அத்தியாயம் – 3
வசீகரன் அலைபேசியில் யாருடனோ பேசி சிரித்துக் கொண்டிருக்க அதைப் பார்த்துப் கொண்டே வந்தார் ஏகாம்பரம். அவர்கள் இருவர் மட்டுமே ஸ்டேஷனில் இருக்க மற்றவர்கள் வேறு வேலையாக வெளியே சென்றிருந்தனர். ஹாஸினி ஏதோ கேஸ் விஷயமாய் டிரைவர் சேகருடன் ஜீப்பில் வெளியே சென்றிருந்தாள்.
வசீகரன் வேலையில் சேர்ந்து பத்து நாட்கள் ஆகி இருந்தது. ஏகாம்பரம் வீட்டிற்கு அருகில் இருந்த பேச்சிலர்சுடன் தங்கி இருந்தான். மெஸ்ஸில் சாப்பிட்டு வந்தவனுக்கு வயித்துக்கு சேராமல் டாக்டரைக் காண்பிக்க வேண்டியதாயிற்று…
அதனால் அவனை தங்கள் வீட்டிலேயே சாப்பிட்டுக் கொள்ளுமாறு ஏகாம்பரம் கூறி இருந்தார். ஒரு நாள் வீட்டில் இருந்து ஓய்வெடுத்துவிட்டு இன்று வந்திருந்தான். அவனது உடம்புக்கு முடியாமல் போனதில் இருந்து தினமும் இரண்டு தடவை அவன் அன்னை அலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தார்.
ஹாஸினியின் கடுகடுத்த முகமும் எப்போதும் அவனிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்ததும் அவனுக்கு மனவருத்தத்தைத் தர விருப்பமில்லாமல் அன்று வேலைக்கு வந்திருந்தான். 
அவன் பேசி  முடித்து வரவும் ஏகாம்பரம் அவனிடம் கேட்டார்.
“என்னப்பா வசீ… போன்ல யாரு… அம்மாவா…”
“ஆமாம் சார்… நேரத்துக்கு எண்ணை தேச்சு குளிக்கணுமாம்… சாப்பிடணுமாம்… தூங்கணுமாம்… ஹோட்டல்ல சாப்பிட்டு வயித்துக்கு முடியாம ஆனதில் இருந்து அம்மாக்கு பயம்…”
“உங்க வீட்டுல தான் இப்போ சாப்பிடறேன்னு சொன்னேன்… இப்பதான் அவுங்களுக்கு நிம்மதி…. உங்களுக்கு நன்றி சொல்ல சொன்னாங்க…. இப்பவும் சின்ன பையன் போல என்னை நினைக்குறாங்க…” என்று சிரித்தான்.
“ம்ம்ம்… எத்தனை வயசானாலும் அம்மாக்கு புள்ளைங்க எப்பவும் குழந்தைங்க தான்… என் வீட்டுலயே சாப்பிட்டுக்கோன்னு நான் முதல்லயே சொன்னேன்… நீ தான் மெஸ்ல சாப்பிடறேன்னு வயித்தைக் கெடுத்துகிட்டே…”
“ஒரு வாரத்துலயே உனக்கு வயித்து வலி வந்து ஹாஸ்பிடல் போக வேண்டியதா போயிருச்சு… உனக்குன்னு எங்க வீட்டுல தனியா சமைக்கப் போறாங்களா… என்ன… எப்பவும் செய்யுறதோட ஒரு பிடி சேர்த்து செய்யப் போறாங்க…”
“அதும் இல்லாம அரவிந்தன் சார்க்கு ஒரு விஷயத்தில் நான் ரொம்ப கடமைப் பட்டிருக்கேன்… அவர் பையன் என் வீட்டில் சாப்பிட்டா எனக்கு அவரே சாப்பிடற போல தான்….” என்று அவன் தோளில் ஆதரவாய்க் கையை வைத்தவரின் குரல் கலங்கி இருந்தது.
“என்னாச்சு… சார்… அப்பா அப்படி என்ன உங்களுக்கு பண்ணினார்… எத்தனை தடவை கேட்டாலும் அதை சொல்லவும் மாட்டேங்குறீங்க….” என்று அவன் யோசனையாய்க் கேட்க,
“அதை நேரம் வரும் போது சொல்லறேன்ப்பா… நீ முதல்ல சப் இன்ஸ்பெக்டர் டெஸ்ட் எழுதி பாசாகறதுக்கான வேலையைப் பாரு…” என்றார்.
“போங்க சார்… எனக்கு இந்த வேலையே பிடிக்கலை… அந்த எஸ் ஐ பொண்ணு வேற எப்போ பார்த்தாலும் என்னை எதிரி போல முறைச்சுட்டே இருக்கு… எடுபிடிபோல நடத்துது… எதுக்கெடுத்தாலும் குத்தம் சொல்லி திட்டிட்டே இருக்கு…”
“நான் மறுபடியும் டைரக்டர் சான்ஸ் கிடைக்குமான்னு பார்க்கலாமான்னு யோசிக்கறேன்…. இந்த வேலையில் இருந்துட்டே அப்படியே அதையும் முயற்சி பண்ணி எதாவது சரியாச்சுன்னா இந்த வேலையே வேண்டாம்னு இந்த காக்கிய அவிழ்த்து வீசிட்டுப் போயிடுவேன்…” என்றான் சலிப்புடன்.
அதைக் கேட்டு அவனை அதிர்ச்சியுடன் நோக்கிய ஏகாம்பரம், “என்ன தம்பி… இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டே… நீ இன்னும் இந்த காக்கி டிரஸ்ல செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு… அந்தப் பொண்ணு திட்டறதுக்கும் கோபப் படறதுக்கும் எல்லாம் யாராவது வேலைய விட்டுப் போவாங்களா…” என்றார்.
அவர் சொன்னதும் ஒன்றும் புரியாமல், “நான் என்ன சார்… செய்ய வேண்டிய வேலை இருக்கு… சாதாரண கான்ஸ்டபிள்… நான் என்ன பெரிசா செய்துடப் போறேன்…” என்றான்.
“வசீகரன்… நான் சொன்னா உங்க அப்பா சொன்ன போலன்னு எப்பவும் சொல்லுவியே… இப்போ நான் உன் அப்பா இடத்துல இருந்து சொல்லறேன்… நீ இந்த காவல் துறையை விட்டுப் போகணும்னு நினைக்கக் கூடக் கூடாது…. அது ஏன்… என்னன்னு… இப்போ உன்கிட்டே சொல்லிப் பிரயோசனம் இல்லை…. நீ நல்லவொரு பதவிக்கு வரணும்… அப்புறம் சொல்லறேன்…” என்றார்.
“அப்படியென்ன சார்… விஷயம்… சொல்லவே மாட்டேங்குறீங்க… ஆனா நீங்க இவ்வளவு தூரம் சொல்லும்போது கண்டிப்பா எதோ பெரிய விஷயம்னு தான் தோணுது…. அடுத்த எஸ் ஐ டெஸ்ட்ல  நான் கண்டிப்பா முயற்சி பண்ணறேன்…”
“நீங்க சொன்னபோல எஸ்ஐ ஆகிக் காட்டறேன்… அப்புறம் நீங்க சொல்லித்தானே ஆகணும்…” என்றவன் அங்கிருந்த தொலைபேசி பழைய “டிரிங்…. டிரிங்….” சப்தத்தில் அலறவும் அதன் அருகே சென்றான்.
“ஹலோ… போலீஸ் ஸ்டேஷனா…” என்று பதட்டத்துடன் வந்தது ஒரு குரல்.
“ஆமாம்… நீங்க யார் பேசறது…..”
“சார்… நான் ஆவாரம்பாளையத்தில் இருக்குற ஒரு பூத்தில் இருந்து பேசறேன்… இங்கே சில ரவுடிப் பசங்க ஸ்கூல் வாட்ச்மேனை அடிச்சுப் போட்டுட்டு உள்ளே நுழைஞ்சு தண்ணியப் போட்டு அட்டகாசம் பண்ணிட்டு இருக்காங்க… கேக்கப் போனவங்களையும் அடிக்கறாங்க… கொஞ்சம் உடனே வர முடியுமா…” என்றார்.
அதைக் கேட்டதும் அவனுக்கும் பதட்டம் தொற்றிக் கொள்ள ஏகாம்பரத்திடம் விஷயத்தைக் கூறினான். அவன் வந்த பிறகு இப்போது தான் இப்படி ஒரு அழைப்பு போனுக்கு வந்திருக்கிறது. ஏகாம்பரம் அவனிடம் போனை வாங்கிப் பேசி எல்லா விவரங்களையும் கேட்டுக் கொண்டார்.
உடனே ஹாஸினிக்கு அலைபேசிக்கு அழைக்க அவள் எடுக்கவில்லை… இரண்டாவது நிமிடம் ஸ்டேஷன் வாசலில் ஜீப் வந்து நிற்கும் ஓசை கேட்டது.
“ம்ம்… எதுக்கு கால் பண்ணீங்க…” என்றாள் ஏகாம்பரத்திடம்.
“மேடம்…..” என்றவர், தொலைபேசியில் கேட்ட விஷயத்தைக் கூறினார்.
“ஓ… சரி… கான்ஸ்டபிள் யாரையாவது கூட்டிட்டு என்னோட வாங்க…” நிமிர்ந்தவள், “எங்கே யாரையும் காணோம்…” என்று மறுபடியும் கிளம்பத் தயாரானாள்.
“மேடம்…. பழனிசாமியும், அருணாசலமும் இன்னைக்கு லீவு… மத்தவங்க ரெண்டு பேரும் வேற கேஸ் விஷயமா வெளியே போயிருக்காங்க…” என்றார்.
“சரி… இந்த கான்ஸ்டபிளுக்கு என்ன….. வரலாம் தானே…. என்ன… பயமொன்னும் இல்லியே….” என்றாள் புருவத்தைக் கேள்வியாய்த் தூக்கி வசீகரனைப் பார்த்து.
அதைக் கேட்டு அவனுக்கு சற்று அவமானமாக இருக்க “இல்லை…” என்று தலையாட்டினான்.
வசீகரனுக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை… அவன் கோழையல்லதான்… ஆனாலும் சண்டை, சச்சரவு என்றால் அவனுக்கு கொஞ்சம் பயம்… அவனுக்கு உடம்புக்கும் முடியாமல் இன்று தான் வந்திருந்ததால் அவனை அனுப்ப ஏகாம்பரத்துக்கு கொஞ்சம் தயக்கமாய் இருந்தது.
“மேடம்… ஸ்டேஷன்ல யாராவது வேணுமே…” என்று ஏகாம்பரம் இழுக்க…
“நீங்க ஸ்டேஷன்ல இருங்க…” என்றவள்,
“கான்ஸ்டபிள்… நீங்க என்னோட வாங்க…” என்று வசீகரனை அழைத்துக் கொண்டு ஜீப்புக்கு சென்றாள்.
“சேகர் வண்டி எடுங்க…” என்றவள் முன்னில் ஏறி கம்பீரமாய் அமர்ந்து கொள்ள  வசீகரன் பின்னில் ஏறிக் கொண்டான்.
ஜீப்புக்கு மேலே சிவப்புக் கொண்டையாய் சொய்ங்… சொய்ங்… என்று போலீஸ் அலாரத்துடன் விளக்கெரிய வண்டி ஆவாரம்பாளையம் நோக்கிச் செல்லத் தொடங்கியது.
வசீகரனுக்கு ஏனோ அவள் வேண்டுமென்றே தன்னை கான்ஸ்டபிள் என்று அடிக்கடி அழைப்பது போலத் தோன்றியது. அவனுக்கு அந்த வேலை ஒன்றும் கேவலமாய்த் தோணவில்லை… ஆனால் அவனைக் கேவலப் படுத்ததான் அவள் எப்போதும் தன் பெயரை சொல்லாமல் அப்படிக் கூப்பிடுகிறாள் எனத் தோன்றியது.
“ராட்சசி… மூஞ்சியப் பாரு… கடு கடுன்னு கடுவன் பூனை மாதிரி… பேரை சொல்லிக் கூப்பிட வேண்டியது தானே… எப்பப் பார்த்தாலும் இப்படி விறைப்பா இருந்து என்னத்த சாதிக்கப் போறாளோ… என்னவோ…”
“இவளுக்கு சேவகம் செய்யறதுக்கு தான் என்னை கான்ஸ்டபிளா நியமிச்ச போல ரொம்ப தான் சீன் போடறா… எனக்கும் ஒரு காலம் வராமலா போயிடும்… இரு… அடுத்த எஸ் ஐ டெஸ்ட்லையே பாஸ் ஆகி உனக்கு ஈக்வலா வந்து காட்டறேன்…” அவன் மனதுக்குள் வைராக்கியமாய் வசனம் பேசிக் கொண்டிருக்க ஜீப்பிலிருந்து இறங்கியவள் அவன் இறங்காமல் இருப்பதைக் கண்டு,
“யோவ்… கான்ஸ்டபிள்… என்ன… ஜீப்புக்குள்ளே உக்கார்ந்து கனவா…” என்று அதட்டவும் அடித்துப் பிடித்து இறங்கினான் வசீகரன்.
சேகர் ஜீப்பை ஒரு ஓரமாய் நிறுத்த சென்றார். பள்ளிக்கு முன்னே கூடியிருந்த சிறு கூட்டம் காக்கி சட்டையைக் கண்டதும் வழிவிட வசீகரனும் ஹாஸினியும் பள்ளிக்குள் நுழைந்தனர். அதற்குள் சேகரும் ஜீப்பை நிறுத்திவிட்டு உள்ளே வந்தார்.
அன்று பள்ளி விடுமுறை தினம் ஆதலால் பள்ளியில் யாரும் இருக்கவில்லை…
நான்கைந்து ரவுடிகள் தண்ணி அடித்துக் கொண்டு ஏதேதோ உளறிக் கொண்டு வகுப்பறையின் உள்ளே அட்டகாசம் செய்து கொண்டிருந்தனர்.
இவர்களைக் கண்டும் அவர்கள் பாட்டுக்கு தண்ணி அடித்துக் கொண்டிருக்க அவர்களை நெருங்கிய ஹாஸினி, உளறிக் கொண்டு நின்றிருந்த ஒருத்தனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.
“குடிகாரப் பயலுகளா…. உங்களுக்கு தண்ணி அடிக்க ஸ்கூல் தான் கிடைச்சுதா… பெரிய ரவுடிகளா நீங்க…” என்று இன்னொருத்தனையும் அடிக்க அப்போது தான் போலீஸ் வந்திருக்கிறது என்பது புத்தியில் உரைக்க அவர்கள் எழுந்து நின்றனர்.
“ஏய்… பொட்டைச் சிறுக்கி…. என் மேலயே கை வச்சிட்டியா… நான் யாரு தெரியுமா…. அண்ணன் ராக்கெட் பாண்டிகிட்ட சொன்னா என்ன நடக்கும் தெரியுமா…” என்று அவன் வசனம் பேச கண்கள் சிவந்து காளியாய் நின்றாள் ஹாஸினி.
“என்னடா… பொட்டச்சின்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா… உன் நொண்ணன் என்ன பெரிய இவனா… வந்து கிழிச்சிருவானோ…. அதையும் தான் நான் பாக்கறேன்…” என்று மேலும் அவனை அடிக்க அதற்குள் வேறொருவன் அவளை அடிக்க வர அவனை சேகர் பிடித்து நான்கு சாத்து சாத்தினார்.
வசீகரன் என்ன செய்வதென்று தெரியாமல் மலைப்புடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
அதற்குள் வேறொரு ரவுடி குடித்துக் கொண்டிருந்த சாராய பாட்டிலை நிலத்தில் உடைத்து, “என்ன தைரியம் இருந்தா… எங்க அண்ணன் மேலயே கை வைப்பே…” என்று அவளை பக்கவாட்டில் இருந்து குத்தப் போக வேறு இருவரை சமாளித்துக் கொண்டிருந்த அவள் சைடில் வந்தவனை கவனிக்கவில்லை…
அதைக் கவனித்து விட்ட வசீகரன் குத்த வந்தவனைத் தடுத்து அவனிடம் இருந்து பாட்டிலைப் பறிக்க முயல அந்தப் போராட்டத்தில் அவனது கைகளை அது பதம் பார்த்தது. அதற்குள் ஹாஸினி அவனை அடித்து தள்ளிவிட்டு திரும்ப அவள் அருகில் குருதி வழியும் கையோடு நிற்கும் வசீகரனைக் கண்டு அதிர்ந்து போனாள்.
“அய்யய்யோ… என்னாச்சு… வசீகரன்…” என்று பதறியவளின் கலங்கிய முகம் அவனுக்குப் புதியதாய்த் தோன்ற அவளது மெல்லிய இதழ்கள் முதன் முறையாய் அவள் அறியாமல் உச்சரித்த தன் பெயரின் இனிமையை அவன் உணர்ந்தான்.
வேகமாய்த் தன் பாக்கெட்டில் இருந்த வெண்ணிற டவலை எடுத்து அவன் காயத்தில் கட்டி விட்டாள். அவளது சிவந்த மையிட்ட கண்கள் லேசாய்க் கலங்கியதோ என்று கூட அவனுக்குத் தோன்றியது. அதற்குள் வெளியே நின்று கொண்டிருந்த சிலரும் அவர்களுக்கு உதவி செய்ய அனைவரையும் பிடித்து ஜீப்பில் ஏற்றினர். 
ராஜிம்மா…. ராஜிம்மா… அழைத்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் தனபாக்கியம். அவருடன் அவரது மகன் பாஸ்கரும் இருந்தான். ராஜேஸ்வரியின் அண்ணன் (பெரியப்பா மகனின்) மனைவியும் மகனும்.
ஹாலில் அமர்ந்து ஏதோ வரவு செலவுக் கணக்கை சரிபார்த்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரி நிமிர்ந்தார். தனபாக்கியதைக் கண்டதும் அவரது முகம் யோசனையில் சுருங்கியது.
“வாங்க அண்ணி… வா பாஸ்கர்… உக்காருங்க…” என்று சம்பிரதாயமாய் வரவேற்றாலும் மனதுக்குள் ஏதேதோ எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.
“நல்லாருக்கியா ராஜிம்மா…. என் மருமக நல்லாருக்காளா…. எங்கே புள்ளையக் காணோம்… டியூட்டிக்கு போயிருக்கா…” என்ற அவரின் தேடல் பார்வையைத் தொடர்ந்து பாஸ்கரின் பார்வையும் ஆவலாய் உள்ளே ஓடியது.
“ஆமாம்….” என்ற ராஜேஸ்வரி, 
“ராமு….” அடுக்களையை நோக்கிக் குரல் கொடுக்க அவர் எட்டிப் பார்த்தார்.
“காப்பி…..” என்றார் அவர்களைக் காட்டி.
“சரிம்மா…..” என்றவர் அவர்களுக்கு காப்பி எடுத்து வர சென்றார்.