நிர்மல் மெஸ்ஸேஜ் வந்ததும் முதலில் சிவானிக்கு ஆச்சர்யம் தான். எப்படி ஒத்துக் கொண்டான் என்று எண்ணி அவளுக்கு குழப்பமாக இருந்தது.
அவள் வீட்டில் இருந்ததால் “இப்போது பேச முடியாது. நான் நாளைக்கு கால் பண்ணுறேன்”, என்று மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தாள்.
“சரி”, என்று பதில் அனுப்பியவன் அடுத்து என்ன என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது தான் மனோஜ் தொழிலுக்கு உதவ
வேண்டும் என்ற நினைவு வந்தது. சிவானியை வைத்து அவனுக்கு உதவலாம் என்ற எண்ணம் தோன்றியது.
பெரிய நிலைமைக்கு மனோஜை கொண்டு வர முடியவில்லை என்றாலும் மெக்கானிக் என்ற தகுதியில் இருந்து அவனை சிறிது உயர்த்த ஆசைப் பட்டான்.
தான் நேரடியாக பணத்தைக் கொடுத்தால் மனோஜ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று அவனுக்கு தெரியும். அதனால் சிவானி மூலம் அதை கொடுக்க முடிவு செய்ததும் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
கூடவே சிவானி நினைவும் வந்தது. சிறிது நேரமே பார்த்த அவளுடைய நினைவுகளை மனதில் இருந்து தோண்டி எடுக்க முற்பட்டான். அன்று ஆஷா செய்த கலவரத்தில் அவளுடைய முகம் அவன் மனதில் பதிய வில்லை. அவள் முகத்தை பார்க்க ஆவல் ஏற்பட பேஸ்புக் பக்கத்துக்கு சென்று அவள் புகைப் படங்களை தேடினான்.
அவள் பக்கத்தில் அவள் புகைப்படம் எதுவும் இல்லாமல் எல்லாமே சிறுவர்களுக்கான பதிவுகளாக தான் இருந்தது. “சரியான பாப்பா இவ. குட்டிப் பிள்ளைங்க மாதிரி போஸ்ட் போட்டுருக்கா? ஆனா எவ்வளவு பெரிய விசயமெல்லாம் யோசிக்கிறா?”, என்று தோன்றியது.
“எனக்கு உன்னோட போட்டோஸ் வேணும். அனுப்பி வை”, என்று பேஸ்புக்கில் இருந்து மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தான் நிர்மல்.
“எதுக்கு?”, என்று கேட்டாள் சிவானி.
“வேற எதுக்கு? கல்யாணம் பண்ணிக்கப் போற உன்னை பொண்ணு பார்க்க தான்”, என்று நக்கலாக கேட்கவும் அவனை வெட்ட போவது போல ஒரு புகைப்படத்தை அனுப்பியவள் அவளுடைய புகைப்படங்களை அனுப்பினாள்.
கூடவே “நானும் மாப்பிள்ளையை பாக்கணும். கொஞ்சம் சிரிச்ச முகமா இருக்குற போட்டோசை அனுப்பி வைங்க”, என்று அவனையே கலாய்த்தாள்.
நிர்மல் முகத்தில் அழகான புன்னகை உதயமானது. தன்னுடைய புகைப்படங்களை தேடி தேடி அவளுக்கு அனுப்பி வைத்தவன் அவள் புகைப்படங்களையும் ரசித்தான். அவளுடனான வாழ்க்கை சுவாரசியமாக போகும் என்று தோன்றியது அவனுக்கு.
இருவருமே பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம் போல் போட்டோவைப் பார்த்துக் கொண்டார்கள்.
“நாளைக்கு அவளிடம் என்ன எல்லாம் பேச வேண்டும்?”, என்று அவள் புகைப்படங்களை பார்த்துக் கொண்டே யோசித்தவன் அப்படியே தூங்கி விட்டான்.
அடுத்த நாள் ஆபீஸ் சென்று டீ டைமில் அவனை அழைத்த சிவானி “என்ன பொண்ணு பாத்தாச்சா? பொண்ணு பிடிச்சிருக்கா?”, என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டாள்.
“நான் பாத்த பொண்ணு என்னோட அளவுக்கு இல்லை தான். ஆனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்”, என்று சிரித்துக் கொண்டே சொன்னான். மனோஜ் அவன் வாழ்க்கையில் இருந்த வரை தான் நிர்மல் இந்த அளவுக்கு சிரித்திருக்கிறான். புது பள்ளிக்கு போன பிறகு அவன் நண்பர்களுடன் அதிகம் உரையாடியதில்லை. அதனால் சிவானியுடன் தோழமையோடு பேசுவது அவனுக்கு பிடித்திருந்தது.
“நீங்க உண்மைலே அழகு தான் ஒத்துக்குறேன். என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கிற உங்க பரந்த மனசுக்கு ரொம்ப நன்றி சார்”
“இந்த சார் மோர் எல்லாம் வேண்டாம். நிர்மல்னே கூப்பிடு. சரி எனக்கு ஒரு டவுட். நாம எடுத்துருக்குற முடிவு சரி தானா?”
“எனக்கும் அந்த கேள்வி இருக்கு. ஆனா, வேற என்ன செய்ய தெரியலை. கூடவே நம்ம கல்யாணமும் எப்படி நடக்கும்னு தெரியலை. எனக்கும் கல்யாணம் பத்தி நிறைய கனவு இருக்கும் தானே? திருட்டு தனமா பண்ணனுமான்னு யோசனையா இருக்கு. அண்ணனுக்கு வேற என் மேல வெறுப்பு வந்துருமோன்னு பயமா இருக்கு”
அவள் அதிகமாக யோசித்திருக்கிறாள் என்று புரிய “நான் அடுத்த மாசம் பாரின் கிளம்பிருவேன் சிவானி. இங்க சென்னைக்கு வேலை கேட்டுருக்கேன். அங்க போயிட்டு கொஞ்ச நாள்ல திரும்பி வந்துருவேன். வந்ததுக்கு அப்புறம் என்னன்னு தெளிவா பேசலாம். ஆனா எனக்கு ஒரு சின்ன சந்தேகம்”
“என்ன?”
“நாம பேசினது எல்லாம் உண்மை தானே? நம்ம கல்யாணத்துல எந்த மாத்து கருத்தும் இல்லையே? உண்மைலே நீ தான் என்னோட வருங்கால மனைவின்னு நான் நினைக்கலாமா? பின் வாங்கிற மாட்டியே?”, என்று கேட்டான். (அவனுக்கும் காதல் வைரஸ் அட்டாக்)
அவன் கேள்வியில் தன்னாலே ஒரு சிலிர்ப்பு உருவாக அவன் சந்தோஷப் படும் படியான பதிலைச் சொல்ல யோசித்தாள் சிவானி.
“என்ன ஆச்சு சிவானி? பதில் சொல்லேன். நீ சொன்னா தான் நான் அடுத்து யோசிக்கணும்”
“முதல்ல உங்க கூட சேந்து அவங்க கல்யாணத்தை நடத்தணும்னு தான் பிளான் பண்ணுனேன். அப்புறம் உங்க போட்டோ பாத்த அப்புறம் எனக்கு பிடிச்சு என்னோட மனசார தான் உங்களை கல்யாணம் பண்ணணும்னு எனக்கு யோசனையே வந்தது. அண்ணனுக்காகன்னாலும் உங்களை பிடிச்சு தான் நான் அப்படி கேட்டேன். இனி எனக்கு மாப்பிள்ளைன்னு யாரையாவது பாத்தா கூட நீங்க தான் மனசுல முதல்ல வருவீங்க. சோ, இதுல பின் வாங்குறதுன்னு ஒண்ணு நடக்கவே நடக்காது”, என்று அவள் சொன்னதும் “யாருமே இந்த லட்சணத்துல காதலை சொல்லிருக்க மாட்டாங்க”, என்று சிரித்தது இருவரின் மனசாட்சியும்.
“நான் கொஞ்சம் பணம் தரேன் சிவானி. அதை உங்க அண்ணன் கிட்ட கொடுத்துரு. அந்த பணத்தை நீ ஆஃபிஸ்ல லோன் போட்டு கொடுத்தேன்னு சொல்லு”
“நல்ல ஐடியா தான். ஆனா நீங்க கொடுத்து.., அதை அண்ணன் வாங்கினா அண்ணனுக்கு மரியாதையா இருக்குமா? நாளைக்கு யாராவது ஏதாவது சொல்லிட்டா?”
“இந்த விஷயம் நம்ம ரெண்டு பேருக்கு தவிர வேற யாருக்கும் தெரியாது சிவானி. என்னோட மச்சானும் அவன் தான். என்னோட மாப்பிள்ளையும் அவன் தான். அவனுக்கு நான் செய்யக் கூடாதா? உன்னைக் கட்டிக்கிட்டா உன்னோட குடும்பம் என்னோட குடும்பம் இல்லையா?”, என்று அவன் கேட்டதும் அவளுக்கு சிலிர்த்து போனது.
“இன்னும் என்ன யோசனை சிவானி? நான் வேற தானா?”, என்று கேட்டான் நிர்மல்.
“அப்படி இல்லை. ஆஃபிஸ்ல லோன் போட்டேன்னே சொல்றேன். ஆனா அண்ணா வாங்கிக்குமா தெரியலையே?”
“வாங்குற விதத்துல பேசு”
“சரி ஒரு மாசம் போகட்டும். வேலைக்கு சேந்த உடனே அதைப் பத்தி பேசினா சந்தேகம் வரும்”, என்று சம்மதம் சொன்னாள்.
“சரி சிவானி வேற எதுவும் யோசிக்காத. வாழ்க்கை எப்படி போகுதோ அப்படியே நாம வாழ்ந்து பாப்போம்”
“சரி எனக்கு டைம் ஆச்சு. நான் வைக்கவா?”, என்று கேட்டு அவன் சரி சொல்லவும் வைத்து விட்டாள்.
காதல் இருக்கோ இல்லையோ ஆனால் இருவருமே மற்றவர் நினைப்பில் தான் இருந்தார்கள்.
அதன் பின்னர் இருவரும் அதிகம் போனில் பேசிக் கொள்ள வில்லை. ஆனால் பேஸ்புக்கில் மெஸ்ஸேஜில் அவர்கள் பேசிக் கொண்டார்கள். தங்கை அண்ணனுக்காக என்று பேசியவர்களின் பேச்சுக்கள் அவர்களின் விருப்பு வெறுப்புகளில் நீண்டது.
ஒரு முறை அனுப்பிய ஐ லவ் யு என்ற வார்த்தையை சிவானி மீண்டும் அனுப்ப வில்லை. அவனும் அதைப் பற்றி பேச வில்லை. இருவருக்குள்ளும் நல்ல தோழமை உணர்வு உருவானது. அவன் என்ன சொன்னாலும் அவனை ஏதாவது கேலி பேசி சிரிக்கும் அவளை அதிகமாக ரசித்தான் நிர்மல்.
நாட்கள் இப்படியே கடக்க அடுத்த மாதத்தில் ஒரு நாள் மனோஜை அழைத்தாள் சிவானி.
“சொல்லு அம்மு…”
“அண்ணா, நீ ஷோரூம் மாதிரி வைக்க பணம் தேவைன்னு சொன்னல்ல? எனக்கு லோன் கிடைக்குற மாதிரி இருக்கு. நான் எடுக்கவா?”, என்று கேட்டாள் சிவானி. அண்ணனிடம் பொய் சொல்கிறோமே என்று குறுகுறுப்பாகவும் இருந்தது. காதல் வந்தால் கள்ளமும் வரும் என்று அவளுக்கு யார் சொல்வது?
“அப்படியா? ஆனா வேண்டாம் அம்மு. உன்னோட சம்பளம் எல்லாம் உன்னோட கல்யாணத்துக்கு சேத்து வைக்க எடுத்து வை. மத்ததை நான் பாத்துக்குறேன்”
“பேங்க்ல பணத்தை சும்மா தூங்கப் போடுறதுக்கு பதிலா உனக்கு உபயோகமா இருக்கட்டும் அண்ணா. நான் கொடுத்தா வாங்க மாட்டியா? இல்லை நீ நல்ல நிலைமைல இருந்தா என்னோட கல்யாணத்துக்கு நீ தர மாட்டியா? சம்பளத்துல இருந்து கொஞ்சம் தாண்ணா பிடிப்பாங்க. வாங்கிக்கோ பிளீஸ்ண்ணா”
“சரி டா அம்மு”
“தேங்க்ஸ் அண்ணா, நான் பணம் கைக்கு வந்ததும் டிரான்ஸ்பர் பண்ணுறேன்”, என்று சொல்லி சம்மதம் வாங்கினாள்.
அதை உடனே நிர்மலுக்கு அழைத்து சொல்லி விட்டாள்.
“மனோஜ் ஒத்துக் கிட்டானா? ரொம்ப சந்தோஷம் சிவானி. சரி நான் நாளான்னைக்கு பாரின் கிளம்புறேன். அங்க போயிட்டு நான் உன்னோட அக்கவுண்டுக்கு பணம் அனுப்புறேன்”
“சரி”
“சிவானி”
“ஆன்…”
“நான் கிளம்புறதுக்கு இன்னும் ஒரு நாள் மட்டும் தான் இருக்கு. போகுறதுக்கு முன்னாடி நாம ஒரு தடவை மீட் பண்ணலாமா?”, என்று மொத்த ஆவலையும் தேக்கிய குரலில் கேட்டான் நிர்மல்.
அவன் குரலும் அதில் இருந்த தேடலும் ஆர்வமும் அவளை திகைக்க வைதத்து. மூச்சு திணறிப் போன சிவானி அந்த உணர்வுகளை தாங்க முடியாமல் துவண்டாள்.