அதைக் கண்டு கோபம் கொப்பளித்தாலும் “என்ன ஆச்சு டா? ஜெகா இப்படி எல்லாம் செய்ய மாட்டானே?”, என்று கேட்டான் மனோஜ். 
“இல்லைன்னா அது வந்து…இன்னைக்கு பேப்பர்ல, சித்தி கொடுமைல ஒரு பையன் செத்து போனதைப் படிச்சான். பழைய விஷயம் எல்லாம் நினைவு வந்துருக்கும் போல? இப்ப வறேன்னு சொல்லிட்டு கிளம்பி போனவன் இப்படி தான் வந்தான்”, என்று திக்கி திணறி சொன்னான் ராம். 
“சரி ரெண்டு பேரும் போய் வேலையைப் பாருங்க”, என்று சொல்லி விட்டு அங்கு அமர்ந்த மனோஜ் ஜெகனைப் பற்றி யோசித்த படி அமர்ந்திருந்தான். 
ஜெகனின் சிறு வயதிலே அவனுடைய அம்மா இறந்து விட்டார்கள். அவனுடைய அப்பா அடுத்த நாளே அவனுக்கு ஒரு சித்தியை அழைத்துக் கொண்டு வந்தார். அவள் பண்ணிய கொடுமையால் வீட்டை விட்டே வெளியே வந்தவன் அங்கே இங்கே என்று அலைந்து கடைசியில் மனோஜிடம் வந்து சேர்ந்தான். 
அதன் பின் ஜெகன் இது போல் எந்த தவறும் செய்தது கிடையாது. “எவ்வளவு நாள் ஆனாலும் மனதில் இருக்கும் வடு மாறாது போல”, என்று எண்ணிய மனோஜ் நாளை ஜெகனிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான். 
அவனை அப்படியே விட்டு அவன் குடிக்கு அடிமை ஆகி விட்டால் என்ன செய்வது என்று அவனுக்கு பயம் வந்தது. இரவு முழுவதும் போதையில் கிடந்த ஜெகனுக்கு அதிகாலையிலே விழிப்பு வந்து விட்டது.  
அனைவருக்கும் முன்பாக எழுந்த ஜெகன் பட்டை எல்லாம் தீட்டி பக்தி பழமாக காட்சி அளித்தான். தான் செய்த தவறும் புரிந்தது., மனோஜிடம் எப்படி பேச என்று குற்ற உணர்ச்சியும் வந்தது. 
அதனால் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தான். ஆனால் மனோஜோ அன்று முழுவதும் ஜெகனிடம் பேசவே இல்லை. அவனை கண்டு கொள்ளவும் இல்லை. 
எதற்கெடுத்தாலும் ஜெகா ஜெகா என்று அழைப்பவன் இன்று ராம் ராம் என்று அழைத்தானே தவிர ஜெகனை கண்டு கொள்ளவே இல்லை. அன்றைய நாள் முடிவில் மனோஜ் காலில் விழுந்த ஜெகன் “என்னை மன்னிச்சிருண்ணா. என்கிட்ட பேசாம எல்லாம் இருக்காத. எனக்கு கஷ்டமா இருக்கு”, என்றான். 
“நான் யார் டா உன்னை மன்னிக்க? நீங்க எல்லாம் பெரிய ஆள். உங்க இஷ்டத்துக்கு இருப்பீங்க. நானெல்லாம் உங்க விசயத்துல தலையிடலாமா? உனக்கு புத்தி சொல்றதுக்கோ, உன்னைக் கண்டிக்கிறதுக்கோ நான் என்ன உன் கூட பிறந்தவனா? இல்லை உன்னோட சொந்தக்காரனா? நான் யாரோ தானே? சம்பளம் கொடுக்குறதுக்காக மட்டும் தான் நான் இருக்கேன்”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான் மனோஜ். தான் பேசுவது கொஞ்சம் கடுமையாக இருந்தாலும் அது தான் சரி என்று மனோஜ்க்கு தோன்றியது. 
‘ஐயோ அண்ணா, மனசு பாரம் தாங்க முடியாம தான் குடிச்சிட்டேன்.  உன்னை கஷ்ட படுத்திடேன்னு ரொம்ப வலிக்குதுண்ணா. இனி இப்படி சத்தியமா செய்ய மாட்டேன். என்கிட்ட பேசுண்ணா. பழைய நினைப்புல தான். அதுவும் அந்த பையனை நினைச்சு தான். நானும் அந்த மாதிரி செத்து போக வேண்டியவன் தாண்ணே. உன்னை மாதிரி யாராவது அவனை ஆதரிச்சா அந்த பையனும் இருந்துருப்பான்ல? இனி இப்படி செய்ய மாட்டேண்ணா. நீ பேசாம இருக்காத பிளீஸ்”, என்று சொன்னதும் “சரி சரி மன்னிச்சிட்டேன் போ. ரொம்ப அழுது ஷெட்டை நனைச்சிறாத. மூர்த்தி ரொம்ப சின்ன பையன். அவன் தப்பான பாதைக்கு போறதுக்கு நீ வழிகாட்டியா அமைஞ்சிராத. அவ்வளவு தான் சொல்லுவேன். போ போய் வேலையை பாரு”, என்று சொன்னான் மனோஜ். 
“ரொம்ப தேங்க்ஸ்ண்ணா”, என்று சொல்லி வேலையில் கவனம் செலுத்தினான் ஜெகன். மனோஜும் சிறு சிரிப்புடன் தன்னுடைய அறைக்கு உடை மாற்றச் சென்றான். 
அப்போது அங்கு வந்தார் துரைப்பாண்டி. ”வாங்கப்பா”, என்று வரவேற்றார்கள் ராமும் ஜெகனும்.
“எப்படி இருக்கீங்க பசங்களா?”
“நல்லா இருக்கோம் பா”
“எங்க உங்க அண்ணன்?”
“இப்ப தான் வெளிய போயிட்டு வந்துச்சு. உள்ளார துணி மாத்த போயிருக்கு”, என்று ஜெகன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த மனோஜ் “வாங்கப்பா, என்ன இந்நேரம் வந்துருக்கீங்க? வயலுக்கு போகலையா?”, என்று கேட்டான். 
“காலைலே போயிட்டு வந்துட்டேன்ப்பா. இங்க வந்து ரொம்ப நாள் ஆச்சுள்ல? அதான் என்ன செய்றீங்கன்னு பாத்துட்டு போகலாம்னு வந்தேன். அப்புறம் உங்க அம்மா அதிரசமும் முறுக்கும் சுட்டுக் கொடுத்தா. அதான் கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன். இந்தா எல்லாருக்கும் கொடு”, என்று சொல்லி ஒரு தூக்கை கையில் கொடுத்தார். 
“சரிப்பா”, என்று வாங்கியவன் ராம் மற்றும் ஜெகனுக்கு கொடுத்து தானும் உண்டான். மாலை பள்ளி விட்டு வரும் மூர்த்திக்கு மட்டும் வைத்து விட்டு மற்றதை காலி செய்தார்கள். அந்த ஷெட்டையை சுற்றி பார்த்த படி அமர்ந்திருந்தார் துரைப்பாண்டி. 
“வேலை எல்லாம் நல்லா நடக்குதாப்பா? நிறைய வண்டி வருதா? எல்லாம் கட்டு படி ஆகுதா? பணத்தேவை ஏதாவது இருக்கா? கடைலயும் நிறைய வேலை செஞ்சிருக்கியே?”, என்று கேட்டார் துரைப்பாண்டி. 
“அதெல்லாம் பிரச்சனை இல்லைப்பா. வேலை நல்லாவே வருது. சிவானி காலேஜ்க்கு பீஸ் கட்டினதுனால அவளுக்கு நகை சேக்குற அளவுக்கு மட்டும் இன்னும் பணம் சேரலை. அதுக்கு தான் மண்டை குடைச்சலா இருக்கு”, என்றான் மனோஜ். 
“அவளை படிக்க வச்சது நீ தான். அதுவே பெரிய பாரம். இன்னும் நகை சேக்கன்னு கிளம்பிட்டா உன்னோட வாழ்க்கைக்கு என்ன இருக்கும்? நான் இந்த வருஷ மாசல்ல அவளுக்கு நகை சேக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்”
“இல்லைப்பா நான் பாத்துக்குவேன்”
“சொன்னாக் கேளு மனோஜ், அதை நான் பாத்துக்குறேன். நீ உனக்குன்னு கொஞ்சம் வச்சிரு. அதுக்காக உன் தங்கச்சிக்கு நான் செய்ய கூடாதுன்னு சொல்லலை. ஆனா கல்யாணத்துக்கு நான் எடுத்துருவேன். ஏற்கனவே அவளுக்கு செஞ்சது கொஞ்சம் இருக்கு”
“சரிப்பா. வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?”
“அவங்களுக்கு என்ன? எல்லாரும் நல்லா இருக்காங்க. நானும் உங்க அம்மாவும் தான் ஏதோ இருக்கோம்”
“என்ன ஆச்சுப்பா? ஒரு மாதிரி பேசுறீங்க?”
“என்ன சொல்ல சொல்ற? உங்க அக்கா தான் சிவானிக்குன்னு ஏற்கனவே வாங்கி வச்சிருக்குற நகையை பிடுங்க பாத்துட்டே  இருக்கா”
“என்னது அக்காவா? அவளுக்கு தான் ஏகப் பட்டது செஞ்சாச்சேப்பா”
“ஆசை யாரை விட்டது மனோஜ்? அந்த நகையை தாங்க இந்த நகையை தாங்கன்னு கேக்காம ஏமா அந்த பச்சை கல் அட்டிகையைக் கொடு. கல்யாணத்துக்கு போட்டுட்டு தரேன்னு வாங்கினா. அப்புறம் திருப்பி தரவே இல்லை. உங்க அம்மா மனசு பொறுக்காம எங்கன்னு கேட்டா அங்க இங்கன்னு சப்பை கட்டு கட்டினவ இப்ப ஏமா மகளுக்கு செஞ்சதை திரும்ப கேக்குறன்னு உங்க அம்மாவையே கேக்குறா போல? உன் அம்மாவுக்கு தான் இருக்குறதையும் பிடுங்கிட்டு சிவானிக்கு எதுவும் இல்லாம ஆக்கிருவாளோன்னு பயமா இருக்காம். இதுல உன் தம்பி பொண்டாட்டி வேற? வீட்ல ஒரு வேலையும் செய்யாம அம்மாவையே எல்லாம் செய்ய சொல்றா. உன் அம்மாவுக்கும் வயசாகுதே. முன்னாடி மாதிரி எதுவும் செய்ய முடியலை”
“திவ்யா உங்க அக்கா மக தானே? நீங்க எடுத்து சொல்ல வேண்டியது தானேப்பா?”
“ஏதாவது சொன்னா கண்ணைக் கசக்குறா. உன் தம்பி வேற பொண்டாட்டியை ஒரு குறை சொல்ல விட மாட்டிக்கான். ஒரு வருசத்துக்கு மேல ஆகியும் குழந்தை தங்கலைன்னு அது வேற புருஷன் பொண்டாட்டிக்கு பொசு பொசுன்னு இருக்கும் போல? உன்
அக்கா காரி வேற திவ்யாவுக்கு குழந்தை இல்லைன்னு என்னல்லாமோ பேசிருக்கா. அதுக்கும் ஒரே சண்டை தான். இந்த நித்யாவும் அவ புருசனோட இங்க வந்து இருக்குறது முழுக்க பிரச்சனை தான். உன் அக்கா மாப்பிள்ளை வேற எந்த வேலை வெட்டிக்கும் போகாம வீட்ல உக்காந்து வாய் சவடால் அடிச்சிட்டு இருக்கார். என்ன செய்யன்னு தெரியலைப்பா. ரொம்ப மன உளைச்சலா இருக்கு. நீ ஏதாவது செய்ப்பா”
“நான் செஞ்சிருவேன். ஆனா நீங்க கடைசி நேரத்துல உங்க மக தான் முக்கியம்? மகன் தான் முக்கியம்னு கிளம்பிறக் கூடாதே. அப்புறம் நான் சொல்லுறது ஒண்ணும் இல்லாம போயிரும்”
“திலீபன் விசயத்துல நாங்க செஞ்சது உனக்கு வருத்தம்னு தெரியும்பா. ஆனா பிள்ளைங்க பாசத்துல நாங்க என்னப்பா செய்யுறது? உங்க அக்காவுக்கு கல்யாணம் முடியாம நீ ஏதோ ஒரு பொண்ணை இழுத்துட்டு வந்துருந்தாலும் நாங்க ஏத்துகிட்டு தான் இருப்போம். இப்ப நித்யாவும் திவ்யாவும் பேசுறது, பண்ணுறது எதுவுமே எங்க மனசுக்கு ஒப்பலை.  இனி நீ என்ன சொன்னாலும் நாங்க கேக்குறோம்”
“சரிப்பா, நான் என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன். சிவானி படிக்கிற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க. அம்மாவை பாத்துகோங்க. இன்னும் ரெண்டு மூணு மாசத்துல அவ காலேஜ் முடிஞ்சிரும். இப்ப வீட்டுக்கு கிளம்புங்க. நான் வந்து விடவாப்பா?”
“நான் மெதுவா நடந்து போயிருவேன்”
“சரிப்பா பாத்துப்போங்க. ஜெகா அந்த தூக்கை அப்பா கிட்ட கொடுத்தனுப்பு”, என்று சொன்னதும் அதை வாங்கிக் கொண்டு துரைப்பாண்டி கிளம்பி விட்டார். 
சிறிது நேரம் யோசித்தவன் பின் தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டான். 
கல்லூரியிலோ மனோஜுடன் ஏற்படுத்த முடியாத தொடர்பை சிவானியுடன் ஏற்படுத்திக் கொண்டாள் ஆஷா. 
ஆஷாவின் இயல்பான பேச்சை ரசித்த சிவானியும் அவளுடன் ஒரு தோழமையை ஏற்படுத்திக் கொண்டாள். இருவரும் வாடி போடி என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் நட்பு இறுகியது. 
மனோஜுடனும் போனில் நெருங்க முயற்சி செய்வாள் ஆஷா. அவனும் அவளிடம் பேசுவான் தான். சாப்பிட்டியா, படிப்பு எப்படி போகுது? நிர்மல் எப்படி இருக்கான்?”, என்பது தொடர்பான பேச்சை மட்டும் பேசும் மனோஜ் வேறு கதைகளை அவள் பேச ஆரம்பித்தால் “வேலை இருக்கு”, என்று சொல்லி வைத்து விடுவான். 
இப்படியே நாட்கள் அனைவருக்கும் நகர்ந்தது. சிவானிக்கும் ஆஷாவுக்கும் காலேஜ் முடியும் தருவாயில் இருந்தது. இருவரும் சென்னையில் உள்ள கம்பெனியில் செலக்ட் ஆனார்கள். இருவருக்கும் ஒரே கம்பெனியில் தான் வேலை கிடைத்திருந்தது. 
காலேஜ் முடிந்ததும் சிவானியை வீட்டுக்கு அழைத்து சென்ற மனோஜ் பார்வதி மற்றும் துரைப்பாண்டியிடம் “நான் சொல்லும் போது தான் அவ கல்யாணத்தைப் பத்தி பேசணும். தேவையில்லாம என் தங்கச்சியை யாராவது சீண்டினால் நான் வேற ஏதாவது செய்ய வேண்டி இருக்கும்”, என்று மிரட்டி விட்டே அவளை விட்டு வந்தான். 
அடுத்த நான்கு மாதங்கள் கழித்து ரிசல்ட் வந்து விட அடுத்த மாதத்தில் வேலையில் சேரச் சொல்லி ஆர்டர் வந்தது இருவருக்கும். 
விஷயம் தெரிந்து சந்தோஷப் பட்ட மனோஜ் சிவானிக்கு வாழ்த்து சொல்லி விட்டு “சென்னைல இருந்துப்பியா அம்மு? உன் ஃபிரண்ட் உன் கூட வராளா?”, என்று விசாரித்தான்.
“இல்லைண்ணா, ஆஷா வேலைக்கு வரலை. அவங்க வீட்ல அவளுக்கு மாப்பிள்ளை பாக்குறாங்களாம். வேலைக்கு அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டாங்க. பாவம் ஆஷா. அன்னைக்கு ரொம்ப அழுதுட்டா. ஆனா என்னோட கிளாஸ் பிரண்ட்ஸ் நிறைய பேர் சென்னைக்கு வராங்க. நான் அவங்க கூட தங்கிப்பேன்”, என்றாள் சிவானி. 
ஆஷா நிலை அறிந்த மனோஜ்க்கு மௌனமாக இருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. 
வீட்டில் புஷ்பாவோ வித விதமான மாப்பிள்ளையை பற்றி பேச்செடுத்தாள். மனைவியின் பயம் அறிந்த முத்துவேலும் ஆஷாவுக்கு திருமணம் செய்ய தான் முடிவெடுத்தார். வேலைக்கு போறேன் என்று ஆஷா சொன்ன எதுவும் அவர்கள் காதில் விழ வில்லை. ஆஷா திருமணத்தையே மறுக்க முடிவில் ஜெயச்சந்திரன் தான் மாப்பிள்ளை என்று அறிவித்தாள் புஷ்பா. 
எதுவும் செய்ய முடியாத ஆஷா நிர்மலின் உதவியை நாடினாள். 
“அண்ணா பிளீஸ். நான் வேலைக்கு போகணும். வீட்ல சொல்லுண்ணா”, என்று சிபாரிசு பிடித்தாள். 
“இங்க பாரு ஆஷா, நானே கெஞ்சி கூத்தாடி தான் வேலைக்கு வந்துருக்கேன். நான் உனக்காக பேசுறதை விட பேசாம ஜெயச்சந்திரன் அத்தானைக் கட்டிக்கிட்டு அவர் கிட்ட பேசிப் பாரு. அவரே உன்னை வேலைக்கு அனுப்புவாறு”, என்றான் நிர்மல். 
“அடப்பாவி எனக்கு இப்ப வேலைக்கு போறதா முக்கியம்? வேலைக்கு போனா கல்யாணத்தை நிறுத்திறலாம்னு பாத்தா இவன் என்ன இப்படி சொல்றான்”, என்று மனதுக்குள் பொறுமியவள் “எனக்கு கல்யாணம் வேண்டாம்”, என்றாள். 
“இப்ப கல்யாணம் வேண்டாமா? இல்லை எப்பவுமே வேண்டாமா ஆஷா?”, என்று கூர்மையுடன் கேட்டான் நிர்மல். 
அண்ணனின் கேள்வியில் ஒரு நிமிடம் மௌனமாக இருந்த ஆஷா “இப்ப இல்லை எப்பவுமே மனோஜ் மாப்பிள்ளையாக இல்லாம இருந்தா எனக்கு கல்யாணமே வேண்டாம்”, என்றாள். 
“நினைச்சேன், இப்படி ஏதாவது பேசுவன்னு. நீ திருந்தவே மாட்டியா? வீட்ல ஒத்துக்க மாட்டாங்க டா. வேண்டாம் ஆஷா”
“என்னன்னா இப்படி சொல்ற? மனோஜ் உன் ஃபிரண்ட் தானே?”
“பிரண்ட் தான். ஆனா நம்ம வீட்டை நினைச்சு பார். அந்த சின்ன வயசுல அவன் கிட்ட நீ பேசுறேன்னு அவனோட வாழ்க்கையே பாழாப் போச்சு. நாம இங்க படிச்சு நல்ல வேலைல இருக்கேன். உனக்கும் வேலை கிடைச்சிருக்கு. ஆனா அவனைப் பாரு”
“ஆனா அண்ணா…”
“நான் இன்னும் ரெண்டு வாரத்துல வரேன். அப்ப பேசிக்கலாம்”
“அப்ப என்னோட வேலை?”
“வேலைல ஜாயின் பண்ணுறதுக்கு ஒரு மாசம் டைம் கேளு ஆஷா. மெடிக்கல் ரீசன் ஏதாவது சொல்லு. அவங்க முடியாதுன்னு சொன்னா அந்த வேலை வேண்டாம். வேற ஏதாவது ஏற்பாடு பண்ணலாம்”, என்று சொல்லி விட்டு போனை வைத்தான் நிர்மல். 
பூக்கள் மலரும்…..