அத்தியாயம் 13 
காதல் என்பது பல
பரிமானங்கள் கொண்டது தான்,
ஆனால் என்னைப் பொறுத்த
வரை காதலின் வடிவம் நீ!!!
விடிவதற்கு முன்பே வாடகைக்கு இருக்கும் வீட்டை அடைந்த மனோஜ் குடும்பத்தினர் அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்கள். 
பின் குளித்து முடித்த மனோஜ் அனைவருக்கும் டிபன் வாங்கி வந்தான். நான்கு பேரும் சாப்பிட்டதும் சிவானியை அழைத்துக் கொண்டு அவளுடைய ஆஃபிஸ்க்கு சென்றான். 
முதல் நாள் வேலை என்பதால் தடுமாற்றத்துடன் சென்றாள் சிவானி. அங்கே சென்றதும் அவளுக்கு எங்கே வேலை என்று அனைத்தையும் கேட்டுக் கொண்டாள். 
புது இடம், புது மனிதர்கள் என தடுமாற்றமும் பயமும் இருந்தாலும் ஒருவாராக சமாளித்தாள் சிவானி. அவள் கிளாசில் இருந்து செலக்ட் ஆனவர்களும் வந்திருந்ததால் கொஞ்சம் பயமும் குறைந்திருந்தது. 
அவளை விட்டு விட்டு வீட்டுக்கு வந்த மனோஜ் பெற்றோர்களை அழைத்துக் கொண்டு தேவையான பொருள்களை வாங்க கடைக்குச்  சென்றான். சிவானி மதிய உணவை ஆபீஸ் கேண்ட்டீனில் சாப்பிட்டு கொள்கிறேன் என்று சொன்னதால் இவர்கள் மூவரும் ஹோட்டலில் சாப்பிட்டார்கள். 
தேவையான பொருள்கள் எல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்த போது மாலை ஐந்தாகியது. பின் சிவானியை அழைத்து வந்தான். அதற்குள் பார்வதி வீட்டை ஒதுங்க வைத்து முடித்து விட்டாள். 
வீட்டில் இருந்தே அடுப்பை கொண்டு வந்ததால் பிள்ளைகள் வந்ததும் பால் காய்ச்சினாள். பின் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். 
“அம்மா வீடு பிடிச்சிருக்கா?”, என்று கேட்டான் மனோஜ். 
“நல்லா இருக்குப்பா. ஆனா என்ன பகல்ல தான் நேரம் போகாது”
“அதுக்கென்ன? அப்பாவும் நீங்களும் தூங்கி தூங்கி எந்திரிங்க. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க மா”
“இங்க சிவானி கல்யாணம் முடியுற வரைக்கும் தானேப்பா இருக்க போறோம்? ஒரு கவலையும் இல்லை. நான் பாத்துக்குறேன்”, என்றாள் பார்வதி. 
“சரிம்மா, அப்புறம் சிவானி உனக்கு எப்படி வேலை எல்லாம் போச்சு. எந்த டென்சனும் இல்லையே?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லைண்ணா. கொஞ்ச நாள் ட்ரைனிங் தான். எங்க கிளாஸ் பிள்ளைங்களும் இருக்காங்க. சம்பளம் மட்டும் இன்னும் தெளிவா சொல்லலை”, என்றாள் சிவானி. 
“சரி சரி, எல்லாரும் எந்திரிங்க. சீக்கிரம் சாப்பிட்டு படுக்கலாம். நேத்து நைட் யாரும் சரியா தூங்கலை. பகல்லயும் யாருக்கும் ரெஸ்ட் இல்லை. சாப்பிட்டு நிம்மதியா தூங்குங்க”, என்று சொல்லி அனைவருக்கும் உணவு பரிமாறினாள் பார்வதி. 
அனைவரும் தூங்க சென்றதும் மனோஜ் மட்டும் மொட்டை மாடிக்கு சென்றான். 
முழு நிலா காய்ந்து கொண்டிருக்க ஜில்லென்று காற்று அவன் உடலைத் தீண்டிச் சென்றது. இந்த இதமான சூழ்நிலையில் ஆஷாவின் நினைவு அவனுக்கு தன்னாலே வந்தது. 
“என்ன பண்ணிட்டு இருப்பா? நிச்சயதார்த்தத்தை நிர்மல் நிறுத்திருப்பானா? அழுதுட்டே இருப்பாளோ?”, என்று அவனுக்குள் கேள்வி பிறந்தது. 
அப்போது “அண்ணா”, என்ற படி அங்கு வந்தாள் சிவானி. “அம்மு, நீ இன்னும் தூங்கப் போகலையா?”, என்று கேட்டான் மனோஜ். 
“புது இடம்ல? அதான் தூக்கம் வரலை. நாங்களாவது கார்ல வரும் போது தூங்கினோம். நீ கொஞ்ச நேரம் கூட தூங்கலை. நீ ஏன் இங்க இருக்க?”
“தூக்கம் வரலை மா”
கையில் இருந்த போனை அங்கிருந்த திண்டில் வைத்தவள் அவன் அருகே அமர்ந்தாள். 
“அண்ணா நான் உன்கிட்ட ஒண்ணு கேப்பேன். நீ உண்மையைச் சொல்லணும்”
“என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கு”
“என்னண்ணா நடக்குது? உனக்கு என்ன தான் பிரச்சனை?”
“என்னது பிரச்சனை? அதெல்லாம் ஒண்ணும் இல்லையே”, என்று தடுமாறினான் மனோஜ். 
“பொய் சொல்லாதண்ணா. நேத்து ஆஷா வந்தது என்னைப் பாக்க தான்னு நினைச்சேன்? ஆனா அப்புறம் தான் அவ உன்னை விரும்புற விஷயமே எனக்கு தெரிஞ்சது. முதல்ல அவளை உனக்கு எப்படி தெரியும்னு கேட்டப்ப ஸ்கூல் ஜூனியர்னு சொன்ன? ஆனா காதல் இதெல்லாம் எப்படிண்ணா?”
“இதைப் பத்தி பேச வேண்டாம் அம்மு”, என்று இறுக்கமான குரலில் சொன்னான் மனோஜ். 
“சரி நான் எதையும் பேசலை. ஆனா என்னோட ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. நீ அவளை லவ் பண்ணுறியா இல்லையா?”
“இல்லை”, என்று பட்டென்று வந்தது அவன் பதில். 
“இதை நான் நம்பனுமா? உனக்கும் அவ மேல ஆசை இருக்கு. ஆனா எதுக்கோ மறைக்கிற?”
“ப்ச், நீ போய் தூங்கு சிவானி”, என்று சொன்னான் மனோஜ். 
அவன் சிவானி என்ற அழைப்பே அவனுடைய கோபத்தை தெரிவிக்க அடுத்த நொடி அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள். அவள் சென்ற பின்னர் மனோஜின் போன் அடித்தது. ஜெகன் தான் அழைத்திருந்தான். 
“சொல்லு டா, என்ன பண்ணுறீங்க மூணு பேரும்?”
“இப்ப தாண்ணா சாப்பிட்டு உக்காந்துருக்கோம். நீ எப்ப வருவண்ணா?”
“நாளைக்கு நைட் கிளம்புறேன் டா. கொஞ்சம் வீடு எல்லாம் செட் பண்ண வேண்டியது இருக்கு”
“பொருள் எல்லாம் வாங்கியாச்சா அண்ணா?”
“கொஞ்சம் தான் டா வாங்குனோம். வீட்ல இருந்து அம்மா கொஞ்சம் பொருள் எடுத்துட்டு வந்துட்டாங்க. கட்டில் எல்லாம் எல்லாரும் வாங்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க”
“சரிண்ணா அப்புறம்…… அப்புறம் ஆஷா இங்க வந்தாங்க”, என்று அண்ணி என்றும் அக்கா என்றும் சொல்லாமல் மொட்டையாக சொன்னான் ஜெகன். 
அவளைப் பற்றி பேசியதும் மனோஜ் முகம் மலர்ந்தது. “என்ன டா சொல்ற? ஆஷா அங்க வந்தாளா?”, என்று பரபரப்பாக கேட்டான் மனோஜ். 
அவனுடைய பரபரப்பு ஜெகனுக்கு சிரிப்பை தான் உண்டாக்கியது. “எதுக்கு இந்த அண்ணன் இப்படி உண்மையை மறைக்கணும்?”, என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. 
தன்னுடைய போனை எடுக்க வந்த ஆஷா காதில் அவன் பேசியது விழுந்தது. ஆஷா பெயர் அடி பட்டதும் அப்படியே மறைந்து நின்று கொண்டு தன்னுடைய அண்ணனைப் பார்த்தாள். அவன் மலர்ந்த முகம் அவளுக்கு உண்மையை எடுத்துரைத்தது. 
“ஆமாண்ணா, வந்தாங்க. கூடவே அவங்க அண்ணனும் வந்தாங்க”
“என்னைத் தேடியா? நிர்மலும் வந்தானா? வர மாட்டேன்னு சொன்னானே டா?”
“இல்லைண்ணா. உங்களை தேடி இல்லை. அவங்க வண்டியை விக்க வந்தாங்க”
“அப்படியா?”, என்று கேட்டவனின் குரலில் ஏமாற்றம் இருந்தது. 
“ஆமாண்ணா”
“அவ அந்த வண்டியை விக்க மாட்டேன்னு சொல்லுவாளே டா?”
“தெரியலைண்ணா டல்லா இருந்தாங்க. அழுதுருப்பாங்க போல? எதுவுமே இல்லைன்னு ஆகிருச்சு. இந்த வண்டியை வச்சு என்ன
பண்ண போறேன்னு சொன்னாங்க”
“ஓ, ரொம்ப அழுதுருப்பாளோ டா?”
“ஆமாண்ணா, உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையாண்ணா? அண்ணின்னு சொல்லக் கூடாதுன்னு திட்டிட்டாங்க? அவங்களைப் பாக்க பாவமா இருக்குண்ணா”
“ஹிம்”
“அண்ணா, நான் ஒண்ணு சொன்னா என்னை திட்ட மாட்டீங்களே?”
“ஆமா ஆமா என்னோட திட்டுக்கு நீ ரொம்ப பயந்தவன் தான். சும்மா சொல்லு டா”
“அவங்களுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்குண்ணா. உங்களுக்கும் அப்படி தான்னு எனக்கு தெரியும். உங்களுக்கு அவங்களைப் பிடிக்கலைன்னா அவங்களை டின்னு உரிமையா சொல்லுவீங்களா? என்ன பிரச்சனைன்னு சொல்லுங்கண்ணா. என்கிட்ட சொன்னா உங்க மனசு பாரம் குறையும்னு நினைச்சா சொல்லுங்கண்ணா பிளீஸ்”
ஒரு பேரு மூச்சை வெளியேற்றிய மனோஜ்க்கு யாரிடமாவது சொன்னால் மனம் பாரம் குறையும் என்று தோன்றியது. 
நிர்மலின் நட்பு, ஆஷாவைப் பார்த்தது, ஆஷாவின் கோபம், அதன் பின் நிர்மலின் பேச்சு, ஆக்ஸிடெண்ட் என அனைத்தையும் சொன்னவன் கடைசியாக “நான் கால் சரியாகி ஸ்கூல்க்கு போனப்ப ஆஷாவோட அம்மா என்னைக் கூப்பிட்டு பேசினாங்க டா, நான் டி‌சி வாங்கன்னு போகவே இல்லை. ஆனா என் கைல டி‌சி கொடுத்தாங்க. நான் ஏன்னு காரணம் கேட்டதுக்கு எங்க குடும்பத்தோட ஏழ்மையை குறை சொல்லி உனக்கு என் பொண்ணு கேக்குதான்னு பேசினாங்க. ஆஷா கடைசியா என்கிட்ட பேசினப்ப அவ மனசுல நான் இருக்கேன்னு எனக்கும் தெரிஞ்சது. அவ கிட்ட இருந்து விலக நினைச்சு அவளைப் பத்தியே யோசிச்சிட்டு இருந்தேன். ஆஷா அவளோட அம்மா கிட்ட மாட்டிப்பான்னு எனக்கு தெரியாது. அவளோட நோட் புக்ஸ் எல்லாத்துலயும் என்னோட பேர் எழுதி வச்சிருப்பா போல? அதை அவங்க அம்மாவே என்கிட்ட சொன்னாங்க. அப்ப தான் எனக்கே அவ மேல ஒரு ஆர்வம் வந்துச்சு. என் மேல உண்மையான அன்பு வச்சிருக்குறவளை என்னால எப்படி விட முடியும்? அவங்க அம்மா கிட்ட எதுக்கு டி‌சின்னு கேட்டேன்”, என்றான்.
“அப்புறம் என்ன நடந்துச்சுண்ணா?”
“இந்த ஸ்கூல்ல உனக்கு இடம் இல்லைன்னு சொன்னாங்க. அது  மட்டுமில்லாம நீ வேற ஸ்கூல்ல படிக்க கூடாதுன்னு சொன்னாங்க. அப்படி எங்கயாவது படிச்சா சிவானியை கொலை செஞ்சிருவேன்னு  மிரட்டினாங்க”
“என்னண்ணா சொல்றீங்க?”
“ஆமா டா, என்னைப் படிக்கவே கூடாதுன்னு சொன்னாங்க. அதாவது படிச்சு நான் நல்ல நிலைமைக்கு வந்துட்டா அவங்க மகளோட வாழ்க்கைல வந்துருவேனோன்னு பயத்துல என்னோட படிப்பை முடக்கப் பாத்தாங்க. சிவானியை அப்படி செஞ்சிருவேன்னு சொன்னது எனக்கு பயங்கர அதிர்ச்சி தான். அப்ப தான் அவங்க என்னோட காலை ஓடிச்சதைப் பத்தி சொன்னாங்க. அப்படி செஞ்சவங்க கண்டிப்பா சொன்னதை செய்வாங்கன்னு எனக்கு பயம் வந்தது. என்னை ஏதாவது செஞ்சிருவேன்னு மிரட்டிருந்தா நிமிந்து நின்னுருப்பேன். ஆனா தங்கச்சி என்ன டா பண்ணுச்சு? வேற வழி இல்லாம சரி நான் படிக்கலை. என் தங்கச்சிக்கு எதையும் பண்ண கூடாதுன்னு அவங்க கிட்ட கேட்டுக்கிட்டேன். சரினு சொல்லிட்டாங்க. அப்புறம் தான் கடையை பாத்துக்கிட்டது. ஆனா அதுக்கப்புறம் ஆஷா என்னை பாக்க வரப்ப எல்லாம் அவங்க அம்மாவும் என்னைப் பாக்க வந்து மிரட்டுவாங்க” 
“அவங்க பொண்ணைத் தானேண்ணா அவங்க அடக்கணும்?”