நகுலன் சொன்னது போல இரண்டு வருடமும் வளர்மதி அவனிடம் அதைப் பற்றிப் பேசவில்லை…. அவளைத் தொடரும் கண்களை மாற்ற முடியாமல் அவன் தான் தவித்துக் கொண்டிருந்தான்… இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமலே மற்றவரை ரசித்துக் கொண்டிருந்தனர்.
இதோ இரண்டு வருடத்தில் படிப்பை முடித்துவிட்டு அவனிடம் அதே மாறாத காதலோடு காண வேண்டும் என்று கூறி இருக்கிறாள். நகுலனின் கண்கள் அவன் நாயகியை எதிர்நோக்கிக் காத்திருந்தது.
அவளைப் பற்றிய நினைவுகள் தந்த சுகத்தில் புன்னகையுடன் அமர்ந்திருந்தவன் பூங்காவிற்குள் நுழைந்த வளர்மதியைக் கண்டதும் பரபரப்பானான். ஆலிவ் பச்சை நிற சுரிதாரில் தேவதையாய் நடந்து வந்தாள்.
நெற்றியில் வந்து விழுந்த முடிக் கற்றையை அழகாய் ஒரு கையால் ஒதுக்கி விட்டவள் கண்களை நகுலனைத் தேடி சுழல விட்டாள். நெற்றியில் தொட்டிருந்த விபூதியும் குங்குமமும் அவள் அழகை மேலும் தெய்வீகமாக்கிக் காட்டியது.
அவளைக் கண்டு வேகமாய் துடித்த இதயத்தை நிதானப் படுத்திக் கொண்டவன் அவளிடம் சென்றான்.
“வா… வளர்…. அந்தப் பக்கம் ஓரமா போயிடலாம்….” என்றான். அவளுக்கு ஒருவித பதட்டமாய் இருக்க, “ம்ம்….” என்று மட்டும் உரைத்துவிட்டு முன்னில் நடந்த அவனைப் பின் தொடர்ந்தாள்.
ஒதுக்குப்புறமாய் இருந்த ஒரு பெஞ்சில் சென்று அமர்ந்தான். தயக்கத்துடன் அவன் அருகில் வந்து அவள் நிற்க, “உக்காரும்மா….” என்றான். அவனுக்கு அருகில் சற்றுத் தள்ளி அமர்ந்தாள் அவள்.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் தன் மனதில் உள்ளதை தயக்கமில்லாமல் சொன்னவளுக்கு இன்று வெட்கமும் கூச்சமும் போட்டி போட்டு நிற்க தவிப்பாய் இருந்தது. எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்று தெரியாமல் முழித்தவள் தன் கையில் இருந்த விபூதி குங்குமத்தை அவனிடம் நீட்டினாள்.
“ஓ… கோவில் பிரசாதத்தோட பேச்சை ஆரம்பிக்கலாம்னு சொல்லுறியா….” என்று நிறுத்தியவன், “நீயே வச்சுவிட மாட்டியா வளர்…..” என்றான்.
அதைக் கேட்டதும் நாணத்துடன் தலையைக் குனிந்து கொண்டாலும் நடுங்கும் விரலால் விபூதியை எடுத்து அவன் நெற்றியில் வைத்துவிடவும் மறுக்கவில்லை. அவளது விரல் தீண்டலை கண் மூடி அவன் அனுபவிக்க மூக்குக்கு மேலே கையை வைத்துக் கொண்டு அவள் மெல்ல விபூதியை ஊதி விட்டாள்.
அவன் கண் மூடி அமர்ந்திருப்பதைக் கண்டதும் நாணத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள். ஒரு நிமிடம் அவளை கண் நிறையப் பார்த்தவன், “வளர்….” என்றான் மனதில் உள்ள காதலை எல்லாம் குரலில் தேக்கி மென்மையாக.
அவனது ஆண்மை நிறைந்த காதலான குரல் அவள் காதில் தேனாய் பாய மெல்ல நிமிர்ந்தவள், “ம்ம்…” என்றாள்.
“இப்படி ஒண்ணும் பேசாம அமைதியா இருக்க தான் என்கிட்டே பேசணும்னு சொன்னியா….” என்றான்.
“உன் அருகில் இருந்தாலே போதும்… வேறு எந்தப் பேச்சும் வேண்டாம் என்று தோன்றுகிறதே….” என மனதுக்குள் நினைத்துக் கொண்டவள் மெல்ல அவனை ஏறிட்டாள்.
அவனது விழிகளை மெல்ல நோக்கியவள் அதில் வழிந்த காதலில் தன்னைத் தொலைத்தாள். அவளது முகம் சட்டென்று நாணத்தில் செவ்வானமாய் சிவந்திருக்க தலையைக் குனிந்து கொண்டாள்.
“வளர்…. நீ இப்போ என்னைப் பார்த்து பேசப் போறியா… இல்லை… நான் கிளம்பட்டுமா…” என்றான் அவன் குறும்புடன்.
அதைக் கேட்டதும் சட்டென்று நிமிர்ந்தவளை நோக்கி புருவத்தை தூக்கியவன், “என்ன…. கிளம்பட்டுமா…..” என்பது போல் செய்கையில் கேட்க அவள் ரத்த நாளங்கள் தப்பு நாளங்களாய் தாறு மாறாய்த் ஓடத் தொடங்கியது.
அவனது முகத்தையே பார்த்துக் கொண்டு பேசாமல் அவள் அமர்ந்திருக்க அவன் அவளிடம் சற்று நெருங்கி அமர்ந்தான்.
“எ… என்ன….” என்றாள் அவள் தந்தி அடிக்கும் குரலில்.
“நீ பேசப் போறியா… இல்லியா…” என்றான் நகுலன் மீண்டும் காரியத்தில் கண்ணாக.
“நீ… நீங்க தான் பேசணும்… நான் அன்னைக்கு சொன்னது தான் இன்னைக்கும்…” என்றாள் அவள் குனிந்து விரல்களை பிசைந்து கொண்டே.
“ஓ…. அப்போ நான் தான் பேசணுமா… சரி பேசறேன்…” என்றவன், மேலும் சற்று நெருங்கி அமர்ந்தான்.
அவளுக்கு இதயத் துடிப்பு அதிகமாக சட்டேன்று சுற்றிலும் பார்வையை ஓட விட்டாள். அங்கே அவர்களைத் தவிர அந்த நேரத்தில் யாரும் இருக்கவில்லை.
சிவந்த முகத்தோடு ஒருவித இன்ப அவஸ்தையில் அவள் அமர்ந்திருக்க அவன் அவளது கையை மெல்லப் பற்றினான்.
அவன் தொட்டதும் ஏதோ மின்சாரம் பாய்ந்தவள் போல் அவள் சிலிர்த்துக் கொண்டு புதுவித உணர்வில் அமர்ந்திருக்க அவள் அருகில் நெருங்கியவனின் நெருக்கம் தாங்க முடியாமல் அவள் நெளிந்தாள். ஒரு நிமிடம் அவளையே நோக்கியவன், “வளர்…. நான் புரிஞ்சுக்கிட்டேன் மா….”
“உன் காதல் நிலவு இல்லை…. தேய்ஞ்சு மீண்டும் வளர்றதுக்கு…. உன் காதல் வானம் மாதிரி…. என்னைக்கும் நிலையா இருக்கும்…. அதை நான் புரிஞ்சுகிட்டப்போ என்னையே நான் தொலைச்சுட்டேன்… என் வாழ்க்கைல ஜீவநதியாய் நீயிருப்பேன்னு நம்பறேன்…. உன்னை என் வாழ்க்கையின் மறுபாதியாய் இணைச்சுக்க விரும்புறேன்….”
“உன்னோட காதல் மீது நீ வச்சிருந்த நம்பிக்கை என்னையும் அதுக்குள்ளே இழுத்திடுச்சு…. இத்தனை நாள் நான் சொன்னதுக்காக நீ அமைதியா இருந்தே…. ஆனா உன்கிட்டே அப்படி சொல்லிட்டு எப்படி என் காதலை சொல்லுறதுன்னு நான் தவிச்சுட்டு இருந்தேன்…. இத்தனை நாள் காத்திருப்போட சுகத்தை நான் இப்போ உணருறேன்….”
“ஐ லவ் யூ வளர்…. ஐ லவ் யூ சோ மச்….” அழுத்தமாய் நிறுத்தி சொன்னவன் அவளது கரத்தில் மெல்ல தன் இதழைப் பதித்துவிட்டு நிமிர்ந்தான்.
அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் இரண்டு வருடமாய் செய்த மௌன தவத்திற்கு வரமாய் தோன்ற அவளது கண்கள் சந்தோஷத்தில் கலங்கியது.
அவனது உதடுகள் உச்சரித்த காதல் மந்திரத்தில் அவளது தேகம் எங்கும் புதுவித உணர்வு ஆட்கொள்ள அவனது தோளில் அவள் ஆதரவாய் சாய்ந்து கொண்டாள்.
அவளை மெல்ல அணைத்துக் கொண்டவன் அவளது நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டான்.
அவள் காதில் மீண்டும் கிசுகிசுத்தான். “ஐ லவ் யூ வளர்…”
அவனது மீசை அவளது காதில் உரசியதில் அவள் சிலிர்த்துப் போனாள். அடிவயிறுவரை அந்த உணர்வு பாய அவள் நெஞ்சு படபடத்தது.
இதுவரை அறியாத ஒரு வினோதமான உணர்வு அவள் மேனியெங்கும் பாய கண் மூடி அதை அனுபவித்தாள். முதன் முதலாய் ஒரு ஆணின்… அவள் மனம் கவர்ந்த ஆணின் ஸ்பரிசம் பட்டதில் ஒருவித மயக்கத்தில் சிலிர்த்துப் போனாள்.
சிறிது நேரம் அந்த மோன நிலையில் இருந்தவர்களை நகுலனின் அலைபேசி அலறி நிகழ்வுக்கு கொண்டு வந்தது.
வெட்கத்துடன் அவனை விட்டு விலகியவளின் கரத்தை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்டவன் அலைபேசியை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான். அவளது விரல்களில் கோலம் வரைந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தான். அவள் தான் அந்த தொடுதலில் மிகவும் தவித்துப் போனாள். கல்லூரியில் இருந்து ஒரு முக்கியமான வேலைக்காய் அவனை உடனே வரும்படி அலைபேசிக்கு அழைத்திருந்தனர். சிறிது நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டு வைத்தான்.
அவளைப் பிரிய மனம் இல்லாமல் மீண்டும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். பிறகு வளர்மதியிடம் விவரத்தைக் கூறியவன், “வளர்…. நான் கிளம்பணும்….” என்றான்.
“கண்டிப்பா கிளம்பணுமா….” வருத்தத்துடன் வந்தது அவளது வார்த்தைகள்.
“ம்ம்…. சீக்கிரமே எங்க வீட்ல சொல்லி உங்க வீட்டுல வந்து பேசச் சொல்லறேன்…. அப்புறம் நாம எப்பவும் ஒண்ணாவே இருக்கலாம்… என்ன…” என்று அவளை நோக்கி கண்ணடித்தான்.
அதில் சொக்கிப் போனவள் அவனையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க மென்மையாய் புன்னகைத்தவன், “வளர்…. ராத்திரி நீ ப்ரீயா இருக்கும் போது மிஸ் கால் விடு…. நான் கூப்பிடறேன்…. பேசலாம்… சரியா…. இப்போ உன்னை போகுற வழியில் இறக்கி விட்டுப் போகிறேன்… வா…” என்றான்.
“இல்லை…. நீங்க கிளம்புங்க…. நான் தனியாவே போயிக்கறேன்… இப்போதைக்கு யாரும் பார்த்தா வம்பு…” என்றாள்.
“ம்ம்… அப்படியா…. சரி… நீ முன்னாடி நடந்து போ…. நான் பின்னாடி வர்றேன்…..” என்று எழுந்தவன் சுற்றிலும் பார்வையை ஓட்டிவிட்டு மெல்ல அவள் கன்னத்தில் தன் இதழைப் பதித்துவிட்டு “பை….” என்றுவிட்டு பைக்கை எடுக்க நகர்ந்தான்.
இவ்வளவு நாளாக பார்வையில் கூட கண்ணியம் காத்து ஆசிரியனாக மட்டுமே இருந்தவன், அவனது காதலை வெளிப்படுத்தியதும்…. அதன் வெளிப்பாடாய் அவன் கொடுத்த முத்தமும்… கண்ணில் நிறைந்திருந்த காதலும்…. அவளை சொக்கிப் போக வைத்தது. அந்த சுகமான நினைவிலே அவனைப் பார்த்துக் கொண்டே நடந்தாள்.
அந்தப் பூங்காவிற்கு இரண்டு வாயில்கள் இருந்தன. வாகனங்களில் வருபவர்களுக்கு வேறு வழி இருந்தது. அதனால் நகுலன் பைக்கை எடுத்துக் கொண்டு அந்தப் பக்கமாக வருவதற்கு சென்றான். வளர்மதி அவனைத் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே உணர்ச்சிகளின் கலவையோடு கேட்டைக் கடந்தாள்.
ரோட்டில் கவனமில்லாமல் நடந்தவள் மறுபுறம் வந்த காரைக் கவனிக்காமல் நடந்து விட்டாள். வேகமாய் வந்து கொண்டிருந்த கார் சடன் பிரேக் போட்டு நிறுத்தியும் அவளைத் தட்டிவிடவே சற்றுத் தள்ளி சென்று தெறித்து விழுந்தாள். தலை அங்கிருந்த டிவைடரில் அடிக்க ரத்தம் பீரிட்டு புது வேகத்தோடு வெளியேற உடனே மயக்கத்துக்குப் போனாள்.
அப்போது தான் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்த நகுலன் கண் முன்னால் நடந்ததை அதிர்ச்சியோடு பார்த்துவிட்டு, “வளர்…..” என்று அலறிய அலறலில் அந்த பிரதேசத்தில் உள்ள அனைவருமே பதறியடித்து ஓடி வந்தனர்.
கல்யாணத்திற்கு சென்றுவிட்டு வீட்டில் வந்து டிபன் சாப்பிட்டு விட்டு கை கழுகி வந்த மகளைக் கண்டு திகைத்தார் ராஜேஸ்வரி. அப்போது தான் அவரும் ஒரு திறப்பு விழாவிற்கு சென்றுவிட்டு வந்திருந்தார்.
“என்ன ஹாஸினி…. கல்யாணத்துக்குப் போனே…. அங்கே சாப்பிடலயா…. டைம் வேற ரொம்ப ஆச்சு….” என்றார்.
“ம்ம்…. இல்ல மம்மி…. அங்கே புல்லா ஜென்ட்சா இருந்தாங்களா…. சேலையை வேற கட்டிக்கிட்டு எல்லாரும் பாக்குறப்போ எரிச்சலா இருந்துச்சு…. அதான் கல்யாணம் முடிஞ்சதும் சாப்பிடாமலே வந்துட்டேன்….” என்றவள் ஹாலுக்கு சென்று தொலைக்காட்சியை உயிர்ப்பித்து விட்டு சோபாவில் அமர்ந்தாள்.
“பட்டு சேலையில் லட்சணமா அழகா இருந்தே…. அதுக்குள்ளே அதை மாத்தி யூனிபார்ம் போட்டாச்சா…” என்று அலுத்துக் கொண்டே வந்தவர் அவள் அருகில் அமர்ந்தார்.
“அப்புறம்… ஹாஸினி… உன் அத்தை நேத்து கூப்பிட்டு இருந்தாங்க… நீ என்ன முடிவா சொல்லறேன்னு கேட்டாங்க… எனக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியலை…. அதனால உனக்கு யார் மேலயோ விருப்பம் இருக்கும் போலிருக்கு…. அதனால நமக்குள்ளே சம்மந்தம் வேண்டாம்னு சொல்லிட்டேன்…. நான் சொன்னதுல ஒண்ணும் தப்பில்லையே….” என்றார் ஆவலாய் அவள் முகத்தை நோக்கிக் கொண்டு.
அப்போது தான் வசீகரனைப் பற்றி மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தவள் அன்னை சொன்னதைக் கேட்டதும் சட்டென்று நிமிர்ந்தாள்.
“அவுங்களுக்கு எப்பவும் இதே பேச்சு தானா மம்மி…. நீங்க சொன்னதும் நல்லது தான்…. இனி பேசாம இருப்பாங்கள்ள….” என்றாள்.
“அவுங்க பேசாம இருப்பாங்க தான்…. ஆனாலும் நீ ஏதாவது முடிவு பண்ணாம பேசாம இருக்க கூடாது…. அதான் நான் சொன்னதில் தப்பில்லையேன்னு கேட்டேன்….” என்றார் அழுத்தமாக.
அப்போது தான் அன்னை சொன்னதன் பொருள் சரியாக விளங்க அவள் பேசாமல் அமர்ந்திருந்தாள்.
“உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி நீ உன் புருஷனோட குடும்பம் நடத்துறதைப் பார்த்துட்டா இந்த சொத்தெல்லாம் உன் பேருக்கு எழுதி வச்சிட்டு நான் கொஞ்சம் ஓய்வா கோவில், குளம்னு சுத்தி வருவேன்ல…. எனக்கும் இந்த வீடுல உன் குழந்தைங்க ஓடி விளையாடறதைப் பார்க்க ஆசை இருக்காதா… என்னோட ஆசையும் கொஞ்சம் மனசுல வைச்சுக்கோம்மா…” என்றார் மென்மையாக.
அன்னையின் சொல்லை ஏனோ மறுத்துப் பேச முடியாமல் எழுந்தவள், “சரி… நான் கிளம்பறேன் மம்மி…. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு…. நீங்க வருத்தப்படாம இருங்க…. நடக்க வேண்டிய நேரத்தில் எல்லாம் நடக்கும்…” என்றாள்.
அவள் பேசியதைக் கேட்டதும் ராஜேஸ்வரிக்கும் ஏதோ ஒரு நம்பிக்கை தோன்றியது. அதற்குள் ஹாஸினியின் அலைபேசி அலறவே எடுத்துப் பேசியவள் அதிர்ந்தாள்.