங்கச்சியை பெண் கேக்குற விஷயமா பேசணும்?”
“என்ன நிர்மலுக்கு சிவானியையா?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் மனோஜ். 
“நிர்மல் உன் தங்கையை தான் கட்டிக்க போறேன்னு ஒத்த கால்ல நிக்குறான். எனக்கும் இப்ப தான் பிள்ளைங்க சந்தோஷம் முக்கியம்னு படுது. உன் தங்கச்சியும் நல்ல வேலைல இருக்காளாமே? அவங்க ரெண்டு பேரோட காதல் தெரிஞ்ச அப்புறம் என்னால அமைதியா இருக்க முடியலை. உங்க வீட்ல வந்து சம்மந்தம் பேசணும்னு முடிவு பண்ணிட்டேன். என்னைக்கு வரணும்னு அம்மா அப்பா கிட்ட கேட்டு சொல்லு. அப்புறம் என்னோட புல்லட் வெளிய நிக்குது. வண்டி ஒட்டாம இருந்ததுனால கொஞ்சம் பிராப்ளம் இருக்கு. சரி பண்ணி வை. நான் டிரைவரை அனுப்பி வாங்கிக்கிறேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து நின்றார். 
அதிர்ச்சி அடைய இது நேர மில்லை என்று உணர்ந்தவன் “ரெண்டு நிமிஷம் ஊக்காருங்க.  நான் காரை வெளிய எடுத்து விடுறேன்”, என்று சொல்லிச் சென்றான். 
அவன் சென்றதும் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ராமை அழைத்தவன் எவ்வளவு சம்பளம் என்ன என்று விசாரித்தார். அவனுக்கு இவர் யார் என்று தெரியவில்லை. இருந்தாலும் தன்னுடைய அண்ணனின் பெருமைகளை அள்ளி விட்டான். 
மனோஜைப் பற்றி பெருமையாக ராம் சொன்னாலும் “எதனால் இந்த பையனை ஆஷாவுக்கு இவ்வளவு பிடிச்சிருக்கு?”, என்ற கேள்வி தான் தோன்றியது. 
கூடவே மனோஜின் திறமையும் கண்ணில் படத் தான் செய்தது. “பய நல்ல திறமைசாலி தான் போல?”, என்று எண்ணிக் கொண்டு மனோஜ் காரை நிறுத்தியதும் காரை எடுத்துக் கொண்டு சென்றார். 
அவர் சென்றதும் தான் அதிர்ச்சியில் அசைய மறந்து நின்றான் மனோஜ். அவனுக்கு ஒன்றுமே புரிய வில்லை. ஆஷா பத்தி பேசுவார் என்று பார்த்தால் அவரோ சிவானியை பற்றி பேசியது அதிர்ச்சி. 
அதுவும் நிர்மலை சிவானி காதலிக்கிறாளா? இது என்ன புதுக் கதை என்று தான் அவனுக்கு தோன்றியது. தன்னுடைய செல்ல தங்கையின் மனதில் அவனுக்கு தெரியாமல் காதலா? என்று ஆச்சர்யம் குழப்பம், கோபம், விரக்தி என அனைத்து உணர்வுகளும் வந்து போனது. 
அதுவும் அவர் சம்பந்தம் பேச வருவோம் என்று சொன்னதும் மேலும் அதிர்ச்சியை தந்தது? 
“எப்படி சிவானியை மருமகளா ஏத்துக்க ஒத்துக்கிட்டாங்க? அவ நிர்மல் அளவுக்கு படிச்சதுனால ஒத்துக்கிட்டாங்களோ? இருக்கும் இருக்கும். படிச்சு நல்ல வேலைக்கு போய் நல்ல நிலைமைல இருந்தா அவங்க பொண்ணைக் பொண்ணு கேட்டுருவேனோன்னு தானே என்னை படிக்க விடாம செஞ்சாங்க ஆஷாவோட அம்மா. இப்ப சிவானி படிச்சதுனால அவங்களுக்கு சம்மதம் போல?”, என்று யோசித்தாலும் சிவானியின் காதல் அவனுக்கு அதிர்ச்சியை தான் தந்தது. 
“அவர் சொன்னாருன்னு தங்கச்சியை சந்தேகப் படாதே”, என்று மனசாட்சி எடுத்துரைக்க அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து உடனடியாக சிவானியை அழைத்து விட்டான்.  
முத்துவேல் அவனுக்கு விஷயத்தை சொல்லியிருப்பார் என்று அவள் எதிர் பாராததால் “சொல்லுண்ணா”, என்று சாதாரணமாக கேட்டாள் சிவானி. 
“வீட்டுக்கு வந்துட்டியா அம்மு? ஒரு முக்கியமான விஷயம் உன் கிட்ட பேசணும்?”
“வீட்ல தான் இருக்கேன், சொல்லுண்ணா”
“எங்க கடைக்கு ஒரு கஷ்டமர் வருவார். அவர் மகனுக்கு பொண்ணு தேடுறாங்க. உன்னைப் பத்தி யாரோ அவர் கிட்ட சொல்லிருப்பாங்க போல? அவர் மகனுக்கு உன்னை பொண்ணு கேக்குறார். பையன் பாரின்ல இருக்கான். நல்ல வேலை, நல்ல குடும்பம். நான் உன்கிட்ட கேட்டுட்டு அம்மா அப்பா கிட்ட பேசலாம்னு நினைச்சேன். நான் சொன்னா தான் நீ கண்ணை மூடிட்டு கேப்பியே? எனக்கு இந்த சம்மதம் ஓகே. நீ அம்மா அப்பா கிட்ட போனைக் கொடு. நான் பேசுறேன்”, என்று மனோஜ் சொன்னதும் அதிர்ச்சியில் திகைத்து போய் இருந்தாள் சிவானி.
“அண்ணா… நான்… கல்யாணம்”, என்று அவள் தடுமாற “நான் எல்லாம் விசாரிச்சிட்டேன் டா. நீ தான் முன்னாடியே என்னோட அண்ணன் தான் எனக்கு மாப்பிள்ளை பாப்பான்னு சொல்லிட்டியே? அதே மாதிரியே உனக்கு நல்ல பையனா பாத்துட்டேன் மா. கல்யாணம் அப்புறமும் நீ வேலைக்கு போகலாமாம். எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம் டா”, என்றான். 
அவன் போட்டு வாங்குவது தெரியாமல் என்ன சொல்ல என்று தெரியாமல் தடுமாறியவள் “வேண்டாம்ண்ணா, பிளீஸ் அவங்க கிட்ட வேண்டாம்னு சொல்லிறேன்”, என்றாள். அவள் குரல் நடுங்கியது. 
ஆஷாவுக்காக நிர்மலை கல்யாணம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாலும் இன்று நிர்மலை பிரிய வேண்டிய நிலை வந்து விடுமோ என்று எண்ணி அவள் கண்களில் கண்ணீர் வந்தது. 
“ஏன் அம்மு. அண்ணா சொன்னா கேப்ப தானே?”
“அண்ணா பிளீஸ் என்னை கஷ்டப் படுத்தாத. இது வேண்டாம்”
“என்ன டா, முன்னாடி ஒரு தடவை திலீபன் கிட்ட கூட எங்க அண்ணன் எனக்கு மாப்பிள்ளை பாப்பான்னு சொன்னீயே? நான் பாக்க கூடாதா?”
“அண்ணா… அண்ணா… நான்”, என்று அவள் தடுமாறும் போது “சொல்லு சிவானி”, என்றான் மனோஜ் . 
அவனுடைய அம்மு என்ற அழைப்பு வரவில்லை என்பதைக் கூட உணராத சிவானி அழுது கொண்டே இருந்தாள். பின் ஒரு முடிவுடன் நிமிர்ந்து அமர்ந்தவள் “என்னை மன்னிச்சிருண்ணா, எனக்கு…. எனக்கு….. ஒருத்தரை பிடிச்சிருக்கு”, என்று சொல்லியே விட்டாள். 
பூக்கள் பூக்கும்…..