அத்தியாயம் 14 
ஒரு முறை நீ நானாக
வேண்டும், அப்போது தான்
உனக்கு புரியும் நான் உன்
மீது வைத்த காதல்!!!
ஏஞ்சல் கொழுத்திப் போட்டது சாதாரண தீப்பொறி அல்ல. அது எளிதில் பற்றும் காட்டுத் தீ. ஏஞ்சல் அப்படிச் சொன்னதும் தன்னுடைய அண்ணனின் வாழ்க்கைக்காக இதை ஏன் செய்யக் கூடாது என்ற எண்ணம் வந்தது சிவானிக்கு. 
“அந்த வீட்டுக்கே மருமகளா போயிட்டா என்னோட வாழ்க்கையை வச்சு அண்ணனை எப்படி அவங்களால மிரட்ட முடியும்? மருமக மேல கையை வச்சா மகன் சும்மா விடுவானா? நிர்மலும் பாக்க அழகா தான் இருக்காங்க. நல்லா படிச்சிருக்காங்க. நல்ல வேலையிலயும் இருக்காங்க. அவங்களையே கட்டிக்கிட்டா என்ன?”, என்ற எண்ணம் வந்ததும் அவளே அவளுடைய யோசனையில் திகைத்தாள். 
அவளுக்காக பாடுபடும் மனோஜ் அவளுடைய திருமணத்தை எண்ணி எவ்வளவு பெரிய கனவு வைத்திருக்கிறான் என்று அவளுக்கு தெரியும். அவன் கனவை சிதைப்பதா என்று எண்ணமும் வந்தது. கூடவே அவளால் தான் அவன் வாழ்வை சரி செய்ய முடியும் என்ற எண்ணமும் வந்தது. 
இருவேறுப்பட்ட எண்ணங்களுக்கு இடையில் அவள் சிக்கி தவித்துக் கொண்டிருந்தாள். “அவனை கல்யாணம் பண்ணணும்னு உன் இஷ்டத்துக்கு நீயே முடிவு பண்ணுற? அதுக்கு அந்த நிர்மல் ஒத்துக்கணுமே? சும்மா உங்களை  நான் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்ன உடனே அவன் சரின்னு சொல்லிருவானா? அவனுக்கு உன்னைப் பிடிக்கலைன்னா என்ன செய்ய? முதல்ல அவன் கிட்ட என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு எப்படி கேப்ப?”, என்று கேள்வி கேட்டது அவளது மனசாட்சி. 
எவ்வளவு யோசித்தும் விடை கண்டு பிடிக்க முடியாததால் நடப்பது நடக்கட்டும் என்று எண்ணி நிர்மலுக்கு பிரண்ட் ரெக்வஸ்டும் ஒரு ஹாய் மெஸ்ஸேஜும் அனுப்பி வைத்தாள். அடுத்த நாள் வரைக்கும் எந்த பதிலும் நிர்மலிடம் இருந்து வர வில்லை. 
நிர்மல் அதை பார்த்தான் தான். மனோஜின் தங்கை என்றும் அவனுக்கு தெரியும். ஆனால் கொஞ்ச நாள் யாரிடமும் பேசாமல் இருக்க வேண்டும் என்று ஆஷாவுக்கு சொன்னதை தனக்கும் சொல்லிக் கொண்டு அதை அப்படியே விட்டு விட்டான். ஆனாலும் அவனுக்குள்ளே “இவ எதுக்கு எனக்கு மெஸ்ஸேஜ் பண்ணுறா?”, என்ற கேள்வி உருவாகத் தான் செய்தது. . 
பதில் வரும் என்று பொறுத்து பார்த்த சிவானிக்கோ இரண்டு நாட்களாக பதில் வரவில்லை என்றதும் அது எதிர்பார்ப்பாக மாறிப் போனது.
நிமிடத்துக்கு ஒரு முறை பதில் வந்திருக்கிறதா என்று சோதனை செய்ய போனை அடிக்கடி பார்க்க ஆரம்பித்தாள். அண்ணனுக்காக என்று சொல்லிக் கொண்ட அவளுக்குள்ளும் காதல் வைரஸ் தொற்றிக் கொண்டதை அவள் உணரவே இல்லை. 
அடுத்த நாளும் அவனிடம் இருந்து எந்த பதிலும் வர வில்லை என்றதும் சோர்ந்து போனவள் “பிளீஸ் ஒரு முக்கியமான விஷயம் உங்க கிட்ட பேசணும். பதில் அனுப்புங்க”, என்று அனுப்பி வைத்தாள். 
அதைக் கண்ட நிர்மலுக்கு ஆச்சர்யமும் குழப்பமும் வந்தாலும் “மனோஜ் பத்தி பேச தான் இப்படி அனுப்புறா போல?”, என்று எண்ணி அதை ஒதுக்கி விட்டான். 
அப்போதும் அவன் எதுவும் அனுப்பாததால் மனதுக்குள் கவலை உண்டானாலும் அவளுடைய தன்மானமும் சீண்ட ஆரம்பித்தது. “இவனுக்கு என்ன திமிர் இருந்தா என்னோட மெஸ்ஸேஜை படிச்சிட்டு ரிப்ளை பண்ணாம இருப்பான். இந்த ஆஷாவும் இப்படி தான் பண்ணுறா. இவனும் இப்படி பண்ணுறான். இரு இரு. இப்ப பாஞ்சிட்டு உன்னை ரிப்ளை பண்ண வைக்கலை நான் சிவானி இல்லை”, என்று எண்ணியவள் அடுத்த நொடி “ஐ லவ் யு நிர்மல்”, என்று அனுப்பி வைத்து விட்டாள். 
கோபத்தில் தான் அவள் அனுப்பியது. ஆனால் அது சென்ற பின்னர் தான் மனதுக்குள் அதிர்ந்து போனாள். “என்ன காரியம் செஞ்சிட்டேன் நான்? ஐயோ என்னைப் பத்தி என்ன நினைப்பான்?”, என்று பெரும் கவலையாக போனது அவளுக்கு.
ஆனால் அவள் எதிர் பார்த்த படி அடுத்த பத்து நிமிசத்தில் “வாட்?”, என்று அதிர்ச்சியாக மெஸ்ஸேஜ் செய்தான் நிர்மல். 
“பரவால்லயே நினைச்ச மாதிரியே ரிப்ளை வருது. என்னை டென்ஷன் பண்ணினான்ல? இப்ப அவன் டென்ஷன் ஆகட்டும்”, என்று எண்ணியவள் அவனுக்கு எந்த பதிலும் அனுப்ப வில்லை. 
ஆனால் அதன் பின்னர் நிர்மலிடம் இருந்து மெஸ்ஸேஜ் வந்த வண்ணமாக இருந்தது. “எதுக்கு அப்படிச் சொன்ன? நீ மனோஜ் தங்கை தானே? என்ன விஷயமா என்கிட்ட பேசணும்? உன்னோட நம்பர் சொல்லு, நான் கால் பண்ணுறேன்”, என்று அனுப்பி வைத்துக் கொண்டிருந்தான். 
“மூனே வார்த்தையாக இருந்தாலும் அது ஆட்டம் பாம் தான் போல? எவ்வளவு வெரைட்டியா கேள்வி வருது. இத்தனை நாள் என்னோட மெஸ்ஸேஜ்க்கு பதில் அனுப்பினானா?”, என்று எண்ணிய சிவானி தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள். 
மேலும் இரண்டு நாட்கள் அவனை கடுப்பேற்றி விட்டு தான் தன்னுடைய மொபைல் நம்பரை அவனுக்கு அனுப்பி வைத்தாள். அடுத்த பத்து நிமிடத்தில் அவளுக்கு அழைத்து விட்டான் நிர்மல். 
ஆனால் அதை கட் செய்த சிவானி “இப்ப வேலைல இருக்கேன். அப்புறம் கூப்பிடுறேன்”, என்று மெஸ்ஸேஜ் அனுப்பி வைத்தாள். 
போனையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த நிர்மலுக்கோ கோபம், திகைப்பு, எதிர்பார்ப்பு, ஆச்சர்யம், ஆர்வம் என்று விதவிதமான எண்ணங்கள் வந்தது. 
அவனிடம் யாரும் இது வரை ஐ லவ் யு என்ற வார்த்தையை சொன்னதில்லை. முதன் முதலாக ஒரு பெண் காதலைச் சொல்லியவுடன் அவனுக்கும் அதிர்ச்சி வருவது இயல்பு தானே? 
ஆனால் அவள் ஏன் அப்படி சொன்னாள் என்று தான் அவனுக்கு புரியவே இல்லை. 
“அவ சொன்னது உண்மையா பொய்யா? உண்மைன்னா எப்படி அப்படிச் சொன்னா? என்னை ஒரு தடவை தானே பாத்தா? நான் அவளை சரியாக் கூட அன்னைக்கு பாக்கலையே? ஏன் அப்படிச் சொன்னா? ஒரு வேளை விளையாடிருப்பாளோ?”, என்று யோசித்துக் கொண்டிருந்தான். 
வேலை முடிந்ததும் சிவானிக்கு அவனிடம் எப்படி பேச என்று தயக்கமாக இருந்தது. “எதுக்கு அப்படிச் சொன்னன்னு கேப்பானே? என்னன்னு சொல்லுவேன் நான்? நீங்க மெஸ்ஸேஜ் பண்ணலை, அதை பண்ண வைக்க தான் அப்படி அனுப்புனேன்னு உண்மையை சொல்லிறவா?”, என்று யோசித்த படியே அவனை அழைத்து விட்டாள். 
ஒரு ரிங்கிலே அவள் போனை எடுத்தவன் “ஹலோ, ஹலோ சிவானி சிவானி, லைன்ல இருக்கியா?”, என்று பரபரத்தான்.
முதல் முறை இப்படியாகப்பட்ட அனுபவம் வந்ததில் அவனுக்கு
படபடப்பாக இருந்தது. 
முதன் முதலில் அவனிடம் பேசுவது அதுவும் காதல், கல்யாணம் என்ற மனநிலையில் பேசுவது அவளுக்கும் படபடப்பைக்
கொடுத்தது. கூடவே அவன் தன்னிடம் பேசுவது அவளுக்கு ஒரு இனிமையான உணர்வையும் கொடுத்தது. 
என்ன பேசுவது என்று தெரியாமல் அவள் அமைதியாக இருக்க “ஹலோ சிவானி லைன்ல இருக்கியா?”, என்று மீண்டும் கேட்டான் நிர்மல்.
“ம்ம்”, என்று முணுமுணுத்தாள். 
“எதுக்கு அப்படி அனுப்புன சிவானி? எதுல தான் விளையாடுறதுன்னு இல்லையா?”, என்று நேரடியாக விசயத்துக்கு வந்தான். 
“நான் விளையாடலை. உண்மையா தான் சொன்னேன்”, என்று சொல்லி விட்டு அவள் அமைதியாக இருக்க அவன் தான் திகைத்து போனான். 
தன்னை நிலைப் படுத்திக் கொண்டவன் “ஏய் என்ன உளறுற நீ? நாம ரெண்டு பேரும் சரியா பாத்தது கூட கிடையாது? என்னைப் பாத்த 
கொஞ்ச நேரத்துல உனக்கு என் மேல காதல் பூத்துருச்சோ? இந்த
கதை எல்லாம் என்கிட்ட ஆகாது ஓகே? எங்க வீட்ல ஒருத்தி காதல்னு சொல்லி பைத்தியமா அலையுறதே போதும். என் தங்கச்சி நிலைமைக்கு உன் அண்ணன் காரணம்னா என்னை பைத்தியமாக்க நீ கிளம்பிட்டியா? உன் மேல எனக்கு ஒண்ணும் காதல் பூக்கலை
ஓகே? சும்மா பினாத்தாம உன் வேலையை பாத்துட்டு போ”, என்று படபடவென்று அவன் பொரிய சிவானிக்கோ கோபம் கட்டுக்கடங்காமல் பொங்கியது. 
அவன் சாதாரணமாக பேசியிருந்தால் அவளும் பொறுமையாக எடுத்து சொல்லி இருப்பாள். அவன் அப்படி சொல்லவும் அவளுக்கும் கடுப்பு ஏறியது. 
அவன் கோபம் நியாயமானது தான் என்று அவள் மனது ஏற்றுக் கொண்டாலும் “இவன் எப்படி என்னை இப்படிக் சொல்லலாம்?”, என்று மூளை கோப பட “ஹலோ சார், கொஞ்சம் நிறுத்துறீங்களா? வாய் இருந்தா என்ன வேணும்னாலும் பேசுவீங்களா? எனக்கு உங்க மேல ஒண்ணும் காதல் பூ பூக்கலை. எனக்கும் இந்த காதல் கன்றாவி எல்லாம் வேண்டாம்”, என்றாள். 
அவள் பதிலில் குழம்பியவன் “என்ன? அப்ப எதுக்கு அப்படி அனுப்பினீயாம்?”, என்று கேட்டான். 
“நான் கட்டிக்க போறவர்க்கு தானே அனுப்புனேன்? இதுல என்ன தப்பு இருக்கு?”, என்று கேட்டு அவனை மீண்டும் திகைக்க வைத்தாள். 
“சிவானி, என்னால சத்தியமா முடியலை. எனக்கு பயங்கர டென்சனா இருக்கு. என்ன சொல்ல வர நீ? லவ் இல்லைன்னு சொல்ற? ஆனா கட்டிக்க போறவர்னு சொல்ற? ஒரு வேளை வேற யாருக்கும் அனுப்ப வேண்டியதை எனக்கு அனுப்பிட்டியா? உன் மனசுல வேற யார் மேலயாவது லவ் இருக்கா? உன்னோட லவ் விஷயம் உங்க அண்ணனுக்கு தெரியுமா?”
“நீங்க என்ன கேள்வியா கேட்டுட்டு இருக்கீங்க? ஒவ்வொரு கேள்வியா கேளுங்க ஓகே. நான் ஐ லவ் யுன்னு உங்களுக்கு தான் அனுப்புனேன். நான் யாரையும் லவ்வும் பண்ணலை. நான் கல்யாணம் பண்ணிக்க போறது உங்களைத் தான். அதனால தான் உங்களுக்கு ஐ லவ் யுன்னு அனுப்புனேன். ஆனா உங்களை லவ் பண்ணலை போதுமா?”
“ஆ ஆஆஆ.. சிவானி”, என்று கத்தியவன் தலையை பிய்த்துக் கொண்டு அமர்ந்து விட்டான். 
“என்ன சார் குழப்பமா இருக்கா?”
“ரொம்ப குழப்பமா இருக்கு, கொஞ்சம் புரியும் படியா பேசு பிளீஸ்”
“எனக்கு உங்களை கட்டாயம் கல்யாணம் பண்ணிக்கணும். நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”
“என்ன??????”
“ஐயோ, உங்களுக்கு காது கேக்கலையா? நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டேன்”
“விளையாடாதே சிவானி. அப்ப நீ என்னை லவ் பண்ணுறியா?”
“சத்தியமா இல்லை”
“அப்புறம் எப்படி இப்படி பேசுற?”
“நம்ம ஊர்ல அம்மா அப்பா பாத்து கட்டி வைக்கிற கல்யாணத்துல எல்லாம் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் தானே லவ் பூக்குது. நாம நம்மளே பாத்து கல்யாணம் பண்ணிப்போம். அப்புறம் லவ் பண்ணுவோம்”, என்று அவள் சொன்னதும் தலையை எங்கயாவது போய் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது நிர்மலுக்கு. 
“என்ன சார் அமைதியாகிட்டீங்க?”
“நீ பேசுறதை கேட்டு தான் அமைதியா உக்காந்துருக்கேன். நீ லூசா இல்லை நான் லூஸான்னு யோசிக்கிறேன்”
“கண்டிப்பா ரெண்டு பேரும் லூசு இல்லை”
“அப்ப எதுக்கு இப்படி சொல்ற? லவ்வே இல்லாம எதுக்கு என்னைக் கட்டிக்கணுமாம்? லவ் இல்லாம கல்யாணம்…. சான்ஸே இல்லை”
“முன்னுக்கு பின் முரணா பேசுறீங்க சார் நீங்க”
“யாரு நானா?”
“ஆமா, அப்ப தான் லவ்வே வேண்டாம்னு சொன்னீங்க? இப்ப லவ் இல்லாம எப்படி கல்யாணம் பண்ணுறதுன்னு கேக்குறீங்க? அப்ப நீங்க லவ்வும் பண்ணாம கல்யாணமும் பண்ணாம சாமியார் ஆகப் போறீங்களா? சரி அதை விடுங்க. நம்ம கதைக்கு வாங்க. பேசாம நாம ரெண்டு பேரும் லவ் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்கலாமா?”
“ஐயோ அம்மா தாயே, என்னால சத்தியமா முடியலை. எனக்கு பி.பி ரைஸ் ஆகிருச்சு., நான் அப்புறம் கூப்பிடுறேன். கொஞ்சம் நான் ரிலாக்ஸ் பண்ணிக்கிறேன்”
“நீங்க பிரீயா இருக்குறப்ப நான் பிரியா இருக்க வேண்டாமா? நான் வெட்டியா இருக்கும் போது நானே உங்களை கூப்பிடுறேன்”, என்று சொல்லி போனை வைத்த சிவானிக்கு உதட்டில் புன்னகை விரிந்தது.
நிர்மலோ புன்னகையை மறந்து “என்ன பொண்ணு டா இவ? பேசுனதுல ஒரு விஷயம் கூட புரியலை”, என்று யோசித்துக் கொண்டிருந்தான்.  
மனோஜ் வாயில் இருந்து தான் சிவானி என்ற பெயரையே கேள்வி பட்டிருக்கிறான். அவள் மனோஜ் மேல் மிகவும் அன்பு வைத்திருக்கிறாள் என்று மட்டுமே அவனுக்கு தெரியும். மற்ற படி அவளைப் பற்றி அவன் அதிகம் யோசித்தது இல்லை. 
அப்படி இருக்க இன்று அவளே காதலைச் சொல்லவும் அதுவும் காதலே இல்லாமல் காதலைச் சொல்லவும் அவனுக்கு அதிர்ச்சி மற்றும் திகைப்பு தான். 
“என்ன நினைச்சிட்டு இருக்கா இவ?”, என்று கோபமும் வந்தது. 
சிறிது நேரம் கழித்து அவளே அவனை அழைத்தாள். சலிப்புடன் அதை எடுத்தவன் “இப்பவாது கொஞ்சம் புரியுற மாதிரி பேசுங்க மேடம்”, என்றான். 
“நான் சீரியசாவே சொல்றேன் நிர்மல். எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கணும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நம்ம கல்யாணம் நடக்கணும்”, என்று சீரியசாக சொன்னாள் சிவானி. 
“ப்ச் சிவானி, என்ன நினைச்சிட்டு இருக்க நீ?”
“நான் தெளிவாவே சொல்றேன். நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா ஆஷாக்கும் எங்க அண்ணனுக்கும் ஈஸியா கல்யாணம் நடந்துரும்”, என்று அவள் சொன்னதும் “என்ன???”, என்று அதிர்ந்து போனான். 
“ஆமா நிர்மல், கண்டிப்பா நம்ம கல்யாணம் நடந்தா அவங்க கல்யாணம் நடக்கும்?”
“உங்க அண்ணன் மேல நீ உயிரையே வச்சிருக்கன்னு உங்க அண்ணன் எப்பவும் பிநாத்திகிட்டே இருப்பான். அதை அப்ப புரிஞ்சிக்கலை. இப்ப தான் அதை உண்மைன்னு நம்புறேன். உங்க அண்ணன் வாழ்க்கைக்காக உன்னோட வாழ்க்கையை வீணடிப்பியா? அவங்க கல்யாணத்துக்கு எதுக்கு நம்ம கல்யாணத்தை இணை கூட்டுற?”