“என்னது…. ஆக்சிடண்டா….”
…..
“எப்போ… எப்படி…..”
…….
“அப்படியா…. ஓ…. இதோ நான் கிளம்பி வரேன்…. வசீகரன் கிளம்பிட்டாரா…..” என்றவளின் குரலில் நிறைந்திருந்த பதட்டம் அங்கே இருந்த ராஜேஸ்வரிக்கு புதியதாகத் தோன்றியது. அலைபேசியை வைத்து விட்டு அவசரமாய் தொப்பியை எடுத்துக் கொண்டு கிளம்பியவளிடம் வந்தவர் கேட்டார்.
“என்னம்மா… யாருக்கு ஆக்சிடண்ட்…. என்னாச்சு…..” என்றார்.
“அது…. வசீயோட தங்கைக்கு ஆக்சிடண்ட் ஆயிருச்சாம்…. நான் கிளம்பறேன்… வந்து பேசறேன்மா…” என்றவள் வேகமாய் வெளியேறினாள்.
அவளையும் அறியாமல் அவள் கூறிய “வசீ….” என்ற பெயரில் இருந்த உரிமையும், அவனது தங்கைக்கு விபத்து என்றதும் அவளது பதட்டமும் ஹாஸினிக்குப் புரியாவிட்டாலும் ராஜேஸ்வரிக்கு ஏதோ சற்று புரிவது போல இருந்தது.
பைக்கை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு விரட்டினாள் ஹாஸினி.
அவளது மனது ஏதோ ஒரு சொல்ல முடியா துயரத்தில் இருந்தது. அது ஏன் என்பதை அவள் யோசிக்காததால் அவளுக்கு அந்த உணர்வு எதனால் என்பது புரியாமல் இருந்தது. அவள் ஸ்டேஷனுக்கு வருவதற்குள் வசீகரன் கிளம்பி இருந்தான்.
ஹாஸினியைப் பார்த்ததும் சல்யூட் வைத்த ஏகாம்பரத்திடம், “நீங்களும் போயிருக்கலாமே…. வசீகரன் தனியாவா போனார்…. எப்படி நடந்துச்சு… இப்போ எந்த ஹாஸ்பிடல்ல இருக்காங்க….” என்று வேகமாய் கேள்வியை அடுக்கிக் கொண்டே போனாள்.
“தாராபுரம் ஹாஸ்பிடல்ல தான் அட்மிட் பண்ணினாங்களாம்…. அந்தப் பொண்ணோட காலேஜ் லெக்சரர் தான் அட்மிட் பண்ணி இருக்கார்…. கார் இடிச்சு கீழே விழுந்து தலைல அடிபட்டிருக்கு போலிருக்கு….. டாக்டர்ஸ் பார்த்திட்டு இருக்காங்கன்னு போன் பண்ணி சொன்னார்…. வசீகரன் அம்மா மட்டும் தான் அங்கே வீட்டுல இருக்காங்க…. அதான் இங்கே போன் பண்ணார்….”
“நாங்க அப்போ தான் மண்டபத்துல இருந்து வந்தோம்… போன் வந்ததும் வசீகரன் துடிச்சு போயிட்டான்…. உங்க கிட்டே சொல்ல சொல்லிட்டு உடனே கிளம்பிட்டான்…..” என்றார்.
“ம்ம்ம்…. அவர் கையில் பணமெல்லாம் வச்சிருந்தாரா….. ஏதாவது உதவி வேணுமான்னு கேட்டுப் பாருங்க…. பண்ணலாம்….” என்றவள் அவளது அறைக்கு சென்றாள்.
அவளுக்கு ஏனோ சாதாரணமாய் இருக்க முடியவில்லை…. விபத்து, கொலை, ரத்தம் என்பதெல்லாம் அவளது வாழ்க்கையில் பழகிப் போனதாக இருந்தாலும் வசீகரனின் தங்கைக்கு விபத்து என்பது ஏனோ அவளது வீட்டில் யாருக்கோ நேர்ந்தது போல இருந்தது.
சிறிது நேரம் அறைக்குள் பலதையும் யோசித்துக் கொண்டு அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தவள் ஏதோ கேஸ் பைலை எடுத்து கவனத்தை அதில் பதிக்க முயல முடியாமல் அதை மூடி வைத்தாள்.
மனது ஏனோ ஒரு புது வித அவஸ்தையில் துடித்துக் கொண்டே இருந்தது. அதற்கு மேல் தாங்க முடியாமல் அலைபேசியை எடுத்தவள் வசீகரனை அழைத்தாள்.
அவனது எண்ணைப் பதிவு செய்து வைத்ததோடு சரி… இது வரை அவனது எண்ணுக்கு அழைத்ததே இல்லை…. அலைபேசி அடித்து ஓய்ந்தும் எதிர்ப்புறத்தில் எடுக்கப் படவில்லை….
அவளது தவிப்பு அதிகமானது. “என்னவாயிற்று…. இவன் ஏன் போனை எடுக்கவில்லை…. ஏதாவது சொன்னால் தானே உதவ முடியும்…. இப்படி எதையும் சொல்லாமல் இருந்தால் என்ன அர்த்தம்….” என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அவளது குழப்பமான மனது, “அவன் ஏன் இவளிடம் சொல்ல வேண்டும்… இவளிடம் உதவி கேட்க வேண்டும்…” என்று யோசிக்கவில்லை.
மேலும் சிறிது நேரம் பதட்டத்தோடு கழித்தவள், ஏகாம்பரத்திடம் சென்று, “வசீகரன் அழைத்தானா….” என்று கேட்டாள்.
ஹாஸினி அவரது மேசைக்கு வந்து வசீகரனை விசாரித்தது அவருக்கே சற்று ஆச்சர்யமாக இருந்தது. 
“எனக்கும் அழைக்கவில்லை மேடம்…. நான் கூப்பிட்டுப் பார்க்கிறேன்….” என்றவர் வசீகரனை அழைத்தார்.
எதிர்ப்புறத்தில் வசீகரன் எடுத்து “ஹலோ…”  என்றான் சோர்வுடன்.
ஹாஸினி அழைத்து எடுக்காதவன் ஏகாம்பரத்தின் அழைப்பை எடுத்தது அவளுக்கு மனதுக்குள் சிறிது ஏமாற்றமாய் இருந்தது. ஆனால் அதை உணரும் நிலையில் அவள் இல்லை….
“என்னப்பா வசீகரன்… தங்கைக்கு எப்படி இருக்கு…. டாக்டர் என்ன சொல்லுறாங்க…” என்றார் ஏகாம்பரம்.
“சார்…. கீழே விழுந்ததுல தலைக்கு அடி பட்டிருக்கு…. டாக்டர்ஸ் பார்த்திட்டு இருக்காங்க…. இன்னும் ஏதோ ஸ்கேன் எல்லாம் எடுக்கணும்னு சொல்லுறாங்க…. அம்மா தான் இதைக் கேள்விப்பட்டு பயத்துல பிரஷர் அதிகமாகி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க…” என்றான் அழுது விடும் குரலில்.
“என்னப்பா சொல்லறே…. அடி ஒண்ணும் அதிகம் இல்லையே….. அம்மாவை பார்த்துக்கோ… பக்கத்துல துணைக்கு யாரும் இருக்காங்களா…. பணம் ஏதாவது வேணும்னா சொல்லுப்பா…. நான் வேணும்னா வரட்டுமா….” என்றார்.
“வளர்மதியோட காலேஜ் லெக்சரர் தான் அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்து அவர் அம்மாவை துணைக்கு கூட்டிட்டு வந்திருக்கார்…. அவுங்க தான் செலவெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க….. அப்புறம் கணக்கு பார்த்துக்கலாம்னு அவர் சொல்லிட்டார்….. எனக்கு தான் பயமா இருக்கு…. வயசுப் பொண்ணு…. ஏதாவது ஆச்சுன்னா அவளோட எதிர்காலமே கேள்விக் குறி ஆயிடும்….” என்றவனின் குரல் கலங்கி இருந்தது.
“கவலைப் படாதே வசீகரா…. கடவுள் நல்லவங்களை சோதிப்பார்…. கைவிட மாட்டார்…. தைரியமா இரு….. சரி…. எதுவா இருந்தாலும் என்னை கூப்பிடு…. சரியா…. நான் அப்புறம் கூப்பிடறேன்….” என்றவர் வைத்துவிட்டார்.
அவன் கூறியதை எல்லாம் ஹாஸினியிடம் கூறினார்.
“பாவம்…. வசீகரன் அப்பாவும் இறந்த பிறகு இப்போ தான் மகனுக்கு வேலை கிடைத்து அவுங்க அம்மா கொஞ்சம் சந்தோஷமா இருந்தாங்க… அதுக்குள்ளே இப்படி ஒரு விபத்து…”
“அந்தப் பொண்ணுக்கு நேத்து தான் பிறந்த நாள்னு சந்தோஷமா போயி கொண்டாடிட்டு வந்தான்…. நினைக்கவே கஷ்டமா இருக்கும்மா…” என்றவர் எழுந்து வெளியே செல்ல அவளது மனமும் ஏதோ ஒரு வேதனையில் சோர்ந்து போனது. வசீகரனின் வேதனை ஏன் அவளது வேதனையாய் மனதை அரிக்க வேண்டும்… என யோசிக்க மட்டும் அவள் மறந்து விட்டாள்.
“இருந்தாலும் நான் அழைத்து எடுக்காதவன், ஏகாம்பரம் அழைத்ததும் எடுத்துவிட்டானே….” என்று சின்ன கோபமும் இருந்தது.
மனது நிலையில்லாமல் தவிக்க தாராபுரம் சென்று பார்த்துவிட்டு வந்துவிடலாமா…. என்று கூடத் தோன்றியது.
தவிப்புடன் தன் அறைக்கு சென்றவள், “அவனது தங்கைக்கு அடிபட்டால் எனக்கு என்ன…. எதற்கு நான் இப்படி தவிக்க வேண்டும்… என ஒரு மனது கூற… வாழ வேண்டிய பெண்… சிறு வயது…. மனித நேயம் உள்ள யாருக்கும் துடிக்கதானே செய்யும்…. அது போல தான் எனக்கும்….” என்று சமாதானித்துக் கொண்டாள்.
அப்போது அவளது அலைபேசி ஒலிக்க எடுத்துப் பார்த்தவள் முகம் தெளிந்தது. வசீகரனின் எண்ணைப் பார்த்தவள் வேகமாய் எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.
“ஹலோ….”
“ஹலோ… இந்த நம்பரில் இருந்து மிஸ் கால் இருந்துச்சு… யாரு பேசறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா….” என்றான் வசீகரன் மென்மையான குரலில் மரியாதையோடு.
“நான் ஹாஸினி பேசறேன்….” என்றாள் கம்பீரமாய்.
“மே… மேடம்… நீங்களா…. நான் உங்க நம்பரை இதில் சேவ் பண்ணி வைக்கலை…. அதான்…. எடுக்கலை….” என்று திணறியவன், “சொல்லுங்க மேடம்….” என்றான். அவளது குரலைக் கேட்டதும் அவனுக்கு சட்டென்று ஒரு ஆறுதல் தோன்றியது.
“உங்க தங்கச்சிக்கு இப்போ எப்படி இருக்கு….. எந்த ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கீங்க….” என்றாள்.
அவன் ஹாஸ்பிடல் பேரைக் கூறிவிட்டு, “இப்போ ஸ்கேன் பண்ணிட்டு இருக்காங்க….. தலையில் ஏதோ கட்டி இருக்கும்னு என்னவோ பேசிக்குறாங்க….” என்றான் சோர்வுடன்.
“என்ன சொல்லறீங்க…. தலையில் கட்டியா… ஆக்சிடண்ட் தானே ஆச்சு….” என்றாள்.
“என் தங்கைக்கு எப்பவும் தலை வலி வரும்…. மாத்திரையோ தைலமோ போட்டுக்குவா… சரியாகிடும்…. இப்போ தலைல அடி பட்டிருக்குனு ஸ்கேன் பண்ணி பார்த்த போது தான்….” என்று கண்ணீரோடு நிறுத்தியவன்,
“பார்த்த போது தான்… தலையில் ஏதோ கட்டி இருக்குற போல இருக்குன்னு சொல்லுறாங்க…. எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு…. அதான் தலைக்கு மட்டும் மறுபடியும் MRI ஸ்கேன் பண்ணனும்னு சொல்லி இருக்காங்க…..” 
“ஓ… காட்…. அப்படியா….”
“இப்போ ஆக்சிடண்ட் ஆகி இங்கே வந்து ஸ்கேன் பண்ணலேன்னா தலையில் கட்டி இருக்குறது தெரியாம பின்னால பெரிய பிரச்னை ஆகி இருக்கும்னு சொல்லுறாங்க… அம்மா வேற அழுது புலம்பிட்டே இருக்காங்க…. எனக்கு ஏதாவது லோன் ரெடி பண்ணி தர முடியுமா மேடம்….” என்றான் அழுகின்ற குரலில். அவனது குரல் அவளது இதயத்தை கசக்கிப் பிழிவது போல இருந்தது.
“வசீகரன்…. நீங்க பயப்படாம இருங்க…. நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன்…..” என்றவள் ஏகாம்பரத்தை அழைத்தாள்.
“சார்….. தாராபுரம் போயி பார்த்திட்டு வந்திடலாம்…. வசீகரன் தங்கைக்கு கொஞ்சம் சீரியஸ் போல இருக்கு….” என்றவள் விவரத்தைக் கூறினாள்.
“ம்ம்… சரி மேடம்… சேகர் இல்லை…. எப்படி வண்டி எடுக்குறது….” என்றார் அவர்.
“நானே எடுக்கறேன்…. நீங்களும் வாங்க….” என்றவள் முன்னே நடக்க ஏகாம்பரம் வேறு அலுவலரிடம் விஷயத்தைக் கூறிவிட்டு வாசலுக்கு ஓடினார்.
போகின்ற வழியில் ஒரு ATM இல் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டாள் ஹாஸினி. லாவகமாய் அவள் போலீஸ் ஜீப்பை ஓட்ட பின்னால் அமர்ந்திருந்தார் ஏகாம்பரம். ஒரு மணி நேரத்தில் தாராபுரம் எல்லைக்குள் நுழைந்தது வண்டி.
வசீகரன் சொன்ன ஹாஸ்பிட்டலின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கினாள். காக்கி உடையில் வந்து இறங்கியவர்களைக் கண்டதும் அங்கே சட்டென்று சூழ்நிலை பரபரப்பானது.
ரிசப்ஷனில் இருந்த பெண்ணிடம் விஷயத்தைக் கூறி ஹாஸினி விசாரிக்க அவள் அவசரப் பிரிவு பகுதியைக் காட்டினாள்.
அங்கே செல்லவும் ICU வின் முன்னால் சோகமே உருவாக அமர்ந்திருந்தான் வசீகரன். அவனது சோகத்துக்கு சற்றும் குறைவில்லாத சோகத்துடன் அருகில் நின்று கொண்டிருந்தான் நகுலன்.
வசீகரனின் அன்னை சபர்மதி பக்கத்து அறையில் நினைவில்லாமல் படுத்திருந்தார். அவருக்கு டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க அவர் அருகில் அமர்ந்திருந்தார் நகுலனின் தாய் கற்பகம்.
அமைதியான இடத்தில் சப்தித்த பூட்ஸ் ஓசையில் நிமிர்ந்த வசீகரன் ஹாஸினியும் ஏகாம்பரமும் வருவதைக் கண்டதும் தாயைக் கண்ட பிள்ளையாய்  அவர்கள் அருகில் பாய்ந்து வந்தான்.
அவனிடம் வளர்மதியைப் பற்றி அவர்கள் கேட்டுக் கொண்டிருக்க அதற்குள் அங்கே வந்த நர்ஸ் ஒருத்தி வசீகரனிடம், “சார்…. உங்களை டாக்டர் உடனே ரூமுக்கு வர சொன்னார்…. எமர்ஜன்சி….” என்றாள்.
அதைக் கேட்டதும் பதறிய நகுலன், “வாங்க… வசீகரன்… பார்த்திட்டு வந்திடலாம்….” என்றான்.
ஹாஸினி, ஏகாம்பரத்திடம் அன்னையிடம் இருக்குமாறு கூறிவிட்டு வசீகரனும் நகுலனும் மட்டும் டாக்டரின் அறை நோக்கி சென்றனர்.
சபர்மதியின் முகம் அமைதியாய் மயக்கத்தில் ஆழ்ந்திருக்க அவரையே பார்த்திருந்த ஹாஸினிக்கு ஏதோ சொல்ல முடியாத உணர்வு தோன்றியது. குடும்பத்தில் ஒருவர் படுத்திருப்பது போல் மனது வலித்தது. அவளது அன்னை தந்தையைத் தவிர வேற்று ஆட்கள் மீது இப்படி ஒரு உணர்வு அவளுக்குத் தோன்றியதில்லை.
ஏகாம்பரம் கற்பகத்திடம் பேசிக் கொண்டிருந்தார். “ரொம்ப நேரமா மயக்கத்துல இருக்காங்களா….”
“ம்ம்…. கண்ணைத் தொறந்தா நெஞ்சுல அடிச்சுகிட்டு அழுதுட்டே இருக்காங்க…. ரெண்டு தடவை மயக்கம் போட்டுட்டாங்க…. அதான் டாக்டர் மயக்க ஊசி போட்டிருக்காங்க….” என்றார் கற்பகம்.
“ஓ…. அப்படியா…. ம்ம்ம்… பொண்ணுக்கு ஒண்ணுன்னதும் எந்த அம்மாவுக்கு தான் தாங்க முடியும்….. கஷ்டம்…” என்றார் ஏகாம்பரம்.
அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த ஹாஸினி மீண்டும் சபர்மதியின் முகத்தை பார்க்க அவளுக்கு மிகவும் பரிச்சயமான முகம் போல தோன்றியது.
அது வசீகரனின் அன்னை என்பதாலா… இல்லை… வேறு ஏதாவது காரணமா என்று அவளுக்கு புரியவில்லை…. சபர்மதியின் முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ஹாஸினி.
சொல்லி முடித்த காதல்
இன்னும் தொண்டைக்குள் நிக்குதடி…
சொல்லப் போகும் காதல்
வார்த்தை சேகரித்து முடியலடி….
வீசுகின்ற தென்றலும் தான்
முள் வேலியாய் குத்துதடி….
வெளிச்சப் பூ பூத்திடத்தான்
வெதும்பி மனம் நிக்குதடி…
சொப்பனத்தில் வந்து தினம்
சொந்தம் கொண்டாடியவளே….
சொல்லிவிடு வாய் திறந்து
காத்திருந்த காதல் வென்றதை….
இதயமெனும் பட்டு விரிப்பு
உனக்காக விரித்து வைத்தேன்…..
அதைவிட்டு நீ சென்று
படுக்கை தன்னில் விழுந்ததென்ன….
விழி வாசல் மூடாமல்
காத்திருந்தேன்… பெண்ணே….
உன் வரவின் வழியில்
என் கண்ணீர் தடயங்கள்….
தடங்களெல்லாம் தடயமாக
தயக்கம் எல்லாம் தகர்த்தெறிய
மலர்ந்துவிடு விடியலிலே
வெளிச்சப் பூவாய் என் வாழ்வில்….