பிரம்மாண்டமான கட்டிடத்தின் தலையில் பெரிய உலக உருண்டை சுற்றிக் கொண்டிருந்தது. அங்கே ஒவ்வொரு தளத்திலும் ஏதேதோ ஷூட்டிங் நடந்து கொண்டிருக்க அந்த இடமே பரபரப்பாய் இருந்தது.
கண்ணைப் பறிக்கும் விளக்கு வெளிச்சங்களும் அரிதாரம் பூசிய சினிமா தாரங்களும் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருக்க திரையுலகம் சம்பந்தப்பட்ட பல முகங்களும் போலியாய் ஒரு சிரிப்பை பூசிக் கொண்டு உலவிக் கொண்டிருந்தது.
அதன் ஐந்தாம் தளத்தில் தமிழ்ப்பட ஷூட்டிங்கிற்காய் காவல் நிலையம் செட் போடப்பட்டிருந்தது. காமிராக்கள் காட்சிகளைப் படச்சுருளாய் உள்வாங்கிக் கொள்ள காத்துக் கொண்டிருந்தன. படப்பிடிப்புக்கான தயாரெடுப்புகள் நடந்து கொண்டிருக்க அப்படத்தின் இயக்குனரான வசீகரன் தன் உதவி இயக்குனர்களை விரட்டிக் கொண்டிருந்தான்.
“என்ன ராஜ்… ஆர்டிஸ்ட் எல்லாம் ரெடி தானே… என்ன காட்சின்னு அவுங்களுக்கு சொல்லிக் கொடுத்துட்டியா… கேமரா ரெடிதானே… ஆர்டிஸ்ட்டை பொசிஷன்க்கு வர சொல்லு…” என்று பரபரபாய்க் கூறிக் கொண்டிருக்க அந்த உதவி இயக்குனர் எல்லாவற்றுக்கும் தலையாட்டி விட்டு ஓடினான்.
“வசீகரன்……..”
உண்மையிலேயே வசீகரமான தோற்றத்தில் நின்றிருந்தான்…. ஆறடி உயரத்தில் எலுமிச்சை நிறத்தில் கம்பீரமாய் இருந்தான்… யாருடைய மனதையும் எளிதில் படித்திடும் தீட்சண்யமான கண்கள்…. ஏழைத் திருப்பிப் போட்டாற் போல கூர்மையான நாசி….
அதன் கீழே அழகாய் டிரிம் செய்யப்பட்டு திருத்தப்பட்ட அளவான மீசை…. எப்போதும் யோசனையில் இருக்கும் முகம்… அழகாய் திருத்தமாய் சிகையை வெட்டி தலைக்கு டைரக்டர் என்று எழுதி இருந்த ஒரு தொப்பியைக் கொடுத்திருந்தான்…
ஒரு சினிமாவில் ஹீரோவாய் நடிக்கும் சகல தகுதிகளும் இருந்தாலும் அவனுக்கு ஏனோ இயக்குனர் ஆக வேண்டும் என்பதே வாழ்வில் லட்சியமாய் இருந்தது. நடிப்பதை விட நடிக்க வைப்பதே அவனது விருப்பம்…. அவன் அழகைக் கண்டு அவனைத் தழுவிச் செல்லும் மஸ்காரா கண்களில் இருந்து தப்புவதே அவனுக்குப் பெரும் பாடாய் இருந்தது.
வசீகரனின் கண்கள் காமிராவாய் சுழன்று கொண்டிருக்க காமிரா மேனுக்கு அருகில் சென்றான். ஆர்டிஸ்டுகள் பொசிஷனில் இருந்து டயலாக் படித்துக் கொண்டிருக்க ராஜுவை நோக்கி “ரெடியா……” என்று கேட்டான்.
“ம்ம்… ரெடி சார்…..” என்றான் ராஜு.
காமிராக்கள் காட்சியை உள்வாங்க தயாராய் நிற்க, காமிரா மேனின் கண்கள் காமிராவுக்குள் புதைந்திருந்தன… காவல் நிலையத்தில் நடக்கின்ற ஒரு காட்சியைப் படமாக்கத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
“ஸ்டார்ட்…..”
“காமிரா ரோலிங்…..”
“ஆக்ஷன்……”
என்று வசீகரனின் வாயில் இருந்து ஒவ்வொரு வார்த்தைகளாய் வெளியே வந்ததும் காமிராக்கள் தயாராகின. வெளிச்சத்தை விளக்குகள் வாரி இறைத்தது.
தயக்கத்தோடு உள்ளே நுழைந்தான் ஹீரோ. தொப்பையோடு அமர்ந்திருந்த அந்த அதிகாரியிடம் சென்றான்.
“சார்…”
அப்போது தான் மும்முரமாய் கண்ணை மூடி சுகமாய் காதைக் குடைந்து கொண்டிருந்தவர், மெல்லக் கண் விழித்தார்.
“ஹூம்… என்ன வேணும்….” என்றார் அசட்டையாக.
“சார்… என் பேரு முத்து… ஏட்டு ராஜாராம் பையன்… இங்கே கான்ஸ்டபிளா என்னைப் போஸ்ட் பண்ணி இருக்காங்க…” என்று ஒரு கவரை நீட்டினான்.
“ஓ… ராஜாராம் பையனா நீ…..” என்று அவனை யோசனையோடு பார்த்தவர்,
“அதோ… அங்கே ஏட்டையா இருப்பார்… அவரைப் போயிப் பாரு…” என்றார்.
அவன் அவரிடம் செல்ல ஏதோ பைலைப் பார்த்துக் கொண்டிருந்தவர் நிமிர்ந்தார்.
“உங்களுக்கு அப்பாவைத் தெரியுமா சார்…” என்றான் அவன் அதிசயத்துடன்.
“என்னப்பா இப்படிக் கேட்டுட்டே… உன் அப்பாவைத் தெரியாம இருக்குமா… அவருக்கு வேலை என்னவோ வேற ஸ்டேஷன்ல தான்… ஆனாலும் அவரோட நேர்மையும் உத்தியோகத்து மேல அவருக்கு இருந்த விசுவாசமும் எங்க டிபார்ட்மெண்டுக்கே தெரியுமே…. நீயும் அவரைப் போல நேர்மையான போலீஸ்னு பேர் வாங்கணும் தம்பி…” என்று வாழ்த்தினார்.
தந்தையின் நினைவில் மனம் நெகிழ்ந்து நின்றிருந்தவனை தோளில் தட்டிக் கொடுத்தவர்,
“உக்காருப்பா… வீட்டுல எல்லாரும் சவுக்கியமா…” என்று விசாரித்தார்.
“ம்ம்… எல்லாரும் நல்லாருக்காங்க சார்… இது… எனக்கு இந்த ஸ்டேஷனில் ஜாயின் பண்ண சொல்லி வந்த ஆர்டர்…” என்று அந்த காக்கி நிறக் கவரில் இருந்த அரசு ஆர்டரை நீட்டினான்.
அதை வாங்கிப் பார்த்துவிட்டு “சரி…. இன்னைக்கே ஜாயின் பண்ணிக்கலாம்… கொஞ்சம் வெயிட் பண்ணு… சப் இன்ஸ்பெக்டர் வரட்டும்…” என்றார்.
அப்போது ஸ்டேஷனுக்குள் புயலாய் நுழைந்தாள் அந்தப் பெண். அழகாய் ஒடிசலாய் இருந்தாலும் அவளது முகமும் பார்வையும் ஒரு அலட்சியத்தைக் கொண்டிருந்தது.
அவளது நெஞ்சத்தில் குத்தியிருந்த பேட்ஜ் அவளது பெயர் சித்ரா, சப் இன்ஸ்பெக்டர் என்று காட்டியது. அவளைக் கண்டதும் அமர்ந்திருந்தவர்கள் எழுந்து அவசரமாய் அவளுக்கு ஒரு சல்யூட் வைக்க அதை தலையாட்டி ஏற்றுக் கொண்டே நடந்தாள்.
தன் அறைக்குள் செல்லப் போனவள் அங்கே நின்று கொண்டிருந்த புதியவனைக் கண்டதும் “ஹூம்…..” என்று புருவத்தைத் தூக்கினாள் யாரென்ற பாவனையில்.
“புதுசா வந்திருக்குற கான்ஸ்டபிள் மேடம்… பேரு முத்து… நம்ம ராஜா ராம் சாரோட பையன்…” என்று அவனை அறிமுகப் படுத்திவிட்டு, அவனிடம் மெல்லிய குரலில் “சல்யூட் வைப்பா…..” என்றார்.
அவளைப் பார்த்து “இவளா…..” என்று வியப்புடன் நின்றிருந்தவன், அவர் சொன்னதும்,
“எஸ்… சார்…” என்று விறைப்புக்குப் போய் அவசர அவசரமாய் நெற்றிக்கு கையைக் கொண்டு சென்றான்.
அவன் மனது “ச்ச்சே… இந்தத் திமிர் பிடிச்சவ இங்கே தான் சப் இன்ஸ்பெக்டரா இருக்காளா… இவளுக்கெல்லாம் நான் சல்யூட் வைக்குற நிலமை வந்திருச்சே….” என்று சுணங்கியது.
“கட்… கட்… இன்னொரு ஷாட் போகலாம்…..” என்று டென்சனாய் இயக்குனர் வசீகரனின் வாயிலிருந்து வார்த்தைகள் உதிர்ந்ததும் காமிரா அணைந்தது.
அவனிடம் ஓடி வந்த ராஜூ விடம், “என்னய்யா ஹீரோ அவன்… மூஞ்சிய மண்ணு மாதிரி வச்சிட்டு நிக்குறான்… கொஞ்சம் கூட பாவமே மாற மாட்டேங்குது….” என்று எரிச்சலோடு கத்தினான்.
“சார்… ஹீரோ புரொட்யூசர் சாருக்கு ரொம்ப வேண்டியவர்ல… அதான் அதிகம் ஒண்ணும் சொல்ல முடியல…..” என்று தலையைச் சொரிய,
“அதுக்கு… அட… அந்தாளு மூஞ்சில கொஞ்சம் பாவத்தைக் காட்டச் சொல்லு… நீ சொல்லிக் கொடுத்துட்டு அடுத்த டேக் வர சொல்லு…” என்று சிடுசிடுத்தான்.
மறுபடியும் அவர்கள் அதே பொசிஷனுக்கு வர மீண்டும் அதே காட்சியைப் படமாக்கத் தொடங்கினர்.
“ஸ்டார்ட்… காமிரா ரோலிங்….. ஏய்… யாரது… இடையில…” என்று வசீகரன் கத்த,
“அண்ணா… அண்ணா…. எழுந்திரு… எப்படி தான் பகல் நேரத்துல இப்படித் தூங்குவியோ…” உறங்கிக் கொண்டிருந்த வசீகரனைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள் அவனது தங்கை வளர்மதி.
அழகான கனவு தடைபட்ட எரிச்சலில் மீண்டும் போர்வையை இழுத்து முகத்தை மூடப் போனவனை முகத்தில் சொத்தென்று வந்து விழுந்த தண்ணீர் சட்டென்று எழுந்து அமர வைத்தது.
“ச்ச்சே… கனவுல கூட டைரக்டரா இருக்க விட மாட்டேங்குறாங்களே…” என்று முகத்தை சுளித்தவன்,
“அம்மா… என்னம்மா இது… எத்தனை தடவை சொல்லி இருக்கேன்… இப்படி மூஞ்சில தண்ணி ஊத்தி எழுப்பாதேன்னு…”
“ஆமாண்டா…. உன் தங்கச்சி உன்னை அண்ணானு கூப்பிட்டதும் அப்படியே எழுந்து உக்கார்ந்துட்டே பாரு… தண்ணிய ஊத்துனா தானே எந்திரிக்கற… ராத்திரி பூரா கதை எழுதறேன்… கவிதை எழுதறேன்னு விடிய விடிய தூங்காம இருக்க வேண்டியது… காலைல எல்லாரும் எந்திரிக்குற நேரத்துல தூங்க வேண்டியது….” என்று அலுத்துக் கொண்டார்.
“இன்னைக்கு ரேஷன்ல அரிசி பருப்பெல்லாம் போடறேன்னு சொல்லிட்டு இருந்தாங்க… போயி பாத்து வாங்கிட்டு வந்திரு… இன்னும் கொஞ்ச நேரம் போச்சுதுன்னா கூட்டமாயிரும்…” என்றார்.
“ம்ம்… சரிம்மா… நான் குளிச்சிட்டு வந்திடறேன்…” என்றவன் டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.
சபர்மதி, அரவிந்தன் தம்பதியருக்கு வசீகரன், வளர்மதி அழகான இரு பிள்ளைகள்… வசீகரன் முதுகலைப் படிப்பை முடித்து இரண்டு வருடமாக திரைப்படத் துறையில் வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருந்தான். வளர்மதி கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். பிறந்த போதே அழகாய் வசீகரிக்கும் சிரிப்புடன் இருந்தவனுக்கு வசீகரன் எனப் பெயர் வைத்திருந்தனர்.
அழகனான அவனுக்கு நடிக்க சந்தர்பம் கிடைத்தும் அதில் விருப்பமில்லாமல் மற்றவர்களை நடிக்க வைக்கவே ஆசைப்பட்டான்.
அவனுக்கு திரைப்படத் துறையில் சிறந்தவொரு இயக்குனராக வரவேண்டும் என்பதே ஆசை… ஆனால் குடும்ப சூழல் காரணமாயும் சபர்மதியின் கண்ணீரைக் காண முடியாமலும் தன் ஆசையை மூட்டை கட்டிவிட்டு கிடைத்த போலீஸ் வேலைக்கு செல்ல ஒத்துக் கொண்டான்.
காவல் துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த அரவிந்தன், ஓய்வு பெறுவதற்கு முன்னரே ஒரு விபத்தில் உயிர் துறக்க அழகாய் சென்று கொண்டிருந்த அந்தக் குடும்பம் என்னும் படகில் பெரிய ஓட்டை விழுந்தது. வாரிசான வசீகரனுக்கு காவல் துறையிலேயே கான்ஸ்டபிளாகப் பணி கிடைத்தது.
குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள வசீகரன் வேலைக்கு செல்வது நிர்பந்தமானது… அன்னையின் கண்ணீரும் தங்கையின் எதிர்காலமும் அவனுக்குள் கேள்வியைக் கொடுக்க தன் ஆசையைத் தூக்கி பரணில் போட்டுவிட்டு இதோ…. இப்போது ஒவ்வொரு நாளும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டருக்காய் காத்திருக்கிறான்.
குளித்து முடித்து சாதாரண ஒரு டிஷர்ட்டை அணிந்து வந்தவனைக் கண்டதும் எப்போதும் போல மனம் நிறைந்தது சபர்மதிக்கு.
“என் மகன் எத்தனை அழகாய் கம்பீரமாய் இருக்கிறான்…. அவனுக்கு நல்ல எதிர்காலத்தைக் கொடு ஆண்டவா…” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவர் புன்னகையுடன் அவனை நோக்கினார்.
“வாப்பா… சாப்பிட எடுத்து வைக்கறேன்…” என்றவர் அடுக்களைக்குள் செல்ல அங்கே வந்தாள் அவனது தங்கை வளர்மதி.
“என்ன அண்ணா…. மதியம் லஞ்சுக்கு உனக்கு இட்லிதானா…” என்றவள் அவனுக்கு ஒரு கிளாஸில் தண்ணீரை ஜக்கிலிருந்து ஊற்றி வைக்க அவளை நோக்கி சிரித்தவன்,
“என்னடி கிண்டலா… உனக்கு அண்ணன்கிற மரியாதையே இல்லாம போயிருச்சு…” என்று அவள் காதைப் பிடித்து செல்லமாய்த் திருகினான்.